World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: political crisis destabilizes Sarkozy

பிரான்ஸ்: அரசியல் நெருக்கடி சார்க்கோசியை நிலைகுலைவிக்கிறது

By Alex Lantier
10 March 2008

Back to screen version

ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் ஒன்பது மாதங்களுக்கு உள்ளாகவே, பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி ஒரு முழு நெருக்கடியாக வளரக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ள பரந்த வகையிலான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். அவரைப் பற்றிய கருத்துக் கணிப்பு சரிந்து கொண்டிருக்கிறது; இதற்கு காரணம் தேர்தல் உறுதிமொழிகள் இழிவுபடுத்தப்பட்டதும் அவருடைய கொள்கைகள் பற்றி மக்களிடையே பெருகிய முறையில் விரோதப் போக்கு ஏற்பட்டுள்ளதும்தான்; இதைத்தவிர அவருடைய தனிப்பட்ட ஆடம்பர வாழ்க்கையும் எதிர்ப்பை அதிகரித்துள்ளது. முதலாளித்துவ அரசியல்வாதிகளும் செய்தி ஊடகத்தினரும் அவருடைய நிலைப்பாட்டை குறைகூறி அவருடைய ஆளும் தகுதியை பற்றியும் வினாவை எழுப்பியுள்ளனர்.

ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் ஆரம்பத்தில் மக்களுக்கு இட்ட முறையீடுகள் என்னென்ன இருந்த போதிலும் -- அதுவும் பெரும்பாலும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் உத்தியோகபூர்வ பிரெஞ்சு இடது ஆகியவற்றின் அழுகிய தன்மை, பழமைவாதம் என்பவற்றால் விளைந்தது-- இப்பொழுது தகர்ந்து போயிருக்கிறது. வணிக சார்பு உடைய கொள்கையை கடைப்பிடிப்பதால், பிரெஞ்சு பொருளாதாரத்தை தாவித் தொடங்கவைப்பதன் மூலம் தொழிலாளர்களின் வாங்கும் திறனை, அதிகரிக்க அவரால் முடியவில்லை; உலகப் பொருளாதாரம் அந்த நிலைக்கு பிரான்சை தள்ளியுள்ளது. சமயம் அல்லது சட்டம் ஒழுங்குக்கு அவருடைய வெளிப்படையான ஜனநாயக விரோத முறையீடுகளும் அதிகரித்த அளவில் குரோதத்தைத்தான் தூண்டிவிடுகின்றன.

பெப்ருவரி 29 அன்று வெளிவந்த CSA கணிப்பின்படி, சார்க்கோசிக்கு ஆதரவு தரும் ஒப்புதல் 33 சதவிகிதமாகவும், 61 சதவிகிதம் அவர் செயல்படும் முறையை ஒப்புக் கொள்ளாத நிலையையும் காட்டுகிறது. வாக்களித்தவர்களில் 56 சதவிகித்தினர் "ஜனாதிபதிப் பதவியை சார்க்கோசி நன்கு பிரதிநிதித்துவம் செய்யவில்லை" என்று கூறியுள்ளனர். வாக்களித்தவர்களில் 65 சதவிகிதத்தினர் "பிரெஞ்சு மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு ஏதும் செய்யவில்லை" என்று கூறியுள்ளனர்.

பிரான்சின் அரசியல் நெருக்கடிக்கு மற்றொரு அடையாளமாக, வாக்களித்தவர்களில் 75 சதவிகிதத்தினர் பிரான்சின் முக்கிய இடது எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி ஒன்றும் நாட்டை ஆள்வதில் சார்க்கோசியை விட அதிகமாக சாதித்துவிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தால் அனுபவிக்கப்பட்டுவரும் சமூகநல பாதுகாப்புக்களை முடிவானவகையில் அணுகப்போவதாக பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்திற்கு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பிரெஞ்சு மக்களிடம் இருந்து இது ஓரளவு மறைத்து வைக்கப்பட்டிருந்தது; ஆயினும், அவர்களுக்கு "அதிகம் உழைத்து, அதிகம் சம்பாதி" என்ற ஒரு முழக்கத்தை அவர் கொடுத்திருந்தார். இப்பொழுது ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவம் சார்க்கோசி வாங்கும் திறன், வேலைகள் பற்றி கொடுத்த உறுதிமொழிகள் பெரும்பாலும் புகைமண்டலம், மற்றும் கண்ணாடியில் தெரிவது போல்தான் என்பது காட்டப்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஊடகமே பரந்த முறையில் சுட்டிக் காட்டியுள்ளதுபோல், விலைவாசி பணவீக்கம் பல உணவுப் பொருட்களுக்கும் பெரிதும் அதிகமாகிவிட்டது. நவம்பர் 2007ல் இருந்து ஜனவரி 2008க்குள் மிக அதிக உயர்வுகள், Le Nouvel Observateur ஏடு நடத்திய கணிப்பு காட்டியுள்ளபடி, யோகர்ட் (17-40 சதவீதம்), பால் (20-37சதவீதம்), அரிசி (10-18சதவீதம்), காமெம்பேர் பாலாடைக்கட்டி (12-32சதவீதம்), வெண்ணெய் (19-26சதவீதம்), சிற்றுண்டி சேரியல் (14-24சதவீதம்), வெள்ளை ரொட்டி (6-22சதவீதம்), உப்பிட்ட பன்றி இறைச்சி (18-44சதவீதம்) என்று உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, நிதிய விவகாரங்கள் ஆணையாளர் Joaquin Almunia சமீபத்தில் 2008 ல் அவருடைய ஐரோப்பிய பகுதிக்கான பொருளாதார வளர்ச்சி முன்கணிப்புக்களை 2.4 ல் இருந்து 1.8 சதவீதம் ஆக இருக்கும் என்றும், பிரான்சின் பொருளாதார வளர்ச்சி 1.5 முதல் 1.7 சதவீதம் ஆகத்தான் இருக்கும் என்றும் குறைத்துள்ளார். அவர் அமெரிக்க கடன்பிரிவு நெருக்கடி இந்த சரிவிற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

ஆனால், பொருளாதாரம் வாங்கு திறனை பெருகிய முறையில் குறைக்கும் நிலையில், தான் சமாளிக்க முடியாத நிலையில் தொழிலாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட வசதியற்ற நிலையில் சார்க்கோசி தன்னை இப்பொழுது காண்கிறார். பிரெஞ்சு அரசின் தலைவர் என்ற முறையில் பணவீக்கம், மந்தப் போக்குகள் என்று உலகப் பொருளாதாரத்தில் இருப்பதற்கான காரணங்களில் அவருடைய செல்வாக்கு ஏதும் கிடையாது; உதாரணமாக உலக எண்ணெய், இயற்கை எரிவாயு விலைகள் வெடித்து நிற்பது, அது உலகப் பொருளாதாரத்தின் பல பகுதிகளிலும் ஊடுருவி நிற்பது, மிக விரைவாக பெருகும் அமெரிக்காவின் அடைமானமதிப்பிற்கு மேலாக கடன் கொடுத்தல் மற்றும் கடன்பிரிவு நெருக்கடிகள் ஆகியவற்றை கூறலாம்.

பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திடையே மனோநிலையில் மாற்றம் என்பதற்கான பெருகிய அடையாளங்கள் வந்துள்ளன. சார்க்கோசியின் சமூக கெடுபிடி அரசியலுக்கு எதிராக தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களை தவிர, குறிப்பாக சில மிகவும் அசாதாரணமான மிகப் பெரிய வேலைநிறுத்தங்கள் தனியார் சில்லறை விற்பனை பிரிவிலும் வெடித்திருக்கின்றன.

சார்க்கோசியின் நயமற்ற செயல்பாடும், கெளரவமற்ற தன்மையும் ஜனாதிபதி பதவியையே இழிவுபடுத்தக்கூடும் என்றும் பிரெஞ்சு அரசியல் வட்டங்கள் அஞ்சுகின்றன. பெப்ருவரி 23ம் தேதி மிக அதிக அளவு தகவல் அறிவிக்கப்பட்ட நிகழ்வாய், பாரிசில் விவசாய கண்காட்சி ஒன்றில் சார்க்கோசியுடன் கைகுலுக்க ஒரு நபர் மறுத்து அவரிடம் கைகுலுக்குவது தன்னுடைய கைகளைக் கறையாக்கும் என்று கூறியதாக தெரிவிக்கிறது. இதற்கு மிக நாகரிகமற்ற முறையில் இழிசொற்களை பதிலாக சார்க்கோசி கொடுத்தது இன்னும் பரந்த முறையில் செய்தி ஊடகத்தால் கண்டிக்கப்பட்டது.

மத்திய-இடது நாளேடான Le Monde பெப்ருவரி 25ம் தேதி தலையங்கத்தில் தெரிவித்த கருத்தாவது: "அரசின் தலைவர் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி ஒரு நிதானமான, சுய கட்டுப்பாடு உடைய ஜனாதிபதி பதவியை வகிக்கவில்லை என்ற உணர்வைத்தான் உறுதிப்படுத்தியுள்ளார்."

அந்நிகழ்வு பற்றி 15 எதிர்மறை செய்தி ஊடகக் கருத்துக்கள் வந்துள்ள நிலையில், Le Nouvel Observateur, La Republique des Pyrenees ஐ மேற்கோளிட்டுக் கூறியது: "[முன்னாள் ஜனாதிபதிகளான] டு கோல், பொம்பிடோ, கிஸ்கார்ட், மித்திரோன், சிராக் ஆகியோர் பொதுமக்களின் அவமதிப்பை சில முறை எதிர்கொண்டனர்; அவர்கள் உடைகள் மீது எச்சில் கூட உமிழப்பட்டது. ஆனால் ஒவ்வொருவரும் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த வழி கண்டு குறைகூறுபவர்களை அரசின் தலைவருக்கு உரிய பெரும் கெளரவமான புறக்கணிப்புடன் எதிர்கொண்டனர்.... நிக்கோலோ சார்க்கோசியிடம் அத்தகைய சிறப்புத் தன்மை இல்லை."

ஒரு முன்னாள் உயர்மட்ட மாடல் அழகியும் பாடல் எழுதுபவருமான கார்லா ப்ரூனியுடன் சார்க்கோசி கொண்டுள்ள பகட்டான, வெளிப்படையான உறவு -- அவருடன் கிறிஸ்துமஸ் நேரத்தில் நிதியாளர் வின்சென்ட் போலோராவின் தனி ஜெட் விமானத்தில் எகிப்தில் உள்ள Luxor ஆடம்பர கேளிக்கை தலத்திற்கு சென்றது--இன்னும் கூடுதலான வகையில் மக்களை விரோதப்படுத்தியுள்ளது. பெப்ருவரி 2ம் தேதி ப்ரூனியை தன்னுடைய மூன்றாவது மனைவியாக சார்க்கோசி மணந்தார்.

இந்த உறவு, மதவாத வலதை ஊடாட நினைத்த சார்க்கோசியின் அலங்கோல முயற்சிகளின் தோல்விக்கும் கூட வழிவகுத்தது. டிசம்பர் 20, 2007 அன்று ரோமில் இருக்கும் லாடெரன் அரண்மனையில் கொடுத்த உரையில் இந்த முரண்பாடு சிறப்பாக வெளிப்பட்டது. நிகழ்விற்கு முன் வந்த செய்தி ஊடகத் தகவல்கள், இருமுறை விவாகரத்து செய்த சார்க்கோசி கத்தோலிக்க அதிகார படிநிலை அமைப்புடன் பேச இருக்கையில், தன்னுடைய பெண்-தோழியை அழைத்து வர துணிவுகொள்வாரா என்ற ஊகத்தால் மேலாதிக்கம் செய்யப்பப்பட்டது.

இறுதியில் சார்க்கோசி ப்ரூனியை விட்டுத்தான் சென்றிருந்தார். இதன் பின் அவர் கிட்டத்தட் கோமாளித்தனமான, நம்பமுடியாத உரையை நிகழ்த்தினார்; இதில் அவர் ஐந்தாம் நூற்றாண்டுக் கடைசியில் இருந்த ஜேர்மானிய தலைவர் க்ளோவிசின் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றத்தில் வேரைக் கொண்டிருந்த திருச்சபையுடன், அதேபோல குறிக்கோளைப் பரப்பும் கத்தோலிக்க பிரெஞ்சு கலைஞர்கள் பட்டியல் மீதான ஒரு சிறப்பு பிரெஞ்சு உறவில் தனது உரிமையை நிலைநாட்ட முயன்றார், க்ளோவிஸ் இன்றைய பிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதியை அன்று ஆண்டிருந்தார்.

மத வலதிற்கு சார்க்கோசியின் சமீபத்திய மாற்றம் பெப்ருவரி 24 அன்று வெளிப்படையான வாழ்த்துக்களை நான்கு தீவிர மரபுசார்ந்த குருமார்களுக்கு (Lefebvrist) அனுப்பியது ஆகும்; இது பரந்த முறையில் செய்தி ஊடகத்தில் குறைகூறலுக்கு உட்பட்டது. லெபேப்விரிஸ்ட்டுக்கள் பிரெஞ்சு திருச்சபைகளில் சட்டநெறியற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய நாளேடான லிபரேஷன் கத்தோலிக்க செய்தியாளர் கிறிஸ்டியான் தெரஸ்ஸை மேற்கோளிட்டு கூறியதாவது: "நிக்கோலா சார்க்கோசியின் மனவள அமைப்பில் உயர்ந்த உணர்வு வகையில் மத சார்பற்ற குடியரசு என்பது இல்லை. இந்த உயர்ந்த உணர்வு, அவரைப் பொறுத்தவரையில் சமயம்தான் ... தற்போதைய சூழ்நிலையில், கருத்துக் கணிப்பில் அவர் சரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மதம்தான் புகலிடம்."

கற்பிக்கும் குழு (Ligue de l'enseignement) ஒரு மனுவைத் தொடக்கியுள்ளது; "குடியரசின் மதசார்பற்ற தன்மையை காத்திடுக" என்பது அதன் பெயர்; இது கடந்த ஒரு மாதத்திற்குள் 100,00 கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.

15 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலான சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள் வெளியே அனுப்பப்பட மாட்டார்கள், காலவரையற்று தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என்ற திட்டம் கொண்ட ஒரு புதிய சட்டத்தை சார்க்கோசி முன்வைத்துள்ளார். அரசியலமைப்புக் குழு, அரசின் குடி உரிமைகள் பற்றிய தீவிர ஊடுருவலை எதிர்க்கவில்லை என்றாலும், இந்நடவடிக்கை சட்டமாக ஆகும் முன்னரே தண்டனை பெற்றோருக்கு அச்சட்டம் இயற்றப்படும் காலத்திற்கு முந்தைய காலத்திற்கும் பொருந்தும் என்று இருப்பதை தடைசெய்துவிட்டது. அடிப்படைக் கொள்கை சட்டத்தின் ஆட்சி ஆகும். எனவே இது குறைந்தது இன்னும் 15 ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வராது.

இயற்றப்பட்டதற்கும் முந்தைய காலத்திற்கு பொருந்தாது என்ற அரசியலமைப்புக் குழுவின் இந்த முடிவை சூழ்ச்சியுடன் சுற்றிச் செல்லும் வகையில் சார்க்கோசி முயன்றார். முதல் முறையீட்டு மன்ற தலைவரான Vincent Lamanda விற்கு சார்க்கோசி ஒரு கடிதம் எழுதி, "எமது சட்டத்தை ஏற்க இயலுமா" என்று வினவியுள்ளார்; அதாவது வன்முறைக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய காப்பாளர் போல் காட்டிக் கொள்ள முயன்றுள்ளார். "ஒவ்வொரு வரண்ட சட்ட உண்மைகளுக்கு பின்பும், நாம் மனித நாடகங்களுடன் செயல்பட வேண்டியுள்ளது."

சார்க்கோசியின் முன்மொழிவே அரசியலமைப்பிற்கு எதிரானது; பிரெஞ்சு அரசியலமைப்பின் 62வது விதி அரசியல் அமைப்புக் குழுவின் முடிவுகளுக்கு எதிராக முறையீடுகள் செய்ய முடியாது என்று கூறுகிறது. இதற்கு விடையிறுக்கும் வகையில் பிரெஞ்சு சட்ட முறை வட்டங்கள் ஒரு மனுவை, "குடிமக்கள் இயக்கத்திற்கு ஒரு அழைப்பு" என்ற தலைப்பில் தொடங்கியுள்ளனர்; இதில் சார்க்கோசி அரசியலமைப்பு "ஒட்டி" நடக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "எங்களுடைய புகார்கள் கேட்கப்படவில்லை என்றால், நேர்மையான ஜனநாயகக் குடிமக்கள் என்ற முறையில் குடியரசுத் தலைவர் என்ற முறையில் திரு நிக்கோலோ சார்க்கோசி அனைத்து நெறித் தன்மையையும் இழந்து விட்டார், அவருடைய தலையாய கடமைகளை செலுத்த இனி இயலாதவர், அதற்கேற்ற முடிவுகளை கொள்ளுவதற்கு அவர்தான் முழுப் பொறுப்பு என்று அறிவிக்க வேண்டியிருக்கும்."

சார்க்கோசியின் ஜனாதிபதி பதவி நெருக்கடி அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, உலக சோசலிச வலைத் தளம் அவரைப் பற்றிக் கூறிய மதிப்பீட்டை நிரூபணம் செய்கிறது. "இந்தப் பகட்டான, அலைக்கழிக்கும் பேரவா நிறைந்த, திறமையற்ற பிழைப்புவாதி தன்னுடைய வலிமையை ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க கொள்கை இல்லாத தன்மையில் இருந்து பெறுகிறார். ஒரு துணிவான அரசியல் தாக்குதல் விரைந்து அவரது மதிப்பைக் குறைத்துவிடும்."

பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு, இந்த வளர்ச்சிகள் எழுப்பும் வினா: உள்நாட்டில், வேலைகள் இழப்பு, வாழ்க்கைத்தரச் சரிவு, சமூகச் செலவினக் குறைப்பு ஆகியவற்றைச் செய்வதில் சார்க்கோசி நம்பிக்கையாக உறுதியளிப்பாரா; சர்வதேச அரங்கில் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தை அச்சுறுத்தும் பெரிய பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனப்படும் சார்க்கோசியின் திறன்கள் பற்றி வினாக்கள் இருப்பது மட்டும் இல்லாமல், அவருடைய வெளிநாட்டுக் கொள்கை ஒழுங்காகச் செயல்படுமா என்பது பற்றியும் ஐயம் உள்ளது.

டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு விரைவில் உயர்ந்துள்ளது -- யூரோவின் மதிப்பைக் குறப்பதற்கு ஐரோப்பிய மத்திய வங்கி வட்டிவிகிதம் குறைக்கப்படுவதற்குக் காட்டும் விரோத உணர்வை சார்க்கோசி கடக்க முடியாத நிலை, பெருகிய முறையில் சர்வதேச சந்தைகளில் பிரெஞ்சு தொழில்துறை நிலைமைய அச்சுறுத்தியுள்ளது. Le Monde பெப்ருவரி 26ல் " 'பிரான்சில் ஆக்கப்பட்டதன்' வீழ்ச்சி" ("The decline of 'Made in France' ") என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில்: 1978ம் ஆண்டு பிரெஞ்சு தொழிலாளர் தொகுப்பில் 25 சதவிகித்தினர் தொழில்துறையிலும், 14 சதவிகிதம் சில்லறை விற்பனை பிரிவிலும் இருந்தனர்; இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. கார் தயாரிப்பாளர்கள் ரேனால்ட், Peugeot-Citren, சிமென்ட் நிறுவனம் Lafarge ஆகியவை தங்களுடைய செயற்பாடுகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் நிலையில் வேலைவாய்ப்புக்கள் பெரிதும் குறைந்துவிடும்" என்று குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைகளை கொடுத்தலுக்கு பிரெஞ்சு அரசு உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அரசியல் மற்றும் இராணுவ வழிமுறைகளை அபிவிருத்தி செய்யவது தேவைப்படுகிறது. இதுவரை அத்தகைய நடவடிக்கைகள் முழுமையான பலன்களை கொடுக்கவில்லை. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு வடக்கு ஆபிரிக்காவில் இருக்கும் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பை கிடைக்கச்செய்யும், அதனை நன்கு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை வழங்கும் ஒரு மத்தியதரைக்கடல் ஒன்றியத்திற்கான சார்க்கோசியின் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் உறுதியான எதிர்ப்பை பெற்றுள்ளது, குறிப்பாக ஜேர்மனியிலிருந்து பெறுகிறது. நேட்டோவில் பங்கு பெறுவதற்கு மத்தியதரைக் கடல் பகுதியை கண்காணிக்கும் நேபிள்ஸில் உள்ள நேட்டோவின் தெற்கு ஆணையகத்தை கட்டுப்படுத்துவதற்காக, நேட்டோவில் பங்கேற்பதற்கான பிரெஞ்சு முன்மொழிவுகளும் தோல்வியடைந்துவிட்டன.

பெப்ருவரி 28 அன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டெளனில் ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் கொண்டுள்ள இராணுவ உடன்பாடுகள் அனைத்தும் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்ற சார்க்கோசியின் அறிவிப்பு புருவங்களை உயர்த்தியுள்ளது; இது "பிரான்சில் ஆப்பிரிக்க நிலைக்கு ஒரு அடியாகும்" என்று Le Monde விவரித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் துணை நிற்பது என்ற முடிவு, வெளிப்படையாக எதிர்ப்பை கொள்ளவில்லை என்றாலும், ஏற்கனவே கணிசமான விவாதத்தை தோற்றுவித்துள்ளது. பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையில் இது ஒரு முக்கிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. 2003ல் அமெரிக்க தலைமையிலான ஈராக் படையெடுப்பை அது எதிர்த்தது. வெளியுறவு மந்திரி குஷ்நெர் செப்டம்பர் 16 அன்று கொடுத்த அறிவிப்பில் பிரெஞ்சு இராணுவம் ஈரானுடன் அமெரிக்க நட்புநாடாக போருக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஏற்பட்ட கணிசமான எதிர்ப்பு, இறுதியில் சார்க்கோசியை "போர்" என்ற சொல்லை பன்படுத்தியிருக்கக்கூடாது என்று கூற வைத்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved