World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Government price hikes and war cause devastating inflation in Sri Lanka

அரசாங்கத்தின் விலை அதிகரிப்பும் யுத்தமும் இலங்கையில் அழிவுகரமான பண வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன

By Saman Gunadasa
18 June 2008

Back to screen version

இலங்கை அரசாங்கம் கடந்த சில வாரங்களுக்குள் எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்து கட்டணத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரிப்பை அறிவித்துள்ளமை, ஏற்கனவே ஆசியாவிலேயே உயர்ந்த மட்டத்தில் இருந்த -கிட்டத்தட்ட 30 வீதம்- பணவீக்க வீதத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதோடு ஆழமான சமூக அமைதியின்மையையும் தூண்டிவிட்டுள்ளது.

பூகோள ரீதியில் காணப்படும் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் சேர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தத்திற்கான அதன் தொடந்தும் அதிகரித்துவரும் செலவின் காரணமாக சாதாரண உழைக்கும் மக்களினதும் வறியவர்களதும் வாழ்க்கை தீவிரமான நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.

மே 24ம் திகதி, அரசாங்கத்திற்குச் சொந்தமான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு இரண்டாவது தடவையாக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணையின் விலையை இம்முறை முறையே 23, 37 மற்றும் 14 வீதத்தால் உயர்த்தியுள்ளது. 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அரசாங்கம் ஏற்கனவே எரிபொருள் விலையை 60 முதல் 80 வீதம் வரை அதிகரித்துள்ளது.

மே 28ம் திகதி, தனியார் பஸ் உரிமையாளர்களும் அரசுக்கு சொந்தமான பஸ் கம்பனிகளும் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 27 வீதத்தால் போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரித்துள்ளன. ஜூன் மாத ஆரம்பத்தில், அரசாங்கம் ரயில் போக்குவரத்துக் கட்டணங்களை கிட்டத்தட்ட 300 வீதத்தால் அதிகரித்துள்ளது. இப்போது உர மானியத்தை குறைக்க அல்லது இல்லாமல் செய்ய அமைச்சரவை கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றது. இது வறுமை மற்றும் கடன் தொல்லையால் ஏற்கனவே ஊசலாடிக்கொண்டிருக்கும் சிறிய விவசாயிகளுக்கு மரண அடியாக இருக்கும்.

இலங்கையின் நாளாந்த உணவான அரிசியின் விலை கடந்த ஆண்டு டிசம்பரில் சுமார் 100 வீத அதிகரிப்பை எட்டியதை அடுத்தே இந்த புதிய விலை அதிகரிப்புகள் தலைநீட்டியுள்ளன. அரிசி விலை தற்காலிகமாக குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இருந்த விலையை விட இன்னமும் 40 வீதம் உயர்ந்தே காணப்படுகிறது.

தாங்க முடியாத நிலையில், மக்கள் உணவை கைவிடுகிறார்கள் அல்லது குறைத்துக்கொள்கிறார்கள், மற்றும் சிலர் பட்டினியை எதிர்கொள்கின்றனர். அண்மையில் "உலகில் பட்டினி கிடப்பவர்களின் சூடேறிய இடங்கள்" (Hunger's Global Hot Spots) என்ற தலைப்பில் வெளியான உலக உணவுத் திட்ட அறிக்கையின்படி, முக்கிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மிகமிக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. குடும்பத்தவர்கள் தமது வருமாணத்தில் சராசரி 63 வீதத்தை உணவுப் பொருட்களுக்கு செலவிடுவதாகவும் இது கடந்த ஆண்டு 52 வீதத்தில் இருந்து உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. "சுமார் 93 வீதமான குடும்பத்தவர்கள், உணவுப் பெறுமானத்தை குறைத்தல், உணவை கைவிடுதல், விருப்பம் குறைந்த உணவை உட்கொள்ளல், கடன் பெறுதல் மற்றும் சொத்துக்களை விற்றல் போன்ற தாங்க முடியாத சமாளிக்கும் வழிமுறைகளை நாடியுள்ளனர்."

அரசாங்கத்தின் மக்கட் தொகை கணக்கு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் 2006-07 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் படி, ஜனத்தொகையில் 15.2 வீதமானவர்கள், அதாது 2.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், ஒரு நாளைக்கு 70 ரூபாயில் (அமெரிக்க டொலர் 68 சதம்) உயிர்வாழ்கிறார்கள். இந்த வருமாணம் ஒரு மனிதனுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கொஞ்சம் போதுமானது. ஜனத்தொகையில் அரைவாசிப் பேர், மாதம் 4,043 ரூபாவுக்கும் குறைந்த வருமாணத்தில் வாழ்கின்றனர் - ஏறத்தாழ நாளொன்றுக்கு 1.25 அமெரிக்க டொலர் ஆகும். மிகக் குறைவான சம்பளம் பெரும் தமிழ் பேசும் தொழிலாளர்கள் வாழும் பெருந்தோட்டப் பகுதிகளில், 32 வீதமான நிலைதடுமாறிப் போயுள்ள மக்கள் ஒரு நாளைக்கு 65 ரூபாவுக்கும் குறைந்த தொகையில் உயிர்வாழ்கின்றனர். இந்த ஆய்வு யுத்தத்தால் அழிந்து போயுள்ள வட மாகாணத்தையும் மற்றும் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தையும் விவரிக்கின்றது. இங்கு நிலைமை மிகவும் மோசமானதாகும்.

பணவீக்க வீதத்தை ஒழித்து, அதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பணவை வெட்டிக் குறைக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாக, அரசாங்கம் ஏப்பிரலில் 29.9 வீதமாக எப்பொழுதும் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்ட உத்தியோகபூர்வ விலைச் சுட்டெண்ணை குறைத்துக் காட்டியது. புதிய சுட்டெண்ணின்படி, அது 26.2 வீதமாகும்.

2005 கடைப் பகுதியில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்தை புதுப்பித்ததில் இருந்து, இலங்கையர்கள் எந்தவொரு ஆசிய நாட்டையும் விட பொருத்தமற்ற வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை தாங்கத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த உண்மை, யுத்த செலவு அதிகரிப்பினதும் மற்றும் அரசாங்கம் யுத்த முயற்சிகளுக்கு செலவிடுவதற்காக பெருமளவில் கடன் வாங்குவதில் தங்கியிருப்பதனதும் அழிவுகரமான தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது.

இழுபடும் நிதி நெருக்கடி

அதே சமயம், பூகோள ரீதியிலும் மற்றும் இலங்கையிலும் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது ஆழமான தாக்குதல்களை கொண்டுவரும்.

இராஜபக்ஷ அரசாங்கம், யுத்தம் இருந்தாலும் "உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை" அடைந்திருப்பது பற்றி பேசிக்கொண்டாலும், பொருளாதார வளர்ச்சி வீதமானது 2006ம் ஆண்டில் 7.7 வீதத்தில் இருந்து 2007ல் 6.8 வீதம் வரை குறைந்துள்ளது. எகோனமிஸ்ட் சஞ்சிகையில் வெளியான பொருளியல் ஆய்வுப் பிரிவின் மதிப்பீடு, இந்த ஆண்டு 4.1 வீத பெரும் வீழ்ச்சியை ஊகித்துள்ளது.

மே 29 ஊடகங்களுக்குப் பேசிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, எண்ணெய் விலை அதிகரிப்பின் காரணமாக அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என புலம்பினார். கடந்த ஆண்டு, எண்ணெய் இறக்குமதி செலவு 2.4 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததோடு இந்த ஆண்டு இந்த செலவு 3.5 பில்லியன் டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும், இராணுவச் செலவை குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என குணவர்தன தெரிவித்தார்.

2008ல் அரசாங்கம் பாதுகாப்புக்காக 166 பில்லியன் ரூபாவை (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கியுள்ளது. இது 20 வீத அதிகரிப்பாக இருப்பதோடு அரசாங்கம் கடந்த ஆண்டு 181, 449 மில்லியன் ரூபாய்களை பாதுகாப்புக்கான கடனாக சர்வதேச நிதி சந்தையில் பெற்றது. இந்த தொகையை முன்னைய ஆண்டு பெற்ற தொகையுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். அதே போல், அரசாங்கம் கடந்த அக்டோபரில் ஐந்து அரச உத்தரவாத பிணைப் பத்திரங்களை வழங்கி 500 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றதோடு இந்த ஆண்டு மார்ச் மாதம் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஊடாக 300 மில்லியன் டொலர்களையும் பெற்றுள்ளது. இந்தக் கடனில் பெரும்பகுதியும் ஆயுதங்களை கொள்வனவு செய்யவும் படைக்கு ஆள் சேர்க்கவும் செலவிடப்பட்டுள்ள அதே வேளை, அத்தியாவசிய சேவைகள் நிதியின்றி காய்ந்து போய்கொண்டிருக்கின்றன.

ஜூன் 4 வெளியான அறிக்கையில், Standard and Poor's (S&P) (நிலையானவர்களும் வறியவர்களும்) என்ற பெயரிலான தரப்படுத்தும் சர்வதேச நிலையமொன்று பல திறைசேரி மற்றும் கடன் குறியீடுகளை சுட்டிக்காட்டி, இலங்கை ஏற்கனவே அதன் தரப்படுத்தலில் ஆகக் கீழே உள்ள B பிளஸ் மட்டத்திலேயே உள்ளது எனத் தெரிவித்துள்ளது. S&P இணை நிர்வாகி எகொஸ்ட் பேலார்ட் எச்சரித்ததாவது: "இந்த அறிகுறிகள், பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியை அல்லது வெளிப்படையான அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த பலவீனமான நிலையையே குறிப்பிடுகின்றன."

வடக்கு யுத்தக் களத்தில் கடினமான எதிர்ப்புக்கு முகங்கொடுக்கின்ற அரசாங்கம், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் இருந்து தொழிலாளர்களையும் பரந்த வெகுஜனங்களையும் திசை திருப்புவதற்காக பொது மக்களை இலக்குவைத்து அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை பயன்படுத்திக்கொள்ள அது முயற்சிக்கின்றது. தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரினால் "பணவீக்கம் அதிகரிக்கும்" ஆபத்து பற்றி பொருளியலாளர்கள் அரசாங்கத்தை பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.

சாதாரண மக்கள் மத்தியில் எந்தவொரு பாரம்பரிய கட்சிகள் மீதும் நம்பிக்கை கிடையாது. வெகுஜன ஆத்திரத்தை தட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), வாகனங்களில் ஹோர்ன் அடித்தல் மற்றும் சட்டி உடைத்தல் போன்ற பலவித ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. எவ்வாறெனினும், கனிசமான காலம் நாட்டை ஆட்சி செய்த யூ.என்.பி., வாழ்க்கைத் நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் 1980களின் முற்பகுதியில் யுத்தத்தை தொடக்கி வைத்தது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் பரந்தளவில் மதிப்பிழந்துள்ளது.

2005 இராஜபக்ஷ ஆட்சிக்கு வரவும் மற்றும் அவரது ஆட்சியை பராமரிக்கவும், யுத்தத்திற்கு விசுவாசத்துடன் ஆதரவளிக்கவும் மற்றும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யவும் உதவிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), இப்போது அரசாங்கத்தில் இருந்து தூர நிற்க முயற்சிக்கிறது. ஜே.வி.பி. யின் தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் லால் காந்த, சம்பள உயர்வு பெறுவதற்காக ஜே.வி.பி. பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் என கூச்சலிட்டார். ஆயினும், ஆசிரியர்களின் தற்போதைய சம்பள பிரச்சாரத்தின் போது, யுத்த முயற்சிகளில் தாக்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக சம்பள கோரிக்கையை ஒத்திப்போட தமது தயார் நிலையை ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் பிரகடனம் செய்துள்ளன.

பிரதான கட்சிகளின் மீது வெறுப்பு

உலக சோசலிச வலைத் தளத்துக்கு பேட்டியளித்தவர்கள், வாழ்க்கைத் தரத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் அனைத்து பிரதான கட்சிகளும் அதற்கு ஆதரவளிப்பதையும் பற்றி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு துப்புரவு தொழிலாளியான சோமபால தெரிவித்ததாவது: "இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிரான எதையும் நியாயப்படுத்துவதற்கு யுத்தத்தைப் பயன்படுத்துகிறது. யுத்தத்தை விரைவில் முடிப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. யூ.என்.பி. யும் அதே தான் - ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைவரும் மக்களைப் பற்றி பேசுவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் அனைவரும் ஒருவரே. அனைத்துக் கட்சிகள் தொடர்பாகவும் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். ஜே.வி.பி. யும் அதே பாதையில் செல்வதாகவே தெரிகிறது."

இன்னுமொரு துப்புரவு தொழிலாளியான ஹேமலதா, "எனக்கு அரசாங்கத்திலும் யுத்தத்திலும் நம்பிக்கை கிடையாது. எதிர்க் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றே. ஜே.வி.பி. முன்னர் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு நாங்களும் மக்களை ஏமாற்றுக்கின்றோம் எனக் காட்டிவிட்டது," என்றார்.

மத்திய பெருந்தோட்ட மாவட்டமான ஹட்டனில் அபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தெரிவித்ததாவது: "எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை. வாழ்க்கைச் செலவு தாங்க முடியாது. நான் ஐந்து மாதங்களுக்கு முன்னர் வாங்கிய பொருட்களை இப்போது இரு மடங்கு செலவிட்டு வாங்கவேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் விலைவாசி உயர்ந்து செல்கின்றது. ஆனால், எங்களது சம்பளம் உயரவில்லை. எங்களிடமிருந்த நகைகளை நாங்கள் ஏற்கனவே அடகு வைத்து விட்டோம். இப்போது மாதம் 20 வீதத்திற்கும் அதிகமான வட்டிக்கு உள்ளூரில் உள்ள கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை."

அதே தோட்டத்தைச் சேர்ந்த சன்முகராஜா, "எங்களது செலவுகளைத் தாங்க நாங்கள் ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும். தோட்டத்தில் வேலை செய்த பின்னர், மேலும் பணம் சம்பாதிப்பதற்கு நான் வேறு இடங்களில் வேலை செய்ய வேண்டும். பெருந்தோட்டங்களில், பல பெற்றோர்கள் இப்போது தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளதோடு அவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின் காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலை செய்ய வேண்டும். அரசாங்கம் யுத்தத்திற்கு மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது. ஆனால் விலைவாசி அதிகரிப்பை கட்டுப்படுத்த எதுவும் செய்வதில்லை," எனத் தெரிவித்தார்.

ஹட்டன் ஸ்ரெத்தன் தோட்டத்தைச் சேர்ந்த சன்முகநாதன் தெரிவித்ததாவது: "நான் ஒவ்வொரு நாளும் வானொலி கேட்பேன். இந்தியா உட்பட சர்வதேச ரீதியில் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கின்றன. இந்தத் தாக்குதல்களை எதிர்ப்பதற்காக உலகத் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதே சிறந்தது. ஒரு சர்வதேச இயக்கம் ஒன்று அவசியம். இந்த முதலாளித்துவ கம்பனிகள் எங்களைப் போன்ற வறிய தொழிலாளர்களின் செலவிலேயே எப்பொழுதும் இலாபம் சம்பாதிக்க முயற்சிக்கின்றன. இந்த அமைப்பு முறை உழைக்கும் மக்களின் நன்மைக்கானதாக மாற்றியமைக்கப்படல் வேண்டும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved