WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: Second bomb blast in Colombo in nine days
இலங்கை: கொழும்பில் ஒன்பது நாட்களுக்குள் இரண்டாவது குண்டு வெடிப்பு
By K. Ratnayake
6 June 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இலங்கையின் தலைநகர் கொழும்பில் புதன் கிழமை காலை சுறுசுறுப்பான நேரத்தில்
நடந்த குண்டுத் தாக்குதலில் 27 பயணிகள் காயமடைந்தனர். தெஹிவலைக்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட
குண்டொன்று, கடந்து சென்ற ரயிலை இலக்குவைத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுடன் நகரின் மத்திய பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.
இந்த புதிய தாக்குதலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் தான் தெஹிவளை ரயில்
நிலையத்தில் கூட்டம் நிறைந்த ரயிலில் குண்டு ஒன்று வெடித்தது. அதில் 9 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 80
பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பிரதானமாக வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த
தொழிலாளர்களாவர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடனான
யுத்தத்திற்குள் நாட்டை மீண்டும் மூழ்கடித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ரயில்கள், பஸ்கள்
மற்றும் பொது இடங்களில் அடிக்கடி குண்டுகள் வெடிப்பது அதிகரித்து வருகின்றது.
புதன் கிழமை குண்டுவெடிப்பு தெஹிவலை ரயில் நிலையத்தில் இருந்து பல நூறு
மீட்டர்கள் தூரத்தில் நடந்துள்ளது. குண்டு ரயிலின் நடுப் பகுதியை தாக்கியுள்ளது. என்ஜினும் இரண்டு பெட்டிகளும்
கடந்திருந்த நிலையில் அவற்றுக்குப் பின்னால் மேலும் ஆறு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. கூட்டம் நிறைந்த
ரயிலில் கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் அருகில் இருந்தவர்களும் வெடிப்பின் வேகத்தில் அகப்பட்டனர். கால்களும்
கைகளும் சேதமடைந்து காது கேட்கும் நிலை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் களுபோவலையில் உள்ள அரசாங்க
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இராணுவத்தினரும் பொலிசாரும் புலிகள் மீது உடனடியாக குற்றஞ்சாட்டினர்.
இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, "இதைச் செய்தது புலிகளே, புலிகளோடு சம்பந்தப்பட்ட ஒரு
நபரை நாங்கள் கைது செய்துள்ளோம்," என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எவ்வாறெனினும், இத்தகைய
அறிக்கைகளுக்கு நம்பகத் தன்மை குறைவு. நாணயக்கார இதற்கான ஆதாரங்களை காட்டாததோடு அப்போதுதான்
விசாரணைகள் ஆரம்பித்திருந்த நிலையில் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
புலிகள் அப்பாவி பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தும் இயலுமை
உள்ளவர்கள் என்பது நிச்சயம். இராணுவ நெருக்கடியை எதிர்கொள்ளும் போது இத்தகைய தாக்குதல்களை நடத்தும்
25 ஆண்டுகால சாதனை புலிகளுக்கு உள்ளது. அரசாங்கம் தமிழ் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக முழு "சிங்கள
மக்களையும்" குற்றஞ்சாட்டும் புலிகளின் தமிழ் பிரிவினைவாத இனவாத கருத்துப் போக்கானது, கொழும்பில் உள்ள
அரசியல் ஸ்தாபனத்தின் சிங்களப் பேரினவாதத்தைப் போல் நச்சுத்தனமானதாகும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை
அடுத்தே இந்த இரு ரயில் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான
மாங்குளம் நோக்கி பயணித்துகொண்டிருந்த வாகனம் ஒன்றை இலக்குவைத்து தாக்கியமைக்கு இராணுவத்தின் ஆழ
ஊடுருவும் படையணியே பொறுப்பு என செவ்வாய் கிழமை புலிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த தாக்குதலில் ஆறு
பேர் கொல்லப்பட்டனர். புதன் கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல் பழிவாங்கல் நடவடிக்கையாக
இருக்கலாம்.
ஆயினும், தெஹிவலை ரயில் நிலையத்தில் முதலில் நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட
பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு புலிகள் பொறுப்பேற்க மறுத்துள்ளனர். மே 30ம் திகதி தமிழ்நெட்
இணையத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில், புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி. நடேசன்
தெரிவித்ததாவது: "இலங்கையில் பொது மக்கள் மீதான தாக்குதல்களுக்கு புலிகள் பொறுப்பாளிகள் என்பதை
உறுதியாக மறுக்கின்றோம். சிங்கள மக்கள் மீது எங்களுக்கு பகைமை எண்ணம் இல்லை."
நடேசன் சாதாரணமாக பொய் சொல்லக்கூடும். ஆனால், கடந்த காலத்தில்
தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை விடுவதற்கு பதிலாக புலிகள் அமைதியாகவே இருந்துள்ளனர். எல்லாவற்றுக்கும்
மேலாக, கொழும்பில் உள்ள அதிகாரிகளால் புதிய குண்டுத் தாக்குதல் பற்றி முரண்பாடான தரவுகள் வெளிவருகின்ற
நிலைமையின் மத்தியிலேயே நடேசனின் மறுப்பும் வெளிவந்துள்ளது.
பொலிஸ் பேச்சாளர் ரன்சித் குணசேகர, கண்கண்ட சாட்சியங்கள் இருப்பதாக
நேற்று அரசுக்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார். "விழிப்புடன் நடந்துசென்ற
இரு பொதுமக்கள், ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை வைத்துக்கொண்டு அதை ரயில் தண்டவாளத்தில்
வைக்க முயற்சித்துக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். அவர்கள் சத்தமிட்ட போது, அந்த நபர் குண்டையும்
ரிமோட் கன்றோலையும் ரயில் தண்டவாளத்தின் மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்," என அவர் தெரிவித்தார்.
இதே கட்டுரையில், அரசாங்க ஆய்வுத் திணைக்களத்தின் துணை தலைவர்,
டபிள்யு.டி.ஜி.எஸ். குணதிலக, 2.5 கிலோகிராம் குண்டு ரிமோட் கன்றோலால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என
வலியுறுத்தினார். இதில் தெளிவான கேள்விகள் எழுகின்றன: "சந்தேகத்திற்கிடமான பார்சலையும்" ரிமோட்
கன்றோலையும் அந்த நபர் விட்டுவிட்டு ஓடியிருந்தால், குண்டு வெடிக்க வைக்கப்பட்டது எவ்வாறு? கட்டுரையை
எழுதியவர் இந்த முரண்பாட்டை தெளிவுபடுத்துவது பற்றி கவலைப்படவில்லை.
புதன் கிழமை, பொலிசார் சந்தேகநபரின் பெயரை அறிவித்ததோடு அவருக்கு
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் விபரங்களையும் வழங்கினர். அவர் ஜதீசன்
பாலசுப்பிரமணியம் என்ற தமிழராவார். நேற்று அவரை கொழும்பில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர்கள்
தூரத்தில் உள்ள வடக்கு நகரான வவுனியாவில் சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து கைதுசெய்ததாக பொலிசார்
அறிவித்தனர். பல பொலிஸ் மற்றும் இராணுவ சோதனைச் சாவடிகளையும் கடந்து, இலங்கையின் சீர்கேடான
போக்குவரத்தின் மத்தியில் அவ்வளவு தூரம் அவரால் எப்படி பயணிக்க முடிந்தது என்பதுபற்றியும்
தெளிவுபடுத்தப்படவில்லை.
இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
பாலசுப்பிரமணியம் யாரோ ஒருவரின் கட்டளையின் கீழ் செயற்பட்டதாக சொல்லப்படுகிறது. வெடிப்புச் சம்பவம்
இடம்பெற்ற இடத்தில் இருந்து ஓடிய ஒரு நபரை விரட்டி அடித்தாக கூறும் மொஹமட் கபூர் என்ற முச்சக்கர வண்டி
சாரதி ஒருவரை கண்டகண்ட சாட்சியாக பொலிசார் மேற்கோள் காட்டுகின்றனர். அந்த நபர் பொதி ஒன்றை
கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ள போதிலும், அந்த நபர் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கான
எந்தவொரு ஆதாரங்களும பொலிசாரால் வழங்கப்படவில்லை.
பாதுகாப்பு படையினர் வழங்கும் விபரங்களை ஏற்றுக்கொள்வது பற்றி
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதற்கான காரணங்கள் உள்ளன. தற்போது நடைபெறும் யுத்தத்தை
நியாயப்படுத்தவும் பீதி மற்றும் அச்சுறுத்தல் நிலைமை ஒன்றை உருவாக்கவும் இந்தக் குண்டுத் தாக்குதலை ஒழுங்கு
செய்வதில் இராணுவம் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அரசாங்கத்திற்கு சார்பான பலவித துணைப்படை
குழுக்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதையிட்டு கவலைப்படாத தலைவர்களின் குற்றவியல்
கும்பல்களுடன் தொடர்புகளை பேணுவதில் குறிப்பாக இராணுவப் புலனாய்வுத் துறை பேர் போனதாகும்.
குண்டுத் தாக்குதல்களை யார் முன்னெடுத்திருந்தாலும், தமிழர் விரோத உணர்வை
கிளறிவிடவும் மற்றும் யுத்தம், ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும்
மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமைகளால் அரசாங்கத்தை பொதுமக்கள் வெறுப்பதில் இருந்து கவனத்தை
திசை திருப்புவதன் பேரிலும் இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தத் தாக்குதல்களை பயன்படுத்திக்கொள்ளும். ஜூன்
1ம் தகதி, அரசாங்கம் ரயில் கட்டணத்தை கிட்டத்தட்ட 90 வீதத்தினால் உயர்த்தியுள்ளது. கடந்த வாரம்,
எரிபொருட்களின் விலைகள் 25 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணம் 27 வீதம் உயர்ந்துள்ளது.
அரசாங்கம் வேண்டுமென்றே சந்தேகம் மற்றும் பீதியான சூழல் ஒன்றை
உருவாக்கியுள்ளது. மக்களை விழிப்புடன் இருக்குமாறு இடைவிடாமல் ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பயணப்
பொதிகள் வைக்கும் தட்டுக்களில் பொதிகளை வைப்பதில் இருந்து பயணிகள் தடுக்கப்பட்டுள்ளனர். மற்றும்
ஆசனங்களில் இருக்கும் பயணிகள் அடுத்தவர்களின் பொதிகளை பாதுகாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிசாரும் இராணுவத்தினரும் பஸ்களில் ஏறி "சந்தேகத்திற்கிடமானவர்களை" விசாரிக்கின்றனர். பொலிஸ்
சோதனை நிலையங்கள் பொதுமக்களின் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் தமது தேடுதல்
நடவடிக்கை வலையை விரித்துள்ளன. இந்த சகல நடவடிக்கைகளதும் பிரதான இலக்கு, பாதுகாப்புப் படைகளால்
பொதுவில் எதிரிகளாக நடத்தப்படும் தமிழர்களே ஆவர்.
அரசாங்கம் ஊடகங்கள் மீதும் பாய்ந்து விழுகின்றது. புதன் கிழமை வெளியான
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்று, இராணுவ உயர் மட்டத்தினரை விமர்சிப்பது "ஊடகத் துரோகம்" என
கண்டனம் செய்துள்ளதோடு "நாட்டுக்கு எதிரான இத்தகைய ஊடகவியல் துரோகத்தை நிறுத்துவதற்கு தேவையான
அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக" எச்சரித்துள்ளது. விமர்சகர்களை "துரோகிகள்" என குற்றஞ்சாட்டும்
அந்த அறிக்கை, "அத்தகைய துரோகங்களை செய்பவர்களை புலிகளுடன் சேர்த்த அடையாளங் காண வேண்டும்,"
என பிரகடனம் செய்கின்றது.
இந்தப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், யுத்தம் மற்றும் அதன்
தாக்கத்துக்காக பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தத் தாக்குதல்கள் ரயிலில்
பயணிப்பது தொடர்பாக பீதியை ஏற்படுத்தியுள்ளது என ஒரு பயணி எமது வலைத் தளத்திற்குத் தெரிவித்தார். "எனது
உறுப்புக்களை அல்லது உயிரை இழந்துவிடுவேனோ என்ற பயம் உள்ளது" என தெரிவித்த அவர், பின்னர் 2005ல்
ஜனாதிபதி இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வாழ்க்கை சிரமமானதாக ஆகியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
"பொருட்களின் விலைகள் இரு மடங்காக, மூன்று மடங்காக அல்லது அதையும் விட
அதிகரித்துள்ளன. நேற்று முதல் [புதன் கிழமை], ரயில் பருவகால சீட்டு ஏறத்தாழ மும்மடங்காக அதிகரித்துள்ளது.
அண்மையில் நாங்கள் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கோரினோம், ஆனால் யுத்தத்தின் காரணமாக அதை செய்ய
முடியாது என இராஜபக்ஷ எங்களுக்குத் தெரிவித்தார். யுத்தம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சந்தேக
உணர்வை தூண்டிவிட்டுள்ளது மட்டுமன்றி, சிங்களவர்களுக்கு மத்தியிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது."
ஒரு ஆஸ்பத்திரி ஊழியர் விளக்கியதாவது: "இந்தக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட
தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைவரும் போன்று அப்பாவிகள் ஆவர். புலிகள்
எத்தனை தடவை தாக்கினாலும் யுத்த முயற்சிகள் நிறுத்தப்படப் போவதில்லை என அண்மையில் பிரதமர் ரட்னசிறி
விக்கிரமநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கின்ற நிலையில், இந்த அப்பாவி உயிர்களுக்கு
அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்."
குறிப்பாக யுத்தம் தொடர்பான எதிர்ப்பின் காரணமாக, அரசாங்கம் இனவாத
பகைமைகளை மேலும் கிளறிவிட்டு உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை உக்கிரமாக்குகின்றது. இந்த
சூழ்நிலையில், இந்தக் குண்டுத் தாக்குதல் மிகவும் வசதியான விலக்களிப்பை வழங்குகிறது. |