World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Right wing seizes leadership of the SPD ஜேர்மனி: சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமையை வலதுசாரி கைப்பற்றுகிறது By Ulrich Rippert ஒரு பொருளின் சாராம்சம் அதன் தோற்றத்திலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று தத்துவ ஞானி ஹெகல் கற்பிக்கிறார். இது அரசியலுக்கும் பொருந்தும். சமூக ஜனநாயக கட்சியின் அடுத்த ஆண்டு கூட்டாட்சி தேர்தல்களுக்கு வெளியுறவு மந்திரி பிராங்-வால்டர் ஸ்ரைன்மயர் முடிசூட்டப்பட்டது, மற்றும் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் குர்ட் பெக் எப்படி அகற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரான்ஸ் முன்டபெயரிங் நியமிக்கப்பட்டது ஆகியவை இக்கட்சியின் தன்மை பற்றி நிறையவே கூறுகின்றன. தலைமை மாற்றம், ஒரு கட்சியின் உட்கட்சி சதி என்ற வகையில் நடைபெற்றது. கடந்த வார இறுதியில் ஒரு மாநாட்டின்போது கூடியிருந்த முக்கிய சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள்கூட இதில் தொடர்பு கொண்டிருக்கவில்லை. நடந்து முடிந்த பின்னர்தான் அவர்கள் இது பற்றி கூறப்பட்டதால் பெரும் வியப்பை அடைந்தனர். மிக முக்கியமான தலைமைப் பதவிகளில் மாறுதல்கள் என்பது கட்சியின் எந்தக் குழுக்களிலும் எவ்வித விவாதமும் இல்லாமல் நடந்தேறியது. உறுப்பினர்களுக்கு இந்த முடிவுகளில் எந்தவிதச் சிறு ஆதிக்கத்தையும் செலுத்தமுடியவில்லை. ஸ்ரைன்மயர் மற்றும் முன்டபெயரிங்கை சுற்றிய ஒரு சிறு வட்டம் கிட்டத்தட்ட ஒரு சதித்திட்டம் போல் இதைச் செயல்படுத்தியது. முதலில் ஆண்டு இறுதிவரை அதிபர் வேட்பாளர் நியமனம் பற்றிய முடிவை தள்ளிவைக்கக்கூடாது என்ற கோரிக்கை ஒன்றை சுற்றுக்கு விட்டனர். இது செய்தி ஊடகத்தால் உடனே எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நியமன காலஅட்டவணை பெக்கின் தலைமையில் இருந்த நிர்வாகக் குழு முடிவெடுத்தது என்பதை நன்கு அறிந்தும் இப்படிக் கூறப்பட்டது. இதன் பின்னர், அவர்கள் "முக்கியமான தலைமையிடப் பதவி" ஒன்றிற்கு பிரான்ஸ் முன்டபெயரிங் திரும்ப இருப்பதாக ஒரு செய்தியை பரப்பினர். இதுவும் பெக்கிற்கு எதிராக இயக்கப்பட்டது ஆகும்; அவர் கடந்த ஆண்டு முன்டபெயரிங் எதிர்ப்பை மீறி அரசாங்கத்தின் பொதுநலச் சீர்திருத்தங்களில் சிறிய மாற்றங்களை செய்திருந்தார். இறுதியாக உடன்பட்ட நாளுக்கு இரு தினங்கள் முன்னதாகவே அவர்கள் ஸ்ரைன்மயருடைய வேட்பாளர் செய்தியை வெளிவிட்டு, அதை தங்கள் முடிவு போல் அதை அளித்து பெக்கை அவமானப்படுத்தினர். தன்னுடைய இராஜிநாமாவை பற்றிய அறிக்கையில், பெக் சதித்திட்டங்கள் பற்றியும் அவர் எதிர்கொண்ட வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட தவறான தகவல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். "இன்னும் கூடுதலான ஜனநாயகத்திற்கு துணிந்தெழுங்கள்" என்று கட்சி 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோஷத்தை எழுப்பியிருந்தது; இக்கட்சியின் இத்தகைய தன்மைக்கு முற்றிலும் மாறான, இழிந்த வலையில் மிக அடிப்படை உறுப்பினர்கள் உரிமை, கட்சி உள் ஜனநாயகம் இன்று மறுக்கப்பட்ட நிலையில் உள்ளன. "ஒரு கட்சி எவ்வளவு ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை ஏற்கும்?" என்று Süddeutsche Zeitung பத்திரிகை கேட்டுள்ளது. ஆனால் அது ஒரு பகிரங்க கேள்வி அல்ல. கட்சியில் இன்று இருக்கும் உறுப்பினர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளுவர். ஷ்ரோடர் ஆதரவாளர்களின் சர்வாதிகாரம் ஒரு வலதுசாரித் தலைமை உறுப்பினர்களை கடந்து தன்னுடைய அரசியல் வழிவகையை நிலைநிறுத்தியுள்ளது ஒன்றும் இப்பொழுது முதல் முறையாக நடந்துவிடவில்லை. ஹெகார்ட் ஷ்ரோடர் அதிபராக இருந்த காலத்தில் இருந்தே இப்படித்தான் நடந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் தலைவராக இருக்கும் வரையில் பெரு வணிகத்தை எதிர்க்கும் கொள்கைகள் இருக்காது என்று ஷ்ரோடர் கூறினார்; அப்பொழுது அவர் பசுமைக் கட்சியுடன் கூட்டில் இருந்து கடுமையான சமூகச் செலவினங்கள் குறைப்பை நடத்தினார். பொதுநல மற்றும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களின் ஆபத்தான விளைவுகள் தெளிவாக தெரிந்தபோது, வாக்காளர்களும் கட்சி உறுப்பினர்களும் சமூக ஜனநாயகக் கட்சியை விட்டுக் கூட்டம் கூட்டமாக நீங்கியபோது, சமூக விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு ஆக்கிரோசமாக பெருகிய நிலையில், ஷ்ரோடரும் முன்டபெயரிங்கும் முன்கூட்டிய கூட்டாட்சித் தேர்தல்களுக்கு ஏற்பாடு செய்தனர்; அவர்களுடைய உறுப்பினர்களையும் வாக்காளர்களையும் ஒரு இறுதி எச்சரிக்கையுடன் சந்தித்தனர்: ஒன்று ஷ்ரோடரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது இன்னும் கடுமையான தாக்குதல்களுடன் ஒரு கிறிஸ்தவ ஜனநாயகத் தலைமையில் கீழ் ஒரு அரசாங்கம் வரும் என்பதே அது. அந்த நேரத்தில் ஏற்கனவே ஷ்ரோடர், முன்டபெயரிங் மற்றும் ஸ்ரைன்மயரின் நடவடிக்கைகள் அரசியல் சதி வடிவத்தைதான் கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து ஷ்ரோடர் வணிகத்தில் பெரும் ஊதியம் கிடைக்கும் பதவிகளை பெற்றுக்கொண்டார். மற்றவர்களும் பெரும் கூட்டணியில் முக்கியமான மந்திரி பதவிகளை பெற்றனர்; அவற்றுடன் அவர்கள் பொதுநல, தொழிலாளர் சீர்திருத்தக் கொள்கைகளையும் தொடர்ந்தனர். கட்சிக்குள் இருக்கும் விமர்சகர்கள் ஷ்ரோடரின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் எதையும் கொண்டிருக்கில்லை; ஆனால் உறுப்பினர் இழப்பினால் கட்சி முழு அழிவையும் எதிர்கொள்ளுகிறது என்று எச்சரித்து கொள்கையில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்கப்பட வேண்டும், வெறும் அடையாள மாற்றங்கள் என்றாலும் சரி எனக் கூறினர். பலவேறுபட்ட நிலைப்பாடுகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் குர்ட் பெக் ஈடுபட்டார்; அதுதான் கட்சி உடைந்துவிடுவதைத் தடுக்கும் என்றும் அவர் நினைத்தார். ஹெஸ்ஸ மாநிலத்தில் இருந்ததைப் போல் இடது கட்சியுடனான அணுகுமுறையை பொறுத்துக் கொள்ளும் அணுகுமுறையை கொண்ட அவர் உறுப்பினர் எண்ணிகை சரிதல் நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்பினார். கொள்கை அளவில், சமூக ஜனநாயகக் கட்சி வலதுசாரிகள் இடது கட்சியுடன் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு அஞ்சவில்லை. அப்படிப்பார்த்தால், ஏழு ஆண்டுகளுக்கு சமூக ஜனநாயக கட்சி மிக நெருக்கமான முறையில் பேர்லின் நகரமன்றத்தில் ஒன்றாக செயல்பட்டு சமூக செலவினக் குறைப்புத் திட்டங்களை வேறு எந்த மாநில அரசாங்கமும் நடத்தாத முறையில் விரிவாக நடத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இடது கட்சியை நிராகரிக்கும் நிலைப்பாட்டிற்கு அப்பாற்பட்டு மக்கள் மீது எவ்வாறு சமூக தாக்குதல்களை செயல்படுத்துவது என்பதே பிரச்சினை ஆகும். இந்த விஷயத்தில், சமூக ஜனநாயகக் கட்சி வலதுசாரிகள் சமரசம் இல்லாமல் மோதலையே கோருகின்றனர். பெக்கிற்கு எதிரான கவிழ்ப்பு சமூக ஜனநாயகக் கட்சியின் சரிவில் ஒரு புதிய கட்டத்திற்கு கட்டியம் கூறுகிறது. கடந்த வார இறுதியில் ஸ்ரைன்மயிர் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் காணப்பட்ட, நிரூபணமான ஜனநாயக நெறிகள் பற்றிய வழக்கங்களுக்கு இகழ்வு என்பது விரைவில் இன்னும் கூடுதலான முறையில் தொழிலாளர்களுக்கு எதிரான ஆக்கிரோஷ, இரக்கமற்ற நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்படும். இப்படி சதி போன்ற சமூக ஜனநாயகக் கட்சி வலதுசாரிகள் ஈடுபட்டுள்ள நடவடிக்கை ஆளும் வட்டங்களுக்கும், தொழில்வழங்குனர் அமைப்புக்களுக்கும் சமூக ஜனநாயகக் கட்சி சமூக நிலைமைகள் மீது தாக்குதல் நடத்தத் தயார் என்றும் மற்றும் முதலாளித்துவ அமைப்பை இதே இரக்கமற்ற முறையில் செயல்பட்டு காப்பாற்றும் என்பதற்கும் சைகை காட்டுகிறது. முன்டபெயரிங்-ஸ்ரைன்மயர் கூட்டு ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் உள்ள ஒரு மரபைத்தான் கொண்டுள்ளது; அதாவது அது எப்பொழுதும் கட்சியின் நலன்களை அரசுக்கும், தேவையானால் கட்சியை அந்த வழிவகையில் தியாகம் செய்வதற்கும் தயார் என்பதே அந்த மரபு ஆகும். வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மயர் தேர்ந்த அரசியல் அதிகாரி ஆவார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி அதிகம் மக்களுக்கு தெரியாது. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹெகார்ட் ஷ்ரோடர் லோயர் சாக்சனி மாநிலத்தில் பிரதமராக இருந்தபோது அவர் ஸ்ரைன்மயரை தன் அலுவலகத் தலைமைப் பொறுப்பிற்கு நியமித்திருந்தார். பின்னர் அவர் அரசாங்கச் செயலாராக நியமிக்கப்பட்டு லோயர் சாக்சனி மாநில சான்ஸ்லரியின் முழுப் பொறுப்பையும் பெற்றார். 1990 களின் கடைசியில் ஷ்ரோடர் கூட்டாட்சி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஸ்ரைன்மயர் அவருடன் பேர்லினுக்குச் சென்று சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசாங்கத்தில் அதிபரின் தலைமை நிர்வாகியானார். அதன் பின்னர் அவர் வெளியுறவு மந்திரியாகவும் கிறஸ்துவ ஜனநாயக ஒற்றுமை இயக்கம், சமூக ஜனநாயகக் கட்சி பெரும் கூட்டணியில் துணை அதிபராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியிலும் அரசாங்கத்திலும் உயர்பதவிகளுக்கு ஏற்றம் அடைந்தபோதும் ஒரு முறை கூட அவர் எந்தவொரு தேர்தலிலும் நிற்கவில்லை. சமூக ஜனநாயகக் கட்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான பிணைப்புக்களின் உருவமாக பிரான்ஸ் முன்டபெயரிங் திகழ்கிறார். அவருடைய சர்வாதிகார நடைமுறையும் அரசாங்கத்திற்கான விசுவாசமும் மிக நெருக்கமான முறையில் தொழிற்சங்கங்களின் வலதுநோக்கிய திருப்பத்துடன் பிணைப்பு கொண்டவை ஆகும். சர்வதேச நிலைமை மற்றொரு முக்கியமான கூறுபாடும் சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிப் பிரிவினால் கொண்டு வரப்பட்ட இந்த சதியில் உள்ளது; செய்தி ஊடகத்தில் அது பற்றி அதிக குறிப்புக்கள் இல்லை; ஜோர்ஜிய நெருக்கடியின் பின்னணியில் சர்வதேச நிலைமையில் ஏற்பட்டுள்ள ஒரு கூர்மையடைதலே அதுவாகும். செய்தி ஊடகம் மற்றும் அரசியல்வாதிகள் ஜோர்ஜிய நிகழ்வுகள் மற்றும் அதைத் தொடர்ந்த பின்விளைவுகள் பற்றி குறைவாக பேசினாலும், உலக அரசியலில் அது ஒரு திருப்பு முனையாகும். மேலும் ஜோர்ஜியா அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுக்கிறது; அமெரிக்க, சோவியத் யூனியனின் கலைப்பிற்கு பின்னர் ரஷ்யாவிற்கு பெரும் அழுத்தம் கொடுக்கவும் இராணுவ முறையில் அதைச் சுற்றி வளைக்கவும் பார்க்கிறது. காகசஸ் மற்றும் காஸ்பியன் பகுதியை அமெரிக்கா தன் செல்வாக்கு மண்டலமாக காண்கிறது; அங்கு உள்ள எரிபொருள் வளங்கள் மீது கட்டுப்பாட்டை நிறுவ முற்படுகிறது. ரஷ்யா இந்த விழைவுகளை எதிர்க்கிறது; எனவே உலகில் இரு மிகப் பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையே மோதல் என்பது தீவிரமாகியுள்ளது. ஐரோப்பா, எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி, தன்னுடைய சொந்த எரிபொருள் கொள்கை ஒன்றையும், இப்பகுதிக்கான பூகோள மூலோபாய நலன்களையும் தொடர்கிறது. இவ்விரண்டும் அமெரிக்க அரசாங்கத்துடன் போட்டி, ஒத்துழைப்பு என்ற இரு முறையிலும் செய்யப்படுகின்றன; அதே நேரத்தில் ரஷ்யாவுடனான உறவுகளை தக்க வைக்கவும் முற்பட்டு வருகிறது பெரும் சக்திகளுக்கு இடையே பெருகிய பூசல்களை ஒட்டி, அத்துடன் தொடர்புடைய உறுதியற்ற தன்மையையும் கருத்திற் கொண்டு, வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் முந்தைய நெருக்கடிகளில் ஒழுங்கை நிலைநிறுத்த முக்கிய பங்கை கொண்டிருந்த ஜேர்மனியின் பழைய கட்சியை (சமூக ஜனநாயகக் கட்சியை) இந்த அரசியல் எதிர்ப்பை நசுக்குவதற்காக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புகின்றனர். ஜேர்மனியின் உள் உறுதித்தன்மை எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டது பற்றி சமீபத்திய ஆய்வு ஒன்று அதிபருக்காக நடத்தப்பட்டதில் பெரும் கூட்டணியை சூழ்ந்துள்ள இத்தகைய அச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு எத்தகைய சமூக மற்றும் அரசியல் பூசல்கள் இதன் விளைவாக ஏற்படும் என்பதையும் பரிசீலித்தது. Federal Academy for Security Policy இன் ஆய்வு செய்தி ஊடகத்தில் அவ்வாறு கூறப்பட்டதுபோல் "உள்ளிருந்து வரும்" ஆபத்துக்களையும் ஆராய்ந்தது; "முன்னொருபோதுமில்லாத அரச நெருக்கடி" "வன்முறைக் கலகங்கள், ஆர்ப்பாட்டங்கள்" ஆகியவற்றை எதிர்கொள்ளும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சி தலைமையில் வலதுசாரி திடீரென மாற்றம் கொண்டுவந்துள்ளது எதிர்காலத்தின் சமூக மற்றும் அரசியல் எழுச்சிகளை எதிர்கொள்ளுவதற்கான தயாரிப்புக்களின் ஒரு பகுதிதான். |