World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama, clinton and identity politics ஒபாமா, கிளின்டன் மற்றும் அடையாள அரசியல் By Patrick Martin ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பு மனு நியமனத்திற்கான போட்டியில் செனட்டர் பரக் ஒபாமா வென்றது அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நடைமுறையால் அமெரிக்க அரசியல், சமூகத்தின் முன்னேற்றம் நிறைந்த ஜனநாயகத் தன்மைக்கு சான்று என்று பாராட்டப்பட்டுள்ளது. இரு பெரிய முக்கிய அமெரிக்க பெருவணிகக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பு மனு நியமனத்தை பெறும் முதல் ஆபிரிக்க-அமெரிக்கர் ஒபாமா ஆவார். ஒரு நீடித்த ஆரம்ப தேர்தல் போட்டியில் குறுகிய பெரும்பான்மையில் அவர் தோற்கடித்த அவருடைய முக்கிய போட்டியாளரான செனட்டர் ஹில்லாரி கிளின்டன் ஜனாதிபதி வேட்பு நியமனத்தில் மிக வெற்றிகரமாக போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஆவார். கிளின்டன் சனிக்கிழமை தன்னுடைய பேச்சில் அடையாள அரசியலை பற்றிப் பேசினார்; உத்தியோகபூர்வமாக இக்கூட்டத்தில்தான் அவர் போட்டியில் இருந்து விலகி, தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்தி ஒபாமாவிற்கு ஒப்புதல் கொடுத்தார். இந்த உரை மிகப் பெரிய ஆரவாரத்துடன் ஜனநாயகக் கட்சித் தலைமை செய்தி ஊடகம் ஆகியவற்றால் வரவேற்கப்பட்டது. 28 நிமிஷ உரை முழுவதும் கிளின்டன் தன்னுடைய பிரச்சாரத்தை மகளிருக்கான ஒரு முன்னோடியான முயற்சி என்று குறிப்பிட்டார்; இறுதி இலக்கை அடையமுடியா விட்டாலும், இது ஒரு அடி முன்வைக்கப்பட்டதை குறிக்கிறது என்றார். "இன்று நாம் இங்கு கூடும்போது உலகைச் சுற்றி தலைக்கு மேலே வலம் வரும் 50வது பெண்மணியும் புறப்பட்டுள்ளார். 50 பெண்களை விண்வெளிக்கு அனுப்பும்போது வெள்ளை மாளிகைக்கும் ஒரு பெண்ணை ஒரு நாள் அனுப்பிவைப்போம்" என்று அவர் அறிவித்தார்.தன்னுடைய பிரச்சாரத்தின் வெளிப்படையான பெண்ணுரிமைக் காரணத்தை காட்டிய விதத்தில் கிளின்டன் கூறினார்: "ஒரு பெண்மணி வேட்பு மனு பெறுவதற்கு முயல்கிறார் என்ற முறையில் நான் பெருமிதம் அடைந்தேன்; ஆனால் நான் மிகச் சிறந்த ஜனாதிபதியாக இருப்பேன் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் இப்போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால் நான் ஒரு பெண்மணி; அங்கு செல்வதற்கு இன்னும் சில தடைகள் உள்ளன என்பதை மில்லியன் கணக்கான பெண்கள் போல் நான் அறிவேன்; அவற்றுள் பலவும் ஆழ்மனத்தில்தான் உள்ளன; நம் ஒவ்வொருவரின் திறனையும் மதித்துத் தழுவும் அமெரிக்காவை கட்டியமைக்க நான் விழைகிறேன். ஆண்களும் பெண்களும் தங்கள் பாட்டிகள், தாய்மார்கள் ஆகியோரின் போராட்டங்களை ஒன்றாக உணர வேண்டும் பெண்கள் சம வாய்ப்புக்கள், சம ஊதியங்கள், சம மதிப்பை பெறுகின்றனர் என்று நாம் உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவர் ஒபாமாவின் பிரச்சாரத்தை சமமான மாற்றத்தை கொடுத்தது என்றும் பாராட்டினார். "நாம் முதலில் தொடங்கியபோது எல்லா இடங்களிலும் மக்கள் இதே வினாக்களை எழுப்பினர். ஒரு பெண் உண்மையில் தலைமைத் தளபதியாக செயல்பட முடியுமா? நான் அதற்கு விடை கூறிவிட்டதாகத்தான் நினைக்கிறேன். ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர் எமது ஜனாதிபதியாக இருக்க முடியுமா? செனட்டர் ஒபாமா அதற்கு விடையிறுத்துள்ளார். செனட்டர் ஒபாமாவும் நானும் ஒரு நாடு என்ற விதத்தில் எமது முன்னேற்றத்திற்கு அடிப்பைடயான மைல் கற்களை கடந்துள்ளோம்; எமது இடைவிடா கடமை இன்னும் கூடுதலான, உறுதியான ஐக்கியத்தை காண்பது ஆகும்." இதே விதத்தில் ஒபாமாவும் விடையிறுத்து அறிவித்தார்: "செனட்டர் கிளின்டனுடைய ஆதரவைப் பெறுவதில் உவகையும் கெளரவத்தையும் அடைகிறேன். அதையும்விட மேலாக, அவரை அவர் நடத்திய வீரமான, வரலாற்றுப் புகழ் நிறைந்த பிரச்சாரத்திற்காக இன்று கெளரவிக்கிறேன். எனது பெண் பிள்ளைகள் மற்றும் எல்லா இடங்களிலும் இருக்கும் மகளிர்களின் சார்பில் அவர் தடைகளை தகர்த்துள்ளார்; அவர்களுக்கு இப்பொழுது தங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை என்பது நன்கு தெரியும். அமெரிக்க செய்தி ஊடகத்தின்படி, ஆபிரிக்க-அமெரிக்க மனிதர் மற்றும் ஒரு பெண்மணி முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களாக வெளிவந்தது மக்களின் ஒரு சமூக முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்ற கருத்து உள்ளது -- ஒபாமா செல்வம் கொழிக்கும் பெருவணிக நலன்களால் ஊக்கம் பெற்றார், ஹில்லாரி கிளின்டன் தன்னுடைய அரசியல் முக்கியத்துவத்திற்கு ஒரு முன்னாள் ஜனாதிபதியை திருமணம் செய்திருந்தது என்று இருந்தாலும் இந்த நிலை உணரப்பட்டுள்ளது. திறனாய்வு அதிகமற்ற செய்தி ஊடகத்தின் குரலும் மிக வெளிப்படையாக நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் Bob Herbert ஆல் தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க கட்டுரை ஒன்று ஜூன் 7 வெளிவந்ததில் "இந்த கணத்தை அனுபவியுங்கள்" என்ற தலைப்பில் கூறியுள்ளார்; 2008 ஒபாமா-கிளின்டன் போட்டியை ஹெர்பேர்ட் 1968ல் இருந்து இனவெறி, பால் கசப்பு உணர்வு என்று இருந்ததுடன் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்; அப்பொழுது ஜோர்ஜ் வாலஸ் ஜனாதிபதி போட்டிக்கு ஒரு சுதந்திர வேட்பாளராக பங்கு பெற்றார்; பிரிவினை அரங்கை கொண்டிருந்தார்; அரசியல், இன்னும் பல வேலைகளில் இருந்து மகளிர் மிகப் பெரிய அளவில் ஒதுக்கப்பட்டிருந்தனர். "இனவாதம், பால்வாதம் ஆகியவை அகன்றுவிட்டன" என்று ஹெர்பேர்ட் எழுதுகிறார். "ஆனால் பரக் ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வரக்கூடும் என்ற உண்மையும், பரிசுக்குப் போட்டியிட்ட இறுதியாளர்கள் ஒரு கறுப்பர் மற்றும் வெள்ளை பெண்மணி என்று காணும்போது, இவை மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகள் எனப்பட வேண்டும். இந்தக் கணத்தில் வியப்புத் தன்மையை காணாமல் இருந்துவிடக் கூடாது." "செனட்டர் ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறாரா எனப் பார்ப்போம். ஆனால் அவர் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டால், இந்தக் கணம் பற்றி அமெரிக்கர்கள் பெருமிதம் அடையலாம், இக்கணத்தில் இருந்து சமூகம் மீளக் கட்டியமைக்கப்பட முடியும். எனவே ஒரு வெற்றி ஓட்டம் ஏற்புடைத்ததேயாகும். செனட்டர் ஒபாமாவிற்கு என்று இல்லை (அவர் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டியிருக்கிறது). ஆனால் வெறுப்பு, அடக்குமுறை ஆகியவற்றிற்கு அமைதியாக அடிபணிய மறுத்த அனைவருக்கும், அவர்கள் வாழ்க்கையில் எந்தத் தளத்தில் இருந்தாலும். அவர்கள் நம்மை சிறந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர்." இந்தச் "சிறந்த இடத்திற்கு" வந்துள்ளோம் என்பதின் உண்மையான தன்மை என்ன? 1968ல் இருந்து அமெரிக்க சமூகத்தின் உண்மையான வரலாற்று முன்னேற்றச் சான்றுகள் கடந்த நான்கு தசாப்தங்களில் என்ன? இனம், வெளிப்படையா பால் எதிர்ப்பு ஆகியவை குறைந்துள்ளது பற்றி வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் மிக அடிப்படையான முறையில், வர்க்க, பொருளாதார அளவில் அமெரிக்கா 19ம் நூற்றாண்டின் கொள்ளைப் பிரபுக்கள் காலத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்க சமூகம் சமமற்ற நிலையில்தான் உள்ளது. அமெரிக்க சமூகத்தின் உயர்மட்ட 1 சதவீதம் நாட்டின் மொத்தச் செல்வத்தில் 45 சதவீதத்திற்கு மேல் கட்டுப்படுத்துகிறது. உயர்மட்ட பத்தில் ஒரு பங்கு கிட்டத்தட்ட தேசிய வருமானத்தின் முழு பெருக்கத்தையும் கடந்த இரு தசாப்தங்களில் ஏகபோக உரிமையில் அடைந்துள்ளது; அதே நேரத்தில் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்கள் சரிதல், தங்கள் வேலைகள் ஆபத்திற்கு உட்பட்டிருப்பது, மொத்தத்தில் சமூக நிலை பாதுகாப்பற்று போதல் ஆகியவற்றைத்தான் கண்டுள்ளனர். கறுப்புத் தொழிலாளர்கள் இளைஞர்களுக்கு இந்தச் சரிவு இன்னும் கிடுகிடுவென உள்ளது. நன்கு தெரிந்த புள்ளி விவரங்களை கூறத் தேவையில்லை: கல்லூரிகள், இடிந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் உள்நகரங்களில் இருக்கும் பிற சமூகப் பணிகளில் இருப்பதைவிட கூடுதலான எண்ணிக்கையில் கறுப்பு இளைஞர்கள் உள்ளனர்; வறுமைத் தரங்கள் மீண்டும் 1960 களின் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு வந்துவிட்டது. விகிதமற்ற தரத்தில் வேலையின்மை, போதைப் பொருள் பயன்பாடு, வன்முறை, வீடுகள் இல்லாதது இன்னும் பிற சமூகத் தீமைகள் பெருகிவிட்டன. இந்த சமூகப் பிளவு ஓரளவிற்கு ஒரு சிறிய அடுக்குகள் கறுப்பர்கள், மகளிர், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள், ஹிஸ்பானியர்கள் போன்றவர்களை சலுகை பெற்ற உயரடுக்கில் கொண்டுள்ளதன் மூலம் மூடி மறைக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஓப்ரா வின்ப்ரே அல்லது டைகர் வூட்ஸ் அல்லது ஒரு பரக் ஒபாமா (அல்லது ஒரு ஹில்லரி கிளின்டன்) ஏற்றம் பெறுவது அமெரிக்காவை ஒரு கூடுதலான சமூக சமத்துவம் பெற்ற சமுதாயமாக ஆக்கிவிடாது. ஒரு கறுப்பு கொலின் பவலை, 1991 பாரசீக வளைகுடாப் போரின்போது கூட்டுப் படைகளின் தலைவராக கொண்டதோ, கொண்டலீசா ரைசை தேசிய ஆலோசகராகவும் இப்பொழுது வெளிவிவகார அமைச்சராக ஈராக் போரின் போது கொண்டிருப்பதோ இப்போர்களின் ஏகாதிபத்திய, கொள்ளைத் தன்மையை மாற்றிவிடாது. ஒரு ஆபிரிக்க-அமெரிக்கரை (CEO Stanley O'Neal ஐ) மெரில்-லிஞ்ச்சின் தலைமைப் பொறுப்பில் கொண்டிருப்பதால், பெரும்பாலும் மட்டுமீறிய ஊகவணிகம், ஏமாற்றுத்தன்மை நிறைந்த கடன் காரணமாக ஏற்பட்ட - அமெரிக்க குறைந்த பிணைமதிப்புடைய அடைமான சந்தையின் பொறிவை - குறைந்த வருமானம் உடைய கடன்வாங்குபவர்கள் மிகவும் பொறுத்துக் கொள்ளக்கூடியது என்று ஏற்க முடியாது. (கடன் வாங்கியவர்கள் பலர் விகிதத்திற்கு பொருந்தாத எண்ணிக்கையில் சிறுபான்மை சமூகத்தினர் ஆவர்.) 1968 நிலைமையை பற்றி ஹேர்பேர்ட் கூறுகிறார்; ஆனால் அதற்கு அந்த சகாப்தத்தில் வர்க்க நனவுடைய அரசியல் விடையிறுப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் இருந்து வந்ததை புறக்கணிக்கிறார். அது வேண்டுமென்றே கறுப்பர்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களின் ஒரு அடுக்கை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது; அவர்கள் சமூகத்தின் "பிரதிநிதிகள்" என்று வளர்க்கப்படலாம்; மற்றவர்களை அமெரிக்க அடிப்படை சமூக அமைப்பு சிறிதும் கவனியாமல் விட்டுவிடும். 1960 களில் சேரி வெடிப்புக்களின் பூசல் களங்களாக மாறியிருந்த பெரு நகரங்கள் பின்னர் ஆபிரிக்க அமெரிக்க மேயர்கள் வசம் கொடுக்கப்பட்டன. கறுப்பர், ஹிஸ்பானிய காங்கிரஸ் ஆண், பெண் உறுப்பினர்கள் பதவிக்கு வந்து, ஜனநாயகக் கட்சிக்கு தேவையான தாங்குதலை கொடுத்தனர். இதே போன்ற முயற்சிகள் செய்தி ஊடகத்தில், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் பெருநிறுவன மேலாண்மை ஆகியவற்றிலும் நடந்தன; இந்த வழிவகையை ஊக்குவிக்கும் வகையில் நனவுடன் வாதிட்டவர்கள் ரிச்சார்ட் நிக்சன் ஆவார்; அவருடைய நிர்வாகம் --இப்பொழுது பரந்த அளவில் மறக்கப்பட்டுவிட்டது-- "உடன்பாட்டு நடவடிக்கை" என்ற கருத்தாய்வை முன்னோடியாக்கியது; கறுப்பர் மத்தியதர வகுப்பின் சலுகை பெற்ற வகுப்பை தேர்ந்தெடுத்து, இணைந்து நிர்வாகத்தில் இருக்கச் செய்தது. பெரும் இழிவுணர்வுடன் நிக்சன் இந்தக் கொள்கையை வெள்ளை இனவெறித் தாக்குதல் குறிப்பாக தெற்கில் இருப்பதற்கு மாற்று முறையீடாகச் செய்து, குடியரசுக் கட்சியின் தேர்தல் தளத்தை வலுவடையச் செய்தார். இன உணர்வு மற்றும் அடையாள அரசியலை வளர்ப்பற்கான முறையீடுகள் வந்துள்ளவை தற்செயல் நிகழ்வு அல்ல. அடையாள அரசியல் உத்தியோகபூர்வமாக வளர்க்கப்படுவதின் அடிப்படை நோக்கம் தொழிலாளர்களின் பிளவுகளை வளர்த்து இன்னும் அடிப்படை சமூக, பொருளாதார காரணங்கள் வறுமை, சுரண்டல் அடக்குமுறை பற்றி இருப்பதை எதிர்க்காமல் திசை திருப்புதல் என்று இருந்தது, இருக்கிறது. முதலாளித்துவ செய்திஊடகத்தில் பல வர்ணனையாளர்களும் செய்வதுபோல, ஹெர்பேர்ட் அசட்டை செய்வது, அமெரிக்க சமூகத்தின் அடிப்படை பிளவை --வர்க்கப் பிளவை ஆகும். ஒபாமா வேட்புமனு நியமனம் இன்னும் கூடுதலாக அது நடந்தால், ஒபாமாவின் ஜனாதிபதி பதவி, அமெரிக்க சமூகத்தின் ஜனநாயகத் தன்மை பற்றிய மக்களிடையே உள்ள பிரமையை அதிகம் வளர்க்கும், ஆயினும், சமூக யதார்த்தமோ முற்றிலும் வேறுவிதமானது. ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவின் ஆளும் நிதிய மேற்தட்டினரின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவம் செய்யும் மற்றும் பாதுகாக்கும். கறுப்பர், வெள்ளையர், ஹிஸ்பானியர், ஆசியர்கள், ஆண்கள், பெண்கள் என்று உழைக்கும் மக்கள் பல மில்லியன் பேர் இந்த சமூக உண்மையை வெடிப்பு நிறைந்த மற்றும் கடுமையான போராட்டங்களின் போக்கில் உணர்ந்து கொள்ளுவர். |