World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆசனத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பில் இலங்கை தோல்விகண்டது By Saman Gunadasa கொழும்பின் ஒருமுகப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தின் மத்தியிலும், மே 21 ஐ.நா. பொதுச் சபையால் நடத்தப்பட்ட தேர்தலில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உறுப்புரிமையை இழந்தது. ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதில் தனது சொந்த பயங்கரமான சாதனைகளை மறைத்துக்கொள்ளும் ஒரு வழிமுறையாக இந்த உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்ள அவநம்பிக்கையுடன் முயற்சித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் இந்த இழப்பு ஒரு அவமதிப்பான அடியாகும். இந்தப் பேரவையில் 47 ஆசனங்களில் 15 உறுப்பு நாடுகளை தேர்ந்தெடுக்கவே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. பஹ்ரயின், ஜப்பான், பாகிஸ்தான், தென் கொரியா, இலங்கை மற்றும் கிழக்குத் தீமோர் ஆகிய ஆறு நாடுகள் ஆசியாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நான்கு ஆசனங்களுக்காக போட்டியிட்டன. வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 192 நாடுகளின் வாக்களிப்பில், இலங்கையும் கிழக்குத் தீமோரும் முறையே 101 மற்றும் 97 வாக்குகளை மட்டுமே பெற்று கடைசியில் தள்ளப்பட்டன. ஆதரவு நாடுகளை திரட்டுவதற்காக இலங்கை அரசாங்கம், மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டது. வாக்கெடுப்பு நெருங்கிய வாரங்களில், அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகளுடன் பேசுவதற்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம தனிப்பட்ட முறையில் நியூ யோர்க்கிற்கு சென்றார். வாக்கெடுப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, மே 13 அன்று நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் காலப்பகுதிக்குரிய சர்வதேச ஆய்வுக் குழுவின் முன்நிலையில் சமர்ப்பிப்பு ஒன்றுக்காக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா சென்றிருந்தார். ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயதிலகவுடன், சமாதான செயலகத்தின் தலைவர் ரஜீவ் விஜேசிங்க, வெளியுறவு செயலாளர் பாலித கோஹன, ஐ.நா. தூதர் பிரசாத் காரியவாசம் மற்றும் சட்டமா அதிபர் சி.ஆர். டி சில்வா ஆகிய அனைவரும் இலங்கையின் மனித உரிமைகள் சாதனைகள் தொடர்பாக சர்வதேச கலந்துரையாடல்களில் உரையாற்றினர். ஆயினும், இத்தகைய சர்வதேச மனித உரிமைகள் சபைகளின் சிடுமூஞ்சித்தனமான மோசடி சூழ்நிலைகளிலும் கூட, இலங்கையில் ஜனநாயக உரிமை மீறல்களை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதளவுக்கு அவை ஆகவும் தெளிவாக இருந்துள்ளன. 2005 நவம்பரில், இலங்கையின் ஜனாதிபதி பதவியை வென்ற உடனேயே இராஜபக்ஷ தமீழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு மீண்டும் திரும்பினார். ஆத்திரமூட்டல் மற்றும் படுகொலைகளின் மோசடி யுத்தத்தை அடுத்து, அரசாங்கம் 2006 ஜூலையில் இராணுவத் தாக்குதல்களுக்கு கட்டளையிட்டதோடு 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு பிரதேசத்தை கைப்பற்றியது. கிழக்கில் புலிகளின் கோட்டைகளைக் கைப்பற்றிய பின்னர், இராணுவம் வடக்கில் யுத்தத்தை தொடங்கியுள்ளது. 2008 ஜனவரியில், இராஜபக்ஷ அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கிழித்தெறிந்தது. இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கு மீண்டும் திரும்பியதை எதிர்க்காத பெரும் வல்லரசுகள், அதன் மனித உரிமை சாதனைகள் தொடர்பாக மெளனம் சாதிக்கின்றன. தீவு இப்போது அவசரகால ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த அவசரகாலச் சட்டம் விசாரணையின்றியும் காலவரையறை இன்றியும் ஒருவரை தடுத்துவைக்க அனுமதிக்கின்றது. இராணுவத்தைப் பற்றி அல்லது யுத்தத்தைப் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை செய்ததற்காகக் கூட பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் உள்ளதோடு பல சமயங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை, ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களை மற்றும் ஆத்திரமடைந்துள்ள விவசாயிகளையும் துரோகிகள் என அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். பாதுகாப்புப் படையினர் முழுத் தமிழ் சிறுபான்மையினரையும் "புலிப் பயங்கரவாதிகளாக" நடத்துகின்றனர். இராணுவத்தால் அல்லது அதனுடன் இணைந்து செயற்படும் துணைப் படைக் குழுக்களால் நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல்" ஆக்கப்பட்டுள்ளார்கள் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். எவ்வாறெனினும், இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், துஷ்பிரயோகங்கள் தொடர்பான மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களை மொட்டையாக மறுப்பதோடு அவற்றின் பரிந்துரைகளையும் நிராகரித்துள்ளனர். சில சமயங்களில் குற்றச்சாட்டுக்கள் விடுப்பவர்களை புலிகளிடம் சம்பளம் பெறுபவர்கள் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு, ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக இலங்கையை "கொடுமைப்படுத்துவதாக" ஐ.நா. வைக் குற்றஞ்சாட்டியதோடு கடந்த 30 ஆண்டுகளாக இந்த சர்வதேச அமைப்பினுள் புலிகள் கடுமையாக "ஊடுருவியுள்ளார்கள்" எனவும் கேலிக்கூத்தாகக் கூறிக்கொண்டார். கடந்த அக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்ததை அடுத்து, மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்ததாவது: "பெருந்தொகையான படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை தீர்த்து வைக்கப்படவில்லை." அவர் வருகை தந்தபோது, அவருக்கு ஒரு நீண்ட பட்டியலை கையளிப்பதற்காக கொழும்பில் உள்ள ஐ.நா. கட்டிடத்தில் 200 பேர் வரை குவிந்தனர். அவர்களில் பெரும்பான்மையானவர்களின் அன்புக்குரியவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆர்பரின் வருகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஐ.நா. விசேட தூதுவர் மென்ஃபிரட் நொவாக் இலங்கைக்கு வருகை தந்து, 25 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை முன்வைத்தார். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ள சூடான இரும்புக் கம்பிகளால் சுடுதல் மற்றும் அலங்கோலமாக தொங்கவிடுதல் போன்ற கொடூரமான சித்திரவதை வழிமுறைகளால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாக" அந்த அறிக்கை தெரிவித்தது. சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களின் மனிதத்தன்மையற்ற நிலைமையையிட்டு நொவாக் கவலை வெளியிட்டார். "அவசரகால சட்டத்தின் கீழ் சித்திரவதைகளுக்கு எதிரான பாதுகாப்புக்கள் பயன்படுத்தப்படவில்லை அல்லது சாதாரணமாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளன. இது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சூழ்நிலையில் சித்திரவதை ஒரு வழமையான பழக்கமாக ஆகிவிடும் நிலைமைக்கு வழிவகுக்கும்," என அவர் மேலும் தெரிவித்தார். சாட்சிகளையும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் சித்திரவதைகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறை, அவசரகால விதிகளின் கீழ் தடுத்து வைக்கும் காலத்தையும் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீதான ஏனைய அவசரகால தடைகளையும் குறைத்தல் ஆகியவையும் நொவாக்கின் பரிந்துரைகளில் அடங்கும். ஏப்பிரலில் ஐ.நா. பொதுச் சபைக்கு மனித உரிமைகள் சம்பந்தமாக இலங்கை வழங்கிய எழுத்து மூலமான முறையீட்டில், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவோ அல்லது நொவாக்கின் அறிக்கையில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிடப்படவோ இல்லை. இலங்கையின் சாதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு மே 13 அன்று பதிலளித்த சட்ட மா அதிபர் சி.ஆர். டி சில்வா, இந்த திட்டமிடப்பட்ட துஷ்பிரயோகங்கள் பாதுகாப்புப் படையில் உள்ள ஒரு சில "கெட்ட நபர்களின்" வேலை என நொண்டித்தனமாக பிரகடனம் செய்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் காலத்திற்குரிய சர்வதேச ஆய்வுக் குழுவில் உரையாற்றிய டி சில்வா, கடந்த தசாப்தம் பூராவும் கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்காக பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 599 உறுப்பினர்களுக்கு எதிராக தானும் தனது முன்னோடிகளும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். குற்றம் ஒப்புவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர் வேண்டுமென்றே வெளிப்படுத்தவில்லை -இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் குற்றம் ஒப்புவிக்கப்பட்டவர்கள் ஒரு சிலரே. சில தனி நபர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்ட போதிலும் கூட, அவர்கள் தமது பதவியில் தொடர்ந்தும் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு பதவி உயர்வும் கூட வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பின் அண்மைய அறிக்கையின்படி, 2005 டிசம்பர் மற்றும் 2007 டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக பலவித அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் வெளியிட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமைகள் கண்காணிப்பு, மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) அமைப்பிடம் இருந்து புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டுகிறது. அதன்படி, 2005 டிசம்பருக்கும் 2007 அக்டோபருக்கும் இடையில் 948 பேர் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ளனர். மேலும் 684 பேர் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மே 24ம் திகதி, இலங்கையின் தொலைக்காட்சி சேவையான எம்.டி.வி., மே 8 மற்றும் 24 ஆகிய திகதிகளுக்கு இடையிலான இரு வார காலத்துக்குள் 166 பேர் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள இலங்கை சர்வதேச பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்ற உண்மை, ஜனநாயக உரிமைகள் தொடர்பாக அரசாங்கமும் மற்றும் பாதுகாப்புப் படைகளும் குறைத்து மதிப்பிடுகின்றன அல்லது அவற்றை அவமதிக்கின்றன என்பதற்கான சான்றாகும்.
உத்தியோகபூர்வ மூடி மறைப்பு குறிப்பாக வெளிச்சத்துக்கு வந்த ஒரு சம்பவத்தில், கிழக்கில் மூதூர் நகரில் 2006 ஆகஸ்ட்டில் பிரான்சை தளமாகக் கொண்ட அக்ஷன் ஃபாம் அமைப்பின் (Action Contre la Faim) 17 உள்ளூர் தொண்டர்கள் மரண தண்டனை பாணியில் வரிசையாக நிறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம், அந்த நகரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவம் கைப்பற்றிய பின்னரே நடந்தது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இலங்கைக் கண்காணிப்புக் குழு, வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில்: "பாதுகாப்புப் படையினரைத் தவிர வேறு எந்தவொரு ஆயுதக் குழுவும் இந்த செயலுக்குப் பின்னணியில் இருக்க முடியாது" என முடிவெடுத்திருந்தது. அதே மாதத்தில் ஐந்து இளம் தமிழர்களை படுகொலை செய்த சம்பவத்துடன் சேர்த்து இந்தக் கொலைகளும், பரந்தளவிலான சர்வதேச எதிர்ப்புக்களை தூண்டிவிட்டு, தேர்வு செய்யப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் சில தொடர்பாக விசாரிக்க 2006 நவம்பரில் தேசிய விசாரணைக் குழு ஒன்றை ஸ்தாபிக்க இராஜபக்ஷ அரசாங்கத்தை தள்ளிச் சென்றன. சர்வதேச ரீதியில் போலி சட்டப்பூர்வத் தன்மையை பெறுவதன் பேரில், இந்த விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்காக மாண்புமிக்கவர்களின் சர்வதேச சுயாதீனக் குழு (ஐ.ஐ.ஜி.ஈ.பி.) ஒன்றை 2007 மே மாதம் இராஜபக்ஷ ஸ்தாபித்தார். எவ்வாறெனினும், ஆணைக்குழுவின் விசாரணைகளில் சட்ட மா அதிபர் வரம்பு மீறி தலையீடு செய்வதாக ஐ.ஐ.ஜி.ஈ.பி. முறைப்பாடு செய்ததை அடுத்து, ஜனாதிபதி செயலகம் அளித்த பதில்: "ஜனாதிபதி, பொருத்தமான அதிகாரிகளால் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணை தொடர்பாகவும் சட்டமா அதிபரின் அல்லது அவரது அதிகாரிகளில் எவரதும் வழிகாட்டல்கள் தொடர்பாக அக்கறை செலுத்துமாறு, துருவி ஆராயுமாறு, கண்காணிக்குமாறு, புலன் விசாரணை செய்யுமாறு அல்லது விசாரிக்குமாறு எந்த வகையிலும் ஆணைக்குழுவை கேட்டுக்கொள்ளவில்லை." முற்றிலும் சமரசமாக நடந்துகொள்வதை கண்ட ஐ.ஐ.ஜி.ஈ.பி., இலங்கையில் இருந்து வெளியேறியது. இந்த சூழ்நிலையில், முன்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர், தென் ஆபிரிக்காவின் பாதிரியார் டெஸ்மன்ட் டுட்டு மற்றும் ஆர்ஜன்டீனாவின் அடொல்வ் பேர்ஸ் இஸ்குவில் ஆகியோர் 20 க்கும் மேற்பட்ட சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு தலைமை வகித்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை மீண்டும் தெரிவு செய்யப்படுவதை எதிர்க்குமாறு ஐ.நா உறுப்பினர்களை தூண்டினர். இலங்கையில் செயற்படும் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட ஐ.நா. வுக்கு அழைப்பு விடுத்தன. ''ஆய்வுகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மனித உரிமை பேரவையில் தனது உறுப்புரிமையை" அரசாங்கம் பயன்படுத்திக்கொள்கிறது என அவை குற்றஞ்சாட்டின. இந்தப் பிரச்சாரம் இலங்கையில் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் தொடர்பாக சர்வதேச வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க உணர்ச்சித் துடிப்பை பிரதிபலிக்கின்றது. இலங்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு சில காலம் பெரும் வல்லரசுகள் வலியுறுத்தி வந்தன. அவர்கள் சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி கவலைப் படவில்லை. மாறாக, கொழும்பு அரசாங்கத்தின் மீது ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டை ஸ்தாபித்துக்கொள்ளவே அவர்கள் முயற்சிக்கின்றார்கள். 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்தது தொடர்பாக எந்தவொரு விமர்சனமும் இல்லாத அதே வேளை, இராஜபக்ஷ யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுக்கின்றமை, இலங்கையிலும் பரந்த தெற்காசியப் பிராந்தியத்திலும், குறிப்பாக அயலில் இந்தியாவிலும் தொந்தரவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள யுத்தச் சார்பு ஊடகங்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அதன் ஆசனத்தை இழந்தமைக்கு கசப்பான கண்டனங்களுடன் பிரதிபலித்ததோடு அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டாம் என இராஜபக்ஷவைக் கோருகின்றன. ஐலன்ட் பத்திரிகையில் மே 23 எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில், அரசாங்கம் "எந்த அடிப்படையிலும்" "நாட்டின் இறைமையை கீழறுக்கவும், மூலைக்குள் தள்ளப்பட்டுள்ள புலிகளை காப்பாற்றவும் சில அலுவலகங்களில் இருந்து வரும் வெளிப்படையான அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டியதில்லை" என பிரகடனம் செய்திருந்தது. ஐ.நா. வாக்கெடுப்பு முடிந்து 24 மணித்தியாலங்களுக்குள், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 17 பொது மக்கள் கிளேமோர் குண்டொன்றினால் கொல்லப்பட்டார்கள். படுகொலை நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பதில் இழிபுகழ்பெற்ற இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் மீது உடனடியாக புலிகள் குற்றஞ்சாட்டினர். அதே தினம், நேஷன் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கடும் காயங்களுடன் அவரது வீட்டுக்கு அருகில் வீசப்பட்டுக் கிடந்தார். அவரை கடத்திச் சென்று விசாரித்தவர்கள், இராணுவத்தைப் பற்றி அடக்கமாக விமர்சித்திருந்த அவரது கட்டுரைகளுக்கு தகவல் கொடுத்தவர்களின் பெயர்களை கேட்டதாக நொயர் தெரிவித்தார். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐ.நா.வில் செய்த பிரச்சாரத்திற்கு பதிலடியாக, அவற்றின் வெளிநாட்டு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்குவதிலும் மற்றும் இலங்கையில் அவர்களின் செயற்பாட்டிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், அரச சார்பற்ற நிறுவன அதிகாரியின் பின்னணியைப் பற்றி விசாரிக்கும் தகமை கொண்டிருப்பார். உள்நுழைவதற்கு அனுமதியோ அல்லது வதிவிட விசாவோ வழங்குவதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சுடன் மற்றும் இலங்கை புலணாய்வுத் துறை ஏஜன்டுகளுடனும் ஆலோசனை பெற்று பாதுகாப்பு தொடர்பாக அக்கறை செலுத்துவதும் அவரின் தகமையில் அடங்கும். அரசாங்கத்தின் நடவடிக்கைகள், இரத்தக்களரி இனவாத யுத்தத்தையும் மற்றும் சர்வதேச மட்டத்தில் அதன் கெளரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டாலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை படுமோசமாக மீறுவதையும் தொடர்ந்தும் மேற்கொள்வதில் அது உறுதிப்பாட்டுடன் இருப்பதையே இவை அனைத்தும் உறுதிப்படுத்துகின்றன. |