World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைLTTE front group claims responsibility for Sri Lankan bombings இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல்களுக்கு புலிகளின் முன்னணி அமைப்பு பொறுப்பேற்கிறது By Nanda Wickremasinghe இலங்கையின் தென் பகுதியில் பஸ்களிலும் ரயில்களிலும் அண்மைய வாரங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களுக்கு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பான எல்லாளன் படை பொறுப்பேற்றுள்ளது. கொழும்பு உட்பட்ட பிரதேசங்களில் நடத்தப்பட்ட இத்தகைய குண்டுத் தாக்குதல்களில் 34 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். எல்லாளன் படை வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையம் ஜூன் 10ம் திகதி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "இலங்கை அரசாங்கத்தினதும் மற்றும் அதன் விமானப்படையினதும் ஆழ ஊடுருவும் படையின் (LRRP) தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடியாக, பயணிகள் போக்குவரத்து மற்றும் ஏனைய இடங்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு நாம் பொறுப்பேற்கிறோம்," என அதில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. (LRRP அல்லது ஆழ ஊடுருவும் புலணாய்வு படையானது இலங்கை இராணுவத்தின் இரகசிய நடவடிக்கைப் பிரிவாகும்.) இந்தக் குண்டுத் தாக்குதல் புலிகளின் பிரிவினைவாத முன்நோக்கின் பிற்போக்குப் பண்பை கோடிட்டுக்காட்டுகிறது. இந்தக் குண்டுத் தாக்குதல்கள், பல சிறுவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்களை இலக்குவைத்து செய்யப்பட்ட வெறுமனே கொடூரமான குற்றச் செயல்கள் மட்டுமல்ல, அவை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அடங்கிய உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள, நெருக்கடி பற்றிக்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கும் உதவி செய்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல்கள், அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் யுத்தச் செலவுகளுக்கு எதிராக ஆசிரியர்களைப் போல் ஏனைய தொழிலாளர்களும் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் குதிக்கின்ற நிலைமையின் கீழ், தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கொடூர யுத்தத்தை நியாயப்படுத்துவற்கு அதற்கு பயனுள்ள சாக்குப் போக்கை வழங்கும் அதே வேளை, உழைக்கும் வெகுஜனங்களை பிளவுபடுத்துவதற்காக குறிப்பாக தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் இனவாத பகைமைகளை கிளறிவிடுவதற்கும் அது பயன்படுகின்றன. எல்லாளன் படையின் அறிக்கை தொடர்பாக பிரதிபலித்த புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், தமது இயக்கத்திற்கும் இந்தப் படைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என பி.பி.சி.யின் தமிழ் சேவையான தமிழோசைக்குத் தெரிவித்தார். மே 30ம் திகதி வழங்கிய ஒரு பேட்டியில், புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா. நடேசனும் இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க மறுத்துவிட்டார். இந்த மறுப்புக்கள் ஒரு புறம் இருக்க, எல்லாளன் படை புலிகளின் சார்பில் சுமார் ஒரு தசாப்த காலமாக நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இந்த முன்னணி குழு, வடக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களில் வாழும் தமிழ் பொது மக்கள் மீது துரோகிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. இராணுவத்துடன் கூட்டுவைத்துள்ளார்கள் அல்லது புலிகளின் அரசியல் எதிரிகள் என்ற குற்றச்சாட்டுக்களுக்காக சாதாரண மக்கள் இந்தக் குழுவின் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டு வந்துள்ளார்கள். தமிழ் பொது மக்களை அரசாங்க சார்பு துணைப்படைகள் கொலை செய்வதற்கு பொறுப்பேற்க கொழும்பு அரசாங்கம் மறுப்பது போலவே, புலிகளும் தமது துணைப்படைகள் மூலம் பொது மக்களை கொலை செய்வது தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றனர். எவ்வாறெனினும், சிங்கள இன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது தாக்குதல் தொடுப்பதிலும் புலிகளுக்கு நீண்ட கால பதிவுகள் உள்ளன. உதாரணமாக, 1996ல் இலங்கை மத்திய வங்கி மீது புலிகள் அழிவுகரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 91 பேர் உயிரிழந்ததோடு சுமார் 1,400 பேர் காயமடைந்தனர். எல்லாளன் படையின் அறிக்கை, "கடுமையான பழிவாங்கும் எச்சரிக்கை" என்று தலைப்பிடப்பட்டிருப்பதானது இனவாத விஷத்தை கக்குகிறது. அது முழு சிங்கள மக்களையும் எச்சரிக்கின்றது: "சிங்களவர்கள் நிலைமையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் 'எல்லாளன் படை' அதன் தாக்குதல்களை தொடர்வது ஏன் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்". தமிழ் பொது மக்கள் மீதான "அரசாங்கத்தின் தாக்குதல்களை நிறுத்த சிங்கள பொது மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" அல்லது மேலும் சிங்கள மக்கள் கொல்லப்படுவார்கள், என அந்த அறிக்கை கோரிக்கை விடுக்கின்றது. இத்தகைய கருத்துக்கள், தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு முழு "சிங்கள இனமும்" பொறுப்பாளிகள் என்ற புலிகளின் கோட்பாட்டை எதிரொலிக்கின்றது. உண்மையில், 1980களில் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுப்பதில் உச்சக் கட்டத்தை அடைந்த தற்போதைய மற்றும் முன்னைய கொழும்பு அரசாங்கங்களின் தமிழர் விரோத கொள்கைக்கும் சிங்களத் தொழிலாளர்களுக்கும் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. 1948ல் சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து வரும் எந்தவொரு சவாலையும் பிளவுபடுத்த மற்றும் கீழறுக்க ஒரு தீர்க்கமான அரசியல் ஆயுதமாக தமிழர்களுக்கு எதிரான பாரபட்சங்களை சிங்கள ஆளும் கும்பல் பயன்படுத்தியுள்ளது. 2006ல் இராஜபக்ஷவால் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக, அனைத்து இனங்களையும் சார்ந்த உழைக்கும் மக்கள், வாழ்க்கைத் தர வீழ்ச்சி, பொருளாதார முட்டுக்கட்டை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது உக்கிரப்படுத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். புலிகளதும் மற்றும் அவர்களது முன்னணி அமைப்புகளதும் நோக்கம் தமிழ்-இந்து பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தமிழர்களின் பாத்திரத்தை மாசுபடுத்துவதற்கு "சிங்கள இனத்தின்" புராதான சிறப்புக்களை சுட்டிக்காட்டும் கொழும்பில் உள்ள பெளத்த சிங்கள மேலாதிக்கவாதிகளைப் போலவே, எல்லாளன் படைக்கும் கி.மு. 235 மற்றும் 161 க்கும் இடைப்பட்ட காலத்தில் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தை ஆண்ட புராதண தமிழ் மன்னனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. "தமிழர் தாயகம்" என சொல்லப்படும் வடக்கு மற்றும் கிழக்கில் தனக்கென சொந்தமான முதலாளித்துவ அரசு ஒன்றை உருவாக்குவதே புலிகளின் முன்நோக்காகும். இதன் கீழ் புலிகளால் சாதாரண தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதை முன்னெடுக்க முடியும். கொழும்பு அரசாங்கத்திற்கு எதிராக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கு அழைப்புவிடுக்க இலாயக்கற்ற மற்றும் அந்த ஐக்கியத்திற்கு விரோதமான தமிழ் முதலாளித்துவ பகுதியினரையே புலிகள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அதற்குப் பதிலாக அவர்கள் அப்பாவி சிங்கள பொது மக்களை பழிவாங்குவதை நாடுகின்றனர். இரட்டை அரசியல் நெருக்கடி யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையானது புலிகள் மற்றும் அரசாங்கம் ஆகிய இரு சாராரதும் அரசியல் வங்குரோத்தை அம்பலப்படுத்துகிறது. பொருளாதாரத்தை பூகோள முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடும் தமது வேலைத்திட்டத்தால் உருவாக்கப்பட்ட சமூக பதட்ட நிலைமையை தீர்த்துக்கொள்ள முழுக் கொழும்பு அரசியல் ஸ்தாபனமும் இலாயக்கற்று இருந்து வருவதன் காரணமாக இராஜபக்ஷ யுத்தத்தை புதுப்பிக்கத் தீர்மானித்தார். அரசாங்கம் நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களைக் கொண்ட ஆட்டங்கண்ட கூட்டணியில் தங்கியிருக்கின்றது. உலகில் அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் இதுவாகும். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள மேலாதிக்கவாத கட்சிகளும், இராணுவ உயர்மட்ட பகுதியினரும் மற்றும் அரச அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான தசாப்த கால பாரபட்சங்களில் மிக நிலையான நலன்களைக் கொண்டிருப்பதோடு கருத்தியல் ரீதியில் அதில் தங்கியும் இருக்கின்றனர். எவ்வாறெனினும், மிகவும் வறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இராணுவத்தில் இருக்கும் நிலையில், இராணுவம் நூற்றுக்கணக்கானவர்களை பலிகொடுத்துள்ளதோடு அரசாங்கம் அதிகரித்துவரும் யுத்தச் செலவுகளின் பொருளாதார சுமையை உழைக்கும் மக்களின் முதுகில் கட்டியடிப்பதன் காரணமாக சிங்கள தொழிலாளர்கள் மத்தியிலும் யுத்த விரோத உணர்வு வளர்ச்சியடைகின்றது. உணவு, எண்ணெய் மற்றும் போக்குவரத்துக்கான விலைகள் உயர்ந்து செல்கின்ற நிலையில் வறியவர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் மற்றும் மானியங்களை இராஜபக்ஷ வெட்டித்தள்ளியுள்ளதோடு வாழ்க்கைத் தரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் இனப் பாகுபாடுகளைக் கடந்து வளர்ச்சியடைகின்றன. கடந்த வாரம் சம்பள உயர்வு கோரிய ஆசிரியர்களின் பிரச்சாரத்துக்கு எதிராக அரசாங்கம், அரசாங்க பாடசாலைகளை இரண்டு நாட்களுக்கு இழுத்து மூடியது. ஜூன் 6ம் திகதி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 21 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவத்தை உடனடியாகப் பற்றிக்கொண்ட இராஜபக்ஷ, "எமது நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் பணியில் பொலிசாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தொடர்ந்தும் உதவி செய்யுமாறு" மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து இத்தகைய அறைகூவல் கூட்டுப் பாடலாக மாறியது. வெகுஜனங்களை யுத்த முயற்சிகளுக்குப் பின்னால் தள்ளிச் செல்வதோடு சமூக அமைதியின்மையை நசுக்குவதற்கு முயற்சிக்கும் சிங்களப் பேரினவாதக் குழுக்களும் இராஜபக்ஷவுடன் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துகொண்டன. 2002ல் புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டதோடு முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) அரசாங்கத்தால் தொடக்கி வைக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதிலும் நுழைந்துகொண்டனர். பெரும் வர்த்தகர்களும் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பெரும் வல்லரசுகளும் கொழும்பு ஆளும் தட்டின் கனிஷ்ட பங்காளியாக புலிகளைப் பட்டியலிடும் ஒரு வழிமுறையாக இந்த கொடுக்கல் வாங்கல்களை ஆதரித்தன. புலிகளின் தலைவர்கள் தமது கெரில்லா இராணுவ சீருடைகளை களையவும் இலங்கையை "புலிப் பொருளாதாரத்திற்குள்" இணைக்கவும் தயாராகினர். "புலிப் பொருளாதாரம்" என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்புக் களம் ஒன்றை உருவாக்குவதை குறிப்பதாகும். அதே சமயம், அரசியல் எதிர்ப்பை நசுக்குவதற்காக புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பிரதேசங்களில் ஒரு அடக்குமுறை அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். 2006ல் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக மீறி புலிகளை இராணுவ ரீதியில் நசுக்குவதற்கு இராஜபக்ஷ திரும்பியதையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கில் தமது சொந்த வர்த்தக சார்பு நிர்வாகம் ஒன்றை ஸ்தாபிக்கும் புலிகளின் தலைவர்களின் எதிர்பார்ப்புக்கள் குப்பைத்தொட்டியில் விழுந்தன. அரசாங்கம் யுத்தத்தை மீண்டும் முன்னெடுக்கத் தொடங்கியதில் இருந்து, புலிகள் கிழக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களை இழந்தனர். 2004ல் கிழக்கில் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டங்களில் தளபதியாக இருந்த கருணா அல்லது வி. முரளீதரன் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றமை இந்தத் தோல்விக்கான காரணிகளில் ஒன்றாகும். பிரிந்து சென்ற துணைப்படைக் குழு, தமது குட்டி அரசு ஒன்றை கிழக்கில் அமைக்கும் நோக்கில் கொழும்பின் யுத்த முயற்சிகளோடு கூட்டுச் சேர்ந்துகொண்டுள்ளது. கொசோவோ போன்று அதே வழியில் ஒரு தனியான தமிழ் ஈழத்துக்கான தமது இலக்குக்கு ஆதரவு தேடி புலிகள் மீண்டும் பெரும் வல்லரசுகளின் பக்கம் திரும்பியுள்ளனர். ஆனால், அத்தகைய பிரேரணைக்கு ஆதரவளிப்பதில் வாஷங்டனுக்கு ஆர்வமில்லை. சீனாவுக்கு எதிரான மூலோபாய எதிர்ச் சக்தியாக உருவாவதற்கு இந்தியாவை ஊக்குவிப்பதே புஷ் நிர்வாகத்தின பிரதான இலக்காக இருப்பதோடு தமிழ் அரசுக்கான புலிகளின் அழைப்பு தமிழ் நாட்டிலும் மற்றும் ஏனைய இந்திய மாநிலங்களிலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என வாஷிங்டன் பீதிகொண்டுள்ளது. 2006ல், அமெரிக்க அழுத்தத்தின் விளைவாக, ஐரோப்பிய சக்திகளும் கனடாவும் புலிகளை "பயங்கரவாத" அமைப்பாக தடைசெய்தன. இனப் பிரிவினைவாதமானது தமிழ் மக்களுக்கும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு மரண-எல்லை என்பதை புலிகளின் சாதனைகள் அம்பலப்படுத்தியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அரசாங்கப் படைகளை நிபந்தனையின்றி வெளியேற்றவும், தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசை ஸ்தாபிப்பதற்காகவும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் ஐக்கியமாகப் போராடுவதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை அடைய முடியும். |