இலங்கை இறப்பர் தோட்டத் தொழிலாளர் மத்தியில் சோ.ச.க. பிரச்சாரம் செய்தது
By Sampath Perera
1 April 2009
Back to screen version
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) குழுவொன்று, மேல்மாகாண சபைத் தேர்தலில்
போட்டியிடும் கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக, கொழும்பிலிருந்து தென்கிழக்காக
50 கிலோமீட்டர் தூரத்தில், அவிசாவளைக்கு அருகில் புவக்பிட்டியவில் வாழும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களை
சந்தித்தது. கட்சி கொழும்பு மாவட்டத்தில் 46 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதுடன், ஏப்ரல் 5 அன்று அவிஸ்ஸாவளையில்
நடக்கவுள்ள தேர்தல் கூட்டத்துக்கான பிரச்சாரத்தின் ஒரு பாகமாகவே சோ.ச.க. குழு அங்கு சென்றது.
அவிசாவளைத் தேர்தல் தொகுதியானது, கொழும்பு மாவட்டத்தின் மிக வறுமையான பகுதிகளில்
ஒன்றாகும். இந்தப் பிரதேசம் பிரமாண்டமான பெருந்தோட்டக் கம்பனிகளும் அதேபோல் சிறு தோட்ட உரிமையாளர்களும்
பெருமளவில் இறப்பர் உற்பத்தி செய்யும் பகுதியாகும். இறப்பர் கைத்தொழிலின் வரலாறு, பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இறுதித் தசாப்தத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து ஆரம்பமாகிறது. இந்தத் தோட்டத்தில் வசிக்கும்
பெரும்பாலான தொழிலாளர்கள், தென் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் இருந்து தோட்டங்களில் வேலை செய்வதற்காக
கொண்டுவரப்பட்ட தமிழ் பேசும் தொழிலாளர்களின் வழித் தோன்றல்கள் ஆகும். இலங்கையில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட
தொழிலாளர் வர்க்கத்தில் இவர்களும் அடங்குகிறார்கள்.
இறப்பர் ஏற்றுமதிகள் இலங்கையின் மூன்றாவது அதிகூடிய அந்நியச் செலாவணியை
ஈட்டிக்கொடுக்கின்றன. எவ்வாறாயினும், 1960க்குப் பின்னர் உலகச் சந்தையில் இறப்பருக்கான கேள்வி சரிவடைந்துவிட்டது.
தோட்டக் கம்பனிகள் தமது இலாபத்தை அதிகரித்துக் கொள்ள தொழிலாளர்களை சுரண்டும் அளவை அதிகரித்துள்ள நிலையில்
தொழிலாளர்களின் நிலமைகளும் சீரழிந்துவிட்டன.
சோ.ச.க. குழு, புசல்லாவ பெருந்தோட்டத்தின் எல்ஸ்டன் மற்றும் ஃபர்ண்ஹாம் தோட்டப்
பிரிவுகளுக்கு சென்றது. இரண்டு தோட்டங்களிலும், ஏறத்தாள 650 குடும்பங்களைச் சேர்ந்த 1,400 தொழிலாளர்கள்
வேலை செய்கிறார்கள். கூடுதலான குடும்பங்கள் லயன் அறைகளில் வாழ்கின்றன. இந்த லயன் அறைகளில் ஒவ்வொரு
குடும்பத்துக்கும் நீண்ட ஒடுங்கிய அறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. லயன் குடியிருப்புக்கள் 1 இல் இருந்து 5 கிலோமிட்டர் வரையான
தூரத்தில் வெவ்வேறாக அமைந்துள்ளன. நிலம் உயரமாக உள்ளதுடன் தோட்ட வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் பாதைகள்
நல்ல நிலையில் உள்ள போதிலும், தொழிலாளர்களின் லயன்களுக்கான பாதைகள் நல்ல நிலையில் இல்லை.
ஒரு சில தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து சிறிய நிலத் துண்டுகளைப்
பெற்றுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் தோட்டத்துக்கு வெளியில் வேலை செய்து ஈட்டிய மேலதிக பணத்தில் சிறிய
வீடுகளைக் கட்டியுள்ளார்கள்.
இறப்பர் தொழிலாளர்கள் அதிகாலை, சூரிய உதயத்துக்கு முன்னரே இறப்பர் மரங்களை
கீறும் வேலையை ஆரம்பிக்கின்றர்கள். அவர்கள் இறப்பர் பாலை பெரிய பாரமான கலன்களுக்கு சேகரிக்கத் தொடங்கும்
வரை பல மணித்தியாலங்கள் தொடரும். இந்த கலன்களை அவர்கள் மரத்துக்கு மரம் காவிச் சென்று நிரப்ப வேண்டும்.
ஒரு இளம் தொழிலாளியான கணேஷ், இறப்பர் பாலைச் சேர்ப்பதற்கு விரைந்து
கொண்டிருந்தார். ஏனெனில் அவர் இறப்பர் பாலை தொழிற்சாலைக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்தை தவறவிட்டால்
அவரே அதை தொழிற்சாலை வரைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். சக தொழிலாளி ஒருவர், "தேர்தல் வரும்போது
மட்டுமே இந்த அரசியல்வாதிகளை எல்லாம் காணலாம்" என ஆத்திரமாக பேசியபோதிலும், தொழிலாளர்கள் முகம்
கொடுக்கும் முக்கியமான அரசியல் பிரச்சினைகள் பற்றி ஒரு கலந்துரையாடலை ஆரம்பிப்பதே சோ.ச.க. குழுவின்
குறிக்கோள் என விளக்கத் தொடங்கிய போது, கணேஷ் பேசுவதற்கு ஆர்வமாக இருந்தார்.
கணேஷ் விளக்கியதாவது: "எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது அம்மா உட்பட
ஐந்து பேரை கவனிக்க வேண்டும். இது மிகவும் கடினமானது. ஒரு நாளைக்கு 280 ரூபாய்களே என்னால் ஈட்ட
முடிகிறது.(2.50 அமெரிக்க டொலர்). மாதத்தில் 24 நாட்கள் நான் வேலை செய்யவேண்டும். இல்லையெனில் நாட்
சம்பளம் அதைவிடக் குறைவாகும். இதற்காக நாங்கள் 325 முதல் 350 மரங்கள் வரை ஒரு நாளைக்கு கீற வேண்டும்.
வெறுமனே 325 மரங்களை கீறுவதோடு வேலை முடிந்துவிடாது, மீண்டும் நாங்கள் ஒவ்வொரு மரங்களுக்கும் போய்
பாலை சேகரிக்க வேண்டும். நாங்கள் ஆகக் குறைந்தது 10 கிலோகிராம் இறப்பர் பாலைச் சேர்க்கின்றோம். "
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுக்கும் அதே வேளை,
ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் முழு நாட்டையும் திட்டமிட்டு இராணுவ மயப்படுத்துகின்றனர் என
சோ.ச.க. அங்கத்தவர்கள் விளக்கினார்கள். அரசாங்கம் யுத்த நிதிக்காக அத்தியாவசிய சமூகச் செலவினங்களை
பெருமளவு வெட்டித்தள்ளியுள்ளது. இது 2008 இல் 200 பில்லியன் ரூபாவாகும்.
"தெற்கு மற்றும் வடக்கில் உள்ள எமது இளைஞர்கள் இந்த யுத்தத்தினால் இறக்கின்றார்கள்.
எங்களுடைய அரசாங்கம் எமக்குப் பொய் சொல்கின்றது. இந்த யுத்தத்தினால் யாருக்கு இலாபம்? அரசாங்கம் முன்னர்,
குழந்தை பெறுவதற்கு முன்னர் ஆறுமாதங்ளுக்கும் குழந்தை பிறந்த பின்னர் ஆறுமாதங்களுக்கும் தாய்மார்களுக்கு ஒரு
மாதத்திற்கு இரண்டு பைக்கற் வீதம் 'திரிபோசா'( சத்துணவு மா) வழங்கி வந்தது. இது தற்போது, குழந்தை
பெறுவதற்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கும் பிறந்த பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கும் மட்டுமே
வழங்கப்படுகிறது. எங்களுடைய பெண்களுக்கு போஷாக்கு தேவையாகும். அவர்கள் பலவீனமாக இருந்தால், அவர்களால்
எவ்வாறு வேலையை தொடரமுடியும்.?" எனக் கணேஷ் தெரிவித்தார்.
"நான் கர்ப்பவதியாக இருப்பதனால் என்னால் வேலைக்குப் போக முடியாது. எனது
கணவர் மட்டுமே வேலை செய்கிறார். அவரால் வேலைக்குப் போக முடியவில்லையானால், நாங்கள் அன்றைய
வருமானத்தை இழக்க வேண்டும். மழைக் காலத்தின் போது இறப்பர் மரத்தைக் கீற முடியாது, அவ்வேளை நாங்கள்
சாப்பாட்டுக்குக் கூட கஸ்டப்படுவோம். நாங்கள் எமது குழந்தையின் சிகிச்சைக்காக செலவிட்டதால் இந்த மாதம்
எமக்கு சிரமமாக இருக்கும்.'' என ஒரு கர்ப்பிணித் தாய் தெளிவுபடுத்தினார்.
யுத்தத்தினைப் பற்றிக் கேட்டபோது, பல இளைஞர்கள் மரணமானதைப் பார்த்தால் எனக்கு
கவலையாக உள்ளது, அந்த இளம் பெண் கூறினார். "எமக்கு சில வகையான வேலைகளாவது இருக்கிறது. ஆனால் யுத்த
அகதிகள் ஒவ்வொன்றையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் யுத்தத்தின் முடிவைப் பார்க்க வேண்டும்," என
தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், "நாங்கள் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்ய முடியாது. அவ்வாறு
பயணித்தால் பொலிசார் எங்களைக் கைது செய்வார்கள். கடந்த வருடம் நான் அடையாள அட்டைக்காக
விண்ணப்பித்தேன். ஆனால் ஒரு வருடத்துக்குப் பின்பு, எனது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைக் கேட்டு அதை திருப்பி
அனுப்பியுள்ளார்கள். எல்லாம் தமிழர்களுக்குத் தடையாகவே உள்ளது. விண்ணப்பம் பூரணப்படுத்தப்படவில்லை என்பதை
அறிவிப்பதற்கு அவர்களுக்கு ஒரு வருடம் தேவையா? நான் தோட்டத் துரையிடம் விண்ணப்பத்தில் கையொப்பம்
வாங்குவதற்கு 5 மணித்தியாங்கள் காத்திருந்தேன்."
" அவர்கள் தோட்டத் தொழிலாளர்களை
நாய்கள் போல் நடத்துகிறார்கள். நான் தற்போது கர்ப்பவதியாக இருப்பதுடன், எனக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள்
இருக்கிறார்கள். எங்களுக்கு மலசல கூட வசதிகள் கிடையாது-- தோட்ட நிர்வாகம் அவற்றை முற்றாக இடித்துவிட்டது.
நாங்கள் வெளியில் தான் போகவேண்டும். நான் அடிக்கடி உடல் நலக் குறைபாட்டுக்கு முகம் கொடுப்பதுடன்
மேலதிகமாக தண்ணீர் குடிக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் நான் எங்கு சிறு நீர் கழிப்பது? அதனால்
நான் தண்ணீர் குடிப்பதில்லை,'' என்றார்.
ஆறுமுகம் என்னும் தொழிலாளி தனது அன்றைய வேலையை முடிக்கும் நிலையில் இருந்தார்.
தனது தலையில் இருந்த பால் கலனை இறக்கி வைத்துவிட்டு எமது குழுவுடன் பேசுவதற்காக நின்றார். "நான் ஓய்வு
பெற்று விட்டேன், எனது மனைவிக்கு உதவி செய்வதற்கே நான் இங்கு வந்துள்ளேன். எனது மனைவியின் சம்பளத்துடன்
மட்டும் சீவிப்பது என்பது மிகவும் கடினமானது. நாங்கள் கடனில் இருக்கிறோம். எங்களால் ஒரு மாதத்திற்கு தன்னும்
இறைச்சி மற்றும் மீன் என்பவற்றை உண்பதற்கு முடியாமல் உள்ளது."
அவிசாவளை ஒரு காலத்தில் ட்ரொஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.)
கோட்டையாக இருந்ததுடன் உள்ளூர் தொழிலாளர்கள் 1953 ஹர்த்தாலில் (பொது வேலை நிறுத்தம்) பங்கெடுத்துக்
கொண்டார்கள். எவ்வாறாயினும், ல.ச.ச.க. 1964 இல் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.)
அரசாங்கத்துக்குள் நுழைந்ததுடன் ட்ரொஸ்கிசக் கொள்கையைக் காட்டிக் கொடுத்தது.
ஒய்வுபெற்ற தொழிலாளியான இராஜூ தனது நினைவுகளை மீட்டிப் பார்த்தார்: "அந்த
நாட்களில் இனம், மதம் கருதாமல் ல.ச.ச.க. தொழிலாளர்களுடன் இருந்தது. அவர்களிடம் வேறுபாடுகள் இருக்கவில்லை.
அவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள். இப்பொழுது அது அவ்வாறு இல்லை. நான் ல.ச.ச.க.யின் தொழிற்சங்கத்தின்
அங்கத்தவராக இருந்தேன். இப்பொழுது அது பணக்காரர்களின் கட்சியாகும். "
ஒரு சிறிய செல்வந்தத் தட்டுக்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸ் (இ.தொ.கா.), ல.ச.ச.க. யின் காட்டிக் கொடுப்பினால் நன்மை பெற்ற ஒரு தொழிற்சங்கமாகும்/அரசியல்
கட்சியாகும். அடுத்துவந்த ஆண்டுகளில், இ.தொ.கா. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் இருந்த ஆதரவை
சுரண்டிக் கொண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் நுழைந்துகொண்டது.
" இ.தொ.க. தொழிலாளர்களைக்
காட்டிக் கொடுத்துவிட்டது. யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருப்பதால் வேலைநிறுத்தம் செய்வது சரியானதல்ல என்று தொழிற்சங்கத்
தலைவர்கள் சொல்கிறார்கள். ஜே.வி.பி.யும் (மக்கள் விடுதலை முன்னணி -சிங்கள அதிதீவிரவாத கட்சி) அது மாதிரித்தான்''
என இராஜூ மேலும் கூறினார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்
தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் பேரில் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் உடனடியாகவும்
நிபந்தனையின்றியும் திருப்பியழைக்குமாறு சோ.ச.க. விடுக்கும் கோரிக்கையை இராஜூ ஏற்றுக்கொண்டார். "இந்த
அரசாங்கம் யுத்தத்திலேயே தங்கியிருக்கின்றது. இந்த நாட்களில் தமிழ் மக்களால் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
நாங்கள் தமிழர்கள் என்பதால் இராணுவமும் பொலிசும் எங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றன."
ஒரு தொழிலாளியான இரவீந்திரன், ஜே.வி.பி. பற்றி பேச விரும்பினார். ஜே.வி.பி.
2005ல் இராஜபக்ஷவை ஆட்சிக்குக்கொண்டுவர முன்னணியில் இருந்தது. "நான் 1994 தேர்தலில் ஜே.வி.பி. க்காகப்
போட்டியிட்டேன். அவர்கள் கொள்கையுடையவர்கள் என நான் நினைத்தேன் -அதனாலேயே நான் அதில் சேர்ந்தேன்.
அவர்களைப் பொறுத்தளவில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பேதம் கிடையாது என அவர்கள் கூறிக்கொண்டார்கள்.
ஆனால் நடந்தது என்ன? அவர்கள் எங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். யுத்தத்தின் பக்கம் திரும்பினால் அவர்கள்
அந்தக் கொள்கைக்கு சொந்தக்காரர்கள் அல்ல. அவர்கள் யுத்தத்தை ஆதரிக்கின்றனர்."
இந்த தோட்டங்களில் ஒன்றில் கூட ஆஸ்பத்திரி கிடையாது. அவிஸ்ஸாவலை ஆஸ்பத்திரியே
அருகில் உள்ளது. அதற்கும் அவர்கள் பிரதான வீதிக்கு வந்து மேலும் 6 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். குடிதண்ணீரும்
சுகாதார வசதிகளும் அவசரத் தேவைகளாகும். ஆனால் பிரதான கட்சிகளின் "தேர்தல் வாக்குறுதிகளுக்கு" குறைவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது "அவர்கள் பெருந்தன்மையுடன் பேசுகிறார்கள்", ஆனால் எந்தவொரு வாக்குறுதியும்
நிறைவேற்றப்பட்டதில்லை, என தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.
|