World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Pentagon budget envisions a series of Iraq-style wars

பென்டகனுடைய வரவு-செலவுத் திட்டம் தொடர்ச்சியான ஈராக்கிய மாதிரிப் போர்களை நடத்த விரும்புகிறது

By Patrick Martin
9 April 2009

Back to screen version

திங்களன்று ஒரு வழமையான செய்தி ஊடகத்திற்கான அறிவிப்பிலும், மற்றும் மறுநாள் செய்தி ஊடகத்தில் வெளிவிடப்பட்டதிலும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மாதிரியான முடிவில்லா தொடர்ச்சியான போர்களை நடத்தும் என்ற எதிர்பார்ப்பில் உலக வரலாற்றில் மிகப் பெரிய இராணுவ வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்தார்.

இராணுவ வரவு செலவுத்திட்டமும் அதைத் தயாரித்த அதிகாரியுமான கேட்ஸ் இதே பதவியை புஷ் நிர்வாகத்தின் கடைசி இரு ஆண்டுகளிலும் கொண்டிருந்துடன், புதிய ஜனாதிபதி ஒருவரால் பென்டகன் தலைவராக முதல் தடவையாக தொடர்ந்து பதவியில் வைத்திருக்கப்படுகின்றார். இது ஒபாமாவிற்கும் புஷ்ஷிற்கும் இடையே உள்ள அடிப்படை தொடர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

"மாறுதல்" என்று பேசப்பட்டவை அனைத்தும் மட்டுமல்லாது ஒபாமாவின் "போர் எதிர்ப்பு" நிலைப்பாடு பற்றிய பரந்த நப்பாசைகள் ஒருபுறம் இருக்க, புதிய நிர்வாகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை இரக்கமற்ற முறையில் அதன் முந்தைய இழிந்த நிர்வாகம் போலவேதான் தொடர உறுதியாக உள்ளது.

தன்னுடைய உத்தியோகபூர்வ அறிவிப்பின் துவக்கத்தில் ஜனாதிபதி ஒபாமா அவருக்கு அனைத்து இராணுவத் திட்டங்களிலும் முடிவெடுக்கும் முழு அதிகாரத்தைக் கொடுத்துள்ளார் என்றும், இராணுவ வரவு செலவுத்திட்டத்தின் மொத்த அளவு மற்றும் எப்படி இராணுவம் பயன்படுத்தப்படும் என்பது பற்றிய அரசியல் முடிவுகள் பற்றிய கருத்துக்களைத்தான் வெள்ளை மாளிகை வழங்கும் என்றார்.

"ஜனாதிபதியுடன் நெருக்கமாக ஆலோசனைகள் செய்துவருகிறேன். ஆனால் இத்துறைக்கு வெளியில் இருந்து நோக்கத்தையோ, வழிகாட்டு முறையையோ தனிப்பட்ட திட்ட முடிவுகள் பற்றி நான் பெறவில்லை. கூட்டுப் படைகளின் தலைவரும் துணைத்தலைவரும் இப்பரிந்துரைகளுடன் முற்றிலும் இயைந்த வகையில்தான் உள்ளனர்." என்றார் அவர்.

ஒபாமா நிர்வாகத்தில் முடிவெடுக்கும் திறனில் இராணுவ உயர்மட்டம் அதிகரித்தளவிலும் மற்றும் கிட்டதட்ட ஒரு சுதந்திரமான பங்கை கொண்டிருப்பதை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒபாமா நிர்வாகத்தின் தேசியக் கொள்கையை வகுப்பதில் முந்தை ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷில் நிர்வாகத்தில் இருந்ததைவிட அரசியல் வாழ்வில் இராணுவம் மிகக் கூடுதலான முறையில் அதிக பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

பென்டகனுக்கு ஒபாமா தடையற்ற சுதந்திரத்தைக் கொடுக்கும் வகையில் கூறியுள்ளதாவது: இதோ 640 பில்லியன் டாலர் உள்ளது. அதை என்ன செய்வது என்பது பற்றி நீங்கள் முடிவெடுங்கள்." வெள்ளை மாளிகையின் நிர்வாக, வரவு-செலவுத் திட்ட அலுவலகம் அதில் கையெழுத்திடுமுன்னே ஒபாமா கேட்ஸிற்கு அவருடைய வரவு-செலவுத் திட்டத்தில் வரைவை பகிரங்கமாக்கலாம் என்று அனுமதித்துள்ளார்; இது வேறு எந்த அரசாங்கத்துறைக்கும் கொடுக்கப்படாத சலுகையாகும்.

இதைத்தவிர, மூன்று முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் உயர்மட்ட கொள்கை இயற்றும் பங்கைக் கொண்டுள்ளனர். ஓய்வுபெற்ற தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார், ஓய்வுபெற்ற கடல்படை அட்மைரல் டெனிஸ் பிளேயர் தேசியப் பாதுகாப்பு உளவுத்துறையின் இயக்குனராக உள்ளார், ஓய்வுபெற்ற தளபதி எரிக் ஷீன்செகி மூத்தபடையினர் நிர்வாகப்பிரிவிற்கு தலைமை தாங்குகிறார்.

2010 இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பாரிய தொகைகள் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களில் பெறப்பட்ட படிப்பினைகளைத் தளமாகக் கொண்டு பிரிக்கப்படும் என்றும், இன்னும் மரபார்ந்த இராணுவங்களைவிட மிக அதிக முறைசாரா, கெரில்லாத் துருப்புக்களுக்கு எதிராக இருக்கும் அவை போன்ற போர்கள் வரக்கூடும் என்ற முன்னோக்கின் அடிப்படையிலும் அவ்வாறு உகந்த முறையில் பிரிப்பதுதான் பென்டகனுக்கு வரும் உடனடிக் காலத்தில் முக்கியமான பணியாக இருக்கும் என்றும் கூறினார்.

"இந்தத் துறையின் திட்டங்கள் மறு சமசீராக்க வேண்டும். அதையொட்டி நாம் இன்று ஈடுபட்டிருக்கும் போர்களில் போரிடும் நம் திறன்களை அதிகப்படுத்தி, அமைப்புமுறைப்படுத்த வேண்டும். மேலும் பல வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளும் ஆராயப்படும்" என்றார் அவர்; சில உயர் செலவின, உயர் தொழில்நுட்ப ஆயுத முறைகள் அகற்றப்பட்டதை நியாயப்படுத்தும் முயற்சியில், அதனால் துருப்புக்கள் நிதிக்கு கூடக் கிடைக்கும், சிறப்பு படைப் பிரிவுகள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத விமானங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் ஒதுக்கீடு இருக்கும் என்றார்.

இத்தகைய மாறுதல்களில் இருக்கும் பெரும் வாங்கும் முடிவுகள் கீழ்க்கண்டவை ஆகும்:

விமானங்கள்: பென்டகன் F-35 Joint Strike Fighter விமானங்கள் இருமடங்கிற்கும் மேல் அதிகமாக்கும். அதாவது FY09 14 இல் இருந்து FY10 30 ஆகும். இது ஐந்து ஆண்டுகளில் மொத்த அதிகம் 513 என்று இருக்கும். இதைத்தவிர மிகப் பெரிய அளவில் 2,443 விமானங்கள் உற்பத்தி தொடர்ச்சி முழுக்காலத்தில் இருக்கும். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பென்டகன் F22 உற்பத்தியை நிறுத்தும். அது இன்னும் கூடுதலான முன்னேற்றம் கொண்ட, செலவு நிறைந்த போர் விமானம் ஆகும்.

ஏவுகணைப் பாதுகாப்பு: பென்டகன் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலரை குறைந்த தூர அரங்கு ஏவுகணைத் திட்ட முறைகளுக்கும் (THAAD), Aegi ஏவுகணை-எதிர்ப்பு விமானத்தளங்கள் கொண்ட கப்பல்களுக்கும் செலவழிக்கும். இவை ஏற்கனவே போர் அனுபவம் கொண்டவை;.அதே நேரத்தில் முற்றிலும் நிரூபணம் ஆகாதா மூலோபாய ஏவுகணை பாதுபாப்புத் திட்டத்திற்கு செலவுகள் குறைக்கப்படும். இவற்றைத்தான் குடியரசுகட்சி நிர்வாகம் ரேகன் காலத்தில் இருந்து எவ்வித பயனுமில்லாது அதிகம் செலவழித்துள்ளது.

கடற்படை கப்பல்கள்: அமெரிக்க ஆயுத முறைகளில் மிக அதிக செலவு வாய்ந்த புதிய விமானத்தளத்தைக் கொண்ட கப்பல்கள் கட்டுவது மெதுவாக்கப்பட்டு, புதிய விமானத்தளம் இருக்கும் கப்பல்கள், முன்னேற்றம் நிறைந்த அழிப்பு சக்தி கப்பல்கள் கட்டுமானம் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அத்துடன் விமானங்கள் இறங்கும் கப்பல்கள், மரபார்ந்த இராணுவப் படைகளில் கடல் தாக்குதலுக்கு பயன்படுத்துபவற்றின் கட்டுமானமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இந்த நிதி இன்னும் மரபார்ந்த அழிப்பு சக்தி நிறைந்த கப்பல்களைக் கட்டும் புதுப்பிக்கப்படும் திட்டத்திற்கு செலவழிக்கப்படும். இன்னும் விரைவான முறையில் கட்டமைக்கப்பட கூடியவையும், , பாரசீக வளைகுடா போன்ற நெருக்கமான கடற்பகுதிகளுக்கு ஏற்றவிதத்தில் சிறு கப்பல்கள் கட்டப்படும்.

இராணுவ அலுவர்கள்: இராணுவ, கடற்படையில் தாமாக இணையும் பிரிவை கட்டியமைக்க மிகப்பெரிய அதிகரிப்புக்கள் கொடுக்கப்படும். இதில் அலுவலர்கள் இழப்பு 7 ஆண்டுகளாக தொடர்ச்சியாக போரில் ஈடுபட்டிருப்பதாலும் அதே போல் 6 ஆண்டுகளாக இரு போர்கள் ஒரே நேரத்தில் நடாத்தப்படுவதாலும் பாரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான இராணுவ ஒப்பந்தக்காரர்களுக்கு பதிலாக பென்டகனின் நேரடி ஊழியர்கள் நியமிக்கப்படுவர்; இது புஷ் நிர்வாகத்தின் கீழ் இடைவிடாமல் வரும் ஊழல்கள், தவறுகள் என்று ஈராக்கில் இருந்தவற்றை அகற்றும் விடையிறுப்பு ஆகும் (Blackwater, Halliburton போன்றவை.)

தொழில்நுட்பம்: இராணுவத்தின் எதிர்காலப் போரிடும் திட்டம் (Future Combat Systems-FCS) என்பது உணரக்கூடிய கருவிகள், இயந்திர மனிதர்களை கொண்ட தானியங்கிப் போர்த்தளத்தை தோற்றுவிப்பதற்காக நிறுத்திவைக்கப்படும். மேலும் மிக செலவினம் நிறைந்த பாகங்கள், வடிவமைப்புக்கள், மற்றும் புதிய இராணுவப் போரிடும் வாகனம் போன்றவை மரபார்ந்த டாங்கிகள், கவச வண்டிகளுக்குப் பதிலாக வரும். ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற தொலைக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட கருவிகள் மீது கவனம் இருக்கும். இவை ஒரே நேரத்தில் தரை நடவடிக்கையுடன் ஒருங்கிணைக்கப்படும். அதே நேரத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தக்கூடிய புதிய குழுக்களுக்கு பயிற்சி தொடரும்.

காங்கிரஸிடம் இருந்து வரவு-செலவுத் திட்ட அறிவிப்பிற்கு வந்த விடையிறுப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான். நிறுவனங்கள் ஒப்பந்தங்களை இழக்கும் தொகுதிகளின் செனட்டர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் கேலிக் கூச்சலிட்டு இதைக் கேட்டனர். ஒப்பந்தங்களை பெறும் பெருநிறுவனங்கள் இருக்கும் தொகுதிகளில் உள்ளவர்கள் கேட்ஸின் அறிவைப் புகழ்ந்தனர்.

இந்த எதிர்ப்புக்களை கேட்ஸ் எதிர்பார்த்து, தன்னுடைய செய்தி ஊடக பார்வையாளர்களிடம் வரவு-செலவுத் திட்டத்தில் 50 சதவிகிதம் இன்னமும் மரபார்ந்த போரில் ஈடுபடும் தயாரிப்புக்களுக்குத்தான் முற்றிலும் செலவிடப்படுகிறது என்றார். எவரும் அவரை அத்தகைய எதிர்ப்பில் விரோதி யாராக இருப்பர் என்று கேட்கவில்லை அதே போல் எந்த நிருபரும் எந்த நாடுகள் போர்க்களங்களாக இருக்கும் திறனைக் கொண்டவை, இத்தகைய பெருகிய மரபு சாரா, எழுச்சி எதிர்ப்புத் திறன்களுக்காக பென்டகன் கருத்தில் கொண்ட நாடுகள் என்றும் கேட்கவில்லை.

பென்டகன் வாடிக்கையானதைவிடக்க கூடுதலான ஆர்வத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நாடுகளின் நிலப்பகுதி, அரசியல், புவியியல் கூறுபாடுகள், உள்ளூர் இராணுவப் பிரிவுகள் பற்றி நன்கு அறியமுனைகின்றது என்பது பற்றி ஒருவர் பட்டியலிடலாம். இந்நாடுகளில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்காவின் பெரும்பகுதி, மத்திய கிழக்கு முழுவதும், மெக்சிகோ மற்றும் கரிபியன் வளைகுடா பகுதி ஆகியவை அடங்கும்.

ஒரு முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கூட அமெரிக்கா உலகில் இருக்கும் மற்ற நாடுகளை அனைத்தும் செலவழிக்கும் பணத்தைவிட கூடுதலாக போர் ஆயுதங்களுக்கு அமெரிக்க பணத்தை தொடர்ந்து விரயம் செய்வது பற்றி எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஒரு முக்கியமான ஜனநாயகக் கட்சித் தலைவர் கூட ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிய மாதிரிகளில் வரக்கூடிய அதிக போர்களைப் பற்றி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவற்றில் இராணுவத்தினர் மிகப்பெரும் தாக்குதல் ஆற்றலைக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயக் கணக்குகளுக்குத் தடையாக உள்ள வறிய நாடுகளின் மக்களை சுட்டெரிக்க முடியும்.

திங்களன்று Public Broadcasting System க்கு கொடுத்த பேட்டி ஒன்றில், கேட்ஸ் ஒபாமா நிர்வாகத்திற்கும் அதற்கு முன் இருந்த குடியரசு நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்ச்சி பற்றிக் கூறினார். "உண்மை என்ன என்றால், இது புதிது அல்ல. இது பற்றி 18 மாதங்களாகப் பேசி வருகிறேன்; புஷ் நிர்வாகத்தின் கடைசி இலையுதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்தின் மையத்தானமாகத்தான் நான் இதை வெளியிட்டேன். இது உண்மையில் முறைசாரா அல்லது கலப்புவகையான மோதல்களுடன் போரிடும் திறனுக்குத் தேவையான நீடித்த கூறுபாடுகளை அறிதல் என்பதும் மற்றும் இது ஒரு முக்கிய மூலோபாய மாற்றம் என்பதும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்."

பென்டகன் செலவினங்களில் ஆப்கானிஸ்தான் முக்கிய குறுகிய கால உந்ததுதலைக் கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார். "நாம் நம்முடைய ஹெலிகாப்டர்கள் திறனை அதிகமாக்கிக் கொண்டு வருகிறோம்; ஆப்கானிஸ்தானில் அவற்றிற்கு பெரும் தேவை உள்ளது. சிறப்பு செயல்பிரிவுகளைக் கட்டமைக்க அதிகம் செய்து வருகிறோம். அவற்றில் கூடுதலான படையினர், இன்னும் சிறப்பான செயற்பாடுகள் நிலைப்பாடும், நகரும் திறனும் இருக்கும். எனவே இவற்றின் பல கூறுபாடுகளும் வரவு-செலவுத் திட்ட அடித்தளத்தில் இருத்தப்படும். அவை நீண்ட கால திறன்களாக அமெரிக்காவிற்கு விளங்கி, ஆப்கானிஸ்தானில் இதற்கான விளைவுகள் கிடைக்கும் என்பது வெளிப்படை." என்றார்.

மறுநாள் ஒரு செய்தியாளர் வட்டமேசைக் கூட்டத்தில், பென்டகன் அதிகாரப் படிநிலையை சீரமைப்பதை தற்போதைய போர்களில் அனுபவம் கொண்டுள்ள தளபதிகளுக்கு பதவி உயர்வு கொடுப்பதின் மூலம் விரும்புவதை வலியுறுத்தினார். "தளபதி கேசி தளபதி சியாரெல்லி, தளபதி டெம்ப்சே, தளபதி பெட்ரீயஸ், தளபதி ஒடியர்னோ, தளபதி ஆஸ்டின்" என்று தொடர்ச்சியான பல உயர் நியமனங்களைக் குறிப்பிட்ட அவர், "இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கற்கப்பட்ட படிப்பினைகளை அமைப்புமுறையாக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இவர்கள் அனைவரும் போரில் பணிபுரிபவர்கள், அவர்களுடைய நியமனங்கள் தற்செயல் நிகழ்வோ, ஏதோ ஒரு சார்பில் நடந்தவையோ அல்ல."

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க இராணுவம் அமெரிக்க ஏகாதிபத்தியம் சில நாடுகளை அவற்றின் இயற்கை ஆதாரங்கள் மற்றும் மூலோபாயத்திற்காக இலக்கு வைக்கும்போது அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு, எழுச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மறுகட்டமைக்கப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved