World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European reactions to the financial crisis
Covering their tracks and distancing themselves from the US

நிதிய நெருக்கடிக்கு ஐரோப்பிய எதிர்விளைவு

தங்களின் அடிச்சுவடுகளை மூடிமறைத்து அமெரிக்காவிடம் இருந்து ஒதுங்கியிருக்கும் முயற்சிகள்

By Peter Schwarz
26 September 2008

Back to screen version

தங்கள் வருமானங்கள், வேலைகள் அல்லது சமூகப் பாதுகாப்பை சமீப ஆண்டுகளில் இழந்த பல ஐரோப்பிய தொழிலாளர்கள் கட்டாயம் பெரும் வியப்பில் தங்கள் கண்களைக் கசக்கிக் கொள்ள வேண்டும்: சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டின்மீதும் நிதிய மூலதனம் கொண்டிருந்த மேலாதிக்கம், "விசைகொண்ட முதலாளித்துவம்" ("Turbo-Capitalism") முற்றிலும் பிரத்தியேகமாக ஆங்கிலோ-அமெரிக்கக் கண்டுபிடிப்பு ஆகும், இதனை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் நீண்ட காலமாக எதிர்த்து வந்துள்ளன.

ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு செய்தி ஊடகத்தில் வெள்ளப் பெருக்கென பல கட்டுரைகள் இந்த வழிவகையை வாதிட்ட வண்ணம், சர்வதேச நிதிய நெருக்கடிக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் வெளிவந்துள்ளன. நிதியச் சந்தைகளின் நலன்களுக்காக தங்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நேற்று தொழிலாளர்களுக்கு சொற்பொழிவாற்றிய ஆசிரியர்கள் பொறுப்பற்ற மற்றும் அயோக்கியத்தனமான நிதிய ஊகவணிகர்களை கண்டனம் செய்வதில் இப்பொழுது ஒருவரை ஒருவர் விஞ்சுகின்றனர்.

இத்தகைய வண்ணனைகளுக்கான தொனி அரசாங்கத் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில், ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பிழைகள் மற்றும் தடையாய் இருப்பதற்காகக் குற்றம் சாட்டினார். Münchner Merkur செய்தித்தாளிடம் அவர் கூறியது: "நிதியச் சந்தைகளின் மெத்தன அணுகுமுறை பற்றி நான் குறைகூறுகிறேன்--துரதிருஷ்டவசமாக அவை நீண்ட காலமாக தானே உவந்து கட்டுப்பாடுகளை ஏற்பதை எதிர்த்துள்ளன; அதுவும் இங்கிலாந்து, அமெரிக்க அரசாங்கங்களின் ஆதரவுடன்." பின்னர் பண விவகாரங்களில் இன்னும் கூடுதலான வெளிப்படைத் தன்மைக்கு தான் சொந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் மற்றும் ஹெட்ஜ் நிதிகளுக்கான புதிய மதிப்பிடல் முறைகளை வலியுறுத்தியதாகவும் அறிவித்தார்; ஆனால் இந்தத் திட்டங்கள் ஆங்கிலோ-சாக்சன் கூட்டின் ஆதரவைப் பெறவில்லை.

ஆஸ்திரிய நகரமான Linz ல் நடந்த கூட்டம் ஒன்றில் மேர்க்கெல் மறைமுகமாக புஷ் அரசாங்கத்தை மற்ற தொழில்துறை நாடுகளையும் கடன் நெருக்கடியில் இழுப்பது பற்றிக் குற்றம் சாட்டினார். புஷ்ஷின் அரசாங்கம் இதையொட்டி வங்கித் துறைக்காக ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை "தேசிய சட்டம் என மாற்றியுள்ளது; இது சிறு வணிக அடுக்குகளுக்கு விரோதப் போக்கு கொண்டது என்றாலும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது." அவர் தொடர்ந்து கூறினார்: "நெருக்கடி நாள் வந்தபோது அமெரிக்கர்கள் கூறினர்: நாங்கள் இல்லை. இத்தகைய போக்கு சர்வதேச உறவுகளில் பொறுத்துக் கொள்ள முடியாதது ஆகும்." இதன் விளைவுகள் இப்பொழுது அமெரிக்கா மற்றும் கிரேட் பிரிட்டனுக்கு அப்பாலும் இருக்கும் வரிப் பணம் செலுத்துபவர்களால் ஏற்கப்பட வேண்டியதாக உள்ளது என்று மேர்க்கெல் குறைகூறினார்.

வியாழனன்று ஜேர்மனிய நிதி மந்திரி பீட்டர் ஸ்ரைன்புரூக் பூசலில் சேர்ந்து கொண்டு அமெரிக்காதான் நெருக்கடிக்குக் காரணம் என்று அறிவித்தார். ஜேர்மனிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்றில் ஸ்ரைன்புரூக் அறிவித்தார்: "இனி உலகம் முன்போல் இருக்காது...உலக நிதிய முறையில் பெரும் சக்தி என்ற தன் அந்தஸ்தை அமெரிக்கா இழந்துவிடும்."

புதனன்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி நியூ யோர்க்கில் ஐ.நா. பொதுமன்றத்தில் பேசியதுடன், "நிதிய முதலாளித்துவத்தின் நெறிகள் விரைவாக முன்னேற்றுவிக்கப்பட வேண்டும்... உலகந்தழுவிய முறை இருப்பதற்கு அதன் கட்டுப்பாடுகளை அனுமதிக்கும் நிறுவன அமைப்புக்களை கொண்டு சரிசெய்யும் தேவையை நீண்ட காலமாக நிறுத்திவைத்து விட்டோம்" என்று மாற்றங்களை கோரினார்.

ஐ.நா. உரைக்கு முன்னதாக, சார்க்கோசி நிதியத் தலைநகரின் உயர்ந்த உணவு விடுதி ஒன்றில் Elie Wiesel Foundation அளித்த "Humanitarian Award" ஐ ஏற்றுக் கொள்ள வரவேற்பு ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி "நிதிய பேரழிவிற்கு பொறுப்பானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று கோரினார்.

800 விருந்தினர்களில் ஜனாதிபதியின் பெரும் செல்வக் கொழிப்பு உடைய நண்பர்கள், வணிக, நிதிய உயரடுக்கில் இருப்பவர்கள், செய்தி ஊடகத்தை சேர்ந்தவர்கள், சார்க்கோசியின் விடுமுறைகள் பவற்றிற்கு பணம் கொடுத்திருந்த சொத்துக்கள் பிரபுவான Martin Bouyges ஆகியோர் இருந்தனர். கன்சர்வேடிவ் நாளேடான Figaro பின்னர் சார்க்கோசியின் கூற்றுக்கள் "தக்க நிதானத்துடன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நெருக்கடித் தொடக்கத்திற்கு யார் குற்றம் என்று எவரும் அடையாளம் காணப்பட முடியாது; அல்லது இப்படிக் கூறலாம், ஏராளமானோர் தொடர்பு கொண்டிருப்பதால் அனைவரையும் சிறையில் தள்ள முடியாது."

இடது மற்றும் கன்சர்வேடிவ் செய்தி ஊடகம் "ஆங்கிலோ-சாக்ஸன் நிதிய முதலாளித்துவத்தின்" தீமைகளை இப்பொழுது கண்டுபிடித்துள்ளது. சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.

செப்டம்பர் 23ம் தேதி Spigel-Online வொல்ப்காங் காடென் கொடுத்துள்ள நீண்ட பகுப்பாய்வை வெளியிட்டது; அவர் "வோல் ஸ்ட்ரீட் எஜமானர்கள் தங்கள் நலனுக்கு ஏற்ப விதிகளை ஆணையிடுவதில் இருந்ததொரு அடிப்படை மாற்றம் தேவை... இதில் எந்தவிதத் தடைகளும் இருக்கக்கூடாது; அகப்பட்டதை சுருட்டிக் கொள்ள பேராசை பிடித்து அதை அடைய நினைப்பவர்களுக்கு இனி பொதுவாக ஏற்கபட்டுள்ள வடிவமைப்புக்கள் கூடாது."

"ஆங்கிலோ-சாக்ஸன் நிதிய முதலாளித்துவம்" பெருகிய முறையில் கடந்த 10, 15 ஆண்டுகளாக சமூகத்தின் முக்கியக் கூறுபாடாக இருந்துள்ளது. காடென் தொடர்கிறார்: "முதலீட்டு வங்கியாளர்களின் சக்தி தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது வணிக உலகத்தின்மீது சமூகம் கொண்டிருந்த நம்பிக்கை அரிப்பு அதிகமாகிவிட்ட நிலைமையைக் கொண்டுவந்து விட்டது. போட்டியிடும் பொருளாதாரம் என்று பொதுவாகக் கூறப்படுவது பேராசை பிடித்த ஒரு சமூகம் என்று இழிந்து விட்டது. இங்கு ஒவ்வொருவரும் பிறரை ஏமாற்றுகின்றனர்;முதலீட்டாளர்களுடைய சேமிப்புக்கள் அபகரிக்கப்படுகின்றன; பில்லியன் மதிப்பு உடைய செல்வக் கொழிப்புக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன அல்லது மதிப்பற்ற பத்திரங்களால் அழிக்கப்படுகின்றன; முதலீட்டூ வங்கியாளர்களும், நிர்வாகிகளும் சிறிதும் தடையற்ற முறையில் தங்களைச் செல்வக் கொழிப்பு உடையவர்களாகச் செய்து கொண்டு விட்டனர்."

அதே தினத்தில் Suddeutsche Zeitung நிதியத் துறையில் உள்ள "அயோக்கியத்தனமான, பொறுப்பற்ற உறுப்பினர்கள்" பற்றிக் குறைகூறியது. "முற்றிலும் ஆபத்து நிறைந்த ஊகங்களால், அவர்கள் உலகம் முழுவதின் நல்ல நிலைமையை ஆபத்திற்கு உட்படுத்துகின்றனர்; தங்கள் வணிகம் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை: விளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவும் இல்லை." "நிதியத் துறைக்கு முதலில் இவ்வளவு அழிப்பு சக்தியைக் கொடுத்திருப்பதே பெரிய தவறு ஆகும்... கட்டுப்பாடு இல்லாத தன்மை, கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்படாத நிலைமை, குறிப்பாக அமெரிக்காவில்" என்பதுதான் முதலில் நெருக்கடி வந்ததற்கே காரணம் ஆகும்.

பிரெஞ்சு இடது தாராள நாளேடான Liberation தெரிவித்த கருத்தாவது: "ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தாலிபான்கள் ஆண்டவன் கொடுத்த நிதியச் சந்தையின் எச்சரிக்கைகளை புறக்கணித்துள்ளனர் அனைத்து முரண்பாடுகளையும் புறக்கணித்துள்ளன; எந்தக் கட்டுப்பாட்டு முயற்சியையும் நிராகரித்தனர். இதன் விளைவு; ஆண்டவன் கொடுத்த சந்தை ஒரு பெரிய அரக்கனை தோற்றுவித்துவிட்டது; Frankenstein ஐப் போல் இப்பொழுது அது கட்டுப்பாட்டை மீறி நிற்கிறது."

கன்சர்வேடிவ் Figaro அறிவித்தது: "தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ அடிப்படைவாதிகள், தங்கள் அத்துமீறல்களையும் திருத்திக் கொள்ளுபவர்கள், மீண்டும் சாம்பலில் இருந்து பினிக்ஸ் எழுவது போல் எழுவர்; இவர்கள் பொதுமக்களுக்கு ஏற்ப இசைந்து நடந்து கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியில் "ஆக்கபூர்வ அழிப்பு" என்ற பெரிய கோட்பாடுகள் அவற்றின் வரம்பை அடைந்துவிட்டன; அமெரிக்க அதிகாரிகள் குறுக்கீடு இல்லாமல், இந்த அழுகிய கருவி தேசியமயமாக்கப்பட்டுள்ளது முழு முறையே உள்வெடிப்பிற்கு உட்படுத்தக்கூடும்."

தன்னுடைய ஐ.நா. உரையில் சார்க்கோசி "ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முதலாளித்துவத்திற்கு ...நிதிய நடவடிக்கை முழுவதும் சந்தையில் பங்கு பெறுபவர்களின் நல்லெண்ணத்திற்கு விட்டுவிடாமல் ...வங்கிகள் நிதியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய ஊகத்திற்கு அல்ல என்ற விதத்தில் இருக்கும் முதலாளித்துவத்திற்கு" அழைப்பு விடுத்தார்.

"நெறிப்படுத்தப்பட்ட முதலாளித்துவம்" என்ற பிரமை

ஆபத்தான ஊக நடவடிக்கைகளை குறைத்தல், நிதிய மூலதனத்தின் அளவை குறைத்து அதிகாரத்தை குறைத்தல் மற்றும் உற்பத்தி, வணிகத்திற்கு முன்னுரிமை கொடுத்தல் என்ற விதத்தில் "நெறிப்படுத்தப்பட்ட முதலாளித்துவ" வடிவமைப்பிற்கான அழைப்பு என்பது, அனைத்து செய்தி ஊடகம், அரசியல் வாதிகளின் வகைகளில் இருக்கும் பல கருத்துக்கள், அறிக்கைகளில் தொடர் இழைபோல் உள்ளது. ஆனால் இது ஒரு பொய்த் தோற்றம் ஆகும்.

வரலாற்று கடிகாரத்தை மீழ சுழற்சி செய்யமுடியாதது. நிதிய மூலதனத்தின் புற்றுநோய் போன்ற வளர்ச்சி தனிநபர்களின் தவறான முடிவுகளால் விளைந்தது அல்ல. பேராசை மற்றும் குற்றம் சார்ந்த நோக்கங்கள் நிச்சயமாய் பங்களிப்பு செயதுள்ளன என்றாலும் இவை சமூக நிலைமைகளில் வேர்களைக் கொண்டுள்ளன; இவை சமூகத்தை ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு உட்படுத்துவதின் மூலம்தான் கடக்கப்பட முடியும்.

நிதியச் சந்தைகளின் கட்டுப்பாட்டை அகற்றியது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது; இது உலகெங்கிலும் இருக்கும் முதலாளித்துவ வர்க்கம் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் 1960,1970 களின் வர்க்கப் போர் ஆகியவற்றை எதிர்கொண்ட விதத்தில் இருந்து வந்தது ஆகும். இருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றியது மற்றும் புதிய வகை ஊகங்கள வளர்த்தது என்பவை சரியும் இலாப விகிதங்களைக் கடப்பதற்கு வந்த புதிய வடிவமைப்புக்கள் ஆகும். இவை தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது இடைவிடாத் தாக்குதலுடன் தொடர்நதன; அதே போல் பெருகிய முறையில் இராணுவ இலக்குத் திசைவழி கொண்ட ஆக்கிரோஷ வெளியுறவுக் கொள்கையினாலும் வளர்ந்தன.

கடந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியத் துவக்கத்தில், முதலாளித்துவ வளர்ச்சி தவிர்க்க முடியாமல் ஏகபோக உரிமைகளின் வளர்ச்சிக்கும் நிதிய மூலதனத்தின் மேலாதிக்கத்திற்கும் வழிவகுத்தது. அந்தத் துவக்க ஆண்டுகளிலேயே நிதிய தன்னலக்குழு, "அனைத்துத் தற்கால முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார, அரசியல் நிறுவனங்கள்மீது அடர்த்தியாக பிணைந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது" என்று லெனின் எழுதினார்.

நிதிய தன்னலக்குழு அதன் அதிகாரங்களை தானாகவே விட்டுக் கொடுக்காது. தன்னுடைய சலுகைகள் நிறைந்த நிலைமையை சமூகம் முழுவதயும் பேரிருள் பள்ளத்தில் தள்ளாமல் அது கைவிடாது. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதை நன்கு அறியும்; எனவே அவை தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ளுகின்றன; இது அவை நிபந்தனையற்ற முறையில் புஷ் நிர்வாகத்தின் "மீட்புத்திட்டம்" என்ற அழைப்பதற்கு கொடுக்கும் ஆதரவில் தெரியவரும்.

ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவற்றின் நிதி மந்திரிகள் $700 பில்லியன் நிதி என்று அமெரிக்க அரசாங்கம் வங்கிகளின் நச்சுக் கடன்களை வாங்குவதற்கு தேவையான பணத்திற்கு நன்கொடை அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் திங்களன்று நடந்த தொலைபேசி கூட்டத்தில் ஏழு முக்கிய தொழில்நாடுகளின் அரசாங்கங்கள் ஒருமனதாக புஷ் நிர்வாகத்தின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து சர்வதேச நிதிய முறையின் உறுதிப்பாட்டிற்கு உதவும் "எந்த முயற்சியையும்" தாங்கள் எடுக்கத் தயாராக உள்ளோம் என்பதையும் நிபந்தனையற்ற முறையில் அறிவித்தன.

அமெரிக்க அரசாங்கத்தின் திட்டம் அரசாங்க நிதியை வங்கிகளுக்குக் கொடுத்து அவை தங்கள் செல்வக் கொழிப்பு களியாட்டத்தைத் தொடர உதவும் வகையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இப்பொழுது $700 பில்லியன் பணத்தைக் கொடுப்பற்குப் பொறுப்பாக இருக்கும் நிதி மந்திரி ஹென்ரி போல்சன் வோல்ஸ்ட்ரீட் வங்கி ஒன்றின் தலைவராக இருந்தார்; அவருடைய சொந்த சொத்துக்கள் அரை பில்லின் டாலர்களுக்கும் மேலானவை ஆகும். "ஒரு மருந்து ஆலோசகருடைய பணி, போதை மருந்துகளுடைய மாஃபியாவுடன் ஒப்பந்தம் கொண்ட தன்மை போல் இது உள்ளது" என்று Süddeutsche Zeitung TM Nikolaus Piper எழுதியுள்ளார்.

இத்திட்டம் நிதிய மூலதனத்தைத் தடுக்கும் அல்லது வங்கிகளைத் தேசிய மயமாக்குவதில் ஒரு அடி எடுத்து வைத்தல் என்று கூறுவது முற்றிலும் வெகுளித்தனம் ஆகும். முழு விவகாரமும் அரசாங்கத்தையே தனியார் மயமாக்கியதைத்தான் நெருக்கமாக ஒத்திருக்கிறது; ஏனெனில் தன்னுடைய ஆதாரங்களை அரசாங்கம் நிதிய மூலதனம் சூறையாடுவதற்கு கொடுக்கிறது.

அடிச்சுவடுகளை மறைத்தல்.

ஐரோப்பிய தலைவர்களால் செய்யப்படும் "ஆங்கிலோ-அமெரிக்க நிதிய முதலாளித்துவத்திற்கு" எதிரான பிரச்சாரம் முக்கியமாக தங்கள் சுவடுகளை மறைப்பதற்குத்தான் உதவும். ஜேர்மனிய அரசாங்கங்கள் கெஹாட் ஷ்ரோடர் மற்றும் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஜாக் சிராக் மற்றும் நிக்கோலோ சார்க்கோசியின் கீழ் பிரெஞ்சு அரசாங்கம் ஆகியவை இந்த "ரேர்போ முதலாளித்துவத்தை" பல ஆண்டுகள் ஏற்க வேண்டிய முன்மாதிரி எனப் புகழ்ந்ததை அனைவரும் மறந்துவிட்டதாக நினைக்கிறது. ஜேர்மனியில் தொழிலாளர் சட்டங்கள் சீர்திருத்தம், வேலைச் சந்தை கட்டுப்பாடுகளில் இருந்து அகற்றப்பட்டது, சமூக செலவீனத்திட்டங்கள், சுகாதாரம் ஆகியவற்றின் செலவுகள் குறைக்கப்பட்டது, இடைவிடாமல் தொழிலாளர்கள் ஊதியங்கள் குறைக்கப்பட்டது, உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் ஊதியங்கள் உயர்த்தப்பட்டது இவை அனைத்தும் எப்பொழுதும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சூழலை ஏற்படுத்தத் தேவை என்று கூறி நியாயப்படுத்தப்பட்டடன.

மேலும், ஐரோப்பிய வங்கிகள் ஆபத்து நிறைந்த ஊகச் செயல்களை தாங்களே செய்யவும் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. Deutsche Bank ன் தலைவரான Josef Ackermann, High Street வணிகம் என்று சொல்லப்படுவதை கைவிட்டு, முற்றிலும் முதலீட்டு வங்கியில் குவிமையப்படுத்த விரும்பினார். இன்று அவர் அதில் வெற்றிபெறவில்லை என்பது பற்றி மகிழ்ச்சி அடையலாம். IKB எனப்படும் Deutsche Industriebank பல பில்லியன் டாலர்களை அமெரிக்க நிலச் சொத்துக்களில் ஊதாரித்தனமாக செலவழித்தது. அதற்குப் பின் அரசாங்கம் IKB க்கு வரி செலுத்துபவர் பணத்தில் இருந்து பணம் கொடுத்தது; இப்பொழுது அது அடிமட்ட விலைக்கு அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான Lone Star ஐ விற்கப் பார்க்கிறது.

பெருகிய முறையில் பொருளாதார வல்லுனர்கள் நிதிய நெருக்கடி விரைவில் சர்வதேச மந்த நிலையாக வளர்ச்சி பெறும் என்று நம்புகின்றனர். முக்கிய பிரெஞ்சு வங்கி Societe Generale இன் தலைமை மூலோபாய அதிகாரியான Albert Edwards, நிதிய நாளேடான Handelsblatt இடம் கூறினார்: "இதன் விளைவு ஆழ்ந்த மந்தநிலை ஆகும்; இதைப்பற்றி எவரும் ஒன்றும் செய்வதற்கில்லை." இந்த மந்த நிலை, எட்வார்ட்ஸின் கருத்தின்படி அமெரிக்காவையும் பிரிட்டனையும் தாக்குவது மட்டும் இல்லாமல், யூரோ பகுதியையும் வளர்ந்துவரும் நாடுகளையும் தாக்கும்; ஏற்றுமதிப் பொருட்களுக்கான தேவையில் ஏற்படும் சரிவினால் வியத்தகு முறையில் பாதிப்பிற்கு ஆளாகும்.

ஒரு தீவிர பெரு மந்த நிலையில் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை ஒட்டி, ஜேர்மனி, பிரான்ஸ் அரசாங்கங்கள் தங்களுக்கும் வோல்ஸ்ட்ரீட்டிற்கும் இடையே இடைவெளி வைத்துக் கொள்ளுவதில் சிறப்பு இருப்பதாக நினைக்கின்றன; குறைந்தபட்சம் வெளிப்பார்வைக்கேனும் இல்லாவிடில் குற்றம் சார்ந்த நிதிய ஊகக்காரர்களின் திரித்தல் செயல்கள் பற்றிய சீற்றம் தங்களுக்கு எதிராகத் திருப்பப்படும் என்று நினைக்கின்றன.

ஆனால் மற்றொரு காரணமும் அமெரிக்காவில் இருந்து குறிப்பிட்ட முறையில் ஒதுங்கிக் கொள்ளுவதற்கு உள்ளது; இது பல செய்தி ஊடகக் கருத்துக்களில் வெளிவந்துள்ளது. மேற்கின் முந்தைய "பாதுகாப்பு சக்தியின்" பொருளாதாரச் சரிவைக் கருத்திற் கொண்டு ஐரோப்பிய உயரடுக்கு அதன் செல்வாக்கில் இருந்து தப்பித்து தத்தம் நலன்களைச் சுதந்திரமாகத் தொடர விரும்புகின்றன.

"அமெரிக்கா தன் அதிகாரத்தில் ஒரு சரிவை அனுபவிக்கிறது; நிதிய நெருக்கடி என்பது இதன் அடையாளங்களில் ஒன்றுதான். ஐரோப்பா இன்னும் கூடுதலான பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று முன்னாள் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷர் தன் சமீபத்தியக் கட்டுரையைத் தொடங்கியுள்ளார்; எப்பொழுதும் போல் இவர் ஜேர்மனிய அரசாங்க வட்டாரங்களில் இருக்கும் சிந்தனையைத்தான் கூறியுள்ளார்.

பனிப்போர்க்கால மூத்தவர், 80 வயாதான ஹெர்பெர்ட் க்ரெம்ப் Die Welt ல் தன்னுடைய கருத்துக்களுக்கு கொடுத்த தலைப்பாவது: "நெருக்கடியின் விளைவுகள்: ஐரோப்பா பழைய முன்மாதிரியை கைவிடுகிறது: அமெரிக்காவை." இதைப்பற்றி கிரெம்ப் வருத்தம்தான் கொள்ளுகிறார்; ஆனால் இது தவிர்க்க முடியாதது என்றும் கருதுகிறார்." சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு நீண்டகால புவி-அரசியல் மூலோபாயத்தை மேற்கொள்வதற்கு பதிலாக, இன்னும் அதிகமான முறையில் எரிவாயு, எரிபொருளை அடைவதற்கான ஆர்வம் பெருகும்" என்று அவர் எழுதியுள்ளார்; அதாவது அட்லான்டிக் கடந்த உடன்பாட்டை விட என்ற பொருளில் அர்த்தப்படுத்தினார்.

ஜனாதிபதி சார்க்கோசி இன்னும் சொல்லப்போனால் அவரது ஸ்தூலமான ஐ.நா பேச்சுக்களில் இரு ஸ்தூலமான புள்ளிகளை வழியுறுத்தினார். ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நெருக்கமான பங்காண்மை, மற்றும் ஒரு பொது ஐரோப்பிய ரஷ்ய பொருளாதாரப் பகுதி மற்றும் G8 இன் விரிவாக்கம் (ஏழு முக்கிய தொழில்துறை நாடுகளும் ரஷ்யாவும்) சேர்ந்து, சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா, மெக்சிகோ, பிரேசிலையும் சேர்த்த வகையில் G14 ஆகும். இவை இரண்டும் அமெரிக்க சக்தியைக் குறைக்கும் என்ற பொருளைத் தரும்.

இப்படி அமெரிக்காவில் இருந்து பிரித்துக் காட்டுவதில் உடன்பாடானது எதுவுமல்ல- சக்திகளுக்கு இடையே ஒருவேளை தவிர்க்க முடியாமல் இது பூசல்களை பெருக்கக்கூடும்; ஐரோப்பிய நாடுகளை ஒன்றுக்கொன்று விரோதப் படுத்தக்கூடும். நிதிய மூலதன ஆதிக்கத்திற்கு எதிரான உண்மை எதிர்ப்பு என்பது ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின்- அடிப்படையில் அமெரிக்க தொழிலாளர்கள் உள்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் மூலம்தான் வளர்த்தெடுக்கப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved