World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan SEP demands release of arrested member இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கைது செய்யப்பட்டுள்ள உறுப்பினரை விடுதலை செய்யக் கோருகிறது By the Socialist Equality Party (Sri Lanka) இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), கடந்த திங்கட் கிழமை இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்ட கட்சியின் அங்கத்தவர் வேலும்மயிலும் கமல்தாசன் மற்றும் அவரது மைத்துனர் சந்திரலிங்கம் இளஞ்செழியனையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோருகிறது. கொழும்பில் இருந்து 40 கிலோமீட்டர் வடக்கில் உள்ள நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்கள், கடந்த மூன்று நாட்களாக சட்ட விரோதமாக பொலிஸ் சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகள் தமிழர்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் பாகமாகும். நாட்டின் கொடூரமான அவசரகால சட்டங்களினால், புலி சந்தேக நபர்கள் என்ற பேரில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் எதேச்சதிகாரமான முறையில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டிருப்பதினாலேயே தடுத்து வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் பொலிசார், இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளனரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். கமல்தாசன் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் என சோ.ச.க. அறிக்கை ஒன்றை வழங்கிய போதிலும், பொலிசார் அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டனர். அவர் மூன்று நாட்களாகியும் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஒரு வெளிப்படையான அரசியல் துன்புறுத்தலாகும். அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை சோ.ச.க. எதிர்ப்பதைப் போலவே, புலிகளின் முதலாளித்துவ தேசியவாத அரசியலுடன் சோ.ச.க. அடிப்படை உடன்பாடின்மைகளைக் கொண்டிருப்பது வெளிப்படையானதாகும். 30 வயதான கமல்தாசன் 1998ல் இருந்து சோ.ச.க. உறுப்பினராவார். அவர் தனது குடும்பத்துடன் நீர்கொழும்புக்கு அருகில் கொச்சிக்கடை என்ற இடத்திலுள்ள பலங்கத்துறையில் வசிப்பதோடு நீண்டகாலமாக யாழ்ப்பாணம் காரைநகரில் வாழ்ந்தவராவார். படகு உற்பத்தி தொழிலாளியாகவும் கடற்தொழிலாளியாகவும் இருந்த கமல்தாசனும் அவரது குடும்பமும், ஏனைய ஆயிரக்கணக்கானவர்களைப் போலவே நாட்டின் 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தினால் பல தடவை இடம்பெயர்ந்துள்ளது. அவர் இரண்டு ஆண்டுகளாக டுபாயில் வேலை செய்துவிட்டு 2007 செப்டெம்பரில் இலங்கைக்குத் திரும்பினார். முச்சக்கர வண்டி சாரதியான 37 வயதான இளஞ்செழியன் கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக நீர்கொழும்பில் வாழ்ந்து வருகின்றார். சுமார் மு.ப. 11 மணியளவில் நீர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு வரும் பஸ்ஸில் ஏறியிருந்த போது கமல்தாசனையும் இளஞ்செழியனையும் பொலிசார் அணுகினர். இந்த பொலிஸ் குழு விசாரணைக்காக பஸ்ஸில் இருந்து இறங்குமாறு இருவருக்கும் கட்டளையிட்டது. அடையாளத்திற்காக தமது பிரதேச பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்டிருந்த பதிவுப் பத்திரங்களை இருவரும் பொலிசாரிடம் வழங்கினர். பொலிசார் அந்த ஆவணங்களை நிராகரித்ததோடு "மேலதிக விசாரணைக்காக" அவர்களை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தனது முதல் பெயரை மட்டுமே கூறும் ஹேரத் என்ற பிராந்திய புலனாய்வு அதிகாரி, கமல்தாசன் மற்றும் இளஞ்செழியனின் நிரந்தர வதிவிடத்தைப் பற்றி விசாரித்ததோடு, மேலதிக தகவல்கள் தேவைப்படுவதாக கூறி சிறையில் அடைக்குமாறு கட்டளையிட்டார். சோ.ச.க. நீர்கொழும்பு தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் சோமசிறி லியனகேயை தொடர்பு கொண்டு இந்தக் கைதுகளுக்கு கண்டனம் தெரிவித்த அதே வேளை, கமல்தாசன் ஒரு சோ.ச.க. உறுப்பினராக இருப்பாரெனில் அவர் விடுதலை செய்யப்படுவார் என அத்தியட்சகர் தெரிவித்தார். எவ்வாறெனினும், சோ.ச.க. பிரதிநிதிகள் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, நிலைமை மாற்றமடைந்திருந்தது. புலனாய்வுத் துறை அலுவலரான ஹேரத், இந்த இருவரும் முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்தவர்கள் என அத்தியட்சகர் லியனகேயிடம் தெரிவித்தார். இதனால், "பயங்கரவாத நடவடிக்கைகளில்" சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை பரீட்சிக்க கொழும்பு மற்றும் காரைநகரில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் (டீ.ஐ.டி) தகவல்கள் கோரப்பட்டுள்ளன. செவ்வாய் கிழமை காலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் இருந்து விபரங்கள் கிடைத்துவிடும் என்று உறுதிமொழியளித்த போதும், மேலும் மழுப்பும் பதில்களை சோ.ச.க. எதிர்கொண்டது. பிற்பகலில் அறிக்கைகளை எதிர்பார்ப்பதாக செவ்வாய் கிழமை காலை நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். தமது உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக சோ.ச.க. உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்வதையும் அவர்கள் மறுத்தனர். கட்சி உறுப்பினர் என்ற வகையில் கமல்தாசனுக்கும் புலிகளுக்கும் அல்லது "பயங்கரவாதத்திற்கும்" தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்ற சோ.ச.க. யின் பிரகடனத்தை நீர்கொழும்பு பொலிஸ் உயர் அதிகாரியான பி.கே. விதானகே முழுமையாக நிராகரித்தார். மறுநாள், கமல்தாசன் சோ.ச.க. உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்தி அவரது விடுதலையைக் கோரி சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் பொலிசுக்கு கடிதம் ஒன்றை பக்ஸ் செய்தார். ஆயினும், இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்படுவார்கள் என தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் லியனகே சுட்டிக்காட்டிய போதிலும், எப்பொழுது என்பதை கூற மறுத்தார். செவ்வாய் கிழமையன்று, வெறுப்புடன் அறிவிக்கும் வகையில், சோ.ச.க. யின் தலையீடு "நிலைமையை கெடுத்துவிட்டதால்" இருவரையும் விடுதலை செய்ய முடியாது என கமல்தாசனின் உறவினர்களிடம் பொலிஸ் அலுவலர்கள் தெரிவித்தனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், கமல்தாசனும் அவரது மைத்துனரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, அவர்கள் புலிகளுடன் அல்லது "பயங்கரவாத நடவடிக்கைகளில்" சம்பந்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதனால் அல்ல. மாறாக, சோ.ச.க. அதன் உறுப்பினர்களின் விடுதலையைக் கோரியதாலும் அவர்கள் இருவரதும் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியதாலுமே அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்ததன் மூலம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2002 யுத்த நிறுத்தத்தை விளைபயனுள்ள வகையில் கிழித்தெறிந்த 2006 நடுப்பகுதியில் இருந்து, குறிப்பாக தமிழர்களுக்கும் யுத்தத்தை எதிர்ப்பவர்களுக்கும் எதிராக அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உருவாக்கப்பட்ட பீதி மற்றும் துன்புறுத்தல் சூழ்நிலையின் ஒரு பாகமே இந்த தடுத்து வைப்புக்களாகும். தமிழ் பொதுமக்களுக்கு எதிரான வழமையான அடக்குமுறைகளுடன் சேர்த்து, பாதுகாப்பு படைகளும் மற்றும் அவற்றுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை குழுக்களும் நூற்றுக்கணக்கான கடத்தல்கள், காணாமல் ஆக்கும் நடவடிக்கைகள் மற்றும் படுகொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளன. யுத்தம் புதுப்பிக்கப்பட்டு சில வாரங்களின் பின், 2006 ஆகஸ்ட் 7 அன்று, சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாகாணத்தில் கிராமப்புற நகரான முல்லிப்பொத்தானையில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 2007 மார்ச் 22 அன்று, சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் அயலில் உள்ள புங்குடுதீவில் இருந்து ஊர்காவற்துறை தீவில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காணாமல் போயினர். இந்த இரு சம்பவங்களிலும், சோ.ச.க. சேகரித்த ஆதராங்கள், இராணுவம் அல்லது துணைப்படை குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டின. இப்போது தீவு பூராவும் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளையும் அடையாள அட்டை பரிசோதனைகளையும் முன்னெடுக்கின்றனர். தமது சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் வாழும் அனைத்து தமிழர்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளார்கள். பொலிசார் கப்பம் பெறுவது தொடர்பாக செய்திகளை மனித உரிமைகள் அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன. எதேச்சதிகாரமாய் தமிழர்களை கைது செய்யும் பொலிசார் இலஞ்சம் வாங்கிய பின்னரே அவர்களை விடுதலை செய்வதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, கொழும்புக்குள் "பிரமாண்டமான உட்புகுதல்" பாதுகாப்பு ஆபத்தை அதிகரித்துள்ளது என டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு கடந்த சனிக்கிழமை தெரிவித்ததன் மூலம், பாதுகாப்பு பொறியின் இன்னுமொரு முன்நகர்வை சமிக்ஞை காட்டியுள்ளார். யுத்தத்தால் சீரழிந்த வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து 6,950 பேர் வருகை தந்துள்ளமை "முன்னெப்போதும் இல்லாதது" என விவரித்த அவர், அவர்கள் இங்கு வந்திருப்பதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் இல்லையேல், "மீண்டும் தமது இடங்களுக்கு செல்ல வேண்டும்" என பிரகடனம் செய்தார். கமல்தாசனும் அவரது மைத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளமை, முழு தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். அரசாங்கம் புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தை உக்கிரமாக்கியுள்ள அதே காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றது. அதே வேளை, அது குவிந்துவரும் எதிர்ப்பு மற்றும் அதிருப்தியையும் எதிர்கொள்கின்றது. விமர்சனங்களை அடக்கவும் எதிர்ப்புக்களை நசுக்கவும் எடுக்கின்ற முயற்சியில், அது வெளிப்படையான அடக்குமுறையை நாடுகின்றது. கமல்தாசன் மற்றும் இளஞ்செழியனின் உடனடியான விடுதலையைக் கோருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காக்கும் அனைத்து அமைப்புக்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இலங்கையில் உள்ள குறித்த அதிகாரிகளுக்கு எழுதுவதன் மூலம் எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்: Gotabhaya Rajapakse Fax: 009411 2541529 Inspector General of Police Superintendent of Police கடிதங்களின் பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வையுங்கள். Socialist Equality Party |