WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Nuclear Supplier Group gives India unique "waiver," but
only after row between Delhi and Beijing
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு உரசல் எழுந்து அடங்கிய பின்னரே, அணுப்பொருள்
வழங்கும் குழு இந்தியாவுக்கு தனித்தன்மை வாய்ந்த "விட்டுக் கொடுப்பை" அளிக்கிறது
By Kranti Kumara and Deepal Jayasekera
17 September 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
அமெரிக்காவிடம் இருந்தான தீவிர அரசியல் நெருக்குதல் மற்றும் இந்தியாவின் ஆதரவுநாடும்
பிரச்சாரம் இவற்றையடுத்து, 45 நாடுகள் உறுப்பினராக இருக்கும் அணுப்பொருள் வழங்கும் நாடுகள் குழு
(NSG)
ஆக்கபூர்வ பணிகளுக்கான அணுசக்தி வர்த்தகத்திற்கான
NSG இன் கட்டுப்பாடுகளில் இருந்து இத்தெற்காசிய நாட்டிற்கு
பிரத்யேக "விட்டுக்கொடுப்பை" அளிக்க செப்டம்பர் 6 அன்று ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த முடிவிற்கெதிரான சீனாவின் எதிர்ப்பு அமெரிக்க ஜனாதிபதி சீன ஜனாதிபதி ஹூ
ஜின்டாவோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கு பின்னரும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில்
ஒரு பெரும் தூதரக நிலை மோதல் எழுந்ததிற்கு பின்னரும் தான் கடக்கப்பட முடிந்தது.
1974ம் ஆண்டு இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்திய பின்னர், இந்தியா
மீது திணிக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான ஆக்கப்பூர்வ பணிகளுக்கான அணுசக்தி வர்த்தகத்தின் மீதான உலக அளவிலான
பொருள் பரிவர்த்தனை தடையை மூன்று தசாப்த காலத்துக்கும் பின்னர்
NSG அகற்றியிருக்கிறது.
இந்த விட்டுக்கொடுப்பினால், உலக அணுசக்தி கட்டுப்பாட்டு ஆளுகையின் கீழ்
ஆக்கப்பணி அணுசக்தி எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தில் வர்த்தகம் செய்யும் சட்டபூர்வமான உரிமையை
இந்தியா கொண்டிருக்கிறது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், அணுசக்தி எரிபொருளையும் இறக்குமதி
செய்வதற்கான தவிப்பு இந்தியாவுக்கு. செயல்பாட்டில் இருக்கும் அதன் 22 அணு மின் நிலையங்கள் 40 சதவீதம்
அல்லது அதற்கும் குறைவானதேயொரு திறனில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது, இந்தியாவின் யூரேனியம்
கையிருப்பும் மிகவும் குறைந்த அளவிலானதாக இருக்கிறது.
அதனை விடவும் முக்கியமாக, இந்தியாவின் மேல்தட்டினர்
NSG
விட்டுக்கொடுப்பை மிகவும் தவிப்புடன் எதிர்நோக்கியிருந்தனர். ஏனென்றால் "பெரும்" அல்லது "உலக" சக்தி
அந்தஸ்தையும் அமெரிக்காவுடன் ஒரு சிறப்புரிமை உறவையும் சாதிப்பதற்கு இது ஒரு முக்கியமான படிக்கல் என்று
அவர்கள் நம்புகிறார்கள்.
NSG தடையை அகற்றியிருப்பதும்,
இதேபோல் சென்ற மாதம் இறுதி செய்யப்பட்ட ஐநாவின் சர்வதேச அணுசக்தி கழகத்துடனான (IAEA)
ஒப்பந்தமும், இந்தியாவை ஒரு "அணு ஆயுத வல்லமை அரசாக" சட்டப்படி அங்கீகரிப்பதில் நெடுந்தூரம் செல்லக்
கூடியவை. இப்போது இந்த சிறப்பினை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் சீனா ஆகிய
நாடுகள் தான் வெகு காலமாக தங்களுக்கென பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கின்றன.
இதுவரைக்கும், அங்கீகரிக்கப்பட்ட இந்த ஐந்து அணு ஆயுத நாடுகளைத் தவிர,
IAEA
கண்காணிப்பின் கீழ் தங்களது அனைத்து அணுசக்தி மையங்களையும் கொண்டிருக்கிற மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை
ஒப்பந்தத்தில் (NPT)
கையெழுத்திட்டிருக்கின்ற நாடுகள் மட்டும் தான், NSG
விதிகளின் கீழ் ஆக்கப்பணிகளுக்கான அணு எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டு
வந்திருக்கின்றன.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திற்கு மாறாக அணு ஆயுதங்களை உருவாக்கம்
செய்த, ஒப்பந்தத்தில் இப்போதும் கையெழுத்திட மறுக்கின்ற இந்தியாவுக்கு இனி இந்த
NSG சட்டம்
பொருந்தாது.
உலக அணுசக்தி கட்டுப்பாட்டு ஆளுகையின் கீழ் இந்தியாவுக்கு "சிறப்பு அந்தஸ்தை"
உருவாக்குவதற்கான முன்முயற்சியை தலைமையேற்று நடத்திய அமெரிக்கா, ஆக்கப்பணிகளுக்கான அணுசக்தி வர்த்தகம்
தான் இப்போது விவாதிக்கப்படுவதாக சமாதானம் கூறுகிறது. இது மும்மடங்கு தவறாகும்.
முதலில், அந்நிய சிவிலியன் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் இந்தியா
பெறுவதற்கான முயற்சியில் முக்கிய உள்நோக்கம், அப்போது தான் அது தனது "மூலோபாய கருவிகளை" அதாவது
அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உள்நாட்டு அணுசக்தி வேலைத்திட்டத்தின் ஆதாரவளங்கள் மீது
மையக்கவனத்தை குவிக்க முடியும் என்பதாகும்.
இரண்டாவதாக, வாஷிங்டன் மற்றும் புதுதில்லி இரண்டும் அணு வர்த்தக விதிகளை
இந்தியாவுக்கு சாதகமாக திருத்த அணி சேர்ந்ததன் முக்கிய காரணம்
NSG தடை மற்றும்
தொடர்புள்ள அமெரிக்க வர்த்தக தடைகளை அகற்றுவது மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்பத்தில்
பாரிய அளவிலான இந்திய-அமெரிக்க வர்த்தகத்தின் அபிவிருத்தியை அனுமதிக்கும் என்பது தான்.
கடைசியாக அதே சமயம் முக்கியமானதாக, புஷ் நிர்வாகம் அமெரிக்க
வெளியுறவுத்துறை அமைச்சர் கொன்டலிஸா ரைஸ் குறிப்பிட்டதைப் போல "இந்தியா ஒரு உலக சக்தியாக
மாறுவதற்கு" கடுமையாக உழைத்திருக்கிறதென்றால் அதன் காரணம், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் தனது
வேட்டையாடும் நோக்கங்களுக்கு இந்தியாவை தயாரிப்பு செய்ய முடியும் என்ற அதன் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்
தான்.
பதட்டமூட்டும் தாக்கங்கள்
அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில்
NSG எடுத்திருக்கும்
இந்த நடவடிக்கை தெற்கு ஆசியாவில் தீவிர மற்றும் பதற்றமூட்டும் மூலோபாய தாக்கங்களை கொண்டிருக்கிறது.
இது இந்தியா மற்றும் அதன் வரலாற்று எதிராளி பாக்கிஸ்தானிடையேயான வல்லமை போட்டியை இந்தியாவுக்கு
சாதகமாக திருப்புகிறது. அத்துடன் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா வெற்றியுடன் உருவாக்கிய அணுசக்தி
கட்டுப்பாட்டு ஆளுகையின் அடிப்படை கொள்கையை இது அர்த்தமற்றதாக்கியிருக்கிறது. அணு ஆயுத முயற்சி செய்யும்
அரசுகள் அனைத்து அணுசக்தி வர்த்தகத்தின் மீதான தடைகள் மூலம் "தண்டிக்கப்படும்" என்றும்
NPT க்கு
உடன்படும் நாடுகளுக்கு அதற்கு கைமாறாக ஆக்கப் பணிகளுக்கான அணுசக்தி உருவாக்கத்தில் உதவி செய்யப்படும்
என்பதாகவும் தான் கொள்கை இருந்தது.
NSG கூட்டத்திலேயேயும் நிழலாடத்
தொடங்கியதைப் போல, சந்தைகள், மூலப்பொருட்கள், மற்றும் புவி-மூலோபாய அனுகூலத்திற்காக பெரும்
சக்திகளிடையே நடப்பிலிருப்பதான முன்னெப்போதையும் விடப் பெரியதானதொரு வெடிப்புற்ற மோதலை அது
இன்னமும் தீவிரப்படுத்தி சிக்கலாக்கும்.
அமெரிக்கா தவிர, ரஷ்யாவும் பிரான்சும் கூட இந்தியாவுக்கு
NSG
"விட்டுக்கொடுப்பை" பெற்றுத்தருவதில் முக்கிய பங்காற்றி இருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளுமே அடுத்த
தசாப்தத்தில் இந்தியா மேற்கொள்ள திட்டமிடும் சுமார் 100 பில்லியன் டாலர் அணுசக்தி எரிபொருள் மற்றும்
தொழில்நுட்ப கொள்முதலின் பெரும் பங்கினை திரட்டும் நம்பிக்கை கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இது மட்டும் தான் அவர்களின் ஒரே உள்நோக்கம் என்றல்ல. பனிப்போர்
காலம் தொடங்கி இந்தியாவுடன் நெருக்கமான இராணுவ உறவும் புவி-அரசியல் உறவும் கொண்டுள்ள ரஷ்யா,
இந்தியா ரொம்பவும் அமெரிக்க வட்டத்துக்குள் சென்று விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தத்
தொடங்கியிருக்கிறது. "பன் முக உலகத்தில்" பிரான்சும் இந்தியாவை ஒரு சாத்தியமுள்ள கூட்டாளியாக
பார்க்கிறது.
பத்திரிகைகளின் தகவல்படி,
NSG இந்தியாவுக்கு
இந்த அசாதாரண விட்டுக்கொடுப்பை அளிக்க ஊக்கப்படுத்துவதற்கு அமெரிக்கா தனது இராஜதந்திர படையின்
அத்தனை ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டியிருந்தது.
NSG இல் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக இருந்த
ஒப்பந்தங்களின் மீது (இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை)
பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் முக்கிய பங்காற்றிய அமெரிக்க தூதர் டேவிட் முல்ஃபோர்ட் கூறினார்,
"1980கள் முதல் நான் கண்ட மிகப்பெரிய தூதரக அளவிலான இராஜதந்திர முயற்சி இது தான்".
ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் நடந்த ஆரம்ப கூட்டம் ஒன்றில்
NSG
உறுப்பினர்களின் ஒரு விருந்தோம்பும் குழு தெரிவித்த ஆட்சேபனைகள் மற்றும் கவலைகளை வெல்லும் ஒரு
முயற்சியாக, கீழ் நிலை தூதரக அதிகாரிகளின் படையைத் தவிர, புஷ் நிர்வாகம் வியன்னாவில் நடந்த
NSG கூட்டத்திலும்
ஆதரவை திரட்டுவதற்கு கொன்டலிசா ரைஸை அனுப்பி வைத்தது.
ஜூலை ஆரம்பத்தில் வருடாந்திர ஜி-8 உச்சி மாநாட்டில் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக
மற்ற உறுப்பினர்களை அமெரிக்கா அணி சேர்த்து விட்டிருந்தது என்றாலும், பல சிறு முன்னேறிய முதலாளித்துவ நாடுகள்
- நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, நோர்வே, மற்றும் நெதர்லாந்து - இந்த விதிதளர்வு
அணுசக்தி கட்டுப்பாட்டு ஆளுகையை பலவீனப்படுத்தி விடும் என்று வாதிட்டன. விதிகள் பெரிய மற்றும் சக்திவாய்ந்த
நாடுகளுக்கு ஏற்றவாறு மாற்றப்பட முடியும் என்பதை அவை திறம்பட விளங்கப்படுத்தின.
இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் பொருளாதார ரீதியாகவும்
புவி-அரசியல்ரீதியாகவும் நெருக்கமான உறவுகள் கொண்டவை மற்றும்/அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளாக
ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாக இருப்பவை மற்றும் தங்களளவில் அணுசக்தி வர்த்தகத்தில் சிறு சக்திகளாகவே
இருப்பவை. எனவே இவை இறுதியாக அமெரிக்க நெருக்குதலுக்கு பணிந்ததில் ஆச்சரியமேதும் இல்லை.
இந்த நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக, செப்டம்பர் 5 வியன்னாவில் இருந்த
சமயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் பத்தாண்டு கால அணு ஆயுத
சோதனைக்கான தன்னார்வ தடையினை பராமரிக்க வாக்குறுதியளித்தார். இந்த வாக்குறுதியை கருத்தில் எடுத்துக்
கொண்டிருக்கும் "விட்டுக்கொடுப்பு" வருங்காலத்தில் இந்தியா ஒரு அணு சோதனையை மேற்கொள்ளுமானால்
NSG
இன் அவசரக் கூட்டத்தை கூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. ஆனால் இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகத்தை
நிறுத்துவதற்கு பொறுப்பளிக்கும் எந்த ஷரத்தும் இல்லை, அத்துடன் ஒரு அணு சோதனையின் போது அவசரக்
கூட்டத்தை கூட்டுவதற்கான ஷரத்து ஏற்கனவே NSG
வழிகாட்டல்களில் இருக்கும் ஒன்று தான்.
1998ம் ஆண்டில் இந்தியாவை ஒரு அணு ஆயுத நாடு எனப் பிரகடனம் செய்த இந்து
மேலாதிக்க கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் இராணுவ வலிமை மீதான இந்த "கட்டுப்பாட்டினை"
கண்டித்திருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களும் மேல் தட்டும் பெருமளவில்
NSG கூட்டத்தின்
முடிவைக் கொண்டாடி வருகின்றன. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக நான்கு ஆண்டுகள்
ஆதரவு அளித்து வந்த ஸ்ராலினிச தலைமையிலான இடது சாரி கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டதற்கும்
இவர்கள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசாங்கத்தினை போற்றிப்
புகழ்ந்தனர். (பார்க்கவும் Indian parliament
gives green light to Indo-US nuclear treaty)
சீனாவின் எதிர்ப்பு
இந்த "விட்டுக்கொடுப்புக்கு" சீனாவின் எதிர்ப்பு இன்னும் அச்சுறுத்துவதாக இருந்தது.
எப்படி இருந்தாலும், இந்தியா நீண்ட கால மூலோபாய எதிரி, தவிர புஷ் நிர்வாகத்துக்கு உள்ளும் சுற்றியும்
பனம்இருக்கும் பெருந்தலைகள் உள்ளிட்ட அமெரிக்க புவி-அரசியல் ஸ்தாபனம் இந்தியாவுடனான மூலோபாயக் கூட்டை
சீனாவைக் கட்டுப்படுத்தவும் அவசியப்பட்டால் எதிர்கொள்வதற்குமான அமெரிக்காவின் முயற்சிகளில் ஒரு முக்கிய
அங்கம் என்று தம்பட்டம் அடித்து வருகிறது.
அணுசக்தி கட்டுப்பாட்டு ஆளுகைக்குள்ளாக இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து
கொடுப்பதற்கான அமெரிக்க அழைப்பு குறித்து சீனா பலமுறை தொடர்ந்து தனது கவலைகளை தெரிவித்து
வந்திருக்கிறது. ஆனால், இந்திய-அமெரிக்க கூட்டுத்திட்டம் இந்தியாவின் உள்ளூர் எதிர்ப்பில் அல்லது அமெரிக்காவின்
உள்ளூர் எதிர்ப்பில் அல்லது அணு ஆயுதப் பரவல் கவலை கொண்ட பிற அரசாங்கங்களின் எதிர்ப்பில் எப்படியும்
முன்செல்ல முடியாது என்கிற நம்பிக்கையில் இந்தியா மீது அணுசக்தி தடையை அகற்றுவதற்கு சீனா திட்டவட்டமாக
எதிர்ப்பினை வெளிப்படுத்தாமல் இருந்து விட்டது.
ஆனால் NSG
கூட்டத்திற்கு முந்தையதான சமயத்தில் அந்த சூழ்நிலை வெளிப்படையாக மாறியது. செப்டம்பர் 1 அன்று, சீனாவின்
கம்யூனிஸ்ட் கட்சியின் People's
Daily இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை
கண்டிக்கும் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. "இது புவிஅரசியல் கருதுகோள்களால் ஊக்கம் பெற்றிருந்தாலும்
சரி அல்லது வர்த்தக நலன்களாலானாலும் சரி, அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தமானது சர்வதேச அணு
ஆயுதப் பரவல் தடை ஆளுகைக்கு ஒரு பெரிய அடியாக பங்களித்திருக்கிறது" என்று அந்த கட்டுரை அறிவித்தது.
இந்திய அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக
இந்திய ஊடகங்கள் சீனா சிறு சக்திகளை "விட்டுக்கொடுப்பிற்கு" எதிராக ஊக்கப்படுத்துவதாக குற்றம் சாட்டின.
தெரிய வருவது என்னவென்றால், செப்டம்பர் 5 மாலை சிறு நாடுகளின் எதிர்ப்பு நொறுங்கியவுடன், சீன
பிரதிநிதிகள் குழு NSG
கலந்தாய்வு ஆலோசனைகளில் இருந்து விலகிக் கொண்டது.
NSG இல் முடிவுகள்
ஒருமனதாக எடுக்கப்பட வேண்டியவை என்பதால், சீனா விலகியது விட்டுக்கொடுப்பை கைக்கொள்வதை தடுக்கும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்த புள்ளியில் தான் புஷ் தனது சீன சகாவான ஹூவுடன் தொலைபேசியில்
பேசினார். அத்துடன் இந்தியாவும் சீன நிலைப்பாட்டுக்கு எதிரான ஒரு தூதரக நிலை எதிர்ப்பை
வெளிப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இறுதியில், சீன பேச்சுவார்த்தையாளர்கள்
NSG
பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பினர். விட்டுகொடுப்பு வாக்கெடுப்புக்கு வந்தபோது அவர்கள் கலந்து
கொள்ளவில்லை. இதனால் வாக்கெடுப்பு ஒருமனதாக வெற்றிபெற்றதாக கருதப்படுவதற்கு அனுமதித்தனர்.
செப்டம்பர் 12 டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு அறிக்கையின் படி,
"பெய்ஜிங் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்வதற்கு புதிதில்லியும் வாஷிங்டனும் பெரும் அளவிலான முயற்சிகளை
செய்ய வேண்டியிருந்தது. உண்மையில் மும்முரமாக இருந்த சீனா தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டதற்கான
காரணம் என்னவென்றால், இந்தியா உலகின் மற்ற பகுதியினருடன் அணு ஒத்துழைப்பில் மீண்டும் ஈடுபட அனுமதிக்கும்
விட்டுகொடுப்பிற் முட்டுக்கட்டை போடும் ஒரே NSG
உறுப்பினராக தன்னைக் காட்டிக் கொள்ள அது விரும்பாததே ஆகும்".
சீனாவின் எதிர்ப்பு இந்திய மேல்தட்டினை எந்த அளவுக்கு பதட்டப்படுத்தியது என்றால்
விட்டுகொடுப்பை பெற்ற பின்னரும் கூட இந்திய அரசாங்கம் சீனாவை கடுமையாக தாக்கியது. செப்டம்பர் 6
அன்று ஒரு தொலைக்காட்சி சானலில் பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம் கே
நாராயணன், "சீனாவின் வெளியுறவு அமைச்சர் இங்கு வருகிறார். அப்போது நாங்கள் எங்களது ஏமாற்றத்தை
தெரிவிக்க இருக்கிறோம். இதனை நாங்கள் சீனாவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பதை அவரிடம்
தெரிவிப்போம்" என்றார் அவர்.
செப்டம்பர் 7 அன்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் யாங் ஜெயச்சி இந்தியாவுக்கு
பயணம் மேற்கொண்ட போது பிரணாப் முகர்ஜியும் அவரும் சந்தித்துப் பேசிக் கொண்டவற்றில் இந்தியாவின் இந்த
'ஏமாற்றமானது' முக்கிய இடத்தைப் பிடித்ததாகக் கூறப்பட்டது.
சீன-இந்திய உறவுகள் அவற்றுக்கிடையே எல்லைப் போர் 1962ம் ஆண்டு நிகழ்ந்தது
முதலே பாதிப்புற்றே இருக்கிறது. அதற்குப் பின் சில காலத்திலேயே சீனா பாக்கிஸ்தானின் ஒரு அதிமுக்கிய
கூட்டாளியாகி விட்டது; உண்மையில், பாக்கிஸ்தான் மேல்தட்டினர் பொதுவாக சீனாவை குறிப்பிடும்போது தங்களது
"எல்லா காலநிலைக்குமான நண்பன்" என்கின்றனர்.
சமீப காலங்களில் இந்திய சீன உறவுகளில் இறுக்கம் தளர்வு கண்டிருக்கிறது. சீன
இந்திய வர்த்தகம் இப்போது இந்திய அமெரிக்க வர்த்தகத்தை கடந்து செல்கிறது. ஆனால் அந்நிய முதலீடு,
எண்ணெய் மற்றும் பிற வள ஆதாரங்கள், மற்றும் தெற்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம்
இவற்றைக் கைப்பற்ற இந்த இரு நாடுகளும் போட்டியிடுகின்றன.
இருப்பினும், சீனாவின் அளவு கடந்த கவலை உள்ளபடியே இந்தியா மீது அல்ல,
மாறாக இந்திய அமெரிக்க கூட்டின் எழுச்சிக்கும் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் தனது
மூலோபாய இலட்சியங்களுக்கு இந்தியாவை கருவியாக்கிக் கொள்வதற்கு பட்டை தீட்டுவதற்கும், இந்தியாவை
சீனாவுக்கு எதிரான "சமநிலைப்படுத்தும் எதிர்விசை"யாக உயர்த்துவதற்கும் அமெரிக்கா செய்யும்
உள்நோக்குடனான முயற்சிகள் மீது தான்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் வாய்ப்பு வளங்களை, ஈரான் குறித்த
IAEA
கலந்தாய்வு விவாதங்களின் போது தன்னைப் பின்பற்றுவதற்கு இந்தியாவுக்கு நெருக்குதல் அளிக்க அமெரிக்கா
தொடர்ந்து பயன்படுத்தி வந்திருப்பதை சீனா கவனியாது இருந்திருக்க முடியாது. அமெரிக்காவின் முக்கிய
இலக்குகளில் ஒன்று இந்தியாவுடன் இராணுவ பரஸ்பர செயல்பாட்டு நிலையை அபிவிருத்தி செய்வது என்பதும் அடங்கும்
என்பதையும் தான் கவனியாது இருந்திருக்க முடியாது.
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் மக்கெயின் ஜி-8 நாடுகளில்
இருந்து ரஷ்யாவை வெளியேற்றி விட்டு அந்த இடத்தை இந்தியாவைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று அழைப்பு
விடுத்திருக்கிறார்.
2007 இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தமானது அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு
ஒப்புதல் பெறுவதற்கு முன்னால் இந்தியா மற்றும் அமெரிக்கா கடக்க வேண்டியதாய் இருந்த ஒரே தடைக்கல்லும்
NSG
விட்டுக்கொடுப்பை பெற்றதை அடுத்து கடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மேல்தட்டிற்குள்ளே இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான
குரல்களைக் கேட்க முடிகிறது. அணு ஆயுத வல்லமையுடனான இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா ஆலோசிப்பது
ஈரான் விஷயத்தில் அது கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருக்கிறது; அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டிருக்கும் நாடான ஈரான் ஆக்கப்பூர்வ பணிகளுக்கான ஒரு அணுசக்தித் திட்டத்தின் அனைத்து
அம்சங்களையும் உருவாக்க முழு சட்டரீதியான உரிமையும் கொண்டுள்ளது என்பதான நிலைப்பாட்டில் இருந்து இவர்கள்
குறிப்பாக தங்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
ஆனால் இந்த குரல்கள் பெருமளவில் அமுக்கப்படுகின்றன. ஏனென்றால் ஒரு வலிமையான
கருத்தொற்றுமையானது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும் இந்தியாவுடனான மூலோபாய கூட்டும் 21ம்
நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
என்பதாக இருபெரும் கட்சிகளுக்கு இடையிலும் உருவாகியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் பாரக் ஒபாமா, மற்றும் குடியரசுக் கட்சியின் ஜோன்
மக்கெயின் ஆகிய இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுமே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உறுதியான ஆதரவை
வெளிப்படுத்தியுள்ளனர். ஒபாமாவின் துணை ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் ஜோ பிடென் ஒப்பந்தத்திற்கு
உறுதியான ஆதரவை அளிப்பது மட்டுமல்லாமல், செனட் வெளியுறவுத் துறை தலைவராகவும் இருக்கும் அவர் இந்த
ஒப்பந்தத்தின் மீதான முறைப்படியான கலந்தாய்வுகளை தொடக்கி, அதன் மூலம் அமெரிக்க செனட்டில் அதன்
ஒப்புதலை துரிதப்படுத்தவும் வாக்குறுதியளித்திருக்கிறார். நடப்பு செனட் அமர்வு செப்டம்பர் 26 இல் முடிவுறும்
முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்னும் வகையில் புஷ் நிர்வாகம் துரிதமாக காய்
நகர்த்தி வருகிறது. |