World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi president visits Ankara in wake of Turkish incursion

துருக்கி படையெடுப்பை தொடர்ந்து ஈராக்கிய ஜனாதிபதி அன்காரா செல்கிறார்

By James Cogan
11 March 2008

Back to screen version

ஒரு குர்திஷ் தலைவரான ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானி தமது ஐந்து மூத்த பொருளாதார மற்றும் பாதுகாப்பு மந்திரிகளுடன் மார்ச் 5ல் துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டார். குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (PKK) போராளிகளுக்கு எதிராக வடக்கு ஈராக்கில் நடைபெறும் துருக்கி விமான தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த விஜயம் நடந்திருக்கிறது. மேலும், ஈராக் அரசாங்கம் தமது இறையாண்மை மீது நடத்தப்பட்ட "ஏற்றுக்கொள்ள முடியாத" வன்முறை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய ஒரு தரைவழி தாக்குதலை அதற்கடுத்த வாரத்தில் அன்காரா முடித்தது. இராணுவ தாக்குதல் தொடங்கிய நாளான பெப்ரவரி 21 அன்று துருக்கிய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் தலாபானியை அன்காராவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

தற்போதைய சூழலில் அழைப்பை ஏற்றுக் கொண்டிருப்பது என்பது அமெரிக்காவுக்கும் மற்றும் ஈராக்கின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவான மேற்தட்டுகளின் பல்வேறு குழுக்களுக்கும் துருக்கியின் மூலோபாய முக்கியத்துவத்தை வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது. பெரிய இராணுவத்துடன் வளர்ந்து வரும் பொருளாதார இலக்குகளை கொண்ட அன்காராவை, பிராந்திய செல்வாக்கு பெற விரும்பும் ஈரானிய முயற்சிகளுக்கு மத்திய கிழக்கிலுள்ள ஒரு பெரிய எதிர்பலமாக புஷ் நிர்வாகம் காண்கிறது. ஈராக்கிற்குள், துருக்கி தவிர்க்கமுடியாதபடி கணிசமான அளவில் செல்வாக்கைப் செலுத்துகிறது. அந்நாட்டின் வடக்கிலிருந்து எண்ணெய், துருக்கி துறைமுகங்கள் வழியாக குழாய் மூலம் உலக சந்தை விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மத்திய ஆசிய குடியரசுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்துச் செல்லும் ரஷ்யாவின் குழாய்வழி வலையமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்படும் அமெரிக்காவின் திட்டத்திற்கு துருக்கியின் செஹன் துறைமுகமும் ஒரு மையமாக இருக்கிறது.

வடக்கு ஈராக்கில் குர்திஷ் தேசியவாத நோக்கங்கள் ஒடுக்கப்பட்டு ஈராக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கண்டறிவதில் அன்காராவிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வாஷிங்டனின் ஒத்துழைப்புடன் துருக்கிய ஆளும் வர்க்கத்திற்கு ஈராக்கிய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறது.

வடக்கு ஈராக்கின் கரடுமுரடான மலைகளிலுள்ள குர்திஷ் தொழிலாளர் கட்சியின் கெரில்லாக்களை அவர்களின் முகாம்களில் இருந்து விரட்டுவதில் துருக்கிக்கு ஈராக் உதவும் என தலாபானி உறுதியளித்தார். இன்னும் குறிப்பாக, நாட்டின் மூன்று வடக்கு மாகாணங்களை கட்டுப்படுத்தி வரும் குர்திஷ் பிராந்திய அரசும் கூட முழுமையாக உதவும் என அவர் அறிவித்தார். குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (PKK) பிரிவுகள் ஆயுதமேந்தும் தங்களின் நடவடிக்கைகளை கைவிட அல்லது அப்பிராந்தியத்தை விட்டு வெளியேற அழுத்தம் அளிக்குமாறு குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திடம் பாக்தாத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதுவரை, குர்திஷ் தொழிலாளர் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் குர்திஷ் பிராந்திய அரசாங்கம் அதன் பெஷ் மெர்கா போராளிகளை பயன்படுத்தி அங்கு தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்த முயலவில்லை. தென்கிழக்கு துருக்கி, சிரியா மற்றும் ஈரானின் சில பகுதிகளை உட்கொண்ட ஒரு பெரிய குர்திஷ்தான் முன்னோக்கிற்காக அங்கு ஈராக்கிய குர்திஷ் கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கிறது. எனவே, துருக்கியின் சார்பாக குர்திஷ் போராளிகளை ஒடுக்கும் எண்ணம் அங்கு ஆதரவு பெற்ற ஒன்றல்ல.

எண்ணெய் வளமிக்க கிர்குக் மாகாணத்தில் ஒத்துழைக்க மறுக்கும் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் மீதான அன்காராவின் எதிர்ப்பு துருக்கி மீதான குர்திஷ்களின் சீற்றத்தை அதிகரித்திருக்கிறது. ஈராக்கிற்குள் இராணுவ தலையீட்டை அளிக்கும் உரிமை தனக்குண்டு என கூறும் துருக்கியின் வற்புறுத்தல் குர்திஷ் தொழிலாளர் கட்சி இருக்கும் மலைபிரதேசங்களோடு மட்டும் நின்று விடவில்லை. குர்திஷ் தேசியவாத படையால் நகரத்தின் துர்கோமென் சமூகம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க கிர்குக்கில் துருப்புகளை நிறுத்தவும் தனக்கு உரிமை உண்டு என அது அறிவித்தது.

கிர்குக் மீதான குர்திஷ் கட்டுப்பாடு குர்திஷ் பிராந்திய அரசாங்கத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை திடீரென அதிகரிக்கும் என்பதுடன் ஈராக்கிலிருந்து குர்திஷ் சுதந்திரமாக அறிவிக்கப்படும்போது அது போதிய வளங்களையும் அதற்கு அளிக்கும். அதனால் அது துருக்கியால் வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மேலும் ஈராக்கில் குர்திஷின் தன்னாட்சி பிராந்தியம் உருவானால், அது மத்திய கிழக்கு முழுவதும் குர்திஷ் பிரிவினைவாதத்தைத் தூண்டும் என துருக்கி கருதுகிறது.

2007ன் இறுதியில் கிர்குக் நிலைப் பற்றிய ஒரு பொதுஜன வாக்கெடுப்பு எடுக்கப்படும் என ஈராக்கிய அரசியல் அமைப்பில் ஒரு மசோதா சேர்க்கப்பட்டதன் மூலம் அமெரிக்க ஆக்கிரமிப்பானது குர்திஷ் விருப்பங்களை ஊக்குவித்திருக்கிறது. எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு, புஷ் நிர்வாகம் அன்காராவுடன் அதன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்பியதால், அது ஈராக்கிய குர்திஷ் பிரிவுகளிடம் ஓர் ஆறு மாதகால தாமதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தது.

குர்திஷ் கோரிக்கைகளுக்கு பக்கபலமாக ஜூனில் நடக்கவிருக்கும் ஒரு பொதுஜன வாக்கெடுப்புக்கு ஆதரவழித்து துருக்கியுடன் ஒரு இராஜாங்கரீதியான பதட்டத்தை உருவாக்க அமெரிக்க தயாராக இல்லை என்பதை வாஷிங்டனின் ஒவ்வொரு அறிகுறியும் எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்கா, குர்திஷ் தொழிலாளர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகிவிட்டது என கடந்த வாரம் குறிப்பாக உணர்த்திய இராணுவ தளபதிகளிடம் இருந்து சனியன்று புஷ் அரசாங்கம் குறிப்பாக தன்னை அந்நியப்படுத்திக் கொண்டது. வெள்ளை மாளிகையின் ஒரு செய்திதொடர்பு பெண்மணி கூறியதாவது: "நாங்கள் குர்திஷ் தொழிலாளர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, நடத்த மாட்டோம், துருக்கியும் அதே போல செய்யவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.... குர்திஷ் தொழிலாளர் கட்சி எங்களின் பொதுவான எதிரி." என்றார்.

குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவான ஈராக்கிய குர்திஷ் மேற்தட்டும் அதிகாரத்தை பெறுவதற்கான தங்களின் விருப்பங்களை கைவிட தயாராகிவிட்டதையே துருக்கியுடனான தலாபானியின் சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது. துருக்கியில் தரை இறங்கியவுடன், நவீன துருக்கிய குடியரசின் முதல் ஜனாதிபதியான கேமல் அட்டாதுர்கின் சமாதியில் அஞ்சலி செலுத்தியதே அவரின் முதல் நடவடிக்கையாக இருந்தது.

ஈராக்கிய எண்ணெய்துறை மந்திரி ஹூசைன் அல் ஷாஹ்ரிஸ்தானி கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் ஈராக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் பெரியளவிலான முதலீடுகள் உட்பட நெருங்கிய பொருளாதார கூட்டணி குறித்து மூத்த துருக்கி மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வெளிநாட்டு வர்த்தகத்திற்கான துருக்கி துணை மந்திரி குர்ஷ்டா துஜ்மென் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: "ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யவும் மற்றும் பரிமாற்றத்திற்காகவும் ஈராக்கிய எரிவாயு கிணறுகளின் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு துருக்கி முன்னுரிமை அளிக்கிறது." என்றார். ஈராக்கிய எண்ணெய்யை கிர்குகிலிருந்து செஹனிற்கு எடுத்து செல்லும் எண்ணெய் குழாய்க்கு இணையாக மற்றொரு எரிவாயு குழாய் அமைப்பதற்கான மற்றொரு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. குர்திஷ் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் கிர்குக் இருந்தால் இதுபோன்றதொரு பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்காது.

2007ல் 3.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் ஈராக்-துருக்கி இருதரப்பு வர்த்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் 20 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பதே நோக்கமாகும் என துஜ்மென் அறிவித்தார். தெற்கு ஈராக்கிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் துருக்கியின் முதலீட்டை பெரிமளவில் அதிகரிக்க வசதியாக ஈராக் நகரமான பாஸ்ராவில் ஒரு தூதரகத்தை திறக்கவும் துருக்கி திட்டமிட்டுள்ளது. ஈராக்கில் "துருக்கி விரும்பும் இடத்தில்" அதன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று ஷாஹ்ரிஸ்தானி அறிவித்தார். எண்ணெய் திட்டங்களுக்கு வெளிநாட்டு எரிசக்தித்துறை நிறுவனங்களுடனான குர்திஷ் பிராந்திய அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை என மீண்டும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய ஈராக்கிய எண்ணெய்துறை மந்திரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீது குர்திஷ் பிராந்தியத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அறிவித்தார்.

சனியன்று துருக்கிய தொழிலதிபர்களின் கூட்டத்தில் பேசியதன் மூலம் தலாபானி அவரின் வருகையின் நோக்கத்தை உறுதி செய்தார். "எண்ணெய், பொருளாதாரம், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் துருக்கியுடன் ஈராக் மூலோபாய உறவுகளை" விரும்புவதாக அவர் தெரிவித்தார். ஈராக்-துருக்கி கூட்டங்கள் நடத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாக புஷ் நிர்வாகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து 4 வரை புக்காரெஸ்டில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்ள வரும் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி வழியில் அன்காராவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என துருக்கிக்கான அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன் மார்ச் 7அன்று அறிவித்தார். ஈராக் தாக்குதலுக்கு துருக்கியின் ஒத்துழைப்பைத் தக்கவைக்கும் முயற்சிக்காக கடைசியாக ஷென்னி துருக்கிக்கு 2002ல் பயணித்திருந்தார்.

ஷென்னி மற்றும் ஜனாதிபதி குல், பிரதம மந்திரி ரெசிப் தாயெப் எர்டோகன் மற்றும் துருக்கி இராணுவ தளபதி ஜெனரல் யாசர் புயூகனிட் ஆகியோருக்கு இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளில் சந்தேகத்திற்கிடமின்றி ஈராக் ஒரு முக்கிய விடயமாக இடம்பெறும். சமீபத்திய மாதங்களில் அமெரிக்கா நேசக்கரம் நீட்டிய போதினும், ஈரானிய ஆட்சியுடனான தனது அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ள துருக்கி எவ்வித முடிவான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது தெஹ்ரானில் துருக்கி-ஈரானிய வர்த்தக கழகத்தின் ஒரு பெரிய கூட்டம் நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் விதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதிராக பெருமளவிலான துருக்கிய முதலீடுகளை மற்றும் ஈரானின் எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை அக்கூட்டத்தில் ஈரான் துருக்கியிடம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெஹ்ரானில் இருந்து அன்காராவை நயமாக விலக்க தலாபானியின் பயணம் உதவும் என சந்தேகத்திற்கிடமின்றி புஷ் நிர்வாகம் நம்புகிற போதிலும், ஈரானுடன் ஈராக்கிய ஜனாதிபதி உட்பட ஈராக்கிய மேற்தட்டு பிரிவுகள் சொந்த உறவுகள் கொண்டிருக்கும் அதேநிலையில், ஈரானுடனான தமது உறவுகளூடாக அமெரிக்கா-ஈரானுக்கு இடையிலான பதட்டங்களின் நிச்சயமற்றத்தன்மை பற்றி தமது பிரதிபலிப்பை காட்டியுள்ளனர். மார்ச் 2-3 தேதிகளில் ஈரானிய ஜனாதிபதி அஹ்மதினிஜாத் பாக்தாத்தில் முழு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved