World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Election charade in eastern province

இலங்கை: கிழக்கு மாகாணத்தில் தேர்தல் மோசடி

By Sarath Kumara
9 May 2008

Back to screen version

இலங்கையின் யுத்தத்தால் சீரழிந்து போன கிழக்கு மாகாணத்தில் சனிக்கிழமை நடத்தத் தீர்மாணிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலானது தனது இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஒரு ஜனநாயக முகமூடியை வழங்கும் கொழும்பு அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும். துணைப்படையான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டீ.எம்.வி.பீ.) உடன் அரசாங்கம் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டிருப்பதும் மற்றும் வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக பெருந்தொகையான துருப்புக்களும் பொலிசாரும் நிறுத்தப்பட்டிருப்பதும் இந்தத் தேர்தலின் உண்மையான பண்பை அம்பலப்படுத்துகின்றன.

கிழக்கு மாகாணத்தை உருவாக்கியமையே ஒரு ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை நிறுத்துவதன் பேரில் 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் ஒரு பாகமாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் முதலாவதாக இலங்கையில் மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் தாயகக் கோரிக்கைக்கு வழங்கும் சலுகையாக வடக்கு மற்றும் கிழக்கும் ஒரே மாகாணங்களாக இணைக்கப்பட்டிருந்தன.

சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மனுவின் அடிப்படையில், 2006 அக்டோபரில் உயர் நீதிமன்றம் இந்த மாகாணத்தை இரண்டாகப் பிரித்தது. இந்த தீர்ப்பானது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி, புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றுமாறு கட்டளையிட்டதன் மூலம் நாட்டை மீண்டும் வெளிப்படையான யுத்தத்திற்குள் தள்ளி சில மாதங்களுக்குள் வழங்கப்பட்டது.

யுத்தத்தை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளின் மையமாக விளங்கிய, இந்த இணைக்கப்பட்ட மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் வடிவில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்பட்டதன் சவப்பெட்டிக்கு இந்த நீதிமன்றத் தீர்ப்பு இன்னுமொறு ஆணியை அறைந்தது. இந்த நீதிமன்ற வழக்கை ஆரம்பிக்க இராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் அந்த மனுவை எதிர்க்க அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜே.வி.பி. பெயரளவில் எதிர்க் கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்தாலும், அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பதில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற ஆதரவு ஒரு பிரதான காரணியாகும்.

2006ல் இருந்து இலங்கை இராணுவம் கிழக்கில் புலிகளை ஒப்பீட்டளவில் இலகுவாக வெற்றி கண்டது. இது பெருமளவில் முன்னர் கருணா குழு என்றழைக்கப்பட்ட டீ.எம்.வி.பீ. துணைப்படை கொடுத்த ஆதரவால் சாத்தியமானது. இந்த துணைப்படை 2004ல் புலிகளில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்டதாகும். இந்த பிளவின் போது புலிகளின் ஆயிரக்கணக்கான போராளிகளும் பிரிந்து சென்றனர். முன்னர் வி. முரளீதரன் அல்லது கருணா என்றழைக்கப்பட்டவரால் தலைமை வகிக்கப்பட்ட இந்தக் குழு இப்போது எஸ். சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் என்று அழைக்கப்படுபவரால் தலைமை வகிக்கப்படுகிறது.

கிழக்கில் உள்ளூர் மக்களை பீதிக்குள்ளாக்க இராணுவத்துடன் ஒத்துழைப்பதில் பேர் போன டீ.எம்.வி.பீ., பெருந்தொகையான படுகொலைகள் மற்றும் கடத்தல்களிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக பரந்தளவில் நம்பப்படுகிறது. இந்தக் துணைப்படை இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து மார்ச் மாதம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டது. இந்தத் தேர்தல் பிரச்சாரம், குறிப்பாக எதிர்த்தரப்பு வேட்பாளர்களுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட பரந்தளவிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளில் மூழ்கிப்போயிருந்தது.

சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதாக இராஜபக்ஷ கூறிக்கொள்வது மோசடியானதாகும். திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று கிழக்கு மாவட்டங்களில் பிரமாண்டமான பிரதேசங்கள் மோதல்களாலும் 2004 டிசம்பரில் தாக்கிய சுனாமியாலும் சீரழிந்து போயுள்ளன. இதற்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளின் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களின் விளைவாக 5,000 பேர்வரை உயிரிழந்துள்ளதோடு 200,000 க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பல குடும்பங்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இன்னமும் அகதிகள் முகாம்களிலும் உள்ளனர். அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் உள்ளனர். வாக்காளர்கள் தமது சொந்த இடங்களில் இல்லாத காரணத்தால் இந்தத் தேர்தலுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய சுமார் 170,000 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என தபால் ஆணையாளர் ஏற்றுக்கொண்டார். இந்த எண்ணிக்கையானது மாகாணத்தில் உள்ள 980,000 வாக்காளர்களில் 20 சத வீதமாகும். உள்ளூருக்குள் இடம்பெயர்ந்துள்ள சுமார் 50,000 பேரில் 1,600 பேர் மட்டுமே மீண்டும் பதிவு செய்துகொள்வதற்காக தேர்தல் அலுவலர்களை சந்தித்துள்ளனர்.

இந்த மாகாணத்தை பாதுகாப்புப் படைகளே மேலாதிக்கம் செய்கின்றன. கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜமய்கா லியனகே ஏப்பிரல் 23 அன்று வெளியான அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "விசேடமாக கிழக்குத் தேர்தலுக்காக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அங்குள்ள பொலிசாருக்கு மேலதிகமாக 20,000 பாதுகாப்புப் படையினர் பலமான முறையில் நிறுத்தப்பட்டுள்ளனர்." இந்த எண்ணிக்கையின் படி 49 வாக்காளர்களுக்கு ஒரு சிப்பாய் எனக் கூறமுடியும். மேலும் 40 காலாற்படைப் பிரிவுகள் தேர்தல் காலத்துக்காக அனுப்பப்படும் என லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னர் இருந்த எண்ணிக்கையை விட இரு மடங்காக சுமார் 12,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிறுத்தப்படுவதோடு 6,000 ஊர்காவற் படையினரும் நிறுத்தப்படுவர். இராணுவத்தோடும் பொலிசாரோடும் நெருக்கமாக செயற்படும் பொதுமக்கள் பாதுகாப்புப் படையே இந்த ஊர்காவல் படையினராவர். டீ.எம்.வி.பீ. தொடர்ந்தும் ஆயுதங்களை சுமந்து திரிவதோடு அதன் அச்சுறுத்தல்கள் பரவலாக இருந்த போதிலும் அந்தக் குழுவை நிராயுதபாணியாக்குமாறு எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்த போதும் அரசாங்கமும் இராணுவமும் அதை நிராகரித்து விட்டன. டீ.எம்.வி.பீ. வன்முறைகளில் ஈடுபடுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத் தேர்தலில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) போட்டியிடவில்லை.

2002 யுத்த நிறுத்தத்தில் இருந்து கிடைத்த நன்மைகளின் பெரும் பகுதியை "வடக்குத் தலைவர்கள்" எடுத்துக்கொள்கின்றனர் என்ற கசப்பான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் 2004ல் டீ.எம்.வி.பீ. புலிகளில் இருந்து பிரிந்து சென்றது. புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது இராணுவத்திற்கு போதுமானளவு இழிவான சேவைகளை செய்த டீ.எம்.வி.பீ., இப்போது அதில் இலாபம் தேட முயற்சிக்கின்றது. முதலமைச்சர் பதவிக்கு களம் அமைக்கும் வகையில் அண்மையில் சண்டே லீடர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த பிள்ளையான், "இந்தப் பதவி தமிழர்களுக்கே உரித்தாக வேண்டும். அரசாங்கத்துடன் செயற்படுவதன் மூலம் எங்களால் அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமது தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியாக அரசாங்கத்தின் வளங்களை வெட்கமின்றி பயன்படுத்துகின்றது. அரசாங்கப் பிரதிநிதிகள் பிரச்சாரத்திற்காக உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர் என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அமைச்சர்கள் தமது ஊழியர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட நெருக்குவதாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அரசாங்கக் கட்சிகள் அரசுக்குச் சொந்தமான ஊடகத்தை தாராளமாகப் பயன்படுத்துகின்றன. அரசாங்கக் கட்சிகள் இரவு 9 மணி வரையும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள அதே வேளை, பொலிசார் எதிர்க் கட்சிகளை மாலை 6 மணியுடன் பிரச்சாரத்தை நிறுத்த நெருக்குகின்றனர். விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகளை கையாள்வதன் மூலம் தேர்தல் மோசடிகள் நடைபெறக்கூடும் என்பது பற்றி எதிர்க் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

 

யுத்தத்திற்கான கட்சி

அரசாங்கம் யுத்தத்திற்கான கட்சியாக தம்மை தெளிவாக முன்னிலைப்படுத்துகின்றது. வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் முகமாலையில் ஏப்பிரல் 22 அன்று ஒரு பெரும் இராணுவத் தாக்குதலை முன்னெடுத்தன் இலக்கு, குறைந்த பட்சம் பகுதியளவிலேனும், புலிகளுக்கு எதிராக சில துரித வெற்றிகளைப் பெறுவதோடு அரசாங்கக் கட்சியின் வாக்குப் பலத்தை பெருகச் செய்வதாக இருந்தது. நூற்றுக் கணக்கான துருப்புக்கள் உயிரிழந்து பின்னடைவைக் கண்ட இந்த மோதல் பற்றி செய்தி வெளியிடுவதை இராணுவம் விளைபயனுள்ள வகையில் தடுத்துள்ளது.

கிழக்கு நகரான தெஹியத்தகண்டியவில் கடந்த வாரம் நடந்த மே தினக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இராஜபக்ஷ, இராணுவத்திற்கும் வடக்கில் தற்போது நடக்கும் யுத்தத்திற்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என் வேண்டுகோள் விடுத்தார். "படையினர் கிழக்கில் புலிகளின் பொறியில் இருந்து மக்களை விடுவித்ததைப் போல், வடக்கில் உள்ளவர்களையும் விடுவிப்பர்" என அவர் பெருமையாகத் தெரிவித்தார். "ஆனால் அதற்கு உங்களது ஆதரவு தேவை. அது வடக்கையும் கைப்பற்ற எங்களுக்கு ஊக்கமளிக்கும்," எனத் தெரிவித்ததோடு பிரதான எதிர்க் கட்சியை கண்டனம் செய்த இராஜபக்ஷ, "யூ.என்.பீ.க்கு வாக்களிப்பதானது பிரபாகரனுக்கு (புலிகளின் தலைவர்) வாக்களிப்பதே," என பிரகடனம் செய்தார்.

வெறும் 37 மாகாண சபை ஆசனங்களுக்காக 1,342 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுதந்திரக் கூட்டமைப்பு, டீ.எம்.வி.பீ மற்றும் யூ.என்.பீ., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) போல், ஜே.வி.பி. மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பீ.டி.பீ.) தேர்தலில் போட்டியிடுகின்றது.

யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ.ல.மு.கா. இணைந்து தேர்தல் கூட்டொன்றை அமைத்துள்ளன. புலிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அப்பால், வலதுசாரி யூ.என்.பீ. 1983ல் யுத்தத்தை தொடக்கி அதை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முன்னெடுத்தமைக்குப் பொறுப்பாளியாகும். யுத்தத்தின் பொருளாதார தாக்கம் தொடர்பாக கூட்டுத்தாபன கும்பல்களின் கவலைக்கு பிரதிபலித்த யூ.என்.பீ. புலிகளுடன் 2002ல் யுத்தநிறுத்த உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டதோடு சமாதானப் பேச்சுவார்த்தையையும் தொடக்கியது. ஆனால், நிரந்தரமான முன்னேற்றங்கள் எதனையும் காணவில்லை. சமாதானப் பேச்சுக்களின் தேவையைப் பற்றி எப்போதாவது பேசும் அதே வேளை, இராஜபக்ஷ மீண்டும் யுத்தத்திற்குத் திரும்பியதை அக்கட்சி மெளனமாக ஏற்றுக்கொண்டது.

இனவாத முஸ்லிம் கட்சியான ஸ்ரீ.ல.மு.கா., கிழக்கு மாவட்டமான அம்பாறையில் கனிசமானளவு முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆதரவை கட்டியெழுப்பிக் கொண்டுள்ளது. மாகாணத்தில் உள்ள தமிழ் பெரும்பான்மையின் அடிப்படையில் கிழக்கின் சுயாற்சிக்கு குறுகிய வேண்டுகோள் விடுப்பதில் டீ.எம்.வி.பீ. காலூன்றிக்கொண்டுள்ள அதே வேளை, ஸ்ரீ.ல.மு.கா. மேலும் குறுகிய முறையில் அம்பாறை மாவட்டத்திற்கு அதிகாரத்தைப பரவலாக்குவது பற்றி விவாதிக்கின்றது. ஸ்ரீ.ல.மு.கா. பொதுச் செயலாளர் ஹசன் அலி கடந்த வாரம் வழங்கிய பேட்டியொன்றில், "பொருத்தமான அதிகாரப் பரவலாக்கல் முறையின்படி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களுக்கு ஒரு முஸ்லிம் அலகு" வேண்டும் என கட்சி விரும்புகிறது என பிரகடனம் செய்தார்.

யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ.ல.மு.கா. வும் தமது பிரச்சாரங்களில் டீ.எம்.வி.பீ. யின் குண்டர் நடவடிக்கைகள் மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனநாயக விரோத வழிமுறைகள் தொடர்பாக வாக்காளர் மத்தியில் உள்ள பரந்தளவிலான வெறுப்பை சுரண்டிக்கொள்கின்றன. பிரபாகரனுக்கு உதவுவதாக இராஜபக்ஷ சுமத்தும் குற்றச்சாட்டுக்கு, யூ.என்.பீ. தனது சொந்த இனவாத குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது. டீ.எம்.வி.பீ. தலைவர் பிள்ளையானை ஆதரிப்பதன் மூலம் "இன்னுமொரு பிரபாகரனை" அரசாங்கம் உருவாக்குவதாக அது குற்றஞ்சாட்டுகின்றது. இந்தக் கட்சிகளில் எதனிடமும் யுத்தம் மற்றும் சாதாரண உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள சமூக நெருக்கடிக்கு தீர்வு கிடையாது.

ஜே.வி.பீ. வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அதே வேளை, இந்தியாவின் அழுத்தத்தின் கீழேயே அரசாங்கம் இதை நடத்துவதாக கூறி மாகாண சபை தேர்தல்களை எதிர்க்கின்றது. ஜே.வி.பீ. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதை மட்டுமன்றி, மாகாண மட்டத்தில் எந்தவொரு அதிகாரத்தையும் பகிர்ந்தளிப்பதையும் எதிர்க்கின்றது. அத்தகைய பகிர்வு புலிகளுக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் வழங்க முடியாத சலுகைகளாக அது கருதுகிறது. 1987ல் மாகாண சபைகள் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட போது, ஜே.வி.பீ. இந்திய இலங்கை உடன்படிக்கையையும் இந்தியத் துருப்புக்கள் தலையிடுவதையும் பாசிசப் பிரச்சாரத்துடன் எதிர்த்தது. இந்தியாவுக்கு எதிராக தேசியவாத எதிர்ப்பைக் மீண்டும் கிளறிவிடுவதன் மூலம் ஜே.வி.பி. தேர்தலில் வாக்குகளை சேகரிக்க முயற்சிக்கின்றது. தென்னிந்தியாவில் தமிழர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள இந்தியா, இலங்கையின் கிழக்கில் அரசியல் உரிமைகளுக்காக நெருக்கியது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றதில் உச்சகட்டத்தை அடைந்த கசப்பான பிளவுகளில் ஜே.வி.பீ. மூழ்கிப் போயுள்ளது. யுத்தத்தை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்துடன் நெருங்கிய கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் வீரவன்ச குழு, கிழக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு சுற்றிவளைத்து அழைப்பு விடுக்கின்றது. ஏப்பிரல் 29 அன்று நடந்த பத்திரிகையாளர் மாநாடொன்றில் பேசிய விமல் வீரவன்ச, யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ.ல.மு.கா. வும் புலிகளுக்கு அடைமானமாகியுள்ளன என்ற அரசாங்கத்தின் கண்டனத்தோடு இணைந்து கொண்டார். வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைக்க விரும்புவதாக எதிர்க் கட்சிகளை அவர் குற்றஞ்சாட்டினார். வீரவன்சவின் பங்காளிகளில் ஒருவரான, தேசபக்த தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, இந்த தேர்தலானது "தேசப்பற்றுள்ளவர்களுக்கும்" யூ.என்.பி. மற்றும் ஸ்ரீ.ல.மு.கா. தலைமையிலான "ஏகாதிபத்திய சக்திகளுக்கும்" இடையிலான போட்டி எனப் பிரகடனம் செய்தார்.

யுத்தம் சம்பந்தமான பரந்த எதிர்ப்புக்கும் மற்றும் வாழ்க்கைச் செலவு சீரழிவு தொடர்பான எதிர்ப்புக்கும் முகங்கொடுத்துள்ள அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள வீரவன்ச விடுத்த அழைப்பை ஜே.வி.பி. எதிர்த்தது. இராஜபக்ஷவின் அரசியலுடன் தம்மை மிகவும் நெருக்கமாக அடையாளப்படுத்திக்கொள்வதானது ஏற்கனவே சரிந்துவரும் கட்சியின் ஆதரவை மேலும் கவிழ்த்துவிடும் என ஜே.வி.பீ. தலைவர்கள் பீதியடைந்துள்ளனர். கட்சியை தூர வைத்துக்கொள்ளும் முயற்சியாக, "மிகவும் மோசடியான" தேர்தலின் ஊடாக ஆட்சியைப் பற்றிக்கொள்ள அரசாங்கம் செயற்படுகின்றது என ஜே.வி.பீ. பாராளுமன்ற உறுப்பினர் அணுர குமார திசாநாயக்க கடந்த திங்கட் கிழமை குற்றஞ்சாட்டினார்.

ஈ.பீ.டி.பீ. இலங்கை இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படும் இன்னுமொரு தமிழ் துணைப்படையாகும். எவ்வாறெனினும், இராஜபக்ஷ டீ.எம்.வி.பீ. க்காக தனது கூட்டணி அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கும் ஈ.பீ.டி.பீ. யை விளைபயனுள்ள வகையில் ஒதுக்கிவிட்டார். குறுகிய கிழக்குப் பிரதேசவாதத்தை அடிப்படையாகக் கொண்ட டீ.எம்.வி.பீ, அங்கு ஈ.பீ.டி.பீ. தம்மை ஸ்தாபிக்க எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக உள்ளது. ஈ.பீ.டி.பீ பெருமளவில் யாழ்ப்பாணக் குடாநாட்டை தளமாகக் கொண்ட குழுவாகும்.

புலிகளுக்குச் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னர் கிழக்கில் பெரும் பாராளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருந்த போதும், மாகாண சபை தேர்தலில் அது போட்டியிடவில்லை. இந்தத் தீர்மானத்தின் ஒரு பகுதி, தமது வேட்பாளர்கள் டீ.எம்.வி.பீ. துணைப்படையினரால் இலக்குவைக்கப்படுவார்கள் என்ற நியாயமான பீதியேயாகும். 2005ல் இருந்து பல தமிழ் கூட்டமைப்பு முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றுக்கு இராணுவம் அல்லது டீ.எம்.வி.பீ. பொறுப்பு என பரவலாக நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு, பல தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திச் சென்ற டீ.எம்.வி.பீ., குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் கடத்தியவர்களை கொல்வதாக அச்சுறுத்தியது. சமாதானப் பேச்சுக்களின் ஊடாக "தமிழ் தாயகத்திற்கு" சுயாட்சி வடிவம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை மூழ்கடித்த வடக்கு கிழக்கு பிரிப்பை தமிழ் கூட்டமைப்பும் கசப்புடன் எதிர்க்கின்றது.

திங்கட் கிழமை வரை கடந்த மாதம் பூராவும் நடந்த பிரச்சாரத்தில், 49 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பஃபரல்) என்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 20 சம்பவங்கள் அரசாங்க வேட்பாளர்களுக்கு டீ.எம்.வி.பீ. தலைமை வகிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்தவையாகும். இங்கு அதிகமான முறைப்பாடுகள் துணைப்படைகளுக்கு எதிராகவே பதிவாகியுள்ளன. "இந்த சம்பவங்களை பொலிசார் அவதானித்தாலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என மே 4ம் திகதி பஃபரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் டீ.எம்.வி.பீ. க்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதன் மூலம், நாளைய தேர்தலுக்கும் ஜனநாயக உரிமைக்கும் அல்லது மக்கள் ஆட்சிக்குத் திரும்புவதற்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தீவின் எனைய பகுதிகளில் எந்தவொரு அரசியல் விரோதத்திற்கு எதிராவும் இத்தகைய ஜனநாயக-விரோத நடவடிக்கைகள் எடுக்க இராஜபக்ஷ அரசாங்கம் தயங்காது என்ற தெளிவான எச்சரிக்கையையும் விடுக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved