World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Great Power divisions persist following G20 summit

G20 உச்சிமாநாட்டை தொடர்ந்து பெரிய சக்திகளின் வேறுபாடுகள் தொடர்கின்றன

By Stefan Steinberg
16 March 2009

Back to screen version

அதிகரித்துவரும் சர்வதேச நிதிய நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் உறுதியான உடன்பாடு எதையும் காண்பதில் G20 நிதி மந்திரிகளினதும் மத்திய வங்கியாளர்களினதும் உச்சிமாநாடு தோல்வி அடைந்தது.

தெற்கு இங்கிலாந்தில் கடந்த வெள்ளி, சனியன்று Horsham ல் நடைபெற்ற இக்கூட்டம் உலகின் பொருளாதார உற்பத்தியில் 85 சதவிகிதத்தை கட்டுப்படுத்த உலகின் முக்கிய நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கியாளர்களை ஒன்றாகக் கொண்டுவந்தது. கூட்டத்தின் நோக்கம் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் நடக்க இருக்கும் நாட்டு தலைவர்களின் G20 உச்சிமாட்டிற்கு தயார் செய்வது ஆகும்.

உலக வங்கியின் தலைவர் ரோபர்ட் ஜோலிக் கொடுத்த எச்சரிக்கையுடன் கூட்டம் தொடங்கியது. உலகின் நாடுகளுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறது என்று அவர் வலியுறுத்திப் பேசினார். 2009ம் ஆண்டு "மிக ஆபத்தான ஆண்டாக உருவாகிக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார். இந்த கஷ்டங்கள் "2010லும் தொடரக்கூடும்" என்று அவர் உரைத்தார். "ஆபத்து வருவதற்கான காரணம் அதிகம் செய்யாதது, அதையும் தாமதித்து செய்வது என்பதால்" என்றார். உலக வங்கி உலகின் பொருளாதாரம் இந்த ஆண்டு 1 - 2 சதவிகிதம் சுருக்கம் அடையும் என்று மதிப்பிட்டுள்ளது.

இரு நாட்கள் மாநாட்டை தொடர்ந்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரெளன் மற்றும் அவருடைய நிதி மந்திரி அலிஸ்டர் டார்லிங் இருவரும் கூட்டத்தின் விவாதங்களை சிறந்த முறையில் அளிக்க முற்பட்டனர். உண்மையில் கூட்டம் எந்த உருப்படியான முடிவுகளையோ அல்லது கொள்கைகளையோ நெருக்கடியை தீர்க்கும் வகையில் முடிவாகக் கூறவில்லை. இறுதி அறிவிப்பு பல தொடர்புடைய நாடுகளுக்கு இடையே இருக்கும் பொருளாதாரக் கொள்கை பற்றி வேறுபாடுகளை மூடிமறைக்கத்தான் உதவியது.

மூன்று முக்கிய பிரச்சினைகள் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரலில் இருந்தன: வங்கிகளை மீட்கவும் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரங்களை மீண்டும் உத்வேகத்தை கொடுக்க முக்கிய பொருளாதார சக்திகள் இன்னும் அதிக ஊக்கப் பொதிகள் அளித்தல், நிதியச் சந்தைகளைக் கட்டுப்படுத்துதல், சர்வதேச நிதிய அமைப்பிற்கு கூடுதலான நிதி அளித்து அதை திவாலை எதிர்நோக்கியிருக்கும் நாடுகளை காப்பாற்றும் வகையில் குறுக்கிடச் செய்தல் என்பனவே ஆகும்.

நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர்கள் வெளியிட்ட அறிவிப்பு ஊக்கம் கொடுக்கும் வகையில், "நாம் முடிவு எடுத்துள்ளோம், ஒருங்கிணைந்த விரிவான நடவடிக்கையை தேவைகள் வேலைகள் ஆகியவற்றை உயர்த்துவதற்கும், மேலும் வளர்ச்சி மீளும் வரை தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கும் தயாராக இருக்கிறோம். அனைத்துவித பாதுகாப்புவரி முறையையும் எதிர்க்க நாங்கள் இணைந்துள்ளோம், அதேபோல் தடையற்ற வணிகம், முதலீடு ஆகியவற்றைக் காக்க உறுதியாக இருக்கிறோம்." என்று கூறினர்.

இந்த அறிவிப்பை கவனமாக ஆராய்ந்தால், எந்த முக்கிய பிரச்சினைகள் பற்றியும் நிதியத் தலைவர்களும் வங்கியாளர்களும் ஒன்றுபட்ட முடிவிற்கு வரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

எந்த உடன்பாடும் முக்கிய நாடுகள் புதிய ஊக்கப் பொதி அளிப்பது பற்றி அடையப்படவில்லை. ஒவ்வொரு நாடும் தன் தேசிய முடிவுகள், மற்றும் முன்னுரிமை அளித்தல் பற்றிய முடிவுகளைத் தானே வைத்துக் கொண்டிருக்கிறது. நிதியச் சந்தைகள் கட்டுப்பாடு பற்றிய அறிக்கைப் பத்தி "கூடுதலான கட்டுப்பாடு", "பெரிய அளவு நிதானமான கண்காணிப்பு", "வலுவான சர்வதேச ஒத்துழைப்பு" என்றெல்லாம் வலியுறுத்தினாலும், இது முன்னேற்றமான கட்டுப்பாட்டை செயல்படுத்தக்கூடிய சர்வதேச புதிய அமைப்பு ஒன்றை நிறுவுவதில் தோல்வி அடைந்துவிட்டது.

சர்வதே நாணய நிதியத்திற்கு (IMF) கூடுதலான நிதி அளிப்பது பற்றி, G20 நாடுகள் நிதியின் ஆதாரங்கள் "கணிமாக" பெருக்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டன; ஆனால் புது நிதிகள் வழங்குவதற்கு எந்த உறுதியும் கொடுக்கவில்லை. இங்கிலாந்து நிதிமந்திரியின் சொற்களில், "ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை பற்றிய உடன்பாட்டை நாங்கள் இலக்காகக் கொள்ளவில்லை."

கூட்டம் பற்றிய அதன் அறிக்கையில், கூடியிருந்த நாடுகளின் இணக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், பைனான்ஸியல் டைம்ஸ் "இக்கூட்டம் எந்த குறிப்பிட்ட புதிய உறுதிகளையும் கொடுக்கவில்லை, இந்த அறிக்கையைக் காணும்போது எந்த நாடும் அல்லது மத்திய வங்கியும் மாறுதலுக்கு உட்படுத்தும் கட்டாயமும் இல்லை." என்று கூறும் கட்டாயத்திற்கு உட்பட்டது.

G20 கூட்டத்திற்கு முதல் வாரம் அட்லான்டிக்கிற்கு இடையிலான அரசியல்வாதிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதத்தை கண்டது. அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய அரசாங்கங்கள்மீது கணிசமான அழுத்தத்தை, குறிப்பாக ஜேர்மனி மீது, அவற்றின் பொருளாதார ஊக்கத் திட்டங்களை அதிகப்படுத்துமாறு கொடுத்தது.

பேர்லினில் இருந்து இதற்கு விடையிறுப்பு ஜேர்மனிய அரசாங்கம் ஏற்கனவே இரு ஊக்கப் பொதித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது என்றும், சதவிகித கணக்கில் இவை அமெரிக்க அரசாங்கம் செலவிட்ட நிதியுடன் ஒப்பிடத்தக்கதுதான் என்றும் கூறியது. ஜேர்மனியில் பொருளாதார அரசு செயலரான வால்டர் ஒட்ரெம்பா கருத்துப்படி, "எங்களுடைய திட்டம், விரைவாக அதைச் செயல்படுத்தியது பற்றி நாங்கள் பாராட்டப்பட்டிருக்கிறோம். நாங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை."

அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள், ஜேர்மனி முன்னிற்க, அவற்றின் கோரிக்கைகளை எழுப்பின. அமெரிக்கா கூடுதலான கட்டுப்பாட்டை சர்வதேச நிதிய மற்றும் வங்கிப் பிரிவுகளில் கொண்டுவர வேண்டும் என்று அவை இயக்கப்பட்டன.

Horsham G20 கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை பேர்லினில் சந்தித்து ஒரு கூட்டு அணுகுமுறைக்கு உடன்படுமாறு கோரினார். கூட்டத்திற்கு பின்னர் சார்க்கோசி ஒரு அறிக்கையில் மேர்க்கெலுடன் தான் ஒற்றுமையைக் காட்டுவதாகவும் அது அமெரிக்க அழுத்தம் பெரிய ஊக்கப்பொதித் திட்டங்கள் வேண்டும் என்பதற்கு எதிராக இருக்கும் என்றும் கூறினார். முக்கிய பிரச்சினை, "வருங்காலத்தில் கட்டுப்பாடு" என்பதாகும் என்று சார்க்கோசி கூறினார்; "இன்னும் அதிக செலவினங்கள் அல்ல."

பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் ஊரக இல்லமான செக்கர்ஸில் வியாழன் இரவு நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை அடுத்து மேர்க்கெல் மீண்டும் குறுகிய காலத்திற்கு இன்னும் அதிக "நிதிய ஊக்கப் பொதிக்கு" இடம் இல்லை என்று கூறிவிட்டார்; மேலும் வருங்கால நடவடடிக்கைகள் பற்றிய முடிவு பேர்லினில் எடுக்கப்படுமே அன்றி G20 ஆல் அல்ல என்றும் வலியுறுத்தினார்.

மேர்க்கெலின் கருத்துக்கள் பிரெஞ்சு நிதிமந்திரி கிறிஸ்ரீன் லகாட் இனால் எதிரொலிக்கப்பட்டன. அவரும் G20 கூட்டத்தில் பங்கு பெற்றிருந்தார். நாடுகள் "ஏற்கனவே தாங்கள் செயல்படுத்தியிருக்கும் திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பீட்டை கொள்ள வேண்டும்", அதற்குப் பின்தான் இன்னும் அதிக செலவு பற்றி நினைக்கலாம் என்று அவர் கூறிவிட்டார்.

Observer இன் கருத்தின்படி மேர்க்கெல் மற்றும் லகார்ட் உடைய கருத்துக்கள் "கூட்டத்திற்கு ஏப்ரல் 3 அன்று G20 உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ள பிரெளன் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுடன் கூட்டாக கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட தகர்த்துவிட்டன. மேலும் ஒபாமாவின் நிர்வாகம் இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை உலகின் பெரிய நாடுகளால் உலகத் தேவையை புதுப்பிக்க முக்கியமானது என்றும் நம்பியது."

வாஷிங்டனுடைய நிதிக் கொள்கை பற்றிய குறைகூறல் மற்றொரு பக்கத்தில் இருந்தும் வெடிப்புடன் வெளிப்பட்டது. கூட்டத்திற்கு முன்பு சீனப் பிரதமர் வென் ஜியாபோ அமெரிக்காவின் பெருகும் கடன் சீனாவின் $1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அரசாங்கப் பத்திரங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கிறது என்று எச்சரித்தார்.

முக்கிய முதலாளித்துவ நாடுகள் கட்டுப்படுத்தும் உடன்பாட்டிற்கு வருவதில் தோல்வியடைந்துள்ளது முக்கிய சக்திகளுக்கு இடையே உள்ள பிளவை நிரூபிக்கிறது. -குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா இவற்றிற்கு இடையே பிளவுகள் வேகமாக கடினமாகி வருகின்றன. வார இறுதியல் நடந்த கூட்டத்தில் இருந்து "உலகந்தழுவிய புதிய உடன்பாடு" (Global New Deal) என்று இந்த மாதம் முன்னதாக பிரெளன் ஒபாமாவிற்கு வாஷிங்டனில் கூறிய கருத்து நடைமுறைக்கு வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த பிளவுகளின் தாக்கங்கள் நீண்டகால விளைவுகளை கொண்டவை. அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே பெருகியுள்ள பிளவு பற்றிய விமர்சனத்தில் இந்த வார Der Spiegel அறிவிக்கிறது: "ஜேர்மனிய-அமெரிக்கப் பூசல் பொருளாதார வல்லுனர்களுக்கு மோசமான நினைவுகளைத்தான் தூண்டுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 1930 களில் உலகப் பொருளாதார நெருக்கடியின்போது ஒரு கூட்டு மூலோபாயத்திற்கு உட்பட இயலாமல் போயின. அதன் விளைவு உலகம் முழுவதும் படர்ந்த வணிகப் போர் ஆகும். அது மந்த நிலையில் பொருளாதாரச்சரிவை விரைவுபடுத்தியது. அது போல் இம்முறையும் நிகழக்கூடாது. வாஷிங்டனில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் உச்சமாநாட்டில் அதைத்தான் தொழில்துறை நாடுகள் உத்தரவாதமாக கூறின. ஆனால், இப்பொழுது, பிளவுகள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய கண்டத்திற்கும் இடையே பெருகியுள்ளது''.

1930களுடன் ஒப்பிடுகையில் ஜேர்மனிக்கும் அமெரிக்கா உட்பட அதன் போட்டியாளர்களுக்கும் இடையே உள்ள பொருளாதார முரண்பாடுகள் பற்றிய தீர்மானம்தான் இரண்டாம் உலகப் போரில் இறுதியில் முடிவுற்றது என்பதை Der Spiegel சுட்டிக்காட்டாமல் விட்டுவிட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved