WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan farmers reject president's boast of helping
rural communities
கிராமப்புற சமூகங்களுக்கு உதவும் ஜனாதிபதியின் தற்பெருமையை இலங்கை விவசாயிகள்
நிராகரிக்கின்றனர்
By W.A. Sunil and G. Sena
10 June 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, கிராமப்புற நகரான தெஹியத்தகன்டியில்
நடந்த மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது, விவசாயிகள் "அவர்களது சொந்தக் காலில் நிற்க" தனது
அராசாங்கம் உதவியுள்ளதாக கூறிக்கொண்டார். "விவசாயம் செய்வதன் மூலம் இந்த மண்ணுக்கு வளமூட்ட முடியும்
என்பதை நாம் ஒப்புவித்துள்ளோம். இப்போது கடந்த காலத்தில் போலவே விவசாயிகளே விலையை கட்டுப்படுத்துகின்றார்கள்
அரிசி ஆலை உரிமையாளர்கள் அல்ல," என அவர் கூறிக்கொண்டார்.
இராஜபக்ஷவின் உரை, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்னர் கிராமப்புற வக்காளர்களை ஈர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டிருந்தது. விவசாயிகளுக்கு உதவுவதாக அவர்
கூறிக்கொண்டதை போலவே, ஜனாதிபதி பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்திற்கு ஆதரவைக் காட்டுவதன் பேரில் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேர்தல்
வன்முறைகள் மற்றும் மோசடி தொடர்பான பரந்தளவிலான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் ஆளும் கூட்டணி குறுகிய
பெரும்பான்மையை வென்றது.
உலக சோசலிச வலைத் தள
(WSWS)
நிருபர்கள் தெஹயத்தகன்டி மற்றும் அருகில் உள்ள கின்னொருவ மற்றும் ஹேனானிகல கிராமங்களுக்கும் சென்றிருந்தனர்.
இங்கு 1,000 விவசாய குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த கிராமங்கள் கிழக்கு மாகாண எல்லையில் இருப்பதோடு
மஹாவலி நீர்ப்பாசன திட்டத்தின் பாகமாக உள்ளன. தமது வறுமையான நிலைமையை சுட்டிக்காட்டிய விவசாயிகள்
இராஜபக்ஷவின் கூற்றுக்களை நிராகரித்ததோடு விவசாயம் செய்வதில் உள்ள பெரும் சிரமங்களை விளக்கினர்.
புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் சிங்கள இனத்தவர்களே கூடுதலாக
வாழும் இந்தக் கிராமங்களை பெருமளவில் பாதித்திருக்காவிட்டாலும், அருகில் ஒரு இராணுவ முகாம் இருப்பதோடு
சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், அரசாங்கத்தின் பிரமாண்டமான பாதுகாப்புச் செலவு,
ஏற்கனவே ராக்கட் வேகத்தில் உயர்ந்துள்ள எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின விலைவாசியை இன்னும் உயர்த்தியுள்ளது.
உயர்ந்த அரிசி விலையின் இலாபத்தை சிறிய விவசாயிகளே பெற்றுகொள்கிறார்கள் என்ற இராஜபக்ஷவின் கூற்று ஒரு
மோசடியாகும்.
ஏப்பிரலில், ஒரு கிலோ நெல்லின் திறந்த சந்தை விலை 35-38 ரூபா வரை
உயர்ந்த அதே வேளை, அரசாங்கத்தின் உத்தரவாத விலை 16-20 ரூபாவாக இருந்தது. ஆயினும், இந்த விலை
உயர்வு இரண்டு காரணங்களால் தோன்றியது: கடந்த அக்டோபர்-ஏப்ரலில் பெரும் போகத்தின் போது பெய்த
மழையின் காரணமாக நெல் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது ஒரு காரணம்; உலகில் அரிசி விலை அதிகரித்தது
மற்றைய காரணமாகும். உயர்ந்த விலையில் தமது அரிசியை விற்ற விவசாயிகளுக்கும் கூட, எரிபொருள் விலை,
உரம் மற்றும் கிருமி நாசினிகளின் விலை ஏற்றத்தால் வருமானத்திற்கு பங்கம் ஏற்பட்டது. அதிலிருந்து சந்தை விலை
ஒரு கிலோவுக்கு 28-32 ரூபா வரை குறைந்தது.
இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாலும் மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய
தேசிய கட்சியாலும் தலைமை தாங்கப்பட்ட ஆட்சியில் இருந்து கூட்டணி அரசாங்கங்கள், பொருத்தமான உத்தரவாத
விலையை நிர்ணயிக்கவோ அல்லது விவசாயிகளிடம் இருந்து உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு திட்டமொன்றை
வகுக்கவோ தவறிவிட்டன. கடந்த ஆண்டில், விலை போகாததன் காரணமாக ஆத்திரமடைந்த விவசாயிகள் தமது
அறுவடைகளை சில பிரதேசங்களில் அழித்துவிட்டனர். உயர்ந்த தற்கொலை வீதம் காணப்படுவது வறுமை மற்றும்
கடன் தொல்லையை எதிர்கொள்கின்ற கிராமப்புற விவசாயிகள் மத்தியிலேயே ஆகும்.
கின்னொருவையைச் சேர்ந்த 60 வயதான ஏ.எம். குணபால
WSWS க்கு
விளக்கியதாவது: "அண்மைய நெல் விலை அதிகரிப்பில் விவசாயிகள் நன்மையடையவில்லை. எங்களுக்கு கிடைக்கின்ற
ஒரே சலுகை, உர மானியமாக இருந்தாலும், ஒரு ஹெக்டயரில் பயிர் செய்து அறுவடை செய்ய விவசாயிகளுக்கு
60,000 ரூபா (550 அமெரிக்க டொலர்) தேவை. எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், றக்டர் மற்றும்
இயந்திர கட்டணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் இருந்து ஹெக்டயருக்கு றக்டர் கட்டணம் 2,500 ரூபா
வரை அதிகரித்துள்ளது.
"ஒரு ஹெக்டயருக்கு 150 கிலோ கிராம் விதை நெல் தேவை. ஒரு கிலோ விதை
நெல் 70 ரூபா வரை அதிகரித்துவிட்டது. மானியத்தோடும் கூட 50 கிலோகிராம் உர மூட்டை ஒன்றின் விலை
3,500 ரூபா. ஒரு ஹெக்டயருக்கு ஒன்பதரை மூட்டைகள் உரம் வேண்டும்."
2006ம் ஆண்டில் இருந்து களை நாசினி மற்றும் கிருமி நாசினிகளின் விலை முறையே
100 வீதத்தாலும் மற்றும் 30 வீதத்தை விட கூடுதலாகவும் அதிகரித்துள்ளன. விவசாயிகளின்படி, ஒரு ஹெக்டயருக்கு
குறைந்தபட்ச அறுவடை 5,000 கிலோகிராம் நெல்லாகும். தற்போதைய சந்தை விலையின் படி அவர்கள் அதை
விற்றால், 140,000-160,000 ரூபாய்களை பெறுவர். ஆயினும், உற்பத்தி செலவுகளை கழித்தால், அவர்களது
வருமானம் ஆறு மாதங்களுக்கு 80,000-100,000 ரூபாவாகும்.
எவ்வாறெனினும், நெல் விலை விவசாயிகளால் தீர்மானக்கப்படுவதோ கட்டுப்படுத்தப்படுவதோ
கிடையாது. மாறாக, பெரும் அரிசி வியாபாரிகளும் அரிசி ஆலை உரிமையாளர்களுமே அதை தீர்மானிக்கின்றனர்.
உற்பத்திச் செலவும் கூட, விவசாயத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும்
கம்பனிகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.
1980களின் நடுப்பகுதியில், சுதந்திர சந்தை கொள்கையின் பாகமாக, அரசாங்கங்கள்
திட்டமிட்டு அரசுக்கு சொந்தமான நெல் விற்பனை சபை, களஞ்சியங்கள் மற்றும் ஆலைகளையும் மூடிவிட்டன. தக்க
விலை கோரும் விவசாயிகளின் போராட்டங்களை எதிர்கொண்ட அரசாங்கம், 2006ல் நெல் கொள்வனவு செய்யும்
நிலையங்களை அமைத்தது. ஆனால இந்த நிலையங்களுக்கு போதுமான நிதி அல்லது களஞ்சிய வசதிகள்
இல்லாததோடு அவை சில உற்பத்திகளை கொள்வனவு செய்யவும் மறுக்கின்றன.
"நாங்கள் சம்பாதித்தது என்ன?
ஐந்து பிள்ளைகளின் தந்தையான டி.எம்.ஐ.ஜி. சுது பண்டா, 73, முன்னர் மத்திய
தேயிலைத் தோட்ட பகுதியான நுவரெலியா மாவட்டத்தில் வலபனையில் வசித்தவராவார். அவருக்கு அங்கு குறிப்பிட்டளவு
விவசாய நிலமும் ஒரு வீடும் உண்டு. 1980களில் அருகில் ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டதால், அவரும் ஏனைய
குடும்பங்களும் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு துப்புரவு செய்யப்படாத பிரதேசமான கின்னொருவையில் தள்ளப்பட்டார்கள்.
"எனது மகன்மாருக்கு விவசாயம் செய்வதற்கு தேவையான நிலம் இல்லை. அவர்கள்
மணம் முடித்து தனிக் குடும்பமாகியதை அடுத்து நான் எனது நிலத்தை அவர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டேன்.
எங்களது சொந்த தேவைகளுக்கு மட்டுமே எங்களால் அரிசி உற்பத்தி செய்ய முடியும். ஏனைய செலவுகளுக்கு நாங்கள்
வேறு கூலித் தொழில்களை செய்ய வேண்டும். ஏனையவர்களை போலவே எனது மகன்மாரும் வேலை தேடி
கொழும்புக்கும் ஏனைய இடங்களுக்கும் செல்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் கட்டுமான பகுதிகளில் உதவியாளர்களாக
இருப்பார்கள்.
"1950கள் மற்றும் 1960களில், விவசாயிகள் ஒப்பீட்டளவில் நன்றாக வாழ்ந்தார்கள்.
அதன் பின்னர், எங்களது வாழ்க்கை நிலைமை கெட்டதில் இருந்து மோசமான நிலைமைக்கு திரும்பியது. தேர்தல்களின்
போது பல அரசியல்வாதிகள் வந்த போலி வாக்குறுதிகளை வழங்குவார்கள். ஆனால் அடுத்த தேர்தல் வரை அவர்களை
காண முடியாது." கடந்த ஆண்டில், 225 கிராம் சவர்க்கார துண்டு 6 ரூபாவால் அதிகரித்த அதேவேளை, சீனி
மற்றும் பால் மாவின் விலை 50 வீதத்தால் அதிகரித்தன. "அது அவ்வாறே தொடர்ந்தது. ஆகவே நெல் விலை
அதிகரிப்பில் இருந்து நாங்கள் பெற்றது என்ன?" என அவர் விவேகமாகக் கேட்டார்.
சுதுபண்டா யூ.என்.பி. க்கும் பின்னர் பதிலீடாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்
வாக்களித்துள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலில் யாருக்கும் வாக்களிப்பதில்லை என அவர் தீர்மானித்தார்.
"இந்தக் கட்சிகளையிட்டு நான் உண்மையில் வெறுப்படைந்துள்ளேன். உண்மையில் எங்களுக்கு மாற்றீடாக
தொழிலாளர்களதும் விவசாயிகளதும் உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி வேண்டும். யுத்தம் அழிவுகரமானது.
இளைஞர்களுக்கு தொழில் இல்லாத காரணத்தால் அவர்கள் இராணுவத்தில் சேர்கின்றனர். எங்களுக்கு சமாதானமே
வேண்டும் யுத்தம் அல்ல," என அவர் தெரிவித்தார்.
இந்த கிராமங்கள் மஹாவலி நீர்தேக்க திட்டத்தில் சி வலயமாகக் கருதப்படுகின்றன.
1980களின் முற்பகுதியில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 26,529 குடும்பங்கள் இந்தப் பிரதேசத்தில்
எந்தவொரு அடிப்படை உட்கட்டமைப்பும் இன்றி குடியேறின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஹெக்டயர் வயல் நிலமும்
0.405 உலர் நிலமும் வழங்கப்பட்டன.
அதில் இருந்து ஜனத்தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. நிலங்கள் புதிய
குடும்பங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான நிலமற்ற குடும்பங்கள் சுற்றியுள்ள பிரதேசங்களில்
குடியேறின. ஆனால் அரச கட்டுப்பாட்டில் உள்ள மஹாவலி அதிகார சபையினால் அவர்கள் அந்த இடங்களில் இருந்து
அகற்ற முடியும். 500க்கும் மேற்பட்ட புதிய குடும்பங்கள் கின்னொருவையிலும் ஹேனானிகலயிலும் வசிக்கின்றன. நிரந்தர
வருமானம் இன்றி அவர்கள் நாள் சம்பளத்திற்கு உழைக்கின்றனர். சிலர் பன்ணை விவசாயிகள், அவர்கள் ஹெக்டருக்கு
1,320 கிலோ அரிசியை நிலச் சொந்தக்காரருக்கு கொடுக்க வேண்டும்.
ஹேனானிகலையைச் சேர்ந்த ஏ.எச். நிஹால் பெரேரா மூன்று பிள்ளைகளை உடைய
ஒரு பன்ணை விவசாயியாவார். அவர் இந்த போகத்தில் 2 ஹெக்டர்களை அறுவடை செய்து 7,000 கிலோகிராம்
நெல்லையே உற்பத்தி செய்திருந்தார். இதில் அவர் 2,640 கிலோவை நில உரிமையாளருக்கு கொடுக்கவும்
வேண்டும். பயிர்ச்செய்கையில் குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையில், அவர் சில்லறை தொழில்களை செய்கிறார்.
விலைவாசி உயர்வின் காரணமாக தனது குடும்பம் உணவு உட்கொள்வதை குறைத்துக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"2004 பொதுத் தேர்தலில் எங்களுக்கு சேவை செய்வார்கள் என நினைத்து நான்
மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) வாக்களித்தேன். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. 2005
ஜனாதிபதி தேர்தலில் நான் மஹிந்த இராஜபக்ஷவுக்கு வாக்களித்தேன். அவர் கடந்த ஆண்டு கிழக்கின் விடுதலை (புலிகளிடமிருந்து)
பற்றியும் மாகாணத்தின் புத்துயிர்ப்பு பற்றியும் பெருமை பேசிக்கொண்டார். நாங்கள் எந்தவொரு புதிய மாற்றத்தையும்
இங்கு காணவில்லை. குடி தண்ணீர் வழங்குவதற்கான திட்டமொன்றுக்குக் கூட அதிகாரிகள் ஒவ்வொரு குடும்பத்திடமும்
10,000 ரூபா கேட்கின்றனர். நாங்கள் எதிர்த்த பின்னர், அந்த தொகை 2,500 ரூபாவாக குறைந்தது. ஆனால்
அதைக்கூட எப்படி நாங்கள் செலுத்துவது.
யூ. குசுமாவதி ஹேனானிகலயைச் சேர்ந்த இளம் தாயாவார். உள்ளூரில்
பொருத்தமான தொழில் ஒன்றை தேடிக்கொள்ள முடியாத நிலையில், அவளது கனவர் கொழும்புக்கு வந்து
கட்டுமான தொழிலில் ஈடுபடுகின்றார்.
"எங்களுக்கு நிலம் இல்லை. எனது அப்பா வாடகை விவசாயிகளிடம் ஒரு
போகத்திற்கு 1,320 கிலோ அடிப்படையில் நிலத்தை கொடுத்துவிட்டார். அவரால் அதில் பயிர் செய்ய
முடியாது. எங்களது இரு குடும்பங்களும் நடவடிக்கைகளை பங்குபோட்டுக்கொள்வோம். எனது கனவர் இரண்டு
மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வரும் போது 10,000 ரூபா கொண்டுவருவார். அது எங்களுக்கு
போதுமானதல்ல. எங்களுக்கு மாதத்திற்கு 140 ரூபா சமுர்தி (நலன்புரி நிதி) கிடைக்கின்றது. அரிசி விலை
காரணமாக என்னால் அதில் இரண்டு கிலோ அரிசி மட்டுமே வாங்க முடியும். எப்போதாவதுதான் நாங்கள்
மரக்கறி மற்றும் கருவாடு வாங்குவோம். பால் மா பாவிப்பதில்லை. நாங்கள் பெரும்பாலும் நீர் கால்வாய்களில்
அல்லது எங்களது நிலத்தில் சேகரிக்கப்பட்ட கீரையுடன் சோறு சாப்பிடுவோம். சப்பாத்து விலை காரணமாக
எனது பிள்ளைகள் சப்பாத்து அணிவதில்லை. அவர்கள் இறப்பர் செருப்புகளை அணிந்தே பாடசாலை செல்கின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் வேலையின்மை கடுமையாக உள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட
தேர்வுகளே உள்ளதால் பல இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேரத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் குறைந்த சம்பள
தொழில்களை ஆடைத்தொழிற்சாலைகளில் செய்கின்ற அதே வேளை, ஏனையோர் நாள் சம்பளத்திற்கு மணல்
சேகரிப்பது போன்ற தற்காலிக வேலைகளை செய்கின்றனர்.
உள்ளூர் பாடசாலைகளின் நிலைமை மோசமாக உள்ளது. லிஹினியாகமவைச் சேர்ந்த
ஒரு ஆசிரியர் விளக்கியதாவது: "எங்களது பள்ளியில் ஆசிரியர் பற்றாகுறை 30. எங்களிடம் 13 நிரந்தர
ஆசிரியர்களும் 11 தொண்டர் ஆசிரியர்களும் மற்றும் பயிற்சி பெறும் ஆசிரியர்களுமே உள்ளனர். இந்தப்
பிரதேசத்தில் பெரும்பாலான பாடசாலைகளில ஆங்கிலம், நுண்கலை, கணிதம் மற்றும் விளையாட்டு போன்ற
துறைகளுக்கு ஆசிரியர்கள் கிடையாது. ஒரு வகுப்புக்கான நிரந்தர மாணவர் எண்ணிக்கை 22 ஆக இருந்த போதிலும்
இங்கு ஒரு வகுப்பில் 40-45 மாணவர்கள் உள்ளனர். தரம் 6 மற்றும் தரம் 7 ல் 50 மாணவர்களும் உள்ளனர்.
"லிஹினியாகம பாடசாலையில் 650 மாணவர்கள் இருந்த போதிலும், 500 மாணவர்களுக்கே
மேசை நாற்காலிகள் உள்ளன. பாடசாலை ஆய்வுக்கூடத்திலும் மனையியல் அறைகளிலும் உள்ள மேசை மற்றும் நாற்காலிகளை
எடுத்து பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளோம். எங்களுக்கு வாசிகசாலை ஒன்று இருந்த போதிலும் போதுமானளவு புத்தகங்களோ
தளபாடங்களோ கிடையாது. ஒரே ஒரு கணினி உள்ளது ஆனால் அதற்கு ஆசிரியர் இல்லை. பயிற்சி புத்தங்கள் பற்றாக்குறையும்
நிலவுகிறது."
ஒரு தந்தையும் விவசாயியுமான டி.எம். கருணாரட்ன தெரிவித்ததாவது: "ஹபராவ
பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் இருந்த போதிலும் அங்கு குடி தண்ணீர் மற்றும் மலசல கூட வசதிகள் கிடையாது.
40 ஆண்டுகள் பழைய கிணறு ஒன்று இப்போது பாழாய் போயுள்ளது. மாணவர்கள் குடி தண்ணீர் வீட்டில் இருந்தே
கொண்டுவர வேண்டும். சகல மலசல கூடங்களும் நிரம்பிப்போயுள்ளன. பாடசாலையை பராமரிப்பதற்கு நிதி
வழங்கப்படவில்லை என அதிபர் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்."
உயர் தரம் கற்பதற்காக கின்னொருவ மற்றும் ஹேனானிகலையைச் சேர்ந்த
மாணவர்கள் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டிருந்தாலும் தக்க போக்குவரத்து சேவை இல்லை.
சுகாதார சேவையும் அற்பமாகவே காணப்படுகிறது. 15 கிலோமீட்டர் தூரத்தில்
மெதகம மற்றும் ஹபராவையில் சிறிய அரசாங்க மருந்தகங்கள் உள்ளன. ஒரு நோயாளியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு
செல்ல மக்கள் இன்னும் கூடுதலாக பயணிக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் வாகனம் ஒன்றை வாடகைக்கு
எடுத்தால் 700 முதல் 1,000 ரூபா வரை செலவாகும். இந்தத் தொகையை பெரும்பாலானவர்களால் தாங்க
முடியாது.
"அவர்களது சொந்தக் காலில் நிற்க" வைப்பதற்கு பதிலாக, இராஜபக்ஷ
அரசாங்கம் கிராமப்புற வாழ்க்கையை மேலும் தாங்க முடியாததாக்கியுள்ளது. ஏனைய உழைக்கும் மக்களைப்
போலவே, விவசாயிகளும் யுத்தத்தின் சுமைகளை தாங்கத் தள்ளப்பட்டுள்ளனர். யுத்தம் உயிர்களை பலியெடுப்பது
மட்டுமன்றி விலைவாசியை அதிகரிக்கச் செய்வதோடு பாதுகாப்புச் செலவுகளுக்காக அடிப்படை சேவைகளின் நிதியை
வெட்டிக்குறைப்பதையும் விளைவாக்குகிறது. |