WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: BJP seizes on Jaipur bombing to promote
communalism and social reaction
இந்தியா: ஜெய்ப்பூர் குண்டுவீச்சை பயன்படுத்தி வகுப்புவாதத்தையும் சமூகப் பிற்போக்கையும்
பிஜேபி வளர்க்க முற்படுகிறது
By Deepal Jayasekera
20 May 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
இந்தியாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய
ஜனதா கட்சி (BJP)
சமீபத்தில் வட மேற்கு இந்திய மாநிலமான ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் நடந்த பயங்கரவாத
கொடுமையை பயன்படுத்தி முஸ்லிம்-விரோத, பங்களாதேஷ் விரோத தப்பெண்ணங்களை பரப்பவும் அரசின் அடக்குமுறை
அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தவும் விரும்புகிறது.
குறைந்தது இந்துக்கள், முஸ்லிம்கள் என்று வேறுபாடின்றி 63 பேர் கொல்லப்பட்டு
200 பேருக்கும் மேலாக காயமுற்றதும் மே 13 மாலை ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புக்களில்
நிகழ்ந்தன. ஏழு தனித்தனி வெடிப்புக்கள் --எட்டாவது வெடிக்கவில்லை-- மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதல்
பெரும் உயிரிழப்பைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. பொதுவாக ஏராளமான மக்கள்
கூடும் இடங்களில் குண்டுகள் நிறைந்திருந்த சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்துக் கடவுள் ஹனுமானுக்காக கட்டப்பட்ட
இந்து ஆலயம் ஒன்றின் அருகில் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது; செவ்வாய் அவருக்கு பாரம்பரிய வழிபாட்டு
நாளாகும்.
இணைந்த குண்டுவெடிப்புக்கள் ஜூலை 2006ல் 200 பேரைக் கொன்ற மும்பை
பயணிகள் வண்டி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு பின்னரான இந்தியாவின் கொலைகாரத்தனமான பயங்கரவாதத்
தாக்குதலாகும்.
இந்த குண்டுவெடிப்புக்களை எவர் நடத்தியிருந்தாலும், இந்தியாவில் வகுப்புவாத
விரோத உணர்வை தட்டி எழுப்ப வடிவமைக்கப்பட்ட, அப்பாவி குடிமக்கள்மீதான குற்றகரமான தாக்குதல் ஆகும்,
இம்மாதம் விரிவான சமாதானப் பேச்சுக்களை புதுப்பிக்க இருக்கும் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே
இருக்கும் உறவுகளை கசப்படையச் செய்யும் நோக்கத்தையும் கொண்டவை ஆகும்.
எந்தவிதமான சரியான ஆதாரமும் இல்லாமல் ராஜஸ்தானின் மாநில அரசாங்கம்
போலீஸ் உளவுத்துறைப் பிரிவு, மற்றும் செய்தி ஊடகத்துடன் சேர்ந்து விரைவாக பங்களாதேஷை தளமாக கொண்ட
இஸ்லாமிய குடிப்படையான Harkat-ul-Jihadi
Islami ஐ இத்தாக்குதலுக்கு குற்றம் சாட்டியுள்ளது.
பிஜேபி தலைவர்களும் செய்தி ஊடகத்தில் சில பகுதிகளும், தாக்குதலில்
பயன்படுத்தப்பட்ட சைக்கிள்கள் சில ஒரு கடையில் இருந்தன என போலீசாரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள ஒரு
சைக்கிள் கடையின் சொந்தக்காரர், வங்காள மொழி பேசிய இளைஞர் குழு ஒன்று அவற்றை அவருடைய கடையில்
வாங்கியது பற்றிக் கூறியதையே பிடிவாதமாக பேசியுள்ளனர். பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் கிழக்கு
மாநிலமான மேற்கு வங்கம் இரண்டிற்கும் வங்கம் முக்கிய மொழியாகும்.
இதற்கிடையில், இந்தியன் முஜாஹிதீன் அல்லது குரு-அல்-ஹிந்தி என்று தன்னை அழைத்துக்
கொள்ளும் அதிகம் அறியப்பட்டிராத ஒரு குழு ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பிற்கு தான்தான் காரணம் என்று
கூறியிருக்கிறது. தன்னுடைய கூற்றை நிரூபிக்கும் வகையில் அது மிதிவண்டிகளில் ஒன்று மற்றும் டெல்லியை தளமாகக்
கொண்ட செய்தி அமைப்புக்களின்மீது பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் இருந்ததாக கூறப்பட்ட பை ஆகியவற்றை
மின்னஞ்சலில் வீடியோக் காட்சி முறையில் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானின் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, வீடியோ காட்சித் துண்டுகளின்
நம்பகத்தன்மை பற்றி ஐயுறவாதத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் செய்தி ஊடகங்கள் போலீசார்
இப்பொழுது அவற்றை உண்மை என்று நம்புவதாகவும் அதற்குக் காரணம் மிதிவண்டியின் எண் பதிவு வடிவமைப்பு
வீடியோ காட்சியில் இருக்கும் மிதிவண்டிகளுள் ஒன்றுடன் ஒத்துப் போவதாகவும் கூறுகின்றன.
ராஜே, அவருடைய அரசாங்கம் மற்றும் தேசிய
BJP ஆகியோர்
ஜெய்ப்பூரில் நடந்துள்ள கொடுமைக்கு பங்களாதேச தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை மிகவும்
வலியுறுத்துகின்றனர்; இதைப் போலிக்காரணமாக பயன்படுத்தி வங்கதேச குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு
எதிரான வகுப்புவாத வகையில் இழிந்த பிரச்சாரத்தை செய்கின்றனர். எந்த சான்றையும் கொடுக்காமல்,
BJP
யின் ராஜஸ்தான் விளம்பரப்பிரிவு தலைவர் கே.எல். சதுர்வேதி "ஜெய்ப்பூரில் சட்ட விரோத தொழிலாளர்களாக
வசிக்கும் வங்கதேச புலம்பெயர்தோரின் செயல்தான்" இந்த குண்டுவீச்சுக்கள் என்று அறிவித்துள்ளார்.
பின்னர் வெள்ளியன்று ராஜஸ்தானின் பாராளுமன்ற பிரிவு மந்திரியான ராஜேந்திர
ராத்தோட் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிஜேபி மாநில அரசாங்கம் மாவட்ட கலெக்டர்களுக்கு 30 நாட்கள்
மாநிலத்தில் "சட்டவிரோதமாக" வசிக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பற்றிய விரிவான பட்டியலை
தொகுக்குமாறு உத்திரவிட்டுள்ளதாக கூறினார்; அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற இது முதல் கட்ட
நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறினார்.
"மாவட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் பகுதிகளில் இருக்கும் வங்கதேசத்தினரை பற்றி
முழுத் தகவல் தொகுப்பும் தேவை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தினர் ரேஷன் அட்டைகள்
வாங்கியிருந்தால் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
உத்தரவிடப்பட்டுள்ளனர்; அவர்களுடைய பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது" என்று ராத்தோட் கூறினார்.
பல பகுதிகளிலும் வங்கதேச குடியேறியவர் வசிக்கும் பகுதிகளிலும் வீடு வீடாக
சோதனை நடத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்;
ஜெய்ப்பூர் கொடுமை தொடர்பு பற்றி எந்த குற்றச் சாட்டும் முன்வைக்கப்படவில்லை. போலீஸாரின் செய்தித்
தொடர்பாளர் ஜீவன் பிஷ்நொய் கூறியது: "இங்கு உள்ள ஒவ்வொரு நபரும் பெயரைப் பதிவு செய்துள்ளாரா
என்பதை சோதிக்க வேண்டும்."
இந்திய செய்தி ஊடகத் தகவலின்படி, கடந்த வெள்ளியன்று ஆஜ்மீர் நகரத்தில்
புகழ்பெற்ற சுபி (முஸ்லிம்) ஞானியின் நினைவிடத்திற்கு அருகே எட்டு வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் கைது
செய்யப்பட்டனர். "இவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டிருந்தனர்" என்று கூறப்பட்டது.
"எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எட்டு பேரும் டாக்காவில் இருந்து வந்தவர்கள்; வேலையாட்களாக உழைத்துக்
கொண்டிருக்கின்றனர்" என ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
வறிய நிலையில் உள்ள, இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும்
வங்கதேச இடம் பெயர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர் என்பது புரிந்து கொள்ளக்கூடியது. தெருக்களில் குப்பை
அள்ளி வாழ்க்கையை நடத்தும் 60 வயதான தெளலத் கான் செய்தியாளர்களிடம் கூறியது: "நாங்கள் ஒரு வறிய
சமூகத்தினர். இத்தகைய செயலைச் செய்வதற்கு நிதியோ, நேரமோ எங்களிடம் கிடையாது... நாங்கள்
முஸ்லிம்கள் என்பதால் எங்களை விரட்டுகின்றனர். அது பெரும் தவறு ஆகும்."
பிஜேபி மாநில அரசாங்க பிரதிநிதி ஒருவர் கருத்தின்படி ஜெய்ப்பூரில் வங்கதேசத்தில்
இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது, 2004ல் 2,500ல் இருந்து
இப்பொழுது 10,000 க்கும் அதிகமாக ஆகிவிட்டது.
வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களை பற்றி நீண்ட காலமாகவே பிஜேபி
புகார் கூறி வந்துள்ளது; இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் உள்ளனர் என்றும் இந்திய ஆளும் கூட்டணியின் முக்கிய
பங்காளியான காங்கிரஸ் கட்சி வங்கதேச குடிபெயர்ந்தோரிடம் "மென்மையாக" இருப்பதாகவும் இதற்குக்
காரணம் முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்கு என்றும் பிஜேபி தாக்கியுள்ளது.
20 மில்லியன் வங்கதேசத்தினர் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுவது மொத்தத்தில்,
வகுப்புவாத அடிப்படையில் தூண்டப்பட்ட மிகைப்படுத்தலாகும். ஆனால் இந்தியாவிற்கு வருவதன் மூலம் வங்கதேசத்தில்
வறுமை மற்றும் வகுப்புவாத, இனவழிப் பூசல்களில் இருந்து தப்புவதற்கு மில்லியன் கணக்கில் முயன்று வந்துள்ளனர்
என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. துணைக்கண்டம் 1947ல் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினைசெய்யப்பட்டது,
பொருளாதார தர்க்கம் மற்றும் இந்திய வரலாற்றின் தர்க்கம் ஆகியவற்றை மீறி, இந்தியாவில் இருந்து வெளியேறிய
காலனித்துவ எஜமானர்கள், முதலாளித்துவ காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகியோரால்
நிறைவேற்றப்பட்டது, மற்றும் இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் வகுப்புவாதப் பூசல்களை ஸ்தாபனமயப்படுத்த
மட்டுமே பயன்பட்டுள்ளது.
இந்தியாவில் சிக்கும் வங்கதேச வாசிகள் "வெளிநாட்டினர்" என்று பிஜேபி கூறுவது,
1947ம் ஆண்டு வகுப்புவாத நாட்டுப் பிரிவினையை ஏற்பதை தளமாகக் கொண்ட ஒரு வகுப்புவாத திரித்தல் ஆகும்.
ஆனால் முழு இந்தியத் துணைக் கண்ட ஆட்சி அமைப்புக்களும் அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளன. பயங்கரவாதம்
பற்றிய கவலைகளை மேற்கோளிட்டு இந்திய அரசாங்கம் --மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின்
உற்சாகமான ஆதரவோடு கூட-- சமீபத்தில் இந்தியா-வங்கதேச எல்லை முழுவதற்குமாக ஒரு வேலி அமைப்பதை
நிறைவு செய்தது.
வங்கதேசத்திற்கு எதிரான உணர்வை தூண்டுதல், வங்கதேசத்தில் இருந்து வந்து
குடியேறியவர்களை அச்சுறுத்தல் ஆகியன ஜெய்ப்பூர் கொடுமைக்கு பிஜேபி கொடுக்கும் விடையிறுப்பில் ஒரு
பகுதிதான்.
கடந்த வார குண்டுவெடிப்பை தொடர்ந்து பிஜேபி, காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA)
அரசாங்கம் "பயங்கரவாதத்தை" அடக்குவதில் தோற்றுள்ளது என கூறிக் கண்டிப்பதை அதிகரித்துள்ளது.
"பயங்கரவாதத்தை சமாளிப்பதில் மத்திய உளவுத்துறை மற்றும் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணியின் கொள்கைகளில் முழு தோல்வி ஏற்பட்டுள்ளது" என்று பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ்
ஜவடேகர் "UPA
அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒரு தேசிய ஆபத்து என கையாள்வதில் தோற்றுவிட்டது" என்று கூறினார்.
பிஜேபி இப்பொழுது ஜெய்ப்பூரில் மே 31ம் தேதி தன்னுடைய தேசிய நிர்வாகக்குழு
கூட்டத்தை நடத்த உள்ளது; கட்சியின் மூத்த தலைவர் எம்.வெங்கையா நாயுடு கருத்தின்படி, "கூட்டம் நாட்டை
எதிர்கொண்டுள்ள பயங்கரவாதம் பற்றி விவாதித்து வருங்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும்
முடிவெடுக்கும்."
பிஜேபி அதன் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம்
செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களையும், டிசம்பர் 2001 இந்திய
பாராளுமன்ற தாக்குதல்களையும் அடுத்து பாராளுமன்றத்தில் இயற்றிய மிகக் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு
சட்டத்தை UPA
அரசாங்கம் கைவிட்டதற்கு ஒருபோதும் உடன்படவே இல்லை.
POTA எனப்படும்
Prevention of Terrorism Act -
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இராணுவத்திற்கு போலீசிற்கும் "பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்கள்"
நீதிமன்றத்தில் காட்டாமல் 30 நாட்கள் காவலில் வைத்திருக்கவும், முறையான குற்றச் சாட்டுக்கள் இல்லாமல் 90
நாட்கள் வைத்திருக்கவும் பெரும் அதிகாரங்களை கொடுத்திருந்தது.
பொதுமக்கள் எதிர்ப்பை ஒட்டி, மே 2004ல் அதிகாரத்திற்கு வந்த
UPA அரசாங்கம்
இதற்கு பதிலாக 2004 செப்டம்பர் மாதம் வேறு ஒரு சட்டத்தை கொண்டுவந்தது; இதில் போட்டாவின் பல
அடக்குமுறை, ஒருதலைப்பட்ச அதிகாரங்கள் இருந்தன; மாற்றங்கள் வெறும் பூச்சு வேலைதான்.
ஆனால் பொட்டா மீட்கப்பட வேண்டும் என்று பலமுறை கூறும் பிஜேபி, அடுத்த ஆண்டு
பொதுத் தேர்தல்களில் இப்பிரச்சினையை, காங்கிரஸ் முஸ்லிம்களுடன் "நெருக்கமாக உள்ளது" "பயங்கரவாதத்தின்
மீது மிருதுவாக நடந்து கொள்ளுகிறது" என்ற இரட்டைத் தாக்குதலின் ஒரு பகுதியாக பயன்படுத்த விரும்புகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பொட்டாவை புதுப்பிக்க வேண்டும் எனக்
கோரும் பிஜேபி யின் பிரதம மந்திரி வேட்பாளர் எல்.கே.அத்வானி கூறினார்: "இது ஒன்றும் பயங்கரவாத
சட்டத்தை பற்றியது மட்டும் அல்ல. இது அரசாங்கம் மற்றும் மக்களுடைய அணுகுமுறையை பிரதிபலிக்கிறது...
அத்தகைய தாக்குதல்கள் வருமுன் தவிர்க்க வேண்டிய அரசின் திறன் பற்றியதாகும்"
UPA அரசாங்கத்தின் பிரதம மந்திரி
மன்மோகன் சிங், ஜெய்ப்பூர் குண்டுவீச்சு பற்றி தொடக்கத்தில் கொண்ட விடையிறுப்பு மிகவும் எச்சரிக்கையாக
இருந்தது. தாக்குதல்களை கண்டித்து அறிக்கை விடுத்த சிங், எவரையும் குறைகூறாமல் மக்களை "அமைதி"
காக்குமாறு கோரினார்.
"இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் வெளிநாட்டுத் தொடர்பு உடையவர்கள்" என்று
அறிவித்திருந்த உள்துறை அரசாங்க மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மீது, சந்தேக விரலைக் காட்டும் பொறுப்பு
விடப்பட்டது. ஆனால் எந்தச் சான்றையும் இந்த அறிக்கைக்காக ஜெய்ஸ்வால் கொடுக்கவில்லை; எந்த நாட்டை
அவர் குறிப்பிடுகிறார் என்றும் "வெளிநாடு" என்பது எது என்றும் கூறவில்லை. செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பாக
கேட்கப்பட்டதற்கு, ஜெய்ஸ்வால் இது எந்த அண்டை நாடாகவும், --வங்கதேசமோ, பாக்கிஸ்தானோ, நேபாளமோ,
மயன்மாரோ-- இருக்கக் கூடும் என்றும் இந்நாடுகள் அனைத்திலும் உள்நாட்டுக் கொந்தளிப்புக்கள் உள்ளன என்றும்
கூறினார்.
மே 18ம் தேதி அரசாங்கத்திற்கு எதிரான பிஜேபி- யின் கேள்விக்கணைகளை ஏற்கும்
விதத்தில் பிரதம மந்திரி, ஒரு கூட்டமைப்பு நிறுவனத்தை --ஒரு இந்திய
FBI போன்ற
அமைப்பை-- தோற்றுவிக்க வேண்டியது, தேவை என்று கூறினார். அதே நாளில் இந்தியாவின் தலைமை நீதிபதி
கே.ஜி.பாலகிருஷ்ணன் புது தில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசுகையில் சிறப்பான புதிய பயங்கரவாத எதிர்ப்புச்
சட்டங்கள் தேவை என்றார். |