World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைUS, China and the war in Sri Lanka அமெரிக்காவும் சீனாவும் இலங்கையில் நடக்கும் யுத்தமும் By Peter Symonds இலங்கையில் யுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இடம்பெறும் இராஜதந்திர மோதல்கள், பூகோளத்தில் ஒவ்வொரு மூலையிலும் அவர்களுக்கிடையிலான பகைமைகள் வளர்ச்சியடைவது கோடிட்டுக் காட்டுகிறது. தீவில் 25 ஆண்டுகால யுத்தம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு சக்திகளும் கொழும்பில் தமது உரிமைகோரல்களை நிலைநாட்ட எண்ணுகின்றன. கடந்த வாரம், ஆஸ்திரியா, மெக்ஸிகோ மற்றும் கொஸ்டா ரிக்கா ஆகிய ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள், அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் ஆதரவுடன், இலங்கையின் வடக்கில் யுத்தத்தில் சிக்கிக்கொண்டுள்ள பத்தாயிரக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடியப் பற்றிய ஒரு உத்தியோகபூர்வமற்ற சுருக்க விளக்கத்துக்கு அழைப்பு விடுத்தன. அது இலங்கையின் "உள் விவகாரம்" என்றும் சர்வதேச பாதுகாப்புக்கு அது ஒரு அச்சுறுத்தல் அல்ல என பிரகடனம் செய்த சீனா, ரஷ்யாவின் ஆதரவுடன் அந்த நகர்வைத் தடுத்தது. இந்த இராஜதந்திர தோரணையில் எதையும் பெயரளவிலானதாக எடுக்கக் கூடாது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள குட்டிப் பிராந்தியத்தை இலங்கை இராணுவம் நெருக்கின்ற நிலையில், மோதல்களில் சிக்குண்டுள்ள பத்தாயிரக்கணக்கான பொது மக்களின் தலைவிதி பற்றி எதிர்பாராத விதமாக வாஷிங்டன் கவலை வெளியிடத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஊடகமும் இப்போது இத்தகைய விழியிலேயே செல்கின்றன. எடுத்துக்காட்டாக, நியூ யோர்க் டைம்ஸ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அகதிகளின் நிலைமை பற்றியும் "சமாதானத்தின் சவால்கள்" பற்றியும கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக், அரசாங்கம் "குறிப்பிட்ட சில சிங்கள கடும்போக்கு சக்திகளால்" செல்வாக்கு செலுத்தப்படுவதையிட்டு கவலையை வெளிப்படுத்தியதோடு "தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு" ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுத்தார். 2007 நடுப்பகுதியில் இருந்து உறுதியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவின் கிழக்கு மாகாணத்தில் "சமாதானம் உறைந்துபோயுள்ளதாக" அந்தக் கட்டுரை விவரித்துள்ளது. மட்டக்களப்பில், "நகரின் மத்தியில் இராணுவ சோதனைச் சாவடிகள் இருப்பதோடு ஆயுதம் தாங்கிய குண்டர்கள் வீதிகளில் சுற்றித் திரிவதுடன் கடத்தல்கள் மற்றும் காணமல் போகும் சம்பவங்கள் பற்றி தொடர்ந்தும் செய்திகள் வந்தவண்ணமுள்ளன." ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயாலளருமான கோடாபய இராஜபக்ஷ, இத்தகைய பொலிஸ் அரச நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். "யுத்தம் புற்று நோய் போன்றது. புற்று நோயை குணப்படுத்திய பின்னரும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கதிர் சிகிச்சை செய்ய வேண்டும். பயங்கரவாதத்தின் மீதான யுத்தமும் அது போன்றதே," என அவர் தெரிவித்தார். எவ்வாறெனினும், அமெரிக்கா அண்மைய காலம் வரை, ஜனாதிபதி இராஜபக்ஷவின் யுத்தத்தையும் இராணுவம் ஜனநாயக உரிமைகளை வெளிப்படையாக மீறுவதையும் இரகசியமாக ஆதரித்தது. ஆனால், ஜனவரி முற்பகுதியில் இருந்து புலிகளிடம் எஞ்சியுள்ள பிராந்தியத்துக்குள் இராணுவம் துரிதமாக முன்னேறிய நிலையிலும் புலிகளுக்கு தோல்வி நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியும் நிலையிலும், அமெரிக்கா ஒரு உபாய ரீதியான நகர்வை மேற்கொண்டுள்ளது. அது மோதலுக்கு "அரசியல் தீர்வு" காணுமாறு அழைப்பு விடுக்கின்றது. இந்த அரசியல் தீர்வு, யுத்தத்துக்கு வழிவகுத்த தசாப்த கால தமிழர் விரோத பாரபட்சங்களை தணிப்பதன் பேரில் தமிழ் முதலாளித்துவ தட்டுடனான கொடுக்கல் வாங்கலே அன்றி, புலிகளுடனான கொடுக்கல் வாங்கல் அல்ல. தற்போதைய இனவாத மோதல்கள் இலங்கையை மட்டுமன்றி, தெற்காசியாவில் அமெரிக்காவின் பிரதான பொருளாதார மற்றும் மூலபோய பங்காளியாகி வரும் அயல் நாடான இந்தியாவையும் ஸ்திரிமின்மைக்குள் தள்ளும் என்பதே வாஷிங்டனின் கவலையாகும். இலங்கையுடன் வரலாற்று உறவைக் கொண்டுள்ள தமிழர்கள் வாழும் தென் மாநிலமான தமிழ் நாட்டில் அரசியல் அமைதியின்மை ஏற்படும் சாத்தியத்தைப் பற்றி புது டில்லி கவலையடைந்துள்ளது. இந்த "மனிதாபிமான" விவகாரம் விட்டுக்கொடுப்புகளை செய்ய இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்கும் ஒரு வழிமுறையாகவே எழுப்பப்படுகிறது. இந்தியாவும அமெரிக்காவும் இன்னுமொரு பொதுவான அக்கறையை பகிர்ந்துகொள்கின்றன. அது இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சி காண்பதாகும். இலங்கை யுத்தத்துக்கு ஆதவளிப்பதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ள அதே வேளை, சீனா கேள்விக்கிடமின்றி கொழும்பு இராணுவ மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தில் சமநிலையை தகர்ப்பதற்கு, போர் விமானங்கள், செயற்திறம் கொண்ட ராடார், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் ஏனைய இராணுவ தளபாடஙகள் மற்றும் படைக்கலன்கள் உட்பட சீன ஆயுத விற்பனைகள் உதவியாயிருந்துள்ளன. சீனாவுக்கு கடந்த மாதம் பயணித்திருந்த பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, "பயங்கரவாத்தின் மீதான யுத்தத்தை" பலப்படுத்துவதில் "உறுதியான ஆதரவு" வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடலை தடுக்க சீன எடுத்த முடிவை இலங்கை அரசியல் ஸ்தாபனம் வரவேற்றது. கடந்த வாரக் கடைசியில் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு ஆசிரியர் தலைப்பு, "இலங்கை புலம்பெயர்ந்தவர்களும் மற்றும் 'இரக்க இதயம் கொண்ட' சர்தவேச குழுவொன்றும் கூட்டங்களை நடத்திவரும் மேற்குலக நாடுகளில் இருந்து அழுத்தங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன," என கண்டனம் செய்துள்ளது. ஐ.நா. வில் எடுக்கப்பட்ட இத்தகைய நகர்வுகள் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான பங்காளியான சீனாவால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன," என அது பிகடனம் செய்துள்ளது. அமெரிக்காவைப் போல் ஐ.நா. வில் சீனாவின் சூழ்ச்சித் திட்டங்களும் சுய நலனால் வழிநடத்தப்படுவதாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பு என்ற பிரச்சினையின் போது, "உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை" என அது கடைப்பிடித்த கொள்கையை பீஜிங் வசதியாக மறந்துவிட்டது. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தளவில், அது ஐ.நா. விவாதத்தை தடுப்பன் மூலமும், இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் குற்றவியல் யுத்தத்துக்கும் அது வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவை நியாயப்படுத்தவும் கொழும்புக்கு பக்கச் சார்பாக இந்த வாதத்தை பீஜிங் பயன்படுத்திக்கொள்கிறது. கொழும்பு, பீஜிங்கிற்கு பிரதியுபகாரமாக, தென் பகுதி நகரான ஹம்பந்தோட்டையில் ஒரு பிரதான துறைமுகத்தை கட்டுவதற்காக 2007ல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டது. திட்டத்தின் முதற் கட்டம் சீன கூட்டுத்தாபனங்களாலும் மற்றும் மிகப் பெருமளவில் சீன நிதியிலும் கட்டப்பட்டு வருகிறது. இது 2010ல் கட்டி முடிக்கப்பட வேண்டும். இது கட்டிமுடிக்கப்படும் போது, ஒரு கொள்கலன் தரிப்பிடம், சேமிப்பறை முறைமை, ஒரு எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம், ஒரு விமான நிலையம் மற்றும் ஏனைய வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஹம்பந்தோட்டையை ஒரு பிரதான கப்பல் மாற்ற மையமாக மாற்றும் எதிர்பார்பிலேயே இது கட்டப்படுகிறது. சீனாவுக்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் தெளிவானது. இலங்கையின் தென் முனையில் உள்ள ஹம்பந்தோட்ட, இந்து சமுத்திரத்துக்கு குறுக்கான பிரதான கிழக்கு-மேற்கு போக்குவரத்து வழியில் இருந்து வெறும் ஆறு கடல் மைல் தூரத்திலேயே உள்ளது. சீன எண்ணெய் இறக்குமதியில் சுமார் 70 வீதம், மத்திய கிழக்கில் இருந்து மலாக்கா நீரிணை ஊடாக சீன துறைமுகங்களுக்கு இந்தக் கடல் பாதையை கடந்தே கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. எந்தவொரு மோதல் நிகழ்விலும், குறிப்பாக அமெரிக்காவுடனான மோதலின் போதும், அதன் கப்பல் மூலமான இறக்குமதி பாதிக்கப்படலாம் என்பதையிட்டு மிக விழிப்புடன் உள்ள பீஜிங், தனது கடற்படையை விரிவுபடுத்தி வருவதோடு "முத்துச் சங்கிலியை" -இந்த வர்த்தக பாதை பூராவும் துறைமுக வசதிகளை- அபிவிருத்தி செய்து வருகின்றது. பாகிஸ்தானில் சீனா கட்டிய கெளதார் துறைமுகத்தைப் போல், ஹம்பந்தொட்டையும் அத்தகைய முத்துக்களில் ஒன்றாகும். அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவின் மூலோபாயத்தை எதிர்க்க எண்ணுகின்றன. மனிதாபிமான அக்கறை என்ற போர்வையில் இந்தியா இலங்கைக்கு ஒரு இராணுவ மருத்துவக் குழுவை அனுப்பிவைத்தது. இந்த மாத முற்பகுதியில், அகதிகளை அப்புறப்படுத்துவதற்காக வட இலங்கைக்கு மரைன் படையணியொன்றை அனுப்ப அமெரிக்கா பிரேரித்தது. இந்த பிரேரணை பின்னர் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வெளிப்பட்ட இராஜதந்திர தோரணையைப் போலவே, எந்தத் தரப்பில் இருந்து வந்தாலும் சரி, இத்தகைய நகர்வுகளில் எதுவும் 25 ஆண்டுகால யுத்தத்தின் சுமைகளை தாங்கத் தள்ளப்பட்ட இலங்கை உழைக்கும் மக்கள் மீதான அக்கறையினால் இயக்கப்படுவது அல்ல. உலகின் ஏனைய பாகங்களைப் போலவே, இந்த சிறிய தெற்காசிய தீவும் கூட, சர்வதேச பகைமைகளுக்குள் இழுத்துத் தள்ளப்படுகிறது. பூகோள பொருளாதார நெருக்கடி ஆழமடைகின்ற நிலையில் இந்தப் பகைமைகள் உக்கிரமடைவதோடு படு மோசமான அழிவுகரமான மோதல்களை முன்னறிவிக்கின்றன. |