World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British Army chief ready to send more UK troops to Afghanistan

பிரிட்டிஷ் இராணுவ தலைமைத் தளபதி ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலான துருப்புக்களை அனுப்பத் தயார்

By Harvey Thompson
1 April 2009

Back to screen version

பிரிட்டனின் இராணுவ தலைமைத் தளபதி கடந்த வார இறுதியில் ஆப்கானிஸ்தானிற்கு மேலும் 2,000 படையினரை அனுப்பத் தயார் என்று அறிவித்ததன் மூலம் அரசாங்கம் பாக்கிஸ்தானுக்குள் போரைத் தொடரும் தன் விருப்பத்தை தெளிவாக்கியது.

இராணுவ கட்டளை அதிகாரியான தளபதி சர் ரிச்சர்ட் டான்னட், டைம்ஸ் ஆப் லண்டனிடம் ஈராக்கிற்கு செல்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள 12th Mechanised Brigade இன் ஒரு பகுதி பின்னர் அங்கு அனுப்பப்படாது, இப்பொழுது "ஆப்கானிஸ்தானிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஆப்கானிஸ்தான் போர் பெரிதாக விரிவாக்கப்படும், பாக்கிஸ்தானினுள்ளும் தொடரும் என்று அறிவித்ததை அடுத்து இந்தத் தகவல் வந்துள்ளது. புஷ் நிர்வாகத்தின் ஈராக்கில் இராணுவ "கூடுதல் நடவடிக்கையை" எதிரொலிக்கும் விதத்தில், ஒபாமா ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள 17,000 துருப்புக்களைத் தவிர இன்னும் ஒரு 4,000 படையினரை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பும் திட்டங்களை கோடிட்டுக் காட்டினார். இப்போர் தீவிரமாக்கப்பட்டு பாக்கிஸ்தானின் எல்லைக்குள்ளும் ஆக்கிரோஷத்துடன் விரிவாக்கப்படும் என்ற வாஷிங்டனுடைய தீர்மானத்தையும் அடையாளம் காட்டினார்.

தற்பொழுது ஐக்கிய இராச்சியம் ஆப்கானிஸ்தானிற்கு 8,000 துருப்புக்களை அனுப்பி வைத்துள்ளது. 4,000 பேர் அடங்கிய ஒரு முழு பிரிகேட்டை அனுப்பும் திட்டங்கள் இல்லை என்று டான்னட் கூறினாலும் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் 2,000 படையினரை "அதிக பட்ச வரம்பு" என்று விளக்கினாலும், மொத்தத்தில் அறிக்கைகள் தெளிவற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு அமைச்சரகத்தின் தகவல் ஒன்று பின்னர் இராணுவத்தின் ஆலோசனையின் பேரில்தான் எந்த முடிவும் எடுக்கப்படும் என்று கூறியது. "எமது படைகளின் பாதுகாப்பிற்குக் கூடுதலான துருப்புக்கள் வேண்டும்... என்ற தெளிவான ஆலோசனை வந்தால், அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்று கூறப்பட்டது.

இப்படி உறுதியற்ற நிலை இராணுவத்தின் உயர்மட்டம் "இராணுவம் அதிக சிரமத்திற்கு உட்படுத்தப்படக்கூடாது" என்ற கவலையின் காரணமாக உள்ளது. இதே டைம்ஸ் பேட்டியில் டான்னட் ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் துருப்புக்களை அதிகரிப்பது தொடர்பான பல இராணுவ விருப்புரிமைகள் இருந்தாலும், கூடுதலான ஒரு படைப்பிரிவை (பிரிகேட்டை) அனுப்புதல் என்பது பிரிட்டிஷ் படைகள் மீது சுமையை அதிகமாக்கும் என்றார். "மற்றும் ஒரு 4,000 படையினரை நாம் அனுப்ப வேண்டும் என்றால்... இராணுவத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும்; அதை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்." என்றார் அவர்.

விமானப்படைத் தலைவரும் பாதுகாப்பு அதிகாரிகள் தலைவருமான சர் ஜோக் ஸ்டரப்புடைய கருத்தை இவர் ஏற்றார்; அவர் ஆப்கானிஸ்தானில் "ஒன்றுக்கு ஒன்று" திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கான கருத்தை ஏற்கவில்லை என்றார். அதற்காக ஜூலை 31 க்குள் ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக இருந்த 4,000 துருப்புக்கள் ஹெல்மண்ட் மாநிலத்திற்கு மாற்றப்படுவதாக இருந்தது.

"ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை அதிகரித்தல் என்பது அங்கு கூடுதலான படையினர் இருக்க வேண்டிய நிலையை ஒட்டி நிர்ணயிக்கப்படும்" என்றார் டான்னட். "இந்தக் படையினர் அமெரிக்கர்களுடையதா, பிரிட்டிஷாருடையதா அல்லது ஆப்கானியருடையதா, எப்படியும் இருக்கலாம் என நான் நினைக்கிறேன்" என்றார் அவர். ஆப்கானிஸ்தான் போர் "ஒரு நீண்ட தூர ஓட்டமே தவிர குறுகியதூர வேகப் பந்தயம் அல்ல" என்றார்.

எச்சரிக்கையான சொற்றொடர்கள் கையாளப்பட்டும், டான்னட்டின் அறிக்கையும் மற்ற கருத்துக்களும் பிரிட்டிஷ் அரசாங்கம் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கத் தலைமையிலான தலையீட்டின் கூடுதல் விரிவாக்கத்தையொட்டி அதிகம் உதவும் எண்ணத்தை தெளிவுடுத்துகின்றதுடன், அதன் ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறே செய்யவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கவும் முயல்கின்றது.

மார்ச் 29 அன்று ஒப்சேவர் செய்தித்தாள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அறிவிப்பான அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தாக்குதல் பாக்கிஸ்தானுக்குள் நடத்தப்படுவதற்கு முழு ஆதரவை தகவல் கொடுத்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து மந்திரிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள "ஒற்றை நடவடிக்கையில் ஒரு பகுதியாகத்தான்" நாடு உள்ளது என்பதை உறுதிப்படுத்தினர்.

பாதுகாப்பு மந்திரி ஜோன் ஹட்டன் பாக்கிஸ்தானை தளமாகக் கொண்டுள்ள தலிபான் மற்றும் அல் குவைதா தளங்களை இலக்கு கொள்ளுவதை பிரிட்டன் ஆதரிக்கிறது என்றும் ஐரோப்பா ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடிப் பகுதிகளில் எழுச்சியாளர்களை அழிப்பதற்கு உதவ முன் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிராந்திய மோதலை அதிகப்படுத்துவதில் பிரிட்டனின் பங்கு தயாராக உள்ளது என்பதைத் தெளிவாக்கிய ஹட்டன் இப்பகுதியில் உள்ள இராணுவ இலக்குகளில் "இரு நாடுகளுக்கும் இடையே சமமான கவனத்தை காட்ட வேண்டும்" என்றார்.

"கடந்த நூற்றாண்டில் பல முறையும் இருந்தது போலவே 2001ல் இருந்து மீண்டும் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை பூண்டோடு அழிப்பதற்கு அமெரிக்கா கொடுக்கும் தலைமைக்கு நன்றியறிதலுடன் இருக்கிறோம். ஆனால் ஐரோப்பா இன்னும் கூடுதலாக செய்ய வேண்டும்; எமது நலன்களுக்கு அதுதான் உகந்தது" என்றார் அவர்.

"அல் குவைதாவுடனும், பாக்கிஸ்தானில் தலிபானுடனும் அமெரிக்கப் படைகள் எவ்வளவு திறமையுடன் நடக்கின்றன என்ற கடின வினாவை இனி ஐரோப்பாவில் நாம் எழுப்ப முடியாது. பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியை கையாள்வது தொடர்பான அரசியல் சுமை அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பல ஐரோப்பிய நாடுகள் பாக்கிஸ்தானுடன் வலுவான தொடர்புகளை கொண்டுள்ளன. அவை அமெரிக்காவுடன் இச்சுமையை இன்னும் திறமையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.'

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேட்டோவில் "தலைமை முறையில் பாரிய சமசீரற்ற தன்மை" இருப்பதை ஹட்டன் கண்டித்துள்ளார். "இந்த சமசீரற்ற நிலை வரவிருக்கும் மாதங்களில் ஆப்கானிஸ்தானில் பலவித நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா கூடுதல் வழங்களை செலவிட இருக்கும் நேரத்தில் அதிகரிக்கும்" என்றார் அவர்.

பாக்கிஸ்தானை பிரிட்டன் இலக்கு கொண்டுள்ளது பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் கடந்த வாரம் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை புதுப்பித்து கோடிட்டுக் காட்டியபோது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. பாக்கிஸ்தானில் அல் குவைதா இருப்பது இங்கிலாந்தை எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறிய விதத்தில் அரசாங்க கருத்து பிரிட்டிஷ் உளவுத்துறைப் பிரிவுகளால் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றில் இரு பங்கு பயங்கரவாதத் திட்டங்கள் பாக்கிஸ்தான் தொடர்பு கொண்டவை எனக் கூறுகிறது.

பிரிட்டிஷ் இராணுவ ஈடுபாடு பாக்கிஸ்தானில் இருப்பதின் தாக்கங்கள் பெரியவை. அப்பகுதியில் முன்னாள் காலனித்துவ அதிகாரத்தை கொண்ட நாடு என்று முறையில் இங்கிலாந்து நீண்டகால வரலாற்று பிணைப்புக்களை பாக்கிஸ்தானுடன் கொண்டுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து வெளிநாட்டில் குடியேறியுள்ள 900,000 மக்களுக்கு பிரிட்டன் இரண்டாம் தாயகம் ஆகும்.

இன்னும் பரந்த அளவில், பிரிட்டினால் ஆதரிக்கப்படும் ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானத்திலும் அமெரிக்க நடவடிக்கைகள் அப்பகுதி முழுவதிலும் அச்சுறுத்தலை பிரதிபலிக்கின்றன. பாக்கிஸ்தான் நிலப்பகுதிக்குள் இராணுவ மோதல் என்பது அப்பிராந்தியத்தில் மற்றொரு அணுவாயுத சக்தியாக இருக்கும் இந்தியாவை அதனுடன் இணைக்காமல் எப்படிப் போக்கும் என்ற கற்பனைகூட செய்ய முடியாது. பிராந்திய அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் குறுகிய எல்லைப் பகுதியும் வெடிக்கும் தன்மையை பெறலாம். இது பெய்ஜிங் ஆட்சியையும் அதனுள் இழுக்கும். அதே நேரத்தில் ரஷ்யா ஒரு பிராந்திய சக்தி என்ற முறையில் குறுக்கிடும் கட்டாயத்திற்கு உள்ளாகும். இது போரை இன்னும் பரந்த முறையாக்கும் நிலைக்குத் தள்ளும்.

இந்த வாரம் இறுதியில் ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடக்கவிருக்கும் நேட்டோவின் 60 வது ஆண்டு நிறைவு உச்சிமாநாட்டில் பாக்கிஸ்தான் மீது புதிய கவனம் ஆதிக்கம் கொள்ளக்கூடும். அமெரிக்க மீண்டும் மற்றைய நேட்டோ உறுப்பு நாடுகளான குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் அதிக இராணுவ துருப்புக்களை அனுப்ப அழுத்தம் கொடுக்க முயலும். ஆனால் மூத்த நேட்டோ இராஜதந்திர வட்டாரங்கள் செய்தி ஊடகத்திற்கு கசிய விட்டுள்ள தகவல்கள் பிரிட்டனைத் தவிர வேறு எந்த கூட்டு உறுப்பு நாடும் உபயோகமாக அதிகம் எதையும் செய்யாது என்றுதான் தெரிவிக்கின்றன. இத்தாலியும் போலந்தும் சிறிய படைகளை அனுப்பக்கூடும். ஆனால் அது ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் ஆகஸ்ட் 20 ஐ ஒட்டித்தான் இருக்கும்.

ஜேர்மனி 3,640, பிரான்ஸ் 2,780 மற்றும் ஸ்பெயின் 780 படையினர் என்ற அளவில் நேட்டோ இதுவரை ஆப்கானிஸ்தானிதிற்கு 32,000 துருப்புக்களைக் கொடுத்துள்ளது.

ஆளில்லாத CIA விமானத்தால் செய்யப்பட்ட பாக்கிஸ்தானிய குடிமக்களை வான் தாக்குதல்களால் கொல்லப்பட்டமை பாக்கிஸ்தானில் மக்களிடம் அமெரிக்கர்களுக்கும், வாஷிங்டனுக்கு ஒத்துழைக்கும் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகவும் எதிர்ப்பு உணர்வை அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் பாக்கிஸ்தானின் மேற்கு எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் தொடரும் என்று அறிவித்துள்ளனர் கூட்டணி தரைப்படைப் பிரிவுகள் பாக்கிஸ்தானுடைய எல்லைப் பகுதிகளில் சில இடங்களில் நுழையக் கூடும் என்ற ஊகங்களுக்கு இடையே இந்த அறிவிப்பு வந்துள்ளது. பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஒருவரான லெப்டினன்ட் கேர்னல் மார்க் ரைட் ஒப்சேவர் பத்திரிகையிடம் அமெரிக்கா ஏற்கனவே பாக்கிஸ்தானில் எல்லைப் பகுதியில் பழங்குடி மக்கள் இருக்கும் பகுதிகளில் "கூட்டு இராணுவ நடவடிக்கைகள்" ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved