World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Large majority vote against deal following Berlin transport strike

பேர்லின் போக்குவரத்துத்துறை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மிகப் பெரும்பான்மையினர் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்

By Ulrich Rippert
28 May 2008

Back to screen version

Verdi தொழிற்சங்கம் இணைந்து உருவாக்கிய உடன்படிக்கையின் மீது பேர்லின் போக்குவரத்து தொழிலாளர்கள் காட்டிய பிரதிபலிப்பு இதைவிட தெளிவாக இருக்கமுடியாது. சுமார் மூன்றில் இரண்டு பங்கு Verdi உறுப்பினர்கள் சம்பள ஒப்பந்தத்தை நிராகரித்தார்கள். வாக்களித்தவர்களில் 34.3 சதவீதத்தினர் மட்டுமே இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

இருந்த போதினும், வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய Verdi தரப்பு பேச்சுவார்த்தையாளர் பிரான்க் பேஸ்லெர் கூறுகையில், ஒப்பந்தம் ஏற்றக் கொள்ளப்பட்டது என்பதையே இந்த வாக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது மற்றும் ஜேர்மன் தலைநகரில் பல மாதங்களாக இருந்த போராட்டமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொழிற்சங்க விதிகளின்படி, தொழிற்சங்கத்தால் முன்வைக்கப்பட்ட உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள தொழிற்சங்க உறுப்பினர்களின் 25 சதவீத சிறுபான்மை வாக்குகள் மட்டுமே போதுமானதாகும். இந்த அளவு தெளிவாக தாண்டப்பட்டிருக்கிறது." என பேஸ்லெர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Verdi சங்க அதிகாரிகள் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளை இரக்கமற்ற முறையில் நிராகரித்திருப்பது தொழிற்சங்கம் சீரழிந்திருப்பதன் அளவையே எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர் போராட்டத்திற்கு மத்தியில், தொழிற்சங்கத்தின் அதிகாரத்துவம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், தொழில்வழங்குனராக உள்ள சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சி கூட்டணியின் நகர மேல்சபைக்கும் இடையிலான எவ்வித முரண்பாட்டையும் தவிர்க்குமாறு கேட்டிருந்தது. போராட்டக்காரர்களுக்கு எதிராக தொழிற்சங்கம் சூழ்ச்சி உபாயங்களை கையாண்டதோடல்லாமல், ஒரு முக்கிய கட்டத்தில் போராட்டத்தையும் உடைத்தது மட்டுமல்லாது அதன் ஆரம்ப கோரிக்கைகளையும் கைவிட்டது.

பேர்லின் போக்குவரத்து தொழிலாளர்களால் இதுவரை ஒருபோதும் நடத்தப்படாத இந்த நீண்டகால தொழிலாளர் போராட்டம் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, அதாவது: Verdi இன் முன்நோக்கின் அடித்தளத்தில் கூலிகளை மற்றும் வேலை நிலைமைகளைக் பாதுகாப்பது என்பது சாத்தியமற்றது என்பதாகும். எட்டு வார போராட்டத்திற்கு பின்னர், 3 சதவீதத்திற்கும் மேலாக பணவீக்க விகிதம் உயர்ந்திருக்கும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் நிகர வருமானத்தில் ஒரு கடுமையான வெட்டை ஏற்படுத்தக் கூடிய ஓர் ஒப்பந்தத்தில் சங்கம் கையெழுத்திட்டது.

மொத்த தொழிலாளர்களில் சுமார் 85 சதவீதமுள்ள நீண்டகால தொழிலாளர்கள், தற்போதைய ஆண்டிற்காக 2.7 சதவீத கூலி உயர்வை பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர்கள் 1 சதவீத உயர்வை பெறுவார்கள், அதாவது, ஓர் ஆண்டிற்கென மதிப்பிட்டால் 0.4 சதவீதம் மட்டுமே உயர்வை பெறுவார்கள். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தகாலத்தின் அடிப்படையில், வருமானத்தின் ஆண்டு உயர்வு 1.6 சதவீதத்திற்கும் கீழாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் புதிதாக சேர்ந்தவர்களின் கூலி அளவுகள் சுமார் 30 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் சற்றே அதிகமாக பெறுவார்கள்.

ஒரு வார பணிக்கால மேலதிக நேரம் (36,5 மணித்தியாலம்) அவர்களது கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை எனப்படுவது ஒப்பந்தத்திலுள்ள ஒரு கூடுதல் விடயமாகும். இது உடன்படிக்கையை அழகுப்படுத்த செய்யப்பட்ட ஒரு போலி நடவடிக்கையாகும். உண்மையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான இந்த ஒப்பந்தத்தின் பலனான ஒரு நிகர சம்பள குறைப்பு என்ற உண்மையை அது எவ்வகையிலும் மாற்றப் போவதில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கூலிகள் மற்றும் வேலை நிலைமைகளை கடுமையாக தாக்கிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓர் ஒப்பந்தத்திற்கு Verdi உடன்பட்டிருந்தது. பேர்லின் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தில் 12 சதவீதத்தை இழந்தனர். அதேகாலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை கால ஊதியமும் வெட்டப்பட்டன என்பதுடன் தொழிலாளர்களை பிரிக்கும் நோக்கில் ஒரு சம்பள விகித முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 லிருந்து புதிய தொழிலாளர்கள் மாதத்திற்கு (ஒட்டுமொத்தமாக) வெறும் 1,650 யூரோ மட்டுமே பெற்றார்கள். இது மிகவும் மூத்த தொழிலாளர்களை விட மூன்று மடங்கு குறைந்த சம்பளமாகும்.

இந்த இழப்புகளினால் போக்குவரத்து தொழிலாளர்கள், இவ்வாண்டு ஆரம்பத்தில் நடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை சுற்றுகளில் மிகவும் போர்க்குணமான உணர்வுடன் இருந்தனர். எவ்வாறிருப்பினும், போராட்டத்தை தனிமைப்படுத்தவும், நாசஞ்செய்யவும் மற்றும் இறுதியாக கைவிடவும் செய்ய Verdi அதன் அதிகாரத்திற்குட்பட்டு அனைத்தையும் செய்தது. கடந்த இரண்டு வாரங்களின் போது, ஒப்பந்தம் குறித்து சாதகமாக பேசவும் மற்றும் கடந்த வாரம் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கான ஆதரவை தக்கவைக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு சிறு செயற்குழுக்களை அனுப்பியது. அதிகாரத்துவத்தின் முயற்சிகள் சிறிது பலனை அளித்திருக்கின்றன என்பதையே வாக்கெடுப்பின் முடிவுகள் காட்டுகின்றன.

போராட்டத்தின் போது Verdi ஆல் காட்டிக் கொடுக்கப்படும் அபாயம் குறித்து உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து எச்சரித்திருந்தது. தொடர்ச்சியான கட்டுரைகளில், Verdi அதிகாரத்துவத்திற்கும் மேல்சபையிலுள்ள சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சிக்கு இடையிலான ஆழ்ந்த நெருக்கமான தொடர்புகளை நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம். பேர்லின் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டறிக்கையில், இந்த உடன்பாட்டிற்கு எதிராக தொழிலாளர்களை வாக்களிக்குமாறு நாங்கள் அறிவுறுத்தி இருந்தோம். தொழிற்சங்க அதிகாரத்துவம் குறித்த எங்களின் மதிப்பீட்டை பெரும்பாலான போக்குவரத்து தொழிலாளர் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே வாக்கெடுப்பின் முடிவு தெளிவுபடுத்துகிறது.

எதிர்வரும் போராட்டங்களுக்கு ஆயத்தமாக, போக்குவரத்து தொழிலாளர்கள் தற்போதைய உடன்படிக்கைக்கு உடன்பட்ட மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளின் திறன்களை தொடர்ந்து குழி தோண்டி புதைக்க விரும்பும் Verdi அதிகாரிகளின் மீது தமது அவநம்பிக்கையை காட்டுவதோடு அவர்களை பதவியிலிருந்து இறக்கவேண்டும். அதே நேரத்தில், மேல்சபைக்கு எதிராக ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்கி, எதிர்கால போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் திணிக்கப்படும் ஒரு குறுகிய எல்லைக்குள் கட்டுப்பட்டிராதிருக்க உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். இதுபோன்றதொரு இயக்கம் அரசியல்ரீதியான கோரிக்கைகளை கையிலெடுக்க வேண்டும் என்பதுடன் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியால் (PSG) முன்வைக்கப்படும் சோசலிச திட்டங்களையும் வலியுறுத்த வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved