World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா இந்தியத் தேர்தல்கள்: ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவின் தோழமைக் கட்சிகளை நாடுகின்றன By Kranti Kumara ஒரு "மூன்றாம் அணி" தேர்தல்/அரசாங்க கூட்டை ஏற்படுத்தி, இந்திய அரசாங்கத்தில் முக்கிய பங்கை ஆற்றுவதற்கு அதனை பயனுள்ள நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) (CPM) மற்றும் அதன் இடது முன்னணிக் கூட்சிகள் பெரும் பரபரப்புடன் பெரு வணிக சார்புடைய மாநில மற்றும் சாதிய அடித்தளத்தை கொண்ட கட்சிகளை வெறியுடன் ஊடாடுகின்றன-- அவற்றுள் பல தற்பொழுது இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையில உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் உள்ளன அல்லது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) உடன் கூட்டு சேர்ந்திருந்தவை ஆகும். நான்கு ஆண்டுகளாக, மே 2004ல் இருந்து கடந்த ஜூன் வரை, நான்கு கட்சிகள் அடங்கிய இடது முன்னணி சிறுபான்மை ஐமுகூ கூட்டணியை அதிகாரத்தில் நிலைநிறுத்தி வந்தது; அது அதற்கு முன் பதவியில் இருந்த பாஜக (BJP) தலைமையிலான அரசாங்கத்தைவிட வேறுபட்ட சமூகப் பொருளாதார, வெளியுறவுக் கொள்கை செயற்பட்டியலைக் கொண்டு செயல்படவில்லை என்றாலும் இப்படித்தான் இருந்தது. ஆனால் ஐமுகூ உடைய முக்கிய கூறுபாடாகிய காங்கிரஸ் கட்சி இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த விரும்பிய பொழுது 2008 ஜூலை மாதம் இடது முன்னணியை உதறித்தள்ளியது; அப்பொழுது இந்த உடன்பாடு வாஷிங்டனாலும் புதுதில்லியினாலும் இந்திய அமெரிக்க "பூகோள மூலோபாய" பங்காளித்துவத்தை உறுதிப்படுத்தும் என்று கூறப்பட்டது. காங்கிரசின் "காட்டிக் கொடுப்பினால்" அவமானப்பட்ட ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஒரு BJP-அல்லாத, காங்கிரஸ்-அல்லாத அரசாங்கக் கூட்டணி என்பதை அமைக்கும் கருத்தை புதுப்பித்தது: இது மூன்றாம் அணி என அழைக்கப்படுகிறது. அந்த இலக்கிற்காக இவர்கள் ஏராளமான வலதுசாரிக் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடுகளை இந்தியத் தேர்தல்கள் வருமுன் முடிக்க விரும்புகின்றன (இவை ஐந்து கட்டங்களில் ஏப்ரல் 16 முதல் மே 13க்குள் நடைபெற உள்ளன.) இத்தகைய முகாம் இந்தியாவிற்கு "ஒரு மாற்றீட்டு மதசார்பற்ற அரசாங்கத்தை கொடுக்கும், அது மக்கள் ஆதரவு கொள்கைகளை செயல்படுத்தும்" என்று இவர்கள் கூறுகின்றனர். உண்மையில் மூன்றாம் முன்னணி என்பது தேர்தலை முக்கிய வாய்ப்பாக கொண்டு கொள்கையற்ற முறையில் கூட்டணி உருவாக்குவதாகும். இன்னும் மூன்று வார காலத்திற்குள் வாக்களித்தல் வரவுள்ளது என்றாலும், இந்த முன்னணி தேர்தல் அறிக்கை எதையும் வெளியிடவில்லை; அதேபோல் கணிசமான கொள்கை அறிவிப்பு எதையும் செய்யவில்லை; அதுவும் உலகப் பொருளாதார நெருக்கடியின்கீழ் இந்தியா அதிர்வில் இருக்கும் நிலையில் எதையும் செய்யவில்லை. மார்ச் 12ம் தேதி பெங்களூருக்கு அருகே உத்தியோகபூர்வமான மூன்றாம் முன்னணி தொடக்கப்பட்டது; இதற்கு முன்னாள் இந்தியப் பிரதமரும் ஜனாதா கட்சி (மதசார்பற்றது) தலைவரான எச்.டி. தேவே கெளடா தலைமை வகித்தார்; ஆந்திரப் பிரதேசத்தைத்தளமாக கொண்ட தெலுகு தேசம் கட்சி (TDP), தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK), பல சிறிய வட்டாரக் கட்சிகள் மற்றும் இடது முன்னணியின் முக்கிய தலைவர்கள் உரையாற்றினார்கள். தெலுகு தேசம் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும் முன்பு பாஜக உடைய கூட்டணிப் பங்காளிக் கட்சிகளாக இருந்தன; அதிகாரத்தில் அவை தத்தம் மாநிலங்களில் இருந்தபோது மிகக் கடுமையான முறையில் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை தொடர்ந்திருந்தன. TDP தலைவர் சந்திரபாபு நாயுடு உலக வங்கிக்கு "சுவரொட்டி சிறுவனாக" இருந்தார்; ஏனெனில் அவர் இடைவிடாமல் அவருடைய ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி என்னும் விதத்தில் (1995-2004) ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்தினார். (ஷிமீமீ மிஸீபீவீணீ: ஙிமீலீவீஸீபீ tலீமீ க்ஷீஷீut ஷீயீ tலீமீ ஜிமீறீuரீu ஞிமீsணீனீ றிணீக்ஷீtஹ்�ணீ ஜீஷீக்ஷீtக்ஷீணீவீt ஷீயீ கீஷீக்ஷீறீபீ ஙிணீஸீளீ sஷீநீவீணீறீ மீஸீரீவீஸீமீமீக்ஷீவீஸீரீ.) 200,000 மாநில அரசாங்க ஊழியர்கள் ஈடுபட்டிருந்த 2003ம் ஆண்டு வேலைநிறுத்தத்தை அவர்கள் அனைவரையும் பதவியை விட்டு நீக்கிய விதத்திலும், ஆயிரக் கணக்கானவர்களை கைது செய்தும், வேலைநிறுத்தத்தை முறியடிப்பவர்களை பதவியில் இருந்திய விதத்திலும் AIADMK அதை உடைத்தது. அதன் தலைவர், முன்னாள் திரை நட்சத்திரமான ஜெயலலிதா அவருடைய ஊழலுக்கும் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் புகழாரம் பாட வேண்டும் என வலியுறுத்துவதிலும் இழிபுகழ் பெற்றவர். அவருடைய தொண்டர்கள் அவரை அம்மா என்று அழைக்கின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன்வரை, பாஜக ஒரு கூட்டை அதிமுக உடன் கொண்டுவிடலாம் என்று கருதியிருந்தது; ஆனால் அதிமுக அதன் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய போட்டிக் கட்சியான காங்கிரஸுடன் சேர்ந்திருக்கும் திமுக மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஸ்ராலினிஸ்ட்டுக்களோடு சேர்ந்து இதன் "மக்கள் சார்பு" சிறப்புக்களை முன்வைக்கலாம் என்று முடிவிற்கு வந்துவிட்டது. ஜனதா தளத்தைப் பொறுத்த வரையில் (மதசார்பற்றது), இது 2004 ல் இருந்து 2008 வரை தென்னிந்திய மாநிலமான கர்னாடகாவில் முதலிலும் பின்னர் பாஜக உடனும் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. இந்தியாவின் மூன்றாம் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள உத்திரப் பிரதேசத்தை ஆளும் BSP எனப்படும் பகுஜன சமாஜக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மூன்றாம் முன்னணியின் தொடக்க கூட்டத்தில் மார்ச் 12 அன்று கலந்து கொண்டார். BSP, முன்னாள் தீண்டத்தகாதவர்களான தலித்துக்கள் மற்றும் பொதுவாக அடக்கப்பட்டிருந்த மக்களுடைய பிரதிநிதி என்று தன்னைக் காட்டிக் கொள்கிறது. உண்மையில் இது ஒரு வலதுசாரி, சாதியக் கட்சியாகும்; பலமுறையும் இந்து மேலாதிக்க BJP உடன் கூட்டு வைத்துக் கொண்டு முற்போக்கான நிலச் சீர்திருத்தத்தை எதிர்க்கிறது, மற்றும் தலித்துக்களின் பரந்த பெரும்பான்மையினருக்கு அனைத்தையும் இழக்க வைக்கும் சமூக பொருளாதார ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்களுடன் கூட்டு கொண்டுள்ளது. இது "இட ஒதுக்கீட்டு முறைக்கு" ஆதரவு கொடுக்கிறது --அதாவது இது ஒரு தலித் உயரடுக்கைப் போற்றும் நோக்கத்தை கொண்ட உன்பாட்டு நடவடிக்கை திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது; இந்திய முதலாளித்துவத்தின் பரிதாப நிலையை இன்னும் "சமத்துவ முறையில்" பகிர்ந்து கொள்ள உதவும் என்று கூறுகிறது. BSP இன் அரசியல் அதன் தலைவர் மாயாவதியினால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது உத்தரப் பிரதேசத்தின் முதல் மந்திரியான மாயாவதி தன்னுடைய சிலைகள் மாநிலம் முழுவதும் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்--இது தலித்துக்கள் உரிமையின் அடையாளங்கள் எனப்படும்; அவருடைய கட்சி ஆதரவாளர்கள் கொடுத்துள்ள "நன்கொடைகள்" மூலம் மிகப் பெரிய தனிச்சொத்துக் குவிப்பைக் கொண்டிருக்கிறார். 2007-08ல் அவர் 260 மில்லியன் ரூபாய்கள் வரி செலுத்தினார் (அமெரிக்க $5.2 மில்லியன்); அக்காலத்தில் இவருடைய வருமானம் 700ல் இருந்து 800 மில்லியன் வரை இருந்தது (US $14 - $16 million.) மார்ச் 12ம் தேதி அணிவகுப்பிற்குப் பின், இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்ற தன் விருப்பத்தை ஒன்றும் இரகசியமாக கொண்டிராத மாயாவதி, மூன்றாம் முன்னணி-இடது முன்னணி தலைவர்களுக்கு ஒரு விருந்து வைத்தார். ஒரு முறையான உடன்படிக்கை வேண்டும் என்று இடது கோரிய முறையீடுகளை நிராகரித்துவிட்டார்; BSP தேர்தல் உடன்பாடுகள் கொள்ளுவதில்லை என்ற கொள்கையை உடையதாகவும் தெரிவித்துவிட்டார். உண்மையில் மாயாவதியும் BSP யும் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர்; தேர்தலுக்கு பின் பேரம் பேசும் சக்தியை மூன்று கூட்டணிகளுடனும், காங்கிரஸ் தலைமையிலான UPA, BJP தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மூன்றாம் அணி ஆகியவற்றுடன் அதிகரிக்க இந்த நிலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்தது நான்கு முறையேனும் BSP உத்தரப் பிரதேசத்தில் BJP உடன் கூட்டணி அரசாங்கங்களில் சேர்ந்துள்ளது; அம்மாநிலத்தில்தான் இதற்கு அதிக ஆதரவு உள்ளது. ஆயினும்கூட, மாயவாதியை மூன்றாம் அணியின் பிரதம மந்திரி வேட்பாளர் என பெருமைப்படுத்தும், சிபிஐ இன் தலைவர் ஏ.பி.பரதன், கடந்த மாதம் அவர் BJP உடன் "ஒருபோதும்" சேரமாட்டார் என்று அறிவித்தார். பரதனும் அரசியலில் இன்னும் சக்தி வாய்ந்த CPM ன் உயர்மட்டத் தலைவர்களும் பகிரங்கமாக தாங்கள் மற்ற கட்சிகளுடன் தொடர்பு கொண்டிருப்பாதகவும் அவை தற்பொழுது NDA, UPA ல் உள்ளன என்றும் மூன்றாம் அணியில் சேரவைக்க அவற்றை நம்ப வைக்க உள்ளதாகவும் கூறினர்; இப்பொழுது இல்லாவிடினும், தேர்தலுக்கு பின் அவ்வாறு நடக்கக்கூடும் என்றனர். இவற்றில் ஜனதா தளம் (ஐக்கியம்), தற்பொழுது பிகாரில் ஆட்சி செய்வது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக NDA-ன் முக்கிய அங்கமாக இருந்தது, தேசிய காங்கிரஸ் கட்சி என்னும் மகாராஷ்டிரத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சி ஆகியவை அடங்கும்; ஆனால் தேர்தல்களுக்கு முன்பு அது வகுப்புவாத சிவ சேனையுடன் உறவு கொள்ள விரும்புகிறது. BJD எப்படி ஒரு "மதசார்பற்ற" கட்சியாயிற்று மிக தவறுகள் செய்த, அரசியலில் பயனற்று இருக்கும் கட்சிகளுடன் சேர்வதற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தயாராக இருப்பது நீண்டகாலம் BJP உடன் பங்காளியாக தேசிய அளவிலும் ஒரிசா மாநில அளவிலும் இருந்த பிஜு ஜனதா தளத்துடன் புதிதாகக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. மார்ச் 7ல் தான் முடிந்த பத்து ஆண்டு காலத்திற்கு BJD வறுமையில் வாடும் கிழக்குப் பகுதி இந்திய மாநிலமான ஒரிசாவை BJP உடன் கூட்டணியில் ஆண்டுவருகிறது. உண்மையில் BJP தலைவரும் ஒரிசாவின் முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து தன்னுடைய சொந்தக் கட்சியை 1997ல் தொடங்கினார்: அதன் வெளிப்படையான நோக்கம் BJP உடன் கூட்டமைக்க வேண்டும் என்று இருந்தது; இதற்குத் துல்லியமான காரணம் தேசிய ஜனதா தளம் இந்து வகுப்புவாத வலதுடன் கூட்டை எதிர்த்தது. ஆயினும் BJD, BJP க்கு இடையே 2009 தேசிய மற்றும் ஒரிசா மாநிலத் தேர்தல்களில் தொகுதி உடன்பாடு பற்றி பேச்சு வார்த்தைகள் நடக்கும்போது, (இங்கு இவை ஒரே நேரத்தில் நடக்கும்) ஒரு தடை வந்தது; BJD தான் BJP யிடம் இருந்து விலகிக் கொள்ளுவதாக அறிவித்தது; உடனே ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இதை "சமய சார்பற்ற" கட்சி என அறிவிக்கின்றனர். சிபிஎம் அரசியல்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியை அனுப்பி, ஒரிசா தலைநகரான புவனேஸ்வருக்கு பட்நாயக்கை சந்தித்து மூன்றாம் அணியில் BJD க்கு முக்கிய பங்கு கொடுப்பதாக கூறியது; சிபிஎம், சிபிஐ இரண்டும் தங்கள் ஒரிசா சட்டமற்ற உறுப்பினர்களுக்கு மார்ச் 11 நடக்கவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு உத்தரவிட்டன. இதன் பின் BJD, BJP க்கு இடையே அதிகரித்து வரும் பிளவைப் பயன்படுத்திக்கொள்ள CPM, மிக அதிக அரசியல் சக்தியை செலவழிக்க முயன்றது என்பது வெளிப்பட்டது. BJP யின் நட்பு கட்சி என்ற இடத்தில் இருந்து இடது முன்னணியின் பங்காளி என்று BJD மாற்றப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல் அமைச்சரும் CPM பொலிட்பீரோ உறுப்பினருமான புத்ததேப் பட்டாச்சார்ஜி, ஜனவரி மாதம் முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கு பெற்ற காலத்தில் பட்நாயக்குடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய காலத்திலேயே இதற்கான அடித்தளங்கள் போடப்பட்டன. கடந்த சனிக்கிழமையன்று BJD க்கும் ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஒன்று உத்தியோகபூர்வமாக இறுதியாயிற்று. தன்னுடைய வீட்டில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், CPM, CPI, ஐமுகூவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவர்களும் இருந்த அக்கூட்டத்தில், பட்நாயக் நான்கு கட்சிகளுடனும் ஒரு கூட்டணி அமைத்துள்ளதாகவும் அது தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களுக்கு பொருந்தும் என்றும் கூறினார். BJD ஒரிசாவில் உள்ள 21 லோக் சபா தொகுதிகளில் (தேசியப் பாராளுமன்றத்தின் கீழ்சபை) 18 இடத்திலும் மற்ற கட்சிகள் ஒவ்வொரு இடத்தையும் பெறும். BJD 147 ஒரிசா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் 130ல் போட்டியிடும், NCP எட்டு இடத்திலும், CPI ஐந்து இடத்திலும் CPM நான்கு இடத்திலும் போட்டியிடும். BJD மிக இழந்த வரலாற்றைத்தான் கொண்டுள்ளது; இது ஒன்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இதன் மீது மதசார்பற்ற ஆசிகளை வழங்குவதால் மறைந்துவிடப் போவதில்லை. BJD-BJP மாநில அரசாங்கம் பரந்த நிலப்பகுதிகளை இந்திய, வெளிநாட்டு சுரங்க நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது; கட்டாயப்படுத்தி ஏராளமான மலைவாழ் கிராமவாசிகளை வெளியேற்றியுள்ளது. டஜன் கணக்கான கிராமவாசிகள் நில அபகரிப்பை எதித்துப் போராடுகையில் போலீசாரால் கொல்லப்பட்டுள்ளனர். ஒரிசாவின் தாதுப் பொருட்கள் செல்வம் பரந்தது ஆகும். இந்தியாவின் இரும்பு தாது இருப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு இம்மாநிலத்தில் உள்ளது, நிலக்கரி இருப்புக்களில் நான்கில் ஒரு பகுதி உள்ளது; குரோமைட்டின் இருப்புக்கள் முழுமையாக உள்ளன; பாக்சைட் தாதுப் பொருட்களில் 60 சதவிகிதம் உள்ளது. ஆயினும்கூட இது இந்தியாவின் மிக வறிய மாநிலங்களில் ஒன்றாகும்; மாநிலத்தின் மக்களில் 40 சதவிகிதத்தினர் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். BJD உடன் கூட்டு சேர்வதை CPM எப்படி நியாயப்படுத்துகிறது என்று கேட்கப்பட்டதற்கு யெச்சூரி இழிந்த முறையில் இடது அதன் கொள்கைகள் பற்றி BJD உடன் உரையாடல் நடத்தும் நிலைமையில் இருக்கும் என்றார். "உதாரணத்திற்கு, ஒரிசாவில் உள்ள தாதுப் பொருட்களுக்கும் அங்குள்ள வறுமைக்கும் பெரும் பொருந்தாத் தன்மை உள்ளது; அரசாங்கம் அதை நீக்க என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும்" என்று யெச்சூரி கூறினார். BJP உடன் BJD உடைய திடீர்ப் பிளவை விளக்குகையில் இந்தியாவின் பெருநிறுவன செய்தி ஊடகம் BJP யின் இந்து மேலாதிக்க நட்பு அமைப்புக்களான விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை மிருகத்தனமான வகுப்புவாதத் தாக்குதல்களை வறிய கிறிஸ்துவ மலைவாழ் குடிகளுக்கு எதிராக நடத்தியது பற்றி சங்கடம் அடைந்துள்ளாதாக கூறப்படுகிறது. கடந்த கோடை காலத்தில் இந்து வகுப்புவாதிகள் மத்திய கந்தல்மஹால் மலை மாவட்டத்தில் வெறிபிடித்து அலைந்து, பல டஜன் மக்களைக் கொன்று, பல்லாயிரக்கணக்கான மக்களை வீடுகளை விட்டு ஓடும்படி செய்தது; இதற்குக் காரணம் ஒரு முக்கிய இந்துத் தீவிரவாத சாது கொல்லப்பட்டது ஆகும்.(See: India: Hindu communalists target Christian minority in Orissa and other states.) ஐயத்திற்கு இடமின்றி, ஒரிசா மாநில அரசாங்கத்தின் தன்னுடைய பங்காளி என்ற அதிகாரத்தை BJP இந்து வகுப்புவாத சீற்றங்களை அடக்கும் முயற்சிகளைத் தடைக்கு உட்படுத்த பயன்படுத்தியது. ஆனால் ஒரு தாசப்தத்திற்கும் மேலாக --அந்த தசாப்தத்தில்தான் குஜராத்தில் இருந்து BJP அரசாங்கம் ஒரு கொடூரமான இனக்கொலை மற்றும் இந்து மேலாதிக்கம் பெருகிய முறையில் ஒரிசாவில் தலைதூக்கி நின்றது--BJP உடன் கூட்டணியில் பங்காளியாக இருந்ததால் BJD யே கிறிஸ்துவ எதிர்ப்பு வன்முறையில் முற்றிலும் ஈடுபாட்டைக் கொண்டிருந்தது. BJP உடனான முறிவிற்கு பட்நாயக் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் மிக மட்டமான விதத்தில் கணக்குப் போடுவதின் விளைவாகும் இது என்பது தெளிவாகும். ஒரிசாவின் புகழை கிறிஸ்துவ எதிர்ப்பு வன்முறை சேதப்படுத்திக் கொண்டுவருவதுடன் மூலதனத்தை ஈர்க்கும் அரசாங்க முயற்சியையும் கெடுக்கிறது. BJP மற்றும் NDA புது டெல்லியில் அதிகாரத்திற்கு மறுபடியும் வருவது என்பது மங்கலாகத்தான் உள்ளது. BJD, BJP க்கு இடையே பிளவிற்கு மூன்றாம் காரணி ஒரிசா அரசாங்கம் கொரிய பெருநிறுவனமான POSCO உடன் மகத்தான இரும்பு தாது வளாகத்தை வளர்க்கும் திட்டத்தில் கையெழுத்திட்டதாகும். இந்த உடன்பாடு, இப்பொழுது BJP ஆல் எதிர்க்கப்படுவது, தங்கள் நிலங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றை இழக்கக்கூடும் தன்மையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிராம வாசிகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது; மேலும் இந்திய உயரடுக்கும் அத்தகைய பெரும் வளமுடைய திட்டம் ஒரு வெளிநாட்டுப் போட்டி நிறுவனத்திற்குக் கொடுப்பதை எதிர்க்கிறது. முதலாளித்துவ விமர்சகர்கள்கூட மூன்றாம் அணியின் முற்றிலும் கொள்கையற்ற தன்மை நிறைந்த அரசியல் அஸ்திவாரங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இது குறுகிய கால கணக்குகளின் விளைவாக இருக்கலாம்; தேர்தல்கள் முடிந்த பின் பல பங்காளிகளும் தங்கள் விருப்புரிமைகளை மீண்டும் மதிப்பிட்டு BJP அல்லது காங்கிரஸுடன் தாங்கள் தொடர்பு கொள்ள முடியும் என்றால் அவ்விதம் செயல்பட ஏற்றவிதமாக உள்ளது. தங்கள் பங்கிற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்தியாவின் மரபார்ந்த முதலாளித்துவத்தின் அரசாங்கக் கட்சியான காங்கிரஸ் மற்றும் அதன் UPA உடன் சமரசம் என்பதற்கான வாய்ப்பை முற்றிலும் மூடிவிடவில்லை. தொடக்கத்தில் CPM பொலிட்பீரோ, கட்சியின் தேர்தல் முழக்கம் "BJP ஐத் தோற்கடிக்கவும், காங்கிரஸை நிராகரிக்கவும்" என இருக்க விரும்பியது; இது காங்கிரஸ் தலைமையிலான அராசங்கத்திற்கு எதிராக கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதை வலுவாகக் காட்ட விரும்பியதே அன்றி அதைத் தோற்கடிக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் கட்சியின் இரு தேர்தல் கோட்டைகள், அதுவும் BJP ஒரு முக்கிய கூறுபாடாக இல்லாத மாநிலங்களான மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் அதன் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த முழக்கம் "BJP ஐத் தோற்கடிக்கவும், காங்கிரஸைத் தோற்கடிக்கவும்" என மாற்றப்பட்டது. CPM இன் தலைமைச் செயலாளர் பிரகாஷ் காரட் வரவிருக்கும் மூன்றாவது அணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையை பெறுவதற்கு காங்கிரசின் ஆதரவை நாடத் தயங்காது என்று கூறியுள்ளார். தன்னுடைய பங்கிற்கு யெச்சூரி, "நாம் ஒரு போரில் உள்ளோம்; எந்த வீரரும் இது முடியும் வரை, தோற்பது பற்றி வினாக்களை எழுப்ப மாட்டார்கள்" என்றார். வேறுவிதமாகக் கூறினால் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் எப்படி இருக்கும் என்பதை மதிப்பீடு செய்ய காத்திருக்கின்றனர் என்பதாகும். |