World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள சமத்துவமின்மை

Global survey reveals growing anger over social inequality

சமூக சமத்துவமின்மையின் மீது அதிகரித்து வரும் கோபத்தைச் சர்வதேச ஆய்வு வெளிப்படுத்துகிறது

By Bill Van Auken
20 May 2008

Back to screen version

உலகில் பெருமளவிலான மக்களின் அடிப்படை வருமானம் குறைந்து வரும் நிலையில் ஒரு சிறிய நிதி சேர்க்கும் மேற்தட்டினால், முன்னோருபோதுமில்லாதவாறு செல்வம் திரட்டப்படுவது அதிருப்தியையும் மற்றும் கோபத்தையும் உருவாக்கி வருகிறது.

லண்டன் பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஹாரீஸ் கருத்துக்கணிப்பு நிறுவனத்தால் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பெடுப்பில் முக்கியத்துவமானது இதுவே ஆகும்.

''பூகோளமயமாக்கலின் சமீபத்திய அலை செல்வந்தர்களின் ''மேல்மட்ட வர்க்கத்தை'' உருவாக்கி இருப்பதால் நிறைய நாடுகளில் வருமான சமத்துவமின்மை என்பது பெரியதொரு பிரச்சனைக்குரிய அரசியல் விடயமாக உருவாகி இருக்கிறது'' என திங்கட்கிழமை பைனான்சியல் டைம்ஸ் இக்கருத்துக்கணிப்பு தொடர்பான தனது கருத்தை தெரிவித்திருக்கின்றது.

நிதிய மேற்தட்டிற்கும், மீதமிருக்கும் மக்கள் பிரிவினருக்கும் இடையிலான சமூக இடைவெளி மிக அதிகளவில் வளர்ந்திருப்பதாக ஐரோப்பா முழுவதிலுள்ள பெரும்பான்மையினர் தெரிவிப்பதாக பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஹாரீஸ் கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. சான்றாக, சமூக சமத்துவமின்மை மிகவும் அதிகமாக வளர்ந்திருப்பதாக ஸ்பெயினில் 76 சதவீதத்தினர் தெரிவித்தனர், அதேபோன்று ஜேர்மனியில் இந்த எண்ணிக்கை 87 சதவீதம் ஆகும்.

உலகின் மலிவு கூலிகளின் உற்பத்தி மையமாக இருந்து வரும் சீனாவில், கோடீஸ்வரர்கள் மற்றும் இலட்சாதிபதிகளின் புதிய வர்க்கத்தை உருவாக்குவதற்காக மில்லியன் கணக்கான தொழிலாளர் சுரண்டப்படும் நிலையில் வருமானத்தில் சமத்துவமின்மை மிக அதிகளவில் இருப்பதாக 80 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் மிகவும் சமூக சமநிலையற்ற நாடான அமெரிக்காவில், இந்த இடைவெளி மிகவும் விரிந்து வளர்ந்திருப்பதாக நம்புபவர்களின் எண்ணிக்கை 78 சதவீதம் ஆகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சமூக இடைவெளி மட்டுமே மிக பரவலாக வளர்ச்சியடையும் என நம்புவதாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட அனைத்து எட்டு நாடுகளிலும் பங்கெடுத்த கணிசமான பெரும்பான்மையினர் தெரிவித்தனர். அதேபோன்று இவர்களுக்கு சமமான எண்ணிக்கையிலானவர்கள் செல்வந்தர்கள் மீது வரிகள் உயர்த்தப்படுவதற்கும் மற்றும் ஏழைகளுக்கு வரியை குறைப்பதற்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஆழ்ந்த நெருக்கடியால் அமெரிக்க மற்றும் சர்வதேச நிதிய முறை உடைந்து வரும் நிலையின் கீழ், பரவலான பொருளாதார இடப்பெயர்வு ஏமாற்றுகரமான செல்வத்தைக் குவிக்க ஒரு சிறு நிதிய மேல்தட்டுக்கு உதவி வருகிறது. அனைத்திற்கும் மேலாக குறைந்து வரும் வாழ்க்கைத்தரம், வேலை இழப்பு மற்றும் உலகின் பல பகுதிகளில் பரவலாக வளர்ந்து வரும் பசி ஆகியவற்றை எதிர்நோக்கும் பெரும்பான்மை மக்களால் இது பொறுக்க முடியாமல் இருக்கிறது.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தகவலின்படி, கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் உலகில் உணவு விலைகள் 45 சதவீதம் (சில அடிப்படை மளிகை சாமான்கள் இதற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது) அதிகரித்திருக்கின்றன. அதாவது கோதுமை 130 சதவீதமும், அரிசி 74 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. சுமார் 2.5 பில்லியன் மக்கள் (உலகின் மக்கள்தொகையில் 40 சதவீத மக்கள்) நாளொன்றுக்கு 2 டாலருக்கும் கீழ் பெற்று வாழ்கின்றனர், இலட்சக்கணக்கானவர்கள் படிப்படியாக உயர்ந்து வரும் இந்த உணவு விலைகளால் உடனடியாக ஏற்படுகிற பசி பிணியுடனும் போராடி வருகிறார்கள்.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குனர் தலைவர் Jacques Diouf ஆல் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், "நிதிய ஊக வியாபாரத்தின் பிரச்சனையே" அதிகரித்துவரும் இந்த அழிவிற்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். விலைநிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த சந்தையில் (Futures Markets)* முதலீட்டு நிதியின் ஊகவாணிபம் அதிகமாக இருப்பதால், அவை உணவு பொருட்களின் விலை உட்பட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி விடுகிறது.

வருமானத்தின் மீது கருத்துக்கணிப்பு நடத்துவதற்கான லண்டன் நகரத்தின் அதிகாரபூர்வ குரலாக ஒலிக்கும் பைனான்சியல் டைம்ஸின் முடிவு எதை எடுத்துக் காட்டுகிறது என்றால் முன்னொருபோதுமில்லாதளவிலான சமுதாய துருவமுனைப்படுத்தலுடன் பொருளாதார நெருக்கடியும் இணைந்து தீவிர வர்க்க போராட்டத்தை மீண்டெழச் செய்யும் என்ற அதிகரித்த அமைதியின்மை உலகின் ஆளும் மேற்தட்டின் பிரதிநிதிகளிடையே காணப்படுவதையே எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு, புரூஸெல்சில் கடந்த வாரம் நடந்த 27 ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்களின் கூட்டத்தில், பெருநிறுவன உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர்ந்து வரும் இழப்பீட்டு தொகை கண்டிக்கத்தக்கதாகவும் மற்றும் சமூக கொடுமை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

"ஐரோப்பிய பகுதியின் பல நாடுகளில் மற்றும் துறைகளில் நாம் பார்த்திருக்கும் தொழில்துறையின் அதிகாரிகளுக்கு கிடைக்கும் மேலதிக வருமானம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கதாகும், மேலும் இந்த மேலதிக வருமானத்திற்கு எதிராக தொழில்முறை நடைமுறை மற்றும் வரிகளை எவ்வாறு சரி செய்யலாம் என நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்." என ஐரோப்பியகுழுவின் தலைவர் Jean-Claude Juncker தெரிவித்தார்.

சமீபத்தில் ஒரு டச் தலைமை செயலதிகாரிக்கு சுமார் 124 மில்லியன் டாலர் மதிப்பிலான மேலதிகவருமானமும், பங்குகளும் வழங்கப்பட்ட போது பொதுமக்களிடையே ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவின் நிலைமையில் கூட இந்த வருமான விகிதம் அசாதாரணமாக இருந்தது, ஆனால் நெதர்லாந்தில் தலைமை அதிகாரியின் சராசரி இழப்பீட்டு தொகை என்பது அமெரிக்காவில் வழக்கில் இருக்கும் அளவில் வெறும் ஒரு கால் பங்காக இருக்கிறது.

லுக்சம்பேர்க்கில் பிரதம மந்திரியாகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் Juncker, "இந்த சமூக கொடுமையை எதிர்க்க அவர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள்" என ஐரோப்பிய குழுவின் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பல ஐரோப்பிய அரசாங்கங்கள் உயர்ந்த அளவிலான அதிகாரிகளின் சம்பள விகிதங்கள் மீது உயர்ந்தளவு வரிகளை விதிக்கும் சட்டங்களை இயற்றி இருக்கின்றன.

சில குறிப்பிட்ட முன்னனி மேலாளர்களின் சம்பளம் - மற்றும் திடீரென கிடைக்கும் சலுகைகள் - அவர்களின் திறன்களுடன் எவ்விதத்திலும் தொடர்புடையதல்ல என்ற நிலைமையை நம்மால் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை நாம் எடுத்துக் கூறவில்லையானால், உழைக்கும் சராசரி மக்களின் கூலியுயர்வு கோரிக்கையை மட்டுப்படுத்த நாம் கோருவதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உண்மையான பிரச்சனையை Juncker வெளிப்படையாக தெரிவித்தார்.

இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூகத்தின் மேல்மட்டத்தை குற்றம்சாட்டுவதாக கண்ணில் மண்ணைத்தூவிக்கொண்டு, அடிமட்டத்தில் இருப்பவர்களின் வயிற்றை இறுக்கிக்கொள்ளுங்கள் என கோருவது ஒரு சமூக வெடிமருந்து பீப்பாவை வெடிக்கவைத்துவிடும்.

இதற்கு ஒத்ததாக, மேல்தட்டு வர்க்கத்தின் எழுத்தாளரான டேவிட் ரூத்கோஃப்பினால் கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில், சர்வதேச அதிகார மேல்தட்டு மற்றும் அவர்கள் உருவாக்கும் உலகம் என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை வெளியிட்டது. இவர் கிளிண்டன் நிர்வாகத்திற்கு கீழ் சர்வதேச வியாபார வணிகவியலின் முன்னாள் இணை செயலாளராவார்.

"பெருநிறுவன மேலதிக வருமானங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் ஆத்திரத்தை கடன் நெருக்கடி அதிகரிக்க செய்கின்றது." என அவர் எழுதுகிறார். "கீழ்நிலையில் இருப்பவர்கள் தங்களின் வீடுகளை இழந்து வருகையில், சந்தைகள் ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும் மேல்தட்டுக்கள் பில்லியன் கணக்காக உழைப்பதுடன், அவர்களின் நிறுவனங்கள் அரசாங்கங்களின் உதவியைப் பெற்று இலாபத்தை சம்பாதிக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பன்னாட்டு தலைமை அதிகாரிகள் ஊதியம் சராசரி தொழிலாளியை விட 35 தடவை அதிகமாக இருந்தது, இன்று அது 350 தடவை அதிகமாக இருக்கிறது. இந்த நெருக்கடி இந்த காலகட்டத்தின் வெறுப்பூட்டும் சமத்துவமின்மையின் மீது கவனத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அதாவது உலகளவில் 1,110 செல்வந்தர்கள் 2.5 பில்லியன் ஏழைகளின் சொத்துக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக வைத்திருக்கிறார்கள்."

நிதி ஆளும் கூட்டம் தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டுமானால் அதன் மேலதிக வருமானங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிறிய எச்சரிக்கையையும் ரூத்கோஃப் வெளியிட்டார். "பொதுமக்களின் நலன்களுக்கு தாங்கள் பொறுப்பாக இருப்பதை அங்கீகரிப்பதன் மூலம், நிதி மேல்மட்ட வர்க்கம் முந்தைய மேற்தட்டுக்களின் தலைவிதியை தக்கவைத்துக் கொள்ளலாம்." என அவர் எழுதுகிறார். "வெற்றி பெறுவதை சந்தையே தீர்மானிக்கின்றது என்ற சமத்துவமின்மை தொடர்பாக தாமே உருவாக்கிய ஆத்திரமூட்டும் விளங்கங்களை தவிர்த்தொதுக்க வேண்டும்."

முந்தைய மேற்தட்டின் தலைவிதி போன்று பாதிக்கப்படுவது குறித்த இந்த எச்சரிக்கை கேள்விக்கிடமின்றி மிக தீவிரமானதாகும், குறிப்பாக, பிரிட்டனின் ஒரு முன்னனி நிதியியல் செய்தித்தாளில் இது முக்கியமானதாகும். ஆசிரியர் யாரை மனதில் கொண்டிருக்கிறார்: பிரெஞ்சு மேற்குடி மக்களையா? ரஷ்யாவின் ரோமானோவ் அரச பரம்பரையையா? தெளிவாக, சமத்துவமின்மையின் மீது பெருமளவிலானவர்களை ஆத்திரமூட்டும் நிலை சமூக எழுச்சியை மற்றும் புரட்சியும் தீவிரமாக கையில் எடுக்கும் என்று ஆளும் வட்டாரங்களில் அஞ்சப்படுகிறது.

பொதுமக்கள் நலன்களின் மீது ஆளும் மேற்தட்டு அக்கறை காட்டுவதும் மற்றும் குறைவான மூர்க்கத்தனமும் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என ரூத்கோஃப் அறிவுறுத்துகிறார். அடிப்படையில் சந்தேகத்திற்கிடமின்றி உலகளவில் நிறைய பகுதிகளில் பஞ்சத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான அச்சுறுத்தலை கொண்டிருக்கும் நிதியியல் ஊகவியாபாரத்தின் இலாபம் ஈட்டும் வடிவங்களில் உள்ள அபகரிப்பு மற்றும் கொடுமைகளில் இது வேரூன்றியில்லாமல், முதலாளித்துவத்தின் செயற்பாட்டினிலேயே இது இருக்கிறது.

140 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த முதலாளித்துவ உற்பத்தியின் உள்ளார்ந்த இயல்புகளை விவரிக்க "அதிகரிக்கும் வறுமைக்கான கோட்பாடுகளை" கார்ல் மார்க்ஸ் வடிவமைத்தார்.

''செல்வம் ஒரு துருவத்தில் குவிகையில், அதேநேரத்தில் வறுமை, உழைப்பினால் கிடைக்கும் கடுந்துயர், அடிமைத்தனம், நிராகரிப்பு, அட்டூழியம், உளவியல் சீரழிவு ஆகியவை மூலதனத்தின் வடிவத்தில் தனது உற்பத்தியை உருவாக்கும் வர்க்கம் உள்ள எதிர்ப்புறத்தில் குவிகின்றது'' என கார்ல் மார்க்கஸ் எழுதினார்.[1]

இந்த கோட்பாடு போல் மார்க்கஸின் மூலதனம் பற்றிய எந்தவொரு ஆய்வும் இலாப அமைப்பிற்கு வக்காலத்துவாங்கப்படுபவர்களால் மிக ஆழமான மற்றும் தீவிரமான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவில்லை. மூலதனத்தின் விரிவாக்கமும், செல்வம் குவிவதும் பெருமளவிலான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த வாதத்தின் போலித்தன்மை மற்றும் மார்க்சின் ஆய்வின் துல்லியம் ஆகிய இரண்டும் மீண்டும் ஒருமுறை புள்ளியியலின் சாதாரண வார்த்தைகளால் மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால்

தனிநபர் இலாபத்தின் அடிப்படையில் இருக்கும் உற்பத்தி முறையால் வாழ்வதற்கான அடிப்படைகளை பெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லாததை எதிர்நோக்கும் பெருமளவிலான மக்களிடமிருந்து அதிகரித்து வரும் போராட்ட வெடிப்புகள் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகின்றது.

[1] Karl Marx, Capital, I, Chapter 25, section 4

* விலைநிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த சந்தை (Futures Markets) -ஒரு குறிப்பிட்ட திகதியில் பொருட்களை விநியோகம் செய்வதற்கான விலையை முன்னரே முடிவுசெய்து ஒப்பந்தம் செய்துகொள்வது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved