World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Bush administration uses IAEA report to make new demands and threats to Iran

ஈரானை அச்சுறுத்தவும், புதிய கோரிக்கைகளை வலியுறுத்தவும் புஷ் நிர்வாகம் சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிக்கையை பயன்படுத்துகிறது

By Peter Symonds
29 May 2008

Back to screen version

திங்களன்று அங்கத்துவ நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான சர்வதேச அணுசக்தி அமைப்பின் சமீபத்திய அறிக்கை, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளிடமிருந்து ஏற்கனவே ஒரு புதிய சுற்று விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் மற்றும் அச்சுறுத்தல்களையும் வெளிப்படுத்தி இருந்தது. அடுத்த வாரம் IAEA ஆளுநர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே அவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்.

அவ்வறிக்கை "மிகவும் குழப்பமூட்டுவதாக" இருப்பதாக அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சீன் மெக்கோர்மேக், ''ஆயுதம் தயாரிக்கும் சாத்தியப்பாடு'' பற்றிய தகவல்களை ஈரான் "திட்டமிட்டு இரகசியமாக வைத்திருப்பதாக" அது குறிப்பிட்டது எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஈரான் மறைமுகமான ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர்: "இந்த அணுசக்தி திட்டத்தில் இராணுவத்தின் ஈடுபாடு குறித்தும், அரைவட்ட யுரேனியத்தை உருவாக்குவதற்கான ஈரானின் முயற்சிகள் குறித்தும் அதில் பல வித்தியாசமான கேள்விகள் இருக்கின்றன. மேலும், ஓர் ஆயுதத்திற்காக அல்லாமல் நீங்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் எனக்கு புரியவில்லை." என்றார்.

அவ்வறிக்கையை பெறுவதற்கு முன்பாகவே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் மில்லிபண்ட் கடந்த வாரம், ஈரான் அதன் நன்டன்ஜ் யுரேனியம் செறிவூட்டும் ஆலையை மூடாததற்கும் மற்றும் அராக்கில் உள்ள கனநீர் ஆய்வு அணுவாலையின் கட்டுமானத்தை நிறுத்த தவறியதன் மீது ஐக்கியநாடுகள் சபையின் ஒரு புதிய சுற்று தடைகளை விதிக்க விவாதித்தனர். "எங்களின் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை" ஈரான் அளிக்க தவறினால், பாரிய சர்வதேச அழுத்தம் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மூலமாகவும்) அளிக்கப்படும் என செவ்வாயன்று, ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிரான்ங்-வால்ட்டர் ஸ்ரைன்மயர் எச்சரித்தார்.

"IAEA அறிக்கை குறித்து ஈரான் நிறைய விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது, குறிப்பாக சர்வதேச சமூகம் அதன் திட்டங்கள் பற்றி கொண்டிருக்கும் சில மிக முக்கிய இரகசிய கேள்விகளுக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை எனக் கருதுவதன் மீது அது விளக்கம் அளிக்க வேண்டும்" என நேற்று ரைஸ் அறிவித்தார். ஈரானிய அணுசக்தி ஆலைகளின் மீது ஓர் இராணுவ தாக்குதல் நடத்தப் போவதாக தொடர்ச்சியாக குறிப்பு அளித்திருக்கும் இஸ்ரேல், சர்வதேச அணுசக்தி அமைப்பால் "மகிழ்ச்சி" அடைந்துள்ளது என ஜேரூசலேம் போஸ்ட் இதழில் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை அவமதிப்பதை ஈரான் தொடர்கிறது என்பதை அவ்வறிக்கை உறுதிப்படுத்துவதாக ஓர் இஸ்ரேலிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

ஈரானின் முந்தைய நடவடிக்கைகளின் அடிப்படையில் IAEA விற்கு போதிய விளங்கங்கள் அளிக்க அது தவறுவதை சுட்டிக்காட்டி, ஊடகங்களில் வெளியாகும் அறிக்கையின் சில குறிப்பிட்ட கசிவுகள், ஈரான் மீது அதிகரித்துவரும் அழுத்தத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றுகின்றன. பிபிசி அதன் செய்திக்கு "ஈரான் அணுசக்தி விபரங்களை இரகசியமாக வைக்கிறது" என தலைப்பிட்டது. அசோசேடேட் பிரஸ் கூறியதாவது: "ஈரான் அணு பரிசோதனை பற்றிய தகவல்களை மறைக்கலாம்"; ஏஜென்ஸ் பிரான்ஸ் குறிப்பிட்டதாவது: "IAEA அறிக்கை ஈரானை சூடேற்றுகிறது."

வெடிப்பொருட்களிலும், யுரேனியம் செறிவூட்டலிலும் மற்றும் யுத்த ஏவுகணை வடிவமைப்பிலும் தெஹ்ரான் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்ட மேற்கத்திய புலனாய்வு நிறுவனங்களால் அளிக்கப்பட்ட ஆவணங்களை பற்றிக் குறிப்பிட்ட அவ்வறிக்கை வழமைக்குமாறாக வெளிப்படையானதாகவும், தெளிவானதாகவும் இருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. மிக நவீன முறையில் எரிவாயு செலுத்தும்கருவியை ஈரானின் நடன்ஜ் ஆலையில் அமைத்திருப்பது மற்றும் அவர்களின் உற்பத்தியில் இராணுவத்தின் ஈடுபாடு ஆகியவற்றை அந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

திசை திருப்பும் மற்றும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் ஓர் அச்ச சூழலை அதிகரிக்க மீண்டும் ஒருமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ''ஆயுதமாக்கல் தகமை'' குறித்த எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஈரானின் தற்போதைய நடவடிக்கைகளுடன் தொடர்புப்படவில்லை. 2004க்கு பின்னர் எந்த ஆயுத திட்டங்களும் தொடரப்பட்டதாக IAEA எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. கடந்த டிசம்பரில், 16 அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் கூட்டாக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு கணிப்பு, 2003லேயே ஈரான் அணுஆயுதங்கள் குறித்த ஆராய்ச்சியை கைவிட்டுவிட்டது என்பதைக் கண்டறிந்தது.

அதற்கும் மேலாக, ஈரான் சக்திவாய்ந்த வெடிபொருட்களை பரிசோதனை செய்திருந்தது என்றும், அணுவாயுதங்களை ஏந்திச் செல்லும் அதன் ஷபாப் ஏவுகணையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டிருக்கிறது என்றும், அரைவட்ட யுரேனிய உற்பத்திக்கான ஆவணங்களையும் அது கொண்டிருக்கிறது என்ற முறையீடுகள் புதியவையல்ல. அனைத்து இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆவணங்கள், 2004ல் ஈரானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு மடிக்கணினியில் (Laptop) கண்டறியப்பட்டவை. பெப்ரவரி வரை, IAEAவிற்கு அமெரிக்க நிர்வாகம் விபரங்களை அளித்தது, ஆனால் புலனாய்வு தகவல்களை முறையாக வெளியிட மறுத்துவிட்டது, இவ்வாறு குற்றச்சாட்டுகள் குறித்து IAEA ஈரானிய அதிகாரிகளுடன் முழுமையாக விவாதிப்பதை அது தடுத்து வருகிறது.

ஈரானின் அணுஆயுத நடவடிக்கைகள் தொடர்பாக நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தெளிவுபடுத்த முயன்ற IAEA தலைவர் ஜெனரல் மொஹமத் எல்பராடேயின் முயற்சிகளுக்கு குழி பறிப்பதற்கான ஒரு முயற்சியில் அமெரிக்கா இறுதியாக தகவல்களை வெளியிட்டது. தேசிய புலனாய்வு கணிப்பின் கண்டுபிடிப்புகளின் மதிப்பைக் குறைக்கவும் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மற்றொரு தீர்மானத்தின் மூலம் மார்ச்சுக்கு முன்னதாக ஈரானுக்கு எதிரான தடைகளை வலுப்படுத்த அழுத்தம் அளிக்கும் நிலைமையை உருவாக்குவதற்கான புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு அமைந்திருந்தது.

இந்த ஆவணங்கள் போலியானவை என்று குறிப்பிட்ட ஈரான், தமது அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளும் அமைதியான தேவைக்கானவையே என்றும் குறிப்பிட்டது. யுரேனியம் செறிவூட்டல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களை உருவாக்குவது உட்பட, அணுசக்தி எரிபொருள் முறையின் அனைத்து நோக்கங்களையும் பின்பற்ற அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழுள்ள அதன் உரிமைகளைக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் சட்டவிரோதமானவை என அது நிராகரித்துள்ளது. "ஈரானின் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளும் அமைதியான தேவைக்கானவையே" என சமீபத்திய அறிக்கை எடுத்துக்காட்டி இருப்பதாக IAEAக்கான ஈரானின் தூதர் அலி அஸ்கர் சோல்டநிஹ் அறிவித்தார்.

இரகசியம் பொதிந்த மடிக்கணினி குறித்த முழு கதையும் இனிமேல் தான் வெளியாக வேண்டும். முன்னாள் அமெரிக்க ஆயுத ஆய்வாளர் ஸ்காட் ரிட்டர், தமது 2006ம் ஆண்டின் ஈரானை குறிவைத்தல் (Target Iran) என்ற புத்தகத்தில், இஸ்ரேல் ஆவணங்களில் சதி செய்ய ஈடுபட்டிருந்ததற்கான சாத்தியக்கூறு இருந்ததை குறிப்பிட்டார். "மடிக்கணினியின் தகவல்களுக்கும், இஸ்ரேலின் முந்தைய புலனாய்வுக்கும் இடையிலான தொடர்பை ஓர் தற்செயலானதொன்றாக பார்க்கலாம், ஆனால் அதில் ஒரு தொடர்பிருப்பதாகவும், அந்த தொடர்பு இஸ்ரேலாகும் என்றும் சில ஐரோப்பிய புலனாய்வு அதிகாரிகள் நம்புகிறார்கள் என்பதுடன், மடிக்கணினி தகவல்களின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையின் அடிப்படையில், அதிலிருக்கும் புலனாய்வு குறிப்புகள் கேள்விக்குரியதாய் உள்ளன" என அவர் தெரிவித்தார்.

"ஈரானியர்கள் தங்கள் பங்கிற்கு, மடிக்கணினியின் தகவல்கள் அனைத்தும் 'ஒட்டுமொத்த உருவாக்கம்' என்றனர். எவ்வாறிருப்பினும், IAEA உடனான தனிப்பட்ட கூட்டங்களில் மடிக்கணினி பற்றிய முழுக்கதையும் இயற்றப்பட்டது பற்றிய ஈரானியர்கள் சில குறிப்புகளை குறிப்பிட்டிருந்தனர். ஈரானியர் அளித்த சில குறிப்பு ஆதாரங்களில் மடிக்கணினி கதை நம்பத்தக்கதாகவும் உள்ளது; சில உறுதிப்படுத்ததக்க உண்மைகளை விதை களங்களாகப் பயன்படுத்தி, அணு ஆயுத திட்டத்தில் இராணுவத்தின் ஈடுபாடு இருந்ததற்கான ஓர் ஒட்டுமொத்த கதையை இஸ்ரேலியர்கள் உருவாக்கினார்கள் என்பதே அவர்களின் கவலையை அதிகரிக்க செய்கிறது என மற்ற சிலர் கூறுகிறார்கள்." (Target Iran, Scott Ritter, p.184)

அமெரிக்க தாக்குதலுக்கான அச்சுறுத்தல்

அனைத்து ஆவணங்களும் அங்கீகரிக்கப்பட்டவைகளாக இருந்தாலும் கூட, கடந்த காலத்தில் ஈரான் அணு ஆயுதங்களின் திட்டத்தை கொண்டிருந்தது, அதுவே தற்போதும் தொடரப்படுகிறது என்பதற்கான ஒட்டுமொத்த ஆதாரத்தை அவர்கள் அளிக்கவில்லை. ஈரான் அதன் அணுசக்தி திட்டங்கள் குறித்த 11 பிரச்சனைகளை தெளிவுபடுத்த வேண்டும் என தெஹ்ரானை IAEA கேட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. அதற்காக மே 23ம் தேதி அளிக்கப்பட்ட பதில் சமீபத்திய அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.

அனைத்து ஆவணங்களும் போலியானவை என நிரூபிக்கப்பட்டாலும், ஈரானிய ஆட்சியை குற்றம்சாட்டும் புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரத்தை அது தடுக்கப் போவதில்லை. அணுவாயுத தடை ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியதாகவும், அனைத்து செறிவூட்டும் நடவடிக்கைவையும் ஈரான் நிறுத்த வேண்டும் என்ற வாஷிங்டனின் கோரிக்கைகளை நியாயப்படுத்த பிற ''ஆதாரங்கள்'' கண்டறியப்பட வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும். அல்லது ஈராக்கில் ஈரானின் தலையீடு அல்லது பயங்கரவாத அமைப்புக்கள் என அழைக்கப்படும் லெபனானில் உள்ள ஹெஜ்பொல்லாஹ் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் போன்றவற்றிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் போன்ற பிற போலி காரணங்கள் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும்.

இஸ்ரேலின் அணுசக்தி ஆயுதக்கிடங்குகளில் இருக்கும் குறிப்பிட முடியாத ஒரு எண்ணிக்கையை ஞாயிறன்று, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் குறிப்பிட்டார். ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கொண்டிருக்கும் அணுஆயுதங்களை (இது "150 அல்லது அதற்கு மேலும்" இருக்கலாம் என அவர் தெரிவித்தார்) பாரியளவில் எதிர்நோக்குகையில் அணுஆயுதம் ஏந்திய ஈரான் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என அறிவித்தார். அணுகுண்டு வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு எவ்வித கண்டனமும் தெரிவிக்காது, ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஏதாவது ஆதாரத்தை உருவாக்க விரும்பும் நிலையில், ஈரானை மட்டும் குற்றஞ்சாட்டும் புஷ் நிர்வாகத்தின் போலித்தனத்தை அவரின் கருத்துக்கள் அடிக்கோடிடுகின்றன.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகள் முழுவதிலும் பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்த விரும்பும் அமெரிக்காவின் பேராசைகளுக்கு தடையாக இருக்கும் ஓர் ஆட்சிக்கு குழி பறிக்க வேண்டும் என்பதே ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் பிரச்சாரத்தில் இருக்கும் உண்மையான நோக்கமாகும். தெஹ்ரானின் ஆட்சி மாற்றத்திற்கான அதன் பேராசையை புஷ் நிர்வாகம் ஒருபோதும் கைவிட்டிருக்கவில்லை என்பதுடன் ஆக்கிரமிப்புக்கான ஒரு புதிய யுத்தம் உட்பட, தங்கள் முன்னிருக்கும் அனைத்து வழிகளையும் அது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பதவி இறங்குவதற்கு முன்னதாக புஷ் ஈரானைத் தாக்கலாம் எனக் குறிப்பிட்டு ஊடகத்தில் தொடர்ச்சியாக செய்திகள் கசிகின்றன. ஓர் ஓய்வுபெற்ற அமெரிக்க இராஜாங்க அதிகாரியும், முன்னாள் வெளியுறவுத்துறை உதவி செயலாளர் மட்டத்திலான ஓர் உயர்மட்ட வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், "ஆகஸ்டில் ஈரான் மீது விமானத் தாக்குதல் நடத்த புஷ் திட்டமிடுகிறார்" என்ற தலைப்பில் ஆசியா டைம்ஸ் இணைய தளத்தில் நேற்று ஒரு செய்தி வெளியானது. போருக்குரிய காரணங்களுக்கு ஈரானின் அணுசக்தி திட்டங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, "திட்டமிட்ட விமான தாக்குதலை, ஈராக்கில் தலையிடும் ஈரானை தண்டிக்க எடுக்கப்படும் ஒரு வரையறைக்குட்பட்ட நடவடிக்கையாகவே வெள்ளை மாளிகை கருதுகிறது" என அந்நபர் தெரிவித்தார்.

"நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட விபரங்கள் தலைநகரில் எச்சரிக்கை மணி எழுப்பியது என அந்த நபர் தெரிவித்தார். திட்டமிட்ட விமானத் தாக்குதல் குறித்து இரகசிய குறிப்புகளைப் பெற்ற பின்னர், ஜனநாயக கட்சியின் கலிபோர்னியா செனட்டர் டேய்னி பின்ஸ்டீன் மற்றும் குடியரசு கட்சியின் இந்தியானா செனட்டர் ரிச்சர்டு லூகர் இருவரும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த 'ஓரிரு நாட்களில்' நியூயோர்க் டைம்ஸின் தலையங்கத்தில் எழுதவிருப்பதாக அந்த நபர் கடந்த வாரம் தெரிவித்தார். பின்ஸ்டீன் செனட் புலனாய்வு குழுவின் ஓர் உறுப்பினராவார் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த லூகர் வெளியுறவு குழுவில் பதவி வகிப்பவராவார்." என அக்கட்டுரை விவரித்தது.

புஷ் நிர்வாகம் அந்த கட்டுரை குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. பின்ஸ்டீன் மற்றும் லூகரின் செய்தி தொடர்பாளர்கள் இணைய தளத்தின் மூல கதை பற்றி கருத்துத்தெரிவிக்க மறுத்தார்கள். அதற்கு பின்னர் கோரிக்கைகளின் எவ்வித வலியுறுத்தல்களும் வெளியாகவில்லை. கட்டுரையில் துல்லியமான உண்மை என்னவாக இருந்த போதிலும், ஈராக்கை தாக்குவதற்கான புத்திசாலித்தனத்தின் மீது அமெரிக்க அரசியல் கட்டமைப்புக்குள் தொடர்ந்து வரும் கூரிய பிரிவுகளை அது குறிப்பிட்டது. அமெரிக்க முதலாளித்துவத்தின் சர்வதேச நலன்களுக்கு முக்கிய பேரழிவு விளைவுகளை உண்டாக்கும் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையில் புஷ் ஈடுபடலாம் என்ற தெளிவான பதட்டம் அங்கு நிலவுகிறது.

"ஈரான் மீது ஓர் பொருத்தமான வழி" என்ற தலைப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜிபிக்நியூ பிரிஜின்ஸ்கி மற்றும் பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் இயக்குனர் வில்லியம் ஓடம் ஆகியோரால் வாஷிங்டன் போஸ்ட் இதழில் ஒரு பதிலிடுகை அனுப்பப்பட்டது. அந்த கட்டுரை புஷ் நிர்வாகத்தின் மூலோபாயத்தை நிராகரிப்பதால் புண்படுத்துகிறது என குறிப்பிட்ட அச்செய்தி தெரிவித்ததாவது: "கைத்தடிகளும், கேரட்களும் கழுதைகளுக்கு வேண்டுமானால் பயன்படும், ஆனால் பிரச்சனையான நாடுகளுக்கு பயன்படாது. ஆட்சி மாற்றத்திற்கான அழைப்புகளையும், இராணுவ அச்சுறுத்தல்களையும் வெள்ளை மாளிகை கைவிட்டால், அமெரிக்கா வெற்றி பெறுவதற்கு சிறந்த வாய்ப்பு இருக்கவேண்டும்."

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஏதாவதொன்றால் நடத்தப்படும் விமானத் தாக்குதலுக்கு ஈரான் அளிக்கும் பதிலடிகளுக்கும் அமெரிக்கா விலை கொடுக்க வேண்டி இருக்கும் என பிரிஜின்ஸ்கி மற்றும் ஓடம் எச்சரித்தனர். "இது பெரும்பாலும் நிச்சயமாக மத்திய கிழக்கையும், ஆப்கானிஸ்தானையும் ஸ்திரமின்மைக்கு இட்டு செல்லும் என்பதுடன் அதிக விலையுடன் மிக குறைந்த அளவு மட்டுமே அதிகரித்திருக்கும் எண்ணெய் உற்பத்தியின் வரவையும் இந்த தொடர்ச்சியான முயற்சிகள் பாதிக்கும். ஈரான் மீதான ஒரு சவாலான தாக்குதல் விளைவாக மத்திய கிழக்கில் உண்டாகும் குழப்பம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலையும் கூட பாதிக்கும்."

"வளைகுடா பகுதியை ஸ்திரப்படுத்த அமெரிக்காவுடனான ஈரானின் பாரம்பரிய நிலைக்கு அதை மீண்டும் கொண்டுவர நீண்ட கால கண்ணோட்டத்துடன்" அதனுடையதும் மற்றும் எமது பாதுகாப்பு நலன்களை முன்னிறுத்தி ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தொடங்க வேண்டும் என அந்த குறிப்பு வலியுறுத்துகிறது. ஆனால் அதுபோன்றதொரு மூலோபாயம் புஷ் நிர்வாகத்தால் நிராகரிக்கப்படுகிறது, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை தடைகளை இறுக்குவதற்கான நடவடிக்கைகள் உட்பட அனைத்து இராஜாங்க முயற்சிகளும் கால விரயம் எனக் குறிப்பிடும் துணை ஜனாதிபதி டிக் செனியின் தலைமையிலான பெரும்பான்மை இராணுவவாத பிரிவுகளால் நிராகரிக்கப்படுகிறது.

யுத்தத்தினை முன்மொழிபவர்களை பொறுத்த வரை, ஈரானுடனான நெருக்கடிகளை குறைக்கும் எவ்வித நடவடிக்கையும் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களின் செல்வாக்கை அதிகரிக்க அனுமதிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இதனுள் சீனா மற்றும் ரஷ்யாவை மட்டுமல்லாது, ஆனால் அதன் பெரியளவிலான எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைச் சுரண்டுவது உட்பட, ஏற்கனவே தெஹ்ரானுடன் கணிசமான அளவில் பொருளாதார கூட்டு வைத்திருக்கும் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் உள்ள வாஷிங்டனின் கூட்டாளிகளையும் உட்கொண்டிருக்கிறது. பிரிஜின்ஸ்கி மற்றும் ஓடத்தின் திட்டம் அமெரிக்க ஆதிக்கத்தின் கடந்த காலத்திற்கு ஒத்துவருவதாக இருந்த போதினும், அமெரிக்க அதிகாரம் அதிகரித்தளவில் சவாலுக்கு உட்படும்போது, ஈரானுக்கெதிரான ஒரு மூர்க்கத்தனமான புதிய யுத்தத்திற்கான முனைவு நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட தர்க்கத்தை கொண்டிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved