World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Ukraine: US-Russia conflict provokes government collapse

உக்ரைன்: அமெரிக்க - ரஷிய முரண்பாடு அரசாங்கத்தின் பொறிவைத் தூண்டுகிறது

By Niall Green
10 September 2008

Back to screen version

பிரதம மந்திரி யூலியா டிமோஷெங்கோ மற்றும் ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோ வின் சிறு நமது உக்ரேனியன் கட்சி (Our Ukraine party) ஆகிய இரண்டின் கூட்டணி அரசாங்கம் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி கடுமையான கருத்து வேறுபாடுகளை அடுத்து பொறிந்தது.

ஒரு புதிய கூட்டணி அமைக்கப்படாவிட்டால் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடித் தேர்தல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த யுஷ்செங்கோ, நெருக்கடி பற்றிய குற்றச் சாட்டை டிமோஷெங்கோ மீது சுமத்தினார். இந்த இருவரும் 2004ம் ஆண்டு "ஆரஞ்சுப் புரட்சியில்" முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள். வாஷிங்டனும் மேற்கு ஐரோப்பிய சக்திகளும் ரஷிய சார்புடைய வேட்பாளாரான விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை நடத்தி ஜனாதிபதி பதவி யுஷ்செங்கோவிற்கு கிடைக்குமாறு செயல்பட்டன.

ஆகஸ்ட் மாதம் ஜோர்ஜியாவில் ரஷிய நடவடிக்கைகளை எதிர்த்து பாராளுமன்றத்தில் கண்டித்ததை, டிமோஷெங்கோ ஆதரிக்க மறுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து யுஷ்செங்கோவின் நமது உக்ரைன் கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். மேலும் செப்டம்பர் 2ம் தேதி ரஷிய சார்பு உடைய எதிர்க்கட்சியான வட்டாரக் கட்சி (Party of the Regions) ஜனாதிபதியின் அதிகாரங்கள் பெரிதும் குறைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்து தீர்மானத்தை முன்வைத்ததற்கும் அமைச்சரவையில் இருந்து அவர்கள் வெளியேறினர். தீர்மானத்திற்கு டிமோஷெங்கோவின் கட்சி அவருடைய கூட்டணி எதிர்ப்பாளரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக ஆதரவு கொடுத்திருந்தது.

அமைச்சரவை பிளவைத் தொடர்ந்து தொலைக்காட்சி உரை ஒன்றில் பேசிய யுஷ்செங்கோ, டிமோஷெங்கோவின் திட்டமிட்ட அரசியல் அமைப்பு மாறுதல்களைப்பற்றி குறிப்பிடுகையில் "பாராளுமன்றத்தில் அரசியல் மற்றும் அரசிலமைப்பு முறை மாற்றம் துவங்கிவிட்டது" என்றார்.

அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பைனான்சியல் டைம்ஸுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் யுஷ்செங்கோ ரஷியா இந்த அரசியல் நெருக்கடிக்கு எரியூட்டியதாகக் கூறினார். டிமோஷிங்கோ "வெளிநாட்டு சக்திகளுடன்" இரகசியப் பேச்சுக்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு விடையிறுக்கையில் டிமோஷெங்கோ தேசியத் தொலைக்காட்சியில் பின்வருமாறு தெரிவித்தார்: "ஜனாதிபதி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுவது பற்றி வருந்துகிறேன். இக்கூட்டணி அவருடைய உத்தரவின் பேரில் தகர்க்கப்பட்டது."

இந்த நெருக்கடி யுஷ்செங்கோவின் மூர்க்கமான அரசியலின் விளைவு என்றும் பிரதம மந்திரி கூறினார். ஏனெனில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தன்னுடைய பொதுத் தோற்றக் கருத்தை அதிகப்படுத்திக் கொள்ள அவர் முற்படுகிறார் என்றும் அவர் கூறினார். இத்தேர்தலில் அவரும் டிமோஷெங்கோவும் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று கடினமான நடவடிக்கையில், யுஷ்செங்கோ தேசத் துரோகம் என்ற விதத்தில் குற்ற விசாரணைக்கு டிமோஷங்கோவை உட்படுத்த முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 8ம் தேதி அரசாங்க வக்கீல்கள் முன்பு தான் வரவேண்டும் என்று நீதிமன்ற ஆணை வந்துள்ளதாக டிமோஷெங்கோ கூறியுள்ளார். இதைப் பற்றி கருத்து தெரிவிக்க அரசாங்க வக்கீல்கள் மறுத்துவிட்டனர்.

உக்ரைன் அரசியலமைப்பின்படி இரு தலைவர்களும் இந்த வார இறுதி வரை தங்கள் கூட்டணியைப் புதுப்பிக்க முடியும். அதைச் செய்யமுடியவில்லை என்றால், பின் வெர்கோவ்னா ராடா (பாராளுமன்றம்) 30 நாட்களுக்குள் ஒரு புதிய கூட்டணி காண அனுமதிக்கப்படுகிறது.

இரு "ஆரஞ்சுப் பிரிவுகளும்" ஒரு தற்காலிக உடன்பாட்டிற்குக் கூட வரமுடியவில்லை என்றால் யுஷ்செங்கோ மற்றொரு பாராளுமன்றத் தேர்தல்களுக்கு அழைப்புவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக பொதுத் தேர்தல் நடைபெற்றால் அது மூன்று ஆண்டுகளில் மூன்றாம் தேர்தலாகப் போகும்.

கடந்த செப்டம்பர் 30, 2007 பாராளுமன்றத் தேர்தலில், யுஷ்செங்கோ தலைமையில் உள்ள நமது உக்ரைன் கட்சி வாக்குகளில் 14 சதவிதத்தை மட்டும் பெற முடிந்தது. Block Yulia Tymoshenko 30 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றது. முன்னாள் பிரதம மந்திரி விக்டர் யானுகோவிச் தலைமையில் இரு வட்டாரங்களின் கட்சி, 34 சதவிகிதத்தைப் பெற்றது.

யானுகோவிச்சின் தலைமையில் வட்டாரங்கள் கட்சி வழிநடத்திய கூட்டணி அரசாங்கத்தை பதவியில் இருந்து இறக்குவதற்காக 2007 வாக்களிப்பு நடந்தது. இதற்கு முன் ஜனாதிபதிக்கும் டிமோஷெங்கோவிற்கும் "ஆரஞ்சுக் கூட்டணி" முறிந்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றிருந்தது.

யுஷ்செங்கோ மற்றும் டிமோஷெங்கோவிற்கும் இடையேயான பூசல்கள் அதிக அதிகாரத்தை எவர் செலுத்துவது, ஜனாதிபதியா அல்லது பிரதம மந்திரியா என்பதில் மையம் கொண்டுள்ளது. மிக அதிக வருமானம் கொடுக்கக்கூடிய தனியார்மயமாக்குதல் திட்டங்கள், எண்ணெய், எரிவாயு திட்டங்கள் நாட்டின் வழி செல்லுதல், அரசாங்க ஒப்பந்தங்கள், நீதித்துறைக் கட்டுப்பாடு போன்றவை அடையப்பட முடியும் என்ற நிலையில் பாராளுமன்றத்தின் கட்சி அடிப்படைத் தளத்தை வெல்ல விரும்பும் போட்டியிடும் உக்ரைன் தன்னலக்குழுக்கள் தங்கள் நலன்களுக்கு ஏற்ப டிமோஷெங்கோ, யுஷ்செங்கோ அல்லது வட்டாரங்கள் கட்சியின்மீது சார்பு கொண்டுள்ளன.

 

செனியின் வருகை

கீவில் ஏற்பட்ட அரசியல் மோதல் வாஷிங்டன், மாஸ்கோவிற்கு இடையே பெரும் சக்திகள் கொண்டுள்ள போட்டியினால் வியத்தகு அளவில் பெரிதாகி விட்டன. உக்ரைனில் யுஷ்செங்கோ பெரிதும் செல்வாக்கை இழந்துள்ளார். தன்னுடைய அரசியல் போட்டியாளரிடம் இருந்து, தான் அரசியலில் தப்பிப் பிழைப்பதற்கு வாஷிங்டனுடைய ஆதரவை அவர் நம்பியுள்ளார். உக்ரைனுக்குள் சற்று அரசியல் ஆதரவைக் கொண்டுள்ள டிமோஷெங்கோவிற்கு அவருடைய பெரும் சொத்துக்கள் மற்றும் அவருடைய கணவரின் சொத்துக்கள் துணை நிற்கின்றன. இவர் அடுத்த ஆண்டு தேர்தல்களில் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிவிட முடியும் என்று கருதுகிறார்.

இந்த இலக்கைக் கருத்திற்கொண்டு டிமோஷெங்கோ மாஸ்கோ மற்றும் ரஷியாவுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட கிழக்கு உக்ரைன் தன்னலக் குழுத் தலைவர்களுடன் உடன்பாடுகளைக் காண தீவிரமாக உள்ளார். இதுதான் அவரை ரஷிய-எதிர்ப்பு வாய் வீச்சை முன்பு கூறியது போல் பயன்படுத்தாமல் இருக்கச் செய்துள்ளது. இதையொட்டித்தான் யுஷ்செங்கோ மற்றும் வாஷிங்டன் கோரியுள்ளபடி சமீபத்திய கிரெம்ளினின் ஜோர்ஜியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அவர் கண்டிக்கவும் மறுத்துள்ளார்

இவ்வித அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவு செப்டம்பர் 5ம் தேதி காகசஸ் பகுதி மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க துணை ஜனாதிபதி செனி, உக்ரைனுக்கு விஜயம் செய்தபோது அவருக்கு ஒரு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஜோர்ஜியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே தெற்கு ஒசேஷியா மற்றும் அப்காஜியா மாநிலங்களின் வருங்கால நிலை பற்றி ஏற்பட்ட பூசலைத் தொடர்ந்து அமெரிக்கா மாஸ்கோவிற்கு எதிராகக் கொண்டிருக்கும் ஆக்கிரோஷத் தன்மையைப் பெருக்கும் வகையில் இப்பயணம் அமைந்தது.

கீவில் இருந்தபோது, செனி நேட்டோவில் உக்ரைனின் உறுப்புத் தன்மைக்கு ஆதரவு கொடுத்து யுஷ்செங்கோ மற்றும் டிமோஷெங்கோ இருவரும் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து உக்ரைனை மேற்குடன் இன்னும் கூடுதலாக இணைப்பதில் இயைந்து செயல்படுமாறு வலியுறுத்தினார்.

"தாங்கள் நேட்டோவுடன் சேருவது பற்றி முடிவெடுப்பதற்கான உரிமை உக்ரைனியர்களுக்கு உண்டு. அதேபோல் நேட்டோவிற்கும் அவர்கள் தயாராக இருந்து காலமும் சரியாக அமைந்துவிட்டால், கூட்டில் சேருமாறு உக்ரைனை அழைக்கும் உரிமை உண்டு" என்று செனி கூறினார். இது அமெரிக்கத் தலைமையிலான இராணுவ அமைப்பில் உக்ரைன் சேருவது பற்றி நாட்டுக் குடிமக்களில் மிக அதிகப் பெரும்பான்மையினர் எதிர்த்துள்ளதைப் பொருட்படுத்தாத கருத்து ஆகும்.

டிமோஷெங்கோ மற்றும் யுஷ்செங்கோவை கீவில் செனி தனித்தனியே சந்தித்தார். ஜனாதிபதியுடன் அவர் பேசும்போது, நேட்டோ உறுப்பு அந்தஸ்திற்கான யுஷ்செங்கோவின் திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து உக்ரைனின் பாதுகாப்பில் அமெரிக்காவிற்கு "ஒரு ஆழ்ந்த, நீடித்த ஆர்வம்" உண்டு என்று கூறினார்.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி வாஷிங்டன் ஆதரவு கொடுத்திருந்த "ஆரஞ்சுப் புரட்சியின்போது" ரஷிய எதிர்ப்பாளர்களாக இருந்தவர்களைத் தங்கள் பிணைப்பைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். "ரஷியாவின் அச்சுறுத்தல்களைக் கடப்பதற்கு உக்ரைனின் சிறந்த நம்பிக்கை ஒற்றுமையாக இருப்பது" என்றும் அவர் வலியுறுத்தினார்.

உக்ரைன் தலைவர்கள் இருவரிடமும் அவர்களுக்கு இடையே இருக்கும் பிளவிற்கு மாஸ்கோதான் காரணம் என்று செனி கூறியதாக அவருடைய உதவியாளர்கள் தெரிவித்தனர். "உக்ரைனுக்கு இது சோதனைக்காலம் என்பதை செனி ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சமீபத்திய ரஷிய செயல்கள் மூலம் இது வெளிப்பட்டுள்ளது" என்றும் செய்தித் தொடர்பாளர் மெகன் மிட்செல் கூறினார்.

செனியின் உதவியாளர்கள் உக்ரைன் அரசியலின் உறுதியைக் குலைக்கும் முக்கிய சக்தி என்று ரஷியாவைச் சுட்டிக் காட்டியிருக்கையில், வாஷிங்டனால் 2004ல் ஊக்கம் கொடுக்கப்பட்ட டிமோஷெங்கோவிற்கும் யுஷ்செங்கோவிற்கும் இடையேயான உடன்பாடு எப்பொழுதுமே மெல்லிய இழைத் தன்மையைக் கொண்டிருந்து. அது பழைய ரஷியச் சார்பு உடைய குச்மா ஆட்சியிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக இருந்தது. டிமோஷெங்கோ பொதுவாக ஒரு மேலைச்சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில், அவருடைய திட்டங்கள் அவருடைய உடனடி நலன்கள் மற்றும் அவர் கட்சியான Bloc Yulia Tymoshenko வின் சார்பைக் கொண்டிருந்த பெருவணிகத்தின் உடனடி நலன்களையும் தளமாகக் கொண்டிருக்கிறது.

2004ல் இருந்தே யுஷ்செங்கோவும், டிமோஷெங்கோவும் அதிகாரத்தை செலுத்துவதற்கு கடுமையாக போட்டியிட்டு வந்துள்ளனர். உக்ரைனின் உயரடுக்கிற்கு "ஆரஞ்சுப் புரட்சி" என்பது முந்தைய லியோனிட் குச்மா ஆட்சியின் போது ஒதுக்கப்பட்டிருந்த போட்டி தன்னலக்குழுக்கள் ஒருங்கிணைந்து வருவதற்கான ஒரு தேவைப்படும் கூட்டணி என்றுதான் இருந்தது.

ஒருபொழுதும் ஒரு உண்மையான ஜனநாயக இயக்கமாக இருந்ததில்லை என்ற தன்மையில், கொள்கையற்ற "ஆரஞ்சுப் புரட்சியின்" தன்மை யுஷ்செங்கோவும் டிமோஷெங்கோவும் தங்கள் அதிகார நெம்புகோல்களைப் பயன்படுத்தி தங்கள் போட்டியாளர்களை வலுவிழக்கச் செய்து தங்கள் மற்றும் தங்கள் துதிபாடுவோரின் செல்வக் கொழிப்பை உயர்த்தத்தான் முற்பட்டனர் என்பதில் இருந்து நன்கு அம்பலாமாயிற்று.

மிக உயர்ந்த பணவீக்கம், எங்கும் படர்ந்த ஊழல் மற்றும் பாரிய சமூக சமத்துவமின்மை ஆகியவை யுஷ்செங்கோவின் ஆழ்ந்த செல்வாக்கிழப்பிற்கு காரணங்கள் ஆகும். மேலை செய்தி ஊடகத்தில் ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தலைவர் என்று தொடர்ந்தும் கூப்பாடு போடப்படும் ஜனாதிபதி இப்பொழுது கருத்துக் கணிப்பில் 8 சதவிகித ஆதரவைத்தான் கொண்டுள்ளார்.

ஜோர்ஜியாவில் உள்ள மிகெய்ல் சாகேஷ்விலி ஆட்சிக்கு யுஷ்செங்கோ கொடுக்கும் அரசியல் ஆதரவு பல உக்ரைனியர்களால் பெரும் சந்தேகத்துடன் அல்லது அப்பட்டமான விரோதப் போக்காகக் காணப்படுகிறது. ரஷியாவுடன் உக்ரைன் நெருக்கமான பொருளாதார, பண்பாட்டு, வரலாற்றுப் பிணைப்புக்களைக் கொண்டுள்ளது. மாஸ்கோவுடன் உறவுகளை கசப்பாக்கிக் கொள்ளும் எண்ணம் பெரும்பாலான உக்ரைனியர்களுக்குக் கிடையாது.

அமெரிக்காவைத் தளமாக கொண்ட அரசியல் பகுப்பாய்வாளர்கள் மெட்லி குளோபல் அட்வைசர்ஸ் கீவில் "ஆரஞ்சுப் புரட்சி" கூட்டணியின் முறிவு மாஸ்கோவிற்கு சாதகமாக உள்ளது என்று கூறியுள்ளனர். "ரஷியா சற்றும் சிறு திருப்திக் களிப்புடன் நிகழ்வுகளைக் காண்கிறது. முக்கியமான எரிவாயு விலை பேச்சுக்கள் வரவிருக்கையில், ரஷியா மாஸ்கோ ஆதரவுடைய சக்திகள் கொண்ட அரசாங்கத்துடன் டிமோஷெங்கோ இணைந்து கொள்ளுவார் என அது நம்பும்."

கீவில் அரசியல் அறிவியல் பேராசிரியாராக உள்ள Olexiy Haran முன்னாள் "ஆரஞ்சுப் புரட்சி" பங்காளிகள் உறவுகள் முறிந்ததை மாஸ்கோ பயன்படுத்திக் கொள்ள முயலும் என்று எச்சரித்துள்ளார். அரசியல் தேக்க நிலை, "நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொள்ள விரும்பும் உக்ரைனின் முயற்சிகளைச் அது சிக்கலாக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

கீவில் அரசாங்க நெருக்கடி, குறிப்பாக விக்டர் யுஷ்செங்கோவின் நெருக்கடியில் உள்ள அரசியல் வருங்கால நலன்கள், உண்மையில் மாஸ்கோவில் திருப்தியுடன்தான் காணப்படும். மெட்வேடெவ்/புட்டின் ஆட்சி அமெரிக்க ஆதரவு உடைய உக்ரைன் ஜனாதிபதியை முன்னாள் சோவியத் பகுதியில் தனக்குள்ள முக்கிய எதிர்ப்பாளர்களில் ஒருவராகக் காண்கிறது. டிமோஷெங்கோ நட்புடன் இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறது.

டிமோஷெங்கோ அல்லது யுஷ்செங்கோ, வட்டாரங்கள் கட்சியுடன் உடன்பாடு கொண்டு யானுகோவிச்சுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளக்கூடும் என்ற ஊகம் அதிகமாக கீவில் உள்ளது. 2004 ஜனாதிபதித் தேர்தலில், யானுகோவிச் ''ஆரஞ்சுப் புரட்சியின்'' போது ரஷ்யாவின் கைப்பாவை மற்றும் உக்ரைன் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர் என்று இவர்களால் உரிமை கோரப்பட்டவர்.

வட்டாரங்கள் கட்சியின் பெரும் பில்லியனர் ஆதரவாளரும் உக்ரைனின் மிகப் பெரிய பணக்காரருமான Rinat Akhmetov இன்னும் நட்புத் தன்மை உடைய நிலைப்பாட்டை சமீப மாதங்களில் நேட்டோ மீது கொண்டுள்ளார். மேற்கு கூட்டுடன் உக்ரைன் பிணைந்தால் அது வருங்காலத்தின் நாட்டினை பாரிய ஆயுத தொழில்களுக்கு பெரும் ஏற்றம் தரும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால், அக்மேடோவும் மாஸ்கோவுடன் நெருக்கமான ஒத்துழைப்பின் தேவை வேண்டும் எனக் கருதும் வட்டாரக் கட்சியும் அதே நேரத்தில் மேற்கில் உள்ள பெருவணிகத்துடன் மாற்று உறவுகளை வளர்க்கவும் விரும்புகின்றனர். ஏனெனில் ரஷியாவுடன் மிக நுட்பமான வணிக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் இணைப்புக்களுக்கு கடும் சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்பது பற்றியும் கவலை கொண்டுள்ளனர்.

யுஷ்செங்கோ மற்றும் டிமோஷெங்கோவிற்கும் இடையே இருந்த அதிக வலுவற்று இருந்த கூட்டணியின் சமீபத்திய முறிவு மற்றும் ---சாகேஷ்வில்லி ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு உடைய முரட்டுத்தனமான இராணுவ நடவடிக்கைகளும்--- அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த "வண்ணப் புரட்சிகளில்" மூலம் ஜனநாயக இலக்குகளை அடைவது ஒருபோதும் இயலாது என்ற படிப்பினையைக் இது கொடுக்கின்றது.

2003 ல் ஜோர்ஜியாவிலும், உக்ரைனில் 2004லும் அதிகாரத்தில் இருத்தப்பட்ட சக்திகள் உள்ளூர் தன்னலக் குழுக்கள் மற்றும் முந்தைய ஆட்சிகளில் இருந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளின் உறுதியற்ற கூட்டணிகள் ஆகும். இவை தங்கள் வருங்கால விதியை வாஷிங்டனின் திட்டங்களான இப்பகுதியில் அதன் செல்வாக்கை மாஸ்கோவின் இழப்பில் பெருக்குவதுடன் இணைத்துள்ளன.

இத்தகைய ஜனநாயக விரோத மற்றும் அரசியலில் எரியூட்டும் சக்திகளை நட்பாகக் கொண்டு, வாஷிங்டன் யுரேசியா மீது ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சிப்பது அப்பகுதியில் கூடுதலான அரசியல் உறுதியற்ற தன்மையையும் பூசலையும்தான் கொண்டுவர முடியும். தன்னுடைய பங்கிற்கு மாஸ்கோ தன் செல்வாக்கை இவற்றின் மீதும் இதேபோன்ற தன்மையுடைய குழுக்கள் மீதும், தன்னுடைய நலன்களை முன்னெடுப்பதற்காக, ''அருகில் உள்ள அண்டை நாடுகள்'' என அது அழைக்கும் நாடுகள் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கு முயலும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved