World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama declares war on auto workers கார்த் தொழிலாளர்கள் மீது ஒபாமா போர் தொடுக்கிறார் By Joe Kishore திங்களன்று ஜனாதிபதி பாரக் ஒபாமா கார்த் தொழில் பற்றி ஆற்றிய உரை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் என்பதைவிட வேறு ஒன்றும் இல்லை. திமிர்த்தனமும், சிடுசிடுப்பு நிறைந்த அறிக்கையில் இவர் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரின் செலவு குறைக்கும் திட்டங்களை போதுமானவை அல்ல என்று நிராகரித்து கார்த் தொழிலாளர்கள் இன்னும் பெரும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டும் என்று கோரியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு நிர்வாகத்தின் விடையிறுப்பு எப்படி அப்பட்டமாக இரட்டைத்தன்மை கொண்டிருக்கிறது என்பது பற்றி ஒருவருக்கும் தெரியாதது அல்ல. மிகப் பெரிய வங்கிகளுக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கும் எவ்வித தடைகளும் இல்லாமல் 10 டிரில்லியன் டாலர் வரை நிதியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் பொறுப்பற்ற ஊகச் செயற்பாடுகள்தான் பொருளாதார நெருக்கடியை தோற்றுவிப்பதில் முக்கிய காரணங்களாக இருந்தன. இந்தப் பரந்த நிதிகள் சமூகத்திற்கு பயனுடைய பொருட்கள் மற்றும் உண்மை மதிப்பை உற்பத்தி செய்வதற்கு செல்லவில்லை. மாறாக நிதிய அதிகாரத்துவத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீட்டு இருப்புக்களை பெருக்குவதற்கும்தான் செல்கின்றன. கடந்த வாரம் மட்டும் நிர்வாகம், அரசாங்கம் பிணை எடுப்புக்கள் கொடுத்த AIG மற்றும் பிற அமைப்புக்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் பற்றி வழங்கியதற்கு எவ்விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. வங்கிகளுக்கு பிணை எடுப்பிற்கான நிதி கார்த் தொழிலை சீராக்க அரசாங்கம் கொடுக்க இருக்கும் நிதியைப் போல் பல நூறுமடங்கு அதிகமாகும். ஆனால் கார்த் தொழில் என்று வரும்போது ஒபாமா நிறுவனங்கள் "அரசாங்கத்தின் பாதுகாப்புக்குரிய அமைப்புக்களாக" வந்துவிடக்கூடாது என்று அறிவிப்பதுடன் பாரிய செலவினக் குறைப்புக்களையும், தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்படுபவற்றை கோருகிறார். ஒபாமா GM மற்றும் Chrysler ஆகியவை முன்வைத்த திட்டங்கள் போதுமானவை அல்ல என்று அறிவிக்கையில், அவருடைய தாக்குதலின் முக்கிய இலக்கு தொழிலாள வர்க்கம் ஆகும். "அடிப்படை மறுகட்டமைப்பை செயல்படுத்துவதற்கு ஏற்கனவே மிக அதிக வேதனை தரும் சலுகை விட்டுக்கொடுப்பக்களை வழங்கியுள்ள தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் இன்னமும் கூடுதலாக செய்யவேண்டும்" என்று ஒபாமா கூறியுள்ளார். இந்த கூடுதலான இழப்புக்களை தொழிலாளர்கள் தான் தாங்க வேண்டும் என்னும் கோரிக்கை அழிவுகரமானதாகும். ஏற்கனவே 400,000 வேலைகள் கார்த் தொழிலில் கடந்த ஓராண்டில் இழக்கப்பட்டுவிட்டன; இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பறிபோகும் நிலையில் உள்ளனர். பல தலைமுறைகள் காணாத அளவிற்கு தொழிலாளர்கள் வேலைகளை விட்டு அகற்றப்படுவர். ஊதியங்கள் இன்னும் கடுமையாகக் குறைக்கப்படும்; பணி விதிகள் தூக்கிவீசப்பட்டு சுரண்டுதல் அதிகரிப்பதுடன், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் பிற நலன்கள் பெரிதும் குறைக்கப்படும் அல்லது அகற்றப்படும். உடனடியாக இலக்கு கொள்ளப்படுபவை நூறாயிரக்கணக்கான ஓய்வு பெற்றவர்களின் மருத்துவ நலன்கள் ஆகும். மூன்று பெரிய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், அவற்றை நம்பியிருக்கும் தொழில்பிரிவுகளின் கணிசமான துறைகளும், விநியோகத்தவர்களில் இருந்து விற்பனையாளர்கள் வரை பாதிப்பிற்கு உட்படுவர். தாக்குதல் முடிவதற்கு முன்பே, தொழிலில் இன்னமும் வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் பெரும் மோசமான சுரண்டப்படும் நிலைக்கும், எந்த நலன்களும் மற்றும் வேலைப் பாதுகாப்பும் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவர். Chrysler இற்கும் மற்றும் அதன் 26,000 மணித்தியால ரீதியாக பணிபுரியும் தொழிலாளர்களின் மரணதண்டனைக்கும் தான் நிர்வாகம் கிட்டத்தட்ட கையெழுத்திட்டுள்ளது. அதற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுத்து பியட்டுடன் இணைப்பு ஒப்பந்தம் அடையப்பட வேணடும் அல்லது இனியும் அரசாங்க உதவி கிடையாது என்பதை ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஜெனரல் மோட்டார்ஸையும் 46,000 தொழிலாளர்களையும் திவால் நீதிமன்றத்தின் முன் ஒபாமா நிறுத்துகிறார்; "அந்நீதிமன்றங்கள் மறுசீரைமைப்பிற்கு விரைவில் உதவும், வலுவாக மீண்டும் நிறுவனம் எழுச்சி பெற்று வர உதவும்" என்று ஒபாமா கூறியுள்ளார். இது தொழிற்சங்க ஒப்பந்தங்களை கிழித்துப்போட்டுவிட்டு புதிய மற்றும் கிட்டத்தட்ட வறுமைநிலை ஊதியங்களை நீதித்துறை உத்தரவின் பேரில் கொடுப்பதற்கான ஒரு சங்கேத மொழியாகும்.தன்னுடைய சொந்தக் கொள்கையினால் அதிர்ந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு "ஆதரவு" என்ற முற்றிலும் சூழ்ச்சிமிக்க உத்தரவாதத்துடன் ஒபாமா தன்னுடைய கருத்துரையை முடிக்கிறார். இந்த அறிவிப்புக்கள் இழிவைத் தவிர வேறு எதற்கும் பயனற்றவை. திங்களன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் ஒபாமா நிர்வாகம் நிதியப் அதிகாரத்துவத்தின், அதிகாரத்துவத்திற்காக, அதிகாரத்துவமே நடத்தும் அரசாங்கம் என்பதை உறுதிபடுத்துகிறது; இந்த நிதிய உயரடுக்கு பொருளாதாரத்தின்மீது குரல்வளைப்பிடியைக் கொண்டிருப்பதுடன் முழு அரசியல் ஆளும்வர்க்கத்தினையும் கட்டுப்படுத்துகிறது. ஒபாமா பிரதிநிதித்துவப்படுத்தும் முதலீட்டு வங்கியாளர்கள் பொருளாதார நெருக்கடியை அமெரிக்காவில் இருக்கும் வர்க்க உறவுகளை அடிப்படையில் மறுகட்டமைக்கும் வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். தொழிலாளர்கள்மீது நடத்தப்படும் மூன்று தசாப்தங்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக அவர்கள் முந்தைய தலைமுறை தொழிலாளர்கள் பெற்றிருந்த நலன்களில் எஞ்சியிருப்பவற்றையும் தகர்க்கின்றனர். இதனால் தொழிலாளர் வர்க்கம் இன்னும் தீவிரமான சுரண்டலுக்கு உட்படும். கார்த் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் இதேபோல் மற்ற தொழிலாளர்கள்மீது நாடெங்கிலும், சர்வதேச அளவிலும், பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முன்னோடியாக இருக்கும். ஊதியக் குறைப்புக்கள், பணி நீக்கங்கள், நலன்களில் குறைப்புக்கள், சமூக நலத்திட்டங்களில் வெட்டுக்கள் ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்படும். ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே அது சமூகப் பாதுகாப்பு, மருத்துவப்பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்த திட்டங்களை நோக்கி இலக்கு வைத்திருக்கப்போவதாக தெளிவாக்கிவிட்டது. ஒபாமாவின் அறிவிப்பு ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) திவால்தன்மையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் பெரும் இழப்புக்களைத் சந்திக்க வகை செய்ததில் இது முக்கிய பங்கைக் கொண்டிருந்ததுடன், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் அடக்கி வைத்தது. இந்த வழிவகையில் இது இன்னும் நெருக்கமாக பெருநிறுவன நிர்வாகத்துடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டது. UAW மீண்டும் நிபந்தனையற்ற சரணாகதி அடையும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. தொழிற்சங்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்துவத்தினரின் பெரும் நலன்கள், சிறப்புச் சலுகைகள் ஆகியவற்றைப் பற்றித்தான் அது கவலை கொண்டுள்ளது. கார் நிறுவனங்கள் அரசாங்கக் கடன்களை கடந்த ஆண்டு பெற்றபின், UAW ஒபாமா நிர்வாகம் தொழிலாளர் சார்பு உடைய நிலைப்பாட்டை எடுக்கும் என்ற பொய்யை வளர்த்தது. தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆர்வத்துடன் அப்பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்தது. தொழிற்சங்கத்தின் மற்ற கொள்கையை போலவே இதுவும் ஒரு பொறி என்று நிரூபணமாகியுள்ளதுடன், தொழிலாளர்களின் நலன்களை காட்டிக் கொடுப்பு என்றும் ஆகியுள்ளது. வோல் ஸ்ட்ரீட்டின் அப்பட்டமான கருவியான ஒபாமா நிர்வாகத்தில், UAW மற்றும் முழுத் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஜனநாயகக் கட்சிக்கு தொழிலாளர்களை அடிபணியவைத்த பல தசாப்தங்கள் நடந்த முயற்சிகளின் உச்சக்கட்டத்தைத்தான் காண்கிறோம். ஒரு பேரழிவு தவிர்க்கப்பட வேண்டும் என்றால், கார்த் தொழிலாளர்கள் தங்கள் விஷயத்தை சொந்தக்கரங்களில் எடுத்துக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. அதேபோல் தங்கள் சுயாதீன வர்க்க நலன்களையும் உறுதிப்படுத்த வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முன்வைக்கிறது: 1. சுயாதீனமான தொழிலாளர்கள் குழுக்களை அமைத்து தொழிலாள வர்க்கத்தின் நேரடிப் போராட்ட வகைகளைப் புதுப்பித்திடுக!இன்னும் சலுகை இழப்புக்கள் வெற்றிகரமாக எதிர்க்கப்பட வேண்டும் என்றால், தொழிலாளர்கள் UAW வில் இருந்து முற்றிலும் சுயாதீனமான அமைப்புக்களை நிறுவ வேண்டும். அனைத்து தொழிற்சாலை, பணியிட மற்றும் அயலவர்களின் குழுக்களும் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க மரபுகளைப் புதுப்பிக்க அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை ஆக்கிரமிப்புக்கள் ஆகியவற்றிற்கும் மற்றும் தொழிற்சாலைகள் மூடல்களை எதிப்பதற்கு தயாராக வேண்டும். அனைத்து தொழிலாளர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளான வேலைகள், வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு கல்வி ஆகியவற்றை பாதுகாத்திட பொதுப் போராட்டம் நடத்த வேண்டும். 2. ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுடன் முறித்துக் கொள்க!தொழில்துறை நடவடிக்கை ஒரு புதிய அரசியல் மூலோபாயத்துடன் இயக்கப்பட வேண்டும்; அது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை தளமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒபாமா நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொழிலாளர்கள் தங்கள் நலன்களைக் காக்க வேண்டும் என்றால், தங்களுடைய சொந்த அரசியல் கட்சியைக் கட்டமைக்க வேண்டும் என்பதைத்தான் தெளிவாகக் காட்டுகின்றன. 3. முதலாளித்துவ அமைப்புமுறையை நிராகரித்து தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தை புதுப்பிக்கவும்! பொருளாதார நெருக்கடி "சுதந்திரசந்தை" சமூக அமைப்பின் மிக உயர்ந்த வடிவமைப்பு என்ற அனைத்துக் கூற்றுக்களையும் அம்பலப்படுத்திவிட்டது. அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களும் முதலாளித்துவத்தின் சரிவினால் ஏற்பட்டிருக்கும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த பொருளாதார முறை தனியார் இலாபங்களைத் தொடர்வதைத் தளமாகக் கொண்டது ஆகும். பொருளாதாரம் சோசலிச மறுசீரமைப்பிற்கு உட்பட வேண்டும் என்பற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இதில் முக்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு பொது உடமையாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வருவது அடங்கும். இந்த உற்பத்தி சக்திகள் சமூகத் தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டுமே அன்றி, தனியார் இலாபத்திற்காக அல்ல. உலகப் பொருளாதாரம் பண வெறி பிடித்த நிதிய அதிகாரத்துவத்தின் மிரட்டலுக்கு உட்படுத்தப்படக்கூடாது. அமெரிக்காவில் நடப்பது உலகம் முழுவதும் நடக்கும் நிலைமகளில் கடுமையான வெளிப்பாடுதான். தொழிலாளர்கள் தங்களைக் பாதுகாப்பதற்கு அவர்களுடைய சர்வதேச ஒற்றுமையின் மூலம்தான் முடியும். பெருநிறுவனங்களும் வங்கிகளும்--அவற்றின் உடந்தையாக தொழிற்சங்கங்களுடன்--தங்கள் நலன்களைக் காக்க பல நாடுகளின் தொழிலாளர்களை ஒருவர்க்கு ஒருவர் எதிராக தூண்டிவிடுவர். இந்த முயற்சிகள் நிராகரிக்கப்பட வேண்டும். ஐரோப்பா, ஆசியா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருக்கும் தொழிலாளர்கள் அமெரிக்க கார்த் தொழிலில் இருக்கும் நெருக்கடியால் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகின் எந்தப் பகுதியும் அந்த பொருளாதார வாழ்ச்சியினால் பாதிக்கப்படாமல் இல்லை. சோசலிச சமத்துவக் கட்சி "உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவத்தின் தோல்வி மற்றும் சோசலிசத்திற்கான வாதம்" என்ற பெயரில் பிராந்திய மாநாடுகளை மிச்சிகன் ஆன் ஆர்பர் (ஏப்ரல்25), நியூ யோர்க் நகரம் (மே 3), கலிபோர்னியா லொஸ் ஏஞ்சல்ஸ் (மே10) ஆகிய இடங்களில் நடத்தவுள்ளது. இம்மாநாடுகள் பொருளாதார நெருக்கடியின் காரணங்கள் பற்றி ஆராய்ந்து உழைக்கும் மக்களின் தேவையை பூர்த்திசெய்யும் ஒரு வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்யும். அவை தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை, அரசியல் அணிதிரட்டலூடாக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒரு தாக்குதலை தொடக்கும். நாடு முழுவதும் இருக்கும் கார்த் தொழிலாளர்களையும் மற்ற தொழிலாளர்களையும் அவற்றில் கலந்து கொள்ளும் திட்டத்தை இன்று தயாரிக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். பிராந்திய மாநாடுகள் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் பங்கு பெறுவதற்கு பதிவு செய்யவும் இங்கு அழுத்தவும். சோசலிச சமத்துவக் கட்சியில் சேருவது பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும். |