World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

The world crisis of capitalism and the prospects for socialism

முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியும் சோசலிசத்திற்கான வாய்ப்பு வளமும்

By Nick Beams
31 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் ISSE சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் ஜனவரி 21-25 நடைபெற்ற சர்வதேச பாடசாலையில் நிக் பீம்ஸ் ஆற்றிய ஆரம்ப உரையைய் கீழே பிரசுரித்துள்ளோம். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவில் பீம்ஸ் ஒரு உறுப்பினரும், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எமது பாடசாலையில் உலக சோசலிச வலைத் தளத்தை ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு நாம் அந்த ஜூலையில் வெடித்திருந்த ஆசிய நிதிய நெருக்கடி என்று அழைக்கப்பட்டிருந்த நிகழ்வின் தாக்கங்களை ஆராய்வதில் சிறிது காலத்தை செலவழித்தோம்.

இந்த நெருக்கடி பற்றி ஒரு அறிக்கையை வழங்குகையில் ஒரு நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கை எதிர் கொண்டிருந்ததால் அது சற்றே கடினமான விஷயம் என்று நான் கூறினேன். இன்று அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறக்கூடிய நிகழ்வின் மத்தியில் நாங்கள் நிற்கின்றோம் என மீண்டும் உணரக்கூடிய மனநிலையில் உள்ளேன்.

ஆசிய நெருக்கடி வெடித்தபோது, அது வெறும் ஆசிய நெருக்கடி அல்ல என்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆசியாவில் வெளிப்பட்டது என்றும் நாம் விளக்கினோம். இன்று சாதாரணமாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியை மட்டும் நாம் எதிர்கொள்ளவில்லை, ஒரு உலக நெருக்கடி அமெரிக்காவில் வெடித்து எழுந்துள்ளதைத்தான் எதிர்கொண்டிருக்கிறோம்.

Merrill Lynch தற்போது $16.7 பில்லியன் பணத்தை திரும்பிவராக் கடன் (அறவிடமுடியாக் கடன்) வகையில் தள்ளுபடிசெய்துள்ளது போன்று ஒவ்வொரு நாளும் பெரிய நிதிய அமைப்புக்கள் பற்றிய தகவல்களும் மேலும் இழப்புக்கள் வரக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. இது குறைந்த பிணையுள்ள அடைமானகடன் (Subprime Mortgage) முதலீட்டில் $18 பில்லியன் மதிப்பு அளவில் வராக் கடனாக ஆன பின் Citigroup அதன் 196 ஆண்டு வரலாற்றில் இப்பொழுதுதான் மிகப் பெரிய இழப்பை, அதாவது கடைசி காலாண்டிற்கு $9.83 பில்லியன் என அறிவித்துள்ளது.

பெரிய நிதிய அமைப்புக்கள் தாங்கள் காணக்கூடிய எங்கிருந்தும் ஏராளமாக பணம் பெறுவதை உத்திரவாதம் செய்வதற்கு அலைகின்றன; Merrill Lynch மற்றும் Citigroup இரண்டும் $21 பில்லியன் நிதியத்தை சிங்கப்பூர் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து திரட்ட முயன்றுள்ளன.

ஒவ்வொரு நாளும் புதிய அறிவிப்புக்களை வெளியே கொண்டுவருகின்றன. ஜனவரி 18ம் தேதி, "அனைத்தும் வீழ்ந்து கொண்டிருக்கின்றனவா?" என்ற தலைப்பில் The Economist காப்பீட்டு கடன் பத்திர சந்தைக்குள்ளே (Bond Insurance Market) வளர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடி பற்றி தகவல் கொடுத்துள்ளது. அது எழுதியதாவது:

"கிட்டத்தட்ட $2.4 டிரில்லியன் தனியார், பொதுத் துறை கடன் பத்திரங்களுக்கு (Bonds) பாதுகாப்பு கொடுத்த அமெரிக்காவில் மிகப் பெரிய பத்திரக் காப்பீட்டாளர்கள் பொதுவாக எதைப்பற்றியும் கவனம் செலுத்தாது தமது வணிகத்தை நடத்துபவர்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் பெரிதும் அதிர்வுற்றுச் சரிந்த நிலையில் தள்ளாடுவது பிறர் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று அல்லது இரண்டு கவிழ்ந்தால், வங்கிகள் மற்றும் அவற்றின் உறுதியை நம்பியுள்ள நிதிய அமைப்புக்களின் மீது மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். இதையொட்டி கடன் நெருக்கடி இன்னமும் மோசமாகி, அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தீவிர மந்த நிலை பற்றி பிரச்சினைகளை தீர்க்க முற்படும் கொள்கை வகுப்பவர்களுக்கு இன்னும் கூடுதலான தலைவலியை ஏற்படுத்தக் கூடும்;

"அத்தகைய நிதிய தொடர் தாக்கத்தின் விளைவு பற்றி அச்சம் பெரிதும் படர்ந்துள்ளது. கடன் தரம் பற்றி மதிப்பீடு செய்யும் நிறுவனமான Moody's மிகப் பெரிய கடன்பத்திர (Bond) காப்பீட்டாளர்களான MBIA, Ambac இரண்டிற்கும் கொடுத்துள்ள AAA தரமதிப்பீட்டை குறைக்கக்கூடும் என்று அடையாளம் காட்டியுள்ளது."

ஜனவரி 16ம் தேதி $3.5 பில்லியன் தொகையை அறவிடமுடியாக் கடனாக Ambac அறிவித்தது; மேலும் அதன் தலைமை நிர்வாகியை அகற்றப்போவதாகவும் அறிவித்தது. JP Morgan Chase இன் தலைவரான Jamie Dimon, bond காப்பீட்டாளர் நெருக்கடியிலிருந்து விலகுவது கடன் சந்தைகளுக்கு "பெரிதும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக" இருக்கலாம் என்று கூறியதாக The Economist மேற்கோளிட்டது. "ஒரு பெரிய காப்பீட்டாளர்... தடுமாறி விழுந்துவிட்டார் என்று கூறினால் அது குறைமதிப்பான கருத்தாகும்" என்றும் ஏடு கருத்து தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் இப்பொழுது ஒரு பொருளாதாரப் பின்னடைவை கணிப்பதுடன் அது எவ்வளவு விரைவில் வரும், எத்தனை காலம் நீடிக்கும் என்னும் விவாதத்தை மையமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஜனவரி 10ம் தேதி அமெரிக்க மத்திய வங்கிகள் குழு தலைவர் பென் பெர்னன்கே ஒரு முக்கிய உரையை அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஆற்றினார்; இதில் அடுத்த மாத இறுதியில் மத்திய வங்கியின் பகிரங்க சந்தைக் குழு கூடும்போது இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்பதை கிட்டத்தட்ட உறுதிபடக் கூறினார். ஆனால் இந்த செய்தி நிதியச் சந்தைகளுக்கு ஒரு ஏற்றம் கொடுப்பதற்கு பதிலாக Dow Jones Industrial Average உரைக்கு பின் 250 புள்ளிகள் சரிந்தது.

"பொருளாதாரப் போக்கை கணிப்பது வழக்கத்தைவிட மிகக் கடினமாக்கிவிட்ட ஒரு உறுதியற்ற சூழ்நிலை உள்ளது" என்று பெர்னன்கே பேசியதில் வியப்பு ஏதும் இல்லை; வீடுகள் கட்டுதல் மற்றும் புதிய வீடுகள் விற்பனை முன்பு இருந்த முறையான உயர்நிலையில் இருந்து 50%சரிவைக் கண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், "குறைந்த பிணையுள்ள அடைமான கடன்கள் (Subprime mortgages) என்று மட்டுமில்லாமல் பரந்த நிதிய சொத்துக்களை பற்றிய தக்க மதிப்பீடு காண்பதிலும் முதலீட்டாளர்கள் கணிசமான உறுதியற்ற நிலையில் உள்ளனர்" என்று கூறி, "வரும் தகவல்கள் 2008ல் உண்மையான நடவடிக்கைக்கான அடிப்படை பார்வை மோசமடைந்துள்ளதை காட்டுகிறது என்றும் வளர்ச்சி பற்றிய கீழ்நோக்கு ஆபத்துக்கள் அதிகமாகியுள்ளன" என்றும் எச்சரித்தார்; சில பிரிவுகளில் முன்னேற்றம் இருந்தபோதிலும், "நிதி நிலைமை உடைந்துவிடும் தன்மையில்தான் உள்ளது." என்றும் கூறினார்.

எந்த அளவிற்கு உறுதியற்று இருப்பது என்பது கடந்த இரு மாதங்களில் நிதிய செய்தி ஊடகத்தில் தோன்றியுள்ள கருத்துக்களில் நன்கு காணப்படலாம்.

டிசம்பர் 19ம் தேதி இந்த நெருக்கடி சொத்தை எளிதில் பணமாக மாற்றமுடியாத்தன்மை (Liquidity squeeze) என்பதைவிட கூடுதலாக உள்ளது, ஆனால் இப்பொழுது அது "ஒரு வங்கி நெருக்கடியாகிவிடக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது" என்று Economist குறிப்பிட்டுள்ளது. அப்பொழுது வீடுகள் சந்தையில் ஏற்படும் இழப்புக்கள் மிகப் பெரிதாக இருக்கும் எனத் தெரியவந்தபொழுது, வங்கிகள் அவற்றை ஏற்றுக் கொள்ள நேரிடும், மற்றும் இந்நிலையை எதிர்கொள்ள அவை மூலதனத்தை ஒதுக்கி வைக்கவில்லை என்றும் தெரியவந்தபொழுது "வயிற்றைக் கலக்கும் கணம் நவம்பர் கடைசியில் வந்தது. "திவாலாதல், பொருளாதாரப் பின்னடைவு, வழக்குத் தொடரல், பாதுகாப்புவாதம் என வருத்தம்தரும் வகையில் இவை அனைத்திற்குமே 2008ல் இடமுண்டு" என்று அது எச்சரித்தது.

டிசம்பர் 12 அன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில் பைனான்சியல் டைம்ஸின் பொருளாதாரக் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ஃப் பின்வருமாறு எழுதினார்: "முதலிலும், முக்கியமானதுமாக, இன்றைய கடன் சந்தைகளில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆங்கிலோ-சாக்சன் மாதிரியிலான முதலாளித்துவ நிதிய முறையின் பரிமாற்ற நடவடிக்கைகள் மீதான நம்பகத்தன்மைக்கு ஒரு மிகப் பெரும் அடியாகும். ஒரு ஒழுங்கற்ற முதலாளித்துவ முறை மற்றும் முற்றிலும் திறமையற்ற தன்மை இரண்டும் நியூயோர்க் மற்றும் லண்டன் நிதியச் சந்தைகளின் மையத்தில் புலப்பட்டு நின்றன." டிசம்பர் 16ம் தேதி வாஷிங்டன் போஸ்ட்டில் டேவிட் இக்நேஷியஸ் எழுதினார்: "கடந்த கோடை காலத்தில் தொடங்கிய உலகளாவிய கடன் நெருக்குதல் இன்னும் முழுப் போக்கை முடித்துக் கொள்ளவில்லை; மத்திய வங்கியாளர்கள் நெருக்கடிக்குள்ளான நிதிய முறை உலகப் பொருளாதாரத்தை ஆழ்ந்த பின்னடைவிற்கு தள்ளும் என்று அஞ்சுகின்றனர்."

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் வொல்ஃப்காங் முன்சாவ் டிசம்பர் 16ம் தேதி எழுதிய கட்டுரை ஒன்றில் நெருக்கடியின் மையமானது ஒன்றும் சொத்து மற்றும் பணத்தின் பரிமாற்றத்தன்மை பற்றியதல்ல என்றும், அப்படி இருந்தால் தற்போதைக்குள் அது தீர்ந்துவிட்டிருக்கும் என்றும் எழுதியுள்ளார்.

"இது ஒரு முழுமையான கடனடைக்கும் தன்மை இருக்கிறதா எனக்காட்டும் நெருக்கடி; இது வந்துள்ளதற்கு காரணம் இரண்டு மிகப் பெரிய, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய குமிழிகள் ஒரே நேரத்தில் வெடித்தன --ஒன்று சொத்தில், ஒன்று கடனில்; இதையொட்டி வங்கிகளும் முதலீட்டாளர்களும் திவால்தன்மையின் விளிம்பில் நிற்கின்றனர்; சிலர் கால் நுனியில் நிற்கின்றனர். ஆயினும்கூட ஒரு திவால்தன்மை நெருக்கடியை குறைப்பதற்கு மத்திய வங்கிகள் குறிப்பிட்ட வகையில் இந்த கட்டத்தில் கூட ஏதும் செய்யவில்லை."

Pimco சொத்துக்கள் நிர்வாகக் குழுமத்தின் தலைவரான Bill Gross கூறிய கருத்துக்கள் நிதிய செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளில் மேற்கோளிடப்பட்டன. "தற்கால வங்கி முறையின் உடைவு என்பதைத்தான் நாம் அடிப்படையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; இது ஒரு சிக்கல் தன்மை நிறைந்த வகையிலான கடன் கொடுக்கும் நிலை; இதைப் புரிந்து கொள்ளுவது கடினமாகும்." Pimco ஒன்றும் சிறிய செயற்பாடுகள் உடைய நிறுவனம் அல்ல; அது கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் நிதிகளை கையாளும் அமைப்பு ஆகும்.

நெருக்கடியின் முதல் அடையாளங்கள் 2006ல் அமெரிக்காவில் வீடுகளின் விலைகள் சரியத் தொடங்கியதில் வெளிப்பட்டன. நிதிய செயற்பாடுகள் விரைவில் அடைமானங்களின் அடிப்படையில் பெருகின என்பதின் பொருள் இந்த சரிவு நிதிய முறை மற்றும் அமெரிக்காவில் பொருளாதாரத்தின் பரந்த முறை இவற்றில் ஒரு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்பதாகும்.

மத்திய வங்கிகள் குழுவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு, பிரச்சினைகள் பெரிதுபடுத்தப்படாமல் அடக்கப்பட்டுவிட முடியும் என்பதாகும். பெப்ருவரி 14, 2007ல் தலைவர் பெர்னன்கே, "ஒரு சில தற்காலிக உறுதிப்பாட்டிற்கான அடையாளங்கள் சமீபத்தில் வீடுகள் சந்தையில் தோன்றியுள்ளன" என்றார். பின் மார்ச் 28 அன்று "பரந்த பொருளாதாரம் மற்றும் நிதியச் சந்தைகளில் இதன் பாதிப்பு, குறைந்த பிணை மதிப்பு சந்தையின் பிரச்சினைகளிலும், கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகிறது." என கூறிப்பிட்டார்.

மே 17 அன்று அவர் குறிப்பிட்டார்: "குறைந்த பிணையுள்ள கடன் பிரிவின் (Subprime Sector) பிரச்சினைகளுடைய விளைவு பரந்த வீடுகள் சந்தையில் குறைவாக இருக்கும் என்று நம்புகிறோம்; இதையொட்டி பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளிலோ நிதிய முறைகளிலோ பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்காது என்று எதிர்பார்க்கிறோம்." ஜூன் 5ம் தேதி கடன் நெருக்கடி பாதிப்பிற்கு முன்பு அவர் கூறினார்: "அடிப்படை காரணிகள், வருமானங்கள் மற்றும் ஒப்புமையில் குறைவான அடைமான வட்டி விகிதங்கள் உட்பட, இறுதியில் வீடுகள் வாங்குவதற்கான ஆதரவைக் கொடுக்கும்; இந்த கட்டத்தில் குறைந்த பிணையுள்ள கடன் பிரிவில் இருக்கும் பிரச்சினைகள் பரந்த பொருளாதாரம் அல்லது நிதிய முறையிலோ பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது."

எந்த அளவிற்கு இந்த அறிக்கைகள், நிலைமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தின என்பது விரைவில் தெரியவந்தது. ஜூன் நடுப்பகுதியில் குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடி முதலீட்டு வங்கி Bear Stearns அது நிறுவியிருந்த இரு ஹெட்ஜ் தனியார் நிதிகள் (Hedge Funds) பிரச்சினைகளை பெற்றுள்ளதாகவும் அவற்றின் காரணம் குறைந்த பிணையுள்ள அடைமான கடனில் (Subprime Mortgage Debt) அது முதலீடு செய்ததுதான் என்றும் அறிவித்தது.

அடுத்த இரு மாதங்களில் நெருக்கடி விரைவில் வெளிப்பட்டு நின்றது; கவலைகள் எந்த அளவிற்கு பெரிய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்கள் ஆபத்து தரக்கூடிய நிதிய நடவடிக்கைகளில் தொடர்பு கொண்டிருந்தன என்பதைப் பற்றி இருந்தன. ஆகஸ்ட் 17ம் தேதி அமெரிக்க மத்திய வங்கிகள் குழு தன்னுடைய முதல் முக்கிய தலையீட்டை மேற்கொண்டது; வங்கிகளுக்கு விதிக்கப்படும் கழிவு வட்டி விகித்தில் ஒரு வெட்டை அறிவித்தது. இதைத் தொடர்ந்து Wall Street இல் முக்கிய நிகழ்வுகள் ஏற்பட்டன; நிதிய அதிகாரங்கள் பெரும் சரிவு ஒன்றை தடுப்பதற்காக இரு குறுக்கீடுகளை நடத்தின. அமெரிக்க மத்திய வங்கிகள் குழுவின் தலையீடு இல்லாவிட்டால் சந்தை மறுநாள் 1,000 புள்ளிகள் சரிவைக் கண்டிருக்கும் என்பது தெளிவாயிற்று.

செப்டம்பர் 18 அன்று மீண்டும் அமெரிக்க மத்திய வங்கிகள் குழு தலையிட்டு தேசிய நிதியங்களின் மீதான வட்டியை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது. இது சந்தைக்கு சற்று உதவியது; ஆனால் நெருக்கடி தீர்வதற்கு வெகுதூரத்தில் உள்ளது என்பது நவம்பர் மாதம் தெளிவாகியது.

உலகந்தழுவிய முதலாளித்துவ முறையின் கடன் நடவடிக்கைகளின் அடித்தளங்களில் உள்ள நம்பிக்கையின் நிலைகுலைவால் பாதிக்கப்பட்டன என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை ஆகும். முக்கிய வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் தங்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இல்லாத நடவடிக்கைகள் தோல்வியுற்றால் தேவைக்காக பணத்தை தங்கள் கைகளில் வைத்துக் கொள்ள விரும்பின அல்லது வங்கிகள், பிற நிறுவனங்களின் சந்தேகத்திற்குரிய கடன்களுக்காக தாங்கள் எந்த அளவிற்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாது இருந்ததால் கடன் கொடுக்க மறுத்தன.

இந்த அச்சங்கள்தாம் LIBOR விகிதத்தின் (London Interbank Offered Rate) நடவடிக்கைகளில் பிரதிபலித்தன; அதில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு ஈடு பெறாத வகையில் கடன்களை கொடுக்கும். சாதாரண காலங்களில் LIBOR அமெரிக்க பத்திரங்களில் இருக்கும் வட்டி விகிதத்தை விட சற்றே அதிகமாக இருக்கும்; அவை பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படும். ஆனால் குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடி வெளிப்பட்டவுடன், பெரிய வங்கிகள் தள்ளுபடி செய்வது அதிகமாக தொடங்கியவுடன், LIBOR உடைய வட்டிவிகிதமும் தீவிரமாக உயர்ந்தது.

LIBOR ல் தீவிர உயர்வு விகிதம் என்பது நிதிய உலகில் அவை உயர்ந்த பெயரை பெற்ற அமைப்புக்களான பெரிய வங்கிகள் ஒன்றின் மீது மற்றொன்று காட்டும் நம்பிக்கையின்மையை பிரதிபலித்தது. தங்கள் நடவடிக்கைகளுக்கு தளமாகக் கொண்டிருந்த மற்றும் முன்பு எளிதில் கிடைத்துவந்த கடன்கள் இனி அப்படிக் கிடைக்காது என்பதை அவை அறிந்து கொண்டன.

இதுதான் இங்கிலாந்தில் Northern Rock Bank மடிந்ததற்கு வழிவகுத்தது. அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடைமானத்தில் அது முதலீடு செய்ததால் திவாலாகவில்லை; இப்பிரிவில் அதன் தொடர்பு மிகக் குறைவுதான். மாறாக, குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடியினால் ஏற்பட்ட கடன் வீழ்ச்சியின் பெரும் பாதிப்பினால் அது சரிவுற்றது.

Northern Rock குறுகிய கால கடன் சந்தைகளில் இருந்து தனக்கு தேவையான பணத்தை பெற்று அந்த பணத்தை நீண்டகால கடன்களை வழங்குவதற்கு பயன்படுத்தியது; பிந்தையதற்கு மற்ற நிதிய நிறுவனங்கள் கொடுத்ததைவிட சற்று சிறப்பான வட்டிவிகிதங்களில் இவ்வாறு செய்தது. மிகக் குறுகிய இலாபத்தில் செயல்பட்டதால், அது அதிக கடன் தொகையை வாங்கவேண்டியதாக இருந்தது. குறுகிய காலக் கடன் தொடர்ந்து கிடைக்கும் வரையில்... இந்த வழிவகை நன்கு செயல்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை என்றவுடன் வங்கி சரிவுற்றது.

இதே வழிவகைதான் ஆஸ்திரேலிய சொத்துக்கள் குழுவான Centro வையும் பொறிவிற்கு கொண்டுவந்தது. ஒரு தசாப்தமாக முதலீட்டாளர்களுக்கு அது வருடாந்தம் 20 சதவிகிதம் இலாபத்தை கொடுத்துவந்தது; அதற்கான அதன் மூலோபாயம் என்னவெனில், எழுச்சி பெற்று வரும் சந்தையில் உள்ள பாரிய வர்த்தக மையங்களை வாங்கி அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் முதலீட்டு நிறுவனங்களுக்கு (Managed Fund) இலாபத்தில் விற்றுவிடும். கடந்த மே மாதம் இது அமெரிக்காவில் $6.3 பில்லியன் மதிப்பு உடைய மிகப் பெரிய செயற்பாட்டில் ஈடுபட்டது. குறுகிய கால கடனைக் கொண்டு இந்த நடவடிக்கையை முடிக்க விரும்பியது.

டிசம்பர் 17ம் தேதி, $2.5 பில்லியன் மதிப்புடைய குறுகிய கால கடன்களுக்கு மறுகடன் கொடுக்க இயலாது என்று அது அறிவித்தது. Centro தலைவர் "வரலாற்றளவில் எங்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் கிடைத்து வந்த நிதி ஆதாரங்கள் திடீரென வணிகத்திற்கு இல்லாமல் போகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நியாயமாக எதிர்பார்க்கவும் முடியாது." என கூறினார்.

கடந்த காலத்தில் பலமுறையும் நடந்தது போலவே, உலகப் பொருளாதாரத்தில் ஒரு பாரிய மேல்நோக்கிய எழுச்சியை அது கண்டுகொண்டிருக்கும்போது நிதிய நெருக்கடி அதை தாக்கியது.

கடந்த மே மாதம், சர்வதேச நாணய நிதியத்தின், "உலகப் பொருளாதாரப் பார்வை (World Economic Outlook) 2003-06ல் உலக வளர்ச்சி விகிதத்தின் சராசரி 4.9 சதவீதம் என்றும் இது குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடரும் என்றும் குறிப்பிட்டது. வலுவான ஏற்றம் இருக்கும்போது, 1970-73 காலத்தில்தான் உலக வளர்ச்சி வீதம் சராசரியாக 5.4 ஆக இருந்தது. தற்போதைய வீதம் தொடர்ந்திருந்தால், அது 1970 களில் இருந்து உலகப் பொருளாதார விரிவாக்கத்தின் ஆறாண்டு காலத்தில் மிகச் சக்திவாய்ந்த கூறுபாட்டைப் பிரதிபலிக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை விளக்கியது.

"உலகப் பொருளாதாரத்தின் வாய்ப்பு வளம்" என்று டிசம்பர் 2006ல் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்ட நிலைமை முற்றிலும் வேறுபட்ட தன்மையை கொண்டிருக்கவில்லை. அதுவும் "வலிமையான உலகந்தழுவிய செயற்பாடுகள்தான்" நடக்கின்றன என்று சுட்டிக்காட்டியது; மேலும் இது "அபவிருத்தியடைந்துவரும் நாடுகளின் விரைவான விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது; அவை முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களைவிட இருமடங்கு விரைவாக வளர்ந்து வருகின்றன" எனக் கூறியது. இது ஒன்றும் 10.4 சதவீதத்தால் வளர்ச்சியடைந்த சீனப் பொருளாதாரத்தின் தாக்கம் மட்டும் அல்ல; ஆனால் அனைத்து அபிவிருத்தியடையும் நாடுகளில் இந்த நிலைமை இருந்தது. மொத்தத்தில் உலக உற்பத்தியில் 38 சதவீதம் வளர்ச்சி இப்பகுதிகளில் ஏற்பட்டது; அந்தப் பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலக மொத்தத்தில் 22 சதவீதம் என்பதை விட அதிமாக இது இருந்தது.

கடந்த 25 ஆண்டுகள் இரு பகுதிகளாக, 1980-2000, 2000-05 என பிரிக்கப்பட்டால், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் சராசரி வளர்ச்சி முதல் காலத்தில் இருந்து 3.2 சதவீதமாக இருந்து இரண்டாம் பகுதியில் 5 சதவீதமாயிற்று. இந்த அதிகரிப்பு எல்லா நாடுகளாலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை; அதே போல் சீனா, இந்தியா இவற்றின் பெருகிய வளர்ச்சியின் விளைவு மட்டும் அல்ல.

சர்வதேச நாணய நிதியத்தின், உலகப் பொருளாதாரப் பார்வை அறிக்கை இதேபோல் பொருளாதார வெற்றிகளின் கதைகளைத்தான் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் பொருளாதார செயற்பாடுகள் 2006ல் "ஆக்கத்தை பெற்றன", மொத்த உள்நாட்டு உற்பத்தி யூரோ நாடுகளில் 2.6 சத வீதத்தை அடைந்தன; இது 2005 ஐ விட கிட்டத்தட்ட இரு மடங்கு, 2000ல் இருந்து மிக உயர்ந்த எண்ணிக்கை எனக் கூறப்பட்டது. "ஜேர்மனி முக்கிய ஊக்கியாக இருந்தது; வலுவான ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் சமீப காலத்தில் பெருநிறுவன நிலைமை மற்றும் போட்டித் தன்மையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதால் செய்யப்பட்ட பலமான முதலீடு ஆகியவை இதற்குக் காரணம்" என்றும் கூறப்பட்டது. மொத்தத்தில் வேலையின்மை வீதம் யூரோப் பகுதியில் 7.6 சதவீதத்திற்கு குறைந்துவிட்டது; 15 ஆண்டுகளில் இது மிகக் குறைவான அளவு ஆகும்.

1990 களின் தொடக்கத்தில் பங்குச் சந்தை மற்றும் நிலக் குமிழி இரண்டும் சரிந்துவிட்டதால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தேக்கமடைந்து இருந்த ஜப்பானில் இருந்தும் நல்ல செய்தி கிடைத்தது. 2006 நடுப்பகுதியில் நுகர்வு எதிர்பாராமல் சரிந்தாலும், "பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்கும் ஆக்கம் வலுவாக இருந்தது; தனியார் முதலீடு விரிவாக்கம் அடைந்தது; வலுவான இலாபங்கள் இதற்கு ஆதரவு கொடுத்தன; பெருநிறுவன இருப்புநிலைக் குறிப்புக்கள் முன்னேற்றத்தை காட்டின; வங்கிகள் கடன் கொடுப்பதை மீண்டும் தொடங்கின; இவற்றையொட்டி ஏற்றுமதி வளர்ச்சியுற்றது." ஜப்பானில் உண்மையான பொருளாதார வளர்ச்சி 2 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இலத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சி வீதம் 2006ல் இருந்த 5.5 சதவீதத்தைவிட சற்றுக் குறைவாக 4.9 ஆக 2007ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; 2004-06 ஆண்டுகள் "மிக வலுவான மூன்றாண்டு வளர்ச்சிக் காலமாக இலத்தீன் அமெரிக்காவில் 1970 களின் கடைசிப் பகுதியில் இருந்தன."

"எழுச்சி பெற்று வரும் ஆசியா" என அழைக்கப்படும் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் "மிக விரைவாக விரிவாக்கம் பெற்று வருகின்றன; சீனா, இந்தியாவில் மிக வலுவான வளர்ச்சி உள்ளது." சீனாவில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2006ல் 10.7 சதவீதம் என்று விரிவடைந்தது; இந்தியாவில் கூடுதலான நுகர்வு, முதலீடு, ஏற்றுமதிகள் ஆகியவற்றின் விளைவாக வளர்ச்சி வீதம் 9.2 சதவீதம் ஆகும்.

கிழக்கு ஐரோப்பாவில் வளர்ச்சி 2006 ல் 6 சதவிகிதம் அதிகரித்தது; ரஷ்யாவில் வளர்ச்சி வீதம் 2006ல் 7.7 சதவீதமாக இருந்து, 2007ல் சற்றே குறைந்து 7.0 சதவீதமாகவும், 2008ல் 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபிரிக்காவின் பொருளாதார வருங்காலத்தை விளக்குகையில் உலகப் பொருளாதாரப் பார்வை அறிக்கை வலுவான உலக வளர்ச்சி, பெருகிய முதலீட்டு உள்பாய்ச்சல்கள், நாடுகளில் இருக்கும் உயரும் எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிபொருள் இல்லாத பொருட்களுக்கு கூடுதலான தேவை என்ற பின்னணியில் "மிக நேரியதாக இருக்கும்" என்று விளக்கியுள்ளது. "உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்த ஆண்டு (2007) 6.2 சதவீதம் அதிகரிக்கும் என்றும் 2006 ன் 5.5 ஐ விட இது அதிகமாகும் என்றும் 2008ல் சற்று குறைவாக 6.8 எனப் போகலாம்" என்றும் சர்வதேச நாணய நிதியம் எழுதியுள்ளது.

சர்வதேச கடனடைப்புக்களுக்கான வங்கி (The Bank for International Settlements) கடந்த ஜூன் மாதம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் 2006ல் மொத்த உலக உற்பத்தி 5.5 சதவீதம் விரிவடைந்துள்ளது என்றும், தொடர்ச்சியாக நான்காம் ஆண்டாக வளர்ச்சி வீதம் 4 சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளது. அனைத்து தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளிலும் பொதுப் போக்கிற்கு மேலாக 2006ல் வளர்ந்திருப்பதால், அனைத்து முக்கிய எழுச்சி பெற்று வரும் நாடுகளிலும் நிலைமை முன்னேறியுள்ளது.

அறிக்கை கூறியது: "கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம் பல விதங்களில் 1994-97 காலத்தைவிட வேறுபட்டது; அப்பொழுதும் உலகப் பொருளாதாரம் தொடர்ச்சியான நான்கு ஆண்டுகள் அதிகரிக்கும் அல்லது அதற்கு மேலான வளர்ச்சியைத்தான் காட்டியது. முதலாவதாக எழுச்சிபெற்று வரும் சந்தைப் பொருளாதாரங்கள், குறிப்பாக ஆசியாவில், உலக வளர்ச்சிக்கு அவை ஒரு தசாப்தத்திற்கு முன் கொடுத்ததைவிட 1.25 சதவீத புள்ளிகளை அளித்துள்ளன; இது சீனப் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது''.

சர்வதேச நாணய நிதிய ஆய்வு ஏட்டில் அக்டோபர் 2007ல் வந்துள்ள கட்டுரை ஒன்று சீன, இந்திய பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம் எத்தன்மையுடையன என்பதை தெளிவாக்குகிறது. சீனா இப்பொழுது உலகப் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை கொடுக்கிறது என்பதை கீழேயுள்ள அட்டவணைகள் குறிப்பிடுகின்றன.

(சந்தை நாயணயமாற்று வீதங்கள் அன்னிய செலாவணி சந்தையில் இருக்கும் விகிதங்களாகும்; PPP (வாங்கும் சக்தியின் ஒப்புமை) மாற்று வீதம் என்பது ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்துடனான மாற்றுவிகிதத்தை வரையறை செய்வதுடன், அதன்மூலம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரேயளவான பொருட்களும் சேவைகளும் வாங்ககூடியதாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது. PPP மாற்று வீதத்தை பயன்படுத்துவது உலக வளர்ச்சி பட்டியலில் எழுச்சி பெறும் சந்தைகளுக்கு கூடுதலான கனத்தை கொடுக்கின்றது.

சீனாவில் பொருளாதார வளர்ச்சியின் பரப்பு பின்வரும் வியப்பைத் தரும் புள்ளிவிவரத்தால் சுருக்கமாக அறியப்படலாம்: 2007ல் சீனா 7,000 எஃகு ஆலைகளை, 2002ல் கொண்டிருந்ததை போல் இரு மடங்கு ஆலைகளை கொண்டிருக்கின்றது.

நிதிய நிறுவனங்களும் உற்சாகமாக இருந்தன. ஏப்ரல் 2006ல் Deutsche Bank Research உலகப் பொருளாதாரம் 1970 களில் இது பெற்றிருந்த நீண்ட கால வளர்ச்சியை போல் கொண்டுள்ளது என்றும் இந்தத் தடவை பணவீக்கம் பெருகவில்லை என்றும் கூறியது. 1999/2000 இல் புதிய பொருளாதாரம் 1.0. சில இடர்பாடுகள் (பங்குச் சந்தை சரிவு, டாட்காம் குமிழி சரிவு, அமெரிக்காவில் மந்த நிலை வளர்ச்சி போன்றவை) இருப்பதாகவும், "புதிய பொருளாதாரம் 2.0 தற்போது சரியாகவே இருப்பதாக தோன்றுகிறது."

இன்று உலகப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக வளர்ந்துகொண்டிருக்கும் என்ற கணிப்புக்கள் பெருகியுள்ளன. கடந்த மாதம் வெளியிடப்பட்ட கடைசி அறிக்கையில் உலக வங்கி 2008ல் உலக வளர்ச்சி 3.3 சதவீதமாக இருக்கும் என்றும், "வளர்ச்சியுறும் நாடுகளில் செழிப்பான விரிவாக்கம் இருக்கும்; அது ஓரளவிற்கு உயர் வருமானம் உடைய நாடுகளில் ஏற்பட்டுள்ள பலவீனமான முடிவுகளை ஈடுகட்டும்." ஆனால் "தீவிர சரிவு கொடுக்கும் ஆபத்துக்கள் இந்த மெதுவான இறக்கத்தின் நிழல்களை காட்டுமா என்பதை நிச்சயப்படுத்தி கூறமுடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், முக்கிய பிரச்சினை அமெரிக்காவும் உலகப் பொருளாதாரமும் முழுமையான மந்த நிலைக்கு செல்லுமா என்பதல்ல; இந்த நெருக்கடிக்கு வழிவகுத்த வழிவகைகள் எவை, அவற்றின் தாக்கங்கள் எவை என்பது ஆராயப்பட வேண்டும்.

ஒரு புறம் இப்படி, மறுபுறம் அப்படி என இருக்கும் அணுகுமுறையை நிராகரித்தல் மிக முக்கியமாகும்; இவைதான் சமீபத்தில் உலக வங்கி கொடுக்கும் கணிப்பாக இருக்கிறது; ஐயத்திற்கு இடமின்றி மற்ற இடங்களிலும் இதே போன்ற முறைதான் கையாளப்படும்.

அமெரிக்காவிலுள்ள நிதிய நெருக்கடியும் மற்றும், குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் உலகப் பொருளாதாரத்தின் விரிவாக்க வளர்ச்சியும் தனித்தனி நிகழ்வுகள் அல்ல. இவை ஒரே நிகழ்போக்கின் வித்தியாசமான பக்கங்கள் அல்லது கூறுபாடுகள் ஆகும்.

சுருக்கமாக கூற வேண்டும் என்றால்: சீனாவில் விரிவுபடுத்தப்பட்ட வளர்ச்சி (மற்றைய நாடுகளுடன் சேர்ந்து) என்பது அமெரிக்காவில் பாரிய கடன் வளர்ச்சி ஏற்பட்டிராவிட்டால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தையும் மற்றும் உலக தேவையையும் நிலைநிறுத்த காரணமாக இருந்த இந்த கடன் வளர்ச்சி, இப்பொழுது ஒரு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

அதே நேரத்தில், சீனாவிலும் மற்றும் பிற பகுதிகளிலும் உள்ள குறைந்த செலவிலான உற்பத்தி மற்றும் இப்பகுதிகளை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்மை பணவீக்க அழுத்தங்களை குறைத்துள்ளன. இந்த நிகழ்வுபோக்கு குறைந்த வட்டி விகிதத்திற்கான நிலைமைகளை தோற்றுவித்துள்ளது; அதையொட்டி கடன் விரிவாக்கம் ஊக்கம் பெற்றுள்ளது; அது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் முழுவதையும் நிலைநிறுத்துவதில் முக்கியமான பங்கை கொண்டுள்ளது.

இந்த நிகழ்வுபோக்கினை சற்று விரிவாக ஆராய்வோம். சமீபத்திய நிதிய நெருக்கடி ஏதோ ஆகாயத்தில் இருந்து வந்தது அல்ல. இது 1987ம் ஆண்டு பங்குச் சந்தை சரிவு காலத்தில் ஏற்பட்ட முந்தைய நெருக்கடிகளுக்கான பதில்வினையால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி தலைவராக பதவிக்கு வந்த அலன் கிரீன்ஸ்பான் சந்தையின் ஸ்திரப்படுத்தலுக்காக கடன் வழிகளை திறந்து விட்டார்.

1991-92 மந்த நிலையை அடுத்த 1990களின் முதல் ஆண்டுகள், "வேலையின்மை மீட்சி'' என்றழைக்கப்பட்ட குறைவான வளர்ச்சியை கொண்ட காலகட்டமாக குணாதிசயப்படுத்தப்பட்டது. ஆனால் தசாப்தத்தின் நடுப்பகுதியில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. 1996ல் கிரீன்ஸ்பான் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி ஒன்றை சுட்டிக்காட்டினார்; அது அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதில் ஒரு முக்கிய பங்கினை கொண்டிருந்தது; ஆண்டு இறுதியில் ஒரு உரையில் அவர் "பகுத்தறிவிற்கு பொருந்தாத மிகுதி" பற்றி எச்சரித்தார்.

ஆனால் வட்டி விகிதங்களை அதிகப்படுத்தும், வோல் ஸ்ரீட்டின் விரோதப் போக்கை எதிர்கொண்ட ஒரு குறுகிய முயற்சியை அடுத்து, கிரீன்ஸ்பான் வட்டி விகிதங்களை குறைக்க முற்பட்டார். 1997ல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் "குறைபாடு" என்று கூறிப்பிட்ட ஆசிய நெருக்கடி வெடித்ததை தொடர்ந்து கிரீன்ஸ்பான் ஆசிய "நெருங்கிய முதலாளித்துவத்தின்" விளைவு அது என்றும் "சுதந்திர சந்தையின்" வழிவகைகளை ஏற்காததால் விளைந்தது என்றும் வலியுறுத்தி பேசினார். உண்மையில், சோவியத் ஒன்றியம் மற்றும் பிற ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவை தொடர்ந்து அது ஆங்கிலோ சாக்ஸன் "சுதந்திர சந்தையின்" வரலாற்று மேம்பாட்டிற்கான ஒரு மேலதிக உறுதிப்படுத்தல் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சில மாதங்களுக்குள் ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடி இன்னும் ஆழ்ந்த பிரச்சினைகளின் ஒரு அடையாளம்தான் என்பது தெளிவாயிற்று. ஆகஸ்ட் 1998ல் ரஷ்ய தன் சர்வதேச கடன்களை திருப்பிக் கொடுக்கத் தவறியது; செப்டம்பர் மாதம் ஹெட்ஜ் நிதி நீண்டகால மூலதன நிர்வாகம் (Long Term Capital Management) ஒரு $3 பில்லியன் உதவித் தொகை நடவடிக்கை மூலம் பிணை எடுக்கப்பட இருந்தது; இல்லாவிடின் அதன் உடைவு உலகளவில் ஒரு முறையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். இதை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி வட்டி வீதங்களை குறைக்க இருந்தது.

இதன் விளைவாக பொருளாதாரப் புயல்கள் ஒப்பீட்டளவில் விரைவில் கடக்கப்பட்டது போல் தோன்றியதுடன், அமெரிக்கப் பொருளாதாரம் தசாப்தத்தின் இறுதியில் ஒரு செழிப்பைக் கண்டது; இது "புதிய பொருளாதாரத்தின்" சகாப்த ஆரம்பம் என்று போற்றப்பட்டது. உண்மையில் பங்குச் சந்தை மிக அதிக உயரங்களை எட்டியபோது, இலாப விகிதம் கீழ்நோக்கு சரிவைக் கொண்டது; Enron, WorldCom போன்ற நிறுவனங்கள் உள்ளே அனுப்பிய அதிகரித்த இலாபங்கள் போலியானவை என்று வெளிப்பட்டன. பங்குச் சந்தை குமிழி 2000ம் ஆண்டில் சரிவுற்று, அமெரிக்க பொருளாதாரம் ஒரு மந்த நிலையை அனுபவித்து, உற்பத்தித்துறையில் மூன்று மில்லியன் தொழில் இழப்பும் ஏற்பட்டது.

இக்கீழ்நோக்கு சரிவு ஒப்பீட்டளவில் குறுகிய காலம் மட்டும் இருந்ததுடன், அமெரிக்க பொருளாதாரம் ஒரு ஏற்றத்தைக் கண்டது; ஆனால் இதில் பல விந்தையான கூறுபாடுகள் இருந்தன. பெரும்பாலும் அதிகரித்த நுகர்வுச் செலவினங்களின் அடிப்படையை அது தளமாகக் கொண்டிருந்தாலும், இது உயர்ந்த ஊதியங்கள், வேலைக்கமர்த்தல் அதிகரிப்பு போன்றவற்றின் விளைவு அல்ல -- உண்மையான ஊதியங்கள் கிட்டத்தட்ட தேக்க நிலையில்தான் இருந்தன; மாறாக நுகர்வோரின் கடனில் ஏற்பட்ட அதிகரிப்பினால் வந்தவை ஆகும்; அதற்குக் காரணம் மத்திய ரிசேர்வ் வங்கி வட்டி வீதங்களை குறைத்ததுதான். இந்த குறைப்பு வீடுகள் வாங்குவதை ஊக்குவித்தது, அது முறையே நுகர்வோர் செலவினங்களில் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தது.

பொருளாதார வளர்ச்சிக்கு மையமாக குறைந்த வட்டி வீதம் இருப்பதை சாத்தியமாக்கிய முக்கிய காரணிகளில் ஒன்று அமெரிக்க சொத்துக்களில் மிகப் பெரிய நிதிய மூலதனத்தின் சீன பொறுப்பாளர்களால் செய்யப்பட்ட முதலீடு செய்யப்பட்டதாகும்.

இவ்விதத்தில் சீன வணிக உபரித்தொகைகளை அமெரிக்க நிதிய முறையில் மீண்டும் கொண்டுவந்தது ஒரு சிறந்த விளைவுகளுள்ள வட்டத்தை முற்றுப்பெறச் செய்தது போல் இருந்தது. அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் பிற கடன் வடிவமைப்புக்கள் வாங்கப்பட்டதால் ஏற்பட்ட மூலதன உள்பாய்ச்சல் மத்திய வங்கியை வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க முடிந்தது; அதையொட்டி வீடுகள் சந்தைக்கு ஊக்கம் ஏற்பட்டது; அதையொட்டி பெருகிய நுகர்வோர் செலவினங்களுக்கு வழிவகை ஏற்பட்டது; இதையொட்டி சீனாவில் விரிவாக்கப்பட்ட உற்பத்திக்கு ஒரு சந்தை வழங்கியதுடன், இது அமெரிக்காவுடனான சீன வணிக உபரிவருமானத்தை பெருக்கியது; அது பின்னர் மீண்டும் அமெரிக்க நிதிய சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுபோக்குத்தான் 2000-2001 அமெரிக்க மந்த நிலைக்கு பின்னர் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் மத்திய புள்ளியாக இருந்தது.

மிக அதிக அளவில் நிதிய அமைப்பு கடன்கள் புகுத்தப்பட்டது அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் கடன் என்பது பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுத்த பணிக்கு பின்னர் ஒன்றும் சாதாரணமாக மறைந்து விடாது. மாறாக, உலகப் பொருளாதாரத்திற்குள் நிதி மூலதனத்தை கட்டமைப்பதற்கு அது உதவுவதுடன், அவ்வமைப்பு முறை முழுவதினதும் ஸ்திரத்தன்மைக்கான முக்கிய விளைவுகளுக்கு காரணமாகின்றது.

கடந்த 25 ஆண்டுகளை பின்னோக்கி காண்கையில், கிரீன்ஸ்பானுடைய கருத்தின்படி குறைந்த பெயரளவு, உண்மையான வட்டி வீதங்களின் விளைவாக, சொத்து விலைகள் உலகம் முழுவதும் பெயரளவுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியை (GDP) விட அதிக வேகத்தில் உயர்கின்றன என்று அறிகிறோம்; 1987, 2001-02 ஆண்டுகள்தான் இதற்கு விதிவிலக்காக இருந்தன.

இந்த நிகழ்வுபோக்கின் விளைவுகள் என்ன? பங்குகள், நில வாங்கல் விற்பனை மற்றும் பிற சொத்து ஆவணங்கள் ஆகியவை கடனால் நிதியளிக்கப்படும் போது ஏதேனும் ஒரு வடிவத்தில் வருமானம் என்று கருதப்படுகின்றன. அதாவது, இறுதி ஆய்வில், அவை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெறப்படும் உபரிமதிப்பில் ஒரு பகுதியை கோருகின்றன.

அத்தகைய சொத்துக்களின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக உயரலாம்; ஆனால் தேசிய வருமானத்தின் ஒரு பகுதி இலாபங்களுக்கு போவது அதிகரித்தால்தான் அப்படி நடக்கும்; அதாவது ஒரு கிடைக்கக்கூடிய அதிகளவிலான உபரிமதிப்பு இருக்குமானால்தான் அப்படி நடக்கும். ஆனால் சொத்து மதிப்புக்கள், அதாவது வருமானமாக பெறுதல் என்னும் நிகழ்வுப்போக்குகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியை விட விரைவாக உயருதல் கால வரையற்று தொடர முடியாது.

2007 ஜூன் 25 Financial Times இல் வந்துள்ள கட்டுரை ஒன்று இந்த நிகழ்வுப்போக்கு எந்த அளவிற்கு சென்றுள்ளது எனக் குறிப்புக் காட்டியுள்ளது. 1995க்கு முன்பு தனியார் பிரிவினரின் சொத்தின் வீதம் அமெரிக்காவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 க்கு 1 என்ற வீதத்தில் சராசரியாக ஏறி இறங்கிச் சென்றது என்று அது குறிப்பிடுகிறது. "இப்பொழுது அமெரிக்க பொருளாதாரத்தில் சேமிப்புக்கள் மிகவும் குறைந்துவிட்ட நிலையிலும், வீதம் 4.1 க்கு 1 என்ற வீதத்தில் உள்ளது. நீண்ட கால சராசரிக்கு திரும்புதல் என்றால் அமெரிக்க தனியார் நிகர சொத்து கிட்டத்தட்ட $10,000 பில்லியன் வீழ்ச்சி அடையும் என்று பொருளாகும். இதே போன்ற போக்குகள் உலகின் மற்ற பகுதிகளிலும் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன; நிதிய சரிவில் இருந்து வரும் மொத்த உலகளவிலான இழப்புக்கள் எளிதில் $25,000 பில்லியனில் இருந்து $30,000 பில்லியன் என ஆகக் கூடும்."

McKinsey Global Institute உடைய கருத்தின்படி 2005 அளவில் உலகம் முழுவதும் நிதிய இருப்புக்களின் மொத்தம் $140 டிரில்லியன், அதாவது உலக மொத்த உற்பத்தியைவிட மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. 1980ல் உலக நிதிய இருப்புக்கள் மற்றும் உலக மொத்த உற்பத்தி கிட்டத்தட்ட சம அளவில் இருந்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது.

அமெரிக்க அடைமான சந்தையை எடுத்துக் கொண்டால், இந்த தசாப்தத்தில் பெரும் பகுதியில் அது வேகமாக பணம் பண்ணும் (Ponzi) ஒரு திட்டத்தின் வடிவமைப்பு கொண்டிருந்தது எனலாம். அதாவது, அடைமானக்கடன் வகைகளில் இருக்கும் சொத்துக்கள் அவற்றின் மதிப்பை எதிர்பார்க்கப்படும் வருமானத்தில் இருந்து பெறாமல் (குறைந்த பிணையுள்ள கடன்களில் கட்டணங்களை தொடர்ந்து பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பது தெளிவாயிற்று) கூடுதலான கடன் கிடைப்பது சாத்தியமாக இருக்கும்போதும் அந்த சொத்துக்களின் மதிப்புக்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் எனவும் மற்றும் சந்தையை அது எழுச்சியடைய செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. எழுச்சியடையும் சந்தை என்றால் கூடுதலான ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என கருதவைத்தது, ஏனெனில் கடனுக்கு உறுதி கொடுக்கும் சொத்துக்கள்--வீடுகள்--மதிப்பில் உயர்ந்துவிட்டன.

2001ல் அடைமான அமைப்புகளின் குறைந்த பிணையுள்ள கடன் மூலங்கள் 8.6 சதவீதமாக ($190 பில்லியன்) இருந்தன. 2005ல் இது 20 சதவீதமாக ($625 பில்லியனாக) உயர்ந்தது. இந்த அடைமானங்கள் பின்னர் நிதி சொத்து வடிவங்களாக விற்கப்பட்டன. 2001ல் பாதுகாப்பிற்கு உட்பட்ட குறைந்த பிணையுள்ள கடன்கள் என்று அழைக்கப்பட்டவை 95 பில்லியன் டாலர்தான் இருந்தன; 2005ல் இது 507 பில்லியன் டாலராக வளர்ந்து விட்டது.முன்பு அடைமானங்களை ஒழுங்கமைத்த வங்கிகள் அபாயம் பற்றி மதிப்பீடு செய்ய வேண்டும் என்று இருந்தது. இது முன்பு 3-6-3 வங்கி என்று அழைக்கப்பட்ட சகாப்தமாகும். 3 சதவீதத்திற்கு கடன் வாங்கி, வீடுகள் வாங்குபவர்களுக்கு 6 சதவிகிதத்திற்கு கடன் கொடுத்து பிற்பகல் 3 மணிக்கு கோல்ப் பந்து விளையாட செல்லவும் என்று இருந்தது.

புதிய நிதிய உலகில் இழப்பு ஆபத்து மதிப்பீடு பெருமளவு அகற்றப்பட்டு விட்டது. அடைமானத்தை ஒழுங்கமைப்பவர்கள் இப்பணியை செய்ய வேண்டிய தேவையில்லை எனப் போயிற்று; ஏனெனில் அடைமானம் மற்றொரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிடும். அடைமானத்தை ஒழுங்கமைப்பவருக்கு இந்த ஆபத்தை ஏற்க வேண்டிய தேவையில்லை என ஆயிற்று. இந்த ஆபத்து எப்படி மதிப்பீடு செய்யப்பட்டது? Standard and Poor's, Moody's, Fitch போன்ற இழப்பு ஆபத்து மதிப்பீட்டு நிறுவனங்கள் இதைச் செய்தன. கடன் பொதிகள், குறைந்த பிணையுள்ள கடன்கள் மற்றும் ஆபத்துமிக்க அடைமானங்கள் அதிகதரத்தில் மதிப்பீடு செய்யப்படுமென உறுதிப்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகித்தன. அவ்வாறு செய்வதற்கு அவற்றின் நலன்கள் காரணமாக இருந்தன.

குறைந்த பிணையுள்ள கடன்கள் நெருக்கடி பற்றிய சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, தரம் பார்க்கும் நிறுவனங்களுக்கு கொடுக்கும் கட்டணங்கள் சந்தை அடைமான பிணைப்பத்திரங்களுக்கு உதவியவிதத்தில் "இரு மடங்கு அதிகமாக பெருநிறுவன பிணைப்பத்திரங்களைவிட அதிகமாக இருந்தன--அவைதான் மரபார்ந்த வகையில் தரம் பிரிக்கும் நிறுவனங்களின் செயல்களாக இருந்தவை. Moody தன்னுடைய 2006 வருமானத்தில் 44 சதவீதத்தை "கட்டமைக்கப்பட்ட நிதியத்தில்" இருந்து (மாணவர் கடன்கள், கடன் அட்டைக் கடன்கள் மற்றும் அடைமானங்களில் இருந்து" பெற்றது. (L Randall Wray, "Lessons from the Subprime Meltdown," Levy Economics Institute, December 2007, p. 21).இப்பொழுது முழு குறைந்த பிணையுள்ள கடன் சந்தையும் சரிந்து விட்டது. "கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய குறைந்த பிணையுள்ள அமெரிக்க அடைமானங்கள் அவற்றின் மதிப்பில் பாதியை இழக்கக் கூடும்" என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது." (Wray, p.22)கடன்களின் விரிவாக்கம் என்பது வீடுகளின் விலைகளை பெரிதும் உயர்த்தியதோடு மட்டுமில்லாமல், இன்னும் பெரிய வகையில் கடன்களையும் உயர்த்த வகை செய்தது. "நிலச் சொத்து மதிப்புக்கள் கடந்த தசாப்தத்தில் எளிதில் இரு மடங்காக $10 டிரில்லியன் 1997ல் இருந்து 2005ல் $20 டிரில்லியன் என ஆனபோது, வீடுகளின் அடைமானக் கடன் பொறுப்புக்கள் 1997ல் 2 டிரில்லியன் டாலரை விட குறைந்து இருந்த நிலையில் இருந்து 2005ல் 10 டிரில்லியன் டாலர் என இன்னும் அதிகமாயிற்று. (உண்மையில் 2002-2006 காலத்தில் மொத்த கடன் $8 டிரில்லியன் அதிகமாயிற்று; மொத்த உள்நாட்டு உற்பத்தியோ $2.8 டிரில்லியன்தான் வளர்ந்தது.). (Wray, p.27)

இந்த நிதியக் குமிழி தோற்றுவிப்பதற்கான முக்கிய வழிவகைகளில் ஒன்று அடைமானங்களை பாதுகாப்பிற்கு உட்படுத்தியது ஆகும். அதாவது ஏராளமான அடைமான தொகுப்புக்களை கடன் பொதிகளாக மாற்றி அவற்றை பின்னர் விற்றுவிடல் என இருந்தது. இது இழப்பு ஆபத்தை வங்கிகள் மற்றும் பிற நிதிய அமைப்புக்களின் இருப்பு நிலைக் குறிப்புக்களில் இருந்து அகற்றிவிடும் எனக் கருதப்பட்டது. ஆனால் இந்த இழப்பு ஆபத்து முன்கதவு வழியே வெளியே அனுப்பப்பட்டு பின் கதவு வழியே திரும்ப வந்துவிட்டது; ஏனெனில் ஆபத்து நிறைந்த கடன்கள் இருப்பு நிலைக் குறிப்பிற்கு வெளியே அமைப்புக்களை நிறுவிய வங்கிகளால் வாங்கப்பட்டன --அவைதான் "கட்டமைக்கப்பட்ட முதலீட்டுக் கருவிகள் (Structured investment vehicles (SIVs). இது இந்த கடன் உறுதிப் பத்திரங்களை (Securities) தோற்றுவிப்பதில் குறைந்த பிணையுள்ள அடைமானங்களுக்கு கூடுதலான பங்கை கொடுத்தது; இது சர்வதேச நாணய நிதியம் (IMF) கொடுத்துள்ள கீழ்க்கண்ட அட்டவணையில் நன்கு புலனாகும்.

பாதுகாப்பு பத்திர வழிவகை என்பதின் பொருள், ஒரு சுற்றிவளைத்த முறையினூடாக, சரியான முறையில் இயக்கப்படமுடியுமா என்பதை மதிப்பீடு செய்வதில் அக்கறை இல்லாத அமைப்புக்கள் ஆரம்பித்து வைத்த அடைமான பொதிகளை வங்கிகள் இப்பொழுது பெற்றுக்கொண்டுள்ளன என்பதாகும். இதன் பொருள் வங்கிகள் இப்பொழுது ஆபத்து இழப்புக்கள் மதிப்பிடப்படாத கடன்வாங்கியவர்களின் கடன்களை வைத்துக் கொண்டுள்ளன என்பதாகும். நிறைய இலாபம் கொடுத்த இந்த நிகழ்வுப்போக்கு ஒரு முக்கியமான கருதுகோளை அடிப்படையாக கொண்டிருந்தது. அதாவது தொடர்ந்து கடன் கொடுக்கப்பட்டு வருவதுதான் வீடுகளை விலையை உயர்த்திக் கொண்டு இருக்கும்; அப்பொழுது கடன் வாங்கியவரின் ஆபத்து இழப்பு பற்றி மதிப்பீடு தேவையில்லை; ஏனெனில் கடன் செலுத்த தவறினால் வீடுகள் வாங்கிய விலையைவிட அதிக விலைக்கு விற்கப்பட முடியும்

இந்த கருதுகோள் 1994க்கு பின்னர் ஒரு தசாப்தத்திற்கு பொருத்தமாகத்தான் இருந்தது; ஆனால் 2005-06 ல் அவை சரியத் தொடங்கிய பின் புளிப்பாக மாறியது. 2004ல் Case-Shiller வீட்டுவிலைக் குறியீடு முந்தைய நிதி ஆண்டைவிட 20 சதவீதம் அதிகமாயிற்று. 2006ல் அது 5 சதவீதம் சரிந்தது.

வீடுகள் குமிழியில் அடிப்படை பிழை இருந்தது; அடைமான கடனை அடைக்க பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான தொழிலாள வர்க்கக் குடும்பங்களின் வருமானம், குறைந்து கொண்டிருக்கிறது அல்லது 2001 மந்த நிலையின் இறுதியில் இருந்து தேக்க நிலையில் உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளின் அமெரிக்காவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது, ஆனால் சராசரி ஊதியங்கள் 4 சதவீதம் குறைந்து விட்டன.

நிதியப் பிரச்சினைகள் குறைந்த பிணையுள்ள அடைமான சந்தைக்கும் அப்பால் செல்லுகின்றன. வணிகப் பத்திர சந்தையில் (இங்குதான் நிறுவனங்கள் குறுகிய காலக் கடன் வழங்கல் மூலம் பணத்தை பெறுகின்றனர்) கிட்டத்தட்ட 2.2 டிரில்லியன் டாலர் கடன் பாக்கிகள் உள்ளன; இவற்றில் 1.2 டிரில்லியன் டாலர் வீடுகள் அடைமானங்கள், கடன் அட்டை வருமானங்கள், கார் கடன்கள் மற்ற பத்திரங்கள் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட அரை டிரில்லியன் டாலர்கள் பயனற்ற காகிதங்கள் எனக்கருதப்படக்கூடியவை பெரு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இப்பொழுது இங்கு எச்சரிக்கைகள் எழுந்துள்ளன (உதாரணத்திற்கு ஜனவரி 14, 2008 பைனான்சியல் டைம்ஸ் ஐ பார்க்கவும்); அதில் கடன்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் உள்ள கடன்களை திருப்பக் கொடுக்க தவறியவை பற்றிய அமைப்பு (Credit Default Swaps) ஒரு நெருக்கடியை அனுபவிக்கும் அடுத்த பகுதியாக இருக்கக்கூடும்.

உண்மையில் இழப்புக்களின் மொத்த பரப்பு பற்றி எவருக்கும் தெரியவில்லை. குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடி உடையும் கட்டத்திற்கு வந்தபோது, பேர்னன்கே இழப்புக்கள் 50 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக இருக்கலாம் என்று மதிப்பிட்டார். இப்பொழுது எதிர்பார்க்கப்படும் இழப்புக்கள் 300 டாலரில் இருந்து 400 பில்லியன் டாலராக இருக்கின்றன. இன்னும் கூடுதலாக கூடப் போகலாம். ஒரு மதிப்பீட்டின்படி, வீடுகளின் விலைகள் 30 சதவிகிதம் எனக் குறைந்தால், கடன் இழப்புக்கள் $900 பில்லியனாக போகலாம். (See Jan Kregel Minsky's "Cushions of Safety," published by the Levy Institute).

வங்கிகள் எதிர்கொண்டுள்ள நிலைமையை தவிர, வீடுகள் சரிவின் பாதிப்பு அமெரிக்காவில் நுகர்வோர் செலவீன மட்டத்தின் பிரச்சினையிலும் உள்ளது; சீனா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தையை அளிப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள முக்கிய பங்கில் இருக்கிறது.

உண்மையான வருமானங்கள் தேங்கிய நிலையில் அல்லது வீழ்ச்சியில் இருக்கும்போது, அமெரிக்க மக்களில் உயர்மட்டத்தில் இருக்கும் 20 சதவிகிதத்தினரைத் தவிர மற்றவர்களுக்கு வீடுகளின் விலைகள் உயர்வு என்பது அதிகரித்துவரும் கடனுக்கு நிதி கொடுப்பதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது; இது பெரும்பாலனவர்களுக்கு பொருத்தும். 2002ல் இருந்து வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகை 1.2 டிரில்லியன் டாலர் என்று இதே காலத்தில் நுகர்வோர் செலவினத்தில் 46 சதவீத உயர்விற்கு சமமாக உள்ளது. இதன் சமூக விளைவுகள் பாரியதாக உள்ளன என்று இம்மாதம் முன்னதாக நடைபெற்ற முக்கிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய கூட்டத்தில் டேவிட் நோர்த் தெளிவாக்கியுள்ளார். (பார்க்க "உலக முதலாளித்துவ அமைப்பின் அரசியல், பொருளாதார நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு மற்றும் பணிகளும் பற்றிய குறிப்புக்கள்").

இவ்விதத்தில், மூன்றரை தசாப்தங்களான ஊதிய தேக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட நிதிச்சுமைகளுக்கு எதிராக போரிடுவதற்கு முக்கிய வழிவகைகளில் ஒன்றாக இருந்த இவ்வுதவியை இந்த வீடுகளின் விலை வீழ்ச்சி பரந்துபட்ட அமெரிக்க உழைக்கும் மக்களின் பிரிவினருக்கு இல்லாமல் செய்கின்றது. ஒரு 30 வயதான அமெரிக்க தொழிலாளிக்கு தற்போது கிடைக்கக்கூடிய வருமானம் இதே வயதுப் பிரிவில் 1978ல் இருந்த தொழிலாளியின் ஊதியத்தைவிட 12 சதவிகிதம் குறைவானதாகும். முன்னாள் தொழிற்துறை மந்திரி ரொபேர்ட் ரைக் குறிப்பிட்டுள்ளபடி, கூலி வீக்கத்தை கையாள்வதற்காக "பிரச்சனையை தீர்க்கும் செயற்பாடுகள்'' பாரியளவில் மகளிரை தொழிலாளர் தொகுப்பினுள் கொண்டுவந்ததுடன் (1970ல் 38 சதவீதத்தில் இருந்து தற்போது 70 சதவீதம் என); மேலும் ஆண்டு வேலைச் சுமையினை இரண்டு வாரங்களாக அதிகரித்தது. ஒரு சராசரி ஐரோப்பியரை விட அமெரிக்கர்கள் ஆண்டு ஒன்றுக்கு 350 மணி நேரம் கூடுதலாக உழைக்கின்றனர்.

21-ம் நூற்றாண்டின் பின், தொழிலாளர்கள் தங்கள் உழைப்புத்திறனால் பணம் சம்பாதிப்பதற்கும் உழைப்பதற்குமான இயலுமை உயர்மட்டத்திற்கு வந்துவிட்டதால், தங்கள் வீடுகளை இணை அடைமானப் பொருளாக பயன்படுத்தி அவர்கள் கூடுதலான முறையில் கடன் வாங்குவதை நம்பத் தொடங்கினர். இவ்விதத்தில் வருமானத்திற்கும் தேவைக்கும் இடையே தொடர்ந்து அதிகரித்துவரும் பிளவை சமாளிக்கமுடியாமல் மில்லியன் கணக்கான மக்கள் மிகப் பெரிய நிதிய நெருக்கடிக்குள் விழும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே 2007ன் முதல் பகுதியில் அமெரிக்காவில் தனிப்பட்டோரின் திவால்கள் 48 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. தொழிலாளர்கள் எந்த அளவிற்கு பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற உண்மை 27 மில்லியன் தொழிலாளர்கள் இந்த குளிர்காலத்தில் வீடுகளில் வெப்பமூட்டலுக்காக கொடுக்கப்பட வேண்டிய கட்டணத்திற்காக கடன் வாங்க வேண்டிய நிலையில் இருப்பதன் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இப்படி கடன் அட்டைகளை பயன்படுத்துவது, வீடுகளை அடைமானம் வைத்து பெறும் கடன்களைப்போல் (Home Equity Loans) பிரச்சினைக்குரியதாக ஆகின்றது. அனைத்து மரபார்ந்த, தனிப்பட்ட வழிவகைகள் மூலம் தற்போது நிலவும் பொருளாதார யதார்த்தங்களுடன் இயைந்துபோக முடியாது போகையில், தொழிலாள வர்க்கம் தன்னைக் காத்துக் கொள்ளுவதற்கு இருக்கும் ஒரே வழியான, முதலாளித்துவ முறைக்கு எதிராக கூட்டான மற்றும் நனவான சமூக மற்றும் அரசியல் போராட்டத்தை நோக்கி திரும்ப நிர்ப்பந்திக்கப்படும்.

இந்த வழிவகையில் கடனின் பங்கு பற்றிய தன்னுடைய பகுப்பாய்வில் Levy Institute ன் L. Randall Wray கீழ்நோக்குச் சரிவு ஆழ்ந்த பொருளாதார பின்னடைவிற்கு மெதுவாக திரும்புவதற்கு ஒரு நிதியச் சரிவு தேவையில்லை என்று சுட்டிக் காட்டுகிறார்.

"மற்ற அனைத்தும் சமமாக இருந்தால், தனியார் துறை செலவினங்களை குறைக்கிறது என்றால், ஒரு டாலர் வருமானத்தில் 97 சென்ரை குறைக்கிறது என்றால், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரை டசின் சதவீத புள்ளிகள் குறைத்துவிடும். தனியார் துறை பிரச்சினையில் உள்ளது என்றால், அது செலவினங்களை டாலருக்கு 90 சென்டுகள் செலவழிக்கிறது என்றால் (பொதுவாக மந்த நிலையில் அப்படித்தான் இருக்கும்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு ஒன்றரை டிரில்லியன் டாலர்கள் மிகப் பெரிய இடைவெளியை கொடுக்கும்; அது வரவுசெலவு பற்றாக்குறை அதிகரிப்பாலோ அல்லது ஏற்றுமதியாலோ முற்றிலும் மீட்கப்படாது போகலாம்." (Wray, p.44)

இந்த மட்டுப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் கூட, உலக முதலாளித்துவ அமைப்பு தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, அவை உலக நிதிய அமைப்பின் இதயத்தையே தாக்கியுள்ளன என்பதை தெளிவாக்குகிறது. Financial Times இல் மார்ட்டின் வொல்ப் ஆங்கிலோ-சாக்சன் மாதிரியின் முடிவு இதுதான் என்று எச்சரித்துள்ளார். Bank for International Settlements உடைய பொது மேலாளரான Malcolm Knight, "தோற்றுவித்தல் மற்றும் வழங்குதல்" என்ற மாதிரியின் சரிவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இதுதான் கடந்த தசாப்தத்தில் நிதிய புதுமுறையின் மையத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

நிதிய வழிவகைகளும், நடைமுறைகளும் கடந்த காலத்தில் தீவிரப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன என்பது பரந்த அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழிவகைகள் தற்செயலாக அவற்றின் கட்டுப்பாட்டை எடுக்க நேர்ந்துள்ள போக்கிரி வணிகர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இவை வங்கி, நிதிய பிரிவுகளில் உள்ள மிக உயர்ந்த மட்ட அதிகாரிகளின் ஒப்புதலை பெற்றவை; எனவே உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன் பிணைந்தவை ஆகும். எனவே வேறு ஒன்றை முயற்சி செய்தல் என்ற விஷயம் இல்லாமலும், ஆபத்து குறைவான வழிவகைகள் அறியப்பட வேண்டும் என்றோ நினைக்கப்படவில்லை; மற்றொரு காலணிகளை அணிதல் போன்ற எளிய மாற்றும் இல்லை.

கடன் நெருக்கடி உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டில் அதிக தாக்கங்களை கொண்டுள்ளது என்பது இப்பொழுது பரந்த அளவில் உணரப்பட்டுள்ளது.

இக்கட்டுரை தற்போதைய நிலைமை பற்றியும் ஒரு பொருளாதார பின்னடைவு பற்றிய அச்சம், ஏன் அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரம் முழுவதும் முந்தைய காலத்தில் கொண்டிருந்த கடன் நிலையில் பாரிய பெருக்கத்தால் விளைந்த சரிவு அல்லது உடைவுடன் தொடர்பு கொண்டது ஆகும். எமது இயக்கத்தை எதிர்கொண்டுள்ள பிரச்சினை இதுதான்: எமது முன்னோக்குகளின் வளர்ச்சிக்கு இந்த நெருக்கடியின் முக்கியத்துவம் என்ன?

இரண்டு வருடங்களுக்கு முன்பு எமது ஆரம்ப விவாதத்தில் டேவிட் நோர்த் கீழ்க்கண்ட கருத்தை எடுத்துரைத்தார்: "அரசியல் முன்கணிப்பு பற்றிய எந்தத் தீவிர முயற்சியும், நிலவும் அரசியல் நிலைமைக்குள்ளே உள்ள மூலவாய்ப்புவளம் பற்றிய மதிப்பீடு செய்யவதற்கும், உலக முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று வளர்ச்சியை தெளிவாக, துல்லியமாக அறிந்த வகையில் இருந்து முன்செல்ல வேண்டும்.

"முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய ஆய்வு பின்வரும் அடிப்படை வினாவிற்கு விடையிறுக்க வேண்டும். உலகப் பொருளாதார அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவம் ஒரு மேல்நோக்கு பாதையில் நகர்ந்து இன்னும் அதன் உச்ச கட்டத்தை அடையவில்லையா அல்லது வீழ்ச்சியடைந்து ஒரு பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா?

"இந்த வினாவிற்கு நாம் கொடுக்கும் விடை, நடைமுறைப் பணிகளை நாம் தேர்ந்தெடுக்க மட்டுமல்லாது, எமது இயக்கத்தின் முழு கோட்பாடு மற்றும் முன்னோக்கின் நோக்குநிலைக்கும் தவிர்க்க முடியாமல் மிக தூரநோக்கான விளைவுகளை கொண்டுள்ளது. உலக முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நிலைமை பற்றிய ஆய்வை நிர்ணயிப்பது சமூகப் புரட்சிக்கான ஒரு அகநிலை விருப்பு அல்ல. மாறாக புரட்சிகர முன்னோக்கு சமூகப் பொருளாதார வளர்ச்சியின் புறநிலை போக்குகள் பற்றிய விஞ்ஞான ரீதியான மதிப்பீட்டில் கட்டாயம் வேரூன்றப்பட்டிருக்க வேண்டும்.. தேவையான புறநிலை சமூகப் பொருளாதார முன்னிபந்தனைகளில் இருந்து அகற்றப்பட்டுவிட்டால், ஒரு புரட்சிகர முன்னோக்கு என்பது வெறும் கற்பனைக் கட்டமைப்புக்கு மேலாக வேறொன்றுமாய் இருக்க முடியாது." (See "David North: டேவிட் நோர்த்: உலக சோசலிச வலைத்தள சர்வதேச ஆசிரியர் குழு கூட்டத்திற்கு வழங்கிய ஆரம்ப அறிக்கை").

இந்த நெருக்கடியின் வெடிப்பு நாம் எமது ஆய்வில் வலியுறுத்தியுள்ள மையப் பிரச்சினையை உறுதியாக அடிக்கோடிட்டு காட்டுகிறது -- அதாவது பூகோளமயமாக்கல் என்பது முதலாளித்துவத்தை ஒரு புதிய முற்போக்கான சகாப்தத்திற்கு உந்துதல் கொடுத்து அழைத்து போவதற்கு பதிலாக போர்களிலும் புரட்சிகளிலும் முடிந்த இருபதாம் நூற்றாண்டை அல்லற்படுத்திய அனைத்து முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஆனால் எமது எதிர்ப்பாளர்கள் முதலாளித்துவ அமைப்பு ஐயத்திற்கு இடமின்றி ஆழ்ந்த பிரச்சினைகளை அனுபவித்து கொண்டிருந்தாலும், ஏன் நெருக்கடியை கொண்டிருந்தாலும், "படைப்பாற்றல் திறன் கொண்டுள்ள புயல்களில்" ஒன்றான இதுவும், அதன் முழு வரலாற்றிலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்தன என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், புயலும் அழுத்தமும் நின்ற பின், ஒரு புதிய, இன்னும் கூடுதலான வளர்ச்சிப்போக்கு வெளிப்படும் மற்றும் அது சிறந்தவற்றில் எல்லாம் மிகச் சிறந்ததாக இருக்கும் என்ற வாதத்துடன் நம்மை எதிர்கொள்ளுவர்.

1987 பங்குச் சந்தை சரிவு உறுதியாக கடக்கப்பட்டுவிட்டது என்று அவர்கள் வாதிடுவர். அப்படித்தான் 1997-98 ல் ஆசிய நெருக்கடியும், 1998 ல் நீண்ட கால மூலதன நிர்வாகச் சரிவும், பின்னர் பங்குச் சந்தை மற்றும் டாட்காம் சரிவும் கடக்கப்பட்டன. எனவே வீடுகள் குமிழிச் சரிவு, குறைந்த பிணையுள்ள கடன் கொடுத்தல் சரிவு ஆகியவையும் தீர்க்கப்பட்டுவிடும் என்று வாதிடுவர்.

அப்படியானால் தற்போதைய நிலைமையை எப்படி மதிப்பிடப்பட முடியும்? முதலாளித்துவமுறை ஒரு எதிர்மறையை (-) கொடுத்திருக்கும்போது அதற்கு எதிராக ஒரு நேரியத்தை (+) போடுவதின் மூலமாகவோ அல்லது எதிர்மாறாகவோ அல்ல. அதற்கு வழிவகுத்திருந்த நிகழ்வுபோக்குகளை ஒரு வரலாற்றுரீதியாக ஆய்வு செய்வதின்மூலம்தான் அது முடியும்.

மார்க்சிசம் என்பது முன்னோக்கு பற்றிய ஒரு விஞ்ஞானம் என்றால், அந்த ஆய்வின் முக்கிய கருவிகளில் ஒன்று ட்ரொட்ஸ்கி 1921ல் கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் காங்கிரசிற்கு அளித்த புகழ் பெற்ற அறிக்கையான முதலாளித்துவ வளர்ச்சியின் வளைவு பற்றிய கருத்தாய்வும் 1920 களில் பின்பு கொடுத்த அறிக்கைகளும் அது பற்றிய விவாதமும் ஆகும்.

அந்த அறிக்கையில், வணிகச் சுழற்சி --எழுச்சி, நெருக்கடி, மந்தநிலை, புத்துயிர் பெறுதல், எழுச்சி-- என்று முதலாளித்துவ முறை தோன்றியதில் இருந்து அது மடியும் வரை ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கும் முதலாளித்துவ வளர்ச்சியின் நீண்ட கால வளர்ச்சியில் இந்த பொருளாதார சுழற்சிகள் செய்யப்படும் முறையில் உள்ள வேறுபாடு பற்றியும் தெளிவாக காட்டியிருந்தார்.

உலக வணிகத்தில் இருந்து புள்ளி விவரங்களை எடுத்துக் கூறிய அவர், முந்தைய நூற்றாண்டில் முதலாளித்துவ வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களை சுட்டிக் காட்டினார். 1781ல் இருந்து 1851 வரையிலான காலம் ஒப்புமையில் மெதுவான மேல்நோக்கிய இயக்கத்தை "வளர்ச்சி வளைகோடு" (Curve of Development) என்பதில் காணமுடியும். 1848 புரட்சிகளுக்கு பின்னர், தோற்றுப்போனாலும், ஐரோப்பாவில் முதலாளித்துவ சந்தை தன்னுடைய வடிவமைப்பை விரிவாக்கம் செய்தது; ஒரு கூர்மையான மேல்நோக்கிய வளர்ச்சி நடைபெற்று அது 1873 வரை தொடர்ந்திருந்தது. அந்த ஆண்டின் வங்கி மற்றும் நிதிய நெருக்கடி கடக்கப்பட்டபோதும், மீண்டும் முந்தைய நிலைமைகளை கொண்டுவர இயலவில்லை. மாறாக அடுத்த 20 ஆண்டுகள் மந்தநிலையின் பாதிப்பிற்கு உட்பட்டன-- விலைகள் சரிவு, இலாபங்கள் சரிவு ஆகியவை ஏற்பட்டன. 1890 களின் நடுப்பகுதியில் இருந்து வளர்ச்சி வளைகோட்டில் உயர்ச்சி ஏற்பட்டது; இது 1913 நெருக்கடியின்போது உச்சக் கட்டத்தை அடைந்து 1914 ல் போர் வெடிப்பில் முடிந்தது.

இரண்டு இயக்கங்களுக்கும் இடையே இருக்கும் உறவு பின்வருமாறு இருந்தது. அடிப்படை வளைகோட்டில் ஒரு எழுச்சியான காலகட்டங்களில் செழிப்புக்கள் நீண்டகாலம் நீடித்துடன் நெருக்கடிகள் ஒப்புமையில் குறைந்த காலமே இருந்தன. மறுபக்கத்தில் சரிவுக் காலத்தில் மேம்போக்காவும் ஊகங்கள் மிக்கதாகவும் இருந்தபோதும்; பொருளாதாரப் பின்னடைவுகளின் போது செழிப்புக்கள் பொதுவாக நீடித்த காலம் இருக்க காணப்பட்டன.

1920 களின் தொடர்ச்சியான கட்டுரைகள் மற்றும் விவாதங்களில், ட்ரொட்ஸ்கி தன்னுடைய ஆய்வை இன்னும் தெளிவுபடுத்தினார். குறிப்பாக ஒரு முதலாளித்துவ பொருளாதார வல்லுனரும் சமூக ஜனநாயகவாதியுமான Kondratiev இன் ஆய்வினை கவனத்திற்கு எடுத்தார்; Kondratiev முதலாளித்துவ வளர்ச்சியின் நீடித்த கட்டங்களும் "சுழற்சிகள்" எனக் கருதப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இது சொற்றொடர் பற்றிய வேறுபாடு இல்லை; முன்னோக்கு பற்றிய அடிப்படை வினாக்களை கொண்டிருந்தது.

"அவ்வப்பொழுது ஏற்படும் சிறு சுழற்சிகள் முதலாளித்துவ சக்திகளின் உள் இயக்கத்தினால் உருவாக்கப்படுவதுடன், சந்தை செயல்படத் தொடங்கிய உடனேயே இந்நிலை எங்கும், எப்பொழுதும் காணப்படும். முதலாளித்துவ வளர்ச்சி வளைகோட்டின் நீண்ட பிரிவுகளை பொறுத்த வரையில் (ஐம்பது ஆண்டுகள்), பேராசிரியர் Kondratiev எச்சரிக்கையின்றி இவற்றையும் சுழற்சிகள் என்று பெயரிட விரும்புகிறார்; அவற்றின் தன்மையும் கால அவகாசமும் உள் நிகழ்வுகளால் தீர்மானிக்கப்படாமல் முதலாளித்துவ வளர்ச்சி நடக்கும் பாதைகளின் வெளி நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. முதலாளித்துவம் புதிய நாடுகள், கண்டங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதும், புதிய இயற்கை இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அதன் விளைவாக "மேல்கட்டுமானத்தில்" நடந்த முக்கிய நிகழ்வுகளான போர்கள், புரட்சிகள் போன்றவை முதலாளித்துவ வளர்ச்சியின் ஏற்ற, இறக்க, சீரழியும் சகாப்தங்களின் குணாம்சத்தையும் அது வேறொன்றால் பிரதியீடு செய்யப்படுவதையும் நிர்ணயிக்கின்றன." என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். (Trotsky, "The Curve of Capitalist Development" in Problems of Everyday Life, Pathfinder, 2005, pp. 341-342).

Kondratiev முதலாளித்துவ வளர்ச்சியின் நீண்ட பிரிவுகளை சுழற்சி என அழைத்தது ஒரு சமூக ஜனநாயக முன்னோக்குடன் பிணைந்தது ஆகும். அதன்படி முதலாளித்துவ ஒழுங்கில் "உடைவு" என்பது இல்லை; மந்தநிலைக்கு பின்னர் வணிக சுழற்சியில் ஒரு புத்துயிர்ப்பு நடவடிக்கை ஏற்படுவது போல் கீழ்நோக்கிய சரிவு காலகட்டம் தவிர்க்க முடியாமல் ஒரு மேல்நோக்கிய ஏற்றத்தை காணும்.

1920 களின் உலக நிலையை பகுப்பாய்கையில், ட்ரொட்ஸ்கி முதலாளித்துவ வளர்ச்சியில் மேல்நோக்கிய வளைகோடு வரக்கூடும் என்பதை நிராகரிக்கிவில்லை. ஆனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இறப்பில் முடிவடையும் ஐரோப்பிய பொருளாதாரம் வன்முறைமிக்க வழியில் பின்னோக்கு செல்லுதல் நடந்த பின்னர்தான் வரும் என்றார். ஒரு புதிய ஏற்றம் என்பது கம்யூனிச அகிலம் மற்றும் அதன் பிரிவுகள் வரவிருக்கும் ஆண்டுகளில் தங்களுக்கு கிடைக்கக் கூடிய புரட்சிகர வாய்ப்புக்களை பயன்படுத்தத் தவறினால்தான் நிகழும் என்றும் அவர் கூறினார்.

ஒரு தற்காலிக முன்கருத்தாக ட்ரொட்ஸ்கி கருதிய இந்த நிலைமைகள் நிகழ்ந்து முடிந்ததை நாம் அறிவோம். புரட்சி வாய்புக்கள் நன்கு பற்றப்படவில்லை என்பது மட்டும் இல்லாமல், கம்யூனிச அகிலத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கொண்டிருந்த மேலாதிக்கம் உலக ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சி அமைப்பாக செயல்படவும் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், முதலாளித்துவ வளர்ச்சியில் ஒரு புதிய மேல்நோக்கிய ஏற்றம் இருந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட கூடுதல் உற்பத்தி வழி முறைகள் உலகம் முழுவதும் பரந்ததால் ஏற்பட்டது ஆகும். இது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெறப்படும் உபரிமதிப்பை மிகப்பெரியளவில் அதிகரித்துடன், முதலாளித்துவ முறையின் இலாப விகிதத்தை முழுமையாக உயர்த்தியது.

ஆனால் இந்த ஏற்றமும் ட்ரொட்ஸ்கி பகுத்தாய்ந்துள்ளபடி மேற்கட்டுமானத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த வளர்ச்சிகளால்தான், குறிப்பாக போரின் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சி ஸ்ராலினிச அமைப்புகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் போரில் நுழைந்ததால் ஏற்பட்ட சர்வதேச அரசியல் உறவுகளில் பெரும் மாறுதல்கள் ஆகியவற்றால் சாத்தியமானது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த வளர்ச்சிக்கும் 1930களின் உலகம் பேரரசுகளுக்கும் இடையே பிளவுபட்டிருந்த, அதாவது பிரிட்டிஷ் பேரரசு, ஜப்பான் ஆசியாவை வெற்றி கொள்ள வேண்டும் எனக் கொண்டிருந்த உந்துதல், நாஜி ஆட்சி ஐரோப்பாவின்மீது மேலாதிக்கம் செய்ய வேண்டும் என்று கொண்டிருந்த விழைவுகள்--இவைகளுக்கு இடையே இருந்த முரண்பாட்டின் வெடிப்பு தன்மையால் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி ட்ரொட்ஸ்கி ஏற்கனவே 1934ம் ஆண்டு தான் வெளியிட்ட புகழ் பெற்ற பொருளாதார வாழ்வில் தேசியவாதம் (Nationalism and Economic Life) என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

மனித சமூகத்தின் பரிணாமவளர்ச்சிக் கால ஆரம்பத்தில் இருந்து உழைப்பின் உற்பத்தித் திறனின் (Productivity of labour) வளர்ச்சி பற்றிய முக்கியத்துவத்தை கொண்டுவந்த விதத்தில் இக்கட்டுரை தொடங்கியது. உழைப்பின் உற்பத்தித் திறன் என்பது சமூக ஆட்சிகளின் தன்மையை நிர்ணயிக்கும் மிக ஆழ்ந்த அளவு கோலாக இருந்து, இறுதி ஆய்வில் ஒரு சமூகத்திற்கு பதிலாக மற்றொன்றால் பிரதியீடு செய்யப்படுவது என்பது ஏற்படுகிறது --காட்டுமிராண்டித்தனம் அடிமையுடைமை முறையால் பிரதியீடு செய்யப்பட்டது, அடிமையுடைமை முறை நிலப்பிரபுத்துவத்தால் பிரதியீடு செய்யப்பட்டது, நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்தும் முறையால் பதிலீடு செய்யப்பட்டது என்ற வளர்ச்சியே அது.

இந்த உழைப்பின் உற்பத்தித்திறன் விதி 1930களின் நிலைமைகளில் எவ்வாறு வெளிப்பட்டது?

"முதலாளித்துவ வளர்ச்சியின் முழு நிறைவான முறையை அமெரிக்கா பிரதிநிதித்துவம் செய்தது. ஒப்புமையில் நாட்டின் உள்நாட்டு சமநிலை மற்றும் பார்த்தால் முடிவற்று இருக்கும் சந்தையும் அமெரிக்காவிற்கு ஐரோப்பா மீதான தொழில்நுட்ப, பொருளாதார மேலாதிக்கத்தை வழங்கியது. ஆனால் உலகப் போரில் அதன் தலையீடு உண்மையில் அதன் உள் சமநிலை ஏற்கனவே தடைக்குட்பட்டுவிட்டது என்ற உண்மையின் வெளிப்பாடுதான். அமெரிக்க கட்டுமானத்தினுள் போரினால் கொண்டுவரப்பட்ட மாறுதல்கள் உலக அரங்கில் வாழ்வா, சாவா என்ற கேள்வியை அமெரிக்க முதலாளித்துவத்திற்கு கொண்டுவந்து விட்டது. இந்த நுழைவு மிகத்தீவிர வியத்தகு வடிவங்களை எடுக்கவேண்டும் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன.

"உழைப்பின் உற்பத்தித் திறன் விதி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகளுக்கு தீர்மானகரமான முக்கியத்தை கொண்டிருந்தது; பொதுவாக உலகில் அமெரிக்காவின் இடத்தை நிர்ணயிப்பதாகவும் இருந்தது. உழைப்பின் உற்பத்தி விதிக்கு யாங்கிகள் (Yankees) கொடுத்த மிக உயர்ந்த வடிவம் நகரும் பட்டை உற்பத்திமுறை (Conveyor), திட்ட அளவு உற்பத்தி (Standard) அல்லது பேரளவு உற்பத்தி என்பதாகும். உலகை திருப்புவதற்கு ஆர்க்கிமெடிசின் நெம்புகோல் வைக்கப்படவேண்டிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதுபோல் தோன்றியது. ஆனால் பழைய கிரகமோ நகர்த்தப்படுவதற்கு மறுத்தது. ஒவ்வொருவரும் பிறரிடம் இருந்து பாதுகாத்து கொண்டனர்; அதற்கு சுங்க வரிகள் சுவர் என்பதும் துப்பாக்கிகள் என்ற அரணும் தேவைப்படுகிறது. ஐரோப்பா பொருட்களை வாங்குவதில்லை, கடன்களை கொடுப்பதில்லை, இதைத்தவிர தன்னை ஆயுதமயமாக்கிக் கொள்ளுகிறது. ஐந்து பரிதாபத்திற்குரிய இராணுவப் பிரிவுகளை கொண்டு ஜப்பான் ஒரு முழு நாட்டையும் கைப்பற்றுகிறது [சீனா]. உலகில் இருக்கும் மிக முன்னேற்றமடைந்துள்ள தொழில்நுட்பம் திடீரென மிகக் குறைந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வரும் தடைகள் முன் செயலற்று போகின்றன. உழைப்பின் உற்பத்தித் திறன் விதி அதன் சக்தியை இழந்துவிட்டது போல் தோன்றுகிறது.

"ஆனால் இது பார்ப்பதற்குத்தான் இவ்வாறு உள்ளது. மனித வரலாற்றின் அடிப்படை விதி தவிர்க்க முடியாமல் கிடைக்கப் பெற்ற இரண்டாம் பட்ச நிகழ்வுகள்மீது பழி வாங்க வேண்டும். விரைவிலோ, தாமதமாகவோ, அமெரிக்க முதலாளித்துவம் எமது உலகம் முழுவதும் தனக்கான பாதையை திறக்கவேண்டும். ஆனால் எந்த வழிவகைகளால்? அனைத்து வழிகளாலும். உற்பத்தித்திறனின் மடக்கிலக்கத்தில் மிக உயர்ந்த வளர்ச்சி என்பது அழிப்பு சக்தியின் மடக்கிலக்கத்திலும் மிக உயர்ந்த வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது. நான் போர் வேண்டும் என உபதேசிக்கின்றேனா? இல்லவே இல்லை. நான் எதையும் உபதேசிக்கவில்லை. உலக நிலைமையை பகுத்தாய்கிறேன், பொருளாதார இயக்க வகை விதிகளில் இருந்து ஒரு சில படிப்பினைகளை பற்றி எடுக்க முயலுகிறேன்." (Trotsky, Writings 1933-34, Pathfinder, 1975, pp. 161-162).

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு அடிப்படை வினா ஜனநாயகம் என்பது அல்ல; உலகப் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பதனூடாக பொருட்களும் மூலதனமும் தடையற்ற முறையில் எங்கும் செல்வதை உறுதிப்படுத்துவதும் மற்றும் பழைய பேரரசுகள் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதும்தான்.

போருக்குப் பின் உலகப் பொருளாதாரம் மறு கட்டமைக்கப்படுதல் என்பது முதலாளித்துவ வளர்ச்சியின் வளைகோட்டில் ஒரு புதிய ஏற்றத்தினால் சாத்தியமாக்கப்பட்டது. அதாவது இன்னும் கூடுதலான உற்பத்தி முறைகளின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவை இலாப விகிதத்தை அதிகரிக்கவும், தொடர்ந்து தக்கவைத்திருக்கவும் வேண்டும்.

ஆனால் இலாப அமைப்பில் அனைத்து முரண்பாடுகளும் நீங்காமல் அப்படியே இருந்தன; 1960 களின் நடுப்பகுதியில் இலாபவிகிதம் ஒரு கீழ்நோக்கு சரிவை கண்டதின் மூலம் வெளிப்படத் தொடங்கின.

போருக்கு பிந்தைய பொருளாதார உயர்வு தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியினாலும் குறிப்பிடும் அடையாளம் காட்டப்பட்டது. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய கூட்டத்தில் தன்னுடைய கருத்துக்களில் டேவிட் நோர்த் மிகச் சரியாக சுட்டிக் காட்டியுள்ளதுபோல், இந்த காலக்கட்டத்தின் அடிப்படைக் கூறுபாடு, புதிய இடதுகளின் தத்துவாசிரியர்கள் கூறிவந்ததுபோல் மாணவர்கள் அல்லது ஒரு "புதிய முன்னணிப் படை" எழுச்சி பெற்றது அல்ல; தொழிலாள வர்க்கம் எழுச்சி பெற்றதுதான்.

ஒரு பரிமாண மனிதன் (One Dimensional Man) என்னும் பிராங்க்பேர்ட் பள்ளியின் முக்கிய ஆசானான Marcuse உடைய புத்தகம், 1964ல் வெளியிடப்பட்டது, பிராங்க்பேர்ட் பயிலகத்தின் கோட்பாடுகளை சுருக்கிக் கூறுகிறது; இது தொழிலாள வர்க்கம் முன்னேற்றமடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் ஒரு புரட்சிகர சக்தியாக இல்லை என்று உறுதியாகக் கூறுகிறது.

அவர் எழுதினார்: "சமூகம் பற்றிய விமர்சன ரீதியான கோட்பாடு, அது ஆரம்பித்த காலத்தில் உண்மையான சக்திகளின் பிரசன்னத்தை (புறநிலை மற்றும் அகநிலை) சமூகத்தில் எதிர்கொண்டது; அவை இன்னும் கூடுதலான வகையில் பகுத்தறிவார்ந்த, தடையற்ற அமைப்புக்களை நோக்கி (அல்லது நோக்கி நகர்வதற்கு வழிகாட்ட முடியும்) சென்றது; முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவற்றை இருக்கும் நிலையில் இருந்து அகற்றியதால் இது சாதிக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டை உருவாக்குவதற்கான உணர்வுரீதியான அடிப்படைகள் இருந்தன; அந்த உணர்வு ரீதியான அடிப்படைகள் சுதந்திரம் பற்றிய கருத்துக்களின் உள்ளடங்கியுள்ள சாத்தியப்பாடுகளில் இருந்து எடுக்கப்பட்டன - இவ்வளர்ச்சி மற்றபடி பொருள்சார், அறிவார்ந்த உற்பத்தித் திறன், ஆளுமைகள் தேவைகள் ஆகியவை தடுக்கப்பட்டு, சிதைவிற்கு உட்பட்டன. இத்தகைய சக்திகளின் எடுத்துக்காட்டல் இல்லாவிடின், சமூகம் பற்றிய விமர்சனம் இன்னமும் உண்மையாகவும் பகுத்தறிவார்ந்த முறையிலும் இருக்கும், ஆனால் பகுத்தறிவார்ந்த தன்மையை வரலாற்று வழக்கம் என்ற விதத்திற்கு மாற்றும் திறனற்று இருக்கும். இதன் முடிவு என்ன? "இயல்பான வாய்ப்புக்களுக்கு விடுதலை" என்பது வரலாற்று மாற்றீடாக போதியளவில் வெளிப்படுத்துவதில்லை."

இவ்விதத்தில் தொழிலாள வர்க்கம் முற்றிலும் முதலாளித்துவ ஒழுங்கின் வடிவமைப்பில் இணைக்கப்பட்டுவிட்டது. மற்ற சக்திகளான, சமுதாயத்தின் வெளியிலுள்ள, அந்நிய சக்திகள் மட்டுமே அடிப்படைகள் புரட்சிகர எதிர்ப்பை கட்டியமைத்தன.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்றில் மிகப் பெரிய பொது வேலைநிறுத்தத்தால் பிரான்ஸ் அதிர்விற்கு உட்பட்டது. உலகின் மற்ற பெரிய நாடுகளும் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் போராட்டங்களால் குலுங்கின. முந்தைய காலத்தில் ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்தது போல், மாணவர்களிடையே அரசியல் செயற்பாடு வளர்ந்தது ஒன்றும் ஒரு புதிய சமூக சக்தியின் வெளிப்பாடு அல்ல, மாறாக சமூகத்தின் அடித்தளத்தில் நடைபெறும் ஆழ்ந்த செயற்பாடுகள், சமுதாயத்தின் உறுதியற்ற பிரிவுகளில் பிரதிபலிக்கின்றது.

1968ல் இருந்து 1975 வரை புரட்சி எழுச்சி என்பது தொழிலாள வர்க்கத்தின் ஸ்ராலினிஸ்ட்டுகள் மற்றும் சமூக ஜனநாயக தலைமைகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டன; இதற்கு போருக்கு பிந்தைய காலத்தில் நான்காம் அகிலத்தை வலுவிழக்கச் செய்து குறைமதிப்பிற்கு உட்படுத்திய பப்லோவாத போக்குகளின் முக்கியமான உதவியும் கிடைத்திருந்தது. இவை 1960 களிலும் 1970 களின் முதல் பகுதியிலும் முதலாளித்துவ ஒழுங்கை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கை கொண்டிருந்தன. இலங்கையை பொறுத்தவரையில் 1964ல் பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நுழைந்தமை இது அந்நாட்டில் மட்டும் இல்லாமல், துணைக் கண்டம் முழுவதும் மற்றும் ஆசியப் பகுதி முழுவதும் ன் அரசியல் நிலைமையை உறுதிப்படுத்துவதில் தீர்மானகரமான பங்கை கொண்டிருந்தது.

போருக்கு பிந்தைய முதலாளித்துவ வளர்ச்சி வளைகோட்டின் ஏற்றம் முடிவுற்றது 1973ம் ஆண்டு பணவீக்கம் மற்றும் 1974-85 பொருளாதாரப் பின்னடைவு இவற்றின் தாக்குதலால் குறிக்கப்பட்டது; இது போருக்குப் பிந்தைய காலத்தில் மிக அதிக ஆழ்ந்த தன்மையை கொண்டிருந்த காலம் ஆகும். 1975க்குப் பின்னர் வணிகச் சுழற்சியில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது; ஆனால் 1960களில் இது வளர்ச்சி விகிதங்களிலோ, இலாப விகிதங்களிலோ மீண்டும் பெரும் உயர்வைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு புதிய நிகழ்வு தேக்க வீக்கம் (பொருளாதாரத்தில் வேலையின்மையும் பணவீக்கமும் இணைந்து காணப்படும் நிலை -Stagflation) தொடர்ந்து உயர்ந்த வேலையின்மை நிலை மற்றும் உயர்ந்த பணவீக்கம் என்ற இரண்டின் இணைப்பும் ஏற்பட்டது.

சமூக ஜனநாயகவாதிகள் மார்க்சிசத்தை காலம் கடந்தது எனக் கூறவைத்த கீன்சிய (Keynesian) நடவடிக்கைகள் (ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் இப்பொழுது அரசாங்கங்களால் நிர்வகிக்கப்பட முடியும் எனக் கூறப்பட்டது) நிலைமையை மோசமாக்கின. உத்தியோகபூர்வமாக அவை புதைக்கப்படுதல் என்பது செப்டம்பர் 1976 ல் நடைபெற்றதாக கூறமுடியும்; அப்பொழுது பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் மாநாட்டில், பிரதம மந்திரி ஜேம்ஸ் கலகன் "வரிகளை குறைத்து அரசாங்க செலவுகளுக்கு ஒரு ஊக்கம் கொடுப்பதன் மூலம் ஒரு பொருளாதாரப் பின்னடைவு நிலையில் இருந்து பணத்தை செலவழித்து மீள முடியும் மற்றும் அதையொட்டி வேலைவாய்ப்புக்கள் பெருகும் என்று நாம் நினைத்து வந்தோம் . ஆனால் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அத்தகைய விருப்புரிமை இல்லை என்பதைத்தான் உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன்'' என அறிவித்தார்.

அரசியல் நிலைமையை உறுதிப்படுத்திய பின்னர் முதலாளித்துவம் தாக்குதல் நிலைக்குச் சென்றது. இலாபவிகித வீழ்ச்சிக்கு விடையறுப்பு இருவிதத்தில் வந்தது; ஒன்று தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை குறைத்தல், இரண்டாவது முதலாளித்துவ முறையில் நஷ்டம் கொடுக்கும் பிரிவுகளை பெரிதும் அழித்துவிடுதல் என்பவையே அவை. இதுதான் றேகன் மற்றும் தாட்சரினால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் முக்கிய உள்ளடக்கமாகும். 1979ல் ஜனநாயகக் கட்சியின் ஜிம்மி கார்ட்டர் தலைமையின் கீழ் அவர் மத்திய ரிசேர்வ் வங்கி (Federal Reserve Board) தலைவரான போல் வோல்க்கரை---அமைப்புமுறையில் இருந்து பணவீக்கத்தை இல்லாதொழிக்க நியமித்தபோது தொடங்கியது.

இது ஒன்றும் பொருளாதாரக் கொள்கை பற்றிய எளிய வினா அல்ல; இதில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. தான் பதவியை எடுத்துக் கொண்ட உடனேயே, வோல்க்கர் 1980ம் ஆண்டு கிறைஸ்லர் திவால் நடவடிக்கையில் நேரடியாக தலையீடு செய்தார்; அது கடன்கள் பெறப்பட வேண்டுமானால் ஊதிய வெட்டுக்கள் வேண்டும் என்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு அரங்கை அமைத்தது. பின் அவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை உடைப்பதும் அவர்களுடைய சங்கமான PATCO வை 1981ல் அழிப்பதும் முக்கியம் என்றும் ஒப்புக் கொண்டார். "(றேகன்) நிர்வாகத்தின் மிக முக்கியமான ஒற்றை நடவடிக்கை பணவீக்க எதிர்ப்பு பற்றிய போராட்டத்திற்கு உதவும் வகையில் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளில் வேலைநிறுத்தத்தை முறியடித்தது ஆகும்."

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தோல்வி (AFL-CIO தொழிற்சங்கங்கள் அவர்களை காட்டிக் கொடுத்தது) அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை தொடங்கியதின் அடையாளம் ஆகும். பிரிட்டனில் முக்கிய திருப்பு முனைகளில் ஒன்று 1984-85ல் சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டதாகும். ஆஸ்திரேலியாவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் 1982-83 பிரேசரின் தாராளவாத கட்சி அரசாங்கத்தின் சரிவிற்கு பின் ஹாக்-கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கத்தின் தலைமையால் முன்னெடுக்கப்பட்டது.

வோல்க்கர் அறிமுகப்படுத்திய வட்டி விகித ஏற்றங்கள் 1982-83ல் மந்த நிலையை ஏற்படுத்தின; அது 1930 களுக்கு பின்னர் மிக ஆழ்ந்த தன்மையை கொண்டுள்ளது ஆகும். இந்த உயர்வுகளின் பரப்பு கீழ்க்கண்ட வரைபடம் மூலம் நன்கு புலனாகும்.

(மூலம்: சர்வதேச நாணய நிதியம்-IMF)

வட்டி விகித உயர்வுகள் வளரும் நாடுகள் என அழைக்கப்படுபவற்றின் மீது மிகப் பெரிய பாதிப்பைக் கொண்டிருந்தன; அவை 1973-74 எண்ணெய் விலை உயர்வின் விளைவாக பெரும் கடனில் ஆழ்ந்தன. கடன்கள் திருப்பிக் கொடுத்தலும் அதே நேரத்தில் பெருகின; ஏற்றுமதிப் பொருட்களின் விலைகள் உண்மை மதிப்பில் சரியத் தொடங்கிய நேரத்தில் இது ஏற்பட்டது. இது இன்றளவுவரை தொடரும் ஒரு நிகழ்வுப்போக்கினை ஆரம்பித்தது, அதாவது உலகில் இருக்கும் சில மிக வறிய நாடுகளில் இருந்து இருப்புக்களை பெரிய வங்கிகள், நிதிய அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு மாற்றுதலே அது.

இந்த வழிவகையில் விளைவுகள் கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களின் மூலம் குறிகாட்டப்படுகின்றன. 1970ல் உலகின் மிக வறிய நாடுகள் (கிட்டத்தட்ட 60 நாடுகள் உலக வங்கியினால் குறைந்த வருமானமுடைய நாடுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளன), $25 பில்லியன் கடனை கொண்டிருந்தன. 2002ஐ ஒட்டி, இந்தத் தொகை $523 பில்லியனாக உயர்ந்தது. 1970ல் ஆபிரிக்காவிற்கு அது $11 பில்லியனுக்கு சற்று குறைவாக இருந்தது. 2002 ஐ ஒட்டி அது $295 பில்லியன் என்று ஆயிற்று. கடந்த மூன்று தசாப்தங்களில் $550 பில்லியன் தொகை வட்டியும் முதலுமாக $540 பில்லியன் கடனுக்கு கொடுக்கப்பட்டுள்ளன; இருந்தபோதிலும் இன்னமும் $523 பில்லியன் கடன் சுமை உள்ளது. (See http://www.globalissues.org/TradeRelated/Debt/Scale.asp).

1980 களின் தசாப்தம் முந்தைய தசாப்தத்தில் இலாபவீத வீழ்ச்சிக்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட மூலதனத்தின் பதிலையும், இதனால் எழுந்த கடுமையான பொருளாதார பிரச்சினைகளையும் கண்டது. முதலும் முக்கியமானதுமாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக அந்தஸ்தின் மீது இது தாக்குதல் நடத்தியது; இது இன்றும் தொடர்கிறது; முன்னாள் காலனித்துவ நாடுகளில் இருந்து பெற்ற கூடுதலான இலாபங்கள் மற்றும் வருவாய்களை மீண்டும் வெட்டி எடுக்க விழைந்தது; இந்த நிகழ்வுப்போக்கு தொடர்கிறது. இந்த நடவடிக்கைகளுடன் இணைந்து தொழிற்துறையிலும் நிர்வாக துறையிலும் கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம் ஒரு தொழில்துறை மறு கட்டமைத்தல் வந்தது.

கணினிகள் முதன்முதலாக போருக்கு பிந்தைய உடனடிக் காலத்தில் வளர்ச்சி பெற்றன; டிரான்ஸிஸ்டர் 1950 களில் வளர்ச்சியுற்றன; ஆனால் தனிநபர் கணினி (Personal Computer) என்பது 1981 வரை தோற்றத்தை காட்டவில்லை. அதன் பயன்பாடு, நிர்வாகம் மற்றும் தொழில் நடைமுறைகள், தகவல் தொடர்பு மற்றும் சமூக வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் முழு தொடர்ச்சியான பாரிய மாற்றங்களை கொண்டுவந்தது.

ஆனால் 1980 களில் இலாபவிகிதத்தில் ஒரு மேல்நோக்கிய ஏற்றத்திற்கு வழிசெய்திருந்தாலும் இந்த மாற்றங்கள் முதலாளித்துவ வளர்ச்சி வளைகோட்டில் ஒரு புதிய ஏற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. கீழே இருக்கும் இரு வரைபடங்களில் இருந்தும் அது காணக்கூடியதாக உள்ளது.

("Long Waves and Historical Trends of Capitalist Development," Minqi Li, ect -நீண்ட அலைகளும் முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்று போக்கும், மின்கி லி உம் மற்றவர்களும்)

(Source: US Bureau of Economic Analysis- மூலம்- பொருளாதார ஆய்வுக்கான அமெரிக்க மையம்)

அமெரிக்க இலாப வீதம் பற்றிய இரண்டாவது வரைபடத்தை பார்த்தால், 1980 களில் சற்று பொருளாதார மீட்சி ஏற்பட்டபோதிலும்கூட, அது குறிப்பிடத்தக்க வகையில் வலுவாக இல்லை; தசாப்தத்தின் நடுப்பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் சரிவு இருந்து பின்னர் குறைந்த மீட்சி ஏற்பட்டது; இதைத் தொடர்ந்து மற்றொரு சரிவு தசாப்தத்தின் இறுதியில் வந்தது; இது 1991-92 பொருளாதாரப் பின்னடைவு நிலையின் ஆரம்பத்துடன் சேர்ந்து வந்தது என்பதை காண்கிறோம்.

1990 களின் ஆரம்பத்தில் இருந்து ஒரு நீடித்த மீட்சி உள்ளது; பின்னர் 1997 ல் இருந்து 2001 வரை ஒரு தீவிர சரிவு காணக்கூடியதாக உள்ளது. இந்த ஆண்டுகள் பங்குச் சந்தை குமிழியின் காலம் ஆகும். 2000-01 பங்குச் சந்தை சரிவிற்கான காரணங்கள் மிகத் தெளிவாக உள்ளன: பங்கு விலைகள் புதிய உயர்விற்கு பொங்கி எழுகையில், வருமான ஓடைக்கு இலாபங்களை கொடுக்கும் பங்குகள் கீழ்நோக்கி சரிந்து கொண்டிருந்தன; இதற்கு காரணம் என்ரோன், வேர்ல்ட்காம் போன்ற நிறுவனங்கள் மோசடித்தன கணக்கெழுதும் நடவடிக்கைகள் மூலம் உண்மையை மூடி மறைத்து வந்தன.

1991ல் ஏற்பட்ட மாற்றத்திற்கும், முதலாளித்துவ வளர்ச்சி வளைகோட்டில் புதிய உயர்நிலையின் தொடக்கத்தையும் எப்படி விளக்குவது? ஐயத்திற்கு இடமின்றி, உலக முதலாளித்துவ முறை வரலாற்றில் இது நீண்டகால விளைவுகளை தரக்கூடிய கட்டமைப்பு மாற்றங்களில் ஒன்றாகும்-- அதாவது ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவு, சீனா திறந்துவிடப்பட்டது, இந்தியா போன்ற நாடுகள் தேசியப் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்றவை மற்றவை ஆகும். "முதலாளித்துவ வளர்ச்சியின் வளைவு'' (The Curve of Capitalist Development) என்ற தன் கட்டுரையில், ட்ரொட்ஸ்கி ஒரு மேல்நோக்கிய ஏற்றம் என்பது முதலாளித்துவ பொருளாதாரத்திற்குள்ளே உள்ளார்ந்த நிகழ்வுப்போக்கின் ஒரு விளைவு அல்ல என்றும், முதலாளித்துவம் வளரும் வெளி நிலைமைகளில், "புதிய நாடுகள், கண்டங்கள்" இவற்றை அடைதல் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு என்றும் கூறியுள்ளார். மிகத் துல்லியமாக இதுதான் நடைபெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு புதிய முதலாளித்துவ ஏற்றம் எப்படி வரக்கூடும் என்பதற்கான நிலைமைகளை ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியுள்ளார்.

"எனவே உறுதியாக கோட்பாட்டளவில் ஒரு பொதுவான முதலாளித்துவ வளர்ச்சி என்ற புதிய அத்தியாயம் மிக சக்தி வாய்ந்த, ஆளுமைமிக்க முக்கிய நாடுகளில் ஒதுக்கப்பட்டுவிட முடியாத ஒன்றாகும். ஆனால் இது வரும் முன்பு, முதலாளித்துவ வர்க்கம் வர்க்கரீதியானதும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான பாரிய தடைகளை முதலில் கடந்தாக வேண்டும். நீண்ட காலத்திற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சியை நெரிக்க வேண்டும்; சீனாவை முழுமையாக அடிமைப்படுத்த வேண்டும், சோவியத் குடியரசை தூக்கிவீச வேண்டும், இன்னும் பலவும் செய்யப்பட வேண்டும்." (Trotsky, The Third International After Lenin, New Park Publications, 1974, pp. 61-62).

சீனாவையும் சோவியத் ஒன்றியத்தையும் கையகப்படுத்துதல் என்பது இராணுவ வழிவகைகள் மூலம் நடக்கலாம் என்று ட்ரொட்ஸ்கி கருதியிருந்தார். ஆனால் வரலாற்றின் போக்கு வேறுவிதமாக இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் சரிவு பொருளாதார நிகழ்போக்குகளில் வேரூன்றியிருந்த நிலையில், முதலாளித்துவ மறுசீரமைப்பு "இயல்பாகவோ" அல்லது தவிர்க்க முடியாமலோ அடையப்பட்டுவிடவில்லை. கணினிகளால் ஏற்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சகாப்தத்தில் சோவியத் பொருளாதாரத்தின் அதிகரித்த பொருளாதார திறைமையற்ற தன்மை, சோவியத் பொருளாதாரத்தால் உற்பத்தித் திறனை அபிவிருத்திசெய்ய முடியாமல் போனதும், அதனால், இறுதி ஆய்வில் சர்வதேச உழைப்பு பிரிவினை முறையில் இருந்து கட்டாயமாக அது ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவை தொழிலாள வர்க்கத்திடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி ஆட்சியை கேள்விக்குள்ளாக்கும் என்று ஆயிற்று. 1980-81ல் போலந்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் எச்சரிக்கை சமிக்கையை கொடுத்திருந்தன.

இந்த வாய்ப்புவளத்தை எதிர்பார்த்த வகையில், ஸ்ராலினிச எந்திரம் ஒரு முன்கூட்டிய தாக்குதலுக்கு முடிவு செய்தது; சோவியத் ஒன்றியத்தையே கலைத்து, அதனூடாக தன்னுடைய சலுகைகள், சமூக நிலைமையை முதலாளித்துவ சொத்து வடிவங்களுக்குள்ளே ஒருங்கிணைப்பது என்பதுதான் அது. அம்முயற்சியில் அது வெற்றி பெற முடிந்ததற்கு காரணம், அந்நேரத்தில் நாம் வலியுறுத்தியிருந்தபடி, சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிசம் என்பது அரசியல் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், முக்கிய முதலாளித்துவ நாடுகளில் பல தசாப்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகாரத்துவம் கொண்டிருந்த இறுக்கமான ஆளுமை இவ்விரண்டினாலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருந்தன் விளைவாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு ஒரு அரசியல் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தால், முற்றிலும் வேறுவிதமான வளர்ச்சி தொடர்ந்திருக்கும். வேறுவிதமாக கூறினால், சோவியத் ஒன்றியத்தின் நெருக்கடி பொருளாதார நிகழ்வுப்போக்குகளில் வேரூன்றியிருந்த அதேவேளை, அதன் கலைப்பு மற்றும் "முதலாளித்துவத்தால் புதிய நாடுகளையும் மற்றும் கண்டங்களையும் கைப்பற்றுதல்" என்பது மேற்கட்டுமான காரணிகளின் விளைவாக இருந்தது.

சீனாவில் மாவோயிச அதிகாரத்துவம் 1978ல் இருந்து ஒரு சந்தை சார்புடைய கொள்கையை தொடர்ந்தது; அதற்கான அடிப்படை 1971ல் அமெரிக்காவுடனான நல்லிணக்கத்தில் இடப்பட்டிருந்தது. இந்த கொள்கை ஓரளவு பொருளாதார தூண்டலை கொடுத்திருந்த அதேவேளை, அது தொடர்ச்சியாக சமூக முரண்பாடுகள் பலவற்றை தோற்றுவித்து, 1989ன் நிகழ்வுகளிலும் தியானன்மென் சதுக்க படுகொலையிலும் வெடித்தது. ஆட்சியின் முக்கிய இலக்கு மாணவர்கள் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கமாக இருந்தது.

சோவியத் ஒன்றியம் 1991ல் சரிந்தது சீன ஆட்சியை புதிய தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வைத்தது. 1992 ஜனவரி மாதம் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு எட்டே வாரங்களில் டெங் தன்னுடைய "தெற்குப் பயணத்தை" மேற்கொண்டார்; இது சீனப் பொருளாதாரத்தை வெளியார் முதலீட்டிற்கு திறந்து விட்டதுடன், உள்நாட்டிலும் தொடர்ச்சியான "சந்தை சீர்திருத்தங்களை" ஏற்றலை சமிக்கை காட்டியது.

1992ல் 8,500 புதிய முதலீட்டு வலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. டெங்கின் பயணத்திற்கு முன் நூறு வலயங்கள்தான் இருந்தன.

கட்டுப்பாட்டு விதிகள் அகற்றப்பட்டதை அடுத்து, வெளி மூலதனம் 1992ல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்து $11 பில்லியன் ஆயிற்று. இது மீண்டும் மூன்று மடங்கு அதிகரித்து 1994ல் $34 பில்லியனாக ஆயிற்று. ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், 2004ல் அது இரு மடங்காகி ஆண்டுக்கு $61 பில்லியன் என்று ஆயிற்று. 2005ல் கிட்டத்தட்ட 50,000 அமெரிக்க நிறுவனங்கள் ஏதேனும் ஒரு விதத்தில் சீனாவுடன் வணிகம் செய்து வந்தன. 1978ல் இருந்து சீனப் பொருளாதாரம் ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட 9 சதவிகிதம் என்று வளர்ந்துள்ளது -- சில சமயம் 10 சதவீதத்திற்கும் அருகேயும் சில நேரம் அதையும் விட அதிகமாகவும் கடந்த 15 ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வருகிறது.

உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் தலையாய பேரளவு உற்பத்தி மையமாக சீனா எழுச்சி பெற்றுள்ளது. உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சீனாவின் பங்கு கடந்த கால் நூற்றாண்டில் விரைவான மூலதனக் குவிப்பின் விளைவாக 5 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. (Andrew Glyn, Capitalism Unleashed, Oxford University Press, 2006, p. 90).

கடந்த 25 ஆண்டுகளில் உலக பேரளவு உற்பத்தி ஏற்றுமதிகளில் சீன உற்பத்தி ஏற்றுமதி பத்து மடங்கு அதிகரித்துள்ளது. 1990ல் இருந்து சீன ஏற்றுமதியின் வளர்ச்சி முழுமையான அர்த்தத்தில் அதற்கு அடுத்த ஒன்பது குறை செலவின உற்பத்தி ஏற்றுமதியாளர்களும் சேர்ந்தால் எவ்வளவு இருக்குமோ அதை விட அதிகமாகிவிட்டது. சீன பேரளவு உற்பத்திகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி வெளிநாட்டு உடைமை ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன; இவற்றில் பெரும்பாலானவை ஜப்பான் நாட்டை சேர்ந்தவையாகும்; அதுதான் இயந்திரங்கள், உதிரி பாகங்கள் ஆகியவற்றை ஜப்பானில் இருந்து சீனாவிற்குள் இறக்குமதி செய்கிறது. (Glyn, pp. 90-91).

பத்து ஆண்டுகளில் 1997-98 ஆசிய நிதிய நெருக்கடியின் முக்கியமான விளைவு இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது. தென் கொரியாவை தவிர, ஆசியப் புலிகள் --உற்பத்தியானதில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் இழப்பை அனுபவித்த பின்னர்-- இப்பொழுது 1997க்கு முந்தைய ஆண்டுகளில் இருந்த அளவில் 2 சதவீத பெருக்கத்தை அது கொண்டுள்ளது. நெருக்கடிக்கு முன்பு புலிகள் குறை செலவின உற்பத்தியாளர்களாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் செயல்பட்டுவந்தனர். நெருக்கடிக்கு பின்னர் வேறுவிதக் கட்டமைப்பு வெளிப்பட்டுள்ளது. சீனா ஒரு முக்கியமான குறைந்த செலவின உற்பத்தியாளராக வெளிப்பட்டு பகுதிப் பொருட்கள், இடைப் பொருட்கள் ஆகியவற்வறை தென்கிழக்கு ஆசிய பகுதியில் இருந்து பெற்றும் வருகிறது.

முந்தைய கட்டமைப்பு பறக்கும் வாத்துக்கள் (flying geese) மாதிரி என்று சில சமயம் அழைக்கப்பட்டு; ஆசிய குறைந்த செலவின உற்பத்தியாளர்கள் ஜப்பானுக்கு பின் அணிவகுத்து நின்றனர். இந்தக் கட்டமைப்பு இன்று முற்றிலும் மாறிவிட்டது. சீனாதான் ஒரு பேருருக் கொண்ட உற்பத்தி மையமாக மாறியுள்ளது.

ஆசிய நெருக்கடியில் பல கூறுபாடுகள் உள்ளன. ஆனால் முக்கிய காரணங்களில் ஒன்று சீனா ஒரு குறைந்த செலவின உற்பத்தி நாடாக, ஆசியப் புலிகளையும் விடக் குறைவாக கொடுக்கும் வகையில் வெளிப்பட்டது ஆகும்; ஆசியப் புலிகளோ 1980 களில் இருந்து 1990 களின் நடுப்பகுதி வரை பெருகிய முறையில் வளர்ச்சியை அனுபவித்து வந்தன.

சீனாவில் பாரிய முதலீடு என்பது இப்பொழுது ஒரு பரந்த நிகழ்வுப்போக்கின் ஒரு பகுதியாகும். உலக வங்கியின் படி "ஒரு குறைந்த தரமான 1990ல் $22 பில்லியனில் இருந்து, வெளிநாட்டு நேரடி முதலீடு [Foreign Direct Investment -FDI] இப்பொழுது வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் ஆண்டு ஒன்றுக்கு $200 பில்லியன் என்று உயர்ந்துள்ளது; இது வளரும் நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.5 சதவிகிதமாகும். வளரும் நாடுகள் இப்பொழுது மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை ஈர்க்கின்றன."

உலக முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களை ஆவணப்படுத்தும் அனைத்து உண்மைகள் புள்ளி விவரங்கள் இவற்றிற்கு இடையே, மிகவும் கவனத்தை ஈர்ப்பதும், தொலை விளைவு உடையதும், சோசலிச முன்னோக்கை பொறுத்தவரையில், உலக தொழிலாளர் சக்தியின் வளர்ச்சி ஆகும். நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உலக உழைப்பு சந்தையில் நுழைந்துள்ளனர் என்பது ஒரு சகாப்தகால வளர்ச்சியாகும்.

இந்த மாற்றத்தின் அளவு பற்றி பலவித மதிப்பீடூகள் வந்துள்ளன. மத்திய ரிசேர்வ் வங்கிகளின் கூட்டமைப்புக்காக 2006 போஸ்டன் மாநாட்டிற்கு தயாரித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் ஒரு ஹார்வர்ட் தொழிலாளர் துறை பொருளாதார வல்லுனர் றிச்சர்ட் ப்ரீமான், சீனா, இந்தியா மற்றும் முன்னாள் சோவியத் முகாம் உலகச் சந்தையில் நுழைந்தது, சந்தைப் பொருளாதாரத்தில் இருக்கும் தொழிலாளர் சக்தியை 1.46 பில்லியனில் இருந்து 2.93 பில்லியனாக உயர்த்தியுள்ளது என்று மதிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உலக தொழிலாளர் சக்தியின் வளர்ச்சி பற்றிய தன் மதிப்பீட்டை "World Economic Outlook", மே 2007 பதிப்பில் வெளியிட்டது. உலகப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாடும் கொண்டிருக்கும் பங்கின் அடிப்படையில் தொழிலாளர் சக்தியை மதிப்பிடுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் விகிதாசாரத்தால் அளவிடுகையில் --சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது: "உண்மையான உலகத் தொழிலாளர் சக்தி கடந்த இரு தசாப்தங்களில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த உலகந்தழுவிய தொழிலாளர் சேர்மம் முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களால், முடிவுற்ற பொருட்கள் இறக்குமதி செய்தல், இடைப்பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படல், புலம்பெயர்தல் உள்பட பலவழிகளில் அணுகப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த அதிகரிப்பில் பெரும்பகுதி 1990க்கு பின்னர் நடந்ததாகும். கிழக்கு ஆசியா கிட்டத்தட்ட பாதிப் பகுதியை இந்த அதிகரிப்பிற்கு வழங்கியது; தெற்கு ஆசியா மற்றும் முன்னாள் சோவியத் முகாம் நாடுகள் குறைந்தளவில் இந்த அதிகரிப்பிற்கு காரணமாயின. உலகத் தொழிலாளர் அளிப்பில் முழுப் பெருக்கத்தில் அதிக பங்கு குறைந்த கல்வி உடைய தொழிலாளர்களால் ஏற்படுகிறது என்றாலும் அதிக கல்வி உடைய தொழிலாளர்களின் அளிப்பு என்பது கடந்த 25 ஆண்டுகளில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது; இது முன்னேற்றமடைந்துள்ள பொருளாதாரங்களில் மட்டுமல்லாது சீனாவிலும் அளிப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாக ஆகும்.

இந்த உலக தொழிலாளர் சக்தியின் கட்டமைப்பில் உள்ள பரந்த மாறுதல்கள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களின் ஊதியங்களில் பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது; அதேபோல் தேசிய வருமானம் சம்பளங்கள் மற்றும் இலாபங்கள் இவற்றிற்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னேறிய நாடுகளில் 1980ல் இருந்து தேசிய வருமானத்தில் தொழிலாளர் பிரிவின் பங்கு தெளிவாக குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. இந்த மாற்றம் கிட்டத்தட்ட 8 சதவீத புள்ளிகளாக இருக்கக் கூடும் என்று அது கூறுகிறது.

இந்த வரைபடத்தில் இப்பாதிப்பு நன்கு காணப்படலாம்.

போஸ்டன் மத்திய வங்கி மாநாட்டிற்கு கொடுத்த தன்னுடைய அறிக்கையில் றிச்சர்ட் ப்ரீமன் முடிவுரையாக கூறுகிறார்: "சீனா, இந்தியா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நாடுகள் வருகைதந்துள்ளதால் உலக மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான விகிதத்தை தொழிலாளர்களுக்கு எதிராக பாரியளவில் மாற்றியுள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உயர்கல்வி விரிவாக்கம் மிக உயர்ந்த கல்வி உடைய தொழிலாளர்களின் விநியோகத்தை அதிகரித்து, வெளிவந்திருக்கும் பெரியநாடுகளை முன்னேறிய நாடுகளுடன் போட்டியிடச் செய்துள்ளது; முன்னணி துறைகளில் கூட வடக்கு-தெற்கு மாதிரி தனது பிறப்புரிமையாக வடக்கிற்கு செயலாற்ற அமர்த்தப்பட்டிருக்கிறது. "

உலக தொழிலாளர் சக்தி இரு மடங்காக அதிகரித்தால் மூலதனத்திற்கும் தொழிலாளர் தொகுப்பிற்கும் இடையே உள்ள விகிதம் உலக பொருளாதாரத்தில் இருக்கும் விகிதம் 40 முதல் 50 சதவிகிதம் வரை குறையும் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார். வேறுவிதமாகக் கூறினால், தொழிலாளர் அளிப்பானது மூலதனத்துடன் ஒப்புமையில் அதிகமாகும்போது, அதன் விலை -- ஊதியங்கள் -- சரிந்தே தீரும்.

2006 ஜூலை மாதம் Economist சஞ்சிகை குறிப்பிட்டது: "கடந்த ஆண்டு, அமெரிக்காவில் வரிகளை செலுத்தியபின் கிடைத்த இலாபங்கள் 75 ஆண்டுகளில் இல்லாத அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தின் மிக உயர்ந்த எழுச்சியைக் கண்டன; யூரோ பகுதியிலும் ஜப்பானிலும் இலாபத்தின் பங்கு குறைந்தது 25 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்தன.... சீனா ஒரு உலகப் பொருளாதார சக்தியாக வெளிப்பட்டுள்ளமை தொழிலாளர் பகுதியை ஒப்புமையில் மிக அதிகரிக்க செய்துள்ளது; மூலதனத்தை ஒப்புமையில் அரிதாக்கியுள்ளது; அதனால் மூலதனத்தில் இருந்து கிடைக்கும் ஆதாயம் உயர்ந்துள்ளது."

பைனான்சியல் டைம்ஸ் அக்டோபர் 14, 2006 அன்று பிரிட்டிஷ் நிறுவனங்களில் இலாபங்கள் அவற்றின் மிக உயர்ந்த அளவை 2005ற்கு பின்னர் எட்டின; அதே நேரத்தில் பணவீக்கத்திற்காக கருத்திற்கொள்ளாத சராசரி வாராந்திர வருமானங்கள் 0.4 சதவீதம் குறைந்தது.

"இதே நிகழ்வுதான் மேற்கில் இருக்கும் எல்லா வசதிபடைத்த நாடுகளிலும் உள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தை பற்றிய சமீபத்திய ஆய்வுக்குறிப்பு ஒன்றில் அமெரிக்க முதலீட்டு வங்கியின் Goldman Sachs கூறுவதாவது: "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்கு என்ற முறையில், இலாபங்கள் எப்பொழுதும் இல்லாத அளவு உயர்ந்த நிலைக்கு 2006 முதல் காலாண்டில் வந்தன. பல காரணிகள் இந்த இலாப உயர்வு ஏற்றத்திற்கு காரணமாயின. மிக முக்கியமானது தேசிய வருமானத்தில் தொழிலாளர் பிரிவின் பங்கில் ஏற்பட்ட சரிவு ஆகும்."

இந்த அறிக்கை Stephen King, Janet Henry என்னும் HSBC Global Research இல் உள்ள பொருளாதார வல்லுனர்களின் அப்பட்டமான கருத்தையும் மேற்கோளிட்டுள்ளது: பூகோளமயமாக்கல் என்பது மேலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிச் சந்தைகள் அதிக எண்ணிக்கையில் பெருகுவது மட்டும் அல்ல. மாறாக இது வருமான மறுபகிர்வில் ஏற்பட்டுள்ள மகத்தான அலைகளாகும்; பணக்கார தொழிலாளர்களிடம் இருந்து ஏழைத் தொழிலாளருக்கு செல்லுவது; தொழிலாளர் ஒட்டுமொத்தத்தில் இருந்து மூலதனத்திற்கு செல்லுவது; தொழிலாளர்களிடத்தில் இருந்து நுகர்வோருக்கு செல்லுவது; எரிசக்தி பயன்படுத்துவோரிடம் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்பவர்களுக்கு என. இது ஒன்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுக் கதை அல்ல, மாறாக வெற்றி அடைபவர்கள், தோல்வி அடைபவர்கள் பற்றிய கதையாகும்."

ஆனால் ஊதியங்களின் பங்கில் ஏற்பட்டுள்ள சரிவு ஒன்று மட்டுமே இலாபங்கள் உயர்வதற்கான வழிவகை அல்ல. உலகப் பொருளாதாரச் சந்தையில் சீனா நுழைந்துள்ளது, நுகர்வுபொருட்களின் மலிவானதன்மையை விளைவித்துள்ளது மட்டுமில்லாமல், தொழில்துறை சாதனங்களின் அடக்கவிலைகளிலும் குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மார்க்சிச அரசியல் பொருளாதார வகையினங்களின் அர்த்தத்தில், உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைக்கப்பட்டதால், சுரண்டல் வீதம் அதிகரித்துள்ளது என்பது மட்டும் இல்லாமல், மாறா மூலதனம் மலிவாக இருப்பதன் காரணமாக மூலதன சேர்க்கை சரிவிற்கு உட்பட்டுள்ளது; இதன்மூலம் ஒட்டு மொத்த முதலாளித்துவ பொருளாதாரத்திலும் சராசரி இலாப வீதத்தை உயர்த்தும் போக்கு உருவாகியுள்ளது.

எமது முன்னோக்கின் அபிவிருத்திக்கான இந்த ஆய்வின் உட்குறிப்புக்கள் என்ன?

முதலாளித்துவ வளர்ச்சியின் வளைகோட்டில் 1992ல் இருந்து இருக்கும் மேல்நோக்கிய போக்கு சோசலிசப் புரட்சியை நிகழ்ச்சி நிரலிலில் நிரந்தரமாக இல்லாவிடினும் கண்காணமுடியாத எதிர்காலம்வரை ஒத்திப் போட்டுவிட்டது என்ற பொருளை தருகிறதா?

அல்லது, மறு பக்கத்தில், இந்த வளைகோட்டின் ஏற்றம் புதிய அரசியல் எழுச்சிகள், புரட்சிகர போராட்டங்களுக்கான காலகட்டத்திற்கான புறநிலை அடித்தளங்களை இடும் புதிய பதட்டங்களையும் முரண்பாடுகளையும் உலக முதலாளித்துவ அமைப்பில் அறிமுகப்படுத்துவதை காட்டுகிறதா?

இந்த வினாவிற்கான நமது ஆய்வை முதலாளித்துவ வளர்ச்சியின் வளைகோட்டில் உள்ள மேல்நோக்கிய போக்கு சமூகப் புரட்சியை நிராகரிக்கவில்லை என்பதை முதலில் அறிந்து கொள்ளுவோம். மாறாக 1914ம் ஆண்டு முதலாம் உலகப் போர் மற்றும் 1917 ம் ஆண்டு ரஷ்ய புரட்சி ஆகியவை 1890 களின் நடுப்பகுதியில் தோன்றிய முதலாளித்துவ வளைகோட்டின் மேல்நோக்கிய போக்கின் முடிவுக்காலத்தில் வந்தன. அந்த நிகழ்வுப்போக்குகளின் ஆரம்பத்தில் எடுவார்ட் பேர்ன்ஸ்டைன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களை குறிப்பிட்டு புரட்சி என்பது சாத்தியமான முன்னோக்கு அல்ல என்றும் சோசலிசம் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மூலம்தான் வரும் என்றும் முடிவிற்கு வந்திருந்தார். அந்த முன்னோக்கு எவ்வளவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டது?

அதேபோல், வேறுபட்ட தலைமையின்கீழ் கிட்டத்தட்ட உறுதியாக சமூகப் புரட்சியை நோக்கி இட்டுச்சென்றிருக்க வேண்டிய 1968-75 காலத்திய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி, உலக முதலாளித்துவ வரலாற்றில் நீண்ட மேல்நோக்கிய போக்கிற்கு பின்னர்தான் வந்தது. நாம் முன்பு பார்த்தபடி, மார்க்கூஸ் போன்ற புதிய இடதின் (New Left) தத்துவவியலாளர்கள் தொழிலாள வர்க்கம் முற்றிலும் முதலாளித்துவ ஒழுங்குடன் இணைக்கப்பட்டுவிட்டனர், குறைந்த பட்சம் முன்னேற்றமடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளிலேனும் இந்த நிலை உள்ளது, ஒரு புரட்சிகர பங்கை அது இனி ஆற்றுவதற்கு இயலாது என்று கூறிய நேரத்தில்தான் அது வெடித்தது. அந்த முன்னோக்கும் முற்றிலும் திவால்தன்மை படைத்தது என்பது நிரூபிக்கப்பட்டது.

இப்படிக் கூறப்பட்டாலும், எமது பணி இங்கு சொற்ஜாலம் செய்வதோ அல்லது பிறர் ஒரு எதிர்மறை இடும் இடத்தில் நேரியம் இடுவது என்று இல்லாமல், நடந்துள்ள மாறுதல்கள் நிகழ்வு பற்றி நிதானமான மதிப்பீட்டை மேற்கொண்டு அவற்றின் உட்குறிப்புக்களை ஆராய்ந்து அவை அளிக்கக்கூடிய அரசியல் வளர்ச்சிகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்பதாகும்.

சோசலிசத்திற்கான போராட்டம் பற்றிய வாய்ப்புக்களை பற்றி ஆய்வதற்கு நாம் முன்பு ட்ரொட்ஸ்கி முதலாளித்துவ சமநிலை பற்றிக் குறிப்பிட்டதை ஆராய வேண்டும். முதலாளித்துவம் ஒரு சமநிலையை தோற்றுவிக்கிறது, அதை குழப்புகின்றது பின்னர் இதை மீண்டும் குழப்புவதற்காக புதுப்பிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதில் மூன்று முக்கிய கூறுபாடுகள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்: பொருளாதார வழிவகைகள், வர்க்க உறவுகள், முதலாளித்துவ நாடுகளுக்குள் இருக்கும் உறவுகள் என்பவை அவை. இவை ஒவ்வொன்றையும் வரிசையாக நாம் ஆராயவோம், நம் ஆய்விற்காக தேவைக்காக அதை இங்கு பிரித்துப்பார்ப்போம். ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று எதிர்வினை புரிந்தும் ஒன்றன் மீது ஒன்று பாதிப்பை ஏற்படுத்தியும் செயல்பட்டு வருபவை என்று நினைவிற் கொள்ளுவோம்.

பொருளாதாரத்துறையில், கடந்த 15 ஆண்டுகளாக நடக்கும் விரிவாக்கம் முற்றிலும் உறுதியற்ற நிலை ஒன்றை தோற்றுவித்துள்ளது என்பது தெளிவு. உறுதியற்ற அஸ்திவாரங்களில் இருந்தபோதிலும், சீன விஷயத்தில் போல் ஒரு சில பிராந்தியங்களில், மிக முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார கட்டுமானத்தில் நீண்டகால விளைவுகளை கொடுக்கக்கூடிய மாறுதல்களும் பிணைந்திருந்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தியது.

இன்னும் மிகச் சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடாக இருக்கும் அமெரிக்கா, மிகப் பெரிய ஒற்றை சந்தை உடைய நாடு மிகமிக அதிக அளவிலான செலுத்துமதி நிலுவை பற்றாக்குறையை கொண்ட நிலையில் உள்ளது; அதையொட்டி உலகின் மற்ற பகுதிகளில் சேமிக்கப்படும் பணத்தில் 75 சதவீதம் இதை காப்பதற்காக உள்ளேவரவேண்டிய நிலைமை இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக, 1987 பங்குச் சந்தை பொறிவையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 20 ஆண்டுகளாக, அமெரிக்க பொருளாதாரம் ஒரு தொடர்ச்சியான சொத்துக் குமிழிகளை தோற்றுவிப்பதின் மூலம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இது இப்பொழுது நிதிய முறையின் உறுதித்தன்மைக்கு தொடர்ச்சியாக ஆபத்தான அச்சுறுத்தல்களை கொடுக்கும் கட்டத்தை அடைந்துள்ளது.

1980 களில் ஆரம்பித்த மறுகட்டமைப்பு, 1990 களில் தொடங்கி இன்று வரை வளர்ந்துள்ள பூகோளமயமாக்கல் நிகழ்வுப்போக்கினால் விரைவாக்கப்பட்டு அமெரிக்க முதலாளித்துவத்தின் சாமுத்திரிகா லட்சணத்தையே (physiognomy) மாற்றியுள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற அமெரிக்க முதலாளித்துவம், எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் உற்பத்தித் தொழில்துறையின் மேலாதிக்கத்துடன் இணைந்திருந்தது. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், உற்பத்தித் துறையின் 14.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க பொருளாதாரத்தில் 20 சதவீதத்தை நிதிய, காப்பீடு மற்றும் நிலம் வீட்டுமனை விற்பனை துறை (FIRE) உள்ளடக்கியிருந்தது.

American Theocracy என்னும் தன்னுடைய புத்தகத்தில் Kevin Philips எழுதுகிறார்: "நிதியப் பிரிவு இலாபங்கள் 1990 களின் நடுப்பகுதியில் உற்பத்தி துறை பிரிவில் இலாபங்களைவிட அதிகமாகி, அதன் பின் இன்னமும் மேல்நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. 2004 அளவில் நிதிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட அமெரிக்க இலாபங்களின் அனைத்து பிரிவிலும் 40 சதவீதத்தை தாம் பெற்றுவிட்டதாக பெருமையுடன் கூறின. நிதியப் பிரிவு அமெரிக்க பங்குச் சந்தையில் கால் பகுதிக்கும் மேலாக தன்னுடைய மேலாதிக்கத்தைக் கொண்டிருந்தது; இது 1980ல் இருந்து 6 சதவீதம், 1990களில் 11 சதவீதத்தில் இருந்து உயர்வு பெற்து ஆகும். வரலாற்று ரீதியாக இந்த மாற்றம் இரயில் பாதைகள், இரும்பு, எஃகுப் பொருட்கள் தோற்றம் மற்றும் உள்நாட்டுப் போர் தசாப்தங்களுக்கு பின்னர் வேளாண்மை முதலிடத்தில் இருந்து அகற்றப்பட்டது ஆகியவை போல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். (Kevin Phillips, American Theocracy, Penguin, 2006, pp. 265-266).

அமெரிக்க பொருளாதாரத்தின் இந்த மகத்தான மாறுதல்கள் உற்பத்தித் துறைக்கு எதிராக நிதியத் துறையின் மேலாதிக்கம் என்ற பொருளை தந்துவிடவில்லை; ஆனால் இதில் அமெரிக்க நிதிய அமைப்புமுறை இயங்கிவந்த வழிகளில் ஆழ்ந்த மாறுதல்கள் தொடர்புபட்டுள்ளன.

போருக்குப் பிந்தைய செழுமைக்காலத்தில் அமெரிக்காவில் நிதி மூலதனம் தொழில்துறை மற்றும் பிற வகைகளான வணிக வங்கிகள், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றிற்கு 3-6-3 மாதிரியின் (3-6-3 Model) மூலம் அளித்து இலாபத்தை ஈட்டி வந்தது. அதாவது, தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரிமதிப்பு கறந்தெடுக்கப்படுவதற்கும் அதன் ஒரு பகுதி நிதி மூலதனத்தால் அபகரிக்கப்படுவதற்கும் இடையே ஒரு நேரடியான உறவு இருந்தது. இப்பொழுது அங்கு வேறுவிதமான இயங்குமுறை இடம்பெற்றுள்ளது. நிதி மூலதனத்தின் இலாபங்கள் நேரடியாக உபரிமதிப்பை அபகரிப்பதில் அதிகம் சம்பந்தப்படாமல், சொத்துக்களின் மதிப்புக்களில் ஏற்படும் மாற்றங்களின் மூலம், அதாவது நிதிய சந்தை நடவடிக்கைகளால் திரட்டப்படுகிறது.

இந்த மாறுதலை எது கொண்டு வந்தது? சுருக்கமாகக் கூறினால், 1970 களின் இலாபவிகிதத்தின் கீழ்நோக்குச்சரிவு மற்றும் 1980 களில் இலாபவிகிதம் இழப்பிலிருந்து போதுமானளவு மீட்சி அடைவதில் பெற்ற தோல்வி ஆகியவைதான் காரணங்கள். வேறுவிதமாக கூறினால், முதலாளித்துவ வளைகோட்டின் கீழ்நோக்கிய சரிவு தொழில்துறை கட்டமைப்பில் மாற்றங்களை மட்டுமல்லாது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தாக்குதலைக் கொண்டுவந்ததுடன், நிதி மூலதனம் மீள்கட்டமைக்கப்பட்டதையும் காட்டியது.

ஒரு சமீபத்திய ஆய்வு இந்த நிகழ்போக்கினை கீழ்க்கண்ட விதத்தில் கோடிட்டுக் காட்டுகிறது.

"1980களின் அமெரிக்காவில் வணிக வங்கிகளின் வருமானம் குறைந்ததை அடுத்து, வங்கிகள் வைப்புத்தொகை எடுத்தல் மற்றும் குறுகிய காலக் கடன் கொடுத்தல் ஆகியவற்றின்மீது இருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பரந்த வகையில் மூலதனச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக முன்பு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்த சேய்நிறுவனங்களை தோற்றுவிக்க அனுமதி கொடுக்கப்பட்டது."

1933ம் ஆண்டு Glass-Steagall சட்டத்தின் 20 வது பிரிவு அத்தகைய ஈடுபாட்டை தடுத்திருந்தது என்றும் 1980கள் முழுவதும் அந்த விதிகள் தளர்த்தப்பட்டன என்றும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

"இவ்விதத்தில் 1980 களில் நிலம் வீட்டுமனை விற்பனை நெருக்கடியில் இருந்து வெளிப்பட்ட வங்கி முறை வணிகக் கடன்கள் கொடுப்பதில் முக்கியமாக இனியும் செயல்படவில்லை, நிகர வட்டி விகித இலாபங்களை மட்டும் தன்னுடைய வருவாய்க்கு நம்பியிருக்கவில்லை. மாறாக, இந்த முறை வங்கிகளின் முதலாளித்துவ வணிக மேசைகளில் இருந்து இலாபங்களை உற்பத்திசெய்யும் திறனை அடிப்படையாக கொண்டது...அதனுடன் இணைந்திருந்தவை கட்டணம் மற்றும் தரகு வருமானத்தை பெறுவதை நம்பியிருக்க தொடங்கின.

"இந்த முறை புதிய வங்கி நடைமுறைகள் இப்பொழுது "தோற்றுவித்து பகிர்தல்" (Originate and Distribute) எனக் கூறப்படும் புது வழிவகைகளை ஏற்படுத்தின; இதில் வங்கிகள் தங்கள் கட்டணங்கள் மற்றும் சொத்துக்களை ஏற்படுத்துவதில் கிடைக்கும் தரகு வருமானம் ஆகியவற்றை அதிகரிக்க முற்படுவதுடன், இருப்பு நிலைக் குறிப்பில் இல்லாத சேய் நிறுவனங்களின் சொத்துக்களை நிர்வகித்தல், இச் சொத்துக்களுடன் பிணையுறுதி கொடுக்கப்படும் பத்திரங்களை முதலில் விநியோகித்தலுக்கு ஒப்புறுதி செய்தல் மற்றும் அவற்றைப் பராமரித்தல் ஆகியனவற்றைச் செய்தன."(Jan Kregel Minsky, "Cushions of Safety," Levy Institute Public Policy Brief No. 93, 2008, pp. 10-11).

இந்த முன்மாதிரியில், ஒரு வங்கி தானே தோற்றுவித்த சொத்தை விற்பதில் இருந்து வரும் இலாபத்தையும் ஈட்டியது; தனது வருமானத்தை தன்னால் வழங்கப்பட்ட கடன்களின் இருந்து வரும் வட்டி வருமானத்திற்கும் தான் எடுத்த கடனுக்கு கொடுக்கும் வட்டி விகித வேறுபாட்டில் வரும் இலாபங்களை பெறுதில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்று ஆயிற்று.

"தோற்றுவித்து பகிர்தல்" என்ற முறையில், கொடுக்கும் பணத்தின் அளவு கடன்களை பகிர்ந்து கொடுக்கும் திறனை ஒட்டி நிர்ணயிக்கப்படுகிறது; அதாவது நிதியச் சந்தைகளில் பாதுகாப்பு இருக்கும் கடன்களுக்கு இருக்கும் தேவையை பொறுத்து இருக்கும். குறைந்த வட்டிகள் விகிதங்களுக்கான தேவைகள் அதிகரித்தே இருந்த நிலையில், நிதியச் சந்தைகளில் இருந்து புதிய ஆனால் ஆபத்து கூடுதலான கடன்களை வழங்குமாறு அழுத்தம் பெருகியது.

குறைந்த வட்டிவிகித அமைப்பு இத்தகைய நிகழ்வுப்போக்கிற்கு மிகவும் முக்கியமாகும்; பதிலாக இந்த நிகழ்வுப்போக்கு கடன் விரிவாக்கப்பட்ட நிலையானாலும் குறைந்த பணவீக்கம் தொடர்ந்து இருப்பதை நம்பியிருந்தது. இது சீனா, இந்திய மற்றும் முன்னாள் ஸ்ராலினிச ஆட்சிகள் உலகச் சந்தையில் இணைந்ததின் விளைவினால் தொடர முடிந்தது.

இப்பொழுது குறைந்த பணவீக்க அமைப்புமுறையும் முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதற்கான தெளிவான அடையாளங்கள் வந்து கொண்டிருக்கின்றன; இது பொருளாதாரக் கொள்கைகளின் நிர்வாகத்திற்கு பெரிய பிரச்சினைகளை கொடுக்கிறது.

முன்னாள் மத்திய வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவர் அலன் கிரீன்ஸ்பானின் விருப்பமான முறை, பொருளாதார பின்னடைவுப் போக்குகள் மற்றும் நிதிய நெருக்கடிகளின் விளைவுகளில் இருந்து விளையும் நிலைப்பாட்டை எதிர்நோக்க வட்டி விகிதத்தை குறைத்து நிதியச் சந்தைகளுக்கு ஊக்கம் கொடுப்பது ஆகும். ஆனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது இப்பொழுது பெரிய பிரச்சினைகளை கொடுக்கிறது.

ஒருபுறம், மத்திய ரிசேர்வ் வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவர் பெர்னன்கே தன்னுடைய ஜனவரி 10 உரையில் குறிப்பிட்டுள்ளபடி, மத்திய வங்கிகளின் கூட்டமைப்பு மந்தநிலையை எதிர்கொள்ளுவதற்கு தேவையானவற்றை செய்யத் தயாராக இருக்கிறது. ஆனால் மறுபுறம், பணவீக்கங்களில் அழுத்தங்கள் பெருகிக் கொண்டு இருப்பதுடன், "பணவீக்க எதிர்பார்ப்புக்கள் பற்றிய எவ்வித போக்குகளும் களையப்படவேண்டும்". இது "விலை ஸ்திரத்தை உறுதிப்படுத்த மற்றும் வருங்காலத்தில் வளர்ச்சியில் குறைபாடு இருப்பதை எதிர்ப்பதற்கான மத்திய வங்கியின் கொள்கையில் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவற்றை பெரிதும் பிரச்சினையாக ஆக்கக்கூடும்."

இது ஒரு குறுகிய காலப் பிரச்சினை அல்ல. தன்னுடைய சமீபத்திய வாழ்க்கை நூலில், க்ரீன்ஸ்பான் தன்னுடைய பதவிக்காலத்தில் பெரிதும் அதிருஷ்டம் கொண்டிருந்ததாகவும் அதற்குக் காரணம் உலகச் சந்தையில் சீனா இணைக்கப்பட்டதால் பணவீக்கக் குறைவின் பாதிப்பு இல்லாதிருந்ததாக கூறியுள்ளார்; இதன் பொருள் வட்டி வெட்டுக்களால் ஏற்படும் பணவீக்கப் பாதிப்பு பற்றித் தான் கவலைப்பட வேண்டிய தேவை இல்லாமல் போயிற்று என்கிறார். ஆனால் பிந்தைய பேட்டிகளில் தனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு அதிருஷ்டம் பெற்றிருக்க முடியாது என்றும் அதற்குக் காரணம் செலவினம் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் தவிர்க்க முடியாமல் எழுச்சி பெறும் என்றும் கூறினார்.

பொருளாதார நிலையில், கடந்த காலத்தில் இருந்து ஒப்புமை வகையிலான சமநிலையை முறிப்பதை நோக்கி செல்வதை முக்கிய காரணிகள் காட்டுகின்றன என்பது தெளிவாகும். நிதியக் கொள்கைக்கு பொறுப்பு கொண்டிருப்பவர்களை எதிர்கொள்ளும் முரண்பாடுகள் தொழிலாளர், மூலதனச் செலவினங்களை கடந்த 15 ஆண்டுகளாக குறைத்து இலாப விகிதத்தை உயர்த்துதல் என்பது குறைந்து வருகிறது என்றும் முதலாளித்துவத்தின் மேல்நோக்கிய ஏற்ற நிலை முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதற்கும் அடையாளம் ஆகும்.

இரண்டாவது முக்கிய பிரச்சினை முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே இருக்கும் உறவுகள் பற்றியதாகும். உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் இருக்கும் மேல்நோக்கிய ஏற்ற நிலை 2000த்தில் இருந்து ஒரு பெருகிய ஊக்கத்தை கொண்டிருந்தது; ஆனால் அது மிகவும் உறுதியற்ற வழிவகை என்று நிரூபணம் ஆகியுள்ளது.

சீனாவின் எழுச்சி மற்றும் ரஷ்யா போன்ற மற்ற சக்திகளின் எழுச்சி, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த பழைய சமநிலையை குழப்பத்திற்குள்ளாக்குகின்றன. முன்பு ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை எழுச்சியுற்ற 19ம் நூற்றாண்டுக் கடைசியில் அதற்கு முன்பு பெரிய பிரித்தானியாவும் அதன் பேரரசும் நிறுவியிருந்த சமநிலையை குழப்பியது போல்தான் இதுவும். அதன் விளைவு மூன்று தசாப்தங்கள் போர் நடைபெற்ற பின்னர்தான் வந்தது. ஒரு புதிய, நாடுகளுக்கு இடையேயான சமநிலை இறுதியில் 1945ல் அமெரிக்காவின் தலைமையில் நிறுவப்பட்டது. அது அமெரிக்க இராணுவ வலிமையின் அடிப்படையினால் மட்டும் நிறுவப்படாமல் அதன் பொருளாதார மேலாண்மையினாலும்தான் நிறுவப்பட்டது. இப்பொழுது அந்த பொருளாதாரத் தலைமை நிலை அரிக்கப்பட்டுள்ளது. ஒரு வியப்பூட்டும் புள்ளிவிவரம் சுருக்கிக் கூறுகிறது: 1940ல் உலக பொருளாதாரத்தில் கொண்டிருந்த அதே விகிதத்தைத்தான் அமெரிக்கப் பொருளாதாரம் இப்போதும் கொண்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பொழுது தன்னுடைய பொருளாதார மேலாதிக்க இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் உலகம் முழுவதும் இராணுவ வழிவகைகளின் மூலம் தன் நிலைப்பாட்டை தக்க வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளது. இதுதான் அமெரிக்க இராணுவவாத வெடிப்பின் முக்கியத்துவம்; ஈராக் போர் இந்த உலகப் பூசலின் மிகக் கடுமையான குருதி கொட்டும் முன்னணி அடையாளம்தான். ஆர்க்டிக்கில் இருந்து மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, பால்கன்கள் என்று இரு அல்லது கூடுதலான முதலாளித்துவ சக்திகளின் நலன்கள் மோத இருக்கும் நிலையில் வெடிப்புத் திறன்களின் தொடர்ச்சி கூடுதலாக வரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை மறு பரிசீலனை செய்கையில் Pax Americana அமெரிக்க அமைதி (Pax Americana) என்பது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நிறுவப்பட்டமை, மூன்று தசாப்தங்கள் கொந்தளிப்பிற்கு பின்னர் உலகை ஸ்திரப்படுத்துவதில் முடிவெடுக்கும் முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. இப்பொழுது அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு பழைய சக்திகள் மற்றும் புதியவற்றில் இருந்து அது எதிர்கொள்ளும் போட்டியின் விளைவாக வெளிப்படும்போது, சர்வதேச உறவுகளில் அது மிகவும் வெடிப்புத் தன்மை உடையதாக அமைந்துள்ளது.

உலக பொருளாதாரத்தின் பொருளாதாரக் கட்டமைப்பில் மிகப் பெரிய மாற்றம் வந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு G7 பொருளாதாரங்கள் உலகப் பொருளாதார நடவடிக்கையில் (பெயரளவு முறைகளில்) கிட்டத்தட்ட 70 சதவீதத்தை கொண்டிருந்தன. இப்பொழுது அவை 62 சதவீதத்தை பொருளாதார நடவடிக்கையில் கொண்டிருக்கின்றன; அதில் வாங்கும் சக்தியின் ஒப்புமை (PPP- Purchasing power parity) 43 சதவீதத்தைத்தான் கொண்டிருக்கின்றன.

இப்பொழுது நாம் வர்க்க சமநிலைப் பிரச்சினையை ஆராய்வோம்.

அனைத்து முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ பொருளாதார நாடுகளிலும் சமூக வாழ்வின் மிக முக்கியமான தன்மை சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி என்று உள்ளது. அமெரிக்காவின் புள்ளிவிவரங்கள் மிகத் தெளிவாக இதைக் காட்டுகின்றன; ஆனால் அங்கு மட்டும் இது விதிவிலக்காக இல்லை. அவை ஒரு பொதுவான நிகழ்போக்காகத்தான் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சி இணைப்புக் கூட்டத்தில் தன்னுடைய அறிக்கையில் டேவிட் நோர்த் கூறினார்: "Levy Economics Institute of Bard College ஐச் சேர்ந்த Edward N. Wolff நடத்திய சமீபத்திய ஆய்வுகள் அமெரிக்காவில் இருக்கும் சமூக சமத்துவமின்மையின் மிகத் தீவிர அளவுகளை ஆவணமிட்டுள்ளன. செல்வம், வருமானம் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது பற்றிய புள்ளி விவரங்கள் அசாதாரண முறையில் சமூகம் பல கூறுகளாக சிதறுண்டு நிற்பதைக் காட்டுகின்றன. மக்கட்தொகையில் உயர்மட்ட 1 சதவீதம் அமெரிக்க இல்லங்களின் நிகர மதிப்பில் 34.3 சதவீதத்தை பெற்றுள்ளன. அதற்கு அடுத்த 4 சதவீதம் 24.6 சதவீத நிகர மதிப்பையும், அதற்கும் அடுத்த 5 ஐந்து சதவீதம் 12.3 சதவீதத்தையும் கொண்டுள்ளன. மொத்தத்தில் மக்களின் செல்வம் கொழிக்கும் 10 சதவீதத்தினர் நாட்டின் சொத்துக்களில் 71 சதவீத செல்வத்தை கொண்டுள்ளனர். அதற்கு அடுத்த சதவீதம் 13.4 சதவீத சொத்தை கொண்டுள்ளது. அடிமட்ட 80 சதவீதம் 13.5 சதவீதச் செல்வத்தைத்தான் கொண்டுள்ளது. 60ல் இருந்து 40 சதவீதப் பிரிவில் உள்ளவர்கள் 3.8 சதவீத நிகர இருப்புக்களை கொண்டுள்ளனர். கீழ்மட்ட 40 சதவீதத்தினர் மொத்த இருப்பில் 0.2 செல்வத்தைத்தான் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

"வீடுகள் அற்ற செல்வத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், பிளவுகள் இன்னும் கூடுதலாக இருக்கின்றன. உயர்மட்ட 1 சதவீதத்தினர் 42.2 வீத வீடுகளற்ற செல்வக் குவிப்பை கொண்டுள்ளனர். முதல் 10 சதவீதத்தினர் 80 க்கும் குறைவான வீடுகளற்ற செல்வத்தை கொண்டுள்ளனர். கீழிருக்கும் 80 சதவீதம் 7.5 வீடுகளற்ற செல்வத்தை பெற்றுள்ளது. மிக வறிய 40 சதவீதத்தினர் -1.1 சதவீத வீடுகளற்ற செல்வத்தை பெற்றுள்ளனர்.

"வருமானத்தை அளவு கோலாகக் கொண்டால், உயர்மட்ட 1 சதவீதம் மொத்தத்தில் 20 சதவீதத்தை கொண்டிருக்கிறது. உயர்மட்ட 10 சதவீதம் மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை பெற்றுள்ளது. கீழேயுள்ள 80 சதவீதம் 41.4 சதவீதத்தை கொண்டுள்ளது. மிக வறிய 40 சதவீதம் வருமானத்தைத்தான் கொண்டுள்ளது."

இந்த ஆய்வில் இருந்து கிடைக்கும் மற்ற புள்ளிவிவரங்களும் இந்த வழிவகைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்நூற்றாண்டின் முதல் ஆண்டுகள் வீட்டுக் கடனில் ஒரு வெடிப்பைக் கண்டுள்ளன. சராசரி சொத்து --அதாவது நடுத்தர குடும்பங்களின் சொத்து மதிப்பு -- 2001லிருந்து 2004 வரையிலான காலத்தில் 0.7 சதவீதம் சரிந்தது. இதற்கு முன்பு இப்படி நடந்தது ஒரு பொருளாதாரப் பின்னடைவுக் காலத்தில்தான். சராசரி வீடுகள் இல்லாத சொத்து (மொத்த சொத்தில் இருந்து வீடுகளின் உரிமை முதலைக் கழிக்க) 2001ல் இருந்து 2004 வரையிலான காலத்தில் 27 சதவீதம் குறைந்தது. சராசரி வருமானம் 2000த்தில் இருந்து 2003 வரை கிட்டத்தட்ட 7 சதவீதம் குறைந்தது.

ஒரு பரந்த கண்ணோட்டத்தில் மிக ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் சராசரி சொத்து 1983ல் இருந்து 2004க்குள் 59 சதவீதம் குறைந்தது எனலாம். இதே காலத்தில் மிக உயர்மட்ட 1 சதவீதம் நிகர மதிப்பில் மொத்த வளர்ச்சியின் 35 சதவீதத்தை பெற்றது; 42 சதவீதம் வீடுகளற்ற செல்வத்தின் மொத்த வளர்ச்சியில் பெற்றது; வருமானங்கள் மொத்தம் பெருகியதில் 33 சதவீதம் பெற்றது. நடுத்தர ஐந்தில் மூன்று பங்கு பிரிவினரின் கடன்-வருமானம் விகிதம் அதிகரித்துள்ளது. இது 100.3 முதல் 141.2 சதவீதம் என்று 2001ல் இருந்து 2004க்குகள் போனதுடன் கடன் மூலதனத்திற்கும் உரிமை மூலதனத்திற்கும் இடையிலான விகிதம் 31.7ல் இருந்து 61.6 சதவீதமாக இரு மடங்காக ஆயிற்று.

அமெரிக்க பொருளாதாரத்தின் நிதியமயமாக்கல் (இந்த வழிவகைதான் மற்ற முக்கிய முதலாளித்துவ நாடுகளில் ஏற்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது) தான் செல்வம் உயர்வருமானம் பெறுவோருக்கு மாற்றப்படும் மத்திய கருவியாக இருக்கிறது. அது குறைந்த வட்டிவிகிதத்தை அடிப்படையாகக் கொண்டு கடன்களின் பெருக்கத்திலும் தங்கியுள்ளது. இவை சொத்து மதிப்புக்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்துள்ளதுடன் நிதி பரிமாற்றங்கள் மூலம் பரந்த இலாபங்களை குவிப்பதற்கும் வகை செய்துள்ளது. இந்த குறைந்த வட்டி விகிதங்கள் சீனா மற்றும் குறைந்த செலவு உற்பத்தியாளர்கள் உலக முதலாளித்துவ சந்தையில் இணைந்ததால் ஏற்பட்ட பணச்சுருக்க பாதிப்பினால்தான் நிலைத்துள்ளன.

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சிக்கும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் அமெரிக்காவின் தலைமையின் கீழ் சுதந்திர சந்தையின் ("தடையற்ற சந்தையின்") ஆதிக்கம் விரிவாக்கப்படுவதால் ஏற்படும் பொருள்சார் நலன்களுடன் தொடர்பு உடைய ஒரு சமூகத்தட்டின் உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பை இது தெளிவாக காட்டுகின்றது.

மக்கட் படுகொலைக்கு பின்னர்: பால்கன் யுத்தங்களின் அரசியல் படிப்பினைகள் என்னும் கட்டுரையில் டேவிட் நோர்த் கோடிட்டுக் காட்டியுள்ளபடி, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஒரு தட்டு ஏகாதிபத்தியத்தினதும் இராணுவவாதத்தினதும் வெடிப்பினால் நேரடியாக நலன்களை பெற்றுள்ளது. இந்த சமூகதட்டு புஷ் நிர்வாகத்தின் ஒரு விளைவு அல்ல. அதனது மூலங்கள் இன்னும் பின்னே செல்கின்றன.

ஏப்ரல் 1999 க்கு சற்று முன்பு சேர்பியா மீதான குண்டுவீச்சுக்கு சற்றுமுன் அமெரிக்க இராணுவவாதத்தின் பொருளாதார அஸ்திவாரங்கள் பற்றி கிளின்டன் சுட்டிக் காட்டினார். "உலகம் முழுவதும் நாம் விற்க வேண்டிய திறனை உள்ளடக்கியுள்ள வலுவான பொருளாதார உறவுகளை கொள்ள வேண்டும் என்றால், ஐரோப்பா ஒரு திறவு கோலாக இருக்கும்.... இதுதான் கொசோவோ பற்றிய முக்கிய கருத்து ஆகும்." என்றார் அவர்.

நியூ யோர்க் டைம்சின் வெளிவிவகாரங்கள் நிருபரான Thomas Friedman இதை சற்று நயமற்ற வகையில் கூறினார்: "சந்தையின் மறைந்திருக்கும் கை, மறைந்திருக்கும் முஸ்டி இல்லாமல் ஒரு பொழுதும் செயல்படாது -- மக்டோனால்டின் கடைகள் McDonnell Douglas என்னும் F-15 கட்டமைப்பவர் செயல்பட்டிருக்காவிட்டால் செழித்திருக்க முடியாது. அந்த மறைந்த முஸ்டிதான் உலகிற்கு சிலிகான் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்கான பெயர்தான் அமெரிக்க தரைப்படை, விமானப் படை, கடற்படை, சிறப்பு கடற்படைப் பிரிவு ஆகியவை ஆகும்.... அமெரிக்கர்கள் தமது கடைமையை செய்யாவிட்டால் America Online இருக்கமுடியாது." (New York Times Magazine, March 28, 1999).

நாம் கோடிட்டுக் காட்டியுள்ள புறநிலை நிகழ்வுபோக்குகளின் அபிவிருத்திகள் வர்க்க போராட்டத்தின் வெடிப்பிற்கு அடித்தளத்தை இடுவதுடன் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலையில் தீர்க்ககரமான மாற்றங்களுக்கும் அடிப்படையாகின்றன. அனைத்து வரலாற்று மற்றும் புறநிலைக் குறியீடுகள் புதிய புரட்சிகர போராட்டக் காலம் வரவிருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.

எமது பணி இந்த வளர்ச்சிகள் கொண்டுவர இருக்கும் சவால்களுக்கு அரசியல் தயாரிப்புகளை மேற்கொள்ளுவது ஆகும். இத்தயாரிப்பின் மையமானது தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை திசைதிருப்பும், ஒரு புரட்சிகர நோக்குநிலையை வளர்ப்பதை தடைசெய்யும் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் கருத்தியல் மற்றும் அரசியல் இயங்குமுறைகளை அம்பலப்பலப்படுத்துதல் மற்றும் தெளிவுபடுத்துதல் ஆகும்.

இப்போக்குகள் அரசியல் பொருளாதார பிரிவில் இருப்பவற்றை ஆராய்வதின் மூலம் என்னுடைய கருத்துக்களை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

David Harvey என்னும் கல்வியாளர் அரசியல் பொருளாதாரம் பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார்; அவருடைய படைப்பு முக்கிய உட்பார்வைகளை கொண்டுள்ளது. ஆனால் வேறு நல்ல சொற்றொடர் இல்லை என்ற விதத்தில் "மார்க்சிச கல்வியாளர் கருத்து" என்ற வகையில், இது முற்றிலும் தொழிலாள வர்க்கத்திடையே மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் வரலாற்றை தவறாக கூறுவதுடன் சிதைக்கவும் செய்கிறது.

தன்னுடைய புதிய புத்தகமான புதிய ஏகாதிபத்தியம் (The New Imperialism) என்பதில் Harvey மார்க்சிச இடது பற்றிய "தொல்சீர் கருத்தான" வரலாற்று மாறுதலில் ஊதியம் பெறும் தொழிலாளர்கள்தான் முக்கிய முகவர்கள் எனக் குறிப்பிடுவது பற்றி சவால் விடுகிறார். வரலாற்று மாற்றத்தில் பிரத்தியேக தன்மை உடைய முகவர்களாக தொழிலாள வர்க்கத்தை காண்பது என்பது பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் போன்ற சமூக இயக்கங்களை அசட்டை செய்கிறது என்றும் இத்தகைய "ஒரு முனைப்புடன் கூடிய கூடுதலான மார்க்சிச மற்றும் கம்யூனிஸ்ட், இடது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை மற்றவற்றை அகற்றி ஊக்கம் கொடுப்பது ஒரு பெரும் தவறாகும்." (Harvey, The New Imperialism, Oxford University Press, 2004, p. 171).

ஹார்வியின் கருத்தில் போருக்கு பிந்தைய பொருளாதார உயர்நிலை முடிவுற்ற பின் பின்னடைவுகள் ஏற்பட்டதற்கு இதுதான் காரணமாகும். உண்மையான பிரச்சினை ஹார்வி இதை எங்கு கண்டுபிடித்தார் என்பதில் இல்லை, 1968ல் இருந்து 1975 வரை இருந்த காலத்தில் தொழிலாளர்கள் போராட்டங்களின் தலைமையில் இருந்த காட்டிக் கொடுப்புக்கள்தான் கடந்த 30 ஆண்டுகளாக முதலாளித்துவம் நடக்கும் தாக்குதலுக்கு வழிவகுத்தன.

ஹார்வியின் பகுப்பாய்வு மார்க்கூஸ ஒரு முந்தைய காலத்தில் கொடுத்த கருத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. உலகந்தழுவிய முதலாளித்துவ உற்பத்தி வழிவகை தொழிலாள வர்க்கத்தில் மாபெரும் பெருக்கத்தை தோற்றுவித்துள்ள கட்டத்தில், இந்த வகுப்பு எந்த வேலையை செய்தாலும், உற்பத்தி முறைகளில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு ஊதியத்தை பெறுகிறது--ஹார்வி புதிய சமூக இயக்கங்கள்களுடனான நோக்குநிலை வளர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதை ஊதியத்திற்கான தொழிற்சங்க போராட்டங்களாக அடையாளம் காண்கிறார். உண்மையில் ஒரு உண்மையான மார்க்சிசம் எப்பொழுதும் இத்தகைய கருத்தாய்வுகளை எதிர்த்துள்ளது; ஒரு சோசலிச இயக்கம் அனைத்துவித ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் அரசியல் போராட்டத்தின் அடிப்படையில்தான் வளர்க்கப்பட முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஒரு புரட்சிகர தலைவன் பற்றிய லெனினின் குறிப்புகளை மீண்டும் ஞாபகப்படுத்தினாலே போதும். அவர் ''மக்களின் தலைமைக்காக போராட வேண்டும் என்றும், ''எவ்வளவுதான் சிறியதாக இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்வினையும் சாதகமாக பயன்படுத்தி தனது சோசலிச நம்பிக்கைகளையும் அவரது ஜனநாயக கோரிக்கைகளையும் முன்வைக்க கூடியவராக, தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் உலக-வரலாற்று முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் தெளிவுபடுத்த கூடியவராக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதன் மூலமாகத்தான் முதலாளித்துவத்தாலும் வர்க்க சமுதாயத்தாலும் மனிதகுலத்திற்கு விட்டுச்செல்லப்பட்டிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படமுடியும் என்பதை சமூக இயக்கம் அடித்தளமாக கொண்டிருக்கவேண்டும்.

அவ்வாறான போராட்டத்திற்கு பதிலாக Harvey எதனை முன்வைக்கின்றார்? இராணுவவாதத்தின் எழுச்சி அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை பாதுகாத்துக்கொள்வதற்கான முயற்சி என குறிப்பிட்ட பின்னர் அவர் பின்வருமாறு எழுதுகின்றார் ''ஒரு தற்காலிகமானதாக இருந்தாலும், எவ்வித முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதிக்குள்ளும் இப்பிரச்சனைக்கான தீர்வு ஒரு வகையான ''புதிய ஒழுங்கிற்கான'' (‘New Deal') உலக தேடுதலாக உள்ளது. இதன் கருத்து, மூலதன சுழற்சியையும் திரளலையும் நவ தாராளவாத சங்கிலியில் இருந்து விடுவித்தலும், கூடிய தலையீடு செய்யக்கூடியதும் மற்றும் மறுபங்கீடு செய்யக்கூடியதுமானதாக அரச அதிகாரத்தை மறுஒழுங்கமைத்து, நிதி மூலதனத்தின் ஊகவாணிப பலத்தை கட்டுப்படுத்தி மற்றும் ஆட்சியுரிமையை பன்முகப்படுத்தி அல்லது நிதியாதிக்க, ஏகபோகங்களின் சர்வாதிகார சக்தியை ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தி (குறிப்பாக இராணுவ. தொழிற்துறையின் கூட்டின் மிகக்கூடிய ஆதிக்கத்தை), நாங்கள் நாளாந்தம் செய்திகளில் பார்த்தும், கேட்டும், வாசித்தும் அறியும் சர்வதேச வர்த்தகத்தின் இருந்து கட்டளையிடவேண்டும். இதன் விளைவு ஒரு இரக்க சிந்தையுள்ள ''புதிய பேர'' ஏகாதிபத்தியத்தை நோக்கி திரும்புவதாக இருக்கும். இது கவுட்ஸ்கி நீண்டகாலத்திற்கு முன்னரே கண்டுபிடித்த முதலாளித்துவ சக்திகளின் ஒருவகை கூட்டினூடாக அடையக்கூடியதாக இருக்கலாம்''.

அவர் தொடருகின்றார்'' அங்கு கட்டாயமாக, மிகவும் தீவிரமான தீர்வுகள் திரைமறைவில் உள்ளன. ஆனால் உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் மிகப்பலம் வாய்ந்த வர்க்க சக்திகளின் முன்னிலையிலும் தனித்துவமான நலன்களினாலும் ஒரு புதிய ''புதிய உடன்பாட்டை'' அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலைமையில் கீழ் உருவாக்குவதற்கு தற்போதைய நிலைமையை உடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கின்றது.'' (Harvey, pp. 210-211)

நிதிமூலதனத்தினதும் மற்றும் நவ-தாராளவாதத்தின் ''சுதந்திர சந்தையினதும்'' அழிவுகள் ஒழுங்குபடுத்துவதற்கு திரும்புமாறு பல அழைப்புகள் விடுவதை உருவாக்கியுள்ளது.

வேறு ஒரு எழுத்தாளரின் கருத்துப்படி, தேசிய அரச மட்டத்தில் இல்லாமல் சர்வதேச மட்டத்தில் ''ஒரு பலமான கரம் உருவாக்கவேண்டும்'' மற்றும் ஒரு வெளிப்படையான கைகளை நோக்கி திரும்பவேண்டும் என கோரவேண்டும் என்பதற்கான நேரம் வந்துவிட்டது. ''ஒரு உலக சமூக உடன்படிக்கையும் ஒவ்வொருவருக்கும் இடமுள்ள ஒரு உலகத்தை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது..... ஒரு வெளிப்படையான கரம் கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்க்கையுடன் இணைப்பதற்காக சந்தை உறவுகளை மறுஒழுங்கமைப்பதற்குமான வரலாற்று காலகட்டம் வந்துவிட்டது.'' (Wim Dierckxsens, The Limits of Capitalism, Zed Books, 2000, pp. 126-127).

பிரெஞ்சு அரசியல் பொருளியலாளரான Dumenil உம் Levy உம் அட்டாக் இயக்கத்துடன் இணைந்து, மார்க்ஸ் பற்றிய தமது கருத்துக்களையும், தமது சீர்திருத்தவாத அரசியல் நோக்குநிலையையும் பற்றி எவ்வித ஐயுறவையும் விட்டுவைக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவ நெருக்கடி பற்றிய அவர்களது ஆய்வு கேய்ன்சியவாத (Keynesian) தீர்வுகளின் முக்கியத்துவத்தையும் மற்றும் அதன் சரியான தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்'' தேசிய பொருளாதார நிலைமை மீதான கட்டுப்பாட்டையும் நிதி நிறுவனங்கள், அதாவது நிதி மீதான கட்டுப்பாட்டையும் தனியார் கைகளில் விடமுடியாது''.

அவர்கள் தொடருகிறார்கள்'' முதலாளித்துவத்தின் வரலாறு தொடர்பான இந்த கேய்ன்சிய பார்வையும், அதன் தற்போதைய பிரச்சனைகளும் மிகவும் நுணுக்கமானவை. கடந்த தசாப்தங்களின் நவ தாராளவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரு மாற்றீடான அரசியலை வைத்து நெருக்கடியை தீர்க்க ஒரு வித்தியாசமான பாதையை வேறு சமூக கூட்டுகளின் உள்ளடக்கத்தில் வைக்க அரசியல் நிலைமை முடியாது இருந்து பற்றி ஒருவர் கவலைப்படவே முடியும்.

ஒரு புரட்சிகர எதிர்காலத்தை பற்றி இன்னும் கனவு கண்டுகொண்டிருப்பவர்களால் அவரது சீர்திருத்தவாதத்திற்காக கேய்ன்ஸ் குற்றம்சாட்டப்பட வேண்டுமா? கேய்ன்ஸ் இன் ஆய்வுகள் உண்மையில் ஒரு சீர்திருத்தவாதியினதுதான். ஆனால் அவரது திறமையான, பகிரங்கமான ஆனால் சமூகரீதியாக மட்டுப்படுத்தப்படட முன்னோக்கு, தசாப்தங்களாக தவறானது என நாம் கண்டுகொண்டுள்ள ஒரு மிகவும் தீவிரமான பாதைக்கான மாற்றீடாகவும் உள்ளது. (Dumenil and Levy, Capital Resurgent, Harvard University Press, 2004, pp. 201, 204).

யோர்க் பல்கலைக்கழகத்தின் Panitch, Gindin போன்ற Socialist Register என்ற சஞ்சிகையுடன் இணைந்தவர்களும், ஒரு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதை நிராகரித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியை சமாளித்து நிர்வாகிக்க முடியும் என்கின்றனர். ''சீனா, வட அமெரிக்கா மற்றும் அனைத்து இடங்களிலும், சோசலிஸ்டுகளுக்கான முக்கிய கேள்வி முதலாளித்துவத்தை மாற்றக்கூடிய ஒருவகை எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதாகவே இருக்கின்றது''. என எழுதுகின்றனர். அதனை தூக்கிவீசுவதற்கான போராட்டம் நிகழ்ச்சிநிரலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது.

தீவிரவாத கனேடிய எழுத்தாளரான Naomi Klein அதிர்ச்சி மூலோபாயம் (The Shock Doctrine) என்ற தனது அண்மைய புத்தகத்தில் முக்கியமானதும் விருப்பத்துடன் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படும் வரலாறான ''கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தின் வெற்றி என்பது சுதந்திரமாக பிறந்தது மற்றும் தளைகளற்ற சந்தை ஜனநாயகத்துடன் ஒன்றிணைந்து செல்லக்கூடியது என்பதை'' எதிர்ப்பது பற்றி கூறுகின்றார். இதற்கு மாறாக அவர் சிக்காகோ சிந்தனைக்கூடம் எனப்படுவதின் வலதுசாரி ''சுதந்திர சந்தை'' பொருளியலாளரான Milton Friedman இன் கருத்தான ''இது முதலாளித்துவத்தின் அடிப்படைவாத வடிவம்'' என்றும் இந்த பலாத்தகாரமான மூர்க்கமான வடிவத்தின் பிறப்பின் செவிலித்தாயாக இருந்தவர்கள் ஒரு மக்கள் கூட்டமோ அல்லது ஒரு தொகை தனிமனிதர்களோ ஆவர்'' என குறிப்பிடுகின்றார்.(Naomi Klein, The Shock Doctrine, Penguin, 2007, p. 18).

ஆனால் Klein, ''சந்தை பொருளாதாரத்தின் அனைத்து வடிவங்களும் பலாத்காரத்தை உள்ளடக்கியிருப்பதாக'' தான் வாதாடவரவில்லை என வலியுறுத்துகின்றார். அவர் குறிப்பிடுகையில்'' பலாத்காரத்தை வேண்டி நிற்காத மற்றும் அதுபோன்ற கருத்தியல்வாத தூய்மைகொண்ட ஒரு சந்தையை அடித்தளமாக கொண்ட பொருளாதார பிரிவுகள் நிட்சயமாக சாத்தியமானது. பாவனையாளருக்கான பொருட்கள் உற்பத்தியில், பொது சுகாதாரத்துறை, பாடசாலைகளில் சுதந்திர சந்தை இருக்கலாம், பொருளாதாரத்தின் ஒரு பெருமளவு பகுதி அரசாங்கத்தின் கைகளில் இருக்கலாம், நிறுவனங்கள் நியாயமான சம்பளம் வழங்கவேண்டும் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை மதிக்கும் சட்டங்கள் தேவை, கூரிய சமத்துவமின்மையை குறைப்பதற்கு செல்வம் மறுபங்கீடு செய்யப்படவேண்டும்''.

கேய்ன்ஸ் பாரிய மந்தநிலைக்கு பின்னர் சரியாக இவ்வகைப்பட்ட கலந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட பொருளாதாரத்தையை முன்மொழிந்தார். இது புதிய உடன்பாட்டை (New Deal) உருவாக்கிய பொது கொள்கையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இவ்வாறான மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இதே மாதிரியான உடன்பாடுகளின் அமைப்பும் மற்றும் Friedman இன் எதிர்புரட்சிகரமான கட்டுப்படுத்தி சமப்படுத்தும் கொள்கைகள் மூலமாக ஒவ்வொரு நாடாக திட்டமிட்டு உருக்குலைக்கப்பட்டன. (Klein, p. 20)

தனது புத்தகம் பற்றிய ஒரு செவ்வியில் தான் ஒரு கேய்ன்சிய ''கலப்பு பொருளாதாரத்தை'' ஆதரிப்பதாக குறிப்பிட்டார். ஏனெனில் தான் ஒரு ''யதார்த்தவாதி'' என்பதாலாகும்.

ஆனால், வரலாற்றுச்சக்கரத்தை பின்னோக்கி கொண்டு செல்வதும், யுத்தத்திற்கு பின்னான எழுச்சியின் இருபத்தியோராம் நூற்றாண்டு வகையினை மீண்டும் கண்டுபிடிப்பதையும் போல் யதார்த்தமற்றது எதுவுமிருக்கமுடியாது.

முதலாவதாக, இந்த யுத்தத்தின் பின்னான பொருளாதார எழுச்சி கேய்ன்ஸின் கொள்கைகளின் விளைவாக வந்ததல்ல என்பதை மறந்துவிடுகின்றனர். மாறாக இது உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரமாண்டமான மாறுதல்களாலும் மற்றும் அதன்விளைவாக உருவான இரண்டாம் உலக மகாயுத்தம் கொண்டுவந்த பாரிய பயங்கரத்தாலும் அழிவினாலும் வந்தது. புறநிலை நிகழ்போக்குகளின் விளைவான இந்த பொருளாதார எழுச்சியின் உடைவினை கேய்ன்ஸிய நடவடிக்கைகளால் அதன் தொடரும் நெருக்கடிகளை தீர்க்கமுடியாதுள்ளது. சிலவழிகளில் அவற்றை மோசமடையவே செய்து, அதனால் தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு எதிராக ஒரு மத்தியதர தட்டிற்கு ஒரு சமூக அடித்தளத்தை வழங்கியுள்ளது.

இரண்டாவதாக, Klein ஆலும் ஏனைய கேய்ன்ஸியவாதத்தின் பாதுகாவலர்களாலும் முன்மொழியப்படும் வழிகளில் ஒரு சமூக சீர்திருத்தத்திற்கான முக்கிய இயக்கம் அபிவிருத்தியடையுமானாலும் அது தமது நலன்களை சகல விதத்திலும் பாதுகாக்க முயலும் ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பை விரைவாக சந்திக்கவேண்டி இருக்கும்.

அத்தகைய கொள்கைகளின் இவ்வாறான ஆதரவாளர்கள், முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டல்தான் முன்னேறுவதற்கு ஒரே வழி என்று வற்புறுத்தும் மற்றும் இந்த முன்னோக்கின் அடிப்படையில் சமூக நனவிற்கான போராட்டத்தை பொறுப்பெடுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக தாம் யதார்த்தவாதிகளாக இருப்பதாக கூறிக்கொள்கின்றனர்.

உண்மையில், 150 வருடத்திற்கு முன்னர் மார்க்ஸ் விமர்சித்த அதே தீவிரப்போக்கினர் கடைப்பிடித்த வழிமுறைகளையே இவர்களும் பின்பற்றுகின்றனர். அதாவது, புறநிலை நிகழ்வுப்போக்குகளையும் அபிவிருத்திகளையும் ஆராய்வதற்கும் அவ்வாறான ஆய்விலிருந்து அவசியமான அரசியல் முன்னோக்கை வரைவதற்கும் மாறாக, அவர்கள் தமக்கு வசதியானதும் சாதகமானதுமான ஒரு தொடர் நடவடிக்கைகளை இயற்றுவதுடன், அந்த நடவடிக்கைகள் ஒரு சர்வவியாபக தீர்வு எனவும் கூறிக்கொள்கின்றனர்.

உலக சோசலிச புரட்சி முன்னோக்கும் உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதும் ஒரு வெகுதொலைவிலுள்ள முன்னோக்கு அல்ல. புறநிலையான பொருளாதார அபிவிருத்திகளினதும், நிகழ்வுப்போக்கினதும் தர்க்கவியலின் ஆய்வானது, உலக முதலாளித்துவத்தின் ஒழுங்கமைப்பின் ஆழமடைந்துவரும் நெருக்கடியையும், அதனால் உருவாக்கப்படும் பேரழிவுகளையும் தொழிலாள வர்க்கமும், பரந்த மக்கள் திரளினரும் எதிர்கொள்ளக்கூடிய ஒரேயொரு சாத்தியமான அடித்தளம் இதுதான் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அடுத்த ஐந்து நாட்களில் எமது பணி இந்தபோராட்டத்தை முன்னெடுப்பதற்கான தேவையான அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு முக்கிய தத்துவார்த்த, அரசியல் தெளிவுபடுத்தல்களை முன்னெடுப்பதாக இருக்கும்.