World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSEP/ISSE holds May Day meeting in Colombo சோ.ச.க/ஐ.எஸ்.எஸ்.ஈ. மே தினக் கூட்டம் கொழும்பில் நடந்தது By our correspondents சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், அனைத்துலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பலம்வாய்ந்த கூட்டமொன்றை நடத்தின. கொழும்பில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் தீவின் பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்தும் வந்தவர்களுடன் சுமார் 200 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் கே. ரத்னாயக்க உரையாற்றுகையில், உலக முதலாளித்துவம் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ளதோடு உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றனர் என விளக்கினார். இப்போது தொழிலாளர் வர்க்கம், அரசியல் நிலைமையில் திடீர் அதிர்ச்சிகள், தலைகீழ் மாற்றங்கள் மற்றும் கூர்மையான நகர்வுகள் கொண்ட ஒரு காலகட்டத்திற்குள் நுழைகின்றது என அவர் எச்சரித்தார். கொழும்பு ஊடகங்கள் ஏனைய மே தினக் கூட்டங்கள் அனைத்தையும் பற்றிய செய்திகளை வெளியிட்ட அதே வேளை, சோ.ச.க. மே தினக் கூட்டத்தைப் பற்றிய செய்தி வெளியிடுவதை அவை தவிர்த்துக்கொண்டன என ரட்னாயக்க சுட்டிக் காட்டினார். 'இது தற்செயலானது அல்ல. (இலங்கையில்) உள்நாட்டு யுத்தத்தை எதிர்ப்பதும், வடக்கு கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்கக் கோருவதும் மற்றும் சோசலிச புரட்சிக்கான முன்நோக்கை அபிவிருத்தி செய்வதும் எங்களுடைய இயக்கம் மட்டுமே,' என அவர் தெரிவித்தார். விலானி பீரிஸ், தெற்காசியா பூராவும் வளர்ச்சிகண்டுவரும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆட்டங்காணச் செய்யும் தாக்கம் பற்றியும் பார்வையை செலுத்தினார். பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியாவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் கொந்தளிப்பு மற்றும் ஈரானில் இருந்து ஒரு இணைந்த எரிவாயு குழாய் வழியை அமைப்பதற்கான இந்தியா மற்றும் பாகிஸ்தானின் திட்டங்களை தடுக்க புஷ் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் பற்றியும் அவர் குறிப்பாக கவனத்தை செலுத்தினார். நேபாளத்தில் அண்மையில் நடந்த தேர்தலில் மாவோவாதிகள் வெற்றிபெற்றதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலும் மற்றும் வளங்கள் நிறைந்த மத்திய ஆசியாவிற்கு அருகிலும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தை அமைக்க அது முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எம். தேவராஜா, தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகள் பற்றியும் அரசியல் கட்சிகளாக இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் தொடர்பாக வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்புப் பற்றியும் உரையாற்றினார். எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதன் பேரில் பிரமாண்டமான இராணுவ, பொலிஸ் குவிப்பின் மத்தியில் இ.தொ.கா. தனது மேதினக் கூட்டத்தை ஹட்டனில் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். "ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டதன் மூலம் இ.தொ.கா. எந்தளவுக்கு தொழிலாளர் வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது," என்று அவர் விளக்கினார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து யுத்தத்திற்கு வர்க்கத் தீர்வு ஒன்றை அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியத்தை தேவராஜா வலியுறுத்தினார். வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க சோ.ச.க. அழைப்பு விடுப்பதற்குக் காரணம், தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அரசியல் அடித்தளத்தை உருவாக்குவதேயாகும். சோ.ச.க. புலிகளின் தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கையை ஆதரிக்காத அதே வேளை, முதலாளித்துவத்தை தூக்கிவீசி, அனைத்துலக சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தில் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என வலியுறுத்துகிறது. ஐ.எஸ்.எஸ்.ஈ. தலைவர் கபில பெர்னாண்டோ, யுத்தத்தின் அழிவுகரமான தாக்கங்களையும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டினார். இரண்டு தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த 70,000 பேரில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களே, மற்றும் சமூக சேவை வெட்டுக்கள் மற்றும் விலைவாசி உயர்வின் ஊடாக இளைஞர்கள் மீது யுத்தத்தின் பொருளாதார சுமைகள் கட்டியடிக்கப்படுகின்றன, என அவர் விளக்கினார். "கல்வி, தனியார் பல்கலைக்கழகங்களின் தோற்றத்தின் ஊடாக இலாபம் கிடைக்கும் வியாபாரமாக்கப்பட்டு வருகின்றது." எட்டு பிரதான பல்கலைக்கழகங்களின் மாணவர் எண்ணிக்கை 1984ல் இருந்து 2006ம் ஆண்டு வரையில் 24,000 த்தில் இருந்து 60,000 வரை அதிகரித்திருந்த போதிலும், வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. பல்கலைக்கழகத்திற்கு தகுதியுடைய மாணவர்களில் 18 வீதமானவர்கள் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். "இலங்கையில் வேலையற்ற இளைஞர்களின் தொகை 20 வீதத்திற்கும் அதிகமாகும். இராணுவத்தில் இணைந்து யுத்த பீரங்கிகளுக்கு இரையாகுவதே அவர்களுக்கு உள்ள ஒரே தேர்வாகும்," என அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் பிரதான உரையை நிகழ்த்தினார். "உலக அளவில் விரிவடைந்துள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ள மூல வேர்களை நாம் கிரகித்துக்கொள்ள வேண்டும்" என கூறி அவர் உரையை ஆரம்பித்தார். லியோன் ட்ரொட்ஸ்கி, 1920கள் மற்றும் 1930களில் அமெரிக்கா உலக மேலாதிக்க ஏகாதிபத்தியமாக வளர்ச்சி கண்டதை இந்த கொந்தளிப்பு காலகட்டம் பற்றிய தனது ஆய்வுகளின் மையமாக கொண்டிருந்தார் என அவர் தெளிவுபடுத்தினார். கூர்மையான ஏகாதிபத்திய உள் பதட்ட நிலைமைகள் தொடர்பான ட்ரொட்ஸ்கியின் விளக்கத்தை டயஸ் மேற்கோள் காட்டினார்: "அமெரிக்காவின் மேலாதிக்கமானது செழிப்புக் காலத்தை விட, நெருக்கடியான காலகட்டத்தில் மேலும் முழுமையாக, மேலும் வெளிப்படையாக மற்றும் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் செயற்படும். அமெரிக்கா, தனக்கு நெருக்கடிகளும் கோளாறுகளும் ஆசியாவில், கனடாவில், தென் அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் அல்லது ஐரோப்பாவில் இருந்தே தோன்றினாலும் கூட, அல்லது அது சமாதானமான முறையில் அல்லது யுத்தத்தின் ஊடாகவேனும் சரி, ஐரோப்பாவின் செலவிலேயே அவற்றை தீர்த்துக்கொள்ள மற்றும் அதில் இருந்து விடுபட முயற்சிக்கும்." டயஸ் அமெரிக்காவின் சரிவின் விளைவுகளை ஆராய்ந்தார். அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் இருந்த யுத்தத்திற்குப் பிந்திய செல்வச் செழிப்பானது 1960களில் கூர்மையான நெருக்கடிகளில் முடிவுக்கு வந்தது. இது சர்வதேச ரீதியில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை வெளிக்கொணர்ந்தது. சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பப்லோவாத திரிபுவாதிகளின் ஆதரவிலான ஸ்டாலினிச தலைமைத்துவத்தின் உதவியுடனேயே முதலாளித்துவத்தால் அது உயிர்பிழைத்திருக்க முடிந்தது, என அவர் சுட்டிக்காட்டினார். "இந்தப் போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடிய ஒரே அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா.அ.அ.கு.) மட்டுமே. சோ.ச.க. யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது இந்த அரசியல் கொந்தளிப்பு காலகட்டத்தில், 1968ல் நா.அ.அ.கு. வின் பகுதியாக இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது," என டயஸ் விளக்கினார். அமெரிக்க மேலாதிக்கத்தின் கடந்த மூன்று தசாப்த கால சரிவானது புரட்சிகர எழுச்சியின் புதிய காலகட்டமொன்றை தயார் செய்கின்றது. "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி, இன்று பூகோளம் பூராவும் கடுமையான அரசியல் ஸ்திரமின்மைகளையும் அதிர்ச்சிகளையும் ஏற்கனவே உருவாக்கிவிட்டுள்ளது." 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ கூறிய பொய்கள் மிகத் தெளிவாக அம்பலத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன என இலங்கையைப் பற்றி பேசிய டயஸ் தெரிவித்தார். "அவரது மஹிந்த சிந்தனை (தேர்தல் விஞ்ஞாபனம்) நாட்டுக்கு 'கெளரவமான சமாதானத்தை' கொண்டு வருவதாக வாக்குறுதியளித்துள்ளது. அது அனைத்துக் கட்சி குழுவின் மூலமாக மூன்று மாதங்களுக்குள் 'அரசியல் தீர்வு' ஒன்றை முன்வைப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தது. அந்தத் தீர்வை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கொடுத்து அதை அவருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்," என டயஸ் தெரிவித்தார். "அந்தப் பொய்களால் இராஜபக்ஷ மக்களை ஏமாற்றியுள்ளார். சோ.ச.க. மட்டுமே இந்தப் பொய்களை ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தியது. ஆட்சிக்கு வந்ததும் இராஜபக்ஷ யுத்தத்தை உக்கிரமாக்குவார் என நாம் எச்சரித்திருந்தோம்," என டயஸ் பிரகடனம் செய்தார். தெற்காசியா பூராவும் அபிவிருத்தியடைந்துகொண்டிருக்கும் நெருக்கடிகளை சுட்டிக்காட்டிய டயஸ், அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தை தெளிவுபடுத்தியதுடன் தனது உரையை முடிவுசெய்தார். "சோசலிச சமத்துவக் கட்சிகளை வெகுஜனக் கட்சிகளாக மாற்றுவதற்கான புறநிலை நிலைமைகள் பூகோள அளவில் அபிவிருத்தியடைந்துள்ளன. இந்தப் பணிகளை அடிப்படையாகக் கொண்ட முன்நோக்கு, உலக சோசலிச வலைத் தளத்தில் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அன்றாடம் முன்வைக்கப்படுகின்றது." கூட்டத்தின் முடிவில் சோ.ச.க. யை கட்டியெழுப்ப 18,000 ரூபாவுக்கும் அதிகமான நிதி சேகரிக்கப்பட்டதுடன் அனைத்துலக கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பலருடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உரையாடினர். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியரான ஐவன்: "நான் முன்னர் ஜே.வி.பி. யின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆதரவாளனாக இருந்தேன். ஆனால், இலங்கை தொழிலாளர்களும் சாதாரண மக்களும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், குறிப்பாக யுத்தம், அவர்களது தேசியவாத வேலைத்திட்டத்தின் ஊடாக தீர்க்கப்பட முடியாது என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். ஜே.வி.பி. ஒரு கொள்கையற்ற கருவி என்பது அண்மையில் அதனுள் ஏற்பட்டுள்ள பிளவு தெளிவுபடுத்திவிட்டது. அந்தப் பிளவு பற்றிய உங்களது ஆய்வை நான் வாசித்தேன். ஜே.வி.பி. முன்னர் செய்தது போல், இந்த ஆண்டு அதன் மே தின ஊர்வலத்திற்கு அதன் தொழிற்சங்க கிளைகளின் உறுப்பினர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. ''இங்கு அனைவரதும் உரைகளை நான் கவனமாகக் கேட்டேன். இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் வெளிப்பாடு என்பதை தெளிவுபடுத்த அனைவரும் முயற்சித்தனர். இந்தியத் துணைக்கண்டத்தில் அரசியல் நெருக்கடி பற்றி சிந்திக்க வேண்டியது முக்கியமாகும். ஜே.வி.பி. போன்ற கட்சிகளால் தொழிலாளர்கள் தமது சொந்த வேலைத்தளத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்," எனத் தெரிவித்தார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புத் துறை மாணவனான சாமர: "உங்களது மே தினக் கூட்டத்தில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை. நான் கலையோடு தொடர்புடைய ஒரு துறையில் பயிலுவதால் நான் இங்கு வந்தேன். நான் வாசித்த உங்களது இலக்கியங்களின் படி, மார்க்சிய இயக்கங்களுக்கு கலை தொடர்பான ஒரு தெளிவான சுயாதீனமான நிலைப்பாடு உண்டு. "யுத்தம் மற்றும் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பான உங்களது நிலைப்பாடு பற்றி ஒரு உண்மையை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த இரு போக்குகளும் சர்வதேச பிரச்சினைகளாக இருப்பதோடு, அதனால் தேசியவாத நோக்கில் தீர்வு காண நினைப்பவர்கள் அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கக் கூட முடியாது. "இப்போது இலங்கை பல்கலைக்கழகங்களில் உள்ள சூழ்நிலையைப் பற்றி நான் குறிப்பிடுவதென்றால், அது அறிவுக்கு எதிரானது மட்டுமே. தேர்வு செய்யப்பட்டு வரும் மாணவர்கள், தமது பாடங்களை செய்துவிட்டு சென்று விடுவார்கள். அரசியல், சமூகம் மற்றும் கலாச்சார பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்களுக்கு அங்கு இடம் கிடையாது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தமது சொந்தத் துறைக்கு அப்பால் செல்வதில்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என நான் உணர்கிறேன்," என அவர் மேலும் தெரிவித்தார். |