World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
National service forum at Columbia University Obama calls for US military mobilization கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தேசிய சேவை மன்றம் இராணுவ அணிதிரளலுக்கு அழைப்பு விடுக்கிறார் ஒபாமா By Patrick Martin ஒபாமா நிர்வாகத்தின் கீழான கட்டாய இராணுவ சேவையை மீளக்கொணர்வதை தெளிவாக சுட்டிக்காட்டுவதாக இருக்கும் ஒரு பேச்சாக, வியாழனன்று இரவு இந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர், 'ஜனாதிபதியாக தனது வேலையானது இராணுவ சேவைக்கான "கடமைப்பாட்டினை" அமெரிக்க மக்கள் அங்கீகரிக்கக் கோருவதை" உள்ளடக்கியதாய் இருக்கும் என்று கூறியிருக்கிறார். "நாம் போருக்கு செல்வதாய் இருந்தால், நாம் அனைவரும் செல்வோம், ஒரு சிலர் மட்டும் அல்ல", என்று செனட்டர் பாரக் ஒபாமா அறிவித்தார். ஒபாமாவும் அவரது குடியரசுக் கட்சியின் போட்டி வேட்பாளர் மக்கெயினும் பங்கேற்ற நியூயோர்க் நகர கொலம்பிய பல்கலைக்கழக தேசிய சேவை மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். நாளின் தொடக்கத்தில், 9/11 பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வண்ணம் உலக வர்த்தக மையத்தில் நடந்த நினைவஞ்சலியில் இரண்டு வேட்பாளர்களும் பங்கேற்றனர். "Peace Corps, Americorps, Teach for America ஆகிய அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்கள் தவிர, தனியார் மற்றும் மதரீதியான திட்டங்களையும் உள்ளடங்கலாக தேசிய சேவை அமைப்பின்" பணிகள் இராணுவ ரீதியானவற்றை விடவும் கூடுதலானவற்றை உட்பொண்டிருக்கின்ற நிலையில், மெக்கெயின் மற்றும் ஒபாமா இரண்டு வேட்பாளர்களுமே அடுத்து வரும் நிர்வாகம் ஜனநாயகக் கட்சியினுடையதாய் இருந்தாலும் சரி அல்லது குடியரசுக் கட்சியினுடையதாய் இருந்தாலும் சரி அமெரிக்க இராணுவ படைகளை விரிவுபடுத்துவதே முக்கிய இலக்காக இருக்கும் என்பதன் மீதே மையக்கவனம் செலுத்தினர். அமெரிக்க சமூகத்தை அதிகமான அளவில் இராணுவமயமாக்குவதற்கு இருகட்சிகளும் ஆதரவளிப்பதன் ஒரு அடையாளமாக, குடியரசுக் கட்சி தேர்தலில் வென்றால் ஒபாமாவை தனது 'தேசிய சேவை' ஒருங்கிணைப்பாளராக சிபாரிசு செய்ய தயார் என்று மெக்கெயின் நகைச்சுவையாக குறிப்பிட, தானும் அவ்வாறே செய்வதாக ஒபாமாவும் பதிலளித்தார். இந்த விவாத மன்றத்தை பொது ஒளிபரப்பு சேவையின் ஜூடி உட்ரபும் டைம் இதழின் ஆசிரியரான ரிச்சர்டு ஸ்டெங்கலும் தொகுத்து வழங்கினார்கள். இந்த இதழில் 2007 முதன்மைக் கட்டுரையாக வெளிவந்த "The Case for National Service" கட்டுரைக்கு ஸ்டெங்கல் பொறுப்பாக இருந்தவர் என்றும் அந்த கட்டுரை தான் "இந்த இயக்கத்துக்கு" தூண்டுகோலாக இருந்தது என்றும் ஸ்டெங்கலை அறிமுகப்படுத்திய உட்ரப் தெரிவித்தார். இரண்டு வேட்பாளர்களில் முதலில் விவாதத்தில் கேள்வி தொடுக்கப்பட்டது மக்கெயினிடம் தான். உட்ரபிடம் இருந்து வந்த நேரடியானதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கட்டாய இராணுவசேவை வரைவை மீட்டமைப்பதை நிராகரித்தார், முழுக்க தன்னார்வ அடிப்படையிலான இராணுவத்தை பராமரிப்பதற்கான ஆதரவை மொழிந்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு 55 நாட்களே இருக்கின்றதொரு நிலையில் இத்தகையதொரு பொறுப்பைத் தட்டிக்கழித்தல் எதிர்பார்க்கப்படுவது தான், ஒபாமாவிடம் இத்தகையதொரு கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அவரும் இதே போன்றதொரு பதிலையே அளித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. உட்ரப் மற்றும் ஸ்டெங்கலுடனான தனது விவாதத்தின் போது, "தேசிய சேவையின்" கட்டாயத்தை அமெரிக்க இராணுவம் தலையிட நிறுத்தப்படுகின்ற சர்வதேச நெருக்கடியின் வெடிப்புடன் மக்கெயின் தொடர்ந்து தொடர்புபடுத்தினார். ஜோர்ஜியாவில் ரஷ்யாவின் தலையீட்டையும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு ஆட்சியின் நிலை சீர்குலைந்து வருவதையும் மேற்கோள் காட்டிய அவர், "நாம் சேவை அளிக்க கோரும் ஏராளமான நிகழ்வுகள் உலகில் நடந்து கொண்டிருப்பதை" மக்கள் காண முடியும் என்று தெரிவித்தார். அமைதிப்படையின் உள்ளூர் பதிப்பான Americorps இன் அளவை மும்மடங்காக்க செனட்டில் ஜனநாயகக் கட்சியின் எட்வார்ட் கென்னடியும் குடியரசுக் கட்சியின் ஓரின் ஹேட்சும் கொண்டு வரக் கூடிய இருகட்சி ஆதரவுடனான சட்டத்திற்கு, நானும் கையெழுத்திடுவேன் என்று மெக்கெயினும் தெரிவித்தார். ஒபாமாவின் கருத்துகள் அமெரிக்க இராணுவத்தை கட்டுவதுடன் இன்னும் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தது. இராணுவப் படைகள் மீது புகழ்ச்சி பொங்கி வழிய சற்று நீண்ட நேரம் பேசினார் அவர். தொடர்ந்த, நீண்டகால வெளிநாட்டு இருத்தல்கள் காரணமாக சாதனை எண்ணிக்கையிலான இராணுவ அதிகாரிகள் இராணுவத்தை விட்டு விலகுவது குறித்து உட்ரப் அவரிடம் கேட்டார். அதற்கு ஒபாமா பதிலளித்ததாவது, "நல்லது, எல்லாவற்றிற்கும் முதலாய் ஒரு தலைமை தளபதியாக என்னுடைய வேலை அமெரிக்காவை பாதுகாப்பாகக் காப்பது. அதாவது உலகில் நாம் மிகச் சிறந்த இராணுவத்தை பெற்றிருப்பதை உறுதிசெய்வது. அதாவது உலகில் சிறந்த இராணுவ அதிகாரிகளை பெற்றிருப்பது. நம்மிடம் இப்போது அது இருக்கிறது, ஆனால் இந்தப் போர்களின் விளைவாக அவர்கள் அதீதமான அளவில் அழுத்தமுற்று உள்ளனர். நமது இராணுவம் மற்றும் கப்பல்படையின் அளவினை அதிகரிப்பது நமக்கு மிகவும் முக்கியம், இதன் மூலம் நமது இளைஞர்களும் யுவதிகளும் மேற்கொள்ள நேரும் பயணங்களின் அளவை நாம் மட்டுப்படுத்த முடியும் என்று நான் கருதுகிறேன். இரண்டாம் உலகப் போரில் ஜெனரல் ஜோர்ஜ் பாடானின் படையில் தனது தாத்தாவின் சேவையை நினைவுகூர்ந்த அவர், முன்னாள் படைவீரர்களுக்கு ஆதரவான அரசாங்க கொள்கைகளின் காரணமாக GI Bill கல்வி ஆதாயங்கள் மற்றும் ஒரு வீடு வாங்குவதற்கு பெடரல் வீட்டு வசதி நிர்வாக கடன்கள் ஆகியவற்றுக்கு தனது தாத்தா தகுதியுடையவராய் இருந்தார் எனக் குறிப்பிட்டார். "வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்த புனிதமான கடமைப்பாடு சென்ற இரண்டு போர்களில் எங்களுக்குக் கிட்டாமல் போய் விட்டது" என்று கூறிய ஒபாமா, "நான் அதனை மீட்டமைக்க விரும்புகிறேன்" என்றார். இராணுவ சேவை விரிவாக்கம் குறித்த பிரச்சாரத்தில் தனது மிகவும் நேரடியான கூற்றாக ஒபாமா இவ்வாறு அறிவித்தார்: "ஆனால் ஒரு ஜனாதிபதிக்கு, ஏதோ சிலரின் கடமைப்பாடாக அல்லாமல் பலரின் கடமைப்பாடாக பேசுவதும் மிகவும் முக்கியமானதாகும். உங்களுக்கு தெரியும், கடந்த 19 மாதங்களில் வெளிப்படையாகவே நான் நிறைய பயணம் செய்தேன் என்று. மிட்வெஸ்ட் அல்லது சவுத்வெஸ்ட் அல்லது சவுத் முழுவதிலும் நீங்கள் சிறு நகரங்களுக்கு பயணம் செய்தால், ஒவ்வொரு நகரத்திலும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் சேவையாற்றும் ஏராளமான இளைஞர்கள் இருப்பார்கள். கூடுதலாய் வளர்ந்த நகரப் பகுதிகளில் இந்தநிலை எப்போதும் இருப்பதில்லை. இது ஒரு முக்கியமான கடமை என்பதை வலியுறுத்துவது ஒரு ஜனாதிபதிக்கு மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். போருக்கு செல்வதாய் இருந்தால், நாம் அனைவரும் செல்வோம், ஒரு சிலர் மட்டும் அல்ல". தேசிய சேவைக்கான ஒரு மன்றத்தில் பேசியது என்கிற பொருளில் எடுத்துக்கொண்டால், இந்த கருத்துகள் ஒரு பயங்கரமான தாக்கத்தினை மனதில் கொண்டிருக்கிறன. தன்னார்வ படையில் இராணுவ சேவை என்பது மற்ற பிரிவினரை விட மிக அதிகமானதொரு அளவில் சிறு நகர மற்றும் கிராம இளைஞர்களால் மேற்கொள்ளப்படுகிறது, பொருளாதார மற்றும் கலாச்சார காரணங்கள் இரண்டுக்காகவும். பெரிய நகரங்களின், மற்றும் குறிப்பாக அதன் புறநகர்ப் பகுதிகளின் மத்தியதர வர்க்க மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்கள் இராணுவ பட்டியலில் இடம்பெறுவது என்பது சற்று அபூர்வமான விஷயமாகவே இருக்கிறது. இராணுவ சேவையில் பரவலாகப் பங்கேற்பதற்கான தனது கோரிக்கை தன்னார்வ படையில் கூடுதல் பேரை இடம்பெறச் செய்ய ஊக்கப்படுத்துவதை உள்ளடக்கியிருக்கும் என்கிற வாய்ப்பை, குறைந்தபட்சம் ஆரம்பத்திலேனும் ஒபாமா வைத்திருக்கிறார். ஆனால் அடுத்த சுற்று ஏகாதிபத்திய போர்களுக்கு பலிகடாக்களை உற்பத்தி செய்வதில் இது தோல்வியுறும்போது,-சந்தேகத்திற்கிடமின்றி அப்படித் தான் ஆகும் - அடுத்த தர்க்கரீதியான படி, தேர்ந்தெடுத்த சேவை அமைப்பை (Selective Service System), செயற்படா வடிவத்தில் இது ஏற்கனவே இருந்தாலும், நிலவும் இந்த அமைப்பை மீண்டும் செயற்படுத்துவதாகத் தான் இருக்கும். அரசியல் பார்வையில், கொலம்பியாவில் ஒபாமா காட்சியளித்தது, தனது பிரச்சாரத்தின் தன்னார்வலர்கள் மற்றும் காரியாளர்களில் முக்கிய அங்கமாக இருக்கும் போர் எதிர்ப்பு கல்லூரி மாணவர்களிடம் இருந்து வரக் கூடிய எந்தவொரு நெருக்குதலையும் நிராகரிக்க தான் தயாராக இருப்பதை அமெரிக்க அரசியல் ஸ்தாபன முறைக்கு விளங்கப்படுத்துவதற்காகவே ஆகும். அந்த விஷயத்தில், ஒபாமா விரிவுபடுத்திய இராணுவ சேவைக்கு அழைப்பு விடுத்ததுடன் நிற்கவில்லை, பல கல்லூரி வளாகங்களில் ரிசேர்வ் அதிகாரிகள் படைப்பயிற்சியை (Reserve Officers Training Corps (ROTC)) நீக்கி இருப்பதை நேரடியாக தாக்கவும் செய்தார். ஈரான் ஜனாதிபதி அகமனெஜாத் வளாகத்தில் பேச கொலம்பியா பல்கலைக்கழகம் அழைப்பு விடுக்க முடிந்தது, ஆனால் 1969ம் ஆண்டு முதல் சிறப்பு அதிகாரிகள் பயிற்சி படையினரை (ROTC) அதனால் அழைக்க முடியவில்லை என்பதை ஸ்டெங்கல் சுட்டிக் காட்டினார். ஒபாமா பதிலளித்தார், "ஆம், அதில் நாம் தவறு செய்திருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். இராணுவ கொள்கையை பொறுத்த வரை கருத்து வேறுபாடுகள் கொண்ட மாணவர்கள் இருப்பதை நான் அறிகிறேன். ஆனால் இராணுவ சேவையில் பங்கேற்கும் வாய்ப்பு கொலம்பியா பல்கலைக்கழகத்திலோ, வேறெங்கிலுமோ, அல்லது எந்த பல்கலைக்கழகத்திலுமோ இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதாக இருக்குமானால், அது தவறு என்றே நான் கருதுகிறேன்". கொலம்பியா அல்லது வேறெங்கிலும் இளைஞர்களுக்கு "இராணுவ சேவையில் பங்கேற்கும் வாய்ப்பு" மறுக்கப்பட்டதாக கருத்து தெரிவிப்பது அபத்தமானது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இளைஞர்களை இராணுவத்துக்குள் தள்ளுவதற்கு இந்த அளவுக்கு ஊடக விளம்பரமும் சமூக அழுத்தமும் - இங்கு பெரிய அளவில் பொருளாதார ரீதியாக - கொடுக்கப்படுவதில்லை. வியட்நாம் போர் சகாப்தத்தின் போது நூற்றுக்கணக்கான வளாகங்களில் சிறப்பு அதிகாரிகள் பயிற்சி படையினர் (ROTC) வெறுப்பின் இலக்காக மாறி, பல சந்தர்ப்பங்களில் ஒரு மாணவர் அமைப்பாக தடை செய்யப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் பெரிய அளவில் 1975க்கு பின்னர் முடிவுற்றன, ஆனால் ஆண்பால் மற்றும் பெண்பால் ஓரினச் சேர்க்கையாளர்கள் இராணுவத்தில் வெளிப்படையாகப் பணிபுரிவதன் மீது பென்டகன் கொண்டிருந்த நீண்டகால தடையை மறு உறுதி செய்யும் வகையில் கிளின்டன் நிர்வாகம் "கேட்கவும் வேண்டாம், சொல்லவும் வேண்டாம்" என்பதான கொள்கையை ஸ்தாபித்த பின்னர், ஏராளமான வளாகங்களில் இவை தொடர்ந்தன அல்லது மறுஸ்தாபிப்புக்குள்ளாகின. இத்தகையதொரு தடை, பெருநிறுவன பணியமர்த்துவோர் மீது பல பல்கலைக்கழக வளாகங்களில் திணிக்கப்படும் பாரபட்சம் காட்டா விதிகளை மீறுகிறது. உட்ரபிடம் இருந்தான இன்னுமொரு கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, இளைஞர்களை இராணுவ சேவையில் பணியமர்த்துவதற்கு -அவர்களை இராணுவ வன்முறையில் பங்கேற்பாளர்களாகவும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புடையவர்களாகவும் ஆக்குவதற்கு- தன்னுடைய முயற்சிகள் குறித்து விலாவாரியாய் தெரிவித்தார். "இளைஞர்களுக்கு சேவை செய்ய தூண்டுகோலாய் இருப்பது என்பது ஜனாதிபதி தனித்துவமாய் கடமைப்பாடு கொண்டதொரு செயலாகும்" என்று தெரிவித்த அவர், இவை வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு துணையாக செயல்படும் அரசாங்கத்துறை, USAID அல்லது சிவில் இன்ஜினியரிங் ஆகிய பொதுப்பணித் துறை பணிகளாகவும் இருக்கலாம் என்றார். மீண்டும் இராணுவ சேவையில் பரவலான பங்கேற்பு குறித்த விவாதத்திற்கு திரும்புகையில் ஒபாமா மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே சமயத்தில் ஆழமாக பிற்போக்குத்தன்மை கொண்டதான வார்த்தைகளை கையாண்டார். "போர் சமயத்தில் நமக்கு சிறப்பு கடமைப்பாடுகள் இருப்பதாக நான் கருதுகிறேன்" என்றார். "உலகெங்கிலும் மோதல்களுக்கான சாத்தியங்களை எப்போதும் நாம் கொண்டிருக்கிறோம், நமது இராணுவம் வலிமையாகவும் தயாராகவும் இருக்க வேண்டியுள்ளது. எனவே போர் இருக்கிறதோ இல்லையோ இராணுவ சேவை மற்றும் பிற வழிகளாலான சேவைகளை ஊக்குவிப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் கடந்த பல வருடங்களாக, இந்த சுமையானது ஒரு குறுகிய குழுவினால் மட்டுமே தாங்கப்பட்டு வந்திருப்பது தான் பிரச்சினை என்று நான் கருதுகிறேன்". ஏறக்குறைய சமநிலையான ஒரு மோதலைக் கொண்டிருக்கும் இத்தேர்தலில், முடிவு எப்படி இருக்கும் என்பது இன்னும் சந்தேகத்திற்கிடமாகவே இருக்கக் கூடியதொரு நிலையில், உண்மையான முடிவு நிர்ணயிப்பவர்களின் - நிதி, அரசியல் மற்றும் இராணுவ மேல் வர்க்கத்தினரின் மிக உயர்ந்த நிலைகள் - ஆதரவை வென்று விட ஒபாமா முயற்சி செய்கிறார். "சரிசமமான தியாகம்" மற்றும் "நியாயமான தன்மை" என்கிற பனிப்போர்வையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அமெரிக்க இராணுவ எந்திரத்திற்கு மில்லியன்கணக்கான ஆட்களை அளிக்க முடியும், இது ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் போர்களை முன்னெடுத்து செல்வதற்கு மிகவும் அவசியமாக இருக்கும் என்பது இவரின் ஆலோசனை. அவ்வப்போது தனது அனல் பறக்கும் பேச்சின் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் இலட்சியவாதத்திற்கு அழைப்பு விடும் வேளையில், ஒபாமா ஆளும் வர்க்கத்திற்கு ஒரு கொடூர பேரத்தை முன்வைக்கிறார்: என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுங்கள், உங்களுக்கு இரத்தம் கொண்டு கடனை நான் திருப்பி செலுத்துகிறேன். |