World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: School principals protest in Colombo over pay claim

இலங்கை: பாடசாலை அதிபர்கள் சம்பள உயர்வு தொடர்பாக கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

By Panini Wijesiriwardane
31 March 2009

Back to screen version

மார்ச் 25 அன்று நீண்ட காலமாக நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு முடிவுகட்டுமாறு கோரி கொழும்பில் உள்ள கல்வி அமைச்சுக்கு வெளியில் 1,500 க்கும் மேற்பட்ட அரசாங்க பாடசாலை அதிபர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததோடு ஊர்வலமும் சென்றனர். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாத யுத்தத்தால் இனவாத பிளவுகள் உக்கிரமாக்கப்பட்டு வந்தாலும், அதற்கு மாறாக இந்த ஆர்ப்பாட்டம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை அதிபர்களை ஒன்று கூட்டியிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பாகமாக, 200 அதிபர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்துவதற்கு அடையாளமாக இராஜினாமா கடிதங்களை கையளித்தனர். அதிபர்களை விட ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அதனால் முன்னரைப் போலவே தங்களை ஆசிரியர் பதவியில் மீண்டும் இருத்துமாறும் அந்தக் கடிதத்தில் அவர்கள் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டார்கள்.

பெருந்தொகையான பொலிசாரை அணிதிரட்டி வைத்திருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி, அதிபர்களை "புலி ஆதரவாளர்கள்" என குற்றஞ்சாட்டியதோடு நாட்டின் அவசரகால விதிகளின் கீழ் அவர்களை கைது செய்வதாகவும் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தினார். கல்வி நிபுணர்களின் சங்கத்தின் (AEP) உறுப்பினர்களான அதிபர்கள், அந்த அச்சுறுத்தலை நிராகரித்ததோடு தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.

அரசாங்கம் இதற்கு முன்னர், வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் ஆர்பாட்டம் செய்யும் மாணவர்கள் மற்றும் விவசாயிகளையும் எதிரிகளுக்கு உதவி செய்பவர்கள் என குற்றஞ்சாட்டி, அவர்கள் மீது பாய்ந்து விழுவதற்கு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை சுரண்டிக் கொண்டது.

இந்தப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் சுமார் 3,000 பாடசாலை அதிபர்கள் -மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர்- இராஜினாமா செய்வதாக அச்சுறுத்தி வருகின்றனர். தனது உயர் மட்ட உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்படாததால் தரம் ஒன்று அதிபர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த தரம் மூன்று அதிபர்கள் சங்கமும் இதில் பங்கெடுக்கவில்லை.

தங்களுக்கு 1991 முதல் சம்பள உயர்வு கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்கள். அவர்களது மாத சம்பளம் 18,000 முதல் 24,000 ரூபாவுக்கு (சுமார் 175 அமெரிக்க டொலர் முதல் 225 டொலர் வரை) இடையில் தேங்கி நிற்கிறது. அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வை வழங்கினால் சிலருக்கு 600,000 ரூபா நிலுவை கிடைக்கும். அதே காலகட்டத்தில், வாழ்க்கைச் செலவுப் புள்ளியானது 1991ம் ஆண்டில் 1,131.5 இருந்து 2007ம் ஆண்டில் 5,416 வரை ராக்கட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு மேலதிக பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. அவர்களது தரத்தின் படி அவர்களது மாதாந்த கொடுப்பனவு 500 மற்றும் 300 ரூபாவுக்கு இடையில் இறுகிப்போயுள்ளது. அவர்களது பயண கொடுப்பனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு வரி இன்றி வாகனம் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு இருந்த சலுகைக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. அன்றாட தேவைகளுக்கு செலவிடுவதற்கு பெரும்பாலான பாடசாலைகள் நலன்விரும்பிகளின் நன்கொடைகளில் தங்கியிருக்கின்றன.

சங்கத்துக்கு பெப்பிரவரி 27 அனுப்பிவைக்கப்பட்ட அமைச்சின் கடிதம், சம்பள முரண்பாடு பற்றிய பிரேரணை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் அது 2007ல் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஆனால் பதில் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியது. இந்த ஆணைக்குழு அரசாங்க ஊழியர்களது உயர் பதவிகளுக்கான சம்பளத்தையும் ஏனைய நிர்வாக விவகாரங்களையும் மேற்பார்வை செய்கின்றது.

எவ்வாறெனினும் அந்தக் கடிதம் ஒரு தட்டிக்கழிப்பாகும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, யுத்தத்திற்கு பிரமாண்டமான தொகை செலவாகுவதால் நிதி இல்லை என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் உட்பட அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முற்றிலும் மறுத்துவிட்டார்.

2007 செப்டெம்பரில் நடந்த ஒரு நாள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு முன்னதாக, கல்வி நிபுணர்கள் சங்கமானது (AEP), இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்துடனும் சேர்ந்து சம்பள உயர்வு தொடர்பாக இராஜபக்ஷவை சந்தித்தது. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை திருப்பியழைக்கச் சொல்கிறீர்களா என ஜனாதிபதி கேட்டதை அடுத்து, யுத்தத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட எந்தவொரு சங்கமும் ஜனாதிபதியை சவால் செய்யத் துணியவில்லை.

2007 செப்டெம்பர் 14 அன்று, முன்னெப்போதும் இல்லாதவாறு 200,000 ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தனர். அரசாங்கத்துக்கும் அதன் யுத்தத்துக்கும் எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலாயக்கற்ற தொழிற் சங்கங்கள், இராஜபக்ஷ திணித்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரச்சாரத்தை முடித்துக்கொண்டன. அக்டோபரில், 2007 முடிவில் தமது கோரிக்கைகளை வழங்குவதாக அரசாங்கம் கொடுத்த பயனற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் AEP மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் இரு நாள் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டன.

கடந்த வாரம் AEP நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முக்கிய இலக்கு அதன் உறுப்பினர்கள் மத்தியிலான சீற்றத்தை தணிப்பதாகும். இராஜினாமா கடிதங்களை கையளித்த AEP தலைவர் வசந்த தர்மசிறி, "ஏனைய அரசாங்க ஊழியர்களைப் போலன்றி, அதிபர்கள் 16 நாட்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டும்" என தெரிவித்ததன் மூலம் தொழிற்சங்கங்கள் எவ்வாறு நவீனமயமாகியுள்ளன என்பதை ஊடகங்களுக்கு வலியுறுத்திக் காட்டினார். அடுத்த மாதம் கல்வி அமைச்சின் செயலாளருடன் இன்னுமொரு சுற்று பேச்சுவார்த்தை கிடைத்திருப்பது ஒரு வெற்றியாகும் எனக் கூறிக்கொண்டார்.

எவ்வாறெனினும், பாடசாலை அதிபர்களின் கோரிக்கையையோ அல்லது ஏனைய அரசாங்க துறை ஊழியர்களின் கோரிக்கையையோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்துக்குக் கிடையாது. தனது யுத்ததுக்கு செலவிடுவதன் பேரில் நாட்டை அடகுவைத்துள்ள இராஜபக்ஷ, இப்போது 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான பூகோள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றார். அந்நிய செலாவனி பற்றாக்குறையை தீர்க்க நிதியின்றி தவிக்கும் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் டொலர்களை கடனாகப் பெற முயற்சிக்கத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் வெளியிடப்படாத அதே வேளை, வெகுஜனங்களுக்கு எதிரான கொடூரமான நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் திறந்த பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தவும் அரசாங்கம் ஏற்கனவே தனது விருப்பத்தை சமிக்ஞை செய்துள்ளது. இந்த மாத முற்பகுதியில், மின்சார சபையை தனியார்மயமாக்குவதற்கு களம் அமைப்பதற்கான மசோதாவை அரசாங்கம் நிறைவேற்றியது. மார்ச் 12 அன்று, மூன்றாம் நிலைக் கல்வியை தனியார் பல்கலைக்கழகங்களுக்கு திறந்துவிடும் ஒரு மசோதாவை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, மக்களுக்கான செலவை மேலும் வெட்டிக் குறைக்கும் திட்டங்களை அரசாங்கப் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அறிவித்தார். கடந்த வாரம் பொதுச் சேவை ஆணைக்குழு ஒரு தொகை புதிய திட்டங்களை வர்த்தமானியில் அறிவித்தது. வெகுஜன செலவைக் குறைப்பதற்கு கதவுகளைத் திறந்துவிடும், சகல அரசாங்க ஊழியர்களுக்குமான தகுதிகாண் பரீட்சையும் இதல் அடங்கும். மூன்று முறை பரீட்சையில் தோல்வியடைபவர் பதவியிழப்பை எதிர்கொள்வார்.

எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராக பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே அரங்கேற்றிக் காட்டியுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்திடம் கெஞ்சுவதன் மூலமோ அதற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பாடசாலை அதிபர்களுக்கும் ஏனைய அர்சாங்க துறை ஊழியர்களுக்கும் தமது கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியாது. யுத்தத்துக்கு எதிராகவும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தில் சோசலிச கொள்கையின் அடிப்படையிலான ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்பவும் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தமது அடிப்படை உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் காத்துக்கொள்ள முடியும்.

மேல்மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்நோக்கும் இதுவே.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved