WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
G20 summit: US and Europe paper over divisions
G 20 உச்சிமாநாடு :
அமெரிக்காவும் ஐரோப்பாவும் பிளவுகளை மறைக்கின்றன
By Chris Marsden and Bill Van Auken
3 April 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
வியாழனன்று முடிவடைந்த
G20 உச்சிமாநாடு, லண்டன் கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த உலகளாவிய
நிதிய ஊக்கப் பொதி தேவை என்னும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் முக்கிய கோரிக்கைளை ஏற்க தோல்வி
அடைந்ததுடன், ஜேர்மனி, பிரான்ஸ் தலைமையில் சர்வதேச கட்டுப்பாடு முக்கிய நிதிய அமைப்புக்கள் மீது
வேண்டும் என்ற அழைப்பு விடுத்ததையும் ஏற்கவில்லை.
மாறாக, இரு பக்கத்தினருமே தங்கள் வேறுபாடுகளை மூடிமறைக்கும் வகையில் ஒரு
ஒன்பது பக்க அறிக்கையை வெளியிட்டனர். அதில் அனைத்து கூடியிருக்கும் அரசாங்கங்களின் தலைவர்களும் "முக்கிய
மதிப்புக்கள், கொள்கைகள் என்று புதிய உலகந்தழுவிய ஒருமித்த உணர்வின் முக்கியத்துவம் பற்றி உடன்பாடு காண்கிறார்கள்
என்றும் அது பொருளாதார நடவடிக்கையை நிலைத்து நிற்குமாறு செய்ய வேண்டும்" என்றும் உயரிய வனப்புரைச்
சொற்களைத்தான் கொண்டிருந்தது.
அனைத்து செய்தி ஊடகமும் கிட்டத்தட்ட இதனை எதிரொலித்த வகையில் உச்சிமாநாடு
"கூடுதலான 1.1 டிரில்லியன் டாலர் திட்டத்தை கடன், வளர்ச்சி மற்றும் வேலைகள் உலகப் பொருளாதாரத்தில்
மீட்பதற்கு" உடன்பட்டுள்ளது என்ற கூற்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
லண்டனின் பைனான்சியல் டைம்ஸ் இந்த உறுதியை அதன் தகுதியான
அவநம்பிக்கைத்தனத்துடன்தான் கருதுகிறது. "G20
மநாட்டின் தோல்வி உலகத் தலைவர்களுக்கு நினைக்கக்கூட பெரும் வேதனையைத் தந்தது; கோர்டன் பிரெளன் [பிரிட்டிஷ்
பிரதம மந்திரி] கூட்டத்தை ஏராளமான புள்ளிவிவரங்கள் கூறி முடித்தார். இவை தலைவர்கள் எந்த கூடுதலான
ஊக்கத் தொகையும் திரு. ஒபாமா அல்லது திரு. பிரெளன் விரும்பியபடி செலவழிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்ற
உண்மையை மறைக்கத்தான் உதவியுள்ளன."
"மந்த நிலையில் இருந்து உலகத்தை மீட்க 1,100 பில்லியன் டாலர் பணத்தினை
பற்றி கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளில் பெரும்பகுதி இருக்கும் உறுதி மொழிகளை பிரதிபலித்தன அல்லது தெளிவாக
வரையறுக்கப்படவில்லை." என்றும் செய்தித்தாள் குறித்துள்ளது.
இந்த அறிக்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருக்கும் ஆதாரங்களை மற்றும் ஒரு
500 பில்லியன் டாலராக அரசாங்கங்கள் உயர்த்தும். இது "வெளிப்பட்டுக் கொண்டிருகும் சந்தை" என்னும்
நாடுகளுக்கு உதவியளிக்க பயன்படுத்தப்படும். தொடக்க அறிக்கைகளின்படி, எங்கிருந்து இப்பணம் வரும் என்பது
தெளிவுபடுத்தப்படவில்லை.
ஜப்பான் $100 பில்லியன், ஐரோப்பிய ஒன்றியம் $100 பில்லியன், மற்றும் சீனா
கிட்டத்தட்ட $40 பில்லியன் உறுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. உச்சிமாநாடு முடிந்த பின் நடந்த
செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி பாரக் ஒபாமா இதற்கு ஒத்த நிதியைப் பற்றி எப்படித் திட்டமிடுவார்
என்பதைப் பற்றிய குறிப்பைக் கூறவில்லை. மாறாக ஆபிரிக்காவில் இருந்து இலத்தீன் அமெரிக்கா வரை" "பாதிப்பு
வரக்கூடிய மக்களுக்கு அற்ப தொகையான 448 மில்லியன் டாலர் உதவி கொடுக்க காங்கிரஸை ஒப்புக் கொள்ள
தான் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மிகக் கசப்பான அனுபவத்தில் இருந்து, ஒடுக்கப்பட்டுள்ள நாடுகள் இத்தகைய
உறுதிமொழிகள் பலநேரமும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை அறியும். ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரான
Jean Ping,
BBC
இடம் மாநாடு நடந்து கொண்டிருக்கையில் தான் சர்வதேச நாணய நிதியத்தின் தங்க இருப்புக்களை விற்று
ஆபிரிக்காவிற்கு பண உதவி அளிக்கும் திட்டத்தை முன்வைக்க இருப்பதாகக் கூறினார். "நாங்கள் ஒன்றும் நாடுகளை
அவற்றின் பைகளில் கைவிட்டு எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்கவில்லை; ஏனெனில் அவர்கள் உறுதி
அளித்துள்ளனர், பலமுறை உறுதியளித்துள்ளனர், ஆனால் எதையும் செய்ததில்லை" என்றார்.
ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சில முக்கியமாக கருத்துக்களில்
G20 சர்வதேச
நாணய நிதியத்தை 250 பில்லியன் டாலர் சிறப்பு நிதி பெறும் உரிமைகளை தோற்றுவிக்க அனுமதிக்க
முடிவெடுத்துள்ளது. இதைத்தவிர டாலர், யூரோ, யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்கை தளமாகக்
கொண்ட ஒரு புதிய இணைந்த நாணயத்தையும் தோற்றுவிக்க சொல்கிறது. இதன் நோக்கம் நாடுகளின் வெளிநாட்டு
இருப்புக்களுக்கு எழுச்சியை கொடுத்தலாகும். அதில் பெரும் பங்கு மிக செல்வம் நிறைந்த நாடுகளுக்கு செல்லும்.
ஒப்பந்தத்தை பற்றி சுருக்கமாகக் கூறுகையில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிரெளன்,
அரசாங்கங்கள் மற்றொரு 250 பில்லியன் டாலரை அடுத்த இரு ஆண்டுகளில் உலக வணிகச் சரிவிற்கு ஈடுகட்டும்
வகையில் சர்வதேச நாணய நிதியம் செலவிடலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிவித்தார். "G20
நாடுகளில் இருந்து இதற்கான நன்கொடைகள் $3 முதல் $4 பில்லியன்தான் என்று அறிக்கையின் பிற்சேர்க்கை
கூறுகிறது" என்று பைனான்சியில் டைம்ஸ் தெரிவிக்கிறது.
உண்மையாக இல்லாத, அதிகம் பேசப்படும் 1.1 டிரில்லியன் டாலர் ஊக்கப் பொதி
உண்மையாக இருக்குமானாலும்கூட அது ஒரு பெரிய நெஞ்சுக் காயத்திற்கு முதலுதவி கட்டுப்போடுவது போல்தான்
இருக்கும். கடந்த ஓராண்டில் சர்வதேச பங்குச் சந்தைகள் கரைந்துள்ள நிலையில், பொருட்கள் விலையின் வீழ்ச்சி
மற்றும் வீட்டுச் சொத்துக்கள் மதிப்பின் சரிவு கிட்டத்தட்ட 50 டிரில்லியன் டாலர் செல்வத்தை அழித்துவிட்டது.
மேலும் அமெரிக்க அரசாங்கமும் மத்திய வங்கிக் கூட்டமைப்பும் மட்டும் அமெரிக்க வங்கிகளுக்கு பிணை எடுப்பிற்காக
12.8 டிரில்லியன் டாலரை செலவழித்துள்ளன, கடன் கொடுத்தன அல்லது உறுதி கூறியுள்ளன. இவற்றினால்
வேலைகள் இழப்பு அலை உயர்வை தடுக்கமுடியவில்லை.
பிரெளன் G20
உடன்பாட்டில் இருக்கும் மற்ற கருத்துக்களையும் உயர்த்திக் கூறினார்: இவை உள்ளடக்கத்தில்
வெறுமையானவையாகும்.
பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய அரசாங்கங்கள் நிதிய அமைப்புக்களுக்கு தங்கள் சர்வதேச
கட்டுப்பாடு வேண்டும் என்ற இலக்கை அடைவதில் தோற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய ஒரு நடவடிக்கை தற்போது
இருக்கும் நிதிய பாதுகாப்பு கூட்டமைப்பை (Financial
Security Forum) நிதிய ஸ்திரப்படுத்தும் அமைப்பாக (Financial
Stability Board) மாற்றியது ஆகும். பெயர் மாற்றத்தை
தவிர, இந்த முக்கியமாற்றம், G20
உறுப்பினர்களை தவிர சீனா, இந்தியா, பிரேசில் ஆகியவற்றில் இருந்து மற்ற
உறுப்பினர்களை சேர்ப்பது ஆகும். ஆனால் இது பற்களற்ற காவல் நாய் போல்தான் இருக்கும். தனியார் வங்கிகள்
மற்றும் நிதிய அமைப்புக்கள் என்று உலகப் பொருளாதாரத்தின்மீது ஆபத்து தரக்கூடிய செயல்களைச் செய்யும்
நிறுவனங்கள் மீது தடைகளைச் சுமத்தும் அதிகாரம் அற்றதாக இருக்கும்.
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஒபாமாவையும் பிரெளனையும்
உச்சிமாநாட்டின் முடிவில் புகழ்ந்தார். பிரெட்டன் வூட்ஸிற்குப் பின்னர் மிகப் பெரிய நிதிய சீர்திருத்தத்திற்கு
தான்தான் காரணம் என்றும் அறிவித்துக் கொண்டார். "அழுத்தங்கள், பூசல்கள் மற்றும் தன்னலக் குழுக்கள் உள்ளன;
ஆனால் நம்முடைய ஆங்கிலோ சாக்சன் நண்பர்கள்கூட நமக்கு நியாயமான ஒழுங்குவிதிகள் வேண்டும் என்று
நம்புகின்றனர்" என்றார் அவர்.
உண்மையில் அமெரிக்கா அதன் வங்கி முறைமீது எந்த சர்வதேசக் கட்டுப்பாட்டையும்
நிராகரித்துவிட்டது. G20
தலைவர்களுடைய அறிக்கை "நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் உள்நாட்டு கட்டுப்பாட்டு முறைகள்
வலுவானதாக்கப்படும் என்பதற்கு உடன்படுகிறோம்." என அறிவித்துள்ளது.
மற்றொரு வினா, நிதிய முறையை முடக்கிவிட்ட விற்கமுடியாத சொத்துகளை இல்லாது
செய்தல் என்பது அறிக்கையில் G20
நாடுகள் தனித்தனியே " கடன் வர்த்தகத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்" எனக் கூறப்பட்ட
தெளிவற்ற உறுதி மொழியில்தான் எழுப்பப்பட்டுள்ளது.
G20 தலைவர்கள் பாதுகாப்புவரி
முறையில் ஈடுபடுவதில்லை என்ற முக்கிய உறுதியையும் புதுப்பித்தனர். உலக வங்கி கருத்தின்படி நவம்பர் 17ல் இந்த
உறுதியை எடுத்துக் கொண்டதற்கு பின்னர் 20 நாடுகளில் 17 புதிய பாதுகாப்புவரி நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளன.
கூடியிருந்த நாட்டுத் தலைவர்கள் வங்கியாளர்களுக்கு கொடுக்கப்படும் இழிந்த
முறையிலான மிக உயர்ந்த தர ஊதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் மீது உறுதியாக "தாக்குதல்" நடத்த
உடன்பட்டதாக பரந்த அளவில் கூறப்பட்டது. பிரிட்டிஷ் டெய்லி டெலிகிராப் வியாழனன்று "நிறுவனங்களின்
நீண்ட கால இலக்குகள் மற்றும் நிதானமான ஆபத்து மேற்கொள்ளும் முறையை ஒட்டி ஊதிய கொடுப்பனவுகள்
இருக்கும் என்றவிதத்தில்" உடன்பாடு அடையப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
உச்சிமாநாடு முடிந்தபின் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா, வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் சம்பாதிக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன்களை குறைக்கும் சர்வதேச
தரங்களை உண்மையில் செயல்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்றார். "இதன் பொருள் அரசாங்கம்
நிர்வாகத்தில் தலையிடாது. அரசாங்கம் ஊதியங்களை நிர்ணயிப்பதை நீங்கள் விரும்பவில்லை, நாங்கள்
செய்யவில்லை. நான் ஒரு தடையற்ற சந்தை முறையில் வலுவான நம்பிக்கை உடையவன், அமெரிக்காவின் மக்கள்
நன்கு அறிந்துள்ளவன் என்ற முறையில், குறைந்தது மக்கள் அங்கு பணக்காரர்களை கசப்புடன் காண்பதில்லை,
அவர்கள் செல்வந்தர்களாக விரும்புகின்றனர். அது நல்லதுதான்." என்றார்.
ஒபாமாவும் பிரெளனும் மிகப் பெரும் வார்த்தைகளை லண்டன் உச்சிமாநாட்டிற்காக
கூறினார்கள். இது "நம்முடைய உலகப் பொருளாதார மீட்புத் தொடரில் ஒரு திருப்புமுனை" என்று ஒபாமா
கூறினார். தன்னுடைய பங்கிற்கு பிரெளன் G20
உச்சிமாநாடு "ஒரு புதிய உலக ஒழுங்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது, சர்வதேச ஒற்றுமை சகாப்தத்தில் ஒரு
முன்னேற்றம் என்ற அஸ்திவாரம் அதற்கு உள்ளது" என்றார்.
இவை அனைத்தும் பொருளற்ற பேச்சுக்கள் ஆகும். உச்சிமாநாடு நடந்து
கொண்டிருந்தபோது, மிக உயர்ந்த வேலையின்மை அளவின் உண்மை உணரப்பட்டது. அமெரிக்காவில் மற்றும் ஒரு
742,000 வேலைகள் கடந்த மாதம் அழிக்கப்பட்டுவிட்டன. ஸ்பெயினில், தொழில் அமைச்சரகம் வேலையின்மை
விகிதம் 15.5 சதவிகிதம் வந்துவிட்டது, ஐரோப்பாவில் இது மிக மோசமானது என்றும் 3.6 ஸ்பெயினின்
தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர் என்றும் கூறியுள்ளது. உச்சிமாநாடு நடக்கும் பிரிட்டனிலேயே புதிய சுற்று
வேலைத்தகர்ப்பு அறிவிப்புக்கள் வந்துள்ளன. காப்பீட்டுத்துறை பெருநிறுவனம்
Norwich Union,
விமான உற்பத்தி நிறுவனம் Bombardier
ஆகிய இரு நிறுவனங்கள் இன்னும் 2,500 வேலைகளை இல்லாதொழித்தன.
தொடரும் இந்த உலகளாவிய வேலைத் தகர்ப்புக்கள் தீவிரமாகும். நூற்றுக்கணக்கான
மில்லியன் மக்களை வறுமை, பட்டினியில் வாட்டும். உலக வங்கி ஒரு புதிய கணிப்பை கொடுத்துள்ளது. அதில் உலக
பொருளாதாரச் சுருக்கம் 1.7 சதவிகிதம் இருக்கும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி தலைவர் ரோபர்
ஜெல்லிக் BBC
இடம் கூறினார் "இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தகைய புள்ளிவிவரங்களை கண்டதில்லை-- இதன்
பொருள் பெரும் மந்த நிலை என்பதே."
அவர் எச்சரித்தார்: "குறைந்த வளர்ச்சியினால் 200,000 முதல் 400,000
குழந்தைகள் இந்த ஆண்டு இறந்துவிடுவர் என்பதைக் குறிக்கும். எனவே மொத்த விளைவு மிகப் பெரியதாக
இருக்கும்."
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூன் இன்னும்
வெளிப்படையாக தற்போதைய நெருக்கடி, அதன் தாக்கங்களை பற்றி விவரித்தார். கார்டியனிடம்
அவர் "மாற்றத்தின் பெரும் வேகத்தை நாம் பார்த்துள்ளோம். ஒரு நிதிய நெருக்கடி என்று தொடங்கியது
உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறிவிட்டது. இன்னும் மோசமானது வரக்கூடும் என்று நான்
அஞ்சுகிறேன்: அதாவது பெருகிய சமூக அமைதியின்மை, வலுவிழந்த அரசாங்கங்கள் மற்றும் தலைவர்களிடமும் தங்கள்
வருங்காலம் பற்றியும் நம்பிக்கை இழந்து, சீற்றம் நிறைந்த மக்கள் மூலம் ஒரு முழு அரசியல் நெருக்கடி
தோன்றலாம்."எனக்கூறினார்.
அவர் தொடர்ந்தார்: "வழமான காலங்களில், பொருளாதார, சமூக வளர்ச்சி
மெதுவாகத்தான் வரும். மோசமான காலங்களில் நிலைமை விரைவில் சீர்குலைந்துவிடுகிறது. பசியில் இருந்து பட்டினி
என்பதற்கு, நோயில் இருந்து மரணம் என்பதற்கு, அமைதி, உறுதி என்பதில் இருந்து எல்லைகளை கடந்து
அனைவரையும் பாதிக்கும் பூசல்கள், போர்கள் என்பதற்கும் தொலைவில் என்பதை விட அருகே உள்ளோம். நாம்
உலகளாவிய மீட்பைக் கட்டமைக்கவில்லை என்றால் மனித வளர்ச்சிக்கு பேரழிவை எதிர்கொள்ளுவோம்."
உச்சிமாநாடு "ஒரு புதிய உலக ஒழுங்கமைப்பின்" வெளிப்பாட்டிற்கு சர்வதேச
ஒத்துழைப்பை தளமாகக் கொண்டு அடையாளம் காட்டியுள்ளது என்ற கூற்றைப் பொறுத்தவரை, உச்சிமாநாடு
பழைய உலக ஒழுங்கின் சரிவை உறுதிபடுத்தியது என்பதுதான் உண்மை. அது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்
அமெரிக்க முதலாளித்துவத்தின் சவாலுக்குட்படாத பொருளாதார, நிதிய மேலாதிக்கத்தை தளமாகக் கொண்டு,
டாலரை அடிப்படையாகக் கொண்ட உலக நிதிய முறையையும் நிறுவியிருந்தது.
உலக வளர்ச்சிக்கு இயந்திரம் போல் முன்பு இருந்த அமெரிக்கா இப்பொழுது உலகின்
தலையாய கடனாளி நாடாகும். பல தசாப்தங்கள் அதன் உற்பத்தி சக்திகள் சிதைவு மற்றும் ஒட்டுண்ணித்தன,
குற்றம் சார்ந்த ஊகவகைகளுக்கு மாறியதால் ஏற்பட்ட இதன் நிதிய நெருக்கடி, இப்பொழுது அதை உலகளாவிய
மந்தநிலை ஆழ்ந்து போவதற்கு ஒரு இயந்திரமாக மாறியுள்ளது.
சீனா இல்லாவிடின், ஒபாமா இன்னும் கூடுதலான அவமானத்தை கண்டிருப்பார்.
ஆனால் பெய்ஜிங்கை இப்படி நம்பியிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல்
நெருக்கடியின் அசாதாரண சரிவைத்தான் உயர்த்திக் காட்டியுள்ளது.
ஒபாமாவிற்கும் ஜனாதிபதி ஹு ஜின்டாவோவிற்கும் இடையே உச்சிமாநாட்டிற்கு முன்
நடந்த பேச்சைப் பற்றி பைனான்சியல் டைம்ஸில் கருத்து தெரிவிக்கையில், சீன சர்வதேச நாணய
நிதியத்திற்கு நிதி அளிப்பதாக உடன்பட்ட நிலையில், ஜெப் டயர், ஒரு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்
G-2 "உண்மைப்
பிரதிபலிக்கிறது; அதாவது பரந்த பல சர்வதேசப் பிரச்சினைகளில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே
உடன்பாடு இல்லை என்றால் எதுவும் நடக்காது" என கூறியுள்ளார்.
"தான் ஒரு மத்திய பங்கை வகிக்கும் விருப்பத்தை நிரூபிக்கும்" தொடர்ச்சியான
ஆரம்ப முயற்சிகளை சீனா தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் கடந்த வாரம் சீன மத்திய வங்கி
தலைவர் Zhou Xiaochuan,
"அமெரிக்க டாலருக்கு பதில் உலக இருப்பு நாணையமாக வேறு ஏதேனும்
வரவேண்டும்" என்று கோரியிருந்த முயற்சியும் அடங்கும். சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு பணமாக பயன்படுத்தும்
உரிமைகளை பயன்படுத்தி (Special Drawing
Rights) சீனா டாலருக்கு மாற்றாக வரக்கூடியது என்ற
கருத்தை முன்வைத்துள்ளது.
டாலரின் உலக மேலாதிக்கம் மற்றும் உலகின் இருப்பு நாணயம் என்பதற்கு இத்தகைய
வெளிப்படையான சவால் வந்துள்ளது அமெரிக்காவின் பொருளாதார உயிர்வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆகும். அது முற்றிலும்
பிற நாடுகள் வாங்கும் நாணயங்களைத்தான் தன்னுடைய கடன்களின் வட்டியைக் கொடுக்க நம்பியுள்ளது. ஆனால் சீனாவின்
கோரிக்கை ரஷ்யவினாலும் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி விளாடிமீர் புட்டினும் ஜனாதிபதி டிமிட்ரி
மெட்வேடெவும் ரூபிள் ஒரு பிராந்திய இருப்பு நாணயமாக ஏற்கப்படலாம் என்றும் ஒரு புதிய உலகந்தழுவிய இருப்பு
நாணயம் சர்வதேச அமைப்புக்களால் வெளியிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஒபாமா உச்சிமாநாட்டை பற்றிக் கூறுகையில் பல பங்காளிகளிடையே முக்கிய வேறுபாடுகளையும்
பூசல்களையும் அடையாளம் கண்டவர்கள், "சமரசப்படுத்தப்படமுடியாத வேறுபாடுகள் பற்றி வெளிப்படையான,
நேர்மையான விவாதம் இருந்தது பற்றி குழம்பியுள்ளனர்." என்றார்.
உண்மையில், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதப் போக்குகள் உச்சிமாநாடு
முழுவதும் வெளிப்படையாகத் தெரிந்தன. இது பொருளாதார நெருக்கடி மோசமாகையில் தவிர்க்க முடியாமல்
தீவிரமாகும். உலகந்தழுவிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உலக முதலாளித்துவத்தை காப்பாற்ற முன்வைக்க
தவறியது மட்டும் இல்லாமல், லண்டன் உச்சிமாநாடு உலகந்தழுவிய ஒருங்கிணைந்த பொருளாதாரத்திற்கும்
முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையே உள்ள தவிர்க்க முடியாத, சமரசத்திற்கு இடமில்லாத
முரண்பாடுகளைத்தான் நிரூபித்தது. மேலும் போட்டி தேசிய அரசுகள் உண்மையில் நெருக்கடிக்கு ஒரு சர்வதேச
உண்மையான அணுகுமுறையை ஏற்க இயலாத நிலையையும் காட்டியது. இறுதியில் லண்டன் உச்சிமாநாடும் அதன் பல
தற்காலிக நிவாரணங்களும், 1933 லண்டன் உச்சிமாநாட்டை போல முதலாளித்துவ அமைப்புமுறையில் உலகந்தழுவிய
நிலைமுறிவு என்றவகையில் மற்றொரு மைல்கல்லாகத்தான் அமைந்தது. |