World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan soldiers and families speak to the WSWS இலங்கை இராணுவச் சிப்பாய்களும் குடும்பத்தவர்களும் WSWS உடன் உரையாடினர் By our reporters இலங்கையில் முகமாலை-நாகர்கோவில்-கிளாலி பிரதேசங்களில் ஏப்பிரல் 22-24 வரை நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்துத் தாக்கியதை அடுத்து நூற்றுக்கணக்கான காயமடைந்த சிப்பாய்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த படை நடவடிக்கையில் சுமார் 800 துருப்புக்கள் நேரடியாக ஈடுபட மேலும் 5,000 துருப்புக்கள் உதவின. வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலாலி இராணுவ ஆஸ்பத்திரி, வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம் வைத்தியசாலை, கொழும்பில் தேசிய மற்றும் இராணுவ ஆஸ்பத்திரி மற்றும் கொழும்பு புறநகர் பகுதியில் களுபோவில மற்றும் ஜயவர்தனபுர வைத்தியசாலைகளிலும் காயமடைந்த சிப்பாய்கள் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தோல்வியின் அரசியல் தாக்கத்தைப் பற்றி விழிப்படைந்துள்ள அரசாங்கம், பத்திரிகையாளர்கள் ஆஸ்பத்திரிகளுக்குச் செல்வதற்கு தடையை நடைமுறைப்படுத்தயுள்ளது. காயமடைந்த சிப்பாய்கள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிகளின் நுழைவாயில்களை இராணுவ பொலிசார் காவல் காக்கின்றனர். தேசிய ஆஸ்பத்திரியின் விபத்துச் சேவை பிரிவின் ஆணையாளர் டாக்டர் அனில் ஜயசிங்க, தன்னால் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத் முடியாது எனவும் செய்தியாளர்களை உள்ளே அனுப்ப முடியாது எனவும் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார். உயிரிழந்த படையினரின் குடும்பங்களுடன் பத்திரிகையாளர்கள் பேசுவதை தடுப்பதன் பேரில் மலர்ச்சாலைகளுக்கு அருகில் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் கொழும்பு ஆஸ்பத்திரியில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ள சில சிப்பாய்களுடன் பேசினர். அவர்களது சொந்த பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களது பெயர்களை வெளியிட முடியாதுள்ளது. அனைவரும் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். நாங்கள் வாட்டுக்குள் சென்ற போது, அங்கிருந்த இளைஞர்களை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் இளமை வாழ்க்கையை ஆரம்பித்திருந்த அவர்கள் மோசமாக முடமாக்கப்பட்டுள்ளார்கள். சிலரது கால்கள் துண்டிக்கப்பட்டிருந்த அதே வேளை, ஏனையோர் கைகளை இழந்துள்ளனர் அல்லது முழுமையாக செவிடாகியிருந்தனர். அவர்களது உறவினர்கள் பிரதானமாக பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்களும் மிக வறியவர்களுமாவர். அவர்களது முகங்கள் அதிர்ச்சியாலும் வேதனையாலும் வாடிப் போயிருந்தன. பெரும்பாலான சிப்பாய்கள் வறிய கிராமப்புறத்தைச் சேர்ந்த பொருளாதாரத்திற்காக இராணுவத்தில் சேர்ந்தவர்கள். அவர்கள் வேலையின்மையாலும் வறுமையாலும் இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்டவர்கள். இந்த சிப்பாய்கள் முகமாலை, நாகர்கோவில் மற்றும் கிளாலி முகாம்களில் இருந்து போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல் ஏப்பிரல் 22 அன்று சுமார் இரவு 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. சில பிரதேசங்களில் துருப்புக்களால் புலிகளின் பிராந்தியத்திற்குள் முதலில் முன்செல்லக்கூடியதாக இருந்தது. ஆனால், பின்னர் மோட்டார் மற்றும் 81 மில்லி மீட்டர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி புலிகள் தாக்கத் தொடங்கினர். புலிகள் தங்களை முதலில் முன்னேற அனுமதித்து பின்னர் தாக்குதல் நடத்தும் வகையில் தங்களுக்கு பொறி வைத்திருந்ததை இப்போது உணர்வதாக சிப்பாய்கள் எங்களிடம் தெரிவித்தனர். இந்த படை நடவடிக்கையில் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்பது பற்றி இந்த சிப்பாய்கள் அறிந்திருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னரே நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பர் என அவர்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். மோதலுக்கு செல்லும் முன் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் வெறுமனே அதிகாரிகளின் கட்டளைகளின்படி முன்னேறியுள்ளனர். பின்புறமும் முழங்கைக்கு மேலும் சுடப்பட்டுள்ள 26 வயதான படை சிப்பாய் தெரிவித்ததாவது: "எனது அப்பா ஒரு விவசாயி. அவர் 15 ஆண்டுகளாக பாரிசவாதத்தால் அவதிப்படுகின்றார். எனது தாயார் இறந்துவிட்டார். எனது குடும்பத்தின் கடுமையான வறுமை காரணமாக எனது மூத்த சகோதரர் இராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 18 வயது. பின்னர் நானும் இணைந்துகொண்டேன். "நான் ஒரு நல்ல உடற்பயிற்சி போட்டியாளர். எனவே என்னை பனாகொடையில் உள்ள இராணுவ உடற் பயிற்சி நிலையத்தில் சேர்த்துக்கொண்டார்கள். நான் ஆரம்பத்தில் உடற்பயிற்சி போதகராக பணியாற்றினேன். இப்போது நான் திருமணம் முடித்து எனது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். எனது அப்பா மற்றும் சகோதரர் உட்பட எனது குடும்பத்தை பராமரிப்பவன் நானே. "உடற் பயிற்சி போதகர்களை யுத்தக் களத்திற்கு அனுப்பமாட்டார்கள் என நான் நினைத்தேன். மாணவர் படைப் பிரிவுகளை அமைக்க பாடசாலைகளுடன் எங்களை இணைக்கப்போவதாக ஒரு முறை எங்களுக்குத் தெரிவித்தார்கள். முன்னர் நடந்த ஒரு மோதலில் எனது சகோதரர் தனது கால் ஒன்றை இழந்துவிட்ட காரணத்தால் அது ஒரு சிறந்த மாற்றீடாக இருக்கும் என நான் நினைத்தேன். ஒருமுறை நாங்கள் உடல் ஊனமுற்றால் எங்களால் சாதாணமானவர்கள் போல் தொழில் தேடிக்கொள்ள முடியாது. "ஜனாதிபதியும் அமைச்சர்களும் மற்றும் இராணுவ அதிகாரிகளும் யுத்தம் விரைவில் முடிவுறும் எனக் கூறிக்கொண்டாலும் அது முடிவின்றி இழுபடும் என நான் நினைக்கின்றேன். இந்த மோதலின் அனுபவத்தில் அது தெளிவாகின்றது. நாங்கள் திருப்பி விரட்டப்பட்டுள்ளோம். நாங்கள் தாக்கப்படும் போது எங்களுக்கு மேலதிக சுடு சக்தி வழங்கப்படவில்லை. பின்னர் அது வழங்கப்பட்ட போதிலும் நடக்கவேண்டியவை எல்லாம் நடந்து முடிந்துவிட்டன." 26 வயதே ஆன இன்னுமொரு சிப்பாய்: "நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 18 வயதில் இராணுவத்தில் சேர்ந்தேன். நாங்கள் வறிய கிராமத்தவர்கள் என்ற காரணத்தால் எல்லா இளைஞர்களும் இராணுவத்தில் சேர்ந்தனர். எங்களுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தாலும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விடுமுறை கிடைக்காததால் எங்களது நண்பர்கள் எவரையும் எங்களுக்கு காணக் கிடைக்காது. "எனது அப்பா, அம்மா மற்றும் சகோதரி -குடும்பத்தில் அனைவரும்- எனது வருமானத்திலேயே தங்கியிருக்கின்றனர். கடுமையான காயங்களுடன் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. முதலில் நான் காயமடைந்த போது எனது வலது காது செவிடாகிவிட்டது. இம்முறை நான் எனது வலது கையையும் இழந்துவிடுவேன் போலத் தெரிகிறது. அதாவது என்னால் வேலை செய்ய முடியாமல் போகும். "என்னை மணம் முடிக்க எனது கிராமத்தில் ஒருத்தி நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். சிறிது பணம் சேகரித்துக்கொண்டு வீடு ஒன்றைக் கட்டும் எண்ணத்தில் கலியாணத்தை ஒத்தி வைத்தேன். நான் முதல் தடவை காயம்பட்ட போது அந்த இலக்கை அடைய முயற்சித்துக்கொண்டிருந்தேன். நான் ஒரு சிப்பாய் என்பதால் சாஸ்திரத்தின் படி இந்த வருடம் எனக்கு காலக்கேடான வருடம் என மணமகளின் பெற்றோர்கள் நம்புகின்றனர். எனவே திருமணம் மீண்டும் ஓத்திவைக்கப்பட்டது. "குழியினுள் விழுந்தால் அதே குழியின் வாயில் ஊடாகவே வெளியில் வர வேண்டும். எனவே நான் சேவையில் கோரப்பட்டுள்ள ஆண்டுகாலத்தை முடித்துவிட்டு பின்னர் ஓய்வு பெறுவேன்," என அவர் தெரிவித்தார். சிப்பாய் ஒருவரின் மாமியார் எமது வலைத் தளத்துக்கு ஆத்திரத்துடன் தெரிவித்ததாவது: "இராஜபக்ஷவின் அரசாங்கம் [2005 நவம்பரில்] ஆட்சிக்கு வந்த பின்னர், யுத்தம் விரைவில் முடிவடைந்து சமாதானம் வந்து வாழ்க்கை நிலைமைகள் முன்னேறும் என நாம் நினைத்தோம். குறுகிய எதிர்காலத்தில் இதில் ஏதாவதொன்று நடைபெறும் என்பதற்கான அறிகுறிகளே கிடையாது." சிப்பாய் ஒருவரின் மனைவி அழுத்தமாகத் தெரிவித்ததாவது; "அவர் (கணவர்) மீண்டும் யுத்தத்திற்கு செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர் முதலில் காயமடைந்த போதும் மீண்டும் யுத்த களத்திற்கு செல்லவேண்டாம் என நான் கெஞ்சினேன். ஆனால் குடும்பத்திற்கு உணவு மற்றும் உடை வழங்க வேறு வழியில்லை எனக் கூறி அவர் சென்றார்." உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கொழும்பில் இருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோஹோம்பவத்த என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார்கள். அங்கு எஸ்.எம். சிசிரகுமாரவின் மரணச் சடங்கு நடைபெற்றது. 23 வயதான அவர், ஏப்பிரல் 23 முகமாலையில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட படைச் சிப்பாய்களில் ஒருவராவார். துயரத்தில் ஆழ்ந்து போன அவரது தாயார் எச்.ஏ. குசுமாவதி எமது நிருபர்களிடம் விளக்கியதாவது: "நான் பாடசாலை சென்றதில்லை. எனது ஐந்து மகன்களையும் படிக்கவைக்க நான் விரும்பினேன். சிசிரகுமார 2000 ஆண்டில் இராணுவத்தில் சேர விரும்பிய போது நான் அதை எதிர்த்ததோடு கல்வியைத் தொடருமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், வீட்டில் வறுமை காரணமாக அவர் இராணுவத்தில் இணைந்துகொண்டார். எனது ஐந்து மகன்களில் அவர் நான்காவது ஆவர். "அப்போதிருந்து அவர் பல தடவை இராணுவத்தை விட்டு வெளியேறி இருந்தாலும் வேறு ஜீவனோபாயங்கள் இன்றி மீண்டும் அவர் அதிலேயே சேர்ந்துகொண்டார். ஜனவரியில் மீண்டும் சேர்ந்த பின்னர் எனது மகன் முன்னரங்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் மே மாதம் விடுமுறையில் வீட்டுக்கு வர விரும்பிய போதிலும், அதற்குப் பதிலாக ஏப்பிரலிலேயே சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டியில் வந்தார். சிசிரகுமார இராணுவத்தில் சேர்ந்த பின்னர், அவரது மூத்த சகோதரரும் இராணுவத்தில் சேர விரும்பினார். ஆனால் அது மிகவும் ஆபத்தானது எனக் கூறி சிசிரகுமார அவரை இணையவேண்டாம் என எச்சரித்தார்." சிசிரகுமார திருமணம் முடித்திருப்பதோடு அவருக்கு நான்கு வயது மகளும் இருக்கிறார். அவரது மனைவி மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்னாக வேலை செய்ய பாஹரின்னுக்கு சென்றிருந்ததோடு அவரால் மரணச்சடங்கிற்கு வர முடியவில்லை. கோஹோம்பவத்த மற்றும் அதை அன்டிய கிராமங்களில் உள்ள மக்கள் மிகக் கொடிய வறுமையில் வாழ்கின்றார்கள். பெரும்பாலான கிராமத்தவர்கள் பெரும் தென்னந் தோட்டங்களில் அல்லது தெங்கு ஆலைகளில் முறையே 250 (2.30 அமெரிக்க டொலர்) மற்றும் 300 ரூபா நாள் சம்பளத்திற்கு நாள் கூலிகளாக வேலை செய்கின்றார்கள். நாள் கூலிக்கு வேலைசெய்தும் மற்றும் ஏனைய சிறு சிறு தொழில்களை செய்தும் குசுமாவதி தனது மகன்களை பராமரித்து வந்தார். சிசிரகுமாரவின் சகோதரர் உபாலி, 2002 யுத்த நிறுத்தம் இருந்த போது வடக்கில் வீதி புனரமைப்பு திட்டத்தில் மேசனாக தொழில் செய்தார்: "யுத்தத்தின் காரணமாக வடக்கில் உள்ள மக்கள் உதவியற்றவர்களாகவும் மிகவும் வறியவர்களாகவும் உள்ளனர். நாங்கள் அங்கு வேலை செய்யும் போது அவர்கள் எங்களுடன் மிக சினேகிதமாக நடந்துகொள்வர். அவர்கள் யுத்தத்தை விரும்பவில்லை. இந்த மக்களுக்கு சிங்கள அரசியல்வாதிகள் பல அநியாயங்களை செய்துள்ளனர். தமிழர்கள் மனதில் உள்ள காயங்களை யுத்தத்தால் தோற்கடிக்க முடியாது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் நாங்களும் தாங்க முடியாத நிலைமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தம் இத்தகைய பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை." |