World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama seeks $83.4 billion to continue US wars ஒபாமா அமெரிக்க போர்களை தொடர 83.4 பில்லியன் டாலர் கேட்கிறார் By Bill Van Auken வியாழனன்று ஒபாமாவின் வெள்ளை மாளிகை அமெரிக்க காங்கிரஸிற்கு அதன் வழமையான வேண்டுகோளான ''அவசர துணை நிதி'' என்ற வகையில் 83.4 பில்லியன் டாலரை" புஷ் நிர்வாகத்தீன் கீழ் தொடக்கப்பட்ட ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்களை தொடர்வதற்கு வழங்குமாறு கேட்டுள்ளார். இந்த நிதி செப்டம்பர் 30ல் முடியும் தற்போதைய நிதிய ஆண்டில் இரு போர்களுக்கும் ஆகும் செலவிற்கு பயன்படுத்தப்படும். அந்த தேரத்தில் ஆப்கானிஸ்தானில் இந்ந நிர்வாகத்தின் போர் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இன்னும் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் தேவைப்படுவர். அதே நேரத்தில் ஈராக்கில் இருக்கும் 140,000 துருப்புக்களில் அதிகமாக எவ்வித மாறுதலும் ஏற்படாது. நிதி சட்டவரைவில் மெக்சிகன் எல்லையை கூடுதல் இராணுவமயப்படுத்துவதற்காக 350 மில்லியன் டாலரும், பாக்கிஸ்தானில் எழுச்சி-எதிர்ப்பு உதவிக்காக 400 மில்லியன் டாலரும் அடங்கும். "எமது படைகளுக்கு ஆதரவு தருக" என்ற புஷ் நிர்வாகத்தின் வனப்புரையை எதிரொலிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் வரவு-செலவுத்திட்ட அலுவலகச் செய்தித் தொடர்பாளர் கென்னத் பேர்" ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நாம் கோரும் கடுமையான பணியை செய்வதற்கு சீருடையில் இருக்கும் நம் ஆண்கள், பெண்களுக்கு தேவையானதை இந்த ஆண்டு வழங்க காங்கிரஸுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்." என அறிவித்தார்: வெள்ளை மாளிகை 2010 நிதிய ஆண்டின் ஆரம்பத்தில் நிர்வாகம் போர் நிதியத்தை வழக்கமான பென்டகன் வரவு-செலவுத்திட்டத்தில் சேர்ப்பதாகக் கூறியிருந்தாலும், "துணை" என்ற சொல்லின் பயன்பாடு 534 பில்லியன் டாலர் பென்டகன் வரவு-செலவுத்திட்டம் வெளியிடப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் வந்துள்ளமை இரு நிர்வாகங்களின் கொள்கைகளுடைய அடிப்படைத் தொடர்ச்சியை காட்டுகிறது. இத்தகைய "அவசர கால" நிதி சட்டவரைவுகள் புஷ் நிர்வாகத்திற்கு வாடிக்கையாக இருந்தது. இது போர்களின் உண்மையான செலவினங்களை மறைக்கவும், சட்ட மன்றரீதியாக செலவுகள் வரம்பை மீறுவதற்கும் உதவின. இரு போர்களுக்கும் தற்போதைய ஆண்டில் எஞ்சியிருக்கும் பகுதியில் செலவிடப்படும் நிதிக்கிடையே 2010 நிதிய ஆண்டின் பாதுகாப்புத் துறை வரவுசெலவுத் திட்டமும் அடங்கியுள்ளது. அமெரிக்காவின் இரு ஆக்கிரமிப்புப் போர்களால் அமெரிக்க கருவூலத்திற்கு நேரடிச் செலவு 1 டிரில்லியன் டாலரைவிட அதிகம் ஆகும். ஜனநாயகக் கட்சி வழிநடத்தும் காங்கிரஸ் நிதிய சட்டத்தை இயற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. புஷ் நிர்வாகத்தின்கீழ் சட்டங்களை இயற்றும்போது ஈராக்கில் இருந்து படைகளை ஓரளவு திரும்பிப் பெறுவதற்கு கால அட்டவணையையும் போர்க் கொள்கைகள் மீது மற்ற தடைகளையும் ஜனநாயகக் கட்சியினர் சுமத்திய பிறகுதான் இறுதியில் புஷ்ஷின் வெள்ளை மாளிகைக்கு ஏற்ப போர் நிதியை எந்த தடைகளும் இல்லாமல் இயற்றினர். இப்பொழுது ஜனநாயகக் கட்சி வெள்ளை மாளிகையில் இருக்கையில் இந்த குறைத்த எதிர்ப்புத் தோற்றம் கூட பெரிதும் கரைந்துவிடும். புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது: "கனெக்டிகட் ஜனநாயகப் பிரதிநிதி ஜோன் லார்சன், ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம் இப்பிரச்சனைகள் குறித்து முரண்பட்டதுபோல், இப்பிரச்சினையில் ஜனநாயகக் கட்சி தற்போதைய வெள்ளை மாளிகையுடன் முரண்பட விரும்பாது. ஜனநாயகக் கட்சியினர் தமக்கு தக்க விதத்தில் இருக்கும் ஒருவரைத்தான் வெள்ளை மாளிகையில் காண்கின்றனர்' என்று மன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் நான்காம் இடத்தில் உள்ள தலைவரான திரு.லார்சன் கூறினார்." காங்கிரஸிற்கு நிதி கோரி எழுதிய தன்னுடைய கடிதத்தில் ஒபாமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நிலைகுலைந்துகொண்டிருப்பதை வலியுறுத்தியுள்ளார். "தலிபான் எழுச்சி பெற்றுள்ளது, அல் குவேடா அமெரிக்காவை அதன் பாதுகாப்பான புகலிடமான ஆப்கானிய-பாக்கிஸ்தானிய எல்லையில் இருந்து அச்சுறுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார். "இந்த நிதிக்கான வேண்டுகோள் அல் குவேடா குழுவைத் தோற்கடிக்கும் மொத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் மற்றும் உள்நாட்டின்மீதும் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்த பயிற்சி கொடுத்து திட்டமிடும் அதன் பாதுகாப்புப் புகலிடத்தையும் வேரோடு அழித்துவிடும் அமெரிக்காவின் முழு வலிமையான இராணுவம், உளவுத்துறை, இராஜதந்திர மற்றும் பொருளாதார சக்தியையும் உறுதிப்படுத்தும்." என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக ஜனாதிபதியில் கடிதம் ஈராக் பற்றி அதிக கவனத்தைக் கொடுக்கவில்லை. அங்கு நம்முடைய துருப்புக்கள் மற்றும் ஈராக்கிய மக்களின் சமாதானத்திற்கான விழைவினால் "வன்முறை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.." இதனால் வாஷிங்டன் நம்முடைய போர்ப்படைகள் பொறுப்புடன் அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு, ஈராக்கில் இருக்கும் பாதுகாப்புப் படைகளை இடம்மாற்றிக் கொண்டிருக்கிறது." எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரை-உண்மைகள் மட்டுமல்லாது அப்பட்டமான பொய்கள் ஆகும். உண்மை துணை நிதியின் பெரும்பகுதி ஈராக்கின் ஆக்கிரமிப்பு தொடர்வதற்கான நிதிக்குத்தான் செல்லும். ஒபாமா அந்த உண்மையை மறைக்கிறார் என்றால், அவருக்கு அவருடைய கட்சியின் தலைமையில் சில பிரிவுகள், தேசியச் சட்டமன்றப் பிரதிநிதிகிள் உட்பட ஈராக் போருகற்கு எதிராக தங்களைக் காட்டிக் கொண்டுள்ளனர் என்று தெரியும்; அதே நேரத்தில் அவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் "நல்ல போர்" என்பதற்கு ஆதரவு கொடுக்கின்றனர். அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்கி பில்லியன் கணக்கான டாலர்களை "அல் குவேடாவை" தோற்கடிக்க செலவழிக்கிறது என்பது பெரும் போலித்தனமாகும். கடந்தமாதம்தான் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் இயக்குனர் தளபதி மைக்கேல் மாபிள்ஸ் ஒரு செனட் குழுவின் முன்பு ஆப்கானிஸ்தானில் அல் குவேடாவின் பிரசன்னம் "ஒப்புமையில் சிறு அளவில்தான்" என்று கூறியிருந்தார். இவருடைய நிர்வாகம் வார்த்தைப் பிரயோகங்களில் ஒரு தந்திரோபயமான மாற்றத்தை செய்துள்ள போதிலும், ஒபாமா அமெரிக்கப் போரின் விரிவாக்கத்திற்கு இலக்காக அல்குவேடாவின் பெயரை இழுப்பதும், அவருடைய "சொந்தநாட்டின்மீது தாக்குதல்கள்" என்பதும் புஷ் பலமுறை "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களை நியாயப்படுத்தியது போல்தான் உள்ளது. உண்மை என்னவென்றால் ஒபாமாவின் ஆப்கானிஸ்தானிய "விரிவாக்கம்" அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுதமேந்திய மக்கள் எழுச்சியை வன்முறையைக் கையாண்டு அடக்குதல் ஆகும். இது அழுக்குப்படிந்த காலனித்துவ முறை போரின் தொடர்ச்சியாகும். இது காபூலில் அமெரிக்க பொம்மை ஆட்சி ஒன்றை இருத்தும் நோக்கத்தைக் கொண்டதுடன், அது மத்திய ஆசியாவின் மூலோபாய எண்ணெய் இருப்புக்கள் மற்றும் அந்த செல்வத்தை எடுக்கப் பயன்படும் குழாய்த்திட்டங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் அமெரிக்கத் திட்டங்களின் ஒரு பகுதிதான். ஈராக்கைப் பற்றி சிறப்பாக ஒபாமா சித்தரிப்பது, இதற்கிடையில் பாக்தாத் மற்றும் பிற இடங்களில் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களில் கடந்த வாரம் நூற்றுக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமுற்றனர் என்ற நிகழ்வுகளில் பொய்யாகிப் போகிறது. வெள்ளியன்று காங்கிரஸ் ஒபாமா கடிதத்தைப் பெற்ற மறு நாள், அமெரிக்க இராணுவம் ஆண்டின் மோசமான தாக்குதலைச் சந்தித்தது. மொசூலில் ஒரு பாதுகாப்புசோதனை நிலையத்தின் மீது வெடிமருந்துகளுடன் நிறைந்த வண்டியினால் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடாத்தியபோது ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன், இரு படையினர் காயப்பட்டனர். அரேபியர்களுக்கும் குர்திஸ்களுக்கும் இடையே உட்பகைப் பிளவுகளால் சிதைந்து கொண்டிருக்கும் மொசூல் நகரம் அமெரிக்க இராணுவத்தின் முக்கிய போர் நடவடிக்கைகள் தொடரும் களமாகத்தான் உள்ளது. இத்தாக்குதல் பற்றிய செய்தி வருவதற்கு முன்பு வெள்ளியன்று வெளிவந்த Times of London இற்கு கொடுத்த பேட்டியொன்றில் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளபதியான ஜெனரல் ரே ஒடீயர்னோ மோசூல் மற்றும் வட ஈராக்கில் உள்ள மற்றொரு நகரமான பகுபாவில் வன்முறை ஒபாமா நிர்வாகம் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு குறித்துள்ள கால அட்டவணையை வினாவிற்கு உட்படுத்தியுள்ளது என்று கூறினார். "அமெரிக்கத் துருப்பு எண்ணிக்கைகள் இரு நகரங்களிலும் அடுத்த ஆண்டு அதிகரிக்குமே ஒழியக் குறையாது" என்று டைம்ஸ் கூறியுள்ளது. இப்பேட்டி ஒபாமாவின் திட்டத்தை இராணுவம் மாற்றிவிடக்கூடும் என்ற பொது எச்சரிக்கையைக் கொடுக்கிறது. நிர்வாகம் அறிவித்துள்ள கால அட்டவணைப்படி அமெரிக்க போர்த் துருப்புக்கள் ஈராக்கிய நகரங்களில் இருந்து ஜூன் மாதத்திற்குள் திரும்பப் பெறப்படும் இன்று இருந்தது. இது முதல்கட்டமாக, வெள்ளை மாளிகை கூறும் "பொறுப்பான திரும்பப் பெறுதல்" ஆகும்; இது அனைத்து போரிடும் துருப்புக்களும் ஆகஸ்ட் 2010 க்குள் திரும்ப வந்துவிடுவதைக் குறிக்கும் என்றும் அனைத்து அமெரிக்க இராணுவ ஊழியர்களும் 2011 இறுதிக்குள் நாட்டைவிட்ட நீங்குவர் என்று கூறப்படுகிறது. "போரிடும் துருப்புக்கள்" என்னும் சொற்றொடர் ஒரு குறிப்பிட்ட பிரிவுகளை குறிக்கும். மற்றவை தொடர்ந்து அங்கிருந்து ஆயுதமேந்திய அடக்குமுறையில் ஈடுபடும். பென்டகன் அதிகாரிகள் தேவையானால் "போர்த்துருப்புக்கள்" என்று அழைக்கப்படுபவையும் போரில் ஈடுபடாத துருப்புக்கள் என்று வரையறுக்கப்பட்டு ஈராக்கில் நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறுகின்றனர். இப்படி பின்தங்கி இருக்கும் பிரிவுகளில் ஒபாமாவின் திட்டத்தின்படி 50,000 பேர் இருப்பர். படைகளின் நிலை பற்றிய உடன்பாடு (Status of Forces Agreement) என்று புஷ் நிர்வாகத்திற்கும் அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள பிரதம மந்திரி நூரி அல்-மாலிகி அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, 2011 காலக்கெடுவானது அதற்கு கட்டுப்பட்டதல்ல. மிகப் பரந்த அளவில் இது திருத்தப்பட்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டு அவற்றின் முதல் பணியான நாட்டை அடிமைப்படுத்தி வாஷிங்டனின் ஆதிக்கத்தின்கீழ் எண்ணெய் வளம் கொண்டுவரப்படுதவதற்கு துணை நிற்கும். பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் ஏப்ரல் 9 அன்று தெருக்களுக்கு வந்து அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈராக்கியத் தலைநகரம் அமெரிக்கப் படையெடுப்பினால் வீழ்ச்சி அடைந்த ஆறாம் ஆண்டு நிறைவு நாளில் கூப்பிடப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஷியைட் மத குரு மக்டாடா அல் சதாரின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்ததுடன், அதைத்தவிர சுன்னி அரேபியர்களும் இருந்தனர். இதேபோன்ற எதிர்ப்பு முக்கிய சுன்னி நகரமா பல்லுஜாவிலும் நடைபெற்றது. அந்த நகரம் 2004 இறுதியில் அமெரிக்க முற்றுகை ஒன்றினால் தகர்க்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானின் பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள கிழக்கு நகர கோஸ்ட்டிற்கு அருகே நடந்த தாக்குதல் பற்றி தன்னுடைய கூற்றுக்களை திருத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையை அடுத்து அது புதன் இரவு தான் கொன்றதாகக் கூறிய "ஆயுதமேந்திய போராளிகள்" உண்மையில் ஐந்து குற்றமற்ற சாதாரணக் குடிமக்கள் என்பதை ஒப்புக் கொண்டது. ஆப்கானிஸ்தானிய அலுவலர்கள் கூற்றின்படி இறந்தவர்களில் ஒரு ஏழு நாள் குழந்தை, இரு மகளிர் மற்றும் இரு ஆண்கள் இருந்தனர். ஒன்பது மாத கர்ப்பமான மற்றொரு பெண்மணி காயமுற்று தன் குழந்தையை இழந்துவிட்டார். ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க ஆதரவு நிறைந்த ஜனாதிபதியான ஹமித் கர்சாயி கொலைகளை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டு, "சர்வதேச சக்திகள் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை சாதாரணக் குடிமக்கள் இறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நடத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளை முற்றிலும் பதவிக்கு நம்பியுள்ள கர்சாயின் இத்தகைய வெற்று எதிர்ப்புக்கள் அவருடைய ஊழல் ஆட்சிக்கு எதிராக உள்ள மக்கள் சீற்றத்தை ஒரளவு திசைதிருப்பத்தான் இலக்கைக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பெப்ருவரியில் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி மிக அதிக எண்ணிக்கையான 2,118 சாதாரணக் குடிமக்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானத்தில் கொல்லப்பட்டனர். இதில் 40 சதவிகிதத்தினர் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை உண்மை இறப்பு எண்ணிக்கையைவிட ஐயத்திற்கு இடமின்றி மிகக் குறைந்தது ஆகும். பாக்கிஸ்தானில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பழங்குடிப் பகுதிகளில் அமெரிக்க ஆளில்லாத விமானங்கள் நடத்திய 60 ஏவுகணைத் தாக்குதல்களில் 10தான் உண்மை இலக்குகளைத் தாக்கின, 14 அல் குவேடாக்கள் கொல்லப்பட்டனர் என்று கூறுகிறது. மற்ற 50 தாக்குதல்கள் 687 குடிமக்கள் உயிர்களை பறித்தன. இவற்றில் மகளிரும் குழந்தைகளும் அடங்குவர். இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. 2008ல் 385 குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு முதல் 99 நாட்களில் 152 பேர் கொல்லப்பட்டு விட்டனர். காங்கிரஸிற்கு ஒபாமா அனுப்பியுள்ள துணை நிதியச் சட்டவரைவு இத்தகைய கொலையை அதிகரிப்பதற்கு பயன்படும். ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இப்பொழுதுள்ள அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இருமடங்காக 68,000 என உயர்த்தும். அதே நேரத்தில் பாக்கிஸ்தான் எல்லையைக் கடந்தும் ஆக்கிரோஷமான முறையில் போர் தொடரும். ஒபாமா பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் அவருடைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அமெரிக்காவில் தற்பொழுதைய இரு கட்சி முறையின்படி வாக்குப்பெட்டி மூலம் போருக்கு முடிவு கொண்டுவருதல் இயலாது என்பதை நிரூபித்துவிட்டன. பல மில்லியன் அமெரிக்கர்கள் கடந்த நவம்பர் மாதம் புஷ் நிர்வாகத்தின் கீழ் எட்டு ஆண்டுகளான இராணுவவாதம் பற்றிய கோபம் மற்றும் இழிவுணர்வினாலும் ஜனநாயக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருக்கையில், ஈராக் ஆக்கிரமிப்பு தொடரும் என்பது தெளிவாகியிருப்பது மட்டும் இல்லாமல், ஆப்கானிஸ்தானத்தில் போர் விரிவாக்கப்படும் மற்றும் அது பாக்கிஸ்தான் பகுதிக்குள்ளும் ஆழ்ந்து செல்லும் என்பது தெளிவாகிவிட்டது. ஒபாமாவின் கொள்கைகள் பரந்த யுத்த எதிர்ப்பு உணர்வுகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக நிதியத் தன்னலக்குழு மற்றும் இராணுவத்தின் செயற்பட்டியல் ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு சேவை செய்பவராகவே ஒபாமா உள்ளார். போருக்கு முடிவுகட்டும் போராட்டம் ஒபாமா நிர்வாகத்திற்கும், இராணுவவாதத்திற்கு மூலமாக இருக்கும் முதலாளித்துவ இலாப முறைக்கும் எதிராக தொழிலாள வர்க்க மக்கள் சுயாதீனமான அணிதிரட்டலூடாகத்தான் முன்னோக்கி செல்ல முடியும். |