World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The international financial crisis and illusions in a purified capitalism

ஒரு மாசற்ற முதலாளித்துவத்தின் சர்வதேச நிதிய நெருக்கடியும் பிரமைகளும்

By Peter Schwarz
22 September 2008

Back to screen version

லெஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டு வங்கி சரிவுற்று ஐந்து நாட்களுக்கு பின்னரும் கூட சர்வதேச நிதிய நெருக்கடியின் பரப்பும் விளைவுகளும் முற்றிலும் கணக்கிடப்பட முடியாதவையாக உள்ளன. எந்த ஒரு நாடும் அல்லது கண்டமும் இந்த நெருக்கடியில் இருந்து விதிவிலக்குப் பெறவில்லை.

ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான Macquarie திவாலாகிவிடக் கூடிய அச்சுறுத்தலை கொண்டுள்ளது. ரஷ்யா கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆழ்ந்த நிதிய நெருக்கடியை அனுபவித்து வருகிறது; ஆசிய பங்குச் சந்தைகள் மிகப் பெரிய இழப்புக்களை பதிவு செய்துள்ளன ஐரோப்பாவில் ஒன்றை தொடர்ந்து ஒன்று மோசமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அரசாங்க செய்தித் தொடர்பாளர்கள் நம்பிக்கையை பரப்பும் விதத்தில் பேசினாலும், உண்மை வேறுவித நிலைமையை சித்தரிக்கிறது. ஏற்கனவே ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு வங்கிகள் லெஹ்மன் பிரதர்ஸ் சரிந்தபின் பெற்ற இழப்பு பல பில்லியன் யூரோக்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஜேர்மனிய வாராந்திர ஏடு Die Zeit தற்கால நிதியக் கருவிகளின் சிக்கல் வாய்ந்த தன்மையை சுட்டிக் காட்டி, இழப்புக்களின் உண்மையான பரப்பை அறிவதற்கு பல வாரங்கள் பிடிக்கலாம் என்று எழுதியுள்ளது: "இனிமேல்தான் இன்னும் மோசமானது பற்றி தெரியவரலாம்; ஏனெனில் பல இழப்பாளர்கள் சிறிது காலத்திற்குப் பின்தான் அவர்களுக்கே தெரியும் என்ற நிலையில் இருக்கின்றனர்." என்று அது எழுதியுள்ளது.

அனைத்து தீவிர பொருளாதார கருத்துரைகளும் நெருக்கடியின் முடிவு ஏற்பட்டுவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்ளுகின்றன. "கடந்த 24 மணி நேரத்தின் மிக அச்சுறுத்தும் கூறுபாடு மத்திய வங்கியாளர்கள் நிதி மந்திரிகள் ஆகியோர் நெருக்கடியின் மீது இறுக்கமான பிடியைக் கொண்டுவிட்டனர் என்ற நம்பிக்கை வியத்தகு அளவில் காற்றோடு கரைந்துவிட்டது என்பதாகும்" என்று நாளேடான Die Welt வியாழனன்று எழுதியது. பிரிட்டிஷ் வணிக ஏடான பைனான்சியல் டைம்ஸ் அதே தினத்தில், "'1929க்குப் பின் மிக மோசமான உலக நிதிய நெருக்கடியில் நாம் உள்ளோம் என்பதில் கேள்விக்கு இடமில்லை. இன்னும் எத்தனை வங்கிகள், நிறுவனங்கள் சரியும் என்பது பற்றி நமக்கு இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை." என்று எழுதியது.

வியாழனன்றும் வெள்ளியன்றும் பங்குச்சந்தைகள், அமெரிக்க மத்திய வங்கி, சந்தைகளில் 180 பில்லியன் டாலர்களை இறைத்ததும் ஏற்றம் பெற்றன. ஆனால் இந்த பிரம்மாண்டமான நிதிய உட்செலுத்தலை சில கருத்துரைகள் "திகைப்பில் செய்யப்பட்ட செயல்கள்" என்று கூறுகின்றன, இது நெருக்கடியின் பரப்பையும் அது எந்த வகைத் தீர்வை வழங்கும் என்பதை விட அதனால் முயற்சி செய்யப்பட்ட பீதியின் பரப்பையும் பற்றியுமே அதிகம் கூறுகிறது.

இந்த நிதிய நெருக்கடி தொடர்கையில், இதன் விளைவுகள் பெருகிய முறையில் நாட்டு உற்பத்தி, வணிகம், நுகர்வு ஆகியவற்றில் உணரப்படுகின்றன. நிதியச் சந்தைகள் முற்றிலும் வெடிக்கும் என்ற நிலை வராவிட்டாலும், உலகப் பொருளாதாரத்தில் ஒரு ஆழ்ந்த பெருமந்த நிலை என்பது அநேகமாக வரக்கூடியது என்றுதான் உள்ளது.

பணமாக மாற்றம் தன்மையில் பற்றாக்குறை மற்றும் வட்டி விகிதத்தில் அதிகரிப்பு என்பது கணக்கிலடங்கா நிறுவனங்களை திவால் நிலைமைக்குத் தள்ளும்; அதையொட்டி நிதிய நெருக்கடி இன்னும் தீவிரமாகும். பெருகிய முறையில் வேலையின்மை, விலை உயர்வு, ஊதியங்கள் சரிவு மற்றும் கூடுதலான திவால்கள் ஆகியவை தீய வட்டம் என்று விளைவைக் காட்டும்.

இதைத்தவிர பங்குச் சந்தைகள் அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் உட்செலுத்தி மூன்று இலக்க பில்லியன் பணம் வரி செலுத்துவோரிடம் இருந்து வரவேண்டும். பட்ஜெட் பற்றாக்குறைகளில் விரைவான அதிகரிப்பு என்பது இன்னும் அதிகமாக சமூக, பொதுநலச் செலவுகள் குறைக்கப்படுவதற்கு வகைசெய்யும்.

கடந்த ஆண்டுகளில் மகத்தான ஊகக் குமிழியின் வளர்ச்சியுடன் முன்னோடியில்லாத வகையில் சமூகப் பிளவும் செல்வம் கொழித்தவர்களுக்கும் வறுமையில் இருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. இப்பொழுது இந்த வழிவகை இன்னும் மிகப் பெரிய அளவை இக்குமிழிச் சரிவினால் அனுபவிக்க நேரிடும்.

இதன் விளைவு கடுமையான எதிர்ப்பும் உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைதலும் ஆகும். சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப்பின் ஒரு அரச மதத்தின் தரத்திற்கு உயர்த்தப்பட்ட தடையற்ற சந்தை பற்றிய கருத்தியல், பிரதான வோல் ஸ்ட்ரீட் வங்கிகளின் சரிவை ஒட்டி சீர்செய்ய முடியா பாதிப்பிற்கு ஆளாகி விட்டது. இந்த சூழலில் சமூக எதிர்ப்பு என்பது தவிர்க்க முடியாமல் முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் இடதுசாரி வடிவத்தை எடுப்பதற்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ச்சியும் அச்சமும்

இந்த பின்னணியில்தான் ஐரோப்பிய செய்தி ஊடகத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிதிய நெருக்கடிகளின் விளைவுகள் பற்றிய விவாதத்தை அறிந்து கொள்ள வேண்டும். இந்த விவாதம் ஒரு புறத்தில் நடந்து விட்ட சரிவு பற்றிய அதிர்ச்சி ஒரு புறம், நெருக்கடிக்கு விளைவு புரட்சி வடிவங்களை அடையக் கூடுமோ என்ற அச்சம் மறு புறம் என்ற நிலையில் உள்ளது.

மரபார்ந்த கன்சர்வேட்டிவ் செய்தி ஊடகத்தில்கூட, தடையற்ற சந்தையை மனித நாகரிகத்தின் மிக உயர்ந்த சாதனை என்று இதுகாறும் புகழ்ந்த ஏடுகளில்கூட, உலகந் தழுவிய இயக்கங்களை எதிர்க்கும் ஆசிரியர் குழுக்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் போல் பல வந்து கொண்டிருக்கின்றன.

"நிதிய-மூலதனம் முடிந்துவிட்டதா?" என்று வினாவை Die Zeit எழுப்பி, கணித்துக் கூறுகிறது; "ஆங்கிலோ-சாக்ஸன் நிதியத் தொழில் உலக ஆதிக்கத்தை கொண்டிருப்பது முடிந்துவிடும்."

Frankfurther Allgemene ல் எழுதும் Franck Schirmacher அறிவிப்பதாவது: "திங்களன்று வரை கூட கவனிக்கப்படாமல் பல பைத்தியக்காரர்கள் நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும்; ஏனெனில் அவர்களுடைய பைத்தியக்காரத்தனம் நிறுவப்பட்ட அமைப்பு முறையின் தர்க்கத்தோடு முழுமையாய் ஒத்ததாக இருந்தது. அவர்கள் முழு தேசிய பட்ஜெட்டிற்கும் சமமான செல்வங்களை அழித்துவிட்டனர்."

Die Welt குறைகூறுகிறது: "பேராசையும் முட்டாள்தனமும் சந்தையை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டன --மேலாளர்களும் நிதிய கண்காணிப்பாளர்களும் தோல்வியுற்றுள்ளனர்." ஏடு தொடர்கிறது: "முதல் அரையாண்டு படிக்கும் எந்த மாணவரும் பொருளாதார மாணவரும் அமெரிக்கப் பொருளாதாரம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல என்ற முடிவிற்கு வந்திருக்கக் கூடும்."

ஆனால் இந்த வர்ணனையாளர்கள் "ஆங்கிலோ-சாக்ஸன் நிதிய மூலதனத்தின்" "கொள்கை முறைதான்" நெருக்கடிக்குப் பொறுப்பு என்று கூறினாலும், தனிநபர்களின் "பேராணை, முட்டாள்தனம்தான்" காரணம் என்றாலும், முதலாளித்துவத்திடம் இருந்து இன்னும் சிறந்த, கூடுதலான கட்டுப்பாட்டிற்குட்பட்ட, நியாயமான முதலாளித்துவ வடிவமைப்பு வரக்கூடும் என்ற போலித் தோற்றத்தைத்தான் பரப்புகின்றனர்.

Die Welt எழுதுகிறது: "தற்போதைய நெருக்கடி அரசாங்கம் மற்றும் பொருளாதாரங்களில் பல இடங்களில் முழு தோல்வி அடையப்பட்டதின் விளைவு ஆகும்... ஆனால் சந்தைப் பொருளாதாரம் மட்டும் நிதிய நெருக்கடிக்குக் காரணம் அல்ல; மாறாக சந்தையில் பொறுப்பு உடைய முக்கிய நபர்கள், சந்தையை கண்காணிக்கும் நபர்களும் நிறுவப்பட்ட பொருளாதார விதிகளை பின்பற்றவில்லை அல்லது அத்தகைய விதிகள் இனி பொருந்தாது என்று நினைத்து விட்டனர்."

இத்தகைய ஆராய்ச்சி முறை வெள்ளியன்று Suddeutsche Zditung TM "A purified capitaism" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை ஒன்றில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் Heribert Prantl, "விசை கொண்ட முதலாளித்துவம்" ("Turbo-capitalism") என்பது முடிந்துவிட்டது என்று பறைசாற்றுகிறார். "விசை கொண்ட முதலாளித்துவம் என்று அறியப்பட்டது தவறென நிரூபித்துவிட்டது, சிதைக்கப்பட்டுவிட்டது, தன்னையே தோல்வியுறச் செய்துவிட்டது. விசை பேராசை பிடித்து அலைந்தது, விசை கொண்ட முதலாளித்துவம் அதன் குழந்தைகள், அதன் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் அனைவரையும் விழுங்கிவிட்டது.

"இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கூட்டாட்சிக் கூடியரசில் வளர்ச்சியுற்ற பொருளாதாரத்தின் சமூகச் சந்தை, பொருளாதார வரலாற்றில் மிக வெற்றிகரமான பொருளாதார, சமூக ஒழுங்கின் பெரும் வெற்றி என இருந்தது" என்று Prantl புகழ்கிறார். தேசிய அரசின் "கட்டுப்படுத்தும் கரங்கள்" அதன் செல்வாக்கை உலகப் பொருளாதாரத்தில் இழந்துவிட்டதால், சமூக சந்தை பொருளாதாரத்தை ஒரு சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். "சர்வதேச பொருளாதார, நிதிய ஒழுங்கு ஆகியவை சமூகத் தேவைகளுடன் இயைந்து இருக்கும் வகையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்."

இந்த "மாபெரும் பணியை" எவர் செய்வது? Prantl கூறுகிறார்: "ஐக்கிய நாடுகள், G8 -- அதாவது தொழில்துறை நாடுகளின் அரசாங்கங்கள்... இப்பணி சந்தைகளின் அராஜகத்தை ஒருங்கிணைக்கும் சட்ட முறை ஒன்றை நிறுவி, அதன் பின்னர் படிப்படியாக அதைச் செயல்படுத்த வேண்டும். தற்போதைய தேவை ஒரு புதிய சமூக ஒப்பந்தம்."

தன்னுடைய வாசகர்களுக்கு இந்த முக்கிய தொழில்துறை அரசாங்கங்கள் ஏன் "turbo-capitalism" த்தை தங்கள் நடைமுறை, அரசியல் முத்திரையாக கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்றுள்ளன என்பதை Prantl விளக்கவில்லை; இப்பொழுது அவை ஏன் வேறு பாதைகளில் செல்கின்றன என்பதையும் விளக்கவில்லை. இவருடைய கருத்துக்கள் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியே தவிர சமூக சக்திகளின் உயிர்த்த போராட்டத்தை தளமாகக் கொள்ளவில்லை. இத்தகைய நிலைப்பாடு ஒரு போலித் தோற்றம் ஆகும்; அதுவும் மிக ஆபத்தானதாகும்.

ஜேர்மனியில் 1929ம் ஆண்டுப் பொருளாதார நெருக்கடி, நன்கு அறியப்பட்டபடி, நான்கு ஆண்டு காலத்திற்குள் அதிகாரத்தை நாஜிக்கள் கைப்பற்றும் நிலையை ஏற்படுத்தியது. ஹிட்லர் வெற்றிபெற முடிந்ததற்கு காரணம் தொழிலாளர்கள் கட்சிகளின் பரிதாபத்திற்குரிய தோல்வியனால்தான். தொழிலாள வர்க்கத்தை முடக்கும் வகையில் SPD வைமார் குடியரசின் சக்தியற்ற அமைப்புக்களுடன் அதைப் பிணைத்திருந்தது; அதே நேரத்தில் புரூனிங்கின் அவசரக்கால சட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்தது; ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தை தன் இடதுசாரி சொற்றொடர் பின்னே அதன் விதியை மறைத்துக்கொண்டது மற்றும் நாஜிக்களை எதிர்ப்பற்கு ஐக்கிய முன்னணியையும் நிராகரித்தது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் நாஜிக்களுக்கு நிபந்தனையற்ற சரண் அடைந்தன; ஹிட்லர் முழு அதிகாரத்தை பெறுவதற்கு தங்கள் அதிகாரங்களைக் கூட கைவிட்டன.

வரலாற்றுப் பிரச்சினைகளை நன்கு உணர்ந்துள்ள Prantl, ரூசோவின் சமூக ஒப்பந்தத்தை இங்கு கொண்டு வருகிறார். ஆனால் உலக வரலாற்றில் மிகப் பெரிய புரட்சிகளில் ஒன்றான பிரெஞ்சுப் புரட்சிதான் அது அடையப்படுவதற்கு வழிவகுத்தது என்பதை அவர் மறந்து விட்டார்.

"Turbo-capitalism", என்று இந்த வகையை ஏற்பது என்பது தனி நபர் பேராசையின் விளைவு மட்டும் அல்ல. இது வர்க்க நலன்களை தளமாகக் கொண்டுள்ளது; அவை உற்பத்தி சாதனங்களின் தனி உடைமையில் பொதிந்துள்ளன.

ஏற்கனவே எண்பதுகளின் தொடக்கத்தில் நிதியச் சந்தைகள் திறக்கப்பட்டு, தாராளமயம் ஆக்கப்பட்டது பொருளாதார மந்த நிலைக்கும் மற்றும் முந்தைய ஆண்டுகளில் இருந்த வன்முறை வர்க்கப் போராட்டத்திற்கும் ஒரு விடையிறுப்பு ஆகும். இது சர்வதேச தாக்குதல் தொழிலாள வர்கத்திற்கு எதிராக இருப்பதுடன் பிணைந்துள்ளதாகும்; இதன் உச்சக்கட்டம்தான் அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்கமான PATCO உடைக்கப்பட்டதும், ஒராண்டு காலம் நீடித்திருந்த பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டதும் ஆகும். அப்பொழுதில் இருந்து ஊதியங்களும் சமூக நலன்களும் தேக்கம் அடைந்தன அதேவேளை இலாபங்களும் செல்வக் குவிப்புக்களும் பெருகிவிட்டன.

நிதிய தன்னலக் குழு ஆட்சி தானே முன்வந்து அது சூறையாடிய பணத்தைக் கொடுக்கும், ஒரு சமூக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் என்ற கருத்து நகைப்பிற்கு இடமளிக்கிறது. அமெரிக்க அரசாங்கம் நிதிய நெருக்கடியில் குறுக்கிட்டதை பிரான்ட்டில் இத்திசையில் ஒரு அடிவைப்பு என்றுதான் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இதற்கு முற்றிலும் மாறான நிலைதான் உள்ளது. அது ஊகவணிகர்களின் ஆபத்துக்களை சமாளிக்க கருவூலத்தை சூறையாடி உள்ளது, அதேவேளை தொழிலாளர்கள், சமூகத்தில் நலிந்தவர்கள், சிறு வீடு உரிமையாளர்கள் இதற்கு பணம்கொடுத்து தீர வேண்டியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved