World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government plans sham local elections in eastern Batticaloa

இலங்கை அரசாங்கம் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் போலி உள்ளூராட்சி சபை தேர்தல்களைத் திட்டமிடுகிறது

By Sarath Kumara
22 February 2008

Back to screen version

இலங்கை அரசாங்கம் மார்ச் 10ம் திகதி யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தவுள்ளது. இந்த திட்டமிடப்பட்ட தேர்தல் மக்களின் ஆட்சியை மீண்டும் ஸ்தாபிதம் செய்வதுடன் தொடர்புபட்டதல்ல. அவை பிரதேசத்தின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஜனநாயக முகத்திரை ஒன்றை அணிவதற்கான மக்கள் சார்பு முயற்சியேயாகும். கடந்த ஆண்டு முன்னர் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியது.

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும். அவற்றுக்கு மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கட்டளைகளின் கீழ் குறைந்தளவு அதிகாரங்களே உள்ளன. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஏனைய பிரதேசங்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை 2006 முற்பகுதியிலேயே நடத்திய அதே வேளை, கொடூரமான அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் வடக்கு மற்றும் கிழக்குக்கான தேர்தல்களை ஒத்தி வைத்தார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதன் காரணமாக இந்தப் பிராந்தியங்களில் "பாதுகாப்பு நிலைமை" பலவீனமானது என்பதே ஒத்திவைப்புக்கான உறுதியற்ற சாக்குப் போக்காகும்.

இராஜபக்ஷ 2005 நவம்பரில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அதிதீவிர இனவாதக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தார். ஆழமான சமூகப் பிரச்சினைகள் எதனையும் அணுக முடியாமல் இருந்த இராஜபக்ஷ அரசாங்கம், முன்னைய அரசாங்கங்களைப் போல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பலமான போராட்டங்களை எதிர்கொண்ட நிலையில், வளர்ச்சிகண்டுவந்த அரசியல் பதட்ட நிலைமைகளை திசை திருப்புவதன் பேரில் தமிழர் விரோத இனவாதத்தை நாடியது. புலிகளுடன் 2002ல் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி, 2006 ஜூலையில் அவர் கிழக்கில் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்ததோடு பின்னர் வடக்கிலும் தாக்குதல்களை முன்னெடுத்து நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ளார்.

கிழக்கில் இராணுவ நடவடிக்கையின் போது, குறைந்த பட்சம் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 200,000 இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் பொதுமக்களாவர். சுமார் 30,000 தமிழர்களும் முஸ்லிம்களும் இன்னமும் அகதி முகாங்களில் இருக்கின்ற அதே வேளை, மேலும் பெருந்தொகையானவர்கள் உறவினர்களுடன் தங்கியிருக்கின்றனர். கொழும்பு அரசாங்கம் 42 புதிய பொலிஸ் நிலையங்களையும் பல இராணுவ முகாம்களையும் நிறுவுவதாக அறிவித்துள்ளதுடன் விரிவான இராணுவ-பொலிஸ் வலையமைப்பு ஒன்றும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தனது அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வெகுஜன விமர்சனத்தை திசை திருப்பவும் மற்றும் இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெறுவதாக பெரும் வல்லரசுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு காட்டும் முயற்சியாகவுமே இப்போது இராஜபக்ஷ கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துகின்றார். ஜனாதிபதி கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டும் என அண்மையில் பிரேரித்ததன் பின்னால் உள்ள அக்கறையும் அதுவே. கிழக்கில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதன் பேரில் அங்கு அரசியல் "ஸ்திரப்பாடு" இருப்பதாக காட்டிக்கொள்ள அவர் விரும்புகிறார்.

அரசாங்கம் துணைப்படை குண்டர்களை ஆதரிக்கின்றது

இலங்கை தேர்தல் ஆணையாளரின் படி, அந்த மாவட்டத்தில் சுமார் 270,471 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அகதி முகாம்களில் இருப்பவர்கள் கூட தமது வாக்குகளை அளிப்பதற்கு "வசதிகள்" ஏற்படுத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் வாக்குறுதியளித்துள்ளார். ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான ஆசனங்களில் போட்டியிட ஆறு கட்சிகள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு 22 உள்ளூர் "சுயேட்சைக் குழுக்களும்" போட்டியிடுகின்றன. கிழக்கில் ஏனைய மாவட்டங்களைப் போல் மட்டக்களப்பு மாவட்டமும் இன ரீதியில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் கலந்து வாழும் பிரதேசமாகும்.

இழிபுகழ் பெற்ற துணைப்படைக் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி.), குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதில் இட்டு நிரப்பும் நடவடிக்கைகள் பற்றி மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அரசாங்கம் டி.எம்.வி.பி. யை ஒரு "அரசியல் கட்சியாக" பதிவு செய்திருந்த போதிலும், அது உண்மையில் அரசாங்க சார்பு ஆயுதக் குண்டர் கும்பலாகும்.

இந்தத் தேர்தலில், ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற கூட்டணி மேலாதிக்கம் செய்யும். கிழக்கில் இந்தக் கூட்டணியின் பங்காளி டி.எம்.வி.பி. ஆகும். இராஜபக்ஷவின் ஆளும் கூட்டரசாங்கத்தின் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றது. இந்த அமைப்பும் ஒரு துணைப்படை பிரிவேயாகும். தேர்தலில் போட்டியிடும் இன்னுமொரு கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) ஆகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் டி.எம்.வி.பி. க்கும் இடையிலான கூட்டணி இந்தத் தேர்தலின் முற்றிலும் ஜனநாயக விரோத பண்பை வெளிப்படுத்துகின்றது. ஏனைய அரசியல் கட்சிகளைப் போல், அரசாங்கத்தின் உதவியுடன் டி.எம்.வி.பி. தேர்தல் ஆணையகத்தில் உடனடி அங்கீகாரத்தைப் பெற பிரச்சினைகளை எதிர்கொள்ள வில்லை. யுத்த சூழ்நிலைகளின் கீழ், அச்சுறுத்தல்கள் இன்றி கிழக்கில் உள்ள மக்களை தேர்தலில் "வெற்றி" பெற முடியாது என்பதையிட்டு இராஜபக்ஷ விழிப்புடன் உள்ளார்.

இந்தக் காரணத்துக்காகவே டி.எம்.வி.பி. பயன்படுத்தப்படுகின்றது என்பது பரவலாக நம்பப்படும் விடயமாகும். ஸ்ரீ.ல.மு.கா. பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி, தான் "ஆயுதங்களை சுமந்து திரியும் ஒரு துணைப்படைக் குழுவுடன்" ஆளும் கட்சி உடன்படிக்கை கைச்சாத்திடுவதை கேள்விப்பட்டதே கிடையாது என பிரகடனம் செய்தார். "இந்த சூழ்நிலைமைகளின் கீழ் சுதந்திரமான நேர்மையான தேர்தலை" அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என அவர் கேள்வியெழுப்பினார்.

டி.எம்.வி.பி. 2004ல் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற புலிகளின் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்ட முன்னால் படைத் தளபதியான கருணா அல்லது வி. முரளீதரனால் முதலில் அமைக்கப்பட்டது. கொழும்புடன் உடன்பாடு ஒன்றை காண விரும்பும் தமிழ் கும்பலின் ஒரு தட்டினரை பிரதிநித்துவம் செய்யும் கருணா, கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தனியான நிர்வாக மாவட்டத்தை விரும்புகின்றார். முன்னாள் யூ.என்.பி. அரசாங்கமும் தற்போதைய இராஜபக்ஷவின் நிர்வாகமும் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக இந்தக் குழுவுக்கு ஆதரவளித்தன. முடிவாக கருணா மதிப்பிழந்த அதே வேளை, டி.எம்.வி.பி. யின் புதிய தலைவர் பிள்ளையான் அல்லது எஸ். சந்திரகாந்தன் இலங்கை இராணுவத்தின் உடந்தையாக தொடர்ந்தும் இருந்து வருகின்றார்.

புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கிழித்தெறியும் வரை அதை மேற்பார்வை செய்த இலங்கை கண்காணிப்புக் குழுவும், அதே போல் ஏனைய ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புக்களும், டி.எம்.வி.பி. இராணுவம் அல்லது பொலிசாரின் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி ஆயுதங்களுடன் திரிவதாக அறிவித்திருந்தன. டி.எம்.வி.பி. அரசியல் எதிரிகளை படுகொலை செய்வதாகவும் அதே போல் கடத்தல், கப்பம் கோரல் மற்றும் பலாத்காரமாக ஆள் சேர்த்தல் போன்றவற்றையும் மேற்கொள்வதாகவும் அவை குற்றஞ்சாட்டியிருந்தன.

ஈ.பி.டி.பி. போன்ற ஏனைய அரசியல் கட்சிகள் நிராயுதபாணிகளாக்கப்படும் வரை தமது ஆயுதங்களை ஒப்படைக்க காரணங்கள் கிடையாது என டி.எம்.வி.பி. பேச்சாளர் அஸாட் மெளலானா இறுமாப்புடன் டெயிலி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்களை அச்சுறுத்தவும் புலிகளைத் தாக்கவும் இந்த தமிழ் துணைப்படை குண்டர்களை கூலிப்படைகளாக பயன்படுத்தி வருகின்றன என்ற உண்மையை மட்டுமே அவரது கருத்து கோடிட்டுக் காட்டுகின்றது. உதாரணமாக ஈ.பி.டி.பி. வடக்கில் தசாப்தத்துக்கும் மேலாக இயங்கி வருகின்றது.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) தேர்தலில் பங்குபற்ற மறுத்து விட்டது. யூ.என்.பி. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அங்கு "சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தும் சூழ்நிலை" கிடையாது என பிரகடனம் செய்தார். தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்தை எதிர்ப்பதற்கு மாறாக, 1983ல் யுத்தத்தை தொடக்கி வைத்தமைக்கு பொறுப்பாளி யூ.என்.பி. ஆகும். தேர்தலைப் பகிஷ்கரிப்பதில் அது முதலாவதாக அக்கறை செலுத்தியது, சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கும் துணைப்படை "கட்சிகளுக்கும்" இடையிலான கூட்டணியைப் பார்க்கிலும் யூ.என்.பி. க்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதினாலாகும்.

புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டது. அதன் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்ததாவது: "இந்தக் காட்சிகள் ஆயுதக் குண்டர்களாலேயே நடத்தப்படுகிறது. எங்களது ஆதரவாளர்களை மரணத்தின் வாசலுக்கு எங்களால் தள்ள முடியாது." கடந்த மாதம் தமிழ் கூட்டமைப்பு தேர்தல்களை நிறுத்துவதற்கு அழைப்பாணை பத்திரம் கோரி உயர் நீதிமன்றம் சென்ற போதிலும் அது வெற்றி பெறவில்லை.

தமிழ் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை டி.எம்.வி.பி. கடத்தியதாக தனது மனுவில் அது சுட்டிக்காட்டியிருந்தது. டி.எம்.வி.பி. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்திருந்ததோடு டிசம்பர் 15 அன்று வாக்கெடுப்பு முடிந்து மறுநாள் அந்த உறவினர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஆயினும், தேர்தலை இடை நிறுத்த மறுத்த நீதிமன்றம், மாறாக தேர்தல் தினத்தன்று நடக்கும் வன்முறைகள் தொடர்பாக வழக்குத் தொடருமாறு தமிழ் கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியது.

பலவித கொழும்பு-சார்பு ஆயுதக் கும்பல்களுக்கு இடையிலான போட்டி கிழக்கு நிலைமையை மேலும் ஸ்திரமற்றதாக்கியுள்ளது. ஈ.பி.டி.பி. ஆரம்பத்தில் டி.எம்.வி.பி. உடன் தேர்தல் கூட்டொன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்த போதிலும் டி.எம்.வி.பி. அதை நிராகரித்து விட்டது. ஈ.பி.டி.பி. அதன் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) போன்ற ஏனைய துணைப்படைக் குழுக்களுடன் கூட்டணியை ஸ்தாபித்துக்கொண்டுள்ளது.

ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு ஆரயம்பதியில் டி. பாலேந்திரன் என்ற தனது ஆதரவாளர் ஒருவரை டிசம்பர் 6 அன்று டி.எம்.வி.பி. தாக்கியதாக குற்றஞ்சாட்டியது. இந்த முறைப்பாடு தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஈ.பி.டி.பி. இணைப்பாளர் கே. அருமைலிங்கம் குற்றஞ்சாட்டினார். தமிழ் மக்களை ஒழுங்குபடுத்துவதில் கொழும்புடன் ஒத்துழைக்க முயற்சிகும் தமிழ் முதலாளித்துவ தட்டினரை பிரதிநிதித்துவம் செய்யும் இத்தகைய அமைப்புக்களின் முற்றிலும் வங்குரோத்தான பண்பையே இந்தத் தமிழ் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் அம்பலப்படுத்துகின்றன.

கிழக்கில் டி.எம்.வி.பி. உடனான இராஜபக்ஷ அரசாங்கத்தின் கூட்டணி, அந்தப் பிராந்தியத்தில் கொழும்பின் பிடியை பலப்படுத்திக்கொள்வதை இலக்காக்க கொண்டதாகும். ஆனால் அதன் ஒடுக்குமுறை வேலைத்திட்டம் கிழக்குக்கு அல்லது வடக்குக்கு மட்டும் வரையறுக்கப்படப் போவதில்லை. யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவதற்கும் எதிராக வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை நசுக்குவதன் பேரில் இத்தகைய ஆட்சி இலங்கை பூராவும் உடனடியாகவோ அல்லது பின்னரோ விரிவுபடுத்தப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved