World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Washington pushes through new UN resolution against Iran

ஈரானுக்கு எதிராக புதிய ஐநா தீர்மானம் மூலம் அமெரிக்கா நெருக்கடி அளிக்கிறது

By Peter Symonds
5 March 2008

Back to screen version

ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தாஜா மற்றும் மல்லுக்கட்டு வேலைகளை செய்து விட்டிருந்த நிலையில், திங்களன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஈரானின் அணுசக்தி திட்ட காரணத்தால் அந்நாட்டிற்கு எதிராக மூன்றாம் சுற்று தடைகளை திணிப்பதற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. புஷ் நிர்வாகம் இந்நடவடிக்கையை "சர்வதேச சமுதாயம்" ஈரானை ஒரு அச்சுறுத்தலாக கருதுவதற்கான ஒரு ஆதாரம் என்று பாராட்டினாலும், இந்த நடவடிக்கைக்கான அமெரிக்காவின் பிரச்சாரம் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆதரவு தேடும் சூழலை நிறுத்தி முட்டுக் கொடுப்பதற்கான ஒரு கடும் முயற்சியாக இருந்தது.

இந்த தீர்மானம் யூரேனிய செறிவூட்ட திட்டத்தை மற்றும் ஒரு புதிய கனநீர் ஆய்வு உலையை நிறுவுதலை நிறுத்தக் கோரும் முந்தைய கோரிக்கைகளையே மீண்டும் ஈரானுக்கு வலியுறுத்துவனவாக இருக்கின்றன. புதிய தடைகள் டிசம்பர் 2006 மற்றும் மார்ச் 2007 இன் இரண்டு முந்தைய தீர்மானங்களில் இருந்தவற்றில் கொஞ்சம் அதிகரிக்கப்பட்ட உயர்வையே குறிப்பிடுகிறது. இன்னும் ஐந்து ஈரானிய அதிகாரிகளும் இப்போது பயணத் தடைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இன்னும் 13 ஈரானிய நிறுவனங்கள் மற்றும் 13 அதிகாரிகளின் அயல்நாட்டு சொத்துகள் முடக்கப்படும். ஈரானுக்கு விற்கப்பட முடியாத பொருட்களில் இப்போது இராணுவ நோக்கங்களுக்கும் பயன்படுத்தத்தக்க சாத்தியம் கொண்ட இரு-பயன்பாட்டு சாதனங்களும் சேர்ந்துள்ளன. ஈரானுடனான வணிகத்திற்கு நிதி ஆதரவு அளிக்கும்போதும், தங்களது பிராந்தியத்தில் செயல்படும் ஈரானிய வங்கிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போதும் "கண்காணிப்புடன் நடந்து கொள்ள" உறுப்பு நாடுகளுக்கு இத்தீர்மானம் அழைப்பு விடுக்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய கப்பல்கள் மற்றும் விமானங்களை பரிசோதிப்பதற்கும் இது வகைசெய்கிறது.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா கோரியதற்கு கொஞ்சம் கூட நெருக்கமாயில்லை. முந்தைய தீர்மானங்களின் மீதான குதிரைபேரம் போல, ரஷ்யாவும் சீனாவும் கடுமையான தடைகளை அமலாக்குவதை தடுத்து விட்டன, ஈரானில் தங்களின் சொந்த நலன்களை பாதுகாக்க முற்பட்டன. ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக, இரண்டு நாடுகளும் தங்களது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிறுத்தியிருக்க முடியும், ஆனால் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் மோசடி வழக்கினை வெளிப்படையாக எதிர்க்க இரண்டு நாடுகளுமே தொடர்ந்து மறுத்து வருகின்றன. பல நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் ஆட்சேபம் தெரிவித்ததால் இந்த தீர்மானத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு தாமதமானது. லிபியா, வியட்னாம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒரு வரிசைக்குள் நெருக்கப்பட்டன, ஆனால் இந்தோனேசியா தனது வரம்புக்குட்பட்ட விமரிசனங்களைத் தொடர்ந்து செய்தது, அத்துடன் இறுதி வாக்களிப்பில் இருந்தும் ஒதுங்கிக் கொண்டது. முந்தைய இரண்டு ஐநா தீர்மானங்களைப் போல, ஒருமித்த வாக்களிப்பு என அமெரிக்கா பெருமையடித்துக் கொள்ள முடியாமல் போனது.

இந்த வாரத்தில் வியன்னாவில் நடந்த சர்வதேச அணுசக்திக் கழக கவர்னர்கள் குழுக் கூட்டத்தில் கடுமையான திரை மறைவுப் பிளவுகள் வெளி வந்தன. அமெரிக்க கூட்டாளிகளான - பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி - நேற்று கூட்டத்தில் ஈரான் மீது இன்னுமொரு தீர்மானம் கொண்டு வரத் தீர்மானித்திருந்த திட்டத்தை சீனா, ரஷ்யா மற்றும் வளரும் நாடுகளாகக் கூறப்படும் இன்னும் சில நாடுகள் இந்த நடவடிக்கையை எதிர்த்ததை அடுத்து கைவிட நேர்ந்ததாக அவரச செய்தி ஒன்று தெரிவிக்கிறது. சமீபத்திய மாதங்களில், ரஷ்யா ஈரானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் தீர்மானத்தை வெளிப்படுத்தி வருகிறது, வாஷிங்டனிலிருந்து வரும் கடும் எதிர்ப்புக்குப் பிறகும் புஷேரில் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் இருக்கும் அணுசக்தி உலைக்கு எரிபொருள் வழங்குகிறது.

உரை எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும், திட்டமிடப்பட்ட IAEA தீர்மானம் ஈரான் மீது ஐநா கண்காணிப்பு அமைப்பு கடுமையான நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் இலக்குகொண்டது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் குறிப்பாக IAEA இயக்குநர் ஜெனரல் முகமது எல்பரேதி மீது கடுப்புடன் இருந்து வருகின்றன. சென்ற ஜூலையில் அவர் ஈரானுடன், அதன் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான நிலுவையில் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் முறைப்படி பதிலளிக்க வகை செய்ய, ஒப்பந்தம் ஒன்றினை செய்த போது, இவை அவர் மீது ஒரு முறைப்படியான புகாரையே பதிவு செய்தன. ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவும் அதன் மூலம் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கவும் புஷ் நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நேரடியாக வேட்டு வைப்பதாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

வெள்ளைமாளிகையின் பிரச்சாரம் சென்ற டிசம்பரில் இன்னுமொரு அடியை சந்தித்தது, 16 அமெரிக்க வேவு அமைப்புகள் தங்களது தேசிய உளவுத்துறை மதிப்பீட்டின் (NIE) பொதுப் மதிப்பீட்டினை வெளியிட்டன, இதில் ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்கள் எதனையும் 2003 ஆம் ஆண்டிலேயே கைவிட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈரானுக்கு எதிரான புதியதொரு போருக்கு தயாரிப்புகள் செய்வதில் அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அயலுறவுக் கொள்கை ஸ்தாபனங்களுக்கு இடையிலுள்ள கூர்மையான தந்திரப் பிளவுகளை NIE வெளிப்படுத்தியது. ஈரான் ஒரு அபாயமாகவே தொடர்கிறது என்று NIE உறுதிப்படுத்தியிருப்பதாக கூறி மறுபடியும் தான் கூறியதை நம்ப வைக்க புஷ் சிரமப்பட வேண்டியதாயிற்று. ஆனால் அறிக்கை கண்டறிந்த விஷயங்களோ இந்த பொய்களையும், ஈரான் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு உடனடியான அச்சுறுத்தலாக இருப்பதாக வெறுப்புறும் அளவுக்கு திரும்பத் திரும்ப கூறி வரும் புஷ் அதிகாரிகளின் பிரச்சாரங்களையும் நேரடியாக அம்பலமாக்கியது.

வாஷிங்டனின் திட்டங்கள் மற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. ரஷ்யாவும் சீனாவும் இன்னுமொரு ஐநா தீர்மானத்தை எதிர்க்கும் தங்கள் முடிவை நியாயப்படுத்த NIE -ஐ பயன்படுத்திக் கொண்டன. ஈரானுக்கு எதிரான மத்திய கிழக்கு கூட்டணியாக அமெரிக்காவால் வளர்த்து வரப்பட்ட சவுதி அரேபியா மற்றும் எகிப்து உள்ளிட்ட மத்திய கிழக்கின் கூட்டாளிகள், ஈரான் அமெரிக்கா போர் அபாயம் தணிந்து விட்டதாக கூறி முடித்து விட்டனர், தெஹரானுடன் செயல்பாட்டு உறவுகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை துவங்கி விட்டனர். ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் கைப்பாவை அரசு ஈரான் ஜனாதிபதி மகமூத் அகமதினெஜாதை ஈராக்கிற்கு வருகை தர அழைப்பு விடுத்தது, இந்த வாரம் வருகை தந்த அவரும் தொடரும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு "[இந்த] பிராந்தியத்திற்கு ஒரு அவமானம்" என்று அறிவித்தார்.

எல்பரேதியை கீழறுப்பது

தனது முன்முயற்சிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்கில், புஷ் நிர்வாகம் திங்களன்று ஐநா பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு தன் வசம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் பிரயோகித்தது. வாக்களிப்புக்கு முந்தைய கட்டத்தில், அணு ஆயுதம் ஒன்றை கட்டுவதற்கான தயாரிப்புகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக உறுதியாகத் தெரிவிப்பது போல் தோன்றும் உளவுத்துறை தகவல்களை IAEA வசம் அமெரிக்கா வெளியிட்டது. இந்த வெளியீடு பல்வேறு நோக்கங்களை செயல்படுத்தியது: NIE -ஐ பலவீனப்படுத்துவது, ஒரு அணுகுண்டிற்கான திட்டங்களை ஈரான் கொண்டிருந்தது என்னும் அமெரிக்க கூற்றுகளை மீளவும் எழுப்புவது; மற்றும் நிலுவையில் இருக்கும் அனைத்து விவகாரங்களையும் தீர்க்க எல்பரேதி கொண்டுள்ள திட்டங்களை குறுக்கீட்டால் தடுப்பது. இந்த உளவுத்துறை அறிக்கை வெளியீட்டு நேரமானது, அமெரிக்க பிரச்சாரத்தின் தாக்கம் அதிகபட்சமாக இருக்கும் வகையிலும், அதே சமயத்தில் ஈரானுக்கு மறுமொழியளிக்க கால அவகாசம் வழங்காததாகவும் இருக்கும் வண்ணம் கவனமாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த தகவல்களில் அநேகமானவை புதியவை அல்ல, விளக்கப்படாத சூழல்களில் 2004 இல் ஈரானில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு மடிக்கணினியில் (Laptop) இருந்ததாக கூறப்படும் திட்டங்கள், வடிவமைப்புகள் மற்றும் பரிசோதனை முடிவுகளை இந்த அறிக்கை உள்ளடக்கியிருந்தது. இந்த விவரங்களை IAEA வசம் வழங்கியபோது, உளவுத்துறை நடவடிக்கை விவரங்கள் குறித்த முறைப்படியான தகவல்களை வெளியிடவில்லை, அல்லது அறிக்கை விவரங்களை ஈரானுடன் விவாதிக்கவும் IAEA -ஐ அனுமதிக்கவில்லை. எல்பரேதியால் அறிக்கை அளிக்கப்படவிருந்த ஒரு தருணத்தில் இந்த அறிக்கையை IAEA வசம் அளித்ததன் மூலம், உளவுத்துறையால் எழுப்பப்பட்ட கேள்விகள் மீதான எந்த ஒரு தீர்மானத்தையும் அமெரிக்கா தடுத்து விட்டது. இதன் விளைவாக, தனது ஷபாப் ஏவுகணைகளை ஒரு அணு சாதனத்தை சுமந்து செல்லும் வகையில் மறுவடிவமைப்பு செய்தது, யூரேனியம் டெட்ராஃபுளோரைடு உற்பத்தியை உள்ளடக்கிய "பச்சை உப்பு" பரிசோதனைகளை மேற்கொண்டது, மற்றும் ஒரு ஆயுதமுனையை தயாரிப்பதற்கு தேவையான பெரும் வெடிமருந்துகளை பரிசோதனை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதிலளிப்பதற்கு ஈரானுக்கு வெறும் ஒரு வார கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டது.

பிப்ரவரி 22 அன்று இறுதியாக்கப்பட்ட எல்பரேதி அறிக்கை, நிலுவையில் இருக்கும் அனைத்து பிற விவகாரங்களும் "இந்த நிலையில் இனியும் தீர்க்கப்படாததாக கருதப்படாதவை" ஒரு விவகாரத்தைத் தவிர - அது "பச்சை உப்பு திட்டம், உயர் வெடிமருந்து பரிசோதனகள் மற்றும் ஏவுகணை மறு-நுழைவு வாகனம் இவற்றின் மீதான குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் ஆராய்ச்சிகள்" குறித்தது என்று முடிவு செய்தது. இதற்கு முன்னதாக இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, இட்டுக் கட்டப்பட்டவை என்று ஈரான் நிராகரித்திருந்தது என்றாலும், பிப்ரவரி 15 அன்று தான் ஈரான் அதிகாரிகளிடம் இது குறித்த புதிய ஆவணங்களைக் காட்ட IAEA அதிகாரம் பெற்றிருந்தது. ஈரானுக்கு மறுமொழியளிக்க போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருந்த எல்பரேதி, "அதனால் இன்னும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் முழு இயல்பையும் தீர்மானிக்கும் நிலை க்கு IAEA வரவில்லை" என்று முடிவுக்கு வந்திருந்தார்.

இந்த அணுசக்தி அமைப்பே கூட ஒரு அரசியல் சண்டைக்களமாக ஆகி விட்டது என்பதன் ஒரு அறிகுறியாக, IAEA -இன் உதவி இயக்குநர் ஜெனரல் ஒல்லி ஹெயினோனென் IAEA உறுப்பு நாடுகளுக்கு பிப்ரவரி 24 அன்று தனது சொந்த தனிப்பட்ட "தொழில்நுட்ப விளக்க" அமர்வினை நடத்தினார். புதிதாக வெளியிடப்பட்ட உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், ஈரானின் பரிசோதனைகளும் திட்டங்களும் "அணு ஆயுத உருவாக்கத்தினை தவிர வேறு எந்த பயன்பாட்டிற்கும் பொருத்தத்தக்கதாய் இல்லை" என்று அவர் முடிவுக்கு வந்திருந்தார். இந்த கூட்டத்தில் இருந்த குறிப்புகள் பத்திரிகைகளுக்குக் கசிந்து வாஷிங்டன் போஸ்ட், மற்றும் நியூயோர்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் பிரதான இடத்தைப் பிடித்தது.

ஐநா வாக்கெடுப்பு அன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியான "ஆயுதங்கள் விவரம் குறித்த கூட்டம் ஈரான் விவாதத்தில் மீண்டும் புயலைக் கிளப்புகிறது" என்னும் கட்டுரை மூத்த புஷ் அதிகாரிகளால் திட்டமிட்டு விதைக்கப்பட்டது என்பதற்கான அத்தனை அடையாளங்களையும் கொண்ட விஷம் தோய்ந்த ஒன்றாக இருந்தது. ஈரான் குறித்த வெள்ளை மாளிகையின் கொள்கை மீது அமெரிக்க ஆளும் வட்டத்தில் நிலவும் கடுமையான விவாதங்களில் சிலவற்றினை வெளிக்கொணருவதாக இருந்தாலும், மூத்த இரண்டு கட்டுரையாளர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரை தெளிவாக ஹெயினோனனால் வழங்கப்பட்ட "புதிய" ஆதாரத்திற்கு நற்சான்றிதழ் அளிப்பதற்கும் மற்றும் NIE அறிக்கையின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துவதற்குமான நோக்கம் கொண்டிருந்தது. ஒரு "பெரிய தவறு" என்பது போல் தோன்றும் வகையில் பல அதிகாரிகள், சிலர் பெயருடன் சிலர் பெயரில்லாமலும், மேற்கோள் காட்டப்பட்டிருந்தனர்.

இந்த கட்டுரை முழுவதும் விரவியிருக்கும் புகார் என்னவென்றால், ஈரான் அணு குண்டினை தயாரிக்கும் நோக்கம் கொண்டிருந்ததா என்பதை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல்களை NIE மாற்றி விட்டது என்பது தான். நியூயோர்க் டைம்ஸ் விளக்குவது போல்: "பல வருடங்களாக, ஈரான் அணு ஆயுத உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது என்கிற மதிப்பீட்டை யுரேனியத்தை செறிவுபடுத்துவதற்கு அது தொடர்ந்து வேலை செய்வதைக் கொண்டே அமெரிக்கா தீர்மானித்து வந்துள்ளது..... டிசம்பர் மதிப்பீடோ, இதற்கு மாறாக, ஆயுத வடிவமைப்பில் குவியம் கொண்டுள்ளது". இந்த கருத்தானது அந்த பத்திரிகை கூற விரும்பியதைத் தாண்டிய உண்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது, அதாவது ஈரானுக்கு நடப்பில் எதுவும் ஆயுத திட்டம் எதுவும் இல்லை என்பதை அமெரிக்கா முன்னமே அறிந்திருந்தது என்பதையும், ஈரானின் யுரேனிய செறிவுத் திட்டத்தின் அடிப்படையிலேயே - இது IAEA ஆல் கண்காணிக்கப்படும் நிலையிலும், இதனை முழுக்க முழுக்க அமைதி நோக்கங்களுக்காகத் தான் பயன்படுத்தவிருப்பதாக ஈரான் அறிவித்திருந்த போதிலும் - அமெரிக்கா தனது குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்தது என்பதையும் தெளிவாக்கியிருக்கிறது.

அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செறிவூட்டவும் ஒரு கன நீர் உலையினை கட்டுவதற்கும் தனக்கு உள்ள உரிமைகளை ஈரான் அரசு வலியுறுத்தி வருகிறது. சமீபத்திய ஐநா தீர்மானத்திற்கான மறுமொழியில், ஈரானின் அயலுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது அலி ஹோஸைனி இது "சர்வதேச அணுசக்தி கழகத்தின் நோக்கம் மற்றும் சரத்துகளுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. இது அரசியல் தூண்டுதல்களாலும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையாலும் வழங்கப்பட்டுள்ளது. இது பயனற்றது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது" என்று அறிவித்தார். ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் கோரிக்கையானது, தனது கூட்டாளிகளான பாகிஸ்தான், இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை அணு ஆயுதங்கள் தயாரிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையிலும், தானே அணு குண்டுகளின் ஒரு கிடங்கையே வைத்திருக்கும் சூழ்நிலையிலும், அமெரிக்காவின் இரட்டைவேடத்தையும் சிடுமூஞ்சித்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.

ஈரானின் புனித அரசாங்கத்திற்கு எந்த அரசியல் அறிவுரைகளையும் WSWS கொண்டிருக்கவில்லை. ஈரான் மற்றும் அந்த பிராந்தியத்தின் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை எந்த வகையிலும் முன்னெடுத்துச் செல்லத்தக்கதல்லாத அல்லது ஈரானிய மக்களை அமெரிக்க இராணுவத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதல்லாத ஒரு நடவடிக்கையான, அணு குண்டு உருவாக்கத்திற்கு ஈரானிய அரசு ஸ்தாபனத்தின் சில பிரிவுகள் நோக்கம் கொண்டிருக்கும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், ஈரான் ஒரு குண்டினை தயாரிக்கும் நோக்கம் கொண்டுள்ளதற்கு அமெரிக்கா இதுவரை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. அணு குண்டு குற்றச்சாட்டுகள் அமெரிக்காவுக்கு, வெறுமனே ஈரானுக்கு எதிரான தனது தூதரக மற்றும் பொருளாதார நிலை தாக்குதல்களை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாக்குவதற்கும் ஒரு இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புகளை நியாயப்படுத்துவதற்கும் கிடைத்த ஒரு வசதியான சாக்கு தான்.

அதிகமாக விளம்பரப்படுத்தப்படும் மடிக்கணினியே நீண்ட மர்மமான "ஆதார" வரிசையில் மற்றொன்று தான், இது அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய துப்பறியும் அமைப்புகளால் இட்டுக் கட்டப்பட்டதாக கூட இருக்கலாம். தகவல்களை வெளியிட மூன்று ஆண்டு காலம் ஆகியிருக்கிறது என்பதே கூட அதன் சந்தேகத்திற்குரிய பின்புலத்தையே சுட்டுவதாய் இருக்கிறது.

அணுசக்தி குற்றச்சாட்டுகள் அமெரிக்காவை பொறுத்தவரை ஈரான் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க மேலாதிக்க இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான புஷ் நிர்வாகத் திட்டத்திற்கான வசதியான வாகனம் தான். இறுதி ஆய்வில், அமெரிக்க மிரட்டல்கள் எல்லாம் முதன்மையாக ஈரானை குறிவைத்ததாக இருக்கவில்லை, மாறாக இந்த பிராந்தியத்தில் தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டியாளர்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை சீர்குலைக்கும் நோக்கிலேயே இருப்பதை அறிய முடிகிறது. ஈரானில் கவனம் ஈர்க்கும் விஷயமாக அந்நாட்டின் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மட்டும் இருக்கவில்லை, மாறாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் வளங்கள் மிகுந்த பிராந்தியங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அதன் மூலோபாய இடநிலையும் தான். தனது அணுசக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட்டு அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் முழுமையாக சரணடைந்தாலும் கூட, அமெரிக்காவின் முரட்டுத்தனத்தை நியாயப்படுத்துவதற்கு ஈராக் விவகாரத்தில் ஈரான் தலையிடுவது உள்பட பல பிற சாக்குபோக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டன.

NIE அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, புஷ் நிர்வாகம் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தும் அபாயம் முடிவுக்கு வந்து விட்டதாக பஞ்சமில்லாமல் பல கட்டுரையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஐநா தீர்மானத்தை எந்த அளவு விடாப்பிடியான பிடிவாதத்துடன் அமெரிக்கா வெளிவரச் செய்தது என்பதை பார்க்கும்போது புஷ் பதவிக்காலத்தின் இந்த கடைசி ஆண்டில் அமெரிக்க இராணுவவாதத்தின் ஒரு புதிய வெளிப்பாட்டினை செயற்பட்டியலில் இருந்து அகற்றி விட முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved