World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGovernment wealth distribution report Germany: The growing gulf between rich and poor அரசாங்க சொத்துபகிர்வு அறிக்கை ஜேர்மனி: பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் அதிகரிக்கும் இடைவெளி By Dietmar Henning ஜேர்மனியில் சமூக துருவமுனைப்படுத்தல் விரைவாக அதிகரித்து வருகிறது. மே 19, திங்களன்று, தொழிற்துறை மந்திரி ஓலாவ் ஷொல்ஸ் ஆல் (சமூக ஜனநாயக கட்சி-SPD) சொத்துபகிர்வு மீது அளிக்கப்பட்ட ஜேர்மன் அரசாங்கத்தின் மூன்றாவது அறிக்கையின் வரைவுகளில் இது தெளிவாகிறது. ஷொல்ஸ் பத்திரிகைகளின் முன் தோன்றியதானது, முற்றிலும் சுயவிருப்பத்துடனல்ல. முந்தைய ஆண்டுகளின் இதேபோன்ற அறிக்கைகளின் விடயத்தில், சொத்துவிபர அறிக்கையின் தகவல்களை மேலும் சிறப்பாக வெளிச்சமிட்டு காட்டுவதற்கான திருத்தங்களுக்காக அதன் வரைவு அறிக்கை அவரின் அமைச்சரவையில் முடங்கி கிடந்தது. எவ்வாறிருப்பினும், பல செய்தித்தாள்களில் வரைவில் காட்டப்பட்ட புள்ளிவிபரங்கள் வெளியானதிலிருந்து, ஷொல்ஸ் அதை பாதுகாக்க முடிவெடுத்திருந்தார். அறிக்கை பின்வரும் வாக்கியத்துடன் ஆரம்பிக்கிறது: "வறுமை என்பது பல பரிமாணங்களுடன் கூடிய சமூக இயல்பாக உள்ளது. அந்த அடிப்படையில், அதை துல்லியமாக மதிப்பிடுவது என்பது மிகவும் சிரமமாகும்." இவ்வறிக்கைக்கு ஒத்த வகையில், சமூக பொருளாதார அமைப்பின் (SOEP) தகவல் களஞ்சியத்திற்கு பதிலாக, கடந்த இரண்டு சொத்துவிபர அறிக்கைகளில் பயன்படுத்தியது போலல்லாமல் ஒரு வேறுபட்ட தகவல் களஞ்சியமான வருமானத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்குமான ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்களை (EU-SILC) ஷொல்ஸ் பயன்படுத்துகிறார். வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்கள் பிற நாடுகளுடன் சிறந்த முறையில் ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது என்ற அடிப்படையில் தகவல் களஞ்சிய மாற்றத்திற்கான காரணம் உத்தியோகபூர்வமாக நியாயப்படுத்தப்படுகிறது. இந்த புதிய வரையறைகளின் உதவியுடன், 2005இல் ஜேர்மன் மக்கள்தொகையில் 13 சதவீதத்தினர் அல்லது 10.7 மில்லியன் குடிமக்கள் உத்தியோகபூர்வமாக ஏழைகளாக அறிவிக்கப்பட்டார்கள் என ஷொல்ஸ் அறிவிக்கலாம். இதனால் 2003 லிருந்து "வெறும்" 1 சதவீத உயர்வை மட்டுமே இது குறிக்கிறது. இந்த உயர்வை ஷொல்ஸ், ஜேர்மனியின் தற்போதைய பொருளாதார ஏற்றம் 2006ல் இருந்து தான் தொடங்கியது என்று கூறி நிராகரிக்க முனைகின்றார். ஷொல்ஸ் இன் கருத்துப்படி, இந்த பொருளாதார ஏற்றம் அனைத்து பிரிவு மக்களுக்கும் நலன் அளிக்கும், ஆனால் இது தற்போதைய அறிக்கையின் புள்ளிவிபரங்களில் "பிரதிபலிக்கவில்லை". புதிய தகவல் களஞ்சியத்தியத்தை பயன்படுத்தியன் மூலம், வறுமையின் வரையறை எல்லையை ஷொல்ஸ் ஆல் தெளிவாக குறைத்துக்காட்ட முடியும். அதாவது, ஒரு தனிநபரின் ஒரு மாத வருமானத்தை 935 யூரோவிலிருந்து 781 யூரோவாக காட்ட முடியும். இது உயிர்வாழ்வதற்கு தேவையான ஜேர்மனியில் வழங்கப்படும் தற்போதைய வேலைவாய்ப்பின்மை மற்றும் நல உதவித்தொகையின் (Hartz IV சட்டத்தின்படி) மட்டத்திற்கு கீழ் குடும்பங்களுக்கான வறுமையின் வரையறை எல்லையை கொண்டு வருகிறது. பழைய தகவல் களஞ்சியத்தின்படி ஒருவர் தொடர்ந்தால், (இது "முக்கிய குறியீடுகள்" என்ற பகுதியின் கீழ் 413 ஆவது பக்கத்தின் வரைவில் பின்னடக்கமாக மறைக்கப்பட்டிருக்கிறது) வறுமை விகிதம் மிகவும் உயர்வாக இருக்கும். அதாவது, பொருளாதார ஏற்றம் இருந்த போதும், 2005 இல் 18 சதவீதமும், 2006 இல் 18.3 சதவீதமும் வறுமை விகிதம் இருந்தது. குழந்தைகளின் வறுமையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, புள்ளிவிபரங்களுக்கு இடையில் இன்னும் நிறைய முரண்பாடுகள் தெளிவாகின்றது. வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்கள் குழந்தை வறுமை 12 சதவீதம் என எடுத்துக்காட்டிய போதினும், சமூக பொருளாதார அமைப்பின் கருத்துப்படி 2005 இல் அது சராசரியாக 26 சதவீதம் ஆகும். 2003 லிருந்து 2005 வரை குழந்தைகளின் வறுமை 3 சதவீதம் குறைந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தரவுகள் பதிவு செய்திருக்கும் போதில், அதே காலத்தில் சுமார் 3 சதவீதம் குழந்தை வறுமை உயர்ந்திருப்பதாக சமூக பொருளாதார அமைப்பின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. ஜேர்மனியில் ஆறில் ஒரு குழந்தை (அதாவது, மொத்தம் 2 மில்லியன் குழந்தைகள்) Hartz IV உதவித்தொகையை நம்பி இருக்கிறது எனக் குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரம், குழந்தை வறுமை குறித்த அனைத்து சமீபத்திய ஆய்வுகளுடனும் முரண்படுகிறது. கிழக்கு ஜேர்மனியின் குறைந்த ஊதிய தொழிலாளர் மற்றும் ஒரு பெற்றோர் உள்ள குடும்பங்களின் விடயத்திலும் இதேநிலை நீடிக்கிறது. ஷொல்ஸ் இன் ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்கள்படி, கிழக்கு ஜேர்மனியில் 2003ம் ஆண்டிலிருந்து 2005 வரை வறுமை விகிதம் 19 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைந்தது; சமூக பொருளாதார அமைப்பின்படி, அது 20 இலிருந்து 22 சதவீதமாக உயர்ந்தது. ஷொல்ஸ் இன் கருத்துப்படி, ஒரு பெற்றோர் கொண்ட 24 சதவீதத்தினர் வறுமையிலுள்ளனர், இது முந்தைய இரண்டு ஆண்டுகளை விட 12 சதவீதம் (!) குறைவாகும்; சமூக பொருளாதார அமைப்பின் கருத்துப்படி, இது கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரே நிலையில் தான் நீடித்திருக்கிறது, அதாவது 36 சதவீதமாக இருக்கிறது. "உழைக்கும் ஏழைகள்" (போதிய வருமானமின்றி பணியில் இருப்பவர்கள்) என அழைக்கப்படுபவர்களின் விகிதம் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதம் என ஷொல்ஸ் வரையறுக்கிறார்; சமூக பொருளாதார அமைப்பு அதை 12 சதவீதமாக காட்டுகிறது. " மலிவு கூலி துறையில் ஓர் அதிகரிப்பு இருக்கிறது" என ஷொல்ஸ் குறிப்பிடுகிறார். 2005 இல், அனைத்து தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் மலிவு கூலி பணிகளில் இருந்தனர். 1990 களின் தொடக்கத்தில், இந்த எண்ணிக்கை நான்கில் ஒருவர் என்பதற்கும் சற்று உயர்வாக இருந்தது." Agenda 2010" என்றழைக்கப்பட்டதையும் மற்றும் Hartz IV விதிகளையும் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஜேர்மன் பொருளாதாரத்தில் பெருமளவில் மலிவு கூலித்துறையையும், வறுமை அதிகரிப்பையும் ஏற்படுத்திய ஹெகார்ட் ஷ்ரோடரின் (சமூக ஜனநாயக கட்சி) தலைமையிலான முன்னாள் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமை கட்சியின் கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளின் பேரழிவு விளைவுகளிலிருந்து கவனத்தைத் திருப்புவதை முக்கிய நோக்கமாக கொண்டதே ஷொல்ஸ் இன் இந்த போலி கைத்திறனாகும்.அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை இந்த வரைவுகளின் கண்டுபிடிப்புகளை நிலைமைகள் சிறப்பாக உள்ளன என காட்டுவதற்கான அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகள் இருந்த போதினும், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி குறிப்பிடத்தக்க அளவில் கணிசமாக உயர்ந்திருக்கும் உண்மையை தொழிற்துறை மந்திரியால் மறைக்க முடியவில்லை. "வருவாய் பிரிவில் கீழ் மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு தரப்பிலும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது." என்றும், அதற்கிணையாக ''மத்திய வர்க்கம்'' சுருங்கி இருப்பதாகவும் அவ்வரைவு குறிப்பிடுகிறது. மத்திய வருவாயினர் அல்லது மாதத்திற்கு 3,268 யூரோவை நிகரமாக சம்பாதிப்பவர்களை விட குறைந்தபட்சம் 200 சதவீதம் அதிகமாக சம்பாதிக்கும் பணக்கார மேற்தட்டு மொத்த மக்கள் தொகையில் 6.4 சதவீதம் பங்கு வகிக்கிறது. சொத்து மற்றும் பங்கு பத்திரங்களையும் (மாதத்திற்கு 3,418 யூரோவிற்கும் மேலாக சம்பாதிக்கும் நபர்களையும்) இதில் உள்ளடக்கினால் இந்த விகிதம் 8.8 சதவீதமாக உயர்கிறது. இந்த வருமானம் தனிக்குடும்பத்திற்கு மட்டுமே பொருந்தும். 14 வயதிற்கு கீழுள்ள இரண்டு குழந்தைகளுடன் கூடிய தம்பதியினர் மாதத்திற்கு 6,863 யூரோ சம்பாதித்தால் மட்டுமே பணக்காரர்களாக கருத முடியும். சமுதாயத்தில் மிகவும் வறுமை அடுக்கில் வருமானங்கள் குறைந்திருப்பதை பின்வரும் புள்ளிவிபரம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது: 2002 இல், மொத்த நிகர வருமானத்தில் 30.4 சதவீதமானது, மக்கள்தொகையில் 50 சதவீதமாக இருந்த ஏழைகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. வெறும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், 2005 இல், இந்த பங்களிப்பு 28.7 சதவீதமாக சுருங்கியது. பணக்காரர்களில் 10 சதவீதத்தினர் இந்த மறுபகிர்வில் இலாபம் ஈட்டினார்கள். அவர்கள் மட்டுமே சமுதாய செல்வ வளங்களில் தங்களின் பங்கை அதிகரித்துக் கொண்ட ஒரே குழுவினராக இருந்தனர், அதாவது 2004 லிருந்து 2005 வரை மட்டும் சுமார் 1.6 சதவீதம் அதிகரித்துக் கொண்டனர். இந்த மறுபகிர்வு கையோடு கையாக கூலிகள் மற்றும் சம்பளங்களின் குறைப்புக்கும் வித்திட்டது. அரசாங்க அறிக்கையின்படி, 2002 மற்றும் 2005 க்கு இடையில் கூலிகள் சராசரியாக 24,873 யூரோவிலிருந்து 23,684 யூரோவாக குறைந்தன, அதாவது இது சுமார் 4.7 சதவீதமாகும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் நிகர கூலிகளும் கூட குறைந்துவிட்டன. 2002 க்கும் 2006 இடையில் ஜேர்மனியில் எரிபொருளின் விலை மட்டும் ஆண்டுக்கு 7.3 சதவீதம் உயர்ந்திருப்பதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. ஜேர்மனியின் பணக்கார மேற்தட்டின் பிரச்சனைகள் மீது இவ்வறிக்கை முழுமை பெறாமல் இருக்கிறது. 2002 இன் இறுதியில் மொத்த தனிநபர் குடும்ப சொத்துக்களின் மதிப்பு அண்ணளவாக 7.8 டிரில்லியன் அளவாக இருந்தது. இதன் மொத்த அளவில், 50 சதவீத ஏழைகள் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கையில், 10 சதவீத பணக்காரர்கள் 56 சதவீதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். வரைவின் மீதான பிரதிபலிப்புகள் சொத்துபகிர்வு அறிக்கை ஒரு தொகை அரசியல் பிரதிபலிப்புகளை கட்டவிழ்த்து விட்டது. மத்திய வர்க்கத்தினருக்கான வரி வெட்டுக்கள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்புகளையும் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் -CDU), பணக்காரர்களுக்கு வரி அதிகரிப்பது (இடது கட்சி), அத்துடன் குறைந்தபட்ச கூலித்திட்டத்தை அறிமுகப்படுத்துவது (சமூக ஜனநாயக கட்சி, ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு - DGB) போன்ற அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் பழைய கோரிக்கைகளை இந்த அறிக்கை மீண்டும் தூண்டிவிட்டிருக்கிறது. ஆனால் வரைவில் கண்டறியப்பட்டவைகளின் அடிப்படையில், சமூக சொத்தை நியாயமாக பங்கிடும் நோக்கில் இந்த கட்சிகளால் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தீர்மானத்திற்கு வருவது தவறாகும். தற்போதைய பெரிய கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய கட்சிகளான சமூக ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் ஆகியவை அடித்தள மக்களின் எவ்விதமான அழுத்தங்களுக்கும் இன்னும் வலதுபக்கம் நோக்கி போவதனூடாகவே தமது பிரதிபலிப்பை காட்டியுள்ளன. அதன் முன்னுரையில், சொத்து மறுபங்கீட்டிற்கான தற்போதைய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என சொத்து பகிர்வு அறிக்கை தெளிவுபடுத்துகிறது: "எவ்வாறிருப்பினும், முதலீட்டு நடவடிக்களுக்கான நிதி வசதிகளும், வறுமை ஒழிப்பிற்கான நடைமுறை மற்றும் தடுப்பு முறைமைகளும் வரவுசெலவுத்திட்டத்தின் பற்றாக்குறையால் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து செலவுகளுக்காகவும், பிரத்தியேகமாக வட்டிகளுக்காக 15 சதவீதம் (283 பில்லியன் யூரோ) ஒதுக்கப்பட்டிருக்கிறது. வரவுசெலவுத் திட்டத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வுப்போக்கானது முன்னரைப்போல் அவசியமானதாக உள்ளது." என அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த கொள்கையின் முன்னுரிமைக்கு ஒத்ததாக, ஜேர்மன் நிதிமந்திரி பியர் ஸ்ரைன்புரூக் (சமூக ஜனநாயக கட்சி) வரி வெட்டுக்கான எவ்வித கோரிக்கை நிராகரித்தார்: "இது தீவிரமாக வலியுறுத்தப்பட்டால், அது கூட்டணி அரசாங்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையின் மீது கேள்வி எழுப்பும்." என அவர் எச்சரித்தார். தங்களின் கொள்கைகள் மீது மக்கள் விரோதம் அதிகரிப்பது குறித்து அரசாளும் கட்சிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் நிலைகளில், எடுக்கப்படவிருக்கும் போலியான நடவடிக்கைகள் குறித்து எவ்வித உத்தியோக பிரதிபலிப்புகளும் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவே இருக்கும். பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின்படி, ஜேர்மன் மக்கள் தொகையில் 87 சதவீதத்தினர் சமூக சமத்துவமின்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த பிரச்சனை சொத்து பகிர்வு வரைவிலும் (குறிப்பாக முதல்முறையாக) குறிக்கப்பட்டுள்ளது. "சொத்துக்கள் குறித்த சமுதாய அங்கீகாரம் என்பது, குடிமக்களின் நிலைப்பாட்டில் இருந்து பகிர்வு பொறிமுறைகளை எவ்வளவிற்கு நியாயமானதாக காட்டுவது என்பதில் தங்கியுள்ளது" என அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. "பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான முரண்பாடு பெரியதாகவும், இதை சமாளிப்பது மிகவும் கஷ்டமாக உணரப்படுமானால், இது சமூக சுதந்தர பொருளாதாரத்தையும் மற்றும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதை கேள்விக்குரியதாக்கிவிடும்." மேலும்: "ஒருவர் சரியான தொடர்புகளையும் மற்றும் ஆரம்ப நிலைகளையும் கொண்டிருந்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியும் என்பது மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களின் கண்ணோட்டமாகும்." கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட 80 சதவீத்தினரில் பணக்காரர் ஆவதற்கான இரண்டு முக்கிய காரணங்களாக இதையே தெரிவித்தனர். செல்வம் சேர்ப்பதற்கான ஓர் அடிப்படை தத்துவம் "கடின உழைப்பு" என்பது வெகுசிலரின் கருத்தாக இருக்கிறது. மிக முக்கியமானது "நேர்மையின்மை" ஆகும். இந்த அறிக்கை எச்சரிப்பதாவது: "எவ்வாறிருப்பினும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்ற பொதுவான புரிந்துகொள்ளுதலுடன் இந்த மதிப்பீடு பொருத்தமில்லாமல் இருக்கிறது." அதேநேரம், பொதுமக்களின் உணர்வுகளுக்கு பணிய மறுக்கவும் மற்றும் அவற்றை நிராகரிக்கவும் அரசாங்கத்தை கோருவதற்கான அதிகரித்து வரும் ஒருமித்த குரலும் அங்கு இருக்கிறது. ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படுவதற்கான திட்டங்களை இரத்து செய்ய சமீபத்தில் ஒத்துக்கொண்ட முடிவிற்கான வெளிப்பாடுகளில் இருந்தும் இது தெளிவடைகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களை மாதத்திற்கு 1,100 யூரோ உயர்த்த வேண்டும் என்ற திட்டங்களுக்கான பரந்துபட்ட பலத்த எதிர்பினை தொடர்ந்து, கட்சி பிரிவுகளின் தலைவர்களான சமூக ஜனநாயக கட்சியின் பீட்டர் ஸ்ட்ருக் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் வோல்கர் கெளடா இருவரும் இந்த அதிகரிப்பை தள்ளி வைக்க ஒத்துக் கொண்டனர். ''தெருவிலிருந்து வந்த அழுத்தத்திற்காக'' பின்வாங்கிய ஸ்ட்ருக் மற்றும் கெளட இருவரும் உடனடியாக விமர்சிக்கப்பட்டனர். கல்வி மந்திரி அன்னெட சவான் (கிறிஸ்துவ ஜனநாயக சங்கம்) ஜேர்மன் தொலைக்காட்சிக்கு கூறும் போது: "அழுத்தத்தின் கீழ் ஒருபோதும் பின்வாங்கவில்லை." எனத் தெரிவித்தார். இந்த முடிவு "அரசியல் நம்பகத்தன்மை மீதான ஒரு பலவீனமான கரும்புள்ளியை" குறிக்கிறது எனக் கூறிய கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் அரசியல்வாதி யூர்கன் கேப் சமூக ஜனநாயக கட்சியின் "ஜனரஞ்சக வாதத்தையும்" குற்றஞ்சாட்டினார். செய்தித்தாள் விமர்சனங்கள் கிறிஸ்தவ ஜனநாயக சங்கம் மற்றும் சமூக ஜனநாயக கட்சி ஆகிய இரண்டின் "தைரியமின்மை", "திறமையின்மை" மற்றும் "கோழைத்தனம்" ஆகியவற்றுடன் அவர்களின் ஒரு பிரிவினரிடம் ''ஆளுமையின்மையும்'' இருப்பதாக தாக்கத் தொடங்கின. வளர்ந்து வரும் வறுமை மற்றும் சமூக துருவமுனைப்பாடு ஆகியவை வெறுமனே தமது இருக்கும் நிலைமையை அச்சுறுத்தும் காரணியாக மட்டுமே அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறது. தமது கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் தலைவிதியைக் குறித்து அதற்கு எந்தவித அக்கறையும் இல்லை. வறுமையை சமாளிக்க துல்லியமாக நடைமுறைகளை கையாள்வதை விட்டு, எதிர்கால பெரிய எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக தவிர்க்கமுடியாது அரசு இயந்திரங்களை ஆயுதபாணியாக்குவதிலேயே ஈடுபடும். |