World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காThe mass shootings in America அமெரிக்காவில் பரந்த படுகொலைகள் By David Walsh பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் இரு மாணவர்கள் தங்கள் வகுப்பில் படிப்பவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மீது கொலராடொ டென்வரில் உள்ள கொலம்பைன் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி 13 பேரைக் கொன்று 23 பேரைக் காயப்படுத்தி, தாங்களும் தங்களை சுட்டுக் கொண்டனர். முன்னோடியற்ற நிகழ்வு எனக் கூற முடியாவிட்டாலும்கூட, அப்பொழுது நாடு முழுவதையும் இது பீதிக்கு உட்படுத்தியது. செய்தித்தாள் ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும், பள்ளி வன்முறை பற்றி வல்லுனர்கள் எனத் தம்மையே கூறிக் கொள்ளுபவர்களும், பலவித பண்டிதர்களும் கருத்தைத் தெரிவித்தனர்; ஆனால் இவர்களுடைய ஆய்வு உட்பார்வை எதையும் கொடுக்கவில்லை. "நாம் இது பற்றி ஒருவேளை முழுவதையும் புரிந்து கொள்ள முடியாது" என்று கூறிய ஜனாதிபதி பில் கிளின்டன், பெளல் துறவியார் கூறிய "நாம் வாழ்வை ஒரு கண்ணாடி மூலம் இருட்டாகத்தான் பார்க்கிறோம்'' என்பதை நினைவுபடுத்தினார்; "என்ன நடக்கிறது என்பதை ஓரளவிற்குத்தான் புரிந்து கொள்ளுகிறோம் என்றார்" எனவும் சேர்ந்துக் கொண்டார். பத்து ஆண்டுகளுக்கு பின் இதே ஏப்ரல் மாதத்தில், வேர்ஜீனியாவில் உள்ள பிளாக்ஸ்பர்க்கின் வேர்ஜீனியா டெக் மாணவர் ஒருவர் 32 பேரைக் கொன்று 17 பேரைக் காயப்படுத்தி பின் அந்தத் துப்பாக்கியாலேயே தன்னையும் கொன்று கொண்டார். உத்தியோகபூர்வ வல்லுனர்கள் தங்கள் பொதுவான வரட்டுத்தன, வெற்றுத்தனக் கருத்துக்களைத்தான் மீண்டும் கொடுத்தனர். ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் "இத்தகைய வன்முறை, கஷ்டம் பற்றி விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை... இது போன்ற நேரங்களில் ஒரு அன்பு இறைவனின் அருள், வழிகாட்டும் தன்மையில்தான் நாம் சமாதானம் அடைய முடியும்." என்றார். கடந்த மாதத்தில் அமெரிக்காவில் வன்முறையின் வெடிப்பு பரந்த ஏழு துப்பாக்கிச்சூட்டு நிகழ்வுகளில் 53 பேர் உயிர்களை காவு கொண்டுள்ளது. இந்த பெரும் சோகங்களின் மிக மோசமனதிற்கு விடையிறுப்பாக நியூ யோர்க் பிங்கம்டனில் நடைபெற்ற 13 பேர் படுகொலை பற்றி ஜனாதிபதி பாரக் ஒபாமா ஒரு அறிக்கையில் "எனது மனைவி மிசேலும் நானும் இன்று நியூயோர்க் பிங்கம்டனில் நடந்த அர்த்தமற்ற வன்முறைச் செயல் பற்றி அறிந்து பெரிதும் வருத்தமுற்று அதிர்ந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பிங்கம்டன் மக்களுக்கும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் செல்லுகின்றன." என்றார். எது மாற்றப்பட வேண்டும் அதை மாற்றுதல் என்ற முறையில் ஒபாமா நிர்வாகம் அதன் முன்னோடி நிர்வாகங்களை போலவேதான் புரிந்து கொள்ள முடியாத நிலை, வெற்றுத்தனமாக மதநம்பிக்கை, இறுதியில் பொருட்படுத்தாமை ஆகியவற்றுடன் இந்த நிகழ்வையும் எதிர்கொண்டுள்ளது. வாஷிங்டனில் ஒருவரும் வெளிப்படையாக தெரிவதைப் பற்றி கூறத்தயாராக இல்லை. அதாவது இந்தப் படுகொலை ஒரு நோய்வாய்ப்பட்டுள்ள சமூக ஒழுங்கமைப்பின் அடையாளம் ஆகும் என்பதை எவரும் கூறத்தயாராகவில்லை. பண்டிதர்களை பொறுத்தவரையில், தொடரும் பெரும் சோகங்கள் வெகு விரைவில் தலைப்புக்களில் ஒன்றையொன்று தொடர்ந்து கட்டுரை எழுதுவதிலேயும் வானொலிகளில் உரையாற்றுவதற்குமே விரைவாக பயன்படுத்தப்படுகின்றன. கருத்துக்களும் கொடுக்கப்படும் விளக்கங்களும் இன்னமும் கூடுதலான முறையில் பெயரளவிற்குத்தான் உள்ளன. நியூயோர்க் டைம்ஸ் ஒரு சுருக்கமான தலையங்கத்தை படுகொலைகள் பற்றி வெளியிட்டது. அதில் சமீபத்திய வன்முறைக்கான எழுச்சி மார்ச் 10 தெற்கு அலபாமா கொடூரத்தில் இருந்து கொடுக்கப்பட்டது. இது 2004ல் காலாவதியான சட்டமான ''ஒரு இறுக்கமான வடிவத்தில் தேசிய மட்டத்திலான தாக்குதல்கள் ஆயுதங்கள்மீது ஒரு தடையைக் கொண்டுவர வலியுறுத்தியது." அதற்கு பின்னர் ஒரு சொல் கூட வரவில்லை. அலபாமா, கார்த்தேஜ், வட கரோலினா, பிங்கம்டன் கொலைகளுக்கு பின்னர் வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கம் எழுதியது: "இத்துப்பாக்கி பிடித்தவர்களை எவ்விதச் சீற்றம் அல்லது அரக்கத்தனம் பீடித்துள்ளது என்பது பற்றி ஒருவரும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை." இன்னும் துப்பாக்கிகளை பற்றிய கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று மட்டுமே போஸ்ட் கூறியுள்ளது. தங்கள் பங்கிற்கு கேபிள் தொலைக்காட்சி நிலையங்கள், கூடுதலான பார்வையாளர்கள் அளவினை பெறும் நோக்கத்தில், இந்தப் பெரும் கொலை பற்றிய தகவல் கொடுப்பதை ஒரு பொழுதுபோக்கு அம்சாமாக மாற்றும் கலையில் ஈடுபட்டு, இழிந்த தலைப்புக்களையும், "ஆழ்ந்த முறையில் இது பற்றிய தகவல் திரட்டப்படும்" என்ற உறுதி மொழிகளையும் கூறி, அவ்விதம் இல்லாமல் அளிக்கின்றன. ஒரு மிகத்தீவிர நிலையில் ஒரு மனிதன் மனக்குழப்பத்தை கொள்ளலாம் என்பது அன்றாட வாழ்வின் கூறுபாடு ஆகும். அந்த ஏழு நபர்கள் பல, கொடூர ஆயுதங்களை எடுத்து தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளுவதற்கு முன்பு இயன்றளவு உயிர்களை கொல்ல முற்படுகின்றனர் என்பது சமூக மற்றும் வரலாற்று சூழ்நிலையினால் உருவாக்கப்படும் நிகழ்வு ஆகும். தற்போதைய சமூக உளவியல் ரீதியான சூழ்நிலையில், பல தனி நபர்கள் எவ்வளவிற்கு சிதைந்திருந்த போதிலும்கூட, நிரபராதிகள்மீது எந்த தயக்கமும் இல்லாமல் பாரிய இடர்பாடுகளையும் மரணத்தையும் கொடுக்கலாம் என்பதை அமெரிக்க வாழ்வில் சமீபத்திய போக்குகளைப் பற்றி குறிப்பிடாமல் விளக்கப்பட முடியாதது ஆகும். இந்த நிலைமை பல தசாப்தங்களாக உள்ள அமெரிக்காவில் அரசியல் பிற்போக்குத்தனத்துடன் இணைந்துள்ளதுடன், பொருளாதார வீழ்ச்சியில் வேர்களை கொண்டுள்ளதுடன், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வன்முறையால் தீர்வைக் காணலாம் என்ற கருத்தில் உறைந்துள்ளதுடன், இராணுவவாதம் மற்றும் நாட்டு வெறியின் ஊக்கத்தினாலும், "தடையற்ற சந்தை" முறையின் இரக்கமற்ற தன்மையும் தன்னலத்தையும் புகழ்ந்துரைப்பதாலும் மற்றும் ஒரு பரந்த கலாச்சாரம் ஒரு மிருகத்தனமான உருவகப்படுத்தல், பாடல்கள் இவற்றால் சூழப்பட்டுள்ளதன் விளைவாக உள்ளது. இழிந்த கூட்டத்தின் தலைவர்களைப் போல், ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகளும், புஷ்ஷின் கீழ் இருந்தவர்களைப் போலவே, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் உள்ள தங்கள் அரசியல் விரோதிகளை "கொலை செய்தல்", "உயிரை எடுத்துவிடுதல்" போன்றவற்றைத்தான் பேசுகின்றனர். "ஒற்றைத் துப்பாக்கி ஏந்துபவர்" ஒருசில வடிவங்களில் அமெரிக்க சமூகம் மற்றும் அதன் சமூக, அறநெறி சீரழிவின் வளர்ச்சி தோற்றுவித்த பிராங்கென்ஸ்டைன் அரக்கர்கள் போல் ஆவர். தங்கள் மனச்சிதைவு வழியின்படி அத்தகைய தனிநபர்கள் வோல் ஸ்ட்ரீட், பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை வாடிக்கையாக செயல்படும் முன்கருத்துக்களைத்தான் எடுத்துக் கொண்டு அவர்களுடைய சொந்த சங்கடங்களை தீர்க்க முற்படுகின்றனர். பொருளாதார நெருக்கடி ஐயத்திற்கு இடமின்றி, இப்போக்குகளை அதிகப்படுத்தியுள்ளது. ஏனெனில் அது வழக்கமான அழுத்தத்தைவிடக் கூடுதலான முறையில் உளரீதியான அழுத்தத்தை ஆபத்தில் ஈடுபடுத்திவிடும். அதுவும் சிறந்த காலங்களில்கூட எரியூட்டும் தன்மையுடன் இருக்கும் அமெரிக்காவின் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் இப்பொழுது குடியரசு மற்றும் ஜனநாயக அரசாங்கங்களினால் ஒவ்வொரு மட்டத்திலும் கிளித்தெறியப்பட்டுள்ளது. ஒரு புளோரிடா சமூக நிறுவனம், "பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவாக", உள்நாட்டு வன்முறை மையங்கள் அவற்றின் பணியை 37 சதவிகிதம் அதிகரிக்கும் தேவைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பபலோ பல்கலைக்கழக செய்தி வெளியீடு ஜனவரி மாதம் அப்பயிலகத்தில் இருக்கும் குடும்ப மனோதத்துவரான Sampson Blair கருத்துக்களை மேற்கோளிட்டுள்ளது. "குடும்பக் கொலை-தற்கொலை என்பது ஒப்புமையில் அசாதாரணம்தான்; ஆனால் அத்தகைய நிகழ்வுகள் அடுத்த சில ஆண்டுகளில் அதிகமாகும் என்று நான் எதிர்பார்க்கிறேன்; ஏனெனில் பொருளாதார வேதனைகள் குடும்பங்களை பெரும் அழுத்தம், பெரும் திகைப்பு ஆகியவற்றில் ஆழ்த்துகின்றன.' பிளேயர் மேலும் கூறியது: "பொருளாதார நிலைமை மற்ற வகை குடும்ப வன்முறையிலும் கணிசமான ஏற்றத்தை ஏற்படுத்தும். இதில் தம்பதியினர் ஒருவரை ஒருவர் தவறாக நடத்துதல், குழந்தைகளை தவறாக நடத்துதல், அவர்களைப் புறக்கணித்தல் இன்னும் பல முறையற்ற செயல்பாடான இருப்பதை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை இருக்கும். இந்த நிலைமையை இன்னமும் மோசமாக செய்வது ...தற்கொலை விகிதங்களுக்கும் பெரிய பொருளாதாரத்தின் நிலைமைக்கும் இடையே இருக்கும் தெளிவான தொடர்புதான்." வேலை இழப்பு சமீபத்திய படுகொலைகள் பலவற்றைத் தூண்டிவிட உதவும் ஒரு காரணியாக இருந்துள்ளது. American Journal of Public Health 2003ல் நடத்திய ஆய்வு ஒன்றில், வேலையின்மை, ஆண்கள் தங்கள் மனைவியரைக் கொலை செய்வதில் ஒற்றை மிகப் பெரிய வலிமையான காரணியாக இருப்பதாக கண்டறிந்தது. தவறாக நடப்பவர் வேலையின்றி இருப்பது இந்த ஆபத்தை பல முறை அதிகரிக்கிறது என்றும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.The Journal of Epidemiology and Community Health ஒரு ஆய்வை 2003ல் வெளியிட்டது. இதில், "வேலையின்மையில் இருப்பது என்பது வேலையிலிருப்பவருடன் ஒப்பிடுகையில் ஒப்புமையில் இரண்டு அல்லது மூன்றுவிதத்தில் பெருகிய அளவு தற்கொலை ஆபத்தை கொண்டுள்ளது. இத்தொடர்பில் பாதி மன நோயுடன் குழப்பிக்கொள்ளும் தன்மையையும் பெற்றுள்ளது." என குறிப்பிட்டது.அமெரிக்கா பெரும் அதிருப்தியில் நிறைந்திருக்கும் நாடாகும். மக்களில் பரந்த அடுக்குகள், தம் வாழ்க்கை நிலைமைகள் விரைவாக வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதைக் காண்பவர்கள், ஒன்றும் செய்ய இயலாத சீற்றத்துடன் மத்திய அரசாங்கம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் டிரில்லியன் கணக்கான பணத்தை நாட்டைத் தரைமட்டமாக்கியுள்ள அதே வங்கியாளர்களுக்கும் ஊக வணிகர்களுக்கும் கொடுப்பதைக் காண்கின்றனர். ஆளும் உயரடுக்குடன் முற்றிலும் பிணைந்த தொழிற்சங்கங்கள், நீண்ட காலத்திற்கு முன்னரே தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக போராட்டம் நடத்துவதைக் கைவிட்டுவிட்டன. மில்லியன் கணக்கான மக்கள் வேலை, வீடு, கெளரவமான வாழ்க்கைத் தரம் என்று அனைத்தையும் இழந்து வருகின்றனர். கூடார நகரங்கள் பல சமூகங்களில் தோன்றிவிட்டன. டிசம்பர் 2007ல் இருந்து ஐந்து மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. நிர்வாகத்தின் "ஊக்கப் பொதிகள்" பிரச்சினையின் மேற்பரப்பைக் கூடத் தொடவில்லை. ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது செய்தி ஊடகம் மற்றும் அரசியல் அமைப்புமுறை பிரச்சாரப்படுத்திய வகையில் நல்லது நடக்கக்கூடும் என்ற மக்கள் சிந்தனையை தூண்டிய தன்மையினால் ஏற்பட்டதுதான். இங்கு ஒரு ஜனாதிபதியும் ஒரு நிர்வாகம் வரக்கூடும், அது மக்களைப் பற்றி சற்றேனும் அக்கறை கொள்ளும், மக்கள் பொதுநலனைக் கருத்திற்கொள்ளும் என்று பலரும் சிந்தித்தனர் அல்லது நம்பினர். ஆனால் மூன்று மாதங்களுக்குள்ளேகவே அந்த நம்பிக்கைகள் கணிசமானளவு அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. புதிய அரசாங்கத்தின் தன்மை பற்றி அரசியல் உணர்மையுடன் இன்னும் அறிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், பெருகிய முறையில் "எதுவும் மாறவில்லை'' என்ற உணர்வு வந்துள்ளது. இழிந்த, ஊழல் மிகுந்த, மக்களை மதிப்பளிக்காத இந்த அரசியல் அமைப்புமுறை மக்களுடைய நலன்கள், தேவைகள் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை என்பதே அது. இன்னமும் எழுச்சியடையாதது என்னவெனில், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிரான புத்துயிர்ப்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களும், அதே போல் அத்தகைய போராட்டத்திற்கு வழிகாட்டக்கூடிய அரசியல் முன்னோக்கும்தான். தற்போதைய நிலைமையில் இருந்து வெளியேறும் வழியைக் காட்டக்கூடிய முதலாளித்துவத்திற்கு எதிரான உணர்மையுடனான ஒரு சமூக மற்றும் அரசியல் எழுச்சி இல்லை என்ற நிலையில் தனிநபர் சமூகவிரோத வன்முறை வெளிப்படுகிறது. ஆனால் அதுவும் வரும். 1930களின் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல், "முன்னொருபோதுமில்லாத வகையில் இருக்கும் தற்போதைய உலக நெருக்கடிக் காலத்தில்கூட, தற்கொலைகள் அதிருஷ்டவசமாக குறைந்த சதவிகித்தில்தான் உள்ளன. ஆனால் மக்கள் எப்பொழுதும் தற்கொலைக்கு சென்றுவிடுவதில்லை. அவர்களுடைய சுமைகள் பொறுத்துக் கொள்ள முடியாமல் போகும்போது, அவர்கள் புரட்சி மூலம் தீர்வு காண முற்படுகின்றனர்." |