World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்France: LCR backs the CGT against undocumented workers பிரான்ஸ்: ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு எதிராக CGT க்கு LCR ஆதரவு கொடுக்கிறது By Antoine Lerougetel and Kumaran Ira Sans papiers எனப்படும் நூற்றுக்கணக்கான ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்கள், மத்திய பாரிசில் உள்ள CGT கட்டிடத்தில் மே 2ம் தேதியில் இருந்து அமர்ந்துள்ளனர். அவர்களுடைய வசிக்கும் உரிமை விண்ணப்பங்களுக்கு தொழிற்சங்கத்தின் ஆதரவை அவர்கள் கோருகின்றனர்.ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் நெருக்கமான CGT, தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கும் ஆவணமற்ற தொழிலாளர்களுடைய விவரங்களை மட்டும்தான் எடுத்துக் கொள்ள தயாராக உள்ளது. இதற்கு மாறாக பாரிஸ் Prefecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) அனைத்து விண்ணப்பங்களும் CGT மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது தொழிற்சங்கத்தை அரசாங்கத்திற்கும் ஆவணமற்ற தொழிலாளிகளுக்கும் இடையே ஒருவித இடை நிலையில் இருத்துகிறது. மத்திய பாரிஸ் ஆவணமற்ற தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவால் (CSP 75) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஆவணமற்ற தொழிலாளர்களின் நிலை பற்றி எடுத்துரைக்க CGT மறுப்பு காட்டியுள்ளமை அவர்களை பெரும் நெருக்கடியில் நிறுத்தியுள்ளது. இத்தொழிலாளர்களை CGT கைவிட்டுள்ளது "அதி இடது" எனப்படும் ஒலிவியே பெசன்ஸனோவின் கீழ் உள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) ஆதரவைப் பெற்றுள்ளது. CGT கிட்டத்தட்ட தன் உறுப்பினர்கள் 900 பேர் பற்றிய கோப்புத் தொகுப்பை, வசிக்கும் உரிமைகள் கோரியதை பாரிஸ் préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) இடம் அளித்துள்ளது; இவை "நல்ல முறையில்" ஒவ்வொரு வழக்காக நன்கு ஆராயப்பட்டு உடன்பாடு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் இவை அரசாங்கத்தின் கடுமையான சட்ட உரிமை வழங்குதல் மற்றும் அரசாங்கத்தின் உள்ளூர் பிரதிநிதியான préfets (நிர்வாக காவல்துறை தலைவர்) ஒருதலைப்பட்ச தேர்வுமுறை, ஆகியவை கடைபிடிக்கப்படும் என்பதாகும். இதற்கு முன் பாரிஸ் பகுதி முழுவதும் ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தங்களும் ஆக்கிரமிப்புக்களும் நடந்துள்ளன; ஆயிரக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள் இவற்றை நடத்தியுள்ளனர். இதற்கு CGT மற்றும் சிவில் உரிமைகள் அமைப்பான Droits Devant ஆகியவை தலைமை தாங்கியுள்ளன. பலவற்றிலும், இந்த வேலைநிறுத்தங்கள் முதலாளிகளுடைய ஆதரவைப் பெற்று இருந்தன; அவர்களுக்கு இந்த தொழிலாளர்களின் தேவை மிக அவசியமாகும்.உள்ளூர் காவல் நிர்வாகத்தால் (préfectures) கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்-- அவர்கள் CGT மூலம் வரவேண்டும் என்று கூறப்பட்டனர்-- CSP 75 தொழிற்சங்கத்தை அவர்களுடைய தொகுப்பை கொடுக்குமாறும் கேட்டது. தொழிற்சங்கம் அவ்வாறு செய்ய மறுத்ததும், கிட்டத்தட்ட 300 CSP 75 உறுப்பினர்கள் பாரிசின் 3ம் வட்டாரத்தில் உள்ள CGT கட்டிடத்தை மே 2ம் தேதி, ஆக்கிரமித்தனர். தொழிற்சங்கங்கள் "ஆவணமற்ற தொழிலாளர் இயக்கத்தை பிணைக் கைதி போல்" எடுத்துக் கொண்டுவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் CGT தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வரையில் அங்கு இருக்கப்போவதாக உறுதியாக கூறியுள்ளனர். CSP 75, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் ஏராளமானவர்களை விலக்குகின்ற CGT க்கும் பிரெஞ்சு அரசிற்கும் இடையிலான உடன்பாட்டை நிராகரித்துள்ளது; இது CGT ஒன்றைத்தான் ஆவணமற்ற தொழிலாளர்களின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட மத்தியஸ்தராக்குகின்றது. மே 15ம் தேதி CSP கொடுத்த அறிக்கை கூறுகிறது: "CSP 75, இத்தகைய பிரத்தியேகமான பங்கை ஏற்க முடியாது; இது பாரிஸ் பகுதியில் உள்ளூர் காவல் நிர்வாகங்களுக்கு கூட்டாக விண்ணப்பங்களை மனுச்செய்யும் தகுதி CGT க்குக் வழங்கப்படிருப்பது போல் தோன்றுகிறது.இப்பொழுது 12வது நாள் ஆக்கிரமிப்பு அன்று, 600 ஆவணமற்ற தொழிலாளர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கட்டித்தை ஆக்கிரமித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அனைத்து ஆவணமற்ற தொழிலாளர்களும் மே 16ம் தேதி வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் பாரிசில் 85 rue Charlot ல் உள்ள a Bourse du Travail தொழிற்சங்க மன்றத்தில் அணிவகுப்புக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்த கட்டிடம் அனைத்து தொழிலாளர்களுடைய வரலாற்று தன்மை நிறைந்த போராட்டத்தின் இருப்பிடம் ஆகும்" என்று நினைவு கூரும் அது, CGT யிடம் வேலைநிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு இயக்கம் நடத்தும் ஆயிரக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு "ஆதரவையும் உதவியையும்" நாடுகிறது. இந்த அறிக்கை அவர்களுடைய இயக்கம் பொதுவாக "தொழிலாளர்கள் உரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிரான" போராட்டம் என்றும் வலியுறுத்துகிறது. அது தொடர்கிறது: "அனைத்து ஆவணமற்ற தொழிலாளர்கள், ஆண், பெண், அகதிகள், வேலையில்லாதவர்கள் ஆகியோரின் சட்டரீதியாக செல்லும்தன்மை திரு. [Brice] Hortefeux (குடியேறுவோர் துறை மந்திரி) மற்றும் திரு. [Michel] Gaudin (பாரிஸ் போலீஸ் தலைவர்) ஆகியோரால் CGT உதவியுடன் வரவேற்கப்பட வேண்டும்; பாதுகாவல் நிலையங்கள் [வெளியேற்ற நடவடிக்கை நிலுவையில் இருப்பதை ஒட்டி குடியேறுபவர்களை வைக்கும் இடங்கள்] மூடப்பட வேண்டும்; வெளிநாட்டவரிடம் காட்டும் இனவெறி குடியேற்ற சட்டங்கள் அகற்றப்பட வேண்டும், வெளிநாட்டினரை வேலைக்கு வைப்பதற்காக முதலாளிகளால் கொடுக்கப்படும் பாகுபாடு காட்டும் சட்ட விரோத ANAEM வரி அகற்றப்பட வேண்டும்!" LCI TV தொலைக்காட்சிக்கு மே 8 அன்று கொடுத்த பேட்டியில் பாரிஸ் பகுதி CGT இன் அதிகாரியான Christian Khalifa., உள்ளூர் காவல் நிர்வாகம் (préfecture) CSP 75 இன் விண்ணப்பங்களை நிராகரித்ததை அசட்டை செய்தார்; இது தொழிற்சங்கங்களின் பொதுவான குறுகிய பார்வையின் சிறப்பு உதாரணம் ஆகும்; இந்த தொழிலாளர்களை பாதுகாக்கவும் மறுத்துவிட்டார். "நாம் எவரையும் பிணைக் கைதியாக வைத்திருக்கவில்லை. ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கும் எவரையும் தடுக்கவில்லை. நாங்கள் ஒரு தொழிற்சங்க அமைப்பு; ஆவணமற்ற தொழிலாளர்களின் சங்கம் அல்ல. எங்கள் நடவடிக்கை வேலைத்தளங்களிலும் நடத்தப்படுகிறது... நாங்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எங்கும் நடத்துகிறோம். எங்கள் இடங்களை ஆக்கிரமிப்பது சரியல்ல; மிகவும் செயலூக்கமான காலகட்டத்தில் கூட குறைந்த அளவிலேனும், மே15 மற்றும் மே22 நடவடிக்கைகளில் தயார் செய்வதில் நாம் இருப்போம்.பாரிஸ் préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) மட்டும் இல்லாமல், பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனும் CGT ஐ ஆவணமற்ற தொழிலாளர்களை பற்றிய செயற்பாடுகளில் மத்தியஸ்தராக கருதுகிறார். CGT பொதுச் செயலாளர் பேர்னார்ட் திபோக்கு எழுதிய கடிதம் ஒன்றில், பிய்யோன் "மிக அதிகமான பூர்த்தி செய்யப்படாத விண்ணப்ப மனுக்கள்" மற்றும் "முதலாளி வேலை கொடுக்கிறேன் என்று கூறுவது அடிக்கடி இல்லாமல் போவது" ஆகியவை பற்றி குறை கூறியுள்ளார். "தொழிலாளர்களை பொறுத்த வரையில் சிறந்த தீர்வை காண்பதற்கு" பேச்சு வார்த்தைகளின் அபிவிருத்தியில் குறைகள் இருப்பதற்கு "தொழிற்சங்கங்களையும் ஆவணமற்ற தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்புக்களையும்" அவர் கடிந்துரைக்கிறார். நவம்பர் 20, 2007 சட்டத்தின் 40ம் விதியும், ஜனவரி 7, 2008 விதியும் அரசாங்க சுற்றறிக்கையும் தொழிலாளர் ஒரு பிரிவில் "en tension" (தொழிலாளரைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கக் கூடிய நிலையில்) இருக்கிறது என்ற நிபந்தனையின் கீழ், முதலாளி கோரினால் சட்டரீதியாக்கும் சாத்தியத்தை வழங்குகின்றன. குடிவரவு அகல்வு துறை மற்றும் தேசிய அடையாளப் பிரிவு மந்திரி Hortefeux சட்டரீதியாக்கல் "இவ்விதிகளை ஒட்டி முறையாக ஒரு சில நூறுபேருக்கு பொருந்தும் வகையில்தான்" இருக்கும் என்றும் தெளிவுபடுத்தினார். இதற்கு விடையிறுக்கையில் திபோ, Europe 1 வானொலியில் அனைத்து ஆவணமற்றவர்களுக்கும் சட்டத்தை கோருவதற்கு பதிலாக, "விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்; மேலும் "இந்த ஆவணமற்ற தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் அனைத்துத் துறைகளிலும் ஒரே மாதிரியாக நிறுவப்படும் வகையில் தரங்கள் இருப்பதற்காக" ஒரு கூட்டம் வேண்டும் என்றும் கூறினார். காலிபாவும் திபோவும் இங்கு ஐக்கியத்தின் அடிப்படை கோட்பாட்டை நிராகரிக்கின்றனர். அதாவது தொழிலாள வர்க்கத்தின் மையப்பணியான சமூகத்தின் மிகப் பலவீனமான பிரிவுகளுக்கு ஆதரவு கொடுப்பதை மறுக்கின்றனர்; ஆளும் வர்க்கம் மிகுந்த பாதிப்பிற்கு உட்பட்டிருக்கும் பிரிவுகளின் ஜனநாயக உரிமைகளைத்தான் முதலில் தாக்கும் என்பதை நன்கு அறிந்தும் இவ்வாறு செய்கின்றனர். ஆவணமற்ற தொழிலாளர்களின் உரிமையை நசுக்குதல் என்பது, ஊதியங்கள், நிலைமைகளின் பொது மட்டங்கள் தாழ்த்தப்படுவதற்கு அவர்கள் முற்றிலும் முதலாளியின் தயவில் இருக்குமாறு, உரிமைகள் இல்லாது அச்சுறுத்தி ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஏராளமாக உள்ள ஒரு சேனையை தோற்றுவிக்கும் முயற்சியின் ஒரு பகுதி ஆகும். அரசாங்கம் CGT, Droits Devant ஆகியவற்றை அதன் முகவர்களாக பயன்படுத்தி ஆவணமற்ற தொழிலாளர்களின் வளர்ச்சியடைந்து வரும் போராட்டத்தை எதிர்கொள்ள முற்படுகிறது, அப்போராட்டத்தை உடைக்க பார்க்கிறது, மற்றய தொழிலாளர்களிடம் இருந்து அவர்களை பிரிக்கப் பார்க்கிறது என்பது மிகவும் தெளிவு. இந்தப் பங்கு இன்னும் வெளிப்படையான முறையில் CGT யினாலும் மற்ற தொழிற்சங்கங்களாலும், தொழிலாளர்கள் தங்கள் சுயாதீன நலன்களுக்கு போராடும் இடங்களில் எல்லாம் செய்யப்படுகிறது; இதுதான் கடந்த ஆண்டில் அக்டோபர், டிசம்பரில் போக்குவரத்து, ஆற்றல் தொழிலாளர்கள் ஓய்வூதியங்களை பாதுகாப்பதற்காக நடத்திய போராட்டத்தில் வெளிக்காட்டப்பட்டது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் CGT யும் 1970 களில் இருந்து குடியேறும் தொழிலாளிகளை கட்டுப்படுத்தும் சோவினிச கொள்கையை கொண்டுள்ளன; தேசிய காப்புவாதத்தால் வேலையின்மையை எதிர்த்துப் போராடி வருவதாகவும் கூறி வருகின்றன; அக்காப்பு முறை பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு ஏற்றம் தருவதற்கு வடிவமைக்கப்பட்டதாகும். 1970ல் அவை "பிரெஞ்சுப் பொருட்களை வாங்குக, பிரான்சில் உற்பத்தி செய்க" என்ற பிரச்சாரத்தை தொடக்கின. 1979ல் கம்யூனிஸ்ட் கட்சி குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை ஏற்றது. அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் காப்பதற்கு தொழிலாளர்களை திரட்டுவதற்கு பதிலாக அவை முதலாளிகளுடன் உடன்பாடு கொண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றின் தொழிலாளிகள் இவற்றிற்கு எதிராக செயல்பட்டன. 1980 TM, "Vitry bulldozers" எனப்பட்ட இகழ்வான செயல் நடந்தது; ஸ்ராலினிச வித்ரி நகர மேயர், அவருடைய நகரசபை பகுதியில் இருந்த குடியேறிய தொழிலாளிகள் இல்லம் ஒன்றைத் தகர்த்தார்; அதிகமான எண்ணிக்கையில் குடியேறியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நகரசபைகளில் இருப்பது பிரச்சினைகளை தருவதாக காரணம் கூறினார்.குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் கொள்கைகள் பிரெஞ்சு இடதுகளால் அரவணைக்கப்படல், மற்றும் அதனுடன் தவிர்க்க முடியாத ஒடுக்குமுறை போலீஸ் சாதனம் இதற்கு தேவைப்படலும் நீண்ட காலமாக ஆவணமற்ற தொழிலாளர்கள் திருச்சபைகளை ஆக்கிரமிக்கும் உத்திக்கு திரும்புவதும், மதகுருமார்களுக்கு வேண்டுகோள் விடுவதும் இக்கட்டிடங்கள் புகலிடங்களாக மரபார்ந்த வகையில் பாத்திரம் வகிப்பதும் கடமைப்பாடுடையதாக உள்ளன. ஆகஸ்ட் 22, 1996ல் CRS சிறப்புப் படைகள் கோடாரிகளை ஏந்தி திருச்சபைக் கதவுகளை உடைத்து குடியேறியவர்களை வெளியேற்றியது இன்னமும் நினைவில் உள்ளது; அப்பொழுது அங்கு கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், மழலைகள் என்று இருந்தனர். CRS அங்கு கோலிச பிரதம மந்திரி அலன் யூப்பேயினால் அனுப்பப்பட்டது. இந்தச் சீற்றம் மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்களால் உணரப்பட்டு கோலிசவாதிகள் 1997 பொது தேர்தலில் தோற்கடிக்கப்பட காரணமாக இருந்தது. தற்போதைய ஆவணமற்ற குடியேறியவர்களின் இயக்கம் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின்பாலான ஒரு திருப்பத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. CSP 75 மே 15ம் தேதி வெளியிட்டுள்ள கொள்கை நிறைந்த அறிக்கை, குடியேறுவோரின் ஜனநாயக உரிமைகள் அடக்கப்படுவது அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளும் அச்சுறுத்துவது போல் ஆகும் என்று எச்சரித்துள்ளது. préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) வசிப்பதற்கான உத்தரவுகளை கொடுத்தது, அவற்றில் பல குறுகிய காலத்திற்குத்தான் என்பதும், அவர்களுடைய உழைப்பு தேவை எனக் கூறியிருந்த முதலாளிகளின் கீழ் இருக்கும் ஒரு சில ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு மட்டும்தான் என்பதும் CGT யினால் ஒரு பெரிய வெற்றி போல் காட்டப்படுகிறது.LCR இன் வாராந்திர ஏடான Rogue தன்னுடைய மே 9ம் தேதி பதிப்பில் இதற்கு ஒப்புதல் கொடுக்கிறது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: "ஏப்ரல் 15ல் இருந்து பல நூற்றுக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள் நிகழ்த்தி வரும் தொடர்ந்த வேலைநிறுத்தங்களும் ஆக்கிரமிப்புக்களும், சார்க்கோசி மற்றும் தேசிய அடையாள மந்திரி Brice Hortefeux இன் கொள்கையில் சிறப்பான உடைவைக் கொடுத்துள்ளது. தொழிற்சங்க இயக்கம் சம்பந்தப்படல், குறிப்பாக CGT யின் தொடர்பு ஒரு முக்கிய கூறுபாடு ஆகும்."CGT அதிகாரத்துவத்தினருடைய உதவிக்கு Rouge விரைந்து வருவதுடன், "பாரிஸ் தொழிற்சங்க மன்றம் Coordination 75 ஆல் இழிவாக ஆக்கிரமித்துள்ளதை" தாக்கி, அது "பிளவு என்னும் நச்சிற்கு" காரணமாக இருந்துவருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.LCR தன்னுடைய வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள "ஆவணமற்ற தொழிலாளர்கள் இயக்கமும் LCR இன் நிலைப்பாடும்" என்ற கட்டுரை உட்குறிப்பாக Coordination 75 ன் நடவடிக்கை அரசாங்கத்திற்கு உதவுவதாக கூறுகிறது. "அரசாங்கம் இயக்கத்தை பிளவுபடுத்தி திறனற்றதாகச் செய்துவிடக்கூடும்" என்று எழுதியுள்ளது.CGT எப்படி தொழிலாளர்களின் அடிப்படை ஒற்றுமையைக் கைவிட்டது என்பது பற்றி LCR அம்பலப்படுத்தவில்லை; மேலும் ஜனநாயக உரிமைகள் காத்தலை கைவிட்டது பற்றியும் கூறவில்லை; தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இது ஒரு மூடிமறைப்பு போல்தான் நடந்து கொண்டுவருகிறது. இனவெறிக்கு முக்கிய எதிரிபோல் இது காட்டிக் கொள்ளும் உண்மை இதில் அம்பலமாகிறது; அதே போல் ஆவணமற்ற தொழிலாளர்களின் பாதுகாவல் அமைப்பு எனக் கூறிக் கொள்ளுவதும் ஒரு மோசடி என்று ஆகிறது. மற்றய துறைகளைப் போலவே --பொதுப்பணித்துறை சிறப்பு ஓய்வூதியங்களைக் காத்தல், பள்ளி மாணவர்கள் போராட்டங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டகள் போன்றவை-- LCR மற்றும் அது கட்டமைக்க விரும்பும் புதிய "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி" ஆகியவை வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மறைப்பாகத்தான் உள்ளன.WSWS தொழிலாள வர்க்கத்தை அனைத்து குடியேறுபவர்களின் உதவிக்கு வருமாறும் அவர்களுக்கான முழுக் குடி உரிமைகளுக்கு போராடவும் அழைப்பு விடுகிறது. இதற்கு எங்கிருந்து வந்தாலும் வேறுபாடின்றி அனைத்துத் தொழிலாளர்களுடைய நலன்களுக்கும் போராடக்கூடிய ஒரு கட்சியை கட்டியமைப்பது முக்கியமாகும்.சார்க்கோசிக்கு எதிரான மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, முழு குடிமை உரிமைகளுக்கான ஆவணமற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பின்னே தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பகுதிகளும் அணிதிரட்டப்படுவதன் மூலம் மட்டுமே இந்த உரிமைகளை பாதுகாத்து, விரிவாக்கம் செய்யமுடியும். |