World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தோனேசியா Indonesia quits OPEC after fuel price hikes எரிபொருள் விலை உயர்வை அடுத்து பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிலிருந்து இந்தோனேஷியா வெளியேறுகிறது By Oscar Grenfell பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பில் இந்தோனேஷியாவின் உறுப்பினர் பதவிகாலம் இவ்வாண்டு இறுதியில் முடிவுக்கு வரும் நிலையில், அதிலிருந்து இந்தோனேஷியா விலகி கொள்வதாக அந்நாட்டின் எரிசக்திதுறை மந்திரி புர்னோமோ யுஸ்கெயின்டொரொ மே 28ல் அறிவித்தார். சுமார் 30 சதவீத எரிபொருள் விலையுயர்வு ஏற்பட்ட ஓரிரு நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வெளியானது. 1977ல் உச்சநிலையில் இருந்த அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி படிப்படியாக குறைந்து சென்றதால், கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற இந்தோனேஷிய அரசாங்கம் ஆலோசித்து வந்தது. தற்போது இந்தோனேஷியா அதன் தேவைகளுக்கு முழுவதும் இறக்குமதி செய்து வருகிறது என்பதுடன் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையும் வளர்ந்து வருகிறது. எரிசக்தித்துறை வல்லுனரான விக்டர் ஷூம், புர்வின் மற்றும் ஜெர்ட்ஸ் உடன் மே 26ல் சிங்கப்பூரில் அசோசேடட் பிரஸ்ஸ்ஸிடம் கூறுகையில், "OPEC (எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு) க்கு உள்ளே உண்மையிலேயே அவர்கள் (இந்தோனேஷியா) எவ்வித குறிப்பிடத்தக்க செல்வாக்கும் கொண்டிருக்கவில்லை." என்றனர். எவ்வாறிருப்பினும், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகளுக்கு ஏற்றுமதி நாடுகள் மீது பழி சுமத்தி சமூக அமைதியின்மைக்கு தடைபோட்டு வந்த ஜனாதிபதி சுசீலோ பம்பேங் யுதோயோனொ அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளின் பெருமுயற்சியால் தான், வெளியேறுவது என்ற தற்போதைய இந்த முடிவு நடந்திருக்கிறது. OPEC அறிவிப்பை வெளியிட்ட பல நாட்களுக்கு பின்னர், "நாங்கள் உயர்ந்து வரும் எண்ணெய் விலையுயர்வால் திருப்தி அடையாததால்" இந்தோனேஷியா அதிலிருந்து வெளியேறியது என யுதோயோனொ ஓர் அறிக்கை வெளியிட்டார். எரிசக்தி ஆலோசகர் டோனி ரீகன் சிங்கப்பூரை மையமாக கொண்ட நெக்சண்ட் நிறுவனத்துடன் இணைந்து மே 28ல் Bloomberg செய்திக்கு கூறியதாவது: "இந்த நடவடிக்கை உள்ளூர் மக்களுக்காக நடத்தப்படுகிறது. எண்ணெய் விலையை உயர்த்தும் அமைப்பில் அவர்களும் ஒரு பகுதியாக இருக்கும் போது எண்ணெய் விலை குறித்தும் மற்றும் மக்கள் அதிக விலை கொடுப்பதையும் பற்றி எவ்வாறு அவர்கள் கவலையை வெளியிட முடியும்?" எண்ணெய் விலை இந்த ஆண்டில் மட்டும் ஒரு பரலுக்கு 100 அமெரிக்க டாலரில் இருந்து 135 டாலருக்கும் மேலாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை விலையை விட, குறைவான விலையில் அளிப்பதற்காக அரசாங்கம் மானியத்தைத் தொடர்வதால் ஏற்படும் செலவுகளைக் குறைக்க மே 25ல், யுதோயோனொவின் அரசாங்கம் உள்நாட்டு எரிபொருள் விலைகளை உயர்த்தியது. இரவோடு இரவாக, அது எரிவாயுவின் விலையை 33 சதவீதமும், டீசலின் விலையை 27 சதவீதமும், பல இலட்சக்கணக்கான இந்தோனேஷியர்களால் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மண்ணெண்ணையின் விலையை ஒரு கலனுக்கு 1 அமெரிக்க டாலர் என்கிற அளவில் 25 சதவீதம் உயர்த்தியது. 2009 மத்தியில் வரவிருக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மேலும் விலையுயர்வு இருக்காது என்பதை உறுதிப்படுத்தவும் யுதோயோனொ மறுத்துவிட்டார். அவர் நிருபர்களுக்கு ''எங்களால் உறுதியளிக்க முடியாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எங்களுக்கு தெரியாது'' என்றார். எரிவாயு, எண்ணெய் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையுயர்வு முன்னதாக இந்தோனேஷியாவில் பரவலான சமூக அமைதியின்மையை ஏற்படுத்தியது. 1998ம் ஆண்டு, மே 4ல் எரிபொருள்களின் விலையை 71 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற அப்போதைய ஜனாதிபதி சுகர்டோவின் முடிவு, அதன் சர்வாதிகாரத்திற்கு எதிராக பெரும் ஆர்பாட்டங்களை உருவாக்கியது, அதற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் அவர் பதவி விலகினார். இதனை பின்தொடர்ந்து ஜனாதிபதிகள் வாஹித் (2001இல்), மேகாவதி சுகர்னோபுத்ரி (2003 இல்) மற்றும் யுதோயோனொ (2005 இல்) ஆகியோரால் எடுக்கப்பட்ட எரிபொருள் விலையுயர்வுக்கான முடிவுகளும் கணிசமான ஆர்ப்பாட்டங்களை சந்தித்தன. இந்த வரலாற்றுடன் பார்க்கும்போது, இந்தோனேஷிய ஏழைகளுக்கு மாதம் 100,000 ரூபா அல்லது 11 அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகையை ரொக்கமாக வழங்கும் திட்டத்துடன் யுதோயோனொ அரசாங்கம் விலையுயர்வை இணைத்துக்கொண்டது. ஓர் இந்தோனேஷிய குடும்பம் - மோசமான தரையுடன், ஓட்டை கூரையில், உடைந்த மூங்கில் சுவர் கொண்ட மின்சார வசதியில்லாத ஒரு வீட்டில் மாத வருமானம் 600,000 ரூபாயிற்கும் குறைவாகவும், சொத்து மதிப்பு 500,000 ரூபாயிற்கும் குறைவாகவும் இருந்தால் தான் இந்த ரொக்க பணத்தைப் பெற முடியும் என ஜகார்தா போஸ்ட் குறிப்பிட்டிருந்தது. இந்த வரையறைகளுக்கு உட்பட்டிருந்தும், சுமார் 19.1 மில்லியன் குடும்பங்கள் இந்த உதவியில்லாது கைவிடப்பட்டுள்ளன. இந்தோனேஷிய பல்கலைக்கழகத்தின் ஓர் அரசியல் ஆய்வாளர் அர்பி சனித் மே 25ல் அசோசேடேட் பிரஸிடம் கூறுகையில், ரொக்கமாக அளிக்கப்படும் இந்த உதவித்தொகை சில காலத்திற்கு அரசாங்கத்தின் மதிப்பை உயர்த்தி பிடித்த போதினும், "அது தற்காலிகமானதே ஏனென்றால் அதனால் விலையுயர்வை ஈடுசெய்ய முடியாது." என்று தெரிவித்தார். இந்தோனேஷிய உழைக்கும் வர்க்கமும், கிராமப்புற ஏழைகளும் எரிபொருள் விலையுயர்வை மட்டும் சந்திக்கவில்லை, அவர்கள் சோயாபீன்ஸ், கோதுமை மற்றும் இதர பிற அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தோனேஷிய பணவீக்க வீதம் ஏப்ரலில் 19 மாதங்களில் இல்லாத அளவாக 8.96 சதவீதத்தை தொட்டது, மேலும் நடப்பு ஆண்டின் இறுதியில் அது 12 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண மக்களிடம் எடுக்கப்படும் ஊடக பேட்டிகள், மக்கள்தொகையின் பரவலான பிரிவுகளின் மீது சுமத்தப்படும் விலையுயர்வுகள் அளவிட முடியாத துயரங்களை எடுத்துக்காட்டுகின்றன. ஜகார்தாவில் 300,000 ரூபாய் அல்லது மூன்று மாதங்களுக்கான ரொக்க உதவித்தொகையை தபால் அலுவலகத்தில் பெறும் 63 வயதான ஒரு மூதாட்டி சாய்னி மே 24ல் ராய்டரிடம் கூறுகையில், "அனைத்து அத்தியாவசிய தேவைகளும் மிகவும் விலையுயர்ந்துள்ளன. எங்களால் அதற்கு எதிராக போராட முடியவில்லை, மேலும் நாங்கள் போராடினாலும் கூட, விலை தொடர்ந்து உயர்கிறது." அவர் மேலும் கூறுகையில், மாதம் 100,000 ரூபாய் என்பது "அர்த்தமற்றது." அது "உணவுக்கு கூட போதியதாக இல்லை." என்றார். மே 30ல், 25 வயது நிரம்பிய மீனவர் வாரூசன், அசோசேடேட் பிரஸிடம் கூறுகையில், "எங்களைப் போன்ற மக்கள் மீது அரசாங்கம் இரக்கம் காட்ட வேண்டும். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். எங்களை முதன்மையாக கருத அவர்களுக்கு மனமில்லை." என்றார். காய்கறிகள் விற்கும் எட்டு குழந்தைகளின் தாயான 48 வயது பெண்மணி கார்டினி கூறுகையில், "எங்கள் குழந்தைகளுக்கு எங்களால் உணவு அளிக்க முடிந்தால், நாங்கள் அதிஷ்டசாலிகள்." என்றார். தன் வாழ்க்கை தேவைகளுக்காக பாதுகாவலராக பணியாற்றி வரும் 51 வயதான அஹ்மத் ஹிதாயத் கூறுகையில், "கடந்த காலத்தில், நான் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தேன். தற்போது என்னால் இரண்டு முறை மட்டுமே சாப்பிட முடியலாம். அதுவும் சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் டோபு மட்டுமே சாப்பிடக் கூடியதாய் இருக்கலாம்." என்றார். பெரியளவிலான போராட்டங்கள் அங்கு இல்லாத போதினும், எரிபொருள் விலைகள் மாணவர்கள் மத்தியில் கோபமான போராட்டங்களை உருவாக்கி இருக்கிறது. மே 25ல், பல நூறு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள், மேலும் அவர்கள் ஜகார்தா தேசிய பல்கலைக்கழகத்தில் நின்ற போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டார்கள். கற்கள், கைவெடிகுண்டுகள் மற்றும் எரியும் டயர்களை வீசியதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். ஜனாதிபதி மாளிகையின் வெளியில் நடந்த மற்றொரு போராட்டத்திலும் டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சுரபயாவிலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதற்கடுத்த வாரத்தில் கிழக்கு ஜகார்தாவின் கிறிஸ்துவ பல்கலைக்கழக்திலும் மற்றும் தெற்கு ஜகார்தாவிலுள்ள மோய்ஸ்டோபோ பெராகமா பல்கலைக்கழகத்தின் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன. முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெற்கு ஜகார்தா போலீஸ் பிரதேசம் மற்றும் நகர போலீஸ் தலைமையிடத்தின் வெளிப்புறத்திலும் 300 மாணவர்கள் பங்கு பெற்ற ஒரு பிரத்யேக பேரணி நடத்தப்பட்டது. மாணவர்கள் மீதான போலீஸ் அடக்குமுறையானது மாணவர்களின் போராட்டம் பல மில்லியன் உழைக்கும் வர்க்கத்தை போராட்டத்திற்காக தெருவின் இறங்கிவிடும் என்ற இந்தோனேஷிய ஆளும் வட்டாரங்களின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. கைது நடவடிக்கைகள் இருந்த போதினும், வாரயிறுதியில் நிறைய பேரணிகள் இடம் பெற்றன. ஜகார்தாவில், விலையுயர்வை திரும்ப பெற முடியாது என்ற அரசாங்க மறுப்பை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி ஜூன் 8ல் இரண்டு மாணவர்கள் தங்களின் உதடுகளை ஒன்றாக இணைத்து தைத்துக் கொண்டார்கள். மாணவர்களின் செய்தி தொடர்பாளர், நேண்டோ சிடாபுடர் ராய்டரிடம் கூறுகையில், "இந்த விலையுயர்வை இரத்து செய்ய கோரி நாங்கள் தொடர்ந்து எங்கள் பாதையில் நடை போடுவோம்." என்று தெரிவித்தார். |