World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Bomb blast in Sri Lanka targets rail commuters

இலங்கையில் ரயில் பயணிகளை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்

By Sarath Kumara
2 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை தலைநகர் கொழும்பில் தெகிவளையில் கடந்த திங்கட்கிழமை பயணிகள் நிறைந்த ரயிலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 9 பயணிகள் கொல்லப்பட்டதோடு மேலும் 80 பேர் காயமடைந்தனர். சுமார் மாலை 5.30 மணியளவில் நடந்த இந்தக் குண்டு வெடிப்பு தொழில் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சாதாரண உழைக்கும் மக்களை வேண்டுமென்றே இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு யார் பொறுப்பாளியாக இருந்தாலும், இந்தக் குண்டுத் தாக்குதல் நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடைபெறுகின்ற நிலையில் இனவாத பதட்ட நிலைமைகளை தூண்டிவிடுவதை இலக்காகக் கொண்டு செய்யப்பட்ட குற்றவியல் நடவடிக்கையாகும்.

கொழும்பு அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டினாலும், ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை. ஐந்தாவது ரயில் பெட்டியில் தலைக்கு மேல் உள்ள பயணிகளின் பொதிகள் வைக்கும் தட்டில் 1.5 கிலோகிராம் குண்டொன்று வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். அடுத்த நாள், தெகிவளையில் வசிக்கும் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிசார் அறிவித்தனர்.

எந்தவொரு அறிக்கையையும் வெளியிடாத போதிலும், இந்தத் தாக்குதலை நிச்சயமாக புலிகளே நடத்தியிருப்பதற்கான சாத்தியம் உள்ளதோடு இதற்கு முன்னர் புலிகள் தீவின் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கில் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்துள்ளனர். கடந்த பெப்பிரவரியில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தற்கொலைதாரி ஒருவர் குண்டொன்றை வெடிக்கச் செய்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். 1996 ஜூலையில், தெஹிவளைக்கு அருகில் ரயிலொன்றில் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 56 பேருக்கும் மேல் கொல்லப்பட்டதோடு சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

மே 23ம் திகதி இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிகளில் ஒன்று குண்டொன்றை வெடிக்கச் செய்ததில் வேன் ஒன்று சேதத்திற்குள்ளாகியதோடு 12 வயதுக்கு குறைந்த நான்கு சிறுவர்கள் உட்பட 16 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த குண்டுத் தாக்குதல் கிளிநொச்சிக்கு நெருக்கமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இதற்கு இராணுவம் பொறுப்பேற்க மறுத்தாலும், அதன் இரகசிய ஊடுருவும் படைகள் மற்றும் அதனுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைகள் இதற்குரிய சந்தேகநபர்கள் போல் தெரிகிறது.

இதற்குப் பழிவாங்குவதற்காக மே 26 தெகிவளை ரயில் நிலையத் தாக்குதலை புலிகள் நடத்தியிருக்கக் கூடும். கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தைப் போலவே, புலிகளும் இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்கள் அரசாங்கமும் இராணுவமும் முன்னெடுக்கும் பிற்போக்கு யுத்தத்திற்காக "சிங்கள மக்களை" குற்றஞ்சாட்டுகிறார்கள். அப்பாவி சிங்கள பொதுமக்களை இலக்குவைப்பது, இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்குவதற்கு மட்டுமே சேவை செய்யும் அதவேளை, நேரடியாக அரசாங்கத்தின் தேவைகளுக்காக பயன்படும்.

எவ்வாறெனினும், இராணுவமோ அல்லது அதனுடன் இணைந்து செயற்படும் துணைப்படைகளோ தெகிவளை தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தள்ளிவைத்துவிட முடியாது. 2006ல் தீவை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம், வளர்ச்சிகண்டுவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. வடக்கில் இராணுவ நடவடிக்கை முட்டுச் சந்தில் நிற்பதோடு ஆட்டங்கண்டுள்ள ஆளும் கூட்டணியானது யுத்தம் மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கம் சம்பந்தமாக வளர்ச்சிகண்டுவரும் அதிருப்தியை எதிர்கொண்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை, எரிபொருள் விலை மற்றும் ஏனைய அடிப்படை பொருட்களின் விலையும் ராக்கட் வேகத்தில் உயர்ந்துள்ளன.

இராஜபக்ஷ அரசாங்கம், ஊடகங்கள், வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் மத்தியில் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதன் பேரில் ஜனநாயக விரோத வழிமுறைகளை நாடுவது அதிகரித்து வருகின்றது. விசாரணையின்றி தடுத்து வைப்பது உட்பட ஜனாதிபதி, இராணுவம் மற்றும் பொலிசுக்கும் அசாதாரணமான அதிகாரங்களை வழங்கும் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது. அரசாங்க சார்பு கொலைப் படைகளால் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.

புலிகள் மீது குற்றஞ்சாட்டுவதோடு மேலும் இனவாத பகைமையை கிளறிவிடுவதன் பேரில் இராணுவம் கொழும்பில் குண்டுத்தாக்குதல்களை நடத்துவது சாத்தியமானதாகும். 2005 நவம்பரில் இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாக, இராணுவமும் அதனோடு சேர்ந்த துணைப்படைகளும், புலிகளைப் பலவீனப்படுத்தி அவர்களை பதில் தாக்குதல் நடத்தவைப்பதை இலக்காகக் கொண்ட ஆத்திரமூட்டும் மற்றும் படுகொலை நிழல் யுத்தத்தை முன்னெடுத்தனர். இது 2006 ஜூலையில் வெளிப்படையான தாக்குதல்களை முன்னெடுப்பதற்கும் ஜனவரியில் 2002ம் ஆண்டு யுத்த நிறுத்தத்தை கிழித்தெறியவும் களம் அமைத்துக் கொடுத்தது.

இழிந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இராணுவ புலனாய்வுத் துறை பேர் போனதாகும். கடந்த ஆண்டு பெப்பிரவரியில், முன்னெப்போதும் அறிந்திராத புரட்சிகர விடுதலை அமைப்பின் தலைவர்களை இராணுவம் தடுத்துவைத்திருந்தது. விசாரணைகளின் போது, அந்தக் கைதிகள் புலிகளிடம் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் பெற்றதோடு தெற்கில் நடந்த பல குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. அரசாங்கமும் இராணுவமும் அவர்களை "சிங்களப் புலிகள்" என கண்டனம் செய்ததோடு இதை பிரசித்திபடுத்துவதன் மூலம் தம்மால் ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் இதனை சுரண்டிக்கொண்டது.

சன்டே லீடர் மற்றும் ராவய பத்திரிகைகள் இந்த நடவடிக்கைகளில் இராணுவப் புலனாய்வுத் துறையும் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியதை அடுத்து இந்த பிரச்சாரத் தாக்குதல் எதிர்த்தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன் ஏஜன்டுகளில் ஒருவரான "ஷாமல்" இந்த புரட்சிகர விடுதலை அமைப்பினுள் ஊடுருவி, புலிகளின் பயிற்சியில் பங்கேற்றிருந்ததோடு அதன் ஆயுதங்களுக்கு பொறுப்பாளியாகவும் இருந்ததுடன் குறைந்த பட்சம் ஒரு குண்டுத் தாக்குதலிலாவது பங்கேற்றுள்ளார். ஷாமலுக்கு உயர்மட்ட தொடர்புகள் இருந்ததோடு, அவர் சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்நாள் பாராளுமன்ற குழு தலைவரான விமல் வீரவன்சவால், ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளார்.

15 மாதங்கள் கடந்த பின்னரும், ரயில் சேவையில் தொழில் செய்தவர்களில் சிலரான புரட்சிகர விடுதலை அமைப்பின் உறுப்பினர்கள் என சொல்லப்படுபவர்கள், இன்னமும் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கமானது இந்தக் கைது நடவடிக்கைகளை, ரயில் சேவை தொழிலாளர்களை மட்டுமன்றி சம்பள உயர்வு கோரும் மற்றும் தனியார்மயமாக்கத் திட்டங்களை எதிர்க்கும் ஏனைய தொழிலாளர் வர்க்கத் தட்டினரையும் அச்சுறுத்தி அடக்குவதற்காகப் பயன்படுத்திக்கொண்டது.

இராஜபக்ஷ அரசாங்கமும் இராணுவமும் சட்டத்திற்கும் மேலாக செயற்படுவது அதிகரித்து வருகின்றது. கடந்த இரு ஆண்டுகளாக எதிரிகள் மற்றும் புலிகளின் ஆதரவாளர்கள் என சொல்லப்படுபவர்களுக்கு எதிராக இடம்பெறும் பல கொலைகள், காணாமல் ஆக்குதல் மற்றும் ஏனைய முறையிலான குண்டர் நடவடிக்கைகள் தொடர்பாக ஏறத்தாழ எவருமே குற்றவாளிகள் ஆக்கப்படவில்லை. மே 22ம் திகதி, நேஷன் பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளரான கீத் நொயர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் யுத்தத்தைப் பற்றி இனி எதுவும் எழுதக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் அவரது வீட்டுக்கு அருகில் வீசப்பட்டுக் கிடந்தார். இராஜபக்ஷ விசாரணையை முடுக்கிவிட்டிருப்பதாக அறிவித்த போதிலும், இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினரின் தொடர்பு பற்றி தக்க விசாரணை நடக்காது என்பதை ஒருவர் முன்கூட்டியே தெரிவிக்க முடியும்.

கடந்த வியாழக் கிழமை, இராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தி வெளியீடுகள் பற்றி திட்டித் தீர்ப்பதற்காக, உழைக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களான போதல ஜயந்த, சனத் பாலசூரிய ஆகியோர் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷவினால் அழைக்கப்பட்டிருந்தார்கள். அரசாங்கத்தையும் யுத்தத்தையும் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதற்கு எதிராக அவர் அவர்களை கூர்மையாக எச்சரித்திருந்தார். பல ஊடக செய்திகளின் படி, அந்தப் பத்திரிகையாளர்கள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை "உயர்வாய் மதிக்கும்" நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என பாதுகாப்புச் செயலாளர் அச்சுறுத்தியிருந்தார்.

அரசாங்கம் தெஹிவளை குண்டு வெடிப்பை யுத்தத்தை நியாயப்படுத்த பற்றிக்கொண்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் குழுவுக்கு மத்தியில் பேசிய ஜனாதிபதி இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "புலிகளின் வெறித்தனமான தாக்குதல்களின் காரணமாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் தணிவு இருக்கும் என எவரும் எதிர்பார்ப்பு கொண்டிருக்கக் கூடாது". அவர், இசிவு நோய்க் கோளாறுக்கு ஆளானவரின் தொனியில் மேலும் தெரிவித்ததாவது: "பொதுமக்களை விட்டுவிட்டு என்னை இலக்கு வையுங்கள். ஏனெனில் நானே புலிகளுக்கு நேர்ந்துள்ளவற்றுக்கு பொறுப்பாளி."

இந்தக் குண்டுத் தாக்குதலை யார் ஏற்பாடு செய்திருந்தாலும், வாழ்க்கைத் தரம் சீரழிவது தொடர்பாக பரந்த ஆத்திரத்தை எதிர்கொண்டுள்ள அரசாங்கத்திற்கு ஒரு பயனுள்ள அரசியல் திசை திருப்பலுக்கு அது பயன்படும். கடந்த வாரம்தான், பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை விலை 25 வீதத்தால் அதிகரித்தது. இதனால் போக்குவரத்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்குமான செலவு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புகளுக்கு சர்வதேச விலை அதிகரிப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ள அதே வேளை, பிரமாண்டமான இராணுவச் செலவு பணவீக்கத்தை குவியச் செய்துள்ளது. கடந்த ஏப்பிரலில் பணவீக்கம் சுமார் 40 வீதத்தை எட்டியது.