World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பால்கன்
Kosovo: Evidence of KLA torture and murders revealed by BBC கொசவோ: கொசவோ விடுதலை இராணுவத்தின் சித்திரவதைகள், கொலைகள் பற்றிய சான்றுகள் BBC ஆல் வெளியிடப்படுகின்றன By Paul Mitchell 1999ல் முன்னாள் யூகோஸ்லாவியாவில் நேட்டோ குண்டுவீச்சின்போதும் அதைத் தொடர்ந்த ஆக்கிரமிப்பின்போதும் கொசவோ விடுதலை இராணுவம் (KLA) நிகழ்த்திய சித்திரவதைகள் மற்றும் கொலைகள் பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏப்ரல் 9ம் தேதி "Crossing Continents", "Newsnight" ஆகிய BBC நிகழ்ச்சிகளில் கொசவோ மற்றும் அண்டை அல்பேனியா ஆகியவற்றில் கொசவோ விடுதலை இராணுவம் இரகசிய சிறை வலைப் பின்னலை வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. ஒரு பெரிதும் புறக்கணிக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணையை முக்கியமானதொரு செய்திச்சேவை நடத்தியமை ஒருவேளை இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும். "Crossing Continents" நிகழ்ச்சியின்படி சான்றுகள் "உலகம் காணக்கூடாது என்று இருந்து மோதலின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது." பல ஆண்டுகள் ஆயிரக்கணக்கான இனவழி அல்பேனியர்கள், கொசவோ சேர்பியர்கள் மற்றும் ரோமா ஜிப்சி சாதாரண மக்கள் மோதலின் போதும் அதற்குப் பின்னரும் "காணாமற் போய்விட்டது" பற்றி பல ஆண்டுகள் விசாரணை நடத்தியுள்ள நிருபர் மைக்கேல் மான்ட்கோமரி ஆதாரங்கள் பற்றி பேசினார். இதில் இறந்தவர்கள், இன்னமும் காணமாற் போயுள்ளனர் என்று கூறப்படுபவர்களுள் முன்னாள் கொசவோ விடுதலை இராணுவத்தினரும் அவர்களின் உறவினர்களும் அடங்குவர். என்ன நடந்தது என்பது பற்றி பகிரங்கமாகப் பேசுவதற்கு பலர் இன்னமும் எச்சரிக்கையுடன் உள்ளனர். அவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளுவதுடன், சிலர் கொலை செய்யப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர் கூறினார். ஒரு கொசவோ விடுதலை இராணுவத்தின் கைதி பின்வருமாறு விளக்கினார்: "மக்கள் அடிக்கப்பட்டது, குத்தப்பட்டது, எஃகு குழாய்களால் தாக்கப்பட்டது, ஆகாரமின்றி 5, 6 நாட்கள் வைக்கப்பட்டது போன்ற பலவற்றை நான் பார்த்துள்ளேன். தோட்டாக்கள் துளைக்காத அங்கிகள் சிலருக்கு அணிவிக்கப்பட்டு அது தொழிற்படுகின்றதா எனப் பார்ப்பதற்கு சுடப்பட்டனர், கல்லறைகளுக்குள் தள்ளப்பட்டனர், அடித்துக் கொல்லப்பட்டனர்." "இவற்றையெல்லாம் காணும்போது என்ன உணர்ந்தீர்கள்?" என அவரிடம் கேட்கப்பட்டபோது அவர். "இது நம்முடைய மனதில் வாழ்நாள் முழுவதும் படிந்திருக்கும். இதை மனிதர்களுக்கு செய்யக்கூடாது; ஏன் விலங்குகளுக்குக்கூட செய்யக்கூடாது." எட்டு முன்னாள் கொசவோ விடுதலை இராணுவத்தினர் மான்ட்கோமரியிடம் பேசினர். சிலர் நடைபெற்ற கொடுமைகளைப் பற்றி பெரும் "இகழ்ச்சி" அடைந்தததாக கூறினார். வேறு சிலர் கொசவோ சுதந்திரம் என்ற இலக்கு இப்பொழுது அடையப்பட்டுவிட்டதால், கடந்த காலம் பற்றி சரியாக பேசும் நேரம் வந்து விட்டது என்றனர். கைப்பற்றப்பட்ட சேர்பியர்கள் மற்றும் ரோமா குடிமக்கள் கடந்து கொண்டிருக்கும் நேட்டோ துருப்புக்களில் இருந்து மறைத்து வைக்கப்பட்டு, பின்னர் அல்பேனிய எல்லை கடந்து அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்று ஒருவர் விவரித்தார். "இப்பொழுது, நினைவுகூரும்போது, நிரபராதியான குடிமக்களுக்கு இவற்றைச் செய்த பலவும் தவறு என்று நான் கருதுகிறேன். ஆனால் இதைச் செய்தவர்கள் எதுவும் நடக்கவில்லை என்பது போல் நடந்து கொள்ளுகின்றனர், தங்கள் சொந்த மக்களான அல்பேனியர்களை துன்பப்படுத்துகின்றனர்." மற்றொருவர் எப்படி கை கால்கள் கட்டப்பட்ட கைதிகள் (முக்கியமாக சேர்பியக் குடிமக்கள்) நிறைந்த வண்டிகளை அல்பேனியாவிற்கு ஓட்டி சென்றார் என்று கூறினார். அங்கு அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொலையுண்டனர்: "எனக்குப் பெரும் விருப்பமின்றி இருந்தது. இவை முடியக் காத்திருந்தேன். அது மிகக் கடினமாக காலம். நாங்கள் விடுதலைக்கான போர் புரிவதாக நான் நினைத்திருந்தேன்: ஆனால் இது முற்றிலும் மாறாக இருந்தது." இக்கொடுமைகள் சில நடந்த இடத்திற்கு மான்ட்கோமரி சென்றிருந்தார். அல்பேனிய சிறு நகரமாக குக்ஸில் ஒரு பழைய ஆலை ஒன்று உள்ளது. அது நூற்றுக்கணக்கான புதிய படையினர், ஆயுதங்கள், உணவு, மருத்துகள் ஆகியவை விநியோகிக்கப்படும் கொசவோ விடுதலை இராணுவத்தின் மூலோபாய முக்கியமான இராணுவத் தளமாகும். நாட்டின் நடுப்பகுதியில் இருக்கும் மற்றொரு சிறு நகரம் பரெல் இல் கொசவோ விடுதலை இராணுவம் ஒரு முகாமைக் கொண்டிருந்தது. இக்கொடூர நடவடிக்கைகள் பரலில் நடப்பது பற்றிய தகவல் முதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு (ICRC) க்கு 2000ல் கிடைத்து. அப்பொழுது சேர்பிய பொதுமக்கள் அங்கு 1999ல் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அவர்களுடைய உறுப்புக்கள் அகற்றப்பட்டு வெளிநாடுகளில் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக விற்கப்பட்டதாக கொசவோ விடுதலை இராணுவ போராளிகள் தெரிவித்தனர். முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான குற்றவியல் நீதிமன்றமும் (ICTY), மற்றும் கொசவோவிற்கான ஐக்கிய நாடுகள் பணியகமும் (UNMIK) ஒரு பண்ணையில் நடத்தப்பட்ட விசாரணை அந்த இடத்தில் ஊசிகளையும் காலி போத்தல்களையும் அங்கு கண்டதுடன், இவற்றில் சில அமைதிப்படுத்தும் மருந்துகள், இரத்தம் சேகரிக்கும் பைகள், அறுவை சிகிச்சைக்கான கருவிகள் ஆகியவையும் அடங்கியிருந்தன. மனித இரத்தம் தரையில் பரவியிருந்தது. இப்பொழுது ஆர்ஜென்டினாவில் சுவிஸ் தூதராக இருக்கும் ICTY தலைமை வக்கீல் Carla Del Ponte தன்னுடைய புத்தகமான The Hunt (வேட்டை) இல் அவற்றைப் பற்றி வெளியிட்டபின்தான் பரல் நகர கொடுமைகள் கடந்த ஆண்டு பகிரங்கமாயின. முன்னாள் கொசவோ விடுதலை இராணுவ உறுப்பினர்கள் நீதிமன்ற சாட்சிகளை "திட்டமிட்டு துன்புறுத்துதல், சாட்சிகளை மிரட்டுதல் ஆகியவற்றை நடத்துவதற்கு" UNMIK அதிகாரிகள் அனுமதித்ததற்கும் மற்றும் கொசவோவின் முன்னாள் பிரதம மந்திரி மற்றும் உயர்மட்ட கொசவோ விடுதலை இராணுவ தளபதி Ramush Haradinaj மீது போர்க்குற்றங்களுக்காக விசாரணை நடத்தாமல் பாதுகாத்ததற்கு குறைகூறுகையில், del Ponte பரலில் நடைபெற்ற "உறுப்புக்கள் அறுவடை" கைவிடப்பட்டதற்கான காரணம் ''அதை தொடரமுடியாமல் போனதே'' என்று எழுதியுள்ளார். (பார்க்கவும்: Kosovo: The Hague acquits former PM Haradinaj of war crimes amid alleged witness intimidation, 16 April 2008) "Crossing Continents" நிகழ்ச்சியில் காணாமற்போன நபர்கள் மற்றும் கொலைத் தடையங்கள் பற்றிய UNMIK இன் அலுவலகத்தின் முன்னாள் தலைவரான Jose Pablo Baraybar விளக்குகிறார்: "குக்ஸில் முகாமில் கைதிகளாக இருந்த சிலர் இன்னும் உயிரோடு உள்ளனர் என்பது உறுதி. இவர்கள் அங்கு மற்றவர்களை அல்பேனியர்கள், அல்பேனியர் அல்லாதவர்கள் என்று பார்த்துள்ளனர். கொசவோ விடுதலை இராணுவ தலைமையின் உறுப்பினர்கள் முகாமில் இருந்தனர். பல பெயர்கள் குறிப்பிடப்பட்டன, இது ஒரு நிறுவப்பட்ட உண்மை என்றுதான் நான் கூறுவேன்." கொசவோ விடுதலை இராணுவத்தின் "தடுப்பு நிலைய வலைப்பின்னல்" ஒன்றை நடத்தியது பற்றி UNMIK தெரிந்திருந்தது என்று Baraybar வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் விசாரணைகள் வேண்டும் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன; ஆனால் "எந்த முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை". அப்போது முதல் சில சான்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. "நல்ல முறையில் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தால்" இத்தகைய சான்றுகள் அழிந்திருக்காது எனத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். Amnesty International உடைய செய்தித் தொடர்பாளர் Sian Jones, "Crossing Continents" நிகழ்ச்சியில் UNMIK போர்க்குற்றங்களை "விசாரிக்க விரும்பவில்லை" என்றும் "கொசவோ விடுதலை இராணுவ அதிகாரிகளை விசாரிப்பதில் மோசமான முறையில் மெதுவாக இருந்தது" என்றும் குறிப்பிட்டார். "ஏராளமான குற்றச்சாட்டுக்கள், ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் ஆனால் மிகக் குறைந்த உண்மையான நியாயம் வழங்குதல்தான் இருந்தது" என்று Jones தொடர்ந்து கூறினார்."சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்த வேண்டிய" ஐக்கிய நாடுகளும் நேட்டோவும் போருக்கு பின் சாதாரண மக்களின் பாதுகாப்பை, அதுவும் சேர்பியர்கள் போன்ற துன்புறத்தப்பட்ட சிறுபான்மையினரை புறக்கணித்தது "முற்லும் இழிந்த தன்மை உடையது" என்றும் Jones கூறினார். "சர்வதேச சமூகம், கொசவோவில் பாதுகாப்பான சூழ்நிலையை அளிக்கும் பொறுப்புடன் அங்கு அனுப்பப்பட்டது, ஆனால் இச்செயல்கள் அவர்கள் பார்வையிலேயே நடைபெற்றது என்பது மிக அதிர்ச்சியான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.... அதுவும் இந்த சர்வதேச அமைப்பு அவர்களை காப்பாற்றுவதற்கு அனுப்பப்பட்ட நிலையில் மனித உரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதில் இருந்து சிறுபான்மை சமூகங்களை காப்பாற்றாதது ஒரு பாரிய தோல்வியாகும்." இன்றுவரை முன்னாள் கொசவோ பிரதம மந்திரியும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான Agim Ceku (கொசவோ விடுதலை இராணுவ தலைமையகத்தின் முன்னாள் தலைவர்) இந்த தவறுகளையெல்லாம் மறுக்கிறார். "நான் அவற்றை நம்பவில்லை. இவற்றைப் பற்றி நான் கேள்விப்படக்கூட இல்லை" என்று மான்ட்கோமரியிடம் கூறினார். "உண்மையும் நீதியும் எங்கள் பக்கம்தான். அது ஒரு தூய்மையான போர், ஒரு தூய்மையான இராணுவம்" என்று அவர் சேர்த்துக் கொண்டார். கொசாவோ பிரதம மந்திரியும் முன்னாள் கொசவோ விடுதலை இராணுவ அரசியல் இயக்குனருமான Hashim Thaci, "Newsnight" நிருபர் நிக் தோர்ப்பிடம், "சிலர் போருக்கு பின்னர் தவறான செயல்களில் ஈடுபட்டனர். சிலர் கொசவோ விடுதலை இராணுவ சீருடையை தவறாகப் பயன்படுத்தினர். பல பகுதிகளில் இருந்தும் வந்த மக்கள் தாங்கள் கொசவோ விடுதலை இராணுவத்தில் உள்ளவர் என்று பாசாங்கு காட்டி, அதன் பெயரில் சில மோசமான செயல்களைப் புரிந்தனர்." என்றார். " நாங்கள் இவர்களிடம் இருந்து எங்களை விலக்கிக் கொண்டுவிட்டோம். தவறான நடத்தை மிகக்குறைவுதான்" என்று அவர் முடித்தார்."Crossing Contentnts", "Newsnight" இரண்டும் கொசவோ விடுதலை இராணுவ கொடுமைகள் பிரச்சினை பற்றி தொடர்ந்து கூறினாலும், அவை "உலகம் இதைக் காணக்கூடாது என்று இருந்தது" ஏன் என்பது பற்றி ஆராயவில்லை.யூகோஸ்லாவிய குடியரசை அதன் துண்டுதுண்டாக பிரிக்கும் அமெரிக்காவின் மூலோபாய இலக்கில் கொசவோ விடுதலை இராணுவம் முக்கிய பங்கை கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. இது பால்கன் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படும் என்பதுடன் ரஷ்யாவின் பரந்த பூகோள-மூலோபாய நலன்களுக்கும் அச்சுறுத்தலாகும். சுலோபோடன் மிலோசெவிக்கின் ஆட்சி கொசவோவில் இனச்சுத்திகரிப்பை செய்துவருவதாக போலிக் காரணம் கூறப்பட்டு நேட்டோ 1999ல் யூகோஸ்லேவியக் கூட்டரசுக் குடியரசிற்கு எதிராக ஒரு போரை தொடக்கியது. மிலோசெவிக்கிற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை பின்னர் ICTY நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கொசவோ நெருக்கடியின் உண்மைக்காரணங்கள் முன்னாள் யூகோஸ்லேவியாவின் பொருளாதார உடைவில் உள்ளது. அதற்கு 1980களின் கடைசிப் பகுதி, 1990ன் தொடக்கப் பகுதிகளில் சர்வதே நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டமைப்பு மறுசீரமைப்புத் திட்டங்கள் என்று வலியுறுத்தப்பட்ட விதிகள் எரியூட்டின. வேலைகள் இழப்பு, வாழ்க்கைத்தர சரிவு இவற்றிற்கு எதிரான சமூக எதிர்ப்பை திசை திருப்புவதற்கும் தங்கள் நிலைமையை உயர்த்திக் கொள்ளவும் முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரும் மற்றும் வகுப்புவாத இழிந்த அரசியல்வாதிகளும் முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசுப் பகுதிகள் அனைத்திலும் தேசிய உணர்வுகளை வளர்த்து பல ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவையும் நாடி நின்றனர். இந்த சமூக, பொருளாதார சிதைவுப் போக்கினால் போர்க்குணமிக்க சேர்பிய மற்றும் அல்பேனிய தேசியவாதமும் இருபக்கங்களிலும் வெளிவந்தன. கொசவோ விடுதலை இராணுவ தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை கொசவோவை உறுதி குலைத்தல் மற்றும் மேலைநாடுகளின் தலையீட்டை தூண்டும் வகையில் நடத்தியது. மேற்கு அரசாங்கங்களும் செய்தி ஊடகமும் கொசவோ விடுதலை இராணுவத்தினை கொடுங்கோலர் மிலோசெவிக் ஆட்சியில் இருந்து கொசவோ மக்களை விடுவிக்கப் போராடும் விடுதலை இயக்கம் என்று பாராட்டின. ஆனால் அதுவே ஒரு அமெரிக்கவின் சார்பிலான அமைப்பாக சேவை செய்ததுடன், நேட்டோவின் விமானத் தாக்குதலுக்கு தரையில் இருந்து உதவியளித்த அமைப்பாகத்தான் இருந்தது. ஒன்பது ஆண்டுகள் UNMIK ஆக்கிரமிப்பிற்கு பின்னர் கடந்த ஆண்டு கொசவோ சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. ஆனால் பெரும்பாலன மக்கள் அங்கு வறுமையிலும் வேலையின்மையிலும் வாடுகின்றனர். கடந்த ஆண்டு Human Rights Watch, "வன்முறை, பொது மற்றும் அரசியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு, அச்சுறுத்தல், பிரிவினைப்படுத்துதல் ஆகியவை வாடிக்கையாக நடைபெற்றன", குறிப்பாக ரோமா, அஷ்காலி, எகிப்திய சமூகங்களுக்கு எதிராக." என்று தகவல் கொடுத்துள்ளது. 200,000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த சேர்பியர்கள் அங்கு திரும்பவர முடியவில்லை, அல்லது வருவதற்கு அஞ்சுகின்றனர். மற்றவர்கள் விரட்டப்பட்டனர் அல்லது தடுப்புக்கள், முள்வேலிக்குப் பின் கொசவோவின் வடபுற குடியிருப்புகளில் வாழ்கின்றனர். |