World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Lebanon on brink of civil war

உள்நாட்டுப் போரின் விளம்பில் லெபனான்

By Chris Marsden
9 May 2008

Back to screen version

அனைத்தையும் ஈடுபடுத்தும் ஒரு பெரும் உள்நாட்டுப் போர் விளிம்பில் லெபனான் உள்ளது. உயர்ந்துவரும் விலைவாசிகளுக்கு எதிராக முன்னணி தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்து குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரியது, மேற்கத்தைய சார்பு சுன்னி, ட்ரூஸ் தளமுடைய பிரதம மந்திரி பெளயட் சினியோராவின் அரசாங்கத்திற்கும் ஷியைட் தளமுடைய ஹெஸ்பொல்லா, அதன் கூட்டாளி அமல் ஆகியவற்றிற்கும் இடையே ஆயுதமேந்திய மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த இரு நாட்களாக மோதல் தொடர்ந்து பெருகி வருகிறது. புதனன்று ஹெஸ்பொல்லா தலைமையிலான எதிர்த்தரப்பின் ஆதரவாளர்கள் தலைநகர் பெய்ரூட்டின் சாலைகளை தடுப்பிற்கு உட்படுத்தினர். கிட்டத்தட்ட ஒரு டஜன் மக்கள் அரசாங்க எதிர்ப்பு மற்றும் அரசாங்க ஆதரவு இளைஞர் குழுக்களின் போட்டி கல்வீச்சுக்களில் காயமுற்றனர்.

வியாழனன்று சுன்னிக்களும் ஷியைட்டுக்களும் கிழக்கு பேக்கா பள்ளத்தாக்கில் உள்ள சாட்நேயல் என்னும் கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் --இப்பகுதி ஹெஸ்பொல்லாவின் கோட்டையான பால்பெக்கை மத்திய லெபனான் மற்றும் பெய்ரூட்டுடன் இணைக்கும் சாலைப்பகுதியில் உள்ளது.

ஹெஸ்பொல்லாவின் ஆதரவாளர்கள் நாட்டில் இருக்கும் ஒரே விமான நிலையத்திற்கு செல்லும் சாலையை தடுத்து, அதை மூடியும் விட்டனர். ரயர்கள் எரிக்கப்பட்டு, மண்சுவர்களால் பெரும் தடுப்புக்கள் எழுப்பப்பட்டு, தலைநகரம் முடக்கப்பட்டுள்ளது.

கடுமையான சண்டை மேற்கு பெய்ரூட்டில் சுன்னி ஷியா போராளிகளுக்கு இடையே அல்-மஜ்ரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. எதிர்த்தரப்பு துப்பாக்கி வீரர்கள் ராக்கெட் மூலம் இயக்கப்படும் எறிகுண்டுகளை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் Future Movement அலுவலகம் ஒன்றை தீயிட்டு கொளுத்தினர். அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

பெய்ரூட்டில் இருந்து ஷியா ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள தென் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள், நாற்சந்திகள் என்று முக்கிய இடங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. கலகம் அடக்கும் பிரிவைச் சேர்ந்த துருப்புக்கள் உரிய ஆயுதங்களுடன் சுன்னி-ஷியா கலந்து வசிக்கும் மஸ்ரா மாவட்டத்தில் போட்டி கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்காணிக்க நிறுத்தப்பட்டுள்ளனர்.

"இந்த நிலைம நீடித்தால்.... இராணுவ அமைப்புமுறையின் ஐக்கியத்திற்கு ஊறு விளையும்" என்று லெபனானின் இராணுவ ஆணையகம் எச்சரித்துள்ளது.

இந்தப் பூசல் 17 மாத காலமாக அமெரிக்க மற்றும் செளதி ஆதரவுடைய அரசாங்கத்திற்கும் ஈரான், சிரியா ஆதரவு உடைய ஹெஸ்பொல்லாவிற்கும் இடையே இருக்கும் மோதலை தீவிரமாக்கியுள்ளது. லெபனானுக்கான ஜனாதிபதி தேர்தல் 18 தடவைகள் ஒத்திப் போடப்பட்டுள்ளன. பாராளுமன்ற அவைத்தலைவர் நபி பெரி, இந்த மாதம் அரபு லீக் செயலர் தளபதி அமர் மூசாவுடன் ஒரு சமரசம் காண்பதில் தோல்விக்கு பின் மே 13 அடுத்த முறை புதிய ஜனாதிபதித் தேர்தல் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.

ஆளும் மார்ச் 14 குழுவோ, ஹெஸ்பொல்லாவின் தாக்குதலால் பாதிப்பாளர் என்று தோன்றினாலும், உண்மையில் பல மாதங்களாக ஹெஸ்பொல்லா தலைமையிலான மார்ச் 8 கூட்டணியுடன் வெளிப்படையான மோதலுக்கு தயாரித்து வருகிறது; பிந்தையதில் மைக்கேல் ஒளனின் கிறிஸ்துவ சுதந்திர தேசபக்த இயக்கமும் அடங்கியுள்ளது. இது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப இவ்வாறு ஒத்துழைக்கிறது; அந்த இரு நாடுகளும் ஹெஸ்போல்லாவிற்கு எதிராக மோதல்களை மீண்டும் ஆரம்பிக்கும் கருத்து கொண்டு, சிரியாவையும் ஈரானையும் அச்சுறுத்தியுள்ளன.

நீண்ட காலமாகவே லெபனான் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இஸ்ரேல், செளதி அரேபா, பிரான்ஸ் மற்றும் சிரியா, ஈரான் அவற்றின் உள்ளூர் நட்பு அமைப்புக்கள் ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகியவற்றிற்கு இடையேயான வட்டாரப் போட்டியின் குவிப்புத் தானமாக இருந்து வருகிறது. ஹெஸ்பொல்லாவுடன் எந்த சமரசமும் கூடாது என்று பல முறை வாஷிங்டன் தடுத்து நிறுத்தியுள்ளது; ஏனெனில் அது லெபனான் தன்னுடைய பாதுகாப்பிலுள்ள நாடாகச் செயல்பட வேண்டும் என்றும் இஸ்ரேலில் உள்ள அதன் முக்கிய சக்தித் தளத்தின் விரிவாக்கமாக இருக்க வேண்டும் என்றும் அது விரும்புகிறது. இது சிரியா மற்றும் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு முன்னோடியாக இருந்து எண்ணெய் கொழிக்கும் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ உதவும்.

இஸ்ரேலிய படைகள் லெபனானில் இருந்து 2000ம் ஆண்டில் வெளியேறின. ஆனால் அந்நாட்டின்மீது தன்னுடைய தொடர்ந்த விருப்பங்களை வெளியிடும் வகையில் ஜூலை 2006ல் லெபனான் மீது போர் பிரகடனம் செய்தது; அதில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர்; இன்னும் பலர் காயப்பட்டனர்; நாட்டின் பரந்த பகுதிகளும் உள்கட்டுமானங்களும் அழிக்கப்பட்டன.

ஹெஸ்பொல்லாவை இஸ்ரேல் தோற்கடிக்க முடியாமல் போனது, ஜெருசெலத்தில் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது; அதே நேரத்தில் ஹெஸ்பொல்லாவிற்கு ஷியா மக்களிடம் இருந்து மேலதிக ஆதரவையும் திரட்ட முடிந்தது.

அப்பொழுதில் இருந்து அமெரிக்க ஹெஸ்போல்லா, சிரியா மற்றும் இறுதியில் ஈரான் ஆகியவற்றுடன் போருக்கான ஒரு போலிக் காரணத்தை தோற்றுவிக்க ஆவலாக இருந்தது; இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே தற்காலிக சமாதான பேச்சுக்களையும் தடுத்து நிறுத்தி, டமாஸ்கஸ் மற்றும் தெஹ்ரானுக்கு எதிராக பலமுறையும் ஆத்திரமூட்டல்களை தூண்டிக்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பரில் இஸ்ரேலிய போர்விமானங்கள் சிரியாவின் மீது குண்டு வீசின; ஓரளவு கட்டமைக்கப்பட்டுள்ள அணு உலை நிலையம்தான் இலக்கு என்று ஒரு பெயரிடப்படாத அமெரிக்க ஆதாரம் கூறியது.

பெப்ருவரி 28ம் தேதி USS Cole லெபனான் கடலோரத்திற்கு அருகே நிறுத்தப்பட்டது; பின்னர் இத்துடன் Nassau போர்க்குழுவும் இணைந்து கொண்டது; அதில் ஆறு கப்பல்கள், அதில் தரையிலும் செல்லக்கூடிய வாகனம் மற்றும் 2,000 சிறப்புக் கடற்படை வீரர்கள் ஆகியோர் இருந்தனர். அப்பொழுது ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரி அறிவித்ததாவது: "பிராந்திய உறுதித்தன்மைக்கு ஆதரவு கொடுப்பதை காட்டுதல் முக்கியம் என்று அமெரிக்கா கருதுகிறது. லெபனான் நிலைமை பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம். நீண்ட காலமாக அது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது."

அதே மாதம் புஷ் நிர்வாகம் சிரியாவிற்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகளையும் அறிவித்தது; பெயரிடப்படாத சில தனி நபர்கள் ஈராக்கில் எழுச்சிக்கு ஆதரவு கொடுப்பதில் பங்கு கொண்டுள்ளனர் என்றும் கூறியது.

ஏப்ரல் 24ம் தேதி, புஷ் நிர்வாகம் டமாஸ்கஸ், வட கொரியாவின் உதவியுடன் ஒரு அணுவாயுத உலையை கட்டுவதை நிரூப்பிப்பதாக கூறிக்கொள்ளும் உளவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது, கடந்த ஆண்டு இஸ்ரேலிய விமானப் படை எந்த இடத்தை தாக்கியதோ அங்கு இது அமைக்கப்படுவதாக கூறப்பட்டது. சிரியா இரகசியமாக அணுநிலையம் கட்டுவது பற்றி வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்து, "இப்பகுதிக்கும் உலகிற்கும் இது ஆபத்தான, உறுதியைக் குலைக்கும் திறனுடைய நடவடிக்கை ஆகும்" என்று கூறியது.

இஸ்ரேல் முன்பு குண்டுவீசியதற்கு அமெரிக்கா நியாயப்படுத்தியதானது அதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது. ஈரான் அணுவாயுத தயாரிப்புத் திட்டத்தை கொண்டிருக்கிறது என்று பலமுறை கூறப்படும் குற்றச் சாட்டுக்களுடன் இது ஒத்துப் போகிறது.

தன்னுடைய பங்கிற்கு, செப்டம்பர் 2007 வான் தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் ஒரூ மூத்த ஹெஸ்பொல்லா தலைவர் இமத் முகினியாவை டமாஸ்கஸில் இந்த ஆண்டில் பெப்ருவரி 12 அன்று படுகொலை செய்தது; இந்த நடவடிக்கை திருப்பித்தாக்குதலுக்கு தூண்டுதல் கொடுக்கும் மற்றும் லெபனானில் இன்னொரு இஸ்ரேலிய போருக்கு போலிக்காரணம் கொடுக்கும் நடவடிக்கையாக பரவலாகப் பார்க்கப்படுகிறது.

மே 8ம் தேதி லெபனானில் மோதல்கள் பெருகியுள்ள நிலையில், ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தான் சிரியாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ஓராண்டிற்கு விரிவாக்கம் செய்துள்ளதாக கூறினார்; சிரியா ஒரு அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக காரணம் கூறினார். இத்தடைகளில் சிரிய சொத்துக்கள் முடக்கப்படும் என்பதுடன், இறக்குமதிப் பொருட்கள் மீது தடையும் உண்டு. டமாஸ்கஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்றும், லெபனான் மற்றும் ஈராக்கில் தொடர்ந்து தலையீடு செய்கிறது என்றும் பேரழிவு ஆயுதங்கள், ஏவுகணை திட்டங்களை கொண்டுள்ளது என்றும் புஷ் டமாஸ்கஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய சினியோரா அரசாங்கத்தின் ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் அமெரிக்க/இஸ்ரேலிய தலைமையிலான தாக்குதலின் விரிவு என்றுதான் காணப்பட வேண்டும். பெப்ருவரி 10ம் தேதி தொலைக்காட்சி உரை ஒன்றில் Druze தலைவரான Walid Jumblatt ஹெஸ்பொல்லாவை அச்சுறுத்தினார்; "உங்களுக்கு ஒழுங்கின்மை வேண்டுமா? வரவேற்கிறோம். உங்களுக்குப் போர் வேண்டுமா? அதுவும் வரவேற்கப்படும். எங்களுக்கு ஆயுதங்கள் பற்றியோ ஏவுகணைகள் பற்றியோ பிரச்சினை இல்லை. உங்களிடம் அவற்றை கொண்டு வருவோம்."

கடந்த வாரத்தில் இரு நடவடிக்கைகளும் அதைச் செய்யத்தான் எடுக்கப்பட்டுள்ளன.

வார இறுதியில், Jumblatt ஹெஸ்பொல்லா பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தை பாதுகாப்பு காமெராக்களை கொண்டு கண்காணிப்பதாகவும் இது தாக்குதல் அல்லது கடத்தலுக்கான தயாரிப்பு என்றும் குற்றம் சாட்டினார். செவ்வாயன்று அரசாங்கம், விமான நிலையப் பாதுகாப்புத் தலைவர் பிரிகேடியர் தளபதி வாபிக் ஷூகிரை இராணுவக் கட்டுப்பாட்டில் திரும்புமாறு உத்தரவிட்டது; ஹெஸ்பொல்லாவிடம் அவர் பரிவுணர்வு காட்டுவதாகவும் இரகசிய புகைப்படக் கருவி பற்றி ஏதும் செய்யவில்லை என்றும் அத்தகைய கருத்து முக்கிய ஓடும் தளத்தில் வைக்கப்பட்டுள்ளதில் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஷூகிர் நபி பெரிக்கு நெருக்கமானவர்; பிந்தையவர் பாராளுமன்றத்தில் அவைத்தலைவராகவும் ஹெஸ்போல்லாவின் கூட்டணிப் பங்காளி அமலின் தலைவரும் ஆவார். இந்த நடவடிக்கை விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளை தடுப்பிற்கு உட்படுத்திவிட்டது.

இதே உரையில் ஜும்பிளாட் ஹெஸ்பொல்லா தனி தொலைதகவல் இணையத்தை நிறுவுவதாகவும் அது லெபனானில் செய்யப்படும் அழைப்புக்களை ஒட்டுக் கேட்ட பயன்படும் என்றும் குற்றும் சாட்டினார். இதைத் தொடர்ந்து செவ்வாயன்று அரசாங்கம் அறிக்கை ஒன்றில் ஹெஸ்பொல்லாவின் தொலைபேசி இணையம் "சட்ட விரோதம், அரசியல் அமைப்பிற்கு விரோதம்", நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று அறிவித்துள்ளது; இது பற்றிய ஆவணத் தொகுப்பு நீதித்துறைக்கு அனுப்பப்படுகிறது என்றும் கூறப்பட்டது.

இணையத்தை இலக்கு வைத்தல் என்பது ஒரு கடுமையான விடையிறுப்புடன் பிணைந்துள்ளது. ஹெஸ்பொல்லா உண்மையில் மிகப் பரந்த வகையில் தொலை பேசி இணையம் ஒன்றை நடத்தித்தான் வருகிறது.

Time-CNN கூற்றின்படி, "ஹெஸ்பொல்லா சில காலத்திற்கு முன் அதன் தலைமையகம் பெய்ரூட் புறநகரில் இருக்கும் இதன் அலுவலகங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் எல்லை வரை இருக்கும் அதன் காரியாளர்கள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அதன் பைபர் ஆப்டிக் தொலைபேசி இணையத்தை நிறுவியது. 2006 கோடைப் போரின்போது, இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருக்கும் கைபேசி சமிக்கைகள் அனைத்தையும் தடைக்கு உட்படுத்தி லெபனிய தொலைபேசி முறையையும் கண்காணித்தது; ஆனால் ஹெஸ்பொல்லாவின் உட் தொடர்பு இணையங்கள் தனி பைபர் ஆப்டிக் முறையினால் தப்பிப் பிழைத்தன."

"போர் வந்ததில் இருந்து, ஹெஸ்பொல்லா இணையத்தை விரிவாக்கி அதன் ஐ.நா.ரோந்து சுற்றும் தெற்கு எல்லை மாவட்டத்திற்கு வடக்கே இருக்கும் புதிய இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து கிழக்கே பேக்கா பள்ளத்தாக்கு வரை வைத்துள்ளது. இந்த முறையின் ஒரு பகுதி இணையம் மற்றும் கைபேசிகளை நீண்ட தூர தந்தியில்லா முறையில் அடைவதற்கு WiMAX வலைப்பின்னலை சேர்த்துக்கொண்டுள்ளது."

"இன்னும் சமீபத்தில் ஹெஸ்போல்லா பைபர் ஆப்டிக் கேபிள்களுக்காக நிறைய பள்ளங்களை கிறிஸ்துவ மற்றும் Druze Mount லெபனான் மாவட்டத்திலும் வடக்கு லெபனானிலும் தோண்டியுள்ளது என்று லெபனிய தொலைத் தொடர்பு மந்திரியான மார்வான் ஹமாதே தெரிவிக்கிறார்."

இந்த வலைப் பின்னலின் மீதான தாக்குதல் ஹெஸ்போல்லா தன்னை இஸ்ரேல் தாக்குததலில் இருந்து காத்துக் கொள்ளும் திறனைக் கடுமையாக பாதிக்கும்; அதேபோல் அதன் உள் விரோதிகளிடம் இருந்து வரும் தாக்குதல்களை சமாளிப்பதும் கடினமாகும். இந்த ஆத்திரமூட்டல் தேவையான விளைவைக் கொடுத்தது. வியாழனன்று ஹெஸ்பொல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா 2006க்கு பின்னர் முதல் தடவையாக செய்தியாளரை சந்தித்து அமைப்பின் தனியார் தொலைத்தொடர்பு இணைய தளத்தை மூடப்போகும் முடிவு "ஒரு போர் அறிவிப்பிற்கு ஒப்பாகும்" என்று கூறினார்."

இணையத்தை வெளி ஆக்கிரமிப்பிற்கு எதிரான முக்கிய ஆயுதம் என்று விவரித்த அவர் கூறினார்; "இந்த முடிவு முதலில் ஒரு போர் அறிவிப்பாகும் மற்றும் எதிர்ப்பிற்கு எதிராக, அமெரிக்கா, இஸ்ரேல் நலன்களுக்கு ஆதரவாக அதன் ஆயுதங்களுக்கு எதிராக ஒரு அரசாங்கத்தால் தொடுக்கப்படும் போராகும். எங்களுக்கு எதிராக எவர் போர் தொடுத்தாலும், அவர்கள் எங்களுடைய தந்தை அல்லது சகோதரர் ஆனாலும், அல்லது அரசியல் எதிரி என்றாலும், நாங்கள் எங்களை காத்துக் கொள்ளுவதற்கு, எங்கள் ஆயுதங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு, எங்கள் எதிர்ப்பை பேணுவதற்கு மற்றும் எங்கள் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களை எதிர்க்கும் உரிமையை கொண்டுள்ளோம்."

அரசாங்கம் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பிரிகேடியர் தளபதி வபிக் ஷூகிரை மீண்டும் பதவியில் இருந்த வேண்டும் என்றும் கோரினார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பின் செய்தித் தொடர்பாளர் Gordon Johndroe ஹெஸ்பொல்லா "அதன் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்", "ஒரு பயங்கரவாத அமைப்பாக இருக்க வேண்டுமா அல்லது அரசியல் கட்சியாக இருக்க வேண்டுமா" என்பது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நேற்று கூறினார்.

சினியோராவை புஷ் அடுத்த வார இறுதியில் எகிப்தின் செங்கடல் Sharm el Sheih ல் சந்திக்க உள்ளார்; இஸ்ரேல் நிறுவப்பட்ட 60ம் ஆண்டு தின விழாக்களில் கலந்து கொண்டு, செளதி அரேபியா 75 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் கொண்டிருக்கும் உறவு பற்றிய விழாக்களில் கலந்து கொண்டபின் அவர் சினியோராவைக் காண உள்ளார். தன்னுடைய பங்கிற்கு செளதி அரேபியா பெயரிடப்படாது "வெளிநாட்டு தீவிர சக்திகள்" தற்போதைய மோதலை பெருக்கி வருவதாகக் கூறியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved