World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian elections
:

Congress Party drops two candidates implicated in 1984 anti-Sikh pogrom

இந்தியத் தேர்தல்கள்:

காங்கிரஸ் கட்சி 1984ல் சீக்கிய-எதிர்ப்பு இனப்படுகொலைகளில் தொடர்புபடுத்தப்பட்ட இரு வேட்பாளர்களை தேர்தலில் இருந்து விலக்குகிறது

By Keith Jones
11 April 2009

Back to screen version

பொதுமக்கள் கூக்குரலை அடுத்து, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் மேலாதிக்கப் பங்காளியான காங்கிரஸ் கட்சி, 1984ல் இந்தியாவின் சீக்கியச் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான வகுப்புவாத இனப்படுகொலையில் தொடர்புபடுத்தப்பட்டவர்களான இரு மூத்த காங்கிரஸ்காரர்களை வரவிருக்கும் தேசியத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் இருந்து அகற்றியது; இருவரும் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

வியாழன்று மாலை காங்கிரஸ் தலைமை தங்கள் வேட்புத் தன்மையை கைவிடும் ஜகதீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமாரின் விருப்பங்களை ஏற்பதாக அறிவித்தது. டைட்லர் வடகிழக்கு டெல்லி பாராளுமன்ற தொகுதிக்கு கட்சியின் வேட்பாளர் ஆவார்; சஜ்ஜன் தெற்கு டெல்லி தொகுதியில் இருந்து வேட்பாளராக நின்றார்.

ஆரம்பத்தில் இருவரும் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்தனர்; அவர்கள் வேட்புத்தன்மையை கட்சித் தலைமை ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது ஒருவேளை தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடும்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டைட்லர் மற்றும் குமார் நியமனங்களை ஒட்டி எழுந்த எதிர்ப்புப் புயலைக் கண்டு தெளிவாக அதிர்ச்சி அடைந்தனர். நன்கு அறியப்பட்டுள்ள சீக்கியப் பத்திரிகையாளர் ஜார்னெயில் சிங் உள்துறை மந்திரி பி. சிதம்பரத்தின் மீது, 1984 சீக்கிய எதிர்ப்புப் படுகொலையில் பெயர் பெற்றவர்களை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து தன் சீற்றத்தைக் காட்ட காலணிகளை வீசி எறிந்த அளவில் தேசத்தின் கவனம் இப்பிரச்சினை மீதுகுவிப்புக் காட்டியது.

இந்திய அதிகாரிகள் கணக்குப்படி அக்டோபர் 31,1984 அன்று பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்; இவர்களில் பாதிப்பேருக்கும் மேல் நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற கொடூர வன்முறையில் உயிரிழந்தனர்.

காங்கிரஸ் கட்சித் தலைமை எப்பொழுதும் 1984 இனப் படுகொலைகளை காந்திப் படுகொலையை ஒட்டி தன்னெழுச்சியாக எழுந்த மக்களின் விடையிறுப்பு என்றும், இதற்குக் காரணம் படுகொலை இரு சீக்கிய மெய்காப்பாளர்களால் செய்யப்பட்டதுதான் என்றும், அதற்குக் காரணம் இந்தியாவின் பாதுகாப்புப் படையினர் சீக்கியர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமான அமிருத சரசின் தங்கக் கோவிலை ஆக்கிரமித்ததற்குப் பதிலடி என்றும் கூறிவந்துள்ளது.

ஆனால் மலைபோன்ற குவிந்த சான்றுகள் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போலீசின் துணையுடன் இனப்படுகொலைக்கு ஏற்பாடு செய்து செயல்படுத்தினர் என்று கூற இடமுள்ளது. நவம்பர் 2ம் தேதி அன்றுதான் அரசாங்கம் தலைநகரில் துருப்புக்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது; அதன்பின்னரும் முதல் 24 மணி நேரத்திற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு சுடுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

2004 ம் ஆண்டு நானாவதி குழு--1984 நிகழ்வுகளைப் பற்றி நடத்திய விசாரணை பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் 2000 த்தில் சஜ்ஜன் குமார், டைட்லர் மற்றும் நீண்டகால டெல்லி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய காபினெட் மந்திரியுமான H.K.L.Bhagat ஆகியோரை சீக்கிய எதிர்ப்பைத் தூண்டிய பங்கு பற்றி குற்றம் கூறியிருந்தது.

குழுவின் அறிக்கைப்படி சஜ்ஜன் குமார் பல முதல் அறிக்கைத் தகவல்களில் சீக்கியர்களுக்கு எதிராக முக்கியமாக தூண்டிவிட்டவர் என்று பெயரிடப்பட்டார்: இது கொலைகள் நிகழ்ந்த உடன் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் ஆகும். (FIR என்பவை சாட்சியங்களைச் சுருக்காமாகக் கூறி, பாதிப்பாளர்கள், சாட்சிகள் கூறுவதையும் குறிக்கும் குற்ற நடவடிக்கை பற்றிய ஆரம்ப போலீஸ் அறிக்கை ஆகும்). ஆயினும்கூட போலீசார் அவருக்கு எதிராக எந்த சட்டபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இக்குழு டைட்லருக்கும் எதிராக "நம்பத்தகுந்த சான்றுகள்" இருப்பதாகவும் அவர் மக்கள் வன்முறையை சீக்கியர்களுக்கு எதிராகத் தூண்டியது "அநேகமாக நடந்திருக்கக்கூடியதுதான்" என்றும் முடிவிற்கு வந்தது. இதேபோல், பகத் "ஒருவேளை...சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களை தயாரிப்பதில் துணை நின்றார்" என்பதற்கு "நம்பத்தகுந்த சான்றுகள்" உள்ளன என்று கூறியுள்ளது.

நானாவதி அறிக்கை வெளிவந்த பிறகு டைட்லர் தன்னுடைய UPA காபினெட்டில் வகித்திருந்த வெளிநாட்டு இந்தியர் விவாகரங்கள் மத்திரிபதவியில் இருந்தும், சஜ்ஜன் குமார் டெல்லி கிராமப்புற வளர்ச்சிக் குழுத் தலைவர் பதவியில் இருந்தும் இராஜிநாமா செய்தனர். ஆனால் இருவருமே காங்கிரஸ் தலைமையினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படவில்லை. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்த போதுமான சான்றுகள் இல்லை என்று கூறியது; பகத் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவர்மீது நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் கூறியது; அவர் 2005ல் இறந்து போனார்.

டிசம்பர் 2007ல், டைட்லருக்கு எதிராக புதிய சான்றுகள் கொண்டுவந்த பின்னர், இந்தியாவின் CBI எனப்படும் குற்ற விசாரணை நிறுவனம் அவருக்கு எதிராக வழக்கை மறுபடி நடத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டது. திடீரென இந்த ஆண்டு மார்ச் மாதக் கடைசியில் தேர்தல்கள் வரவிருக்கையில், CBI டைட்லருக்கு எதிராக வழக்கை கைவிடப்படலாம் என பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தது.

டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் இருவருக்கும் பாராளுமன்ற வேட்பு மனு கொடுத்த பின்னர் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து இருவரும் எந்த நீதிமன்றத்திலும் 1984 கொலைகளில் எழும் குற்றங்களுக்கு தொடர்பில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டதாக வலியுறுத்தியது.

ஆனால் அவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டது இந்தியாவின் சீக்கியர்களுக்கு பெரும் சீற்றத்தைத் தூண்டியது; 1984 இரத்தக் களரிக்கு பொறுப்பானவர்களை இந்திய அரசியல், மற்றும் சட்ட அதிகாரிகள் பொறுப்பிற்கு கொண்டுவரவில்லை என்பதே இச்சீற்றத்தின் காரணம் ஆகும்.

"84 கலகங்களுக்கான பொறுப்பு பற்றி நீதி கொடுக்கப்படவில்லை என்ற உணர்வு சமூகத்தில் உள்ளது" என்று ஏப்ரல் 11 தலையங்கத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியது: "தலைநகரில் படுகொலைகள் நடைபெற்று கால் நூற்றாண்டு ஆகியும் ...6 வழக்குகளில் 13 பேர்தான் தண்டனை அடைந்துள்ளனர். கொலைகளுக்கு ஏற்பாடு செய்த முக்கிய நபர்கள் இதுவரை தண்டனையில் இருந்து தப்பிவிட்டனர். கலகங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட பல குழுக்கள் தங்கள் முடிவுகளை உறுதியாகவும் நம்பகமாகவும் கொடுக்காதது அவநம்பிக்கையைத்தான் அதிகம் வளர்த்தது."

BJP மற்றும் சீக்கிய சமூகத்தின் நட்பு அமைப்புமான ஷிரோமனி அகாலி தளம் SAD, இப்பிரச்சினையைப் பற்றிக் கொண்டு எதிர்ப்புக்களை அமைத்தன; இது காங்கிரஸை டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் வேட்பு நியமனங்களைத் திரும்பப் பெறக் கட்டாயப படுத்தியது. அரசாங்கம் CBI க்கு அழுத்தும் கொடுத்து டைட்லருக்கு "தூய நன்னடத்தை சான்று" கொடுக்க வைத்தது, அதையொட்டி அவர் மறுபடியும் வேட்பாளராக நிற்க முடிந்தது என்று இரண்டும் கூறின.

இந்தியாவின் பிரதம மந்திரி மன்மோகன் சிங், அவரே சீக்கியர், CBI டைட்லர் பற்றிய விசாரணையில் எக்குறுக்கீடும் இல்லை என்று கூறினார். ஆனால் அவர் அவ்வாறு செய்யக்கூடியவரும் அல்ல. ஒரு துறை வல்லுனரான சிங் பிரதம மந்திரியாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் விருப்பத்தையொட்டி பிரதமராக உள்ளார்; அரசியல் மற்றும் கட்சி விவகாரங்கள் பலவற்றை, குறிப்பாக புரவலர்தன்மையையும் வேட்பாளர்களைத் தேர்ந்து எடுப்பதையும் அவர் அரசாங்கத்திற்கும் கட்சித் தலைமைக்கும் விட்டுவிடுவார்.

CBI தான் உண்மையில் அரசியல் அழுத்தத்திற்கு அசைந்து கொடுக்கிறது என்பதை அடிக்கோடிடுவது போல், அது டைட்லர் மீதான கருத்தை காங்கிரஸ் தலைமை அவரை வேட்பாளராக நிறுத்தவில்லை என்பதை அறிந்ததும் மாற்றிக் கொண்டு விட்டது.

மார்ச் மாதக் கடைசியில் வந்த அறிக்கையின்படி, டைட்லருக்கு எதிரான வழக்கு இந்த வியாழனன்று ஒரு நீதிமன்ற முடிவின்படி உத்தியோகபூர்வமாக மூடப்பட உள்ளது. ஆனால் CBI தன் போக்கை மாற்றிக் கொண்டு தான் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் குற்றங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளுகையில், இன்னும் மூத்த நீதிமன்றம்தான் டைட்லருக்கு எதிரான வழக்கை கைவிடலாம் என்ற முடிவை எடுக்க முடியும் என்று கூறிவிட்டது.

காங்கிரஸ் இனப்படுகொலைகாரர்களுடன் இணைந்து செயல்படத் தயராக இருப்பது பற்றிய BJP யின் "சீற்றம்", இதன் இழிவான வகுப்புவாத வனமுறைத் தொடர்பு நீண்ட நாளாக இருப்பதைப் பார்க்கையில் முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். அதன் தற்பொழுதைய பிரதம மந்திரி வேட்பாளரான எல்.கே.அத்வானிதான் 1991-92 ல் அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ஹிந்து புராணக் கடவுளான ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற போராட்டத்திற்கு முக்கிய தலைவராக இருந்தார். இந்த போராட்டம் இறுதியில் தலைமை நீதிமன்ற ஆணைக்கு எதிராக மசூதியைத் தரைமட்டம் ஆக்கியதில் உச்சக்கட்டம் அடைந்தது; அதைத் தொடர்ந்து 1947க்குப் பின்னர் பெரும் குருதி சிந்திய வகுப்புவாத அலை நாட்டைத் தாக்கியது. மற்றொரு BJP பிரச்சாரகர் குஜராத்தில் முதல் மந்திரியாக இருக்கும் நரேந்திர மோடி ஆவார். 2002ல் இவர் முஸ்லிம்-எதிர்ப்பு படுகொலைகளுக்கு உதவினார்; அதில் 2,000 பேர் கொலையுண்டு, 100,000 மக்கள் வீடிழந்தனர். 1984 டெல்லி இனப் படுகொலை போலவே இங்கும் BJP தலைவர்கள் வகுப்புவாதவெறி பிடித்த மக்களை வழிநடத்தி போலீஸுடன் இணைந்து நின்றனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன.

சமீபத்திய வாரங்களில் BJP வருண் காந்தியை ஒரு அரசியல் தியாகியாக்க முயன்று வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் பேச்சை நடத்திய வீடியோ காட்சியில் அவர் பிடிபட்டார். காந்தி-நேரு குடும்ப வம்ச பரம்பரையில் பிரிந்திருக்கும் உறுப்பினர், உத்தரப் பிரதேசத்தில் பிலிபிட் தொகுதியில் BJP வேட்பாளராக இருக்கும் இவர் தொடர்ச்சியான வகுப்புவாத முறையீடுகளை வெளியிட்டார். உதாரணமாக ஒரு கூட்டத்தில் அவர், "இது 'தாமரையின்' கை. இது (ஒரு முஸ்லிம் பற்றிய இழிந்த குறிப்பு) கழுத்தை அறுத்துவிடும்.....வருண் காந்தி வெட்டுவார்...... வெட்டுக, வெட்டுக."

BJP தலைமை எதிர்தரப்பு கோரிக்கைகளையும் இந்திய தேர்தல் குழு வேண்டுகோளான வருண் காந்தியின் வேட்புமனு திரும்பப்பெற வேண்டும் என்பதை நிராகிரித்துவிட்டது.

BJP, SAD உடைய திரித்தல்கள் ஒருபுறம் இருக்க 1984 படுகொலையைத் தூண்டிவிட்டவர்களைக் காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்தது சீக்கியர்களின் சீற்றத்தைப் பெரிதாக்கியது; இது உண்மையானது, உணரக்கூடியது முற்றிலும் நியாயமானதுதான்.

காங்கிரஸும் BJP யும் வகுப்புவாதக் குற்றங்களில் மற்றவர் தொடர்பைச் சுட்டிக்காட்டி பயன்பட்டனர் என்றாலும், இந்திய அரசியல் உயரடுக்கு, போலீஸ் மற்றும் நீதித்துறை தொடர்ச்சியான வகுப்புவாதக் கலவரங்கள் கொடுமைகள் இவற்றிற்குப் பொறுப்பானவர்களைப் பிடித்து வெற்றிகரமாக விசாரணை நடத்துவதில் தோல்வியுற்றன; இவற்றுள் முக்கியமானது 1984 சீக்கிய எதிர்ப்புப் படுகொலைகள், டிசம்பர் 1992 ல் பாபர் மசுதி தகர்க்கப்பட்டபின் கட்டவிழிக்கப்பட்ட வன்முறை அலை மற்றும் 2002 குஜராத் இனப்பொடுகொலைகள் ஆகியவை ஆகும்.

செய்தி ஊடக தகவல்கள்படி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 1984 வகுப்புவாத குருதி கொடுத்தல் பற்றிய விவாதம் கட்சியின் தேர்தல் நிலைமை டெல்லி மற்றும் பஞ்சாபில் சீர்குலைத்துவிடும் என்று அஞ்சினர்; இவற்றில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் வேட்புத் தன்மைகள் காங்கிரஸ் தன்னை இந்தியாவின் ஒரு தேசியக் கட்சி என சித்திரிக்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். இது மூன்றுவிதத்தில் கூறப்படுகிறது; நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் கட்சி, இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் இனத்தினரும் இருக்கும் கட்சி, மற்றும் எல்லா வர்க்கங்களின் கட்சி என.

உண்மையில் காங்கிரஸ் இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கின் மரபார்ந்த கட்சியாகும்: மிகப்பெரிய சமத்துவமற்ற சமூக ஒழுங்குடைய நாட்டிற்கு இக்கட்சி தலைமை தாங்குகிறது; இதில் 800 மில்லியன் மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைந்த பணத்தில் (50 சென்ட்டுகள்) வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்; இக்கட்சி ஊழல்கள், குற்றம் சாரந்த செயல்கள் இவற்றின் இருப்பிடம் ஆகும்; ஒரு குடும்பப் பரம்பரையைச் சுற்றி வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான UPA, BJP கொள்கைகளைவிட அதிகம் வேறுபட்டிருக்காத கொள்கைகளை தொடர்ந்த நிலையில்--ஒரு வலது சமூகப் பொருளாதார செயற்பட்டியல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கு குறைவூதிய தொழிலாளர் அரங்காக மாற்றுவதில் ஈடுபட்டவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "உலகளாவிய மூலோபாயப் பங்காளி" என--காங்கிரஸ் ஒரு பிரத்தியேக பிரிவிற்கு தான் உகந்தது என்பதைக் காட்டிக் கொள்ளாதது முக்கியமாகும், அதேபோல் மதசார்பற்ற தன்மைக்கும் தான்தான் காப்பாளர் என்று காட்டிக் கொள்ள வேண்டும். இக்கூற்றுக்கள் ஒரு புறம் இருக்க, டைட்லர், சஜ்ஜன் குமார் நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது போல், காங்கிரஸ் பல சாதி, வகுப்புவாத வெறி நிறைந்த கருத்துக்களை பயன்படுத்தி BJP யுடன் போட்டியிடும் வகையில் பாக்கிஸ்தான் மீது மிரட்டலையும் தாக்குதல்களை விடுவதையும் அப்பட்டமான வகுப்புவாதிகளுடன் இணைந்து செயல்படுவதையும் தடுக்கவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved