World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan army suffers a debacle as a northern offensive collapses வடக்கில் தாக்குதல் பொறிந்துள்ள நிலையில் இலங்கை இராணுவம் படு வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது By Sarath Kumara முகமாலை மற்றும் கிளாலிக்கு அருகில் நடத்திய இராணுவத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியதை அடுத்து இலங்கை இராணுவம் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சரியான தரவுகள் இல்லாத போதிலும் குறைந்துபட்சம் 140 படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு 300 பேர்வரை காயமடைந்துள்ளனர். அரசாங்கத்தின் கடுமையான தணிக்கை நடவடிக்கைகளின் ஊடாக இந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் வடிகட்டப்படுகின்ற நிலையில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ நிச்சயமாக கூடுதலாக இருக்கக்கூடும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2006 ஜூலையில் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியதோடு 2002ல் புலிகளுடன் கைச்சாத்திட்டுக்கொண்ட உத்தியோகபூர்வ யுத்த நிறுத்தத்தையும் இந்த ஆண்டு முற்பகுதியில் கிழித்தெறிந்தார். அவரது ஆட்டங்கண்டு போன கூட்டரசாங்கமும் பாதுகாப்பு ஸ்தாபனமும் இந்த ஆண்டு முடிவில் புலிகளை விரைவில் இலகுவாக தோற்கடிப்பதாக வாக்குறுதியளித்திருந்தனர். இதன் விளைவாக, எந்தவொரு இராணுவ பின்வாங்கலும் அரசாங்கத்திற்கு கடுமையான அரசியல் நெருக்கடியை தூண்டிவிடும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஆளும் வட்டாரத்திற்குள் தெளிவான கவலைகள் உள்ளன. இராணுவ ஸ்தாபனத்துடன் நெருங்கிய் தொடர்புள்ள செய்தியாளரான ஷாமிந்ர பெர்னாண்டோ, "புலிகள் யாழ்ப்பாண முன்னரங்கில் அழிவுகரமான எதிர்த் தாக்குதல்களுடன் அரசாங்கத்தை குலுக்கியுள்ளனர். இராணுவப் பிரச்சாரத்தின் முழு செயற்பாட்டிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், ஆற்றல் குறைந்துபோன காலாட்படை பிரிவுகளை திருப்பிக் கட்டியெழுப்புவதானது ஒரு கடுமையான பணியாகும்," என வெள்ளிக்கிழமை ஐலண்ட் பத்திரிகையில் எழுதியிருந்தார். உயிரிழப்புக்களின் அளவு உட்பட தோல்வியின் விபரங்களையும் மூடி மறைப்பதற்காக அரசாங்கமும் இராணுவ உயர் மட்டத்தினரும் வெளிப்படையாக முயற்சித்தனர். காயமடைந்த சிப்பாய்கள் மற்றும் உறவினர்களுடன் ஊடகவியலாளர்கள் பேசுவதை தவிர்க்கும் பொருட்டு ஆஸ்பத்திரிகளிலும் ஈமச்சடங்கு சாலைகளுக்கு வெளியிலும் பொலிசாரும் படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர். உலக சோசலிச வலைத் தளம், கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் விபத்துச் சேவையின் இயக்குனரான டாக்டர் அனில் ஜயசிங்கவை தொடர்புகொண்ட போது, விபரங்களை வழங்கக் கூடாது எனவும் ஊடகவியலாளர்களின் வருகையை தடுக்க வேண்டும் எனவும் தனக்கு "மேலிடத்தில் இருந்து" உத்தரவு வந்திருப்பதாகத் தெரிவித்தார். ஏப்பிரல் 23 வட இலங்கையில் என்ன நடந்தது என்பது பற்றிய உத்தியோகபூர்வ தரவுகள், தட்டிக்கழித்தல், இருட்டடிப்பு மற்றும் பொய்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்தது ஒரு தோல்விகண்ட தாக்குதலோ அல்லது பதுங்கித் தாக்குதலோ அல்ல என அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் பேச்சாளர் மறுத்து வருகின்ற அதே வேளை, புலிகளின் தாக்குதலை அடுத்து புலிகளின் முன்னரங்குப் பகுதிகளை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக தொடர்ந்தும் அவர் வலியுறுத்துகின்றார். எவ்வாறெனினும் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய காயமடைந்த படையினர், தமக்கு முன்னேறிச் செல்லுமாறும் பொறிக்குள் நுழையுமாறும் கட்டளையிடப்பட்டதாக முற்றிலும் உறுதிப்படுத்தினர். புதன் கிழமை விடியற்காலை 2.30 மணிக்கு மோதல்கள் வெடித்ததோடு சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரையான நீண்ட ஒடுங்கிய நிலப்பரப்பில் 12.40 மணிவரை சண்டை தொடர்ந்து நடைபெற்றது. இந்தப் பிரதேசம் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் பிரதேசமாகும். இந்தத் தாக்குதலின் நோக்கம், 2000 த்தில் இராணுவம் புலிகளிடம் இழந்த ஆனையிறவு உட்பட புலிகளின் நிலைகளை மேலும் தெற்கு நோக்கி கைப்பற்றுவதாகும் என்பது தெளிவு. கிளிநொச்சியில் புலிகளின் தலைமை தளம் உட்பட வன்னி பிராந்தியத்தில் புலிகளின் கோட்டைகள் அடுத்து தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம். கடந்த ஞாயிற்றுக் கிழமை சண்டே டைம்ஸ் பத்திரிகையின் "நிலவர அறிக்கை", முன்னரங்க நிலைகள் தொடர்பாக ஒரு மங்களான சித்திரத்தை வரைந்திருந்தது. "முகமாலை என்பது யுத்தத்தில் தனித்திறங்கொண்டதாகக் கருதப்படும் சாதகமற்ற நிலப்பகுதி என்பது எந்தவொரு படை சிப்பாய்க்கும் தெரியும். தெளிவான சூரிய வெளிச்சம் இருக்கும் போது, சோறு கறியுடன் அவர்கள் கைகளில் பிடித்திருக்கும் சாப்பாட்டுத் தட்டின் மீது தூசி போன்ற மணலை காற்று அள்ளி தூவிச்செல்லும். மழை பெய்யும் போது நிலம் ஈரஞ்செறிந்திருப்பதோடு கொசுக்களால் வரும் கேடும் அச்சுறுத்தும்." இந்த மாத முற்பகுதியில் வடக்கில் யுத்தப் பிரதேசங்களுக்கு பயணிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட ஒருசில பத்திரிகையாளர்களில் இந்தப் பத்திரிகையின் இக்பால் அத்தாஸும் ஒருவர். "வடக்கில் சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் சமிக்ஞை செய்தவாறு" இராணுவம் ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகிறது என்பதில் அவருக்கு சந்தேகம் இருக்கவில்லை. இந்த இராணுவ நடவடிக்கைக்கு காலத்தை முடிவு செய்வதானது மே 10ம் திகதி கிழக்கில் நடைபெற உள்ள மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்துடன் கட்டுண்டதாகும். இராணுவ வெற்றியொன்று தமக்குள்ள வாய்ப்புக்களை அதிகரிக்கும் என அரசாங்கம் தெளிவாக கணக்குப்போட்டிருந்தது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குச் சென்று அங்கு எதிர்கால யுத்த திட்டங்கள் பற்றி சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் பேசிவிட்டுத் திரும்பிய ஆறு மணித்தியாலங்களுக்குள் வியாழக்கிழமை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக டெயிலி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வுபெறுவதற்கு முன்னதாக "பயங்கரவாதப்" பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக இந்த ஆண்டு முற்பகுதியில் பொன்சேகா தற்பெருமையுடன் கூறிக்கொண்டார். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தொடக்கத்தில் இந்த இராணுவ நடவடிக்கை தற்காப்பு தாக்குதலே அன்றி எதிர்த்தாக்குதல் அல்ல என வலியுறுத்தினார். ஆயுதப் படைகள் "புலிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்திவிட்டனர்" என அவர் பிரகடனம் செய்தார். இராணுவ இழப்பு மிகச் சிறியது எனவும், புலிகளின் கடுமையான பாதுகாப்பில் இருந்த முதலாவது முன்னரங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் 52 பேர் கொல்லப்பட்டும் 100 பேர்வரை காயமடைந்துள்ளனர் என அவர் கூறிக்கொண்டார். பின்னர் விளக்கங்கள் எதுவும் இன்றி உயிரழந்த புலிகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்திய அவர் 500 மீட்டர் தூரம்வரை தாம் முன்னேறியுள்ளதாகவும் அறிவித்தார். எவ்வாறெனினும், இந்தக் கதை விரைவில் பொறிந்து போனது. கடந்த வியாழக்கிழமை நன்பகல் அளவில், 43 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவம் ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டது. மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 28 இராணுவத்தினரின் சடலங்களை ஒப்படைத்ததை அடுத்தே அந்த எண்ணிக்கையில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒரு தெளிவான கேள்வி எழுகின்றது: இராணுவம் முன்னேறிச் சென்றிருந்தால் புலிகள் போர்க்களத்தில் இருந்து இராணுவத்தின் சடலங்களை எப்படி எடுத்தனர்? இராணுவம் இதற்கு பதிலளிக்கவில்லை. இராணுவ உயிர்ச் சேதங்கள் மிகவும் அதிகம் என ஏனைய செய்திகளும் வியாழக்கிழமை சுட்டிக்கட்டின. யுத்தத்திற்கு முழுமையாக ஆதரவளிக்கும் ஐலண்ட் பத்திரிகை, உயிரிழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 140 எனவும் காயமடைந்தவர்கள் 200 பேர் எனவும் மதிப்பிட்டுள்ளது. கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள மலர்ச்சாலைகளில் 143 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் தெரிவித்துள்ளது -இதில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளால் ஒப்படைக்கப்பட்ட சடலங்கள் சேர்க்கப்படவில்லை. இந்த இணையம், 368 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 286 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களின் படங்களை வெளியிட்டிருந்ததோடு 25 புலி உறுப்பினர்கள் மோதலில் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியது. இரு தரப்பினரும் தமது "வெற்றியை" பெருப்பித்துக் காட்டுவதிலும் இழப்பை சிறியதாகக் காட்டுவதிலும் பேர் போனவர்கள். அரசாங்கம் யுத்த முன்னரங்குப் பகுதியின் நிலைமைகள் தொடர்பாக சுயாதீனமாக செய்தி வெளியிடுவதை தடை செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் மாநாடொன்றில் அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளர் கேஹெலியே ரம்புக்வெல்லக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்களில் இருந்து உத்தியோகபூர்வ பிரதிபலிப்பின் தட்டிக்கழிக்கும் பண்பு தெளிவாகின்றது. கேள்வி: இது ஒரு இராணுவப் பேரழிவு என சில செய்திகள் சொல்கின்றன? கேஹெலியே ரம்புக்வெல்ல: நிச்சயமாக இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனையிறவில் 1,500 பேர் உயிரிழந்த போதுதான் பேரழிவு ஏற்பட்டிருந்தது. கேள்வி: இது ஒரு பின்னடைவா? ரம்புக்வெல்ல: நாங்கள் முன்னால் நகர்ந்திருக்கின்றோம். எனவே இது பின்னடைவு அல்ல. நாங்கள் பின்வாங்கியிருந்தால் அதை நீங்கள் பின்னடைவு என சொல்ல முடியும். கேள்வி: துருப்புக்கள் முன்நகர்ந்த போதுதான் புலிகள் தமது ஆட்டிலறி மற்றும் மோட்டார் நிலைகளை படையினர் மீது தாக்குவதற்கு பயன்படுத்தினரா? இது குறிப்பிடத்தக்கவாறு பதுங்கியிருந்து நடத்திய தாக்குதல். புலிகளின் பொறிக்குள் இராணுவத்தினர் விழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. ரம்புக்வெல்ல: ஒருவர் அதை அவ்வாறு திரிபுபடுத்த முடியும். 30 வருடமாக நடைபெறும், இந்த வகையிலான மோதலில் ஈடுபடும் போது நிலைகுலைவுகள் ஏற்படுவதுண்டு. இவற்றுக்கிடையில் நாம் கடுமையாக சமர் செய்துள்ளோம், மற்றும் அது வழமையான தாக்குதலின் பாகமாகும். இதுவரை இராணுவத்தைப் பொறுத்தளவில் அவர்கள் முன்நகர்ந்துள்ளார்கள் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு. அவர்கள் தங்களை ஸ்தாபித்துக்கொண்டுள்ளார்கள். இதுவே இலக்கு. அவர்கள் 500 மீட்டர்கள் முன்நகர்ந்துள்ளனர். அரசியல் நம்பிக்கை இழந்த நிலை ரம்புக்வெல்லவின் கருத்துக்கள் படையினரின் உயிர்களை சிடுமூஞ்சித்தனமாக அலட்சியம் செய்கின்றன. கடந்த இரு ஆண்டுகால மோதல்களில் கொல்லப்பட்ட, முடமாக்கப்பட்ட அல்லது இடம்பெயர்ந்துள்ள பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பற்றி சொல்லவேண்டியதில்லை. 2006 அக்டோபரில் இதே பிரதேசத்தில் தோல்வி கண்ட தாக்குதல் ஒன்றில் சுமார் 400 படையினர் உயிரிழந்த பின்னர், இலங்கை இராணுவம் எதிர்கொண்ட மோசமான "பின்னடைவு" இதுவாகும். நவம்பரில், முகமாலை பிரதேசத்தில் இன்னுமொரு இராணுவ வீரச்செயலும் இதே போன்ற தோல்வியில் முடிந்தது. இதில் பெருந்தொகையான படையினர் உயிரிழந்தனர். புலிகளின் வடக்கு கோட்டையை கைப்பற்றுவதற்கான ஒரு புதிய முயற்சியில் பெருந்தொகையான அல்லது நூற்றுக்கணக்கான துருப்புக்களின் உயிர்களை பலிகொடுக்க எடுத்த முடிவானது அரசாங்கத்தின் அவநம்பிக்கையான நிலையை அளந்து காட்டுகிறது. 2006 ஜூலையில் தொடங்கி, புலிகளை கிழக்குத் தளங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு இலங்கை பாதுகாப்புப் படைகளால் முடிந்தது. இது ஒப்பீட்டளவில் 2004ல் புலிகளின் உறுப்பினர்களுக்குள்ளேயே நடந்த பெரும் பிளவின் உதவியுடன் இலகுவாக இருந்தது. கடந்த ஜூலையில், "கிழக்கில் வெற்றியைப்" பயன்படுத்தி தேசபக்தி வெறியார்வத்தை கிளறிவிட்ட பின்னர், அரசாங்கமும் இராணுவமும் தமது பார்வையை வடக்கின் மீது திருப்பின. வடமேல் மாவட்டமான மன்னாரில் உக்கிரமான மோதல்கள் தொடங்கின. ஜனவரில் வட கிழக்குப் பிரதேசமான மணலாறு பகுதியில் இன்னுமொரு போர்க்களம் திறக்கப்பட்டது. ஆயினும், புலிகள் தமது இடரார்ந்த நிலையிலும் இராணுவம் திறந்துவிட்ட சகல போர்க்களத்திலும் எதிர்த்துத் தாக்கிய நிலையில் மோதல்கள் முட்டுக்கட்டை நிலையை அடைந்தன. முகமாலை தாக்குதலானது புலிகளின் பிரதான நிலைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடிய ஒரு மூன்றாவது மோதல் களத்தை திறந்துவிடுவதற்கான ஒரு அவசரமான முயற்சியாகும். கடந்த வார தோல்விக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது கண்மூடித்தனமான விமானத்தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதே அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. புதன் கிழமை மாலை, விமானப்படை யுத்த விமானங்களும் ஹெலிகொப்டர்களும் முகமாலையில் புலிகளின் நிலைகள் என சொல்லப்பட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தின. அடுத்த நாள், தற்கொலைப் போராளிகளை பயிற்றுவிக்கும் முகாம் என சொல்லப்பட்ட, புலிகளின் தளம் ஒன்று பனிக்கன்குளத்தில் தாக்குதலுக்குள்ளானது. ஒரு "வெற்றியை" அறிவிக்கும் மூர்க்கத்தில் இருந்து, வாரக்கணக்கான கசப்பான மோதல்களை அடுத்து வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தை அரசாங்கத் துருப்புக்கள் கைப்பற்றிக்கொண்டன. முகமாலை தாக்குதல் தோல்வியடைந்து இரண்டு நாட்களின் பின்னர், கொழும்பு புறநகர் பகுதியான பிலியந்தலையில் நேரக்குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக 26 பேர் பலியாகினர். தமிழ் பிரிவினைவாதம் என்ற பிற்போக்கு இனவாத திருஷ்டியை அடிப்படையாகக் கொண்ட புலிகள், இதற்கு முன்னர் இத்தகைய அட்டூழியங்களை செய்துள்ளதோடு இந்தக் குண்டுத் தாக்குதலுக்கும் பொறுப்பாளிகளாக இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், யுத்த ஆதரவு வெறியை கிளறிவிடுவதற்கு அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் பேரினவாத ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இராணுவமோ அல்லது அதனுடன் சேர்ந்த ஆயுதக் குழுக்களோ இந்தக் குண்டை வைப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. யுத்தத்திற்கு எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருவதற்கான அறிகுறிகள் உள்ளன. 2005 நவம்பரில் பெரும்பாலான மக்கள் இராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர். ஏனெனில் அவர் யுத்தத்தை புதுப்பிக்காமல் அதற்கு முடிவு கட்டுவார் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது இடம்பெறும் கொலை மற்றும் அழிவுகள் மட்டுமன்றி யுத்தத்தின் பொருளாதார சுமைகளையும் தாங்கத் தள்ளப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் ஆத்திரத்திற்கு முகமாலை அழிவு மேலும் எண்ணெய் வார்க்கின்றது. யுத்தம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளதும் இனவாத அரசியலுக்கு எதிராக உள்ள எதிர்ப்பு பற்றி ஒரு மங்கலான காட்சியை கடந்த வார டெயிலி மிரர் பத்திரிகையின் கருத்துக்களம் வெளியிட்டிருந்தது. ஒரு வாசகர் எழுதியிருப்பதாவது: "சகோதரர்களே/சகோதரிகளே, இந்த யுத்தத்தை வெல்ல முடியாது. யுத்தத்தை ஆதரிப்பவர்கள் தயவு செய்து முன்னால் சென்று எமது துணிவுமிக்க சிப்பாய்கள் பதுங்கு குழிகளில் செத்துக்கிடக்கும் போட்டோக்களைப் பாருங்கள். அவர்கள் இவ்வாறு இறந்து கிடப்பது பொருத்தமானதா? எமது படையினரின் உயிர்களை அர்ப்பணிப்பதன் மூலம் எங்களுக்கு என்ன கிடைக்கும்? ஒரு பிரமாண்டமான இடுகாடு (இலங்கை தாய்)." "இந்தக் கதையைக் கேட்பது கவலைக்குரியது. இரு சமூகத்தையும் சார்ந்த எமது இளைஞர்கள் அவர்களது தலைவர்களின் இரத்த தாகத்திற்காக செத்துக்கொண்டிருக்கின்றனர்" என இன்னுமொருவர் எழுதியிருந்தார். மேலும் ஒருவர் தெரிவித்ததாவது: "ஐயோ கடவுளே, நாங்கள் மனித வாழ்க்கையைப் பற்றித்தான் பேசுகின்றோமா? அவர்கள் இலங்கையர்களின் புத்திரர்கள், சகோதரர்கள் அல்லது தந்தைமார்கள் அல்லவா? இந்த தர்மதிவிபாயவில் (புனித பூமி) இது நடக்க வேண்டுமா? இந்த யுத்தத்தில் இலாபம் பெறுவது யார்? அரசியல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின்படி யுத்தம் நடத்தும் போது நடப்பது இதுவே. தமது அன்புக்குரியவர்களை இழந்துவிட்ட குடும்பங்களின் தலைவிதியை நினைத்துப் பாருங்கள். போதுமென்றால் போதும். ஏனையவர்களைப் போல் இலங்கையர்கள் அடிப்படைவாதிகளாக, பேரினவாதிகளாக அல்லது வெறியர்களாகவோ இருக்க வேண்டியதில்லை." அரசாங்கப் பேச்சாளர் ரம்புவெல்ல ஆனையிறவு அழிவு பற்றி தனது பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டது தற்செயலானது அல்ல. தமது வடக்கு இராணுவம் முற்றாக குழம்பிப் போவதை இராணுவம் சற்றே தடுத்துக் கொண்டதை அடுத்து, 2000ம் ஆண்டில் வெடித்த அரசியல் நெருக்கடியை பற்றி அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றது. இராணுவத்தின் தளங்களை புலிகள் கைப்பற்றியது மட்டுமன்றி வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிக்கிக்கொண்டிருந்த பத்தாயிரக்கணக்கான துருப்புக்களுக்கும் அச்சுறுத்தலாக நின்றனர். யுத்தத்தை புதுப்பித்துள்ள கொழும்பில் உள்ள இராஜபக்ஷவின் இராணுவவாதக் கும்பல், விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் நசுக்குவதன் பேரில் அவசரகால ஆட்சி, எதேச்சதிகாரமாக கைதுசெய்தல் மற்றும் அரச பயங்கரத்தையும் நாடியுள்ளன. இராணுவ அனுசரணையிலான கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முகமாலை தோல்வியைப் பற்றிய எந்தவொரு செய்தி வெளியீட்டையும் நசுக்குவதற்கு எடுத்த முயற்சிகள், எதிர்காலத்திற்கு இதைவிட மிகவும் கொடூரமான வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும். |