ஐரோப்பா
:
பிரான்ஸ்
Controversy continues over French soldiers' deaths in
Afghanistan
ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு படையினர்களின் உயிரிழப்பு மீதான சர்ச்சை தொடர்கிறது
By Olivier Laurent
8 September 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்டு 18 அன்று நடைபெற்ற திடீர் தாக்குதலில் 10 பிரெஞ்சு
படையினர்கள் கொல்லப்பட்ட, மற்றும் 23 பேர் காயமுற்ற விவகாரத்தில் கூடுதல் விவரங்கள் வெளிவந்துள்ளன.
அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்துவதற்கு பெயர்பெற்றதான
Canard enchaîné
என்னும் அங்கத வார இதழின் ஆகஸ்டு 25 இதழின் கூற்றுப்படி, போரின் துவக்கத்தில் ஆப்கானியர்களால் பிடிக்கப்பட்ட
நான்கு சிப்பாய்கள் பின் "தூக்குத் தண்டனைக்கு" உள்ளாக்கப்பட்டனர். தவிரவும், இந்த சிப்பாய்களுடன் இருந்த
ஆப்கான் மொழிபெயர்ப்பாளர் இந்த ரோந்துக்கு சில மணி நேரங்கள் முன்னதாக "காணாமல்" போனார்
என்றும், இது ஒரு திடீர்த் தாக்குதலுக்கான சாத்தியம் இருந்திருப்பதை தளபதிகள் வெறுமனே கவனியாமல்
விட்டதையே காட்டுகிறது என்றும் அந்த செய்தித்தாள் கூறுகிறது.
பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஹெர்வே மொரின் உடனடியாக
Canard enchaîné
அறிக்கைக்கு மறுப்பினை வெளியிட்டார். "விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக" அரசாங்க செய்தித்
தொடர்பாளர் லுக் சாடெல் தெரிவித்தார். உண்மையில் காணாமல் போன மொழிபெயர்ப்பாளர் சண்டையின்
போது இறந்து விட்டிருந்தார் என்று France-Info
வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் பாதுகாப்பு துறையின் துணை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் கிறிஸ்டியன்
பாப்டிஸ்ட் கூறினார். ஆனால் அந்த மரணம் ஏன் பிற சிப்பாய்களுக்கு தெரிவிக்கப்படாமல் போனது என்பதை அவர்
விளக்கவில்லை.
"சிப்பாய்கள் சும்மா விட்டு விடவில்லை.....நமக்கு இழப்பு பத்து பேர் ஆனால்
போராளிகள் தரப்பில் எட்டு மடங்கு அதிகமாக உயிரிழந்திருக்கின்றனர். [தாக்குதலின் போதும் மற்றும் பிந்தைய
நாட்களின் போதான நடவடிக்கைகளின் போதும்]" என்று பிரான்சின் இராணுவ ஊழியர் தலைவரான ஜோன்-லூயிஸ்
ஜார்ஜிலின் தற்பெருமை பொங்கக் கூறினார். அதனையே எதிரொலித்தார் ஜெனரல் பேனுவா புகா.
"எதிரிகள்....அடி வாங்கினர்" என்ற அவர் இழப்புகள் இருந்த போதும் நமது தரப்பு நடவடிக்கை வெற்றி
பெற்றதென்றே தான் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
பின்வந்த நாட்களின் நடவடிக்கைகள் உஸ்பீனில் ஏராளமான பொதுமக்களை உயிரிழக்க
செய்திருப்பதாக Pajhwok
செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவ செய்தித் தொடர்பாளரான லெப்டினன்ட் கேர்னல் ருமி
நீல்ஸன்-கிரீன் கொஞ்சம் கூட மன சஞ்சலம் இன்றி, சண்டையில் ஆப்கானிஸ்தானின் அப்பாவி பொதுமக்கள்
கொல்லப்பட்டிருக்கலாம் என்பது குறித்த கவலைகளை நிராகரித்தார். கொல்லப்பட்டவர்கள் பிரெஞ்சு
படையினர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை தன்னால் "உறுதியாகக் கூற முடியவில்லை" என்றார்
அவர். எந்தவொரு ஆதாரத்தையும் அளிக்காமல், "நிச்சயமாக அவர்கள் குறைந்தபட்சம் உடந்தையாக
இருந்தனர்'' என்று அவர் தெரிவித்தார்,
தாக்குதலில் கொல்லப்பட்ட 10 படையினர்களில் ஒருவரான ஜூலியன் லே பஹூனின்
தந்தையான ஜோயல் லே பஹூன் ஆகஸ்டு 29 அன்று
RTL வானொலியில் கூறும் போது, தான் தளபதிகளின்
பேச்சினால் "அதிர்ச்சியுற்றதாக" தெரிவித்தார். நடவடிக்கை வெற்றி பெற்றதாக கருதுவதை மறுத்த அவர்
"உண்மையான கேள்வி அவர்கள் ஏன் இறந்தார்கள்?" என்பது தான் என்றார்.
பிரெஞ்சு மக்களில் பெரும்பான்மையானோர் ஆப்கானிஸ்தான் போரை
எதிர்க்கின்றனர். அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" அந்நாட்டின்
மீது ஊடுருவவும் ஆக்கிரமிக்கவுமான சாக்காக மேற்கோள் காட்டி வந்தாலும், உண்மையில் இது அமெரிக்கா மற்றும்
ஐரோப்பாவின் ஆளும் மேல் தட்டினரின் புகோள-மூலோபாய நலன்களுடன் தீர்மானமாக பிணைந்துள்ள ஒன்றாக
இருக்கிறது.
படையினர்களின் மரணத்தை அடுத்து ஏற்பட்ட வெகுஜன கோபத்தை முந்திக் கொள்ளும்
விதமாக, ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி உடனடியாக ஆப்கானிஸ்தானுக்கு பறந்து தாக்குதல் செய்திக்கு
ஆவேசமாக எதிர் வெளிப்பாடு காட்டினார். அவர் சிப்பாய்கள் இறந்த இடத்திற்கு அவர்களின் குடும்பத்தை
பார்வையிட அனுமதித்து அசாதாரணமானதொரு நடவடிக்கையை மேற்கொண்டார்.
Canard enchaîné
பத்திரிகையானது, இந்த உயிரிழப்புகள் குறித்த வெளியிட்ட இரண்டாவது பத்திரிகையாகும். திடீர் தாக்குதல் முடிந்த
உடனேயே, படையினர்கள் தங்களுக்கு உதவியைப் பெறுவதற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது என்பதை
பிரெஞ்சு அதிகாரிகள் ஆரம்பத்தில் குறிப்பிடவில்லை என்று பத்திரிகைகள் தெரிவித்தன. இந்த உயிரிழப்புகள் சொந்த
தரப்பின் துப்பாக்கிக் குண்டுகளாலேயே நிகழ்ந்திருக்கலாம் என்பதாகவும் கருத்துகள் வெளிவந்தன.
ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளை பராமரிக்க வேண்டுமா என்பதன் மீது
செப்டம்பர் 22 அன்று பிரெஞ்சு பிரதிநிதிகள் வாக்களிக்க இருக்கிறார்கள். இருப்பினும், சோஷலிசக் கட்சி (PS)
மக்கள் சலசலப்புக்கு பதிலிறுப்பு செய்யும் விதமாக, ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் படைகளை நிறுத்துவதற்கான தனது
பொறுப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டது. "முழுமையான திரும்பப் பெறலா அல்லது இன்னும் துருப்புகளை
அனுப்பும் நடவடிக்கையா" என்கிற குழப்பத்தை தவிர்க்க விரும்புவதாக கூறிய
PS தலைவர்
பிரான்சுவா ஹோலண்ட், இது ஒரு "புதைகுழிக்கு" ஒப்பாகும் என்று தெரிவித்தார்.
PS அயலுறவுக்
கொள்கை நிபுணரும், கட்சியின் தலைமைக்கான வேட்பாளருமான பியர் மாஸ்கோவிசி ஆகஸ்டு 24 அன்று,
பாரம்பரிய PS
நிகழ்ச்சியான Fête de la Rose
இல் பேசும்போது, "பயங்கரவாதத்தை பொறுத்த வரை வலதுசாரிகளின் அதே தீவிரத்தோடு போரிட
விரும்புகிறோம்" என்றார்.
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான செகோலன் ரோயலுக்கு நெருக்கமானவரான
PS
உறுப்பினரான ஜோன்-லூயிஸ் பியாங்கோ ஆகஸ்டு 20 அன்று தனது சொந்த வலைப்பதிவில் அறிவித்தார்: "2001
இல், இது தலிபான் ஆட்சியுடன் சண்டையிடுவது மற்றும் நாட்டின் மறுகட்டுமானத்திற்கு உதவுவது குறித்ததாக
இருந்தது". நடவடிக்கையின் ஒரு பாகத்தை அமெரிக்க நலன்கள் கடத்திச் சென்றிருப்பதை குறிப்பதாக இது
இருந்தது. இருப்பினும், அவர் விரிவாக எதனையும் தெரிவிக்கவில்லை, மாறாக மூலோபாயத்தில் மட்டும் சில
மாறுதல்களுக்கு ஆலோசித்தார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான மேரி-ஜோர்ஜ் புபெ பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பங்கள் மற்றும் பிரெஞ்சு இராணுவம் இருதரப்புக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்தார். பிரான்சின் தலையீடு
சம்பந்தமாக அல்லாமல் சார்க்கோசியின் மூலோபாயத்தின் மீது கேள்வி எழுப்பிய அவர், "தலிபானுக்கு எதிரான
போரில் நாம் போரிட வேண்டும்" என்று அறிவித்தார். அத்துடன் "ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் பங்கேற்றிருப்பதன்
நோக்கங்கள் மீதான ஒரு" விவாதத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
உண்மையில், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் பிரான்சின் பங்கேற்பு
PS பிரதமரான
லியோனல் ஜோஸ்பனால் தொடக்கி வைக்கப்பட்டது தான் என்கிற உண்மையைக் கொண்டு பார்க்கும் போது,
பிரெஞ்சு சோஷலிசக் கட்சியில் இருந்தான சத்தமில்லாத விமர்சனம் முழுக்கவும் வேஷத்தனமானது. இந்த
தலையீட்டை எதிர்த்த ஒரே முக்கியமான PS
உறுப்பினர் ஹென்றி எமானுவேல் மட்டும் தான். LE
Monde தினசரியில் அவர் அறிவித்தார், "கர்சாய் யார்?
சக்திவாய்ந்த ஆதரவாளர்களால் அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஊதுகுழலா?" என்று. இப்போது தான்
அவருக்கு சூழலின் உண்மைகள் தெரிய வருவது போன்ற தோற்றத்தை அவர் காட்டிக் கொள்ள விரும்புவதாக
தெரிகிறது. "ஆப்கானிஸ்தானின் உண்மை நிலவரம் குறித்து பல விஷயங்கள் நம்மிடம் இருந்து மறைக்கப்படுகின்றன
என்று நான் நம்புகிறேன்" என்று மேலும் தெரிவித்தார்.
நிக்கோலா சார்க்கோசியைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானில் பிரான்சின்
பங்கேற்பு அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே அவர் உறுதியளித்திருக்கிறார். ஆகஸ்டு 27 அன்று அரசாங்கத்திற்கும்
180 நாடுகளின் தூதர்களுக்கும் இடையில் நடந்த மூன்று நாள் கூட்டத்தின் துவக்கத்தின் போது அவர் இதனை
அறிவித்தார். உலகமானது "ஒரு தீவிரமான புதிய சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருக்கிறது, வரும் பல
தசாப்தங்களுக்கு, இதனை நான் 'ஒப்புமை சக்திகளின் சகாப்தம்' என்று குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்".
"அரிதான மற்றும் விலையுயர்ந்த எரிசக்தி"யின் சகாப்தமான இதில், பொதுவான நலன்கள் என்பவை தேசிய
முன்னுரிமைகளின் தீவிரமான பாதுகாப்புகளுக்கு மிகவும் பின்னால் தங்கி விடுகிறது".
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேசிய சார்க்கோசி, "புகாரெஸ்ட் உச்சி
மாநாட்டில் [இந்த ஆண்டு ஏப்ரல் 2-4 இல் நடந்த நேட்டோ உச்சி மாநாடு] கூட்டணி நாடுகளின் புதிய
மூலோபாயமானது இவ்வாறே தொடர்கிறது: ஒரு நீண்ட கால பங்கேற்பு, ஒரு உலகளாவிய அணுகுமுறை, இராணுவ
ரீதியாக மற்றும் அரசு நிர்வாக ரீதியாக, ஆப்கான் அரசாங்கத்துக்கு அளிக்கப்படும் உதவியின் மேம்பட்ட
ஒருங்கிணைப்பு" என அறிவித்தார். "இராணுவம் திரும்பப் பெறல் என்பது தலிபான் மற்றும் அல்கொய்தா திரும்ப
வருவதற்கு தூண்டுவதோடு அருகிலிருக்கும் பாகிஸ்தானின் ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கக் கூடும்" என்று அவர்
எச்சரித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தான் போரில் பிரான்சின் உறுதியை அவர் பின்வருமாறு தெள்ளத்
தெளிவாக அறிவித்தார், "வெளிப்படையாகவும் தெளிவாகவும் பிரான்சை தனது மேற்கத்திய குடும்பத்தில்
வைத்திருக்கவும், அமெரிக்காவின் மக்கள் மற்றும் தலைவர்களுடன் நம்பிக்கை உறவினை மீட்டமைக்கவும், அட்லாண்டிக்
கூட்டணியுடனான நமது உறவினைப் புதுப்பிக்கவுமே நான் விரும்பினேன்".
பிரெஞ்சு ஸ்தாபனங்களுடைய நிலைப்பாடு ஒரு வாரத்திற்கு முன்பே வலது சாரி
தினசரியான Le Figaro
இல் தெளிவாக வெளியிடப்பட்டு விட்டது. தனது ஆகஸ்டு 20 தலையங்கத்தில் லுக் டி பரோசெஸ் எழுதுகிறார், "பிரான்சை
பொறுத்தவரை, பிரச்சினை அட்லாண்டிக் பிராந்தியங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கான ஆதாரத்தை அளிப்பது.
புஷ் நிர்வாகம் முடிவுக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு வேளையில் அந்நிர்வாகத்தை நோக்கிய அவசரப்பட்ட
சமிக்ஞையாக இதனை கருதுவது தவறாகி விடும். ஏனென்றால், ஆப்கான் நெருக்கடியில் அட்லாண்டிக் பிராந்தியத்தின்
இரண்டு பகுதிகளுக்கும் இடையிலான நலன்களின் குவியம் ஒன்று இருக்கிறது. பாராக் ஒபாமாவும் ஜான் மெக்கெயினும்
ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகிறார்கள் என்றால், அது இது தான்: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மைய
களமாக இருப்பது ஆப்கானிஸ்தான் தான்; வரும் ஆண்டுகளிலும் இது அவ்வாறே தொடரும்".
"ஒரு பதற்றத்திற்குரிய பிராந்தியத்தில் இராணுவ படைகளை நிறுத்துவதற்கான தனது
திறனை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஐரோப்பா பற்றிக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தும் அளவுக்கு
சென்றார் அவர். "பிரான்சின் பங்கேற்பு நீண்ட காலமாக பட்டும் படாத வகையிலானதாக, தலைநகர் காபூலை
மட்டும் பாதுகாக்கும் வரையறைக்குட்பட்டதாக இருக்கிறது. இருப்பு கடினமானதாக இருக்கும் இடங்களில், நமது
கூட்டணியினரின் படைகளுடன் சேர்த்து நமது துருப்புகளையும் நிறுத்தியிருப்பதன் மூலம் ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசி அதன் பொருளை மீட்டமைவு செய்திருக்கிறார்" என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய விசுவாச வெளிப்பாடுகளின் மூலம், பிரான்சின் ஆளும் மேல்தட்டு பிரெஞ்சு
மக்களை தவிர்க்க இயலாத பாதிப்புகளுக்கு பழக்கப்படுத்த வழி கண்டாக வேண்டியிருக்கிறது. பாரிஸின்
Invalides தேவாலயத்தில்
நடந்த இறுதி ஊர்வலம் இத்தகையதொரு முயற்சி தான். "வாழ்க்கையை இவ்வகையில் இழப்பது என்பது வாழ்க்கையில்
சிலவற்றை சாதிக்கும் ஒரு வழியாகவும் இருகிறது" என்று இதில் சார்க்கோசி அறிவித்தார்.
"உண்மை தான், நாம் இன்னும் உயிரிழப்புகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும்" என்று
தொலைக்காட்சியில் வெளிப்படையாகக் கூறினார் அயலுறவுத் துறை அமைச்சர் பேர்னாட் குஷ்னர். ஆப்கானிஸ்தான்
நடவடிக்கைகளை "போலிஸ் நடவடிக்கைகள்" என்று அவர் வர்ணித்தார். 1956 முதல் 1962 வரை
அல்ஜீரியாவுக்கு எதிராக நடந்த பிரான்சின் காலனி ஆதிக்க போரில் பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தைகள்தான்
இவை. |