WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Iran, Pakistan to hold pricing talks on gas pipeline
எரிவாயு குழாய் இணைப்பு மீதான கட்டணம் குறித்து ஈரானும் பாகிஸ்தானும்
பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றன
By Alex Lantier
15 March 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு கிடங்கிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி
மற்றும் முல்தான் நகரங்களை இணைக்கும் ஓர் எரிவாயு குழாய் இணைப்பு வழியாக இயற்கை எரிவாயு கொண்டு
செல்வதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஈரானிய மற்றும் பாகிஸ்தானிய அரசாங்கங்கள் அடுத்த
மாதம் இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றன. ஈரானுடன் தொடர்புடைய எரிவாயு குழாய் இணைப்பு உடன்படிக்கைகளுக்கு
அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பு இருக்கும் நிலையில் உருவாகியிருக்கும் இந்த உடன்படிக்கை, மத்திய ஆசியாவில் எரிசக்தி
மற்றும் மூலோபாய செல்வாக்கின் மீது அதிகரித்துவரும் கசப்பான போராட்டங்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
ஈரானின் உத்தியோகபூர்வ இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனத்தின் கருத்துப்படி,
ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கட்டண நிர்ணயமுறை தொடர்பான பேச்சுவார்த்தை 2007 அக்டோபரில்
தொடங்கப்பட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டண நிர்ணயத்தை உறுதிப்படுத்த ஈரானிய அதிகாரிகளுடனான ஒரு
கூட்டத்தில் மார்ச் 10ம் தேதி பாகிஸ்தான் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையான
தாராளவாத Dawn
குறிப்பிட்டது. வரும் 2011க்குள், சுமார் 400 கிலோமீட்டர் தூரம் இடைவெளியிலுள்ள ஈரானிய நகரமான ஈரான்ஷாஹருடன்
ஈரான்-பாகிஸ்தான் எல்லைவரை இணைக்கப்பட்டவுடன் பாகிஸ்தான் இயற்கை எரிவாயுவை பெறத் தொடங்கும் என
Bloomberg
செய்தி தெரிவித்தது.
இது செயல்பட தொடங்குமானால், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட
ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (IPI)
குழாய் இணைப்பு எனும் இந்த குழாய் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக
அமையும். ஈரானிய இயற்கை எரிவாயுவை சந்தைப்படுத்தவும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் அத்தியாவசியமாக
தேவைப்படும் எரிசக்தியை வினியோகிப்பதற்காகவும் ஆரம்பத்தில், 1995ல் இந்த குழாய் இணைப்பு குறித்து
பேசபட்டபோது, அதை ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் டில்லிக்கு விரிவாக்க
திட்டமிடப்பட்டது.
IPI குழாய் இணைப்பானது,
பொதுவாக "அமைதிக்கான
குழாய் இணைப்பு"
என்றும் அழைக்கப்பட்டது, ஏனென்றால் நீண்டகால இராணுவ போட்டியாளர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தானின்
ஒத்துழைப்பை அது சார்ந்திருந்தது. இந்தியா-பாகிஸ்தான் சமாதான நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின்
உத்தியோகபூர்வ ஆதரவு இருந்தபோதினும், உலக எரிசக்தி வர்த்தகத்தில் ஈரானின் பங்களிப்பை அதிகரிக்கச்
செய்யும் எந்த முறைமைகளுக்குமான அதன் எதிர்ப்புகளுக்காக, தற்போது வரை அமெரிக்காவால் வெற்றிகரமாக
அத்திட்டத்தை தடுத்து நிறுத்தி வைத்திருக்க முடிந்தது.
இந்தியாவை பொறுத்த வரை, ஈரானுடனான தொடர்புகள் மீது நேரடியான
அழுத்தத்தை அளிக்க அமெரிக்கா தயங்காது. துரதிஷ்டவசமாக, 2005 செப்டம்பர் மற்றும் 2006 பெப்ரவரியில்
நடந்த சர்வதேச அணுசக்தி கழகத்தின் கூட்டத்தில் தடைகளுக்காக அமெரிக்காவிற்கு சாதகமான இந்தியா
வாக்களித்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் வாக்குகள்
"அழுத்தம்
பிரயோகித்து பெறப்பட்டன"
என பெப்ரவரி 2007ல், புஷ் நிர்வாகத்தின் ஒரு முன்னாள் அதிகாரியான ஸ்டீபன் ராடமாகர் வெளிப்படையாகவே
தெரிவித்தார். அமெரிக்காவின் ஆதரவையும் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பையும் தக்க வைக்க வேண்டுமானால்,
"அணுஆயுதங்கள்
உட்பட பாரிய அழிவு தரும் ஆயுதங்களை வாங்குதல், யுரேனியம் செறிவூட்டல் அல்லது அணுசக்தி எண்ணெய்
புதுப்பித்தல் மற்றும் பெரும் அழிவு தரும் ஆயுதங்களை வினியோகித்தல் போன்ற ஈரானின் செயல்பாடுகளை
தடுப்பது, நிராகரிப்பது மற்றும் தேவையானால் தீர்மானங்கள் கொண்டு வருவது ஆகியவற்றில் அது (இந்தியா)
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரசால் கொண்டு வரப்பட்ட 2006 ஹைட் சட்டமும் கூட
குறிப்பிடுகிறது."
இந்திய பங்களிப்புடனோ அல்லது பங்களிப்பு இல்லாமலோ, இந்த உடன்பாட்டிற்கு
ஈரானை பாகிஸ்தான் வெளிப்படையாகவே நம்பவைத்துள்ளது.
Dawn
குறிப்பிட்டதாவது: "பாகிஸ்தானின்
அதிகரித்து வரும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய ஏப்ரலுக்குள் இந்தியாவுடனோ அல்லது இந்தியா
இல்லாமலோ இந்த எரிவாயு குழாய் இணைப்பு திட்டத்தை முடிக்க ஈரானை பாகிஸ்தான் அரசாங்கம் கேட்டுக்
கொண்டிருக்கிறது. திங்களன்று பெட்ரோலிய மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சக வட்டாரங்கள்
Dawn
இற்கு தெரிவித்ததன்படி, 5.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்
இணைப்பு திட்டத்தில் இணைய இந்தியாவை சம்மதிக்கச் செய்ய ஈரான் இந்த மாதம் இறுதியில் இந்தியாவுடன்
பேச்சுவார்த்தை நடத்தும்."
எனக் குறிப்பிட்டதாவது.
IPI குழாய் இணைப்பு திட்டத்தில்
இருந்து இந்தியா வெளியேறினால் குறிப்பிடத்தக்க கொள்ளளவு உபரியாக மிஞ்சும் என்பதுடன், இந்த மேலதிகமான
எரிவாயுவை யார் பெறுவார்கள்?
என்ற ஒரு முக்கிய மூலோபாய பிரச்சனையும் உருவாகும்.
"குழாய் இணைப்பு நாளொன்றுக்கு அண்ணளவாக 110 மில்லியன்
கனமீட்டர் கொள்ளளவு கொண்டது என ஈரான் தேசிய எரிவாயு நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரியான வாஹிட்
ஜெய்டிஃபார்ட் Bloomberg
செய்திக்கு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
"நாளொன்றுக்கு 50 மில்லியன் கனமீட்டர் பாகிஸ்தானுக்கு
தேவைப்படுகிறது, இந்தியா விரும்பினால் மிகுதியை அவர்களுக்கு எங்களால் வினியோகிக்க முடியும்."
என்று தெரிவித்தார்.
இந்தியா IPI
குழாய் இணைப்பை கைவிட்டால், பாகிஸ்தான் ஏற்க விரும்பும் அளவு போக
மிச்சமுள்ள இயற்கை எரிவாயுவை வாங்க தாம் தயாராகவுள்ளதாக பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும்
சீனா தொடர்ந்து கூறி வருகிறது. மார்ச் 11ல்
India Times குறிப்பிட்டதாவது:
"அமெரிக்க அழுத்தத்தின் கீழ் இந்தியா தயங்கிக்
கொண்டிருந்தால், இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள ஈரான் சீனாவிற்கு அழைப்புவிடுக்கும் என
[பாகிஸ்தான்]
பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இத்திட்டத்திற்கான
நிதி ஆதாரங்களை திரட்டவும் மற்றும் இப்பிரச்சனையில் பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்ளவும் சீனா
உறுதியளித்திருக்கிறது."
என குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்க அழுத்தம் இருந்தபோதிலும், இந்திய அரசாங்கம் இந்த திட்டத்தை
தொடரவே விரும்புகிறது. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக
Asian Times
இதழுக்கு கருத்து தெரிவித்த இந்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுப்பது என்பது
"மியான்மரில் நடந்தது
போல மேலதிக எரிவாயுவை சீனா எடுத்துச் செல்லுமானால் இந்தியா அரசியல் ரீதியாக
புத்திசாதுர்யமற்றமுறையில் நடக்கவே வழிவகுக்கும்"
என அறிவித்திருந்தார். இந்த எரிவாயுவிற்காக சீனாவை விட அதிக விலை கொடுக்கவும் இந்தியா
தயாராகவுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும், அமெரிக்காவை நேரடியாக எதிர்த்துக்
கொண்டு, அதாவது குறைந்தபட்சம் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பை அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்கும்
வரையிலாவது, IPI
குழாய் இணைப்பு திட்டத்தில் பங்குபெற இந்தியா விரும்பவில்லை.
ஈரான்-பாகிஸ்தானின் வெற்றிகரமான செயல்பாடாக ஈரான்-பாகிஸ்தான்-சீனா
குழாய் இணைப்பு நிறைவேறினால், அது மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கை மீது விழும் ஒரு மிகப்
பெரிய அடியாக இருக்கும். உலக ஆழுமைக்கான அதன் முனைவில், அமெரிக்க முதலாளித்துவம் பின்வரும் இரண்டு
இலக்குகளை பின் தொடர்கிறது:
முதலாவதாக, ஈரான் மற்றும் சதாம் ஹுசேனின் ஈராக் போன்ற எரிசக்தி
உற்பத்தி செய்யும் எந்த நாட்டையும் முழுமையாக தனிமைப்படுத்துவது, அது அரசியல்ரீதியாக நம்பிக்கைகுரியதாக
இல்லை;
இரண்டாவதாக, பாரிய அமெரிக்க இராணுவத்தை நிலை நிறுத்துவது.
சான்றாக, இந்திய பெருங்கடலில் அமெரிக்க கப்பற்படையும், அமெரிக்காவின் யூரேசிய போட்டியாளர்களுக்கு
எதிராக மத்திய கிழக்கின் எரிசக்தி வளங்களின் ஏற்றுமதிக்கான பாதைகளிலும் பாரசீகத்திலும் பால்க்கனிலும்
அமெரிக்க இராணுவ தளங்களை நிறுத்துவது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த இரண்டு இலக்குகளில் ஒன்றை கூட
அடைய முடியாமல் படிப்படியாக தோல்வி அடைந்து வருகிறது.
ஆசியாவுடனான ஈரானின் தொடர்புகள்
2007 மார்ச்சில் ஈரானுக்கு எதிரான
எரிபொருளாய்வு தடைச்சட்டத்தை (HR 1400, S
970) உருவாக்கிய காலஞ்சென்ற அமெரிக்க அரசியல்சபை தலைவர்
ரொம் லான்டோஸ் (கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சியாளர்) ஈரானுக்கான அமெரிக்காவின் மூலோபாயங்கள்
சில நேரங்களில் மிகவும் கொடூரமாகவுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இருகட்சிகளின் ஆதரவுடன் சபையில் நிறைவேறிய
இந்த மசோதா தற்போது செனட்டின் ஆய்வின் கீழ் உள்ளது. லான்டோஸ் கூறியதாவது:
"ஈரானின் எரிசக்தி துறையில் வெளிநாட்டினர் சிறிதும் கூட முதலீடு
செய்யாமல் இருப்பதே எங்களின் இலக்கு - மீண்டும் இதை கூறுகிறேன், வெளிநாட்டினர் சிறிது கூட முதலீடு செய்யாமல்
இருப்பது."
என்றார்.
சர்வதேச அளவில் இரண்டாவது (ரஷ்யாவின் 1700 டிரில்லியன் கனஅடிக்கு
அடுத்தபடியாக 971 டிரில்லியன் கனஅடி, அதாவது உலகின் மொத்த அளவில் 16 சதவீதம்) மிகப் பெரிய
இயற்கை எரிவாயு வளங்களை ஈரான் கொண்டிருந்தாலும் கூட, அரசியல் மற்றும் வர்த்தக ரீதியாக ஈரான்
ஒதுக்கப்பட்டதன் விளைவாக இந்த வளங்கள் வளர்ச்சியடையாத நிலையில் உள்ளன:
அமெரிக்க காங்கிரசின் ஆய்வு அறிக்கையின்படி 62 சதவீத
வளங்கள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றன.
ஈரானின் குற்றஞ்சாட்டப்பட்ட அணு ஆயுத திட்டங்கள் எனக்கூறப்படுவதன் மீது அதற்கு
எதிரான அமெரிக்க-ஐரோப்பிய கூட்டு தடைகள் ஆசியாவில் இருந்து ஒப்பந்தங்கள் பெறுவதற்கான சில
வாய்ப்புகளிலிருந்து தெஹ்ரானை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. 2004ம் ஆண்டில், சீனாவின் சினோபெக் குழுமம்
ஈரானுடன் 70 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உடன்படிக்கை ஒன்றை செய்துக்
கொண்டது. அதன்படி அந்நிறுவனம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு 250 மில்லியன் தொன் திரவ இயற்கை எரிவாயுவை (LNG)
ஈரானிடமிருந்து வாங்கும் என்பதுடன் 18.3 பில்லியன் பீப்பாய்
எண்ணெய் மற்றும் 12.5 டிரில்லியன் கனஅடி எரிவாயுவையும் கொண்ட ஈரானின் யதாவரன் எண்ணெய் சுரங்கத்தை
மேம்படுத்தவும் உதவும். யதாவரன் சுரங்கத்தில் மேலும் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் சினோபெக்
டிசம்பர் 2007ல் ஒப்புக் கொண்டது.
அதுமட்டுமின்றி டிசம்பர் 2007ல், ஈரானின் கொல்ஷன் மற்றும் பெர்டோவ்ஸ்
எண்ணெய் சுரங்கத்தை மேம்படுத்த ஈரானின் பார்ஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் மலேசியாவின்
SKS குழுமத்துடன்
ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டது. ஈரானிய எண்ணெய் வளத்துறை மந்திரி கோலம்ஹோசைன் நொஜாரி
கூறியதாவது: "எதிர்காலத்தில்
ஆசிய நாடுகளில் மிகப் பரந்த எரிசக்தி சந்தைவாய்ப்பு இருப்பதால் எங்களின் முழு கவனமும் அவைகளின்
மீதிருக்கிறது."
என்றார். மலேசியாவுடனான கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மீது
பேச்சுவார்த்தை நடத்துவதைத் தள்ளி வைத்ததன் மூலம் அமெரிக்கா இதற்கு பதிலளித்துள்ளது.
IPI குழாய் இணைப்பை
இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியா வரை விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லாதிருப்பதை
ஊகித்திருக்கும் ஈரானிய அதிகாரிகள் அதை வெளிப்படையாகவே வெளியிட்டிருக்கிறார்கள். ஜனவரி 18 அன்று,
தாய்லாந்தின் பாங்காக் போஸ்ட் பத்திரிகையில் ஈரானிய நிதிமந்திரி டாவுத் ஜபாரி
குறிப்பிட்டிருந்ததாவது: "IPI
குழாய் இணைப்பு குறித்து நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,
ஏனென்றால் அதுவொரு பிராந்திய தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தென்கிழக்கு
ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்றவைகளுக்கு இந்த குழாய் இணைப்பை
எடுத்துச் செல்ல முடியும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்."
என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஈரானிய அரசாங்கம் அதன் பொருளாதாரத்தில் வெளிநாட்டு
முதலீடுகளை, குறிப்பாக ஆசிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு தனியார் திட்டத்தை விரைவாக செயல்படுத்த
இருக்கிறது. "பொருளாதார
யுத்தத்தையும்",
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அளிக்கும் நிதி நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு தனியார்மயமாக்கல்
"ஒரு சிறந்த
வழியாகும்"
என அயாதொல்லாஹ் அலி ஹாமினி அறிவித்திருக்கிறார்.
ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சேய் நிறுவனங்களான பெட்ரோபார்ஸ் மற்றும்
பெட்ராய்ரன் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவை உட்பட ஈரானின் 47 எரிசக்தி நிறுவனங்களை
தனியார்மயமாக்கப்படும். இதன் மதிப்பு 90 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என 2008
பெப்ரவரியில் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் வெளியுறவு துறை இயக்குனர் ஹொஜதொல்லாஹ் ஹாமினி-பார்டு
மத்திய கிழக்கு பொருளாதார இதழுக்குத் தெரிவித்தார்.
"அடுத்த இரண்டு
ஆண்டுகளுக்கு நான் பதவியில் இருந்தால், அரசாங்கத்தின் 80 முதல் 90 சதவீதம் விற்கப்படும் என நான்
உறுதியளிக்கிறேன்."
என ஈரானிய இணை நிதிமந்திரி ஹேதாரி கோர்டு ஜன்கானெஹ் பைனான்சியல்
டைம்ஸிற்கு தெரிவித்தார்.
தற்போது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எஃகு, தாமிரம், வங்கியியல், கப்பல்துறை,
விமானத்துறை மற்றும் தொலைதொடர்புத்துறை நிறுவனங்களும் இதில் உள்ளடங்கும் என பைனான்சியல் டைம்ஸ்
குறிப்பிட்டிருந்தது. இந்த நிறுவனங்களின் பங்குகளை ஹாங்காங், ஜகார்தா மற்றும் கோலம்பூர் ஆகியவற்றின்
பங்குச்சந்தைகளில் ஆரம்ப பொது விற்பனைக்கு கொண்டு வரவும் ஈரானிய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
தெற்கு ஆசியாவில் சீன-அமெரிக்கா போட்டி
ஈரான் மற்றும் சீனாவுக்கு இடையே ஒரு குழாய் இணைப்பை பாகிஸ்தான் உருவாக்கும்
என்பதற்கான சாத்தியக்கூறின் வெளிப்பாட்டை ஒருவர் புரிந்து கொள்ள, அதை அப்பிராந்தியத்திற்கான அமெரிக்க
மூலோபாயத்துடன் ஒத்துப்பார்க்க வேண்டும். பேச்சுவார்த்தையிலுள்ள இந்திய-அமெரிக்க அணுஆயுத ஒத்துழைப்பு
மற்றும் ஒரு உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டணியின் பலன்கள் மறுக்கப்படும் என்ற அச்சுறுத்தலால்
IPI குழாய்
அமைப்பை இந்தியா கைவிட வேண்டும் என அமெரிக்க அழுத்தமளிக்கிறது. ஆசியாவில் மிகவும் பலமான சக்தியாக
உருவாகி வரும் சீனாவுக்கு எதிர்பலமாக இந்தியாவை உருவாக்க வேண்டுமென அமெரிக்கா நம்புகிறது;
நம்பகத்தன்மையில் இருந்து வெகுதூரத்திலுள்ள இந்திய முதலாளி
வர்க்கம் இதில் பங்கு பெற விரும்புகிறது என்பதுடன் இதுபோன்றதொரு உறவில் முடிந்தவரை அதிகபட்ச பலனை
தற்காலிகமாக அறுவடை செய்யமுடியும் என்றும் அது நம்புகிறது.
ஈரானுக்கும் அதன் நேசநாடு என குறிக்கப்படக்கூடிய ஒரு நாட்டிற்கும் -
இந்தியாவிற்கும் - இடையே ஏற்படுத்தப்படும் ஒரு குழாய் இணைப்பை அமெரிக்கா எதிர்க்குமேயானால்,
ஆசியாவிலும், உலகளவிலும் கூட அமெரிக்காவின் பூகோள அரசியல் ரீதியான முக்கிய போட்டியாளராக விளங்கும்
ஒரு நாடான சீனாவுக்கும் மற்றும் ஈரானுக்கும் இடையே ஒரு குழாய் இணைப்பை ஏற்படுத்துவதை இன்னும் தீவிரமாக
அது எதிர்க்கும். பாகிஸ்தானில் அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க சீனா இதுவரை வெளிப்படையான எந்த
முயற்சியையும் எடுக்கவில்லையானாலும், பாகிஸ்தான் அரசியலில் இருந்து சீனாவை உடனடியாக அமெரிக்க
ஏகாதிபத்தியத்தால் விலக்கி விடமுடியாது.
இந்தியாவை தமது பொதுவான எதிரியாக கருதி அதற்கு எதிராக பாகிஸ்தானும்,
சீனாவும் யுத்தம் செய்த பனிப்போர் காலத்தில் இருந்து, நீண்ட காலமாக சீனாவிற்கு பாகிஸ்தானில் செல்வாக்கு
இருந்து வருகிறது. பிராந்திய அரசியலின் முக்கிய திருப்புமுனைகளின் போது - சில நேரங்களில், மிக முக்கியமாக
குறிப்பதானால் சோவியத்தின் ஆதரவுடன் இருந்த ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயக கட்சியின்
(PDPA) ஆட்சி
1992ல் கலைக்கப்பட்டதற்கு பின்னர் - அடிக்கடி நிதி மற்றும் அரசியல் ஆதரவை அமெரிக்கா விலக்கி கொண்டதன்
அடிப்படையில், பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் சீனாவை பாகிஸ்தானின் "எல்லாகாலத்திற்குமான நண்பன்" என்றும்,
அதனுடன் அமெரிக்காவை ஒப்பிட்டு அதை பாகிஸ்தானின் "நல்லகாலத்திற்கான நண்பன்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சீனாவின் வர்த்தக செல்வாக்கும் வளர்ந்து வருகிறது. 2006ல், அது பாகிஸ்தானுடன்
ஒரு கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீன நிறுவனங்கள் சைன்தக்கில் தங்கம் மற்றும்
தாமிர சுரங்கங்களையும், லாஸ்பெலா மாவட்டத்தில் ஈயம் மற்றும் துத்தநாக சுரங்கங்களையும் (இரண்டும்
பலோசிஸ்தானில் உள்ளன) மற்றும் பஞ்சாபிலுள்ள காலா ஷாஹ் காகோ அருகில் பாகிஸ்தான்-சீனா தொழில்துறை
மண்டலம் ஒன்றையும் நடத்தி வருகின்றன. சீனாவின் ஜின்ஜீயாங் சுயாட்சி பிராந்தியத்திலுள்ள காஷ்கர் நகருக்கும்
பாகிஸ்தானின் காஷ்மீர் வழியாக இஸ்லாமாபாத்தின் கீழுள்ள ராவல்பிண்டிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையான
காராகோரம் நெடுஞ்சாலை வழியாக இரு நாடுகளும் நேரடியான வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.
ஹார்முஜிலிருந்து கிழக்கில் நேராக 400 கிலோமீட்டர் தூரத்தில், பாகிஸ்தானின்
அரேபிய கடற்கரையில் குவாதார் துறைமுகத்தில் ஒரு ஆழமான துறைமுகத்தை சீனா நடத்தி வருகிறது. மத்திய
கிழக்கு எண்ணெய் மற்றும் ஆபிரிக்க எண்ணெய் மற்றும் கனிமங்களை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில்
அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள கப்பல் வழித்தடங்களில் கொண்டு வரும் நேரத்தைக் குறைக்க, அவற்றை குவாதார்
துறைமுகம் வழியாக இறக்குமதி செய்ய பீஜிங் விரும்புகிறது என்ற ஊகத்திற்கிடையில், குவாதாரைக் காராகோரம்
நெடுஞ்சாலையுடன் இணைக்க குவாதார்-தால்பண்தின் இரயில் பாதையை கட்டமைக்க அது உதவி வருகிறது.
அமெரிக்க முதலாளித்துவ மூலோபாயவாதிகள் இந்த நிகழ்வுகளை உயர்ந்த
அவநம்பிக்கையுடன் பார்க்கின்றன. "பாகிஸ்தானை
சீனாவின் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கவும்",
"பாகிஸ்தானை
சீனாவிற்கான ஒரு பெரிய ஆலைக்கிடங்காக மாற்றவும்",
"ஆப்கானிஸ்தான்
மற்றும் பாகிஸ்தான் வழியாக சாலை தொடர்புகள் மற்றும் இரயில் இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் மத்திய
ஆசிய சந்தையில் இருந்து எரிசக்தி இறக்குமதி மற்றும் சீன ஏற்றுமதிக்கு வழியமைக்க"
சீனா திட்டமிடுகிறது என 2005 பெப்ரவரியில்
Jamestown Foundation சிந்தனை குழுவிற்கு எழுதும்
போது தாரிக் நயாஜி குறிப்பிட்டிருந்தார். குவாதாரிலுள்ள சீனப்படைகள் பாரசீக வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்க
கப்பற்தளத்தை தொடர்ந்து வேவு பார்ப்பதாக அமெரிக்க இராணுவ ஆய்வாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மத்திய ஆசியா அல்லது ஈரானிய எண்ணெய் சுரங்கங்களை குழாய் இணைப்புகள் மூலம்
சீனாவுடன் இணைக்கும் ஒரு வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் ஒட்டுமொத்தமாக கப்பல் போக்குவரத்து தடுப்புகளை
தவிர்க்க பீஜீங் நீண்டகாலமாக நினைத்து வருகிறது. எவ்வாறிருப்பினும், 2001ல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க
தாக்குதலுக்கு பின்னர், அப்பிராந்தியத்தின் பல நாடுகளில் அமெரிக்க படைகள் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர்,
"சர்வதேச
எரிசக்திக்கான ஒருங்கிணைந்த ஆசிய பாலம்"
அல்லது "புதிய
எரிசக்திக்கான பட்டுச்சாலை"
என அழைக்கப்படும் இதுமாதிரியான திட்டங்கள் பெருமளவில் செயற்படுத்தாது
விடப்பட்டன. தற்போதைய ஈரானிய-பாகிஸ்தான் குழாய் இணைப்பு திட்டமானது தரைவழியில் மத்திய கிழக்கு எரிசக்தி
வளங்களை சீனா நேரடியாக பெறுவதைப் புத்துயிர் ஊட்டியிருப்பதாகத் தோன்றுகிறது.
ஈரான் மற்றும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியங்கள் ஆகியவை அவைகளின் மத்திய
அரசாங்கங்களால் பாரியளவில் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில், அவற்றின் வழியாக குழாய் இணைப்பைக்
கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருப்பது இந்த அரசியல் ஸ்திரமின்மையை மேலும் எடுத்துக்காட்டுத்துகிறது. பலூசிஸ்தான்
தேசியவாதிகளும் மற்றும் ஜூன்டல்லாஹ் குழுவின் போராளிகளும் அப்பிராந்தியத்தில் ஏற்கனவே ஈரானிய மற்றும் சீன
நாட்டினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். 2007 ஏப்ரலில்,
ABC செய்தி அறிக்கையை
அடிப்படையாக கொண்டு ஈரானிய அதிகாரிகள், அது போன்ற தாக்குதல்களுக்காக பாகிஸ்தானிய சர்வாதிகாரி
பர்வேஷ் முஷாரப்புடன் அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் ஷெனியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மறைமுக
நடவடிக்கைகளில் இறங்க ஜூன்டல்லாஹ் குழுவை அமெரிக்க அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். |