World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Washington deploys warships off the coast of Lebanon

லெபனான் கடற்பகுதியில் வாஷிங்டன் போர்க்கப்பல்களை நிறுத்துகிறது

By Bill Van Auken
1 March 2008

Back to screen version

மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கான அச்சுறுத்தலை அதிகரிக்கும் வகையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் கடற்பகுதியில், வழிநடத்தப்படும் ஏவுகணை அழிப்பு கப்பல் USS Cole உள்ளிட்ட, அமெரிக்க போர்க்கப்பல்களை நிறுத்துவதற்கு புஷ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பிராந்தியம் முழுவதும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் மூலம் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட Cole உடன், நீர் நிலம் இரண்டிலும் நிறுத்தத்தக்க ஊர்தி அடங்கிய ஆறு கப்பல்கள் மற்றும் 2,000 க்கும் அதிகமான கப்பற்படை துருப்புக்களும் உள்ளடங்கலாக, அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த Nassau போர்க் குழுவும், விரைவில் சேர இருக்கிறது.

"லெபனான் சூழலால் எழுந்த கவலை" காரணமாக "பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக" இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் Agence France-Press செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

உண்மையில் ஆயுதப்படகு, ராஜதந்திரத்தின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பதட்டங்களை அதிகரிக்கவே செய்யும் என்பதோடு ஒரு பிராந்திய போருக்கான வாய்ப்பினையும் அநேகமாக ஏற்படுத்தி இருக்கிறது.

இராணுவக் குவிப்பு நடவடிக்கையின் உடனடி இலக்கானது சிரியா மற்றும் லெபனானுக்கு உள்ளேயேயான எதிர்க்கட்சி அரசியல் சக்திகள், குறிப்பாக அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக முத்திரையிடப்பட்டுள்ள லெபனானின் ஷியா மக்கள் இயக்கமான ஹெஸ்போல்லா, தான் என்று தோன்றுகிறது.

இந்த இராணுவ நடவடிக்கையுடன், சிரியாவுக்கு எதிரான மற்றொரு சுற்று தடைகளுக்கான புஷ் நிர்வாகத்தின் அறிவிப்பும் வியாழனன்று சேர்ந்து கொண்டது, இந்த முறை அண்டை நாடான ஈராக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிரான சண்டையை ஆதரிப்பதில் முக்கிய பங்காற்றியதாக குற்றம் சாட்டப்படும் பெயரறிந்த நான்கு தனிநபர்கள் மீது ஏவப்பட்டது.

கடற்படை நிறுத்தம் லெபனான் இறையாண்மைக்கு ஒரு நேரடியான அச்சுறுத்தல் என்று அறிவித்த ஹெஸ்பொல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் ஃபத்லலா, "லெபனான் மீது தனது மேலாதிக்கத்தை செயற்படுத்த அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ மிரட்டல்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்" என்று கூறினார். "மோதலானது அமெரிக்காவில் இருக்கும் முடிவு மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தான் என்று இது நிரூபிக்கிறது" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க ஆதரவு அரசாங்கத்துடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள், இந்த நிறுத்தத்திற்கு அமெரிக்காவானது லெபனான் அதிகாரிகளுடன் எந்தவித கலந்தாலோசனையும் இன்றி உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தனர்.

கடந்த நான்கு மாதங்களாக காலியாக இருக்கும் லெபனான் ஜனாதிபதி பதவிக்கான காலியிடத்தை நிரப்புவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு மீண்டுமொரு முறை தள்ளி வைக்கப்பட்டிருக்கிற ஒரு காலகட்டத்தில் அமெரிக்க கடற்படை நிறுத்தமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கிறது. இந்த பிராந்தியம் மற்றும் அதன் அதிமுக்கிய எரிசக்தி ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதான தனது பரந்த இலட்சியங்களை இன்னும் முன்செலுத்தும் பொருட்டு, லெபனானில் பிரதமர் ஃபோவுட் சினியோராவினைச் சுற்றி அமெரிக்கா மேலாதிக்கம் செய்யும் ஒரு ஆட்சியை உறுதிப்படுத்தும் கவலையுடன் அமெரிக்கா இருக்கிறது.

இந்த வாரத்தில் இத்தகையதொரு ஒத்திவைப்பு சம்பவம் 15வது முறையாக நிகழ்ந்தது, அரபு லீக் செயலாளர் ஜெனரல் அமர் மெளஸா மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி தோல்வியுற்றது, டமாஸ்கஸில் மார்ச் 29-30 இல் நடைபெற இருக்கும் அரபு மாநாடு முடிவடையும் வரை புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாத நிலையும் உருவானது. சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவும், லெபனானின் அமெரிக்க ஆதரவு ஆளும் கூட்டணியுடன் இணைந்து செயல்படும் மற்றும் சில அரபுத் தலைகளும், அரசியல் முட்டுக்கட்டை தீர்க்கப்படாவிட்டால், ஒரு லெபனான் ஜனாதிபதி பதவியில் இருக்காத பட்சத்தில், தாங்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

வாஷிங்டன் எந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தையும் வெறுப்புடன் எதிர்க்கிறது, மாறாக ஹெஸ்பொல்லாவின் அரசியல் ஆதிக்கத்தை அழிக்க உறுதி பூணும் ஒரு அரசாங்கத்தை நிறுவ தலைப்படுகிறது. தனது பங்குக்கு, ஹெஸ்பொல்லாவும் அதன் அரசியல் கூட்டாளிகளும், புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு திறன்மிகு வீட்டோ அதிகாரத்தை பெறும் வகையிலான போதுமான பிரதிநிதித்துவத்தை பெறுவதில் தீர்மானமாக இருக்கிறார்கள். ஆளும் கட்சிகளுக்கு தேவையான குறைந்தபட்ச பெரும்பான்மையை மறுக்கும் அளவுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான இடங்களை எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கின்றன என்பதால், ஜனாதிபதி தேர்வினை தடுக்கும் அதிகாரத்தை அவை கொண்டிருக்கின்றன.

லெபனான் நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் முக்கிய எதிர்க்கட்சி தலைவருமான நபி பெரி, அமெரிக்கா எந்த சமரசத்திற்கும் முட்டுக்கட்டை போட முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளியன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், குறிப்பாக ஒரு ஒற்றுமை கொண்ட அரசாங்கத்திற்கும் புதிய தேர்தல் சட்டத்திற்கும் அழைப்பு விடுத்த அரபு லீக்கின் முன்முயற்சிக்கு அமெரிக்கா விரோதமாக செயல்படுவதாகக் கூறினார்.

அமெரிக்காவும் அமெரிக்க ஆதரவு அரசாங்க கட்சிகளின் மார்ச் 14 கூட்டணியும் அரசாங்க நெருக்கடிக்கான பழியை சிரியா மீது தூக்கிப் போட முயல்கின்றன, லெபனானில் இருந்து துருப்புகளை திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டதாலும், 2005ல் நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்வதில் வெற்றி பெற்ற அமெரிக்க ஆதரவு அரசியல்வாதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்க நேர்ந்ததாலும் விரக்தியுற்று, அதற்குப் பழிவாங்கும் முகமாக சிரியா செய்யும் முயற்சி தான் இது என்று சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் தனது "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை" ஹெஸ்பொல்லா, சிரியா மற்றும் ஈரான் என அனைவரையும் இலக்குகளாக கொண்டு செயல்படுத்துவதற்கு லெபனானை ஒரு முக்கிய மேடையாக ஆக்க முயலும் புஷ் நிர்வாகத்தின் முயற்சிகள், லெபனானில் ஆழமாக வேரூன்றியுள்ள சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை மேலும் மோசமாக்குவதற்கான அறிகுறிகள் வளர்ந்து வருகின்றன. அமெரிக்க மூலோபாயமானது நாட்டில் மரோனைட் கிறிஸ்தவ, சுன்னி மற்றும் ஷியா அரசியல் சக்திகளுக்கு இடையில் தேய்ந்து சக்தி குறைந்த நிலையில் இருக்கும் அரசியல் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தினை மீண்டும் பிரித்து, 1975 தொடங்கி 15 வருடங்களுக்கு நாட்டை உலுக்கிய உள்நாட்டு யுத்தத்தினை மறுபடியும் கிளப்பும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முதன்மையான தொழிலாள வர்க்க மற்றும் ஏழை ஷியா மக்களின் சமூக நிலைமைகள் மீதான மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கும் அடக்குமுறை கொண்டு எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது. சென்ற மாத தொடக்கத்தில், பெய்ரூட் அருகில் உள்ள ஷியா பகுதி ஒன்றில் மின்சாரத் தடைகளுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று இராணுவத்துடனான மோதலாக வெடித்து, ஆயுதம் ஏந்தாத ஏழு ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்தனர். அது முதலே அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த போட்டி குடிப்படைகளுக்கு இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஆளும் கூட்டணியின் ஒரு முக்கிய உறுப்பினரான, ட்ரூஸ் தலைவர் வாலிட் ஜும்ப்லாட், பிப்ரவரி 10 வெளியான தொலைக்காட்சி உரை ஒன்றில் எதிர்க்கட்சிகளை ஒரு சண்டைக்கழைக்கும் சவாலை விடுத்தார்: "ஒழுங்கின்மையை நீங்கள் விரும்புகிறீர்களா? அதுவும் வரவேற்கப்படுகிறது. போரைத் தான் நீங்கள் விரும்புகிறீர்களா? அதுவும் வரவேற்கப்படுகிறது. ஆயுதங்கள் என்றாலும் எங்களுக்கு பிரச்சினையில்லை, ஏவுகணைகள் என்றாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. அவற்றைக் கொண்டு வந்து காட்டுவோம்.".

லெபனான் "உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் இருக்கிறது" என்று சமீபத்தில் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் சவுத் அல்-ஃபைசல் எச்சரித்திருந்தார்.

லெபனானின் உள் விவகாரங்களில் இராணுவத் தலையீடு செய்யும் நீண்ட இரத்தம் தோய்ந்த வரலாற்றினை அமெரிக்கா கொண்டிருக்கிறது, மேற்கத்திய ஆதரவு சக்திகளின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பினை அடக்கவும் பலமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது.

1958 இல், மேலாதிக்கம் செய்திருந்த முஸ்லீம் அரபு தேசியவாதிகளிடம் இருந்து பெருகி வந்த எதிர்ப்பில் இருந்து பாதுகாத்து ஜனாதிபதி கமீல் சமெளனின் வலது சாரி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக, இவருக்கு சிஐஏ மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு தரப்பு நிதி ஆதரவும் இருந்தது, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்வைட் ஐசனோவர் சுமார் 14,000 படையினர்களையும் கடற்படையினரையும் லெபனானுக்கு அனுப்பி வைத்தார்.

சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், லெபனான் நாட்டிற்குள் இஸ்ரேல் ஊடுருவலை அடுத்து மறுபடியும் அமெரிக்க கடற்படையினர் அனுப்பப்பட்டனர், ஆனால் பெய்ரூட் படைவீரர் தங்குமிடமீதான தாக்குதலில் 241 கடற்படையினரும் 58 பிரெஞ்சு துருப்பினரும் இறந்ததை அடுத்து இவர்கள் திரும்பப் பெறப்பட்டனர். பின்னர், இப்போது போலவே, அமெரிக்க போர்க்கப்பல்கள் லெபனான் கடற்கரை பகுதிக்கு அனுப்பப்பட்டு, ஷியா மற்றும் ட்ரூஸ் கிராமங்கள் மீது குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டன.

அமெரிக்க கப்பற்படை நிறுத்தத்தின் பின்னால் உள்ள மற்றுமொரு அகன்ற பின்புலமானது புதிய இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் குறித்து எழுந்துள்ள அச்சுறுத்தல்களாகும். புதன்கிழமை முதலே காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது, இதில் குறைந்தது 35 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர், இதில் ஒரு ஆறு மாதமே ஆன குழந்தையும், கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த நான்கு பிற குழந்தைகளும் அடக்கம்.

காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்குப்பகுதிக்குள்ளாக ராக்கெட்டுகளை ஏவியதற்கு பதிலிறுப்பாகவே தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய அரசாங்கம் கூறியது. இதனிடையே, காஸா பகுதிக்குள் இஸ்ரேலின் நில ஊடுருவல் தவிர்க்க இயலாமல் நிகழும் என்று மூத்த அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த பதிலடி குறித்த விளக்கத்தில் 'இனப் படுகொலை' என்பதற்கான ஹீப்ரூ வார்த்தையை பயன்படுத்தினார் துணை பாதுகாப்பு அமைச்சர் மதன் வில்னய். இஸ்ரேல் இராணுவ வானொலியில் வெள்ளியன்று பேசிய அவர், "நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நமது வலிமையனைத்தையும் ஒன்று திரட்டிப் பயன்படுத்துவோம் என்பதால் பாலஸ்தீனியர்கள் தங்கள் மீதே ஒரு பெரிய 'ஷோஹா'வினை (இன அழிப்பு படுகொலை) இழுத்துப் போட்டுக் கொள்வார்கள்" என்றார்.

இதனிடையே, லெபனானின் வடக்கு எல்லையில், மற்றுமொரு போருக்கான வெளிப்படையான தயாரிப்பாக, போர்ப் பயிற்சி நடவடிக்கைகளை இஸ்ரேல் படையினர் சமீபத்தில் நடத்தியுள்ளனர். 2006 இல், லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் ஒரு போர் புரிந்தது, பெரும் குண்டு வீச்சுத் தாக்குதலில் 1000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததோடு நாட்டின் பெரும்பான்மை உள்கட்டமைப்பும் சேதமுற்றது.

எப்படியிருந்தாலும், ஹெஸ்பொல்லாவினை வலிமையுள்ளதாக்கி விட்டது என்பதால், இந்த 34 நாள் போர் இஸ்ரேலுக்கு தோல்வியாக தான் முடிந்தது. போர் நிகழ்வுகள் குறித்து ஆய்வதற்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய கமிஷன் சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில் இந்த போரை "கைநழுவ விடப்பட்ட ஒரு முக்கிய வாய்ப்பாக" வர்ணித்துள்ளது.

பிரதமர் எகுத் ஒல்மர்ட்டின் அரசாங்கம் இந்த தோல்வியை இராணுவ முரட்டுத்தனத்தின் புதிய நடவடிக்கை மூலம் திருத்த முற்படலாம். ஹெஸ்பொல்லாவின் மூத்த இராணுவத் தளபதி இமாத் முக்னியா டமாஸ்கஸில் "திட்டமிட்டுப் படுகொலை" செய்யப்பட்டது, ஷியா இயக்கத்தை பதிலடி அளிக்கத் தூண்டி அதன் மூலம் லெபனான் மீதான இஸ்ரேல் போருக்கு மற்றுமொரு போலிச் சாக்கினை உருவாக்கும் இஸ்ரேலின் திட்டமிட்ட தூண்டல் தந்திரம் தான் என்றே இந்த பிராந்தியத்தில் பரவலாக பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிற மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள் என்கிற சாக்கில் ஈரான் மற்றும் சிரியாவை இலக்காக்க அமெரிக்காவுக்கு சொந்த போலிக்காரணத்தை ஏதுவாகும் என்பதால், இத்தகையதொரு திட்டம் ஏறக்குறைய நிச்சயமாக புஷ் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறும்.

ஏமனில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் இந்த கப்பலைத் தாக்கியதில் 17 மாலுமிகள் பலியானது முதலே அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போருடன்" அடையாளப்படுத்தியே பார்க்கப்படும் இந்த USS Cole அமெரிக்கக் கப்பல், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டிருப்பது என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தனது ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து இந்த பிராந்திய மக்கள் மீது இன்னும் கூடுதலான ஆயுத அச்சுறுத்தலை கட்டவிழ்த்து விடுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது என்ற கடுமையான அச்சுறுத்தும் எச்சரிக்கையை உள்ளடக்கியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved