World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காBehind the surge on Wall Street வோல் ஸ்ட்ரீட் எழுச்சிக்கு பின்னணியில் By Tom Eley கடந்த மாதங்களில் முக்கிய அமெரிக்க பங்குச் சந்தைகள் தீவிரமாக ஏற்றம் அடைந்துள்ளன. வெள்ளியன்று Dow Jones Industrial Average பெப்ருவரி 9க்குப் பின்னர் முதல் தடவையாக 8,000 ல் முடிவுற்றது. மார்ச் 9 அன்று 12 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு 20 சதவிகிதம் குறைந்த பின் இப்பொழுது அது ஏற்றம் அடைந்துள்ளது. Nasdaq Composite Index, S&P 500 ஆகியவையும் மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்து 20 சதவிகிதம் உயர்ந்துள்ளன. வெள்ளிக்கிழமை 1933க்குப் பின்னர் Dow மிக அதிக நான்கு வார ஏற்றத்தில் முடிந்தது. இந்த ஏற்றத்தில் ஐயத்திற்கு இடமின்றி ஒரு தொழில்நுட்பரீதியான திருத்தம் உள்ளது. சந்தையில் மிக அதிகமாக விற்கப்பட்டுவிட்டது என்பதற்கானதும் மற்றும் பல முதலீட்டாளர்களும் பொருளாதார வல்லுனர்களும் முதலீட்டு விலைகள் குறைவதும் அவநம்பிக்கை அதிகரிப்பதுமான சந்தைப் பின்னணிக்குள் (Bear market) ஒரு திருப்பம் வர வாய்ப்பு உண்டு என்று உணர்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. ஆனால் இதுவே கூட குறிப்பாக அமெரிக்கா மற்றும் சர்வதேசரீதியாக எந்தவித குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்புக்கான அடையாளங்கள் இல்லாத நிலையில் ஏற்றத்திற்கு விளக்கம் ஆகாது. மாறாக வேலையின்மை எண்ணிக்கை, தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி, உலக வணிகம் மொத்த வளர்ச்சி ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் ஒரே சீராக கவலையளித்து, எதிர்பார்த்ததைவிட மோசமாகத்தான் உள்ளன. வெள்ளியன்று ஒரு புதிய அமெரிக்க தொழில்கள் பற்றிய அறிக்கை 1983க்கு பின்னர் மிக அதிக வேலையின்மை என்பதை காட்டியும் கூட பங்குச் சந்தை உயர்ந்தது. எனவே அடிப்படைக் காரணங்கள் அரசியலாக இருக்க வேண்டும். பங்குச் சந்தைகளில் ஏற்றம் என்பது அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஒபாமா நிர்வாகம் அதன் சக்திக்குட்பட்ட அனைத்தையும் பயன்படுத்தி வங்கிகள் மற்றும் நிதிய மூலதனத்தை காக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. முதலில், நிதி மந்திரி டிமோதி கீத்னர் மார்ச் 23 அன்று வங்கிகளின் விற்கமுடியாத சொத்துக்களை (Toxic assets) அகற்றிவிடும் திட்டத்தை முன்வைத்தார். சந்தைகள் இந்த அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் உறுதியாக ஏற்றம் பெற்று வந்தன. நிர்வாகத்தின் வங்கி பிணை எடுப்புத் திட்டத்தை முந்தைய மாதம் (பெப்ருவரி 10) அவர் முதலில் அளித்தார் என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும். வங்கிகளின் இழப்புக்கள் எப்படி மீட்கப்பட முடியும் என்பது பற்றி தெளிவாகக் கூறாமல் இருந்ததற்காக கீத்னர் குறைகூறப்பட்டார். அந்த அறிவிப்பு தீவிர விற்பனையை தூண்டியது; அது பெப்ருவரி மாதம் முழுவதும் தொடர்ந்தது. இம்முறை கீத்னர் வங்கிகளின் விற்கமுடியாத சொத்துக்களை அதிகப்படுத்தப்பட்ட விலைகளில் வாங்க அரசாங்கம் வரம்பில்லாமல் நிதியை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கும் என்பதைத் தெளிவாக்கினார். இதையும் விடச் சிறந்த வகையில், நிதியத்துறையின் பார்வையில் இது பெரும் இலாபங்களை இத்திட்டத்தில் பங்கு பெற்ற தனியார் முதலீட்டு நிதிக்கும் (Hedge Fonds) பிற முதலீட்டு நிறுவனங்களும் இதில் ஆதாயம் அடைவதற்கு உத்தரவாதமாக இருந்தது. உண்மையில் வோல்ஸ்ட்ரீட் உள்ளிருப்போர் இத்திட்டத்தை இயற்றுவதில் நேரடிப் பங்கைக் கொண்டிருந்தனர். புதிய வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு நிதிய உயரடுக்கின் நம்பிக்கையை உயர்த்தியது போலும். கீத்னர் அறிவிப்பு வந்த அன்று வோல் ஸ்ட்ரீட் பெரும் ஆர்வம், பேராசை இவற்றை நிரூபித்த வகையில் களித்து மகிழ்ந்தது. அது Dow வை 497 புள்ளிகள் உயர்த்தியது. அப்பொழுதில் இருந்து முக்கிய வங்கிகள், நிதிய நிறுவனங்களின் பங்கு மதிப்புக்கள் பங்குச் சந்தை ஏற்றத்தை துரிதப்படுத்தியுள்ளன. மார்ச் 23ம் தேதி கீத்னரிட் அறிவிப்பு பிணை எடுப்பு கொடுக்கப்பட்ட அமெரிக்க இன்டர்நேஷனல் குரூப் (AIG) என்னும் பாரிய காப்பீட்டு நிறுவனத்தின் வணிகர்கள், நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த மேலதிக கொடுப்பனவுகள் ஊழலில் ஒபாமா நிர்வாகத்தின் தலையீட்டுடன் வெளிவந்தது. செய்தி ஊடகம் ஏளனமாகக் குறிப்பிட்ட "மக்கள் சீற்றத்திற்கு" தான் பணிய மாட்டேன் என்று தெளிவாக்கியதுடன், நிர்வாகிகளின் ஊதியத்தில் தீவிர வரம்புகளை எதிர்க்க இருப்பாதகவும் ஒபாமா கூறினார். வோல் ஸ்ட்ரிட்டிற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் தன் நிர்வாகம் நிர்வாகிகள் ஊதியத்தை குறைக்காது, வேறுவிதத்திலும் நிதியப் பிரபுத்துவத்தின் செல்வம், சலுகைகளுக்கு எதிர்ப்புக்கூறாது என்பதில் ஒபாமா உயர்மட்ட வங்கி நிர்வாக அதிகாரிகளை மார்ச் 27 அன்று கூட்டத்திற்கு அழைத்தார். ஒபாமாவின் ஒத்துழைப்பை பெரிதும் புகழ்ந்து வங்கியாளர்கள் வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்தனர். அவர்களில் ஒருவர் "நாங்கள் பெரிதும் நிர்வாகத்துடன் இணைந்துள்ளோம்" என்றார். இதற்குப் பின் ஒபாமாவின் மறுசீரமைப்புத் திட்டம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லருக்கு அறிவிக்கப்பட்டது. சந்தைகள் நேரிய விடையிறுப்பைக் கொடுத்தன. ஏனெனில் இது தொழில்துறை முற்றிலும் வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்கு தாழ்ந்து இருக்கும் என்பதை நிரூபித்ததுடன், இரண்டாவதாக இது பெரும் பணி நீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் சுகாதார நலன்கள், ஓய்வூதியத் தகர்ப்புக்கள் என்ற விதத்தில் தொழிலாள வர்க்கத்தை சுரண்னல் தீவிரமடையும் என்பதையும் அடையாளம் காட்டியது. வங்கிகளும் பெரும் முதலீட்டாளர்களும் ஒபாமா தன் நிர்வாகம் சமூகநலத் திட்டங்களில் பெரும் குறைப்புக்களை செய்யும் என்ற பலமுறை கூறியவற்றில் மகிழ்ந்து போயினர். இதில் சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பு, மருத்துவ உதவித் திட்டம் ஆகியவை அடங்கும். ஒபாமா இன்னும் கூடுதலான வகையில் சூழ்ந்திருக்கும் நிதிய பேரிழிவின் விலையையும், வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பினால் ஏற்பட்ட பல டிரில்லியன் இழப்பிற்கு தொழிலாள வர்க்கம் ஈடுகட்டும் என்று உறுதியளித்தார். இறுதியாக, வியாழனன்று கணக்குபதிவுகளை மேற்பார்வை செய்யும் அமைப்பு (Financial Accounting Standards Board- FASB), "சந்தைக் குறிப்பு" கணக்கு விதிகளை வலுவிழக்கச் செய்து வங்கிகள் தங்கள் விற்கமுடியாத சொத்துக்களை உயர்ந்த விலைக்கு மதிப்பிட அனுமதி கொடுத்தது. இது உடனடியாக வங்கிகளின் இருப்பு நிலைக் குறிப்பிற்கு ஏற்றம் கொடுத்தது. அதைத்தவிர இலாபம் காட்டப்பட்டதுடன் அரசாங்கம் வோல்ஸ்ட்ரீட்டிற்கு இதை மோசடி, இரட்டைக் கணக்கு முறை தொடர்ந்து கையாளப்படலாம் என்பதற்கும் பச்சை விளக்கை காட்டியது. இவைதான் நிதிய முறையையை முதலில் முறிவிற்கு கொண்டு வந்தவை ஆகும். வோல் ஸ்ட்ரீட்டில் இருக்கும் களிப்பு ஒருபுறம் இருந்தாலும், சந்தை உண்மையில் தீவிரக் கொந்தளிப்பில்தான் உள்ளது. பிணை எடுப்புத் திட்டம் இருந்தாலும், பில்லியன் கணக்கான நச்சுத் தன்மை டாலர்களால் ஏற்பட்ட பிரச்சினையில் அடித்தளம், அதாவது பயனற்ற நிதிய சொத்துக்கள் பற்றியவை அமெரிக்காவிலோ சர்வதேச அளவிலோ தீர்க்கப்படவில்லை. இதன் விளைவாக சந்தை எதிர் விளைவுகளின் ஆபத்தை எதிர்நோக்கும் அச்சத்தைத்தான் கொண்டுள்ளது. இது தற்போதைய வியத்தகு ஏற்றத்தின் சரிவைக் காணக்கூடும். கடந்த மாதத்தின் ஒரு படிப்பினை வோல் ஸ்ட்ரீட்டின் தலைவிதியும் பரந்துபட்ட மக்களில் தலைவிதியும் எதிர் எதிர் திசையில் நகர்கின்றனர் என்பதாகும். உயரும் பங்குகளின் விலைகள் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள நிலைமையில் முன்னேற்றத்திற்கு கட்டியம் கூறவில்லை. தொடர்ச்சியான பணிநீக்கங்கள் அதைத்தான் நிரூபிக்கின்றன. இதில் எதுவுமே மத்தியதர வகுப்பு தாராளவாதிகள் மற்றும் "இடதுகள்" என அழைக்கப்படுபவர்கள் ஒபாமா நிர்வாகத்தின் காலடியில் விழுந்து இருப்பதை மாற்றவில்லை. உண்மையில் அவர்கள் தங்கள் முதலீட்டுப் பையில் முன்னேற்றம் இருப்பதில் மகிழ்கின்றனர். ஒபாமா நிர்வாகத்தின் வர்க்கத் தன்மையை வோல் ஸ்ட்ரீட்டின் வலதுசாரிக் கொள்கைக்கான களிப்பு நிறைந்த ஆர்வத்தைப் போல் வேறு எதுவும் நிரூபிக்காது. ஒபாமா நிர்வாகத்தில் அதன் நலன்களுக்காக செயல்படும் முழு நம்பிக்கைக்குரிய, அடிபணிந்திருக்கும் ஒரு கருவியை கண்டுபிடித்த உண்மையை வோல் ஸ்ட்ரீட் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. |