WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
நேபாளம்
End of Nepalese monarchy sets stage for new period of
political instability
நேபாள முடியரசின் முடிவு அரசியல் ஸ்திரமின்மையின் புதியதொரு காலத்திற்கான
மேடையை அமைக்கிறது
By K. Ratnayake
30 May 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
நேபாள முடியாட்சியை அகற்றுவதற்கென புதனன்று எடுக்கப்பட்ட முடிவானது நேபாளத்திலும்
சர்வதேச அளவிலும் பலத்த எக்காளத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது. சாதாரண நேபாள மக்களிடையே, ஒரு குடியரசின்
ஸ்தாபிதம் அமைதியையும் செல்வச் செழிப்பையும் கொண்டு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால்
யதார்த்தம் என்னவென்றால், இது நேபாளத்தின் ஆளும் மேல்தட்டின், சந்தை ஆதரவு சீர்திருத்தங்களுக்கு மற்றும்
தொழிலாளர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்தரத்தின் மீது புதிய
தாக்குதலைத் தொடுப்பதற்கு தயார் செய்வதற்கு, மதிப்பிழந்துள்ள அரசு எந்திரத்தினை மீட்டமைக்கச் செய்யும்
அவநம்பிக்கையான முயற்சியாகும்.
ஒரு "ஃபெடரல் ஜனநாயகக் குடியரசு" என்பதற்கான தீர்மானம் தான் புதிதாக
ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் சட்ட அவையின் முதல் நடவடிக்கையாகும், இது 560 க்கு 4 என்ற வகையில் பெரும்
வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது. மன்னர் ஞானேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் காத்மண்டுவில் உள்ள
நாராயணிட்டி அரண்மனையைவிட்டு வெளியேறுவதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின் அவர்களது
நிலை சாதாரண குடிமக்கள் நிலைக்கு குறைக்கப்பட்டு விடும். ஒரு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு அவையின்
அடுத்த கூட்டத்தில் அரசாங்க தலைவராக ஆக்கப்படுவார். ஒரு புதிய அரசியல்சட்டத்தை வரைவு செய்ய அவைக்கு
இரண்டு வருட அவகாசம் உள்ளது.
அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் - நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்
(CPN-M),
நேபாளி காங்கிரஸ் (NC)
மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (NCP-UML)
- இந்த முடிவினை ஒரு பெரும் முன்நோக்கு நடவடிக்கை என்று பாராட்டியுள்ளன. பிரதமரும் நேபாளி காங்கிரஸ்
தலைவருமான ஜி.பி.கொய்ராலா "நேபாள மக்களின் கனவு நனவாகி இருக்கிறது" என்று அறிவித்தார். இருந்த
போதிலும், இதுவரையும் அவரது கட்சி அரசியல்சட்ட முடியரசுக்கு வலியுறுத்தி வந்ததோடு, மன்னரை அரசின்
சம்பிரதாய தலைவராக தொடரச் செய்யவும் வலியுறுத்தியது.
மாவோயிச செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா பஹதூர் மஹரா செய்தியாளர்களிடம்
கூறுகையில், "நேபாள மக்கள், நூற்றாண்டுகளாக கடைப்பிடித்து வந்த பிரபுத்துவ மரபுகளில் இருந்து விடுவிக்கப்
பட்டுள்ளனர், ஒரு தீவிர சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான கதவுகள் இப்போது திறந்துள்ளன"
என்றார். ஏப்ரலில் நடந்த அவைத் தேர்தல்களில் மாவோயிஸ்டுகள் அதிக எண்ணிக்கையிலான இடங்களை - 220 -
பிடித்தனர். மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வதற்கான இடைக்கால அரசினை உருவாக்க கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டு பெரும் ஸ்தாபனக் கட்சிகள் - நேபாளி காங்கிரஸ் மற்றும்
NCP-UML -
முறையே 110 மற்றும் 103 இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றன.
குடியரசு அறிவிப்பைக் கொண்டாடுவதற்காக பத்தாயிரக்கணக்கான மக்கள் தலைநகர்
காத்மண்டுவில் கூடினர். மன்னர் ஞானேந்திரா உடனடியாக அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிய
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று போலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். நேபாளிய ஊடகங்களும்
இந்தக் களியாட்டத்தில் சேர்ந்து கொண்டன. காத்மண்டு போஸ்ட் "குடியரசு வாழ்க'' எனத் தலைப்புச்
செய்தியிட, ஹிமாலயன் டைம்ஸ் "நம்பிக்கை ஒன்று பிறந்தது" என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்டது.
சாதாரண வெகுஜன மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிவிரைவில் புதிய
மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசாங்க வேலைத்திட்டத்துடன் மோதலுக்கு வரும். தங்களது கெரில்லாப்
போராட்டத்தை 2006 இல் முடித்துக் கொண்ட மாவோயிஸ்டுகள், தாங்கள் தனியார் சொத்தை பாதுகாப்போம்
என்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்போம் என்றும் வர்த்தக தலைவர்களுக்கு சுறுசுறுப்பாக உறுதிமொழி அளித்துக்
கொண்டிருக்கிறார்கள். CPN-M
இன் வேலைத்திட்டமானது ஸ்ராலினிசத்தின் பிற்போக்கு இரண்டு கட்ட தத்துவத்தின் அடிப்படையிலானது. இது
பிரபுத்துவ எச்ச சொச்சங்களை சுத்தப்படுத்தும் பெயரில் முதலாளித்துவத்தை பாதுகாப்பதோடு சோசலிசத்தை
எட்ட முடியாத எதிர்காலத் தொலைவுக்கு தள்ளிவிடுவதாய் அமைகிறது.
"எங்களது யுத்தம் பிரபுத்துவத்துக்கு எதிராகத் தான், முதலாளித்துவத்துக்கு எதிராக
அல்ல.... பிரபுத்துவ கட்டத்துக்கும் சோஷலிசக் கட்டத்துக்கும் இடையே முதலாளித்துவ கட்டம் என்ற ஒன்று
இருக்கும்" என்று IBN/CNN
க்கு அளித்த நேர்காணல் ஒன்றில், CPN-M
தலைவர் பிரசந்தா அறிவித்தார். நடைமுறையில் இதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதை விவரிக்கக் கிளம்பிய
அவர், தனது கட்சி "அவர்களுக்கு (அந்நிய முதலீட்டாளர்கள்) இங்கு முதலீடு செய்வதற்கு சாதகமான சூழ்நிலையை
உருவாக்கித் தர முயலும்" என்று தெரிவித்தார்.
தனது கட்சி தலைமையிலான ஒரு அரசு முதலீட்டாளர்களுக்கு எப்படி உதவலாம்
என்பதைக் காண சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்த இந்திய மற்றும் சீன மாதிரிகளை ஆராயும் என்று
CPN-M
தலைவர் தெரிவித்தார். முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக, பிரசாந்தா ஒரு "தொழிற்துறை பாதுகாப்பு
படையை" உருவாக்க உறுதியளித்துள்ளார். முன்னாள் மாவோயிச கெரில்லாக்களை உள்ளடக்கிக் கொண்டதான
இப்படை தனியார் தொழிற்துறை நிறுவனங்களை பாதுகாக்கும்.
உண்மையில், "பிரபுத்துவத்துக்கு முடிவு கட்டுவதான பேரில்"
CPN-M ஆனது
நேபாளி முதலாளித்துவத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற வந்திருக்கிறது. நாட்டில் படு மோசமான நிலையில்
இருக்கும் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் விளைந்திருக்கும் அதிருப்தி மற்றும் எதிர்ப்பினை ஒடுக்க,
முடியரசுடனும் இராணுவத்துடனும் மரபுவழியாக நேபாளி முதலாளித்துவம் சார்ந்திருக்கிறது. ஏப்ரல் 2006 இல்,
மன்னரை பதவி விலகக் கோரியும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அமுலாக்கக் கோரியும் பத்தாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின்
பின்புதான் மாவோயிஸ்டுகள் ஒரு அரசியல் சட்ட அவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தயாரிப்பான ஒரு இடைக்கால
அரசாங்கத்தில் சேர்வதற்கு நேபாளி காங்கிரஸ் மற்றும்
NCP-UML தலைமையிலான ஒரு ஏழு-கட்சி கூட்டணியுடன் ஒரு
ஒப்பந்தத்தை எட்டியது.
ஒரு இழிந்த வரலாறு
நேபாள முடியரசின் முடிவு குறித்த ஊடகங்களின் பார்வையானது ஏறக்குறைய, மன்னர்
ஞானேந்திராவுக்கு எதிராக பரவலான மக்கள் எதிர்ப்பு எவ்வாறு இருந்தது என்பதன் மீதே இருந்தது. இவரே
விந்தையான இன்னமும் விளங்க முடியாத வகையிலான முந்தைய மன்னர் பிரேந்திரா உள்ளிட்ட அரச குடும்பத்தின்
பலரின் படுகொலைக்கு பின் 2001 இல் பதவியேற்றவர். இளவரசர் தீபேந்திரா, தான் திருமணம் செய்து
கொள்ள பெற்றோர் அனுமதிக்காததால் கோபமுற்று, குடும்பம் கூடியிருந்த வேளையில் தானியங்கு துப்பாக்கியால்
சுட்டு விட்டு, பின் தன்னையும் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே, மன்னர் ஞானேந்திராவும் அவரது மகன் பராஸும் இந்த
சம்பவத்திற்கு சூத்திரதாரிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருந்து கொண்டு தான் வந்திருக்கிறது.
அவர் மாவோயிஸ்டுகளுடனான போரை முடிக்கவும் தனது நாட்டை நவீனப்படுத்தவுமான தனது வாக்குறுதிகளை விரைவாகக்
கிழித்துப் போட்டார். 2003 அக்டோபரில், நாடாளுமன்றத்தைக் கலைத்த ஞானேந்திரா, ஒரு பெயரளவிலான
பிரதமரை அமர்த்தி மாவோயிஸ்ட் கெரில்லாக்களை நசுக்குவதற்கான போரை துரிதப்படுத்தினார். 2005 இல்,
பிரதமரை நீக்கிய அவர் முழு நிர்வாக அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டார். அவசர நிலை அறிவிக்கப்பட்டு
இராணுவத்திற்கு அளவுகடந்த அதிகாரம் அளிக்கப்பட்டது, முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்,
கடும் ஊடக தணிக்கை அமலாக்கப்பட்டது, ஆர்ப்பாட்டங்கள் இரக்கமின்றி நசுக்கப்பட்டன.
இருப்பினும், 2001 இரத்த ஆறு வெளிக்காட்டியது போல, முடியரசின் மொத்த
ஸ்தாபனமும் நெருக்கடியில் இருந்தது. அரச குடும்பத்தின் ஒட்டுமொத்தமாக உள்ளடங்கிய உலகமும் மக்கள்
தொகையின் பெரும் பிரிவினரின் யதார்த்த உலகில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. முடியரசின் வீழ்ச்சியை இன்று
கொண்டாடும் இதே சர்வதேச ஊடகங்கள் தான் அன்று "கடவுள் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகப் போற்றப்படும்
மதிப்புக்குரிய அரசர்" என்று, குறிப்பாக பிரேந்திராவினைக் குறிப்பிடும்போது வர்ணித்தன.
உண்மையில், நேபாள முடியரசின் வரலாறானது ஒப்பீட்டளவில் சிறியது தான் - 240
வருடங்கள். ஷா வம்சத்தினர் இந்தியாவினை விட்டு துரத்தப்பட்டு அவர்கள் நேபாள மலைப்பகுதிகளுக்கு திரும்பிய
காலத்திற்கு இதன் மூலமானது 18 வது நூற்றாண்டிற்கு செல்கிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் உதவியோடு,
ஷா ஆட்சியாளர் இன்றைய நேபாளத்தின் பெரும்பகுதியில் தனது ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டார். 1857 ஆம்
ஆண்டு நேபாள ஆட்சி, பரவலாய் துவங்கிய இந்திய சிப்பாய்கள் கலகத்தினை ஒடுக்குவதற்கு பிரிட்டிஷாருக்கு
கீழ்த்தரமான தேவைகளுக்காக சிப்பாய்களை வழங்கியது.
இதனது ஒட்டுமொத்த வரலாறுமே இழிவானதுதான். 1846 ஆம் ஆண்டு, நீடித்த
மற்றும் கடுமையான குழு மோதலானது ஒரு இரவில் ஏராளமான நேபாள பிரபுக்களின் மரணத்தில் முடிந்து இரத்த
ஆறானது. கோட் படுகொலை எனப்படும் இதில் முதன்மையாய் ஆதாயமடைந்தது பிரதமர் ஜங் பகதூர் தான்,
தனது எதிரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய இவர், முடியரசை ஏறக்குறைய வீட்டுக் காவலில் வைக்கும்
விதமாக, மரபுவழியான பிரதம மந்திரி முறை என்று சொல்லப்படுவதை ஸ்தாபித்தார். நேபாளி காங்கிரஸ்
மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியோடு, புத்தூக்கம் அளிக்கப்பட்ட சிம்மாசனத்தில் மன்னர் திரிபுவன் பீர்
பிக்ரம் ஷா அமர்த்தப்பட்டபோது,
ரானாக்களின் ஆட்சி 1951 இல் முடிவுக்கு வந்தது.
அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, அரசர் திரிபுவன், அவரைத் தொடர்ந்து அவரது
மகன் மஹேந்திரா, அதன்பின் 1972 இல் அவரது பேரன் பிஹேந்திரா, உலகின் கடைசி எச்சமாக முழுமையான
முடியாட்சியாகத் தங்கியிருந்தவற்றில் ஒன்றுக்கு தலைமைகளை ஏற்றனர். நேபாளி காங்கிரஸால் உரமிடப்பட்ட
தவறான தோற்றங்களுக்குப் பிறகும், அரசர் மஹேந்திரா ஒரு அரசியல் சட்டத்தை வழங்குவதை தொடர்ந்தும்
நிறுத்தி வந்தார். அது இறுதியாக 1959 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட போது, அரசியல்சட்டம் ஒரு
கேலிக்கூத்தாக இருந்தது. மன்னர் தொடர்ந்தும் அளவு கடந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தார். ஒரு
அவசரநிலை பிறப்பிப்பதற்கான உரிமை உட்பட, இதனை எந்த எச்சரிக்கையும் இன்றி 1960 இல் செய்த அவர்
அரசியல் தலைவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அவரது மகனான பிஹேந்திரா, 1989 ஆம் ஆண்டில்
500 பேருக்கும் அதிகமான மக்களின் இறப்புக்குக் காரணமாகும் வகையில் கடுமையான அடக்குமுறையைக்
கட்டவிழ்த்து விட்ட பிறகும் கட்டுப்பாட்டை விட்டு மீறிச் செல்லத்தக்கதாக அச்சுறுத்தும் வகையிலான பெரும் மக்கள்
ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு 1990 ஆம் ஆண்டு வரம்புக்குட்பட்ட ஒரு "ஜனநாயக" அரசியல்சட்டத்திற்கு
அனுமதியளித்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாட்டை பூகோளமயமான உற்பத்தி
நடைமுறைகளுக்குள் ஒன்றிணைப்பதற்கு ஒரு பிரிவு மேல் தட்டின் முயற்சிகளுக்கு வெறுப்பேற்றும் வகையில், காலம்
கடந்து செயலாற்றும் ஒரு அமைப்பாக அதிகமான அளவில் நேபாள முடியரசு விளங்கியது. நேபாள காங்கிரஸ்
மற்றும் அதன் ஸ்ராலினிச கூட்டாளிகள் உள்ளடங்கிய மரபுவழிக் கட்சிகளது முயற்சிகள் அரச குடும்ப கோஷ்டிகள்
மற்றும் இராணுவ வம்சாவளிகளின் குறுகிய நலன்களுக்கு வளைந்து கொடுப்பதாய் இருந்தது. ''பிரபுத்துவத்தை
எதிர்த்து போராடுவது'' மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு "ஒரு
தீவிர சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தினை" அமுலாக்குவது ஆகிய தங்களது வாக்குறுதிகள் மூலம்,
உள்நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தினை முட்டுச் சந்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியை மாவோயிஸ்டுகள்
வழங்குகிறார்கள்.
நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சந்தை சீர்திருத்தங்களை
அமுலாக்குவதானது, பெரும்பான்மையினரின் சமூக நிலைமைகளை மேலும் மோசமாக்குவதுடன் அரசியல் எதிர்ப்பையும்
உண்டுபண்ணும். ஆண்டுக்கு 280 அமெரிக்க டாலர்கள் சராசரி தனிநபர் வருமானத்துடன் உலகின் மிகவும் ஏழ்மையான
நாடுகளில் நேபாளமும் ஒன்றாக இருக்கிறது. சுமார் 30 மில்லியன் மக்கள் தொகையின் 30 சதவீதத்துக்கும்
அதிகமானவர்கள் அதிகாரப்பூர்வ வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். குறிப்பாக கிராமப் பகுதிகளில்
சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவ சேவைகள் ஆகிய அடிப்படை வசதிகள்
மிகவும் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாததாகவோ இருக்கிறது. ஜனநாயகத்தினைக் குறித்த அனைத்து
பேச்சுக்களுக்கு இடையிலும், அடுத்த அரசாங்கம் தனது கொள்கைகளை அமுலாக்க ஜனநாயக-விரோத
நடைமுறைகளை தவிர்க்க இயலாமல் அரங்கேற்றும்.
அரசியல் சூழ்நிலையானது மிகவும் ஸ்திரமற்றதாக இருக்கிறது.
CPN-M அடுத்த
அரசாங்கத்தை அமைப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பிற
கட்சிகளின் ஆதரவு அதற்குத் தேவையாய் இருக்கிறது. ஒரு கூட்டணி இன்னும் உருவாகவேண்டியதாக இருப்பதுடன்
முன்னணி அமைச்சரவை பதவிகள் தீர்மானிக்கப்படாததாய் இருக்கிறது. அதே நேரத்தில், தான் அரண்மனையை விட்டு
வெளியேறப் போவதனை மன்னர் ஞானேந்திரா குறிப்பிட்டாலும் கூட, அவரது முடியரசுவாதிகளும் இராணுவ
தலைமைகளில் உள்ளவர்களும் சந்தேகத்திற்கிடமின்றி அவரைத் திரும்பக் கொணர்வதற்கான அவர்களது இலட்சியங்களை
ஊக்குவிக்கும். தனது போராளிகளை ஒன்றிணைக்க கோரும்
CPN-M
கோரிக்கைகளை இராணுவம் மறுத்து விட்டது. செவ்வாய் மற்றும் புதனன்று காத்மண்டுவில் வெடித்த பல சிறு
குண்டுகள் முடியரசுவாதிகளின் குழுக்களின் வேலையாகத் தான் பரவலாக நம்பப்படுகிறது.
இந்த ஸ்திரமின்மையானது, காத்மண்டுவில் செல்வாக்கை செலுத்தப் போராடும் நேபாளத்தின்
அண்டை நாடுகள் மற்றும் பெரும் வல்லரசுகளின் சதிகளால் மேலும் சிக்கலாகியிருக்கிறது. நேபாளத்தை தனது ஆதிக்க
வட்டத்தின் அங்கமாகவே பார்த்து வந்திருக்கும் இந்தியா, அங்கு சீன ஆதிக்கம் வளர்ச்சியுறும் சாத்தியம் குறித்து
அச்சமுறுகிறது. இரண்டு நாடுகளுமே ஒரு குடியரசின் அறிவிப்பை வரவேற்றுள்ளன. ஒரு "உறுதியான பொருளாதார
கூட்டாண்மையை" விவாதிப்பதற்கு அடுத்த மாதம் காத்மண்டுவிற்கு தனது குழுவை அனுப்புகிறது இந்தியா. நேபாளத்துடன்
ரயில் இணைப்பினை செய்து கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மேலும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான பங்கை ஆற்றலாம். ஏப்ரல் 2006
ஆர்ப்பாட்டங்களின் போது கடைசி நிமிடம் வரை புஷ் நிர்வாகமானது முடியரசுக்கு ஆதரவு தெரிவித்தது என்பதோடு
மாவோயிஸ்டுகளை இடைக்கால அரசாங்க உருவாக்கத்திற்குள் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாவோயிசத்
தலைவர்கள் அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்க முயன்ற நிலையிலும்
CPN-M ஐ தனது
பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது.
சென்ற வாரத்தில், துணை உதவி அமைச்சர் எவான் ஃபெயின்பாம் காத்மண்டுவிற்கு
பயணம் மேற்கொண்டு சூழ்நிலையை மதிப்பீடு செய்ததோடு பிரதமர் கொய்ராலா மற்றும் மாவோயிசத் தலைவர்
பிரசாந்தாவுடன் பேச்சுக்களை நடத்தினார். மாவோயிஸ்டுகள் எந்த அளவு வன்முறையில் இருந்து
ஒதுங்கியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுடன் இணைந்து அமெரிக்கா செயலாற்றுவது என்பதாக
இருக்கும் என்று ஃபெயின்பாம் நேற்று வாஷிங்டனில் இருந்து பேசும்போது எச்சரித்தார். ஆனால், தூண்டல்,
வன்முறை இவற்றுக்கான உண்மையான அச்சுறுத்தல் முன்னாள் முடியரசு, இராணுவம் மற்றும் அரச குடும்ப
ஆதரவாளர்களிடம் இருந்து தான் வருகிறது. தனது எதிரிகளின் - குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா- கை
காத்மண்டுவில் ஓங்குவதாக உணர்ந்தால் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஊக்குவிக்கும் திறன் அமெரிக்காவுக்கு
நிறையவே இருக்கிறது. |