World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French school students maintain protests against Sarkozy's education reforms

சார்கோசியின் கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக பிரான்சின் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை தொடர்கிறார்கள்

By Francis Dubois
26 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

பிரான்சில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் வலது-சாரி அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக, சமீப வாரங்களில் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இரண்டு மத்திய ஆர்ப்பாட்டங்கள் பாரிசில் ஏப்ரல் 15 மற்றும் 17 அன்று நடைபெற்றன, இவற்றில் அனைத்து பெருநகர பகுதிகளில் இருந்தும் முறையே 40,000 மற்றும் 30,000 பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் பாரிஸ் மற்றும் புறநகர்ப் பகுதி நடுநிலைப் பள்ளி (lycées) மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டனர். பல ஆசிரியர் சங்கங்களும் இந்த இரண்டு நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள தங்களது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஏப்ரல் 15 அன்று வேலைநிறுத்தம் செய்து வரும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், ஆரம்ப பள்ளிகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுவதற்கு எதிராக உயர் நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களுடன் இணைந்து கொண்டனர்.

Ile-de-France ஐ சுற்றியுள்ள பிற நகரங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.

ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மூன்று வாரங்களில் ஏழாவதானது ஆகும். பாரிஸ் பகுதி இரண்டு வாரங்களுக்கு ஈஸ்டர் விடுமுறைகளில் இருக்கிறது, பிரான்சின் பிற பகுதிகளிலும் கடந்த இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு பின்னர் இப்போது மீண்டும் திறந்திருக்கும் பள்ளிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவத் தொடங்கியிருக்கின்றன. இந்த வார ஆர்ப்பாட்டங்கள் ஸ்ட்ராஸ்பேர்க், லீல், துலோன், றுவான், மார்சை மற்றும் தூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன.

சென்ற மாதம் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்ததில் இருந்து அரசாங்க ஒடுக்குமுறைகளும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளன. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகளின் முன் கூடும் சமயத்தில் அவர்கள் ஆயுதமேந்திய போலிசாரால் எதிர்கொள்ளப்படுவது வழக்கமாகி இருக்கிறது. ஒரு பள்ளிக்கு முன் கூட அல்லது மறியல் செய்ய மாணவர்கள் கூடத் தொடங்கும் போதே தலைமை ஆசிரியர்கள் உடனடியாக போலீசாரை அழைப்பதென்பதும் வழக்கமாகி இருக்கிறது. சின்ன ஒரு சாக்குப்போக்கு கிடைத்தாலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவது வழக்கமாகி இருக்கிறது; சிலருக்கு DNA சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனர்.

பெருமளவிலான போலீஸ் பிரிவுகள் ஆர்ப்பாட்டங்களை சுற்றியிருக்கின்றன, அத்துடன் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை படமெடுத்தும் வைத்திருக்கின்றனர். பேரணிகளின் பக்கவாட்டிலோ அல்லது முன்னாலோ நடந்து சென்ற இளைஞர் குழுக்களுக்கிடையிலும் போலிசாருடனும் மோதல் நடந்துள்ளன.

முந்தைய ஆர்ப்பாட்டங்களில் போலவே, ஏப்ரல் 17 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் சென்ற மாதம் கல்வி அமைச்சர் ஸேவியர் டார்கோஸ் அறிவித்த நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 11,200 ஆசிரிய பணியிடங்களை குறைப்பது, Baccalauréat Professionnel (பொது baccalauréat இன் ஒரு தொழில் தேர்ச்சி பெறலில் பயிற்சி பதிப்பு "bac pro", மேல்நிலை பள்ளியில் இருந்து பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஒரு தேர்வு) க்கான படிப்புகளின் கால அளவினை நான்கு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது, மற்றும் BEP (Brevet d'étude professionnel, "bac pro," க்கு இரண்டு ஆண்டுகள் தயாரான பின்னர் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு கல்வித்தகுதி) ஐ நீக்குவது ஆகியவை இந்த அறிவிப்புகளில் அடக்கம்.

தொழிற்சங்கங்கள் "collectif budgétaire" என்றழைக்கப்படும் சென்ற நவம்பரிலேயே பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடிந்த நிதியியல் சட்டத்திற்கான மாற்று வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுக்கான கோரிக்கையை முன்வைத்தன, இது டார்கோஸ் அறிவித்த வெட்டுக்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இந்த கோரிக்கையானது முற்றிலும் அடையாள நிமித்தமானதாகும் ஏனென்றால் ஆளும் UMP (மக்கள் இயக்க ஒன்றியம்) பாராளுமன்றத்தில் பெரிய அளவிலான பெரும்பான்மையை கொண்டுள்ளது.

நடப்பிலுள்ள கல்வி அமைப்புமுறை மீது அரசாங்கம் தொடர்ச்சியான பிற தாக்குதல்களுக்கும் தயாராகி வருகிறது, இவற்றில் எதுவுமே தொழிற்சங்கங்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. சென்ற செப்டம்பரில் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கமிஷனால் வரைவு செய்யப்பட்ட "Pochard அறிக்கை" என்றழைக்கப்படுவதானது ஏறக்குறைய "ஆசிரியப் பணியின் அடித்தள நிலை மறுச்சீரமைவை" முன்மொழிந்துள்ளது. இந்த கமிஷனில் முன்னாள் பிரதமர் மிஷேல் ரொக்கா மற்றும் முன்னாள் கல்வி மந்திரி ஜக் லாங் போன்ற சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இருந்தனர். இந்த கமிஷன், துறையினரால் கடும் விமரிசனத்துக்குள்ளாகி இருக்கும் தொடர்ச்சியான சுதந்திர சந்தை முன்மொழிவுகளை மேற்கொண்டுள்ளது.

இரண்டு பெரிய உயர்நிலைப் பள்ளி சங்கங்களான UNL மற்றும் FIDL, இரண்டுமே சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவை, டார்கோஸுடன் ஏப்ரல் 11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொண்டன. பணியிட வெட்டுகள் குறித்த தனது உறுதியை மீண்டும் வெளிப்படுத்திய கல்வி அமைச்சர், தொழில் தேர்ச்சியில் பயிற்சி Baccalauréat மற்றும் BEP தொடர்பான தனது திட்டத்தில் வேண்டுமானால் சிறு திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்.

அவருடைய வரம்புக்குட்பட்ட கருத்துக்களை பிடித்துக் கொண்ட மாணவர் சங்கங்கள், அமைச்சர் தங்களுடைய திசை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக உடனடியாக அறிவித்தன. FIDL தேசிய செயலாளர் Alix Nicolet கூறினார், "[அமைச்சரின் நிலைப்பாட்டின்] போக்கில் மென்மையை நாங்கள் பெற்றோம்". UNL வலைத் தளத்தில் ஏப்ரல் 20 அன்று வெளியான ஒரு கடிதத்தில் UNL தேசிய செயலாளர் Florian Lecoultre எழுதினார்: "bac pro சீர்திருத்தங்கள் குறித்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் விவாதிக்க அமைச்சர் கொண்டுள்ள உறுதியை UNL கவனத்தில் கொண்டுள்ளது... BEP ஐ பராமரிப்பதான உறுதிமொழி போன்ற முதல் ஊக்கமூட்டும் அறிகுறிகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்".

டார்கோஸுக்கும் மாணவர் சங்கங்களுக்கும் இடையே கடைசியாக நடந்த கூட்டம் முடிந்த சற்று நேரத்திலேயே, அவரது அலுவலகம் "மூன்று வருடங்களில் பொதுவான bac professional திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை" என்று அறிவித்து அறிக்கை வெளியிட்டது. அமைச்சகத்தின் கருத்துப்படி, "BEP நீக்கம் பற்றிய பேச்சு எப்போதும் இருக்கவில்லை".

அப்போது முதலே, தாங்கள் "ஆக்கபூர்வமாக" நடந்து கொள்ள விரும்புவதாகவும், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையையே எதிர்நோக்குவதாகவும் இந்த சங்கங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூறி வருகின்றன. டார்கோஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியைக் கடைப்பிடித்து வருகிறார், விடுமுறைகளும் baccalauréat தேர்வுகளும் நெருங்கி வரும் சமயத்தில், தனக்கு வழி கிடைத்து விடும் என்று அவர் கணக்குப் போடுகிறார். "பேச்சுவார்த்தைக்கான அழைப்பு" என்பது அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான சவால் எதனையும் தடுப்பதான இந்த சங்கங்களின் உறுதியை தவிர வேறு எதனையும் வெளிப்படுத்தவில்லை.

டார்கோஸுக்குத் தெரியும், சங்கங்களிடம் இருந்து அவர் முகம் கொள்வது எதிர்ப்பை அல்ல, மாறாக அவர்களை அரசியல் கூட்டாளிகளாக கருதலாம் என்பதை. ஏப்ரல் 16 ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஒரு நாள், ஆவேசமான பேட்டி ஒன்றில் டார்கோஸ், சில பாட விஷயங்களை கற்பிப்பது என்பதை செலவு நோக்கில் பார்க்க வேண்டியிருக்கிறது என்று கூறினார், அத்துடன் இந்த அடிப்படையில் 3,000 பணியிடங்களை நீக்க நேரிடலாம் என்றும் அவர் அறிவித்தார். "அபூர்வமான" வெளிநாட்டு மொழிகளை பராமரிக்க இயலாது, ஏனென்றால் "வெகு சில" மாணவர்களே இவற்றை பயன்படுத்தி வருகிறார்கள் என்று அவர் உதாரணம் கூறினார். கல்வி என்பது "அது நாட்டிற்கு ஆற்றும் சேவையைக் கொண்டு" மதிப்பிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். Le Monde ஏப்ரல் 18 பதிப்பில் அவர் கூறுவது மேற்கோள் காட்டப்படுகிறது: "கல்வி தேசத்திற்கு எவ்வளவு செலவினத்தை அளிக்கிறது என்பதிலும் ஒப்புக்கொண்ட செலவுகளின் மூலம் எவ்வளவை [தேசம்] திரும்பப் பெறுகிறது என்பதிலும் ஒருவர் ஆர்வம் காட்ட வேண்டும்".

பாராளுமன்றத்தில் கல்விச் செலவின வெட்டுக்களில் "கடன்களை கைவிடுதல்" கோரும் சோசலிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான Regis Juanico வுக்கு பதிலளித்த டார்கோஸ் ஆணவத்துடன் கூறினார்: "நீங்கள் கடன்களை கைவிடுதல் என்கிறீர்கள், நான் சீர்திருத்தம் என்கிறேன். நீங்கள் இடைநிறுத்தம் என்கிறீர்கள், நான் அதை அலட்சியத் திமிர் என்கிறேன். நீங்கள் காத்திருக்கலாம் என்கிறீர்கள், நான் மாற்றலாம் என்கிறேன்", அவர் மேலும் கூறினார், "வளர்ச்சிக்கு கடன்களைக் கைவிடுதல் அவசியமில்லை".

சார்க்கோசி அரசாங்கம் நிலையற்ற தன்மையில் இருந்து, அதன் நெருக்கடி வெளிப்படையானதாக இருக்கும் ஒரு சூழலில் இந்த மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சார்க்கோசி ஜனாதிபதி தேர்தலில் வென்று ஒரு வருடத்திற்கு பின்னர், மூன்றில் இரண்டு பங்கு பிரான்ஸ் மக்கள் அவரது ஜனாதிபதி பதவி செயல்திறன் குறித்து எதிர்மறையாகவே உணர்வதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நடப்பு சுற்றானது வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இன்னும் கூடுதலாக இருக்கும் தாக்குதல்களுக்கான ஒரு தொடக்கம் தான் என்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் பலர் கருதுகிறார்கள். பாரிசின் ஒரு ஆங்கில ஆசிரியர் Nouvel Observateur ஏப்ரல் 18 இதழில் கூறினார், "ஆசிரியர் பணியிடங்களில் வெட்டு என்பது உயர்நிலைப் பள்ளிகளை சீரமைக்கும் திட்டத்திற்கான ஒரு வெள்ளோட்டம் தான். இது மே மாதம் முன்வைக்கப்பட இருக்கிறது. இது Pochard அறிக்கையின் முடிவுகளை கொண்டிருக்கும். நாங்கள் இதனை நிறைவேற்ற அனுமதிக்கப் போவதில்லை".

பல உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரள்வது, வெறுமனே கல்வி செலவின வெட்டுக்காக மட்டும் அல்ல, கல்வியை தனியார்மயமாக்குவதற்கான ஒரு முகவுரையாக அவர்கள் கருதும் நடவடிக்கைகளை எதிர்த்தும் தான். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் பெரும் பிரிவினர் பள்ளிகள் வர்த்தக நிறுவனங்கள் போல் நடத்தப்படுவதை எதிர்க்கின்றனர், இதனை சுருக்கமாக அரசாங்கத்தின் "கணக்குப்பிள்ளை ரீதியான அணுகுமுறை" க்கு எதிர்ப்பு என்று குறிப்பிடுகின்றனர். அல்லது ஆர்ப்பாட்டங்களில் அடிக்கடி தோன்றும் ஒரு பதாகை தெரிவிப்பது போல், "Touche pas à mon école" (எனது பள்ளியைத் தொடாதே) என்றவாறாக குறிப்பிடுகின்றனர்.

கல்விக்கென்று தனிப்பிரிவு கொண்டுள்ள எல்லா முக்கிய தொழிற் சங்கங்களும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்திருக்கின்றன. ஆனால் சங்க அதிகாரத்துவங்கள் ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களின் வேறு எந்த வகைப் பிரிவினரும் கலந்து கொண்டு விடாமல் கவனமாகத் தவிர்த்து விடுகின்றன - இந்த நடவடிக்கைகள் உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கின்றன, அரசாங்கத்தின் தாக்குதல்கள் அவர்களது குழந்தைகளுக்கு எதிராகத் தான் என்ற போதிலும் கூட அவ்வாறு செய்கின்றனர்.

கல்வித் துறையில் முந்தைய இயக்கங்களின் போது போலவே, சங்கங்கள் மற்றும் கூட்டணி அரசியல் கட்சிகளின் முக்கிய பணி என்னவென்றால், அரசாங்கத்திற்கு உண்மையான சவால் எதுவும் இல்லாமல் தடுப்பதுவும், இந்த இயக்கங்களை "நெருக்கடி அளிப்பது" என்பதான தொழிற்சங்க முன்னோக்கு வரம்புக்குள் பராமரிப்பதும் தான். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் சீர்திருத்தங்களின் அங்கமாக இருக்கவே விரும்புகின்றன, அவற்றை எதிர்க்க விரும்பவில்லை. தொழிற்சங்கங்களின் இந்த வர்த்தக-ஆதரவு திட்ட நிலைப்பாடானது சமீபத்திய கடந்த காலத்தில் ஏற்கனவே தீவிர தோல்விகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

2003ல் கல்வித் துறை ஓய்வூதியத்தில் சீர்திருத்தம், கல்வியை தாராளமயமாக்குவது மற்றும் ஆதரவுப் பணியாளர்களை நீக்குவது ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற பெரும் எட்டு வார வேலைநிறுத்தம் தோல்வியில் முடிந்தது, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது செயலுக்காக சம்பள இழப்புகளையும் ஏற்றுக் கொள்ளும்படி நேர்ந்தது. 2005ல், தற்போதைய பிரதமரும் அப்போதைய கல்வி அமைச்சருமான பிரான்சுவா பிய்யோன் பெயரில் பிய்யோன் சட்டம் (Loi Fillon) எனும் கல்வியில் வர்த்தக ஆதரவு சட்டத்திற்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள், இறுதியில் சட்டத்தின் மிகவும் போட்டிக்குரிய அம்சங்கள் நீக்கப்பட்ட பின்னர் சட்டத்திற்கு பதிலாக தீர்ப்புகள் வழியே நிறைவேறியது.

2006ல் மீண்டும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் CPE (Contrat premier emploi) க்கு எதிராக திரண்டனர், ஆனால் அரசாங்கத்தின் தரப்பில் தந்திரமாகப் பின்வாங்கினர், Loi sur l'égalité des chances (சம வாய்ப்புகள் குறித்த சட்டம்) என்ற CPE ஐ அங்கமாகக் கொண்ட சட்டம் தொடர்ந்து வைத்திருக்கப்பட்டது. 2007ல் பல்கலைக்கழகங்களுக்கு "தன்னாட்சி அதிகாரம்" வழங்குவதற்கான பெக்கிறஸ் சட்டம் (Loi Pécresse) ற்க்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நீண்ட போராட்டம் நடத்தினர், இது கடைசியில் அரசாங்கத்திற்கே வெற்றியாக முடிந்தது.

ஆளும் மேல்வர்க்கத்தினருக்கு எந்த அரசியல் சவால்களையும் அளிப்பதை எதிர்க்கும் கூறப்படாத சந்தை-ஆதரவு வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட, மற்றும் - அந்த அடிப்படையில் - "இடது" மற்றும் "தீவிர இடது" என்று கூறப்படுபவர்களால் ஊக்கமூட்டப்படுவதுமான வரம்புக்குட்பட்ட சங்க முன்னோக்கினால் இந்த இயக்கங்கள் ஒவ்வொரு முறையும் முடக்குதலுக்கு உள்ளாயின. உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரான தாக்குதலை தலைமையேற்று நடத்திய அரசாங்கம் அதன் நிலையிலேயே விட்டு வைக்கப்பட்டது, இதனால் அடுத்த தாக்குதலுக்கு தயாராகவும் மற்றுமொரு கூடுதல் வலது-சாரி முதலாளித்துவ அரசாங்கமாக காலக்கிரமத்தில் மாற்றமுறவும் அதற்கு வழிவகை கிடைக்கிறது.

சார்க்கோசி அரசாங்கத்திற்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் இயக்கமே இப்போது அவசியமாக இருக்கிறது. இது வெற்றி பெற, தொழிற்சங்கங்களுடனும் அதிகாரபூர்வ இடது மற்றும் 'தீவிர இடது' கட்சிகளுடனும் ஒரு அரசியல் உடைவு அவசியமாகிறது. உயர் நிலைப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த பழமைவாத அரசாங்கத்தை போன்ற அதே அடிப்படை அரசியல் வேலைத்திட்டங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்புகளை நிராகரித்து, போராட்டத்தை தங்களின் சொந்த கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.